Monday, 18 May 2020

MGR LOVED ANIMALS




MGR LOVED ANIMALS


விலங்கினங்களை வசீகரித்த எம்ஜியார்

“அன்பே வா” படத்தின் இரண்டாவது கட்ட படப் பிடிப்பு நடந்துக் கொண்டிருந்த சமயம் அது. ஊட்டிக்குச் சென்றுக் கொண்டிருந்தோம். பொன்மனச் செம்மலுடன் ஜானகி அம்மையாரும், செம்மலின் உதவியாளர் சபாபதியும், நானும் (ரவிந்தரும்) காரில் ஒன்றாக பயணித்தோம். கார் , குன்னூரைத் தாண்டியபோது ஒரு வயோதிக முஸ்லீம் பெரியவர் ஒருவர் பாதையோரத்தில் நடந்துச் செல்வதை நாங்கள் காண நேரிட்டது.

செம்மல் உடனே காரை நிறுத்தச் சொல்கிறார் , டிரைவரிடம் :”இராமசாமி , அந்த பெரியவர் போற இடம் கேட்டு ஏத்திக்க , ரவீந்திரன், நீங்க என் பக்கத்திலே வாங்க ” – என்றார் .

அந்தப் பெரியவரை கூப்பிட்டதும் சற்று நேரம் உற்றுப் பார்த்தார் , காரில் அவரையும் ஏற்றிக் கொண்டார் . கார் புறப்பட்டது. அவர் ஏதோ பிரார்த்தனை செய்வதுபோல் சிந்தனையில் இருந்தார் . அப்பொழுது மக்கள் திலகம் அவரைப் பார்த்து கேட்டார்

” பெரியவரே எங்க போயிட்டு வரீங்க ? ”

“கீழே போய் விறகு வித்துட்டு வர்றேன் ”

” இந்த வயசுல நீங்க வேலை செய்யனுமா என்ன? … உங்களுக்கு பிள்ளைக் குட்டி கிடையாதா ?”

” இருக்கிறாங்க, ஆனா அவங்களுக்கும் பிள்ளைங்க இருக்குதே …. ” என்றார் பெரியவர்

மௌனம் நிலவியது …. சற்று தூரம் வந்தவுடன் பெரியவர் வண்டியை நிறுத்துச் சொல்லி , இறங்கிப் போய் விட்டார் ….

மக்கள் திலகம் ரவீந்தரைப் பார்த்து கேட்கிறார் :

” ரவீந்திரன், இந்தப் பெரியவர் பற்றி என்ன நினைக்குறீங்க ? ”

” ரொம்ப பெரியவர் . ஏன்னா நீங்க கேட்ட கேள்விக்கு அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்குதேன்னு ஒரு பெரிய விஷயத்தை சுருக்கமா சொல்லிட்டாரு ” என்று நான் சொல்ல …. அதற்கு பொன்மனச் செம்மல்

” அட , அதை கேக்கலேய்யா , அவருக்கு என்னைத் தெரியலே , நீர் என்னமோ அன்னிக்கு நாட்டுலே என்னை தெரியாதவங்களே இருக்க மாட்டாங்கன்னு சொன்னீரே ! நீர் தோத்துப் போயிட்டீர் பார்த்தீரா…” என்று பலமாகச் சிரித்தார் .

அப்பொழுது இன்னமும் கார் நின்றுக் கொண்டதை அறிந்த செம்மல்

” ஏம்பா இராமசாமி நிக்குறே… போயேன் ” என்றார்

” அந்தப் பெரியவர் என்னை நிக்க கை காட்டிட்டு , போனாருங்க . அதோ வரார் பாருங்க ” என்றார் இராமசாமி

அந்தப் பெரியவர் வந்தார் , கைகளில் பழங்களுடன் ….

” ஐயா , நான் சாவுறதுக்கு முன்னால ஒரு தரம் உங்களைப் பார்க்கணும்னு இருந்தேன் . உங்க கூட உங்க கார்லே வர்றதை நினைச்சதும் எனக்கு பேச்சு மூச்சு இல்லை . என் அல்லாஹ் கிட்டே உங்களை நல்லாக்கி வைக்க வேண்டிக்கிட்டே இருந்தேன் . என் பிள்ளைங்க உங்க படம் பார்ப்பாங்க . நான் படம் பார்க்க மாட்டேன் . உங்க படத்தை சுவரொட்டியிலே பார்த்திருக்கேன் .. வெறுங்கையோட பார்த்துட்டோமேங்கற கவலை வேறே . அதைப் போக்கத் தான் இதுங்களை வாங்கியாந்தேன் . “மிஸ்கீன்” (யாசகன் ) தர்றேன் வாங்கிக்குங்க ” என்றார் அந்தப் பெரியவர்

புன்சிரிப்புடன் மக்கள் திலகம் அவற்றை பெற்றுக் கொண்டார் , கார் கிளம்பியது , ஜானகி அம்மையார் மக்கள் திலகத்தை பார்த்து கேட்டார்

” பாவம் .. எதாச்சும் அவருக்குக் கொடுத்திருக்கலாம், நான் கொடுக்கலாம்னு வந்தப்ப ஏன் தடுத்தீங்க ? ”

அதற்கு மக்கள் திலகம் பதிலளித்தார் …

” ஜானு , தன்மானத்துக்காக தன்பிள்ளைங்க கிட்டே கேட்காம , தானே விறகு வித்து சாப்பிடுறவர் கிட்டே , நாம பணம் கொடுத்தா வருத்தப்படுவாரு . அவர் ஒரு பெரிய கேரக்டரு ! சரி அவர் கொடுத்த இந்தப் பழங்களை பத்திரமா வை . நானே சாப்பிடப் போறேன் , யாருக்கும் கொடுக்க மாட்டேன் ” என்று சிறுகுழந்தையைப் போல சொன்னார் மக்கள் திலகம் ….

ரவீந்தர் குறிப்பட்ட இந்த சம்பவத்திலிருந்து எம்.ஜி.ஆர். எப்படிப்பட்ட தாராள மனமும், இரக்க குணமும் கொண்ட பண்பாளர் என்பதை நாம் நன்கு அறிய முடிகின்றது.

விஜயா-வாஹினி அதிபர் நாகிரெட்டி அவர்களுக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையே நெருக்கமான நட்புறவு இருந்து வந்தது படவுலகில் பலரும் அறிவர்.. அதனை ரவீந்தருடைய “விழா நாயகன்” நூல் வாயிலாக அறிய முடிகின்றது.

விஜயா வாகினி அதிபர் நாகிரெட்டி அவர்கள் தோட்டத்துக்கு வந்தார். “”ரெட்டியார் சார் வந்து பேசி விட்டுப் போகும் வரை யாரையும் அறைக்குள் அனுப்ப வேண்டாம்” என்று தன் காவல் அதிகாரி விவேகானந்தராஜிடம் எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். ஹாலில் அமைச்சர்கள் பலர் இருந்தனர்.

ரெட்டியார் வந்ததும் அவர்களை மட்டும் செம்மலின் உதவியாளர் மாணிக்கம் வந்து உள்ளே அழைத்துப் போனார். நான், ரெட்டியாரின் உடன் வந்த உதவியாளரிடம் ஹாலில் பேசிக் கொண்டிருந்தேன். “”ரெட்டியார் விஜயா கார்டனில் புதிதாக ஒரு ஹெல்த் சென்டர் கட்டறாங்க. அதுக்கு தலைவர் பெயர் வைக்க அனுமதி கேட்க வந்திருக்காங்க” என்று சொன்னார்.

“”நட்பு என்பது, என்ன பெறுவது என்ற எண்ணத்தில் கொள்ளும் உறவல்ல. என்ன தருவது? என்று காக்கும் உறவு என்ற பெரியோர் சொல்படி ரெட்டியார் வந்திருப்பதை உணர்ந்தேன்”

என்று அந்த புத்தகத்தில் ரவீந்தர் குறிப்பிடுகிறார்.

எம்.ஜி.ஆர். எந்த அளவுக்கு இன்னபிற உயிரினங்களை நேசித்தார் என்பதை அறிய நமக்கு பிரமிப்பாக இருக்கின்றது.

சீ மிருகமே!
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே!

எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு
வளர்ப்பதில்லை!

எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா?

எந்த விலங்குக்கும்

சர்க்கரை வியாதியில்லை
தெரியுமோ?

இன்னொன்று:
பறவைக்கு வேர்ப்பதில்லை

எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை

எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை

கவனி மனிதனே

கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்!

மனிதனுக்குள் ஒரு அகம்பாவம் இயற்கையிலேயே குடிகொண்டுள்ளது. ஐந்தறிவு படைத்த விலங்கினத்தைவிட தான் உயர்ந்தவன் என்ற தற்பெருமை அவனை ஆட்டிப் படைக்கிறது. கவிஞர் வைரமுத்துவின் இக்கவிதை மிருகங்கள் எந்தனையோ விடயத்தில் மனிதனை விட மேல் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. விலங்கினத்தின் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த அபார பாசம் வைத்திருந்தார்.

வீட்டில் ஆடு, மாடு, கோழி, நாய் இவைகளை வளர்ப்தை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் எம்.ஜி.ஆர் இரண்டு சிங்கங்கள் வளர்த்தார். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடில் வசித்தபோதும், பின்னர் ராமாவரத் தோட்டத்தில் வசித்தபோதும் ராஜா, ராணி என்று இரண்டு சிங்கங்களை செல்லமாக வளர்த்தார். வீட்டிலேயே கூண்டு இருக்கும். அதை கவனிக்க ஆட்கள் இருப்பார்கள். சில சமயம் இச்சிங்கங்கள் எம்.ஜி.ஆரின் கையை நக்கிக் கொடுக்கும். அதை மிகவும் சிலாகித்து இரசிப்பார்.

“அடிமைப் பெண்” திரைப்படத்தில் ராஜா என்கிற இந்த சிங்கம்தான் நடித்தது. ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்து போனது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நன்கொடையாக அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தனது ராமாவரம் தோட்ட வீட்டில் வைத்திருந்தார். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அது அவருடைய நினைவு இல்லத்திற்கு மாற்றப்ப்பட்டது.

எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது. அதில் எம்.ஜி.ஆர் வளர்த்த ஆண் சிங்கம் ராஜா பாடம் செய்து பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.

சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார்.சிறுகுட்டியாக எம்.ஜி.ஆரிடம் இருந்த கரடி வளர்ந்ததும் மருத்தவரின் உதவியுடன் மூக்கில் சங்கிலி இணைக்க ஏதுவாக துளையிட முயன்றபோது எதிர்பாராத விதமாக இறந்துவிட்டது. இதை நடிகர் சங்கத்தின் நாளிதழில் ஒரு பேட்டியின் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.

வாழ்க்கையில் அனுபவம் என்பது விலைமதிப்பில்லாது. அது கற்றுத் தரும் பாடம் நம்மை சீர்படுத்தும். தன் வாழ்க்கையில் சந்திக்க நேரும் சிறு சிறு சம்பவங்களிலிருந்து கூட எம்.ஜி.ஆர். அவர்கள் எந்த அளவுக்கு படிப்பினை கற்றுக் கொண்டார் என்பதை ரவீந்தர் குறிப்பிடும் இந்த நிகழ்விலிருந்து நாம் அறிந்துக் கொள்ளலாம்.

ரமணன் ஒலிப்பதிவு விற்பன்னர். வாகினியில் ‘நாடோடி மன்னன்’ படப்பிடிப்பில் அவரைத்தான் வேண்டும் என்று கேட்டு, தன் படம் முழுவதற்கும் ஒலிப்பதிவாளராக பணியமர்த்தினார். பிறகு அவர் தனியாக ஷியாமளா ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு நிறுவனம் வைத்திருந்தார். அப்போது செம்மல் சிறுசேமிப்பு துணைத் தலைவர் பதவியில் இருந்தார்.

ஷியாமளா படப்பிடிப்பு நிலையத்தில் பாம்பு, தேள் பலவகை பூச்சிகளும் குடியிருக்கும். செம்மல் ஒய்வாக உட்கார்ந்து இருக்கும் போது எறும்புகள் சாரை சாரையாகப் போய் கொண்டிருந்தன. அதை ரசித்த செம்மல். தன் உதவியாளராயிருந்த ஸ்ரீதர் என்ற பெரியவரிடம் காண்பித்து “நம் சிறுசேமிப்பின் விளம்பரத்துக்கு இந்த எறும்புகளையே போடலாம்” என்று சொன்னார். ”நாம் மனிதர்கள் ஆறறிவு படைத்தவர்கள். இருந்தாலும் இந்த சிறு எறும்புகளிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. சேமிப்பு குணம், ஒற்றுமை, வரிசையைக் கூட எறும்பை பார்த்தபின் தான் நமக்கும் முக்கியம் என்று சொல்லியிருக்காங்க போல இருக்கு” என்றார்.

எம்.ஜி.ஆர். விலங்குகளை மிகவும் நேசித்தார். அவைகளிடமிருந்து அவர் கற்றுக் கொண்டது ஏராளம். ரவீந்தரின் இந்த எழுத்துக்கள் நம்மை எம்.ஜி.ஆர். மீது மேலும் மதிப்பையும் மரியாதையும் கூட்டுகின்றது.

பெரும் வசூல் படைத்த ‘ஹாத்தி மேரே சாத்தி’ படத்தை தேவர் எடுக்கும் போது, அதில் நடித்த மிருகங்களைப் பார்க்க செம்மல் அழைத்திருந்தார். அம்மிருகங்கள் அடங்கி நடப்பதைக் கண்டு வியந்து பேசினார். அப்போது தேவர் “தம்பி மிருகங்க எப்போ கடிக்கும், எப்போ பாயும்னு எனக்கும் தெரியும். பாழாப் போன மனுஷங்கதான் எப்போ சிரிப்பான், சீறுவான்னு தெரியாது. ஆனா உன்னை சொல்லலேப்பா; உனக்கு நான் அடக்கம். எனக்கு நீ அடக்கம்பா. மனுஷன்களை உயர்வாய் படைச்சுட்டேன்னு தேவன் சொல்றது பொய்யாயிடுச்சு” என்று சொன்னார்.

அதற்கு செம்மல் “நீங்கள் சொல்வதும் சரிதான். ஏன்னா உதாரணம் காட்டும் போது யானையைப் போல் அறிவு, சிங்கத்தைப் போல் வீரம்னு தான் மனுஷனுக்கு உதாரணம் சொல்றோம். மனுஷனை காட்டி மிருகங்களுக்கு உதாரணம் சொல்லலே” என்றார்.

அங்கிருந்த புலி, சிங்கம் சிறுத்தைகளை விட ஒரு குரங்கை ரசித்துக் கொண்டிருந்தார் செம்மல். அக்குரங்கு உயரமாகவுள்ள ஒரு கிளையை தாவித்தாவிப் பிடித்து வெற்றி அடைந்தது. ”இந்த முயற்சி மனிதருக்கும் இருக்கணும்” என்றார்.

செம்மல் தன் தோட்டத்திலேயே ஒரு கரடிக்குட்டியை வளர்த்தார். காலையில் எழுந்ததும் அதற்கு ஃபீடரில் பால் புகட்டி அதன் சேஷ்டைகளை ரசிப்பார். அவரது பொன்னிறத்துக்கும் கரடியின் கறுப்புக்கும் பார்க்க வேடிக்கையாக இருக்கும். அது இறந்து விட்டது. பிறகு ஒரு மான் குட்டியை வளர்த்தார். அது அவரது கையால் தான் காபி குடிக்கும். அதுவும் ஒடிவிட்டது.

’எங்க வீட்டு பிள்ளை’யில் நடித்த நாயின் குட்டியை வாங்கி, வளர்த்தார். அங்கேயே பொமரேனியன் வர்க்கத்து ஆண், பெண் நாய்களை வளர்த்தார். ஒரு தாய் இறந்து விட்டது. மற்றொரு நாயை, பெரிய நாய் அவர் கண் முன்னாலேயே கடித்துக் குதறி விட்டது. அதிலிருந்து பிரியமான எதையும் வளர்ப்பதை நிறுத்தி விட்டார். அன்று அவர் சொன்ன சொல் எவரது கல்மனதையும் கரையச் செய்யும்: ’பாசத்தை காட்ட பிள்ளைதான் இல்லை. இப்படியான வீட்டு மிருகங்களை வளர்த்தாலும் அவை தரிப்பதில்லை” என்று கண் கலங்கிச் சொன்னார் செம்மல்.

ஒரு சமயம் டைரக்டர் தாதா மிராஸி செம்மலைப் பார்த்து “மிஸ்டர் எம்.ஜி.ஆர். நீங்க உலகத்திலே பிறந்து எந்த பிரஜோனமுமில்லை. மனுஷனா பிறந்தா எதாவது வைஸஸ் இருக்கனும். ஸ்மோகிங் இல்லை. காபி டீயாவது சாப்பிடுறீங்களா? அதுவும் இல்லை. என்னைப் போல் தண்ணி கேஸாவது உண்டா? அது அறவே கிடையாது. நீங்க நல்ல அழகான எதாவது கலர்களை ரசிக்கிறீர்களா? அதை பத்தியும் தெரியலே” என்றார்.

அதற்கு செம்மல் “நான் நல்ல ரசிகன். அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய நினைக்கிறது தான் பெரிய தப்பு” என்றார்.

எம்.ஜி.ஆரின் சுபாவம் மற்றும் அவருடைய பண்பட்ட குலநலன்கள் அவரை ஒரு சிறந்த மனிதராக நம் மனதைக் கவர்கிறது. ரவீந்தர் குறிப்பிடும் மற்றொரு நிகழ்வு என் கூற்றுக்கு சான்று பகரும். தனது முதுகில் இந்தி நடிகர் ரன்பீர் கபூர் கையெழுத்திட மறுத்ததால் பெண் ரசிகை ஒருவர் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துக் கொள்ள மிரட்டியதாக ஒரு செய்தியை சில காலம் முன்பு பத்திரிக்கையில் நான் படிக்க நேர்ந்தது.

மைசூர் மகாராஜா தமிழகத்தின் கவர்னராக இருந்தார். அப்போது ஒரு படப்பிடிப்புக்காக மைசூர் சென்ற செம்மல் வழக்கமான பிருந்தாவன ஓட்டலில் தங்கியிருந்தார். மகாராஜாவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த மகாலிங்கம் செம்மலின் நண்பர். மகாராஜாவின் மகள் கல்யாணி, தன் கல்லூரி தோழிகளுடன் பிருந்தாவனத்திற்கு வந்திருந்தார். மன்னர், மகளை மாகாலிங்கம் செம்மலுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சற்று நேரம் செம்மலுடன் பேசிவிட்டுப் போனார். அவரது தோழிகள் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள்.

ஒரு பெண் தன் முந்தானையில் போடச் செல்ல, செம்மல் மறுத்து “இந்த முந்தானை உன் கணவருக்கே சொந்தம். நான் கையெழுத்திட மாட்டேன்” என்று தன் டயரியிலிருந்து ஒர் துண்டு காகிதத்தை கிழித்துப் போட்டுக் கொடுத்தார்.

எம்.ஜி.ஆர். எந்த அளவுக்கு மத நல்லிணக்கம் கொண்டிருந்தார் என்பதற்கு ரவீந்தர் எடுத்துரைக்கும் இந்த சம்பவம் நம்மை பரவசப்படுத்துகிறது. பிற மதத்தவரை சகோதர பாசத்தோடு அரவணைத்துச் செல்லும் அவரது உயர்ந்த பண்பில் நாம் கரைந்து போகிறோம். இதோ “விழா நாயகன்” நூலில் ரவீந்தர் வருணிப்பதை நாம் காண்போம்.

ஒரு சமயம் காரில் செம்மலுடன் நானும் இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவும் போய்க் கொண்டிருக்கிறோம். வட ஆற்காடு மாவட்டம் சேத்துப்பட்டு என்ற ஊரைக் கடந்து வேலூர் நோக்கிப் போகிறோம். காலை வேளை “பசிக்குது இங்கே எங்கேயாவது காரை நிறுத்தி டிக்கியில் இருக்கும் டிபனை சாப்பிட்டுக் கொள்ளலாம்” என்றதும் காரோட்டி கதிரேசன் அங்கு தென்பட்ட ஒரு மாதா கோயில் காம்பவுண்டுகுள்ளே காரை செலுத்தி நிறுத்தினார். அது பெரிய கோவில். சோலைக்குள் இருந்தது.

செம்மலின் கார் நம்பர் தமிழகத்தில் எல்லோருக்கும் தெரியும். கூட்டம் கூடி விட்டது.

கூட்டத்தைக் கண்ட ஒரு பாதிரியார் உள்ளிருந்து வந்தார். செம்மலைக் கண்டதும், “வாங்க, ஏன் இங்கேயே நின்று விட்டீங்க! உள்ளே வந்து சாப்பிடுங்க” என்று அழைத்துப் போனார். கோயில் பணியாட்களிடம் சொல்லி. காரில் இருந்து சிற்றுண்டிகளைக் கொண்டு வரச் சொன்னார்.

உள்ளே அழைத்துப் போய் பேராயரை அறிமுகப் படுத்தினார்கள். அவர் ரோமிலிருந்து வந்திருந்த பெரியவர். கம்பீரத் தோற்றம். அறிவுக்களை அருள் நிறைந்த முகம். செம்மலை அழைத்துப் போய் தன் உணவறையில் அமரவைத்து, தனக்கென வந்த உணவுகளையும் பரிமாறினார். அவரும் எங்களுடன் உண்டார். செம்மல் அவரையே பார்த்துக் கொண்டு சிற்றுண்டியைப் புசித்தார். பேராயாருக்கு இருபுறமும் இரு பூனைகள் வந்து மேசை மேல் அமர்ந்தன. பொசு பொசு என்றும் வால் மொத்தமாக முடி நிறைந்தும் பார்க்க அழகாக இருந்தது. செம்மல் அதனை ரசித்து இப்பூனைகள் எங்குள்ளவை என்று கேட்க. ”ஜாவா நாட்டுப் பூனை. ஒரு பக்தர் கொண்டு வந்து கொடுத்தார்.” என்று பெரியவர் சொன்னார். யாரிடமும் எதையும் கேட்காத செம்மல் “இது குட்டி போட்டால் ஒன்று கொடுங்கள்” என்று கேட்டார். அவரும் “தாராளமாக” என்றார்.

ஆலயத்தைச் சுற்றிக் காண்பித்தார்கள். செம்மல் மண்டியிட்டு முறைப்படி ஏசுவை வணங்கினார். கன்னிகா ஸ்திரீகள் வாழுமிடம், அனாதை குழந்தைகள் வசிக்குமிடம் அனைத்தையும் பார்த்த பின் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். “இங்கு செலவழித்த இரண்டு மணி நேரத்தில் கண்ட நிம்மதியை வேறு எங்கும் காணவில்லை” என்று சொன்னார் செம்மல்.

காரில் போய்க் கொண்டிருக்கும் போது எங்களிடம் அப்பேராயரின் அன்பு, அடக்கம், அழகு, கம்பீரத்தைப் பற்றி பேசிக் கொண்டு வந்தார். ”மக்களுக்கு நேரிடையாக நின்று அருள்பணி புரிபவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். அவர்களை நிமிர்ந்து பார்த்தால் கை எடுத்துக் கும்பிடும் அளவுக்கு அவர்கள் முகம் இருக்க வேண்டும்” என்றவர், அத்துடன் ”இப்பெரியவரைப்பார்த்த பின் எனக்கும் பாதிரியாக நடிக்க வேண்டும் போலிருக்கிறது” என்றார். இதுதான் ‘பரமபிதா’ படத்துக்கு அடிப்படை.

டிசூஸா என்ற கிருஸ்துவப் பெரியவர் லயோலா கல்லூரியின் முதல்வர். கறாரும் கண்டிப்பும் மிக்கவர். அவர் போப் ஆண்டவருக்கு கீழுள்ள பன்னிரண்டு கார்டினல்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு ரோமுக்கு போக இருக்கையில், டாக்டர் ரெக்ஸ் அவரை செம்மலிடம் அழைத்து வந்தார்.

செம்மல் முறைப்படி வரவேற்று ”என்னைப் பார்க்க நீங்க வந்ததை விட உங்களைப் பார்க்க நான் வந்திருந்தால் அதுவே முறையாக இருந்திருக்கும்” என்றார்.

அதற்கு அவர் “இல்லை, இல்லை, நான் ஒரு காம்பவுண்டுக்குப் பெரியவர், நீங்கள் இந்த நாட்டுக்குப் பெரியவர். உங்களைப் பற்றி என் அருமை நண்பர் ரெக்ஸ் சொன்னார். அதனால் பார்க்க வந்தேன்” என்றார்.

அதற்கு செம்மல் ”மிக்க நன்றி” உங்களை விட நான் எந்த வகையில் பெரியவன் என்று எனக்கு தெரியலை” என்றார்.

அதற்கு அப்பெரியவர் “இப்போது நான் வெளியே போனால் என்னை யார் என்று தெரியாது. ஆனால் நீங்கள் வெளியே தலைகாட்டினாலும் போதும், யார் என்று சொல்லிவிடுவார்கள். மக்களால் சூழப்படுபவன் எவனோ அவனே மகான்” என்றார். செம்மல் வழக்கம் போல் சிறு புன்னகை செய்து கொண்டார்.
அங்கு பேச்சு வாக்கில் ‘பரமபிதா’ படத்தின் பேச்சும் நடந்தது. அதன் கதையமைப்பை டிசூஸா கேட்டார். ”பாதிரியார் மனதில் சலனங்கள் கூடாது. கதையின்படி நாயகன் காதலில் ஈடுபட்டிருக்கிறான். அவன் அப்படியான சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கலாகாது. அப்படிப்பட்டவன் பாதிரியாக வர முடியாது. கதையின் அடிப்படையே தவறாக இருக்கிறது” எனச் சொன்னார் டிசூஸா.

அதைக் கேட்டபின் இரண்டாயிரம் அடி எடுத்திருந்த ’பரமபிதா’ படத்தை கைவிட்டார் செம்மல். வெகு நாட்கள்வரை டிசூஸாவின் பேச்சு கம்பீரம், அறிவு, அழகுக் கலையைப் பற்றியே பேசிக் கொண்டே இருந்தார் செம்மல்.

எம்.ஜி.ஆரை பண்புகளை அறிந்துக் கொள்ள விரும்புவர்களுக்கு ரவீந்தரின் நூல்கள் கலைக்களஞ்சியமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment