Tuesday, 12 May 2020

INDIAN SEPOY REBELLION 1857 BEGINS MAY 10




INDIAN SEPOY REBELLION 
1857 BEGINS MAY 10



இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது[2]. கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர்[3]. ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது[2]. இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது.
கிழக்கிந்தியக் கம்பெனியின் விரிவாக்கம்
இந்தியாவில் வர்த்தக நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட பிரித்தானியரின் தொழில் மற்றும் தொழிற்சாலை பகுதிகளை நிருவகிக்க பிரித்தானிய கிழக்கு இந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆனாலும் இதன் எல்லை மீறிய நடவடிக்கைகளாலும் இந்திய மன்னர்களிடையே ஒற்றுமையின்மையாலும் 1757 ல் பிளாசி போரில் பெற்ற வெற்றியால் கிழக்கு இந்தியாவில் வங்காளம் வரை அதன் ஆட்சி பரவலாக்கப்பட்டது. பக்சர் போரில் முகலாய பேரரசர் ஷா அலாம் II தோற்றபின் 1764-ல் பீகாரும் கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக வங்கம், பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களில் வரி வசூல் செய்யும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் விரைவில் மும்பை, சென்னை போன்ற பகுதிகளில் தன்னை விரிவாக்கம் செய்தது.

ஆங்கில-மைசூர்ப் போர்கள் (1766–1799), ஆங்கில-மராட்டியப் போர்கள் (1772–1818), கர்நாடகப் போர்கள் ஆகியன பரந்த நர்மதா ஆற்றின் தெற்குப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வழிவகுத்தது. அதுவரை இச்செயல்களுக்கு பேரளவில் எதிர்ப்புகள் ஏதும் ஏற்படவில்லை. 1806-ல் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் சிறைச்சாலையில் இந்து மற்றும் இசுலாமிய சிப்பாய்களிடையே ஆங்கிலேயர் உருவாக்கிய சீருடை விதிமுறைகள் காரணமாகக் கிளர்ச்சி வெடித்தது. இதுவே முதன் முதலில் ஆங்கிலேயருக்கு எதிராக ஏற்பட்ட முதல் கிளர்ச்சியாகும்.[4]

கலகத்திற்கான காரணங்கள்
பொருளாதார காரணங்கள்
1764 ஆம் ஆண்டு பக்சார் போருக்குப் பின் கிழக்கிந்திய வணிகக் குழு இந்தியாவில் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சியுற்றது. பின் வந்த காலங்களில் இந்தியாவின் வளங்கள் கம்பெனியின் வணிக முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. இந்தியர்களின் நலன்கள் பெரிதாக பொருட்படுத்தப்படவில்லை. செல்வச் சுரண்டல், இந்திய கைவினைத் தொழில்களின் நலிவு போன்றவை இந்தியாவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. தொழில் புரட்சியின் விளைவாக பிரிட்டன் தொழிலகங்களில் இயந்திரங்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிதாக அறிமுகமான இயந்திரங்களின் உதவியால் உற்பத்திப் பொருட்களும் அதிக அளவில் தயாரிக்கப்பட்டன. ஆங்கிலேயே வணிகர்கள் இவற்றை விற்பனை செய்யும் சந்தையாகவே இந்தியாவை பார்க்கத் தொடங்கினர். அதே நேரம் இந்தியாவில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட இந்தியப் பொருட்களுக்கு பிரிட்டனில் அதிக வரிகள் விதிக்கப்பட்டன. எனவே இந்தியப் பொருட்களுக்கான தேவை சரிந்து இந்தியத் தொழில்கள் அழிவை நோக்கி சென்றன. இது தவிர ஆங்கிலேயர்கள் நிலவரி மக்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்திருந்தன.

அரசியல் காரணங்கள்
ஆங்கிலேயரின் துணை படை திட்டம் மன்னர்களிடையே வெறுப்புணர்ச்சி உண்டாக்கியது.

உடனடிக் காரணங்கள்
அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வகை துப்பாக்கிகள் உடனடிக் காரணமாக அமைந்தன. அவ்வகை துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன. இவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர். இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர். இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில் தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.

தோல்விக்கான காரணங்கள்

உருசிய ஓவியர் வசீலி வெரஷாகின் வரைந்த ஓவியம். கிளர்ச்சியில் ஈடுபட்ட சிப்பாய்கள் பீரங்கிகளில் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

சிப்பாய் கிளர்ச்சிக்குப் பின் 1860இல் பிரித்தானிய இந்தியாவின் வரைபடம்
சுவாமி விவேகானந்தர் சிப்பாய் கலகத்தின் தோல்விக்கான காரணம் குறித்து கடற்பயணத்தில் தாம் எழுதிய ’எனது பயணம்’ என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.


"..இந்திய ராணுவ வீரன் ஒருவனாவது போர்க்களத்தில் கோழையாக நடந்து கொண்டது உண்டா? இல்லை. ஆனால் அவர்களுக்குத் தலைவன் வேண்டும். படைத் தளபதியான ஸ்ட்ராங் என்ற பெயருடைய எனது ஆங்கிலேய நண்பர் சிப்பாய்க் கலகம் நிகழ்ந்தபோது இந்தியாவில் இருந்தார். அதுபற்றி அவர் கதை கதையாகச் சொல்வது உண்டு. போதிய அளவுக்கு பீரங்கிகள், வெடிமருந்துகள், தேவையான மற்ற பொருட்கள் அனைத்தும் இருந்ததுடன், பயிற்சி பெற்ற போர்வீரர்கள் இருந்தும் சிப்பாய்கள் ஏன் அப்படித் தோல்வி அடைந்தார்கள் என்று ஒருநாள் நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் கூறினார்: தளபதிகள் தலைமை தாங்கி முன்னே செல்லாமல், பின்னே வசதியான இடத்தில் இருந்துகொண்டு, ’வீரர்களே! முன்னேறுங்கள், தாக்குங்கள்’ என்றெல்லாம் ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தனர். தளபதி முன்வந்து மரணத்தை எதிர்கொள்ளாவிட்டால், சாதாரண படை வீரர்கள் போரிடுவார்களா, என்ன? எல்லாத் துறைகளிலும் இதுதான் நிலைமை!. தளபதி தலை கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்’ தலைகொடுக்க முடியுமானால் மட்டுமே தலைவனாக முடியும். ஆனால் நாமோ தியாகமோ வேதனையோ எதுவும் இல்லாமல் தலைவனாக விரும்புகிறோம். அதனால்தான் எதுவும் நடக்கவில்லை..."[








முதல் சுதந்திரப் போராட்டம், 1857ன் சுதந்திரப் போராட்டம், இந்திய கலகம், மகத்தான இந்திய கலகம், சிப்பாய் கலகம், சிப்பாய் புரட்சி,  1857 புரட்சி என்றெல்லாம் பல பெயரிட்டு அழைக்கப்படும் இந்த போர் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும் வேண்டி பாரதத் தாயின் தலைமைக்கு ஏங்கிய சேய்களுக்கும், பாரதமாதாவின் பக்தர்களுக்கும், கௌரவத்தையும், மானத்தையும் விரும்பியவர்களுக்கும், இது இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக மலர்ந்தது. ஆனால் இந்தியாவைக் கூனச் செய்ய வேண்டும், இந்தியர்கள் நெஞ்சு நிமிர்ந்து, நேர் கொண்ட பார்வையோடு, நெஞ்சில் துணிவோடு, நேர்மைத் திறத்தோடு இருக்கக் கூடாது, பாரத அன்னை என்றும் கொடுஞ்சங்கிலிகளில், காரிருள் சிறைகளில், குன்றிக் குறுகி, கூன் விழுந்து, நடைத் தள்ளாடி, நாடிச் சுருங்கி, நொடித்திக் கிடக்க வேண்டும் என்று துடிக்கும் ஆவி கொண்ட கொடும் அரக்கர் தம் பொல்லாத நெஞ்சத்தின் மாறாத வெளிப்பாடு தான் 1857ம் ஆண்டு போரை, வெறும் சிப்பாய்க் கலகம் என்றும், சிப்பாய் புரட்சி என்றும் புரட்டுப் பேசத் தூண்டுகிறது. இந்த துரோக பட்டியலில் அந்நியர், நம்மவர் என்று கொடுமதி கொண்ட கொடுமதியாளர்களும், தாய்ப்பாசம் அற்ற புல்லர்களும், மண் பற்று அற்ற நன்றி கொன்றவர்களும், பிறரை வதைத்து, கொடுமைப்படுத்தி, கசக்கிப் பிழிந்து அவர் கண்ணீரில் பிழைப்பு நடத்தும் ஆங்கிலேயத் தனம் நிரம்பிய சுதேசிகள், ஆங்கிலேயர்கள் என பல வகைப்பட்டோர் அடக்கம். வரலாற்றின் மறைக்கப்பட்ட, கண்ணுக்கு மறுக்கப்பட்ட படலங்களைப் புரட்டிப் பார்த்தால், சுதேசிகளும், விதேசிகளும் அன்று தொட்டு இன்று வரை செய்து வரும் பச்சை துரோகங்களும், போடும் வேஷங்களும், பற்றி நினைக்க நினைக்க... ஐயகோ... அம்மா நெஞ்சு பொறுக்குதில்லையே..... உன் நோவு பார்க்க முடிவதில்லையே.... உடம்பு நடுங்குகிறதே,.... கண்ணில் நீர் சொரிகிறதே..... நாவு குழறுகிறதே..... குருதி குமுறுகிறதே.... உனக்கு பாதகம் செய்வோர்களைத் துண்டு துண்டாக்கி வேள்வியில் உனக்கு ஆஹுதியாக்க கைகள் படபடக்கிறதே! அம்மா! அம்மா! விடிவு வாராதோ! நின் மேன்மை பொலியாதோ! பொலபொலவெனவே விடியல் வரட்டும், சடசடவெனவே உன் சங்கிலி பொடியட்டும், கலகலவெனவே கயவர் நெஞ்சு கலங்கட்டும், நகையணிபவளே!, உன் நகையொலி திசை எங்கும் பரவட்டும்!! ஜெய் பவானி, பாரத மாதா!! என்ற கோஷம் திக்கெட்டும் முழங்கட்டும்!!.............. இப்படிப்பட்ட தாகங்களை மனதில் ஏந்தி ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் புரட்சிகள் வெடித்தன. அதற்கு அச்சாரமாக 1857 ஜனவரி மாதமே இராணுவ தளங்களில் புரட்சிக்கான வெளிப்பாடு தெரியத் தொடங்கியது. அது முழு வீச்சில் மே மாதம் வெடித்து ஓய்ந்த போது, இந்தியாவில் ப்ரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கொடுங்கோலாட்சி முடிவுக்கு வந்து, 1858 முதல் ப்ரிட்டிஷ் சர்க்காரின் அடக்குமுறை, அடிமைத்தன ஆட்சி உருவெடுத்தது. சில சமஸ்தானங்கள் பெயரளவுக்கு தன்னாட்சி பெற்றிருந்தாலும், இந்திய துணைக்கண்டம் ப்ரிட்டனின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டது. 
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் விரிவாக்கம்
ப்ரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி 1757ல் ராபர்ட் க்ளைவ் தலைமையில் நடந்த ப்ளாஸிப் போருக்குப் பின்னர், வங்காளத்தில் சிவில் உரிமை பெற்றது. பின்னர் 1764ம் ஆண்டு பக்ஸர் போருக்குப் பிறகு முழு ஆட்சி செய்யும் உரிமை பெற்று, அதை கையகப்படுத்தியது. இதன் பிறகு அவர்கள் இந்தியா முழுவதையும் கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டார்கள். 1845ல் கம்பெனி கொடூரமான போரை நிகழ்த்தி,  சிந்த் மாகாணத்தைக் கைப்பற்றியது. 1848ல் 2வது ஆங்கிலேய சீக்கியப் போர் நடைபெற்று, கம்பெனி பஞ்சாபையும் கைப்பற்றியது. 1853ல் மராட்டியர்களின் தலைவர் நானா சாஹேபின் விருதுகள் பறிக்கப்பட்டு, அவரது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. 1854ல், பெரார் கம்பெனி சொத்தாகியது. 1856ல் அவத் ராஜ்ஜியம் கைப்பற்றப்பட்டது.. 
காரணிகள்
புரட்சிக்கு பல வகையான அரசியல், பொருளாதார, ராணுவ, சமய, சமூக காரணிகள் உண்டு. இந்தியாவின் மிகப் பெரிய ராணுவமான வங்காள ராணுவத்துக்கு கம்பெனி ராஜிடம் பல குறைகள் இருந்தது, குறிப்பாக ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் இந்திய துருப்புக்களுக்கும் இடையே இருந்த இடைவெளி. ப்ரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய பிரிவுகள் தவிர, அதிகபட்ச எதிர்ப்பு ப்ரிட்டிஷாரின் ஆட்சியில் தங்கள் அதிகாரம் படிப்படியாக தேய்ந்து வருவதைக் கண்ட பழைய ஆட்சியாளர்களிடமிருந்து வந்தது. 
மோதல்கள்
சில இந்தியர்கள் வலுக்கட்டாயமாக தாங்கள் கிறிஸ்தவ சமயத்துக்கு மாற்றப் படுவோம் என்று அஞ்சினார்கள்; இந்த கருத்து மொத்தமாக புறந்தள்ளி விட முடியாது ஏனென்றால் அந்தக் காலத்தில் பல கிழக்கிந்தியக் கம்பெனி கனவான்கள், சிப்பாய்களை மதமாற்றம் செய்ய முற்பட்டார்கள். இதை கம்பெனி பலமாக கண்டித்தாலும், மதமாற்ற முயற்சிகள் குறையவில்லை, தொடர்ந்தன. நாகபுரியின் அரச குடும்ப நகைகள் கல்கத்தாவில் ஏலம் விடப்பட்டது, இது இந்திய மன்னர்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாக்க் கருதப்பட்டது. கம்பெனி நடத்திய அராஜக ஆட்சி இந்தியர்களை வருத்தியது; மேற்கத்திய கலாச்சாரம் விரிவடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்து-இஸ்லாமியர்களின் சமய சடங்குகள் அநாகரீகமானவையாக ஆங்கிலேயர்கள் கருதியதால், அவை சட்ட விரோதமாக்கப் பட்டன. குறிப்பாக இது வங்காளத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. 
நீதி வழங்கல் முறை இந்தியர்களுக்கு எதிராகவே அமைந்திருந்தது. 1853ல், ப்ரிட்டிஷ் பிரதம மந்திரி அபர்டீன் பிரபு இந்திய சிவில் சர்வீஸை சுதேசிகளுக்கு ஏற்படுத்தினார். ஆனால் இந்த சீர்திருத்தம் போதுமானதாக சில கற்ற இந்தியர்கள் மத்தியில் கருதப்படவில்லை. கம்பெனி அதிகாரிகள் கொடுமைகள் இழைத்திருந்தாலோ, குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தாலோ அவர்கள் தொடர் சங்கிலியாய் முறையீடுகள் செய்ய உதவும் வகையில் சட்டம் வரையப்பட்டிருந்தது. தவிர கம்பெனியார் கடுமையான வரிவிதிப்பு மூலமாக கொள்ளையில் ஈடுபட்டார்கள். இந்த வரிகளைக் கட்ட மறுத்தலின் விளைவு, சொத்து பறிமுதலில் முடிந்தது. 
ப்ரிட்டிஷாரின் விரிவாக்கத் திட்டமான  நேரடி வாரிசு இல்லாத ராஜ்ஜியங்கள் கம்பெனியால் ஆக்கிரமிப்பு செய்யும் வகையில் வாரிசு இழப்புக் கொள்கை (Doctrine of Lapse) டல்ஹௌசியால் கொண்டுவரப்பட்டது. இதை ஆட்சியாளர்கள் வன்மையாக எதிர்த்தார்கள், அவர் தம் பெரும்பான்மை குடிகளுக்கும் அது பிடிக்கவில்லை, குறிப்பாக அவத் ராஜ்ஜியத்தில். எட்டே ஆண்டுகளில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஜேம்ஸ் ஆண்ட்ரியூ ப்ரவுன் ராம்சே, முதல் மார்க்கிஸ் டல்ஹௌசி (James Broun-Ramsay, 1st Marquess of Dalhousie) கம்பெனிக்கு கால் மில்லியன் சதுர மைல்கள் பரப்பை ஈட்டினார். 
பொருளாதாரம்
ப்ரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மகத்தான ஒரு ஏற்றுமதி நிறுவனமாக, இந்தியாவை காலனியாதிக்க நாடாக்கியதன் பின்புலத்தில் இருந்த சக்தியாக விளங்கியது. இதன் சக்தி வலுக்க 150 ஆண்டுகள் பிடித்தன. 1693லேயே, அதிகாரத்தில் இருக்கும் நபர்களுக்கு அளிக்கப்பட்ட அரசியல் வெகுமதிகள் சுமார் 90000 பவுண்டுகளை எட்டியது. அரசுக்கு கையூட்டு கொடுத்ததால், தெற்காசிய பட்டு, பருத்தி மற்றும் பிற பொருட்கள் உள்ளூர் வியாபாரத்தை பாதித்ததையும் தாண்டி, கம்பெனி அயல்நாட்டு சந்தைகளில் வியாபாரம் செய்ய முடிந்தது. 1767 வாக்கில் கம்பெனி 4 லட்சம் பவுண்டுகளை தேசிய கஜானாவுக்கு கண்டிப்பாக செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 
1848 வாக்கில், கம்பெனியின் நிதிப் பிரச்சனைகள் காரணமாக, தெற்காசியாவில் பிரம்மாண்டமான அளவுக்கு ப்ரிட்டிஷ் பகுதிகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. 1848 முதல் 1854 வரை சுதேசி ஆட்சியாளர்களின் தத்து எடுத்துக் கொள்ளும் உரிமையைப் புறம் தள்ளி, ஒரு டஜன் ராஜ்ஜியங்களை கையகப்படுத்தியது கம்பெனி. ஜூலை மாதம் 28ம் தேதி 1857ம் ஆண்டு நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் பத்திரிக்கையில் கார்ல் மார்க்ஸ் - ‘’1854ல், 80000 சதுர மைல்கள் நிலப்பரப்பும் 4 முதல் 5 மில்லியன் வரை மக்கள் தொகையும், ஏராளமான சொத்துக்களும் உடைய பெரார் ராஜ்ஜியம் வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட்டது’’ என்று எழுதுகிறார். 
இந்த புதிய கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டை உறுதி செய்ய 40000 ப்ரிட்டிஷ் அதிகாரிகள் தலைமையிலான 2 லட்சம் இந்தியர்கள் அடங்கிய படை இந்தியாவில் 1857ல் ஆட்சி செலுத்தியது. சுதந்திரமான இந்திய மாநிலங்கள் மறைந்து விட்டன, கம்பெனி கணக்கே இல்லாத அளவுக்கு தங்கம், நகைகள், வெள்ளி, பட்டு, பருத்தி, பல்வேறு விலை மதிக்க முடியாத செல்வங்களை ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்துக்கு அனுப்பியது. வரிகளாக வசூல் செய்யப்பட்ட பெரும்பாலான அசாதாரணமான இந்த சொத்துக்களின் அளவு ப்ரிட்டனில் பொது மற்றும் தனியார் கட்டமைப்பை விரிவடையச் செய்யவும், ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் ப்ரிட்டிஷ் விரிவாக்கத்தை ஏற்படுத்தவும் முக்கியமானதாக இருந்தது. இந்த சொத்தின் பெரும் பகுதி தான் தொழில்புரட்சிக்கு காரணியாக அமைந்தது. நிலம் கடுமையான ஜமீந்தாரி முறையில் சீரமைக்கப்பட்டு, வரி வசூலுக்கு ஏற்ப மாற்றப்பட்டது. சில பகுதிகளில் அவுரிச் செடி, சணல், காப்பி, தேயிலை ஆகிய பொருட்களை வளர்க்க விவசாயிகள்
வற்புறுத்தப்பட்டார்கள். இதனால் விவசாயிகள் நிலைமை மோசமாகி, உணவு பொருள் விலைகள் அதிகரித்தன. 
உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்கள் குறிப்பாக வங்காளத்திலும், இதர பகுதிகளிலும் ப்ரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கடுமையாக பாதிப்பு அடைந்தார்கள். பாரம்பரியமான ப்ரிட்டிஷாரின் தடையற்ற சந்தைக்கோட்பாடுகளின் படி கட்டணங்கள் குறைவாகவே வைக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியச் சந்தைகளில் ப்ரிட்டனின் விலை மலிவான துணிகள் குவிந்தன. உள்ளூர் தொழிலால் போட்டி போட முடியவில்லை, இங்கிலாந்தின் பகட்டு ஆடைகளைத் தயாரித்த இந்தியா, வெறும் பருத்தி உற்பத்தி செய்யும் நாடாக தாழ்ந்து போனது, இந்தப் பருத்தி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு துணியாக வந்து, இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு, இந்தியர்களால் வாங்கப்பட்டது. சுதேசிகள் மீது கடுமையான வரிவிதிப்பை ஆங்கிலேயர்கள் விதிக்கிறார்கள் என்று இந்தியர்கள் உணரத் தலைப்பட்டார்கள். 
அரசியல் தலையீடு
நிலச் சொந்தக்காரர் இயற்கையான முறையில் ஒரு ஆண் வாரிசை, அதாவது சொந்தக் குழந்தையை விட்டுச் செல்லவில்லை என்றால், அந்த நிலம் டல்ஹௌசியும், அவருக்குப் பின் வந்த சார்லஸ் ஜான் கேனிங், (Charles Canning, 1st Earl Canning)ன் வாரிசு இழப்புக் கொள்கை (doctrine of Lapse) ஷரத்துப் படி ப்ரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனிக்கு சொந்தமாகி விடும். டல்ஹௌசி இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்தி பல இந்திய ராஜ்ஜியங்களை கையகப்படுத்தினான், இதில் முக்கியமாக பூனே, நாகபுரி, பிறகு ஜான்ஸி ஆகியன அடங்கும், இது தான் புரட்சியில் ஈடுபட்ட இந்திய துருப்புக்களுக்கு சாதகமாக இணைந்து கொள்ள இவர்களைத் தூண்டியது. இது மாநிலங்களுக்கும் சரி, பிரபுத்துவ நிலங்களுக்கும் பொருந்தும். 
சிப்பாய்கள்
சிப்பாய்கள், இங்கிலாந்தில் இருந்த ராணுவப் பள்ளியான ப்ரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் கல்லூரியில் பயின்ற அதிகாரிகளிடத்தில் பயிற்சி பெற்றவர்களே வங்காள ராணுவத்தின் சுதேசி படை வீரர்கள். பம்பாய், மதராஸ் மற்றும் வங்காள மாகாணங்கள் தங்களுக்கென்ற பிரத்யேகமான ராணுவத்தை, பிரத்யேகமான கமாண்டர் தலைமையில் கொண்டிருந்தன. அவற்றிடம் அதிகார பூர்வமான ப்ரிட்டிஷ் ராஜ்ஜியத்திடம் இருந்ததை விட அதிக துருப்புக்கள் இருந்தன. 1857ல் அவர்களிடத்தில் 2 லட்சத்தி 57 ஆயிரம் சிப்பாய்கள் இருந்தார்கள். கலந்து கட்டி இருந்த பம்பாய் மற்றும் மதராஸ் ராணுவங்களைப் போல அல்லாமல், வங்காள ராணுவத்தில் முழுவதுமாக பூமிஹர் ப்ராமணர்களும், கங்கை சமவெளிப் பகுதி ராஜபுத்திரர்களும் இருந்தனர்; பின்னவர்கள் வடக்கு இந்தியாவின் மேற்குப் பகுதியான தற்போதைய ராஜஸ்தானத்தின் பாரம்பரியமான போர் வீரர் மரபினர். இதன் காரனமாகத் தான் ப்ரிட்டிஷ் படையினரைப் போல வங்காள சிப்பாய்கள் சவுக்கடிக்கு உட்படுத்தப்படவில்லை. சாதி
உரிமைகளும் மரபுகளும் வங்காள ராணுவத்தின் ஒரு பகுதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல், கம்பெனி ஆட்சியின் முந்தைய ஆண்டுகளில் ஊக்கப்படுத்தவும்பட்டன. 1840கள் தொடங்கிய நவீன மயமாக்கல் கல்கத்தாவில் தொடங்கிய போது, சிப்பாய்கள் தங்கள் மீது சாதி கறை படிந்து விடும் என்று கருதினார்கள். 1851-52ல் பர்மாவோடு நிகழ்ந்த போரின் போது சிப்பாய்கள் கடல்கடந்து பயணிக்க வேண்டியிருந்தது. ஆனால் ஹிந்து மரபுப் படி, யாரெல்லாம் கடல் கடந்து செல்கிறார்களோ அவர்கள் ஜாதி ப்ரஷ்டம் செய்யப் பட்டவர்களாவார்கள். தாங்கள் பர்மாவுக்கு அனுப்பப்பட்டதில் சிப்பாய்கள் மகிழவில்லை. 
சிப்பாய்கள் காலப்போக்கில் ராணுவ வாழ்கையின் பல அம்சங்களால் திருப்தி அடையவில்லை. அவர்கள் ஊதியம் குறைவாக இருந்தது, ப்ரிட்டிஷ் துருப்புக்கள் அவத், பஞ்சாப் ஆகியவற்றைக் கைப்பற்றிய பிறகு, அங்கே சேவை செய்தமைக்காக கூடுதல் ஊதியம் வழங்கப்படவில்லை, ஏனென்றால் அவை அயல் நாட்டு படையெடுப்புக்களாக கருதப்படவில்லை. கடைசியாக அவர்களை கிறிஸ்தவ சமயத்துக்கு மாற்ற கம்பெனியின் ராணுவத்தில் இருந்த ஹெர்பர்ட் எட்வர்ட்ஸ்(Herbert Edwardes)ம் கர்னல் S G வீலர் (colonel SG Wheeler)ம் செய்த முயற்சிகள் அவர்கள் சீற்றத்தை அதிகரித்தது. நிறைவாக அவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவார்கள் என்ற வதந்திகளுக்கு புதிய என்ஃபீல்ட் ரைஃபிள்கள் தீனி கொடுத்தது. 
என்ஃபீல்ட் ரைபிள் Pattern1853Rifle புரட்சி ஒரு துப்பாக்கியால் வெடித்தது. இந்தியா முழுவதிலும் உள்ள சிப்பாய்களுக்கு 1853 என்ஃபீல்ட் ரைபிள்(Enfield Percussion cap rifled musket) என்ற புதிய துப்பாக்கி அளிக்கப்பட்டது, இது பழைய பிரவுன் பெஸ்(Brown Bess)ஐ விட பல பங்கு துல்லியமான, சக்தி வாய்ந்த ஆயுதம். ஆகையால் ஆங்கிலேய ராணுவத்தில் 1838லேயே வழக்கொழிந்து போன பிரவுன் பெஸ்(brown bess) ரக துப்பாக்கியிலிருந்து மேலும் நவீன, துல்லியமான என்ஃபீல்ட் ரைபிள்(Enfield Percussion) துப்பாக்கிக்கு மாற சிப்பாய்கள் ஊக்கப்படுத்தப்பட்டார்கள். இதில் மாற்றமடையான ஒன்று லோடிங் (loading) செயல்பாடு தான். உலோக தோட்டாக்கள் அறிமுகப்படுத்தப்படும் வரை இது மாற்றம் அடையவில்லை. இந்த புதிய என்ஃபீல்ட் கேட்ரிஜ் (cartridge)ஐ லோட் செய்ய அவர்கள் அதை வாயால் கடித்து வெடிமருந்தை ஊற்ற வேண்டும்; ஆனால் இந்த கேட்ரிஜ் (cartridge)களில் பன்றிக் கொழுப்பும், பசு கொழுப்பும் தடவப்பட்டிருக்கிறது என்ற வதந்தி பரவியது. இவை இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் சமய ரீதியாக ஏற்புடையது அல்ல. 
சிப்பாய்களின் ப்ரிட்டிஷ் அதிகாரிகள் இதை வதந்திகள் என்று அலட்சியம் செய்தார்கள். இதற்கிடையில் அவற்றை பல்லால் கடித்துக் கிழிக்க வேண்டாம், கையாலேயே கூட திறக்க முடியும் என்றும் முன் வைக்கப்பட்டது. ஆனால் சிப்பாய்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ள மறுத்தார்கள். பல ஆண்டுகளாக கம்பெனி சேவையில் இருந்த சிப்பாய்களால் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ள இயலவில்லை. இந்தியாவின் தலைமைக் கமாண்டர் ஜெனரல் ஜார்ஜ் ஆன்சன் (General George Anson) இந்த நெருக்கடி பற்றி குறிப்பிடும் போது, ‘’நான் இந்த மிருகத்தனமான மூடப் பழக்கங்களுக்கு தலை வணங்க மாட்டேன்’’ என்றாராம். அவரது ஜூனியர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதையும் தாண்டி இப்படி அவர் கூறியிருக்கிறார். 
கிளர்ச்சிக்கான அறிகுறிகள்
கம்பெனியின் ஆட்சி 100 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்து விடும் என்ற வதந்தி வேறு நிலவியது. அவர்களின் ஆட்சி இந்தியாவில் 1757ல் ப்ளாஸி யுத்தத்தோடு தொடங்கியது. சப்பாத்திகளும், தாமரை மலர்களும் இந்தியாவில் பல பாகங்களில் விநியோகம் செய்யப்பட்டன, ஸப் லால் ஹோகா, அனைத்தும் சிவப்பாகும் என்ற கோஷம் எங்கும் முணுமுணுக்கப்பட்டது, இது வரவிருக்கும் கிளர்ச்சிக்கான முன்னறிவிப்பாக இருந்தது. 
போரின் தொடக்கம்
பல மாதங்கள் தொடர்ந்த அழுத்தம், கிளர்ச்சியைத் தூண்டும் நிகழ்வுகள், போராட்டத்தின் விளைவாக கல்கத்தாவுக்கு அருகிலே ஜனவரி மாதம் 24ம் தேதி 1857ம் ஆண்டு வெடித்தது. அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி, Bengal Native Infantry படைப்பிரிவு புதிய தோட்டாக்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அதைப் பயன்படுத்த மறுத்தது, அவர்கள் கர்னலை பரேட் நிலத்தில் ஆயுதப்படை மற்றும் குதிரைப் படைகொண்டுக் எதிர்கொண்டார்கள். ஆனால், கர்னல் ஆயுதப்படையைப் பின் வாங்கி, அடுத்த நாள் காலைப் பரேடை ரத்து செய்ய ஒப்புக் கொண்டார். 
மங்கள் பாண்டே mangal-pandey மார்ச் மாதம் 29ம் தேதி 1857ம் ஆண்டு கல்கத்தாவுக்கு அருகே இருக்கும் பேரக்பூர் பரேட் மைதானத்தில், 34வது வங்காளப் படைப்பிரிவைச் சேர்ந்த மங்கள் பாண்டே, தனது அட்ஜசண்ட் லெஃப்டின்ண்ட் பாகை (Adjacent lieutenant Baugh)ஐ சுட்டபோது அது குறி தவறி குதிரையைத் தாக்கியதால், மங்கள் பாண்டே பாகை (baugh)ஐ வாளால் தாக்கிக் காயப்படுத்தினார். மங்கள் பாண்டே மத வெறியில் இருந்ததாக ஜெனரல் ஜான் ஹெர்சே (General John Hearsey) கருதினார். ஜெனரல் ஜான் ஹெர்சே(General John Hearsey) ஜெமாதார் ஈஷ்வரி ப்ரசாதைக் கொண்டு மங்கள் பாண்டேயை கைது செய்ய உத்தரவிட்ட போது அந்த ஜமாதார் மறுத்தார். ஒரே ஒரு இஸ்லாமிய வீரனான ஷைக் பல்டுவைத் தவிர மொத்த படைப்பிரிவும் கைது செய்ய மறுத்தது. மங்கள் பாண்டே தன் சகாக்களை புரட்சிக்கு ஒத்துழைக்க வைக்க முடியாமைக்காக சிப்பாய்கள் பயன்படுத்த மறுத்த அதே என்ஃபீல்ட் துப்பாக்கியால் தன் கால் கட்டை விரலால் தன்னைத்தானே சுட்டுக் கொள்ள முயன்ற அவரால் தன்னைக் காயம் மட்டுமே படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் அவர் பின்னர் ஏப்ரல் மாதம் 6ம் தேதி கோர்ட் மார்ஸியல் (court martial) செய்யப்பட்டு, ஏப்ரல் மாதம் 8ம் தேதி தூக்கிலிடப்பட்டார். ஏப்ரல் மாதம் 22ம் தேதி மங்கள் பாண்டேஐ கைது செய்ய மறுத்ததற்காக ஜமாதார் ஈஷ்வரி ப்ரசாதுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டு துக்கிலிடப்பட்டார். மொத்த படைப்பிரிவும் கலைக்கப்பட்டது. ஆனால் ஷைக் பல்டுக்கு வங்காள ராணுவத்தில் ஜமாதாராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பிற படைப்பிரிவுகளில் இருந்த சிப்பாய்கள் இதை மிகக் கடுமையான தண்டனையாக கருதினார்கள். இப்படி
அவமானப்படுத்தப்பட்ட சிப்பாய்கள் அவத் ராஜ்ஜியம் திரும்பிய போது, பழி வாங்கத் துடித்தார்கள். வாய்ப்பு வந்தது..... ஏப்ரல் மாதம் ஆக்ரா, இலாஹாபாத், அம்பாலா கொழுந்து விட்டு எரிந்தது. 
மேரட்டின் 3வது சிறு குதிரைப்படை குழு (Light Cavalry)
மே மாதம் 9ம் தேதி, மேரட்டின் 3வது சிறு குதிரைப்படை குழு (Light Cavalry) யைச் சேர்ந்த 85 ட்ரூப்பர்கள் தங்கள் தோட்டாக்களைப் பயன்படுத்த மறுத்தார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டு, பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது, பொதுமக்கள் பார்வையில் அவர்கள் உடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இரவில் நகரின் விலை மாதர்கள் வீரர்களின் ஆண்மையைக் கெக்கலி கொட்டிச் சிரித்தது அவர்களை உசுப்பி விட்டதாக சொல்லப்படுகிறது. நீண்ட அவமானம் அளிக்க கூடிய சிறை நோக்கிய நடை பயணத்தின் போது, தங்கள் சகாக்களை அவர்கள் பழித்தார்கள், இது தான் கலகத்தை ஏற்படுத்தியது. தாங்களும் இந்த தோட்டக்களைப் பயன்படுத்த வற்புறுத்தப்படுவோம் என்று சிப்பாய்களுக்கு தெரியும், தங்கள் சாதி, மத, சமுதாய அந்தஸ்த்தை அவர்கள் அப்போது இழக்க நேரிடும் என்று உணர்ந்தார்கள். தங்கள் சகாக்கள் சமய ரீதியாகவே எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், காலனியாதிக்க ஆட்சியாளர்கள் அளித்த தண்டனை அநியாயமாகவே பலருக்கும் பட்டது. 
வங்காள ராணுவத்தின் 20வது மற்றும் 11வது சுதேசி குதிரைப்படை மே மாதம் 10ம் தேதி கிளர்ந்து தங்கள் மேலதிகாரிகளுக்கு எதிராகத் திரும்பி, 3வது ரெஜிமெண்டை விடுவித்து, ஐரோப்பிய படைப்பிரிவைத் தாக்கி அங்கே கண்ணில்பட்ட ஐரோப்பிய ஆண், பெண், குழந்தைகள் என பலரைக் கொன்றதாகவும், அவர்கள் இல்லங்களை எரித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சில சிப்பாய்கள் தங்கள் அதிகாரிகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு விட்டு விட்டு கலகம் புரிந்த தங்கள் சகாக்களோடு இணைந்துகொண்டார்கள் என்றும் ஆதார பூர்வமான ப்ரிட்டிஷ் தகவல்கள் தெரிவிக்கின்றன. புரட்சி செய்த படைகளை மேரட்டில் இருந்த பிற ப்ரிட்டிஷ் படைகள் சந்தித்தன. இந்தியாவிலேயே அதிகபட்ச ப்ரிட்டிஷ் துருப்புக்கள் இருந்த இடம் மேரட் தான்; 2038 ஐரோப்பிய துருப்புக்களும், 12 கள பீரங்கிகளும் என்ற நிலைக்கு எதிராக துப்பாக்கிகள் ஏதும் இல்லாத 2357 சிப்பாய்களை தில்லிக்கு செல்வதை ப்ரிட்டிஷ் படைகளால் தடுத்திருக்க முடியும் என்று சில விமர்சகர்கள் கருதினாலும், இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில் மேரட்டில் இருந்த ப்ரிட்டிஷ் அதிகாரிகள் மெத்தனமாக நடந்து கொண்டார்கள். மற்ற ப்ரிட்டிஷ் படைப் பிரிவுகளுக்கு உடனடியாக தகவல் அனுப்பவில்லை. தாங்களே
இந்தியர்களை கட்டுப்படுத்த முடியும் என்று இருந்தது, பெரிய அளவு பாதிப்பை அவர்களுக்கு பின்னர் ஏற்படுத்தியது. 
ஆதரவும் எதிர்ப்பும்
கிளர்ச்சி ராணுவ எல்லைகளைத் தாண்டினாலும், ஒட்டு மொத்த பொது மக்களும் பங்கு எடுக்கும்படியானதாக, கிளர்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததைப் போல அமையவில்லை. இந்திய தரப்பு முழுமையாக ஒன்றிணைக்கப்படவில்லை. பஹதூர் ஷா ஸஃபர் அரியணை ஏற்றப்பட்டாலும், ஒரு சாரார் மராட்டிய அரசர்கள் அரியணை அமர்த்தப்படவேண்டும் என்று கருதினார்கள். அவத் ராஜ்ஜியத்தைச் சேர்ந்தோர் நவாபின் அதிகாரங்களை மீட்டெடுக்க நினைத்தார்கள். இந்தியாவின் மத்திய வடக்கு பகுதிகளிலேயே போர் நிகழ்ந்தது. தில்லி, லக்னௌ, கான்பூர், ஜான்ஸி, பரேலி, அரா, ஜகதீஷ்பூர் தாம் போராட்டத்தின் பிரதான களங்களாக விளங்கின. ஜிஹாதுக்கான அழைப்பு அஹமதுல்லா ஷா போன்ற சில தலைவர்களால் விடப்பட்டதால், இஸ்லாமியர்கள் தான் இதன் பின்புலத்தில் இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை ப்ரிட்டிஷாருக்கு ஏற்படுத்தியது. அதே நேரம் அவத் ராஜ்ஜியத்தில், இது ஷியா பிரிவினர் தொடர்பான கிளர்ச்சி என்று கருதப்பட்டதால், சுன்னி பிரிவினர் இதில் கலந்து கொள்ள மறுத்தனர்.   மே 1857ல், சுன்னி பிரிவினரால் அமீராக அறிவிக்கப்பட்ட ஹாஜி இம்தாதுல்லாவுக்கும் ப்ரிட்டிஷாருக்கும் பிரபலமான ஷாம்லி போர் நிகழ்ந்தது. பல இந்தியர்கள் ஒரு புறம் மீண்டும் முகலாய ஆட்சி திரும்ப வேண்டாம் என்பதற்காகவும், மறுபுறம் இந்தியத்துவம் என்ற கோட்பாடு இல்லாமை காரணமாகவும் ப்ரிட்டிஷாருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லை மாகாணத்தைச் சேர்ந்த சீக்கியர்களும் படான்களும் ப்ரிட்டிஷாருக்கு ஆதரவாக செயல்பட்டு, தில்லியைக் கைப்பற்ற உதவினார்கள். நேபாளத்தின் கோர்காக்களும் ப்ரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்தார்கள். இவை எல்லாம் சுதந்திரம் அடைந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற ப்ரிட்டிஷாருக்கு துணை புரிந்தது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தாலும், பெரும்பாலான தென்னிந்தியா அமைதியாகவே இருந்தது. பெரும்பான்மை பகுதிகள் நிஜாம்களாலோ, மைசூர் அரசராலோ ஆளப்பட்டு வந்ததாலும், அவர்கள் நேரடியாக ப்ரிட்டிஷ் அரசுக்கு உட்படாதவர்கள் என்பதாலும் போரில் பங்கு கொள்ளவில்லை. 
தொடக்க கட்டங்கள்
பஹாதுர் ஷா ஸஃபர் இந்திய பேரரசராக முடிசூட்டப்பட்டார்; அவர் பெயரில் நாணயங்கள் பொரிக்கப்பட்டன. தொடக்கத்தில், இந்திய வீரர்கள் கணிசமாக கம்பெனி படைகளை பின்னடைய வைத்தனர்.  ஹரியாணா, பிஹார், மத்திய மாகாணங்கள் மற்றும் ஒருங்கிணைந்த மாகாணங்களில் பல முக்கிய நகரங்களைப் பிடித்தார்கள். மேரட் மற்றும் அம்பாலாவில் இருந்த ப்ரிட்டிஷ் படைகள் பல மாதங்கள் விடாப் பிடியாக தாக்குப்பிடித்தன. அவர்கள் ஆயுதங்கள், பயிற்சி, உத்தி அனைத்தும் மேம்பட்டதாக இருந்ததால், கடுமையான எதிரிகளாக இருந்தார்கள். சிப்பாய்களின் முக்கியமான குறை அவர்களுக்கென்று மத்திய ஆணை அமைப்பு என்று ஒன்று இல்லை.   தில்லி
தொடக்கத்தில் தாமதமாகவே தாக்க முற்பட்டாலும், ப்ரிட்டிஷாரின் 2 படைப் பிரிவுகள் மேரட்டிலிருந்தும், சிம்லாவிலிருந்தும் விரைந்தன. அவர்கள் வழி நெடுக கடுமையாகப் போரிட்டு இந்தியர்களை தூக்கிலிட்டபடி முன்னேறினர். அதே நேரத்தில், க்ரிமியன் போரில் ஈடுபட்ட படைகளையும், சீனாவுக்கு சென்று கொண்டிருந்த படைகளை இந்தியா நோக்கியும் திசை திருப்பினார்கள். 2 மாதங்கள் படை நடத்தி, கிளர்ச்சியாளர்களின் பிரதான படையை பதல் கே செராய் (Badl-ke-Serai)யில் எதிர்க்கொண்டு அவர்களை தில்லிக்குள் துரத்தினர். தில்லிக்கு வடக்கில் முற்றுகை இட்டார்கள். ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை இந்த முற்றுகை நீடித்தது. இது நிறைவான முற்றுகையாக இல்லாமல் இருந்த காரணத்தால், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதாரங்களும், கூடுதல் படைகளும் கிடைப்பதில் சங்கடம் இருக்கவில்லை. பிறகு ஜான் நிக்கல்ஸன் தலைமையில் சீக்கிய மற்றும் பட்டாணிய Punjab Movable Column படையினரும் கொர்க்கா படைப்பிரிவினரின் சில பகுதிகளும் ப்ரிட்டிஷாருடன் இணைந்து கொண்டன. கடைசியில் ப்ரிட்டிஷார் கஷ்மீர் கதவை உடைத்த பின்னர், கைகலப்பு ஏற்பட்டது. அவர்கள் செங்கோட்டையை அடைந்த போது பஹாதுர் ஷா ஸஃபர் ஹுமாயூன் கல்லறைக்கு
ஓடிப் போயிருந்தார். ப்ரிட்டிஷார் நகரை மீண்டும் கைப்பற்றினார்கள். 
துருப்புக்கள் நகரைச் சூறையாட ஆரம்பித்தன. பல குடிமக்கள், சுதேசி சிப்பாய்கள் செய்தவற்றுக்காக பழி வாங்கும் நடவடிக்கையாக படுகொலை செய்யப்பட்டார்கள். நகரின் பிரதான மசூதியில் பீரங்கிகள் நிறுவப்பட்டு, அண்டைப்புறங்களில் இருந்த அனைத்து கட்டிடங்களும் நொறுக்கப்பட்டன. இதில் ஏற்பட்ட பெருநாசத்தில், பல கலை, கலாச்சார, இலக்கிய, நிதி வளங்கள் பாழானது தவிர அந்தக் கால கட்டத்தில் தெற்காசியாவின் மிகப் பெரிய கவியாக கருதப்பட்ட மிர்ஸா காலிப்பின் எழுத்துக்கள் அழிந்தன. ப்ரிட்டிஷார் விரைவாக பஹாதுர் ஷா ஸஃபரை கைது செய்த அடுத்த நாளே ப்ரிட்டிஷ் அதிகாரி வில்லியம் ஹாட்ஸன் அவரது மகன்களான மிர்ஸா முகல், மிர்ஸா கிஸ்ர் சுல்தான் மற்றும் மிர்ஸா அபு பக்ரையும் தில்லி வாயிலுக்கு அருகே இருக்கும் கூனி தர்வாஸாவில் சுட்டுக் கொன்றான். அவர்கள் தலைகள் அடுத்த நாள் அவர்கள் தகப்பனிடத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. 
கான்பூர் Nana-Sahib 12791 

ஜூன் மாதத்தில் ஜெனரல் வீலரின் தலைமையில் இருந்த சிப்பாய்கள் கிளர்ந்தார்கள்; இதற்கு நானா சாஹிப்பின் அமைதியான ஆமோதிப்பு இருந்தது. முற்றுகை நீடித்த போது, உண்ண உணவும், அருந்த நீரும் இல்லாத நிலையில், நானா சாஹிப் சரணடையக் கேட்டுக் கொண்ட போது வீலர் வேறு வழி இல்லாமல் ஒப்புக் கொண்டார். பாதுகாப்பாக பெண்கள், குழந்தைகள், ப்ரிட்டிஷ் வீர்ர்கள் என அனைவரும் ஆற்றில் படகுகளில் ஏறிய போது, யாரோ சுட்டதன் காரணமாக மோதல் நிகழ்ந்தது, அதில் 4 ப்ரிட்டிஷார் தான் கான்பூரை விட்டு தப்ப முடிந்தது. தப்பிய பெண்களும் குழந்தைகளும் நானா சாஹிப் உத்திரவின் பேரில் கொல்லப்பட்டார்கள். அந்த வகையில் கான்பூர் ப்ரிட்டிஷாருக்கும் அவர்கள் கூட்டாளிகளுக்கும் ஒரு போர் முழக்கமாகவே அமைந்தது. நானா சாஹிப்பின் இந்த உத்திரவு பெரிய தவறாக அமைந்தது. அவர் இந்தியாவை விட்டு பின்னர் தப்பிச் செல்ல முயன்ற போது கொல்லப்பட்டார். ப்ரிட்டிஷார் மீண்டும் கான்பூரைக் கைப்பற்றிய போது, சிப்பாய்களை தரையில் இருந்த ரத்தக்கறைகளை நக்க வைத்து, பின்னர் தூக்கிலிட்டுக் கொன்றார்கள். 
லக்னௌ
தற்போது உத்தர பிரதேசம் என்று அழைக்கப்படும் மாநிலத்தில் இருந்த அவத் ராஜ்ஜியத்திலும் மேரட்டின் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு புரட்சி வெடித்தது. லக்னௌவில் இருந்த ப்ரிட்டிஷ் கமாண்டர் லாரன்ஸிடம் தன் நிலையை பலப்படுத்திக் கொள்ள போதுமான நேரம் இருந்தது. அவரிடம் விசுவாசமான சிப்பாய்கள் உட்பட ப்ரிட்டிஷ் படை 1700 இருந்தது. புரட்சியாளர்களோடு 90 நாட்கள் நிகழ்ந்த கடும் முற்றுகைப் போராட்டத்தில் லாரென்ஸ் இறந்த பின்னர் 300 சிப்பாய்களும், 350 ப்ரிட்டிஷ் படைகளும் எஞ்சியிருந்தன. இது பின்னர் பிரபலமாக லக்னௌ முற்றுகை என்று அறியப்பட்டது. ஆனால் இந்த தொடக்க வெற்றிக்குப் பிறகு, செப்டம்பர் மாதம் 25ம் தேதி ப்ரிட்டிஷாரின் கூடுதல் படைகள் வந்து வெற்றியின் திசை திரும்பியது என்பது அடுத்த கதை. 
ஜான்ஸி Rani of jhansi 

புந்தேல்கண்டில் இருந்த மராட்டிய ஆட்சிக்கு உட்பட்ட ராஜ்ஜியம் ஜான்ஸி. 1853ம் ஆண்டு ஜான்ஸி அரசர் வாரிசு ஏதும் இல்லாமல் இறந்த போது, அது ப்ரிட்டிஷ் ராஜுடன், வாரிசு இழப்புக் கொள்கை (Doctrine of Lapse) கோட்பாட்டின் படி இணைக்கப்பட்டது. அவரது விதவையான ராணி லக்ஷ்மி பாய், இந்திய மரபுப்படி ஒரு வாரிசை தத்து எடுத்துக் கொள்ள தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தார். புரட்சி வெடித்த போது, ஜான்ஸி புரட்சியின் மையக் களமாக ஆனது. ஒரு சிறிய ப்ரிட்டிஷ் அதிகாரிகளின் குழுவினர் ஜான்ஸி கோட்டையில் தஞ்சம் புகுந்த போது, ராணி அவர்கள் பாதுகாப்பாக வெளியேற ஒத்துழைப்பு அளித்தாலும், அவர்கள் கோட்டையை விட்டு வெளியேறியவுடன், புரட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். என்ன மறுத்தாலும், அதில் ராணியின் பங்கு இருந்ததாக ப்ரிட்டிஷார் கருதினார்கள். செப்டம்பர், அக்டோபர் 1857ல் ராணி ஜான்ஸியின் அண்டை பகுதி ராஜ்ஜியங்களான டாட்டியா மற்றும் ஆர்ச்சாவின் மன்னர்களின் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தார். மார்ச் மாதம் 1858ல், மத்திய இந்திய களப்படையை நடத்தி சர் ஹக் ரோஸ் (Sir Hugh Rose) ஜான்ஸியை முற்றுகையிட்டு ஜான்ஸியை கைப்பற்றினார். ப்ரிட்டிஷார் ஜான்ஸியைக் கைப்பற்றினாலும், ராணி மாறுவேஷமணிந்து தப்பி விட்டார். 
பிற பகுதிகள்
ஜூன் மாதம் 1858ம் ஆண்டு ராணி லக்ஷ்மிபாயும் மராட்டிய கிளர்ச்சியாளர்கள் குழுவும் ப்ரிட்டிஷ் கூட்டாளிகளான சிந்தியா அரசர்களிடமிருந்து க்வாலியரைக் கைப்பற்றினார்கள். ஆனால், 3 வாரங்கள் கழித்து மீண்டும் ப்ரிட்டிஷார் தாக்கியபோது க்வாலியரை விட்டு ராணி வெளியேறும் போது சுடப்பட்டு இறந்தார். அவரைப் பற்றி ரோஸ் எழுதுகையில், இந்திய தலைவர்களிலேயே மிக ஆபத்தானவர் ராணி லக்ஷ்மிபாய் என்று கூறுகிறார். இன்றும் கூட ராணியின் வீர தீர சாகஸங்கள் புந்தேல்கண்ட் பகுதியின் நாட்டுப்புற பாடல்களாக, செவி வழிக் கதைகளாக, உணர்ச்சி பொங்க பாடப்பட்டு பேசப்பட்டு வருகின்றன. ஹிந்தியில், கூப் லடி மர்தானி தீ, வோ ஜான்ஸீ வாலி ரானீ தீ என்ற பாடல் இதற்கு சான்று. (தீரமான ஆண்மையோடு போரிட்டாள், அவள் தான் ஜான்ஸியைச் சேர்ந்த ராணி) என்பது அதன் பொருள். 
பழிவாங்கல்
1857 முடிவிலிருந்து ப்ரிட்டிஷார் வெற்றி பெறத் தொடங்கி விட்டார்கள். லக்னௌ மார்ச் 1858ல் மீட்கப்பட்டது, அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, போர் முடிவுக்கு வந்தது. ஜூன் 20ம் தேதி 1858ல் கடைசி போராளிகள் க்வாலியரில் தோற்கடிக்கப்பட்டனர். 1859 வாக்கில் கிளர்ச்சிப் படைத் தலைவர்களான பகத் கானும் நானா சஹிப்பும் கொல்லப்பட்டார்கள் அல்லது தப்பியோடியிருந்தார்கள். ப்ரிட்டிஷார் பழைய முகலாய வழக்கப்படி, கிளர்ச்சியாளர்களை பீரங்கி வாயில் கட்டி, சுட்டு வீழ்த்தினார்கள். இரு தரப்புமே கொடுமைகளை இழைத்ததாக கருதப்பட்டாலும், இந்திய தரப்பில் இறந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். தில்லி வீழ்ந்த பிறகு பாம்பே டெலிகிராப் (Bombay Telegraph)ல் வெளியிடப்பட்டு ப்ரிட்டிஷ் பத்திரிக்கைகளில் வெளிவந்த ஒரு கடிதம் பழிவாங்கலின் வீச்சை எடுத்துக் காட்டும்.....’’எங்கள் துருப்புக்கள் நுழைந்த போது எதிர்ப்பட்ட பேர்கள் அனைவரையும் துப்பாக்கியின் கத்தியால் குத்தினோம், சில வீடுகளில் 40, 50 பேர்கள், கிளர்ச்சிக்கு சம்பந்தமில்லாத குடிமக்கள் பயத்தில் கூடியிருந்த போது, அவர்கள் எங்கள் மன்னிப்பை எதிர்பார்த்திருந்த போது, நாங்கள் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தோம்’’ 
தில்லியை வெற்றிக் கொண்ட கேப்டன் ஹாட்ஸனுக்கு ஜெனரல் மாண்ட்காமெரி எழுதிய கடிதம் ப்ரிட்டிஷ் ராணுவ தலைமை எப்படி இந்த படுகொலைகளை ஆமோதித்தது என்பதைக் காட்டுகிறது. அரசரைக் கைப்பற்றி அவரது மகன்களை படுகொலை செய்தமைக்கு உங்களுக்கு எல்லா கௌரவமும் உரித்தாகட்டும். நீங்கள் மேலும் தலைகளைப் பந்தாடுவீர்கள் என்று நம்புகிறேன், என்று எழுதியிருந்தார். ஏன், கேப்டன் ஹாட்ஸனே கூட தில்லி வீழ்ந்த பிறகு ப்ரிட்டிஷ் படையினர் நடத்திய அட்டூழியத்தைப் பார்த்த பின்னர், தனது புத்தகமான டுவெல் இயர்ஸ் இன் இந்தியா (Twelve years in India)வில், ‘’எனக்கு இருக்கும் ராணுவம் மீதான பற்றையும் தாண்டி, கிறிஸ்தவர்கள் என்று தங்களை பறைசாற்றிக் கொள்ளும் இவர்கள், இந்த நேரத்தில் நடத்திய படுகொலை, மிக அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது’’ என்று எழுதுகிறார். இதன் விளைவாக, போர் முடிவில் இந்திய தரப்பில் பெரும்பாலான பேர்களும், கிளர்ச்சிக்கு துணை போனதாக கருதப்பட்ட குடிமக்கள் பலரும் படுகொலை செய்யப்பட்டார்கள். ப்ரிட்டிஷ் பத்திரிக்கைகளும், ப்ரிட்டிஷ் அரசும் எந்த வகையான மன்னிப்பையும் அளிக்கவில்லை; ஆனால் கவர்னர் ஜெனரல் கேனிங் சுதேசி உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கருதியதால், அவரை Clemency Canning என்று கேலி பேசினார்கள். போர் வீரர்களை கைதிகளாக வைத்துக் கொள்ளாமல், அவர்களை எல்லாம் கொன்றார்கள். கிளர்ச்சியாளர்களுக்கு சாதகமாக இருந்தார்கள் என்று சந்தேகிக்கப்பட்ட காரணத்தால் கிராமங்களே கூட பூண்டோடு அழிக்கப்பட்டன. இந்தப் பழிவாங்கல் நடவடிக்கையை இந்தியர்கள் ‘’பேய்க்காற்று’’, Devil's Wind என்று அழைத்தார்கள். 
புனரமைப்பு
இந்தப் புரட்சி இந்தியாவில் ப்ரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆகஸ்ட் மாதம் 1858ம் ஆண்டு ராணியின் பிரகடனத்தின் பேரில்(”The Queen's Proclamation”), அதிகாரம் ப்ரிட்டிஷ் ராணியிடம் சென்றது. இந்திய நிலவரங்களை கவனிக்க ஒரு செயலர் நியமிக்கப்பட்டார், அரசியின் வைஸ்ராய் தான் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட ஆரம்பித்தார். அவர்கள் சீர் திருத்தத்தில் ஈடுபட்டு, இந்திய உயர் சாதியினரை அரசில் ஒருங்கிணைத்து, ப்ரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். ராணுவ ரீதியாக, இந்த புரட்சி, ப்ரிட்டிஷ் இந்தியாவின் சுதேசி மற்றும் ஐரோப்பிய ராணுவங்களை உருமாற்றியது. சுதேசி படைகளுக்கு இணையாக ப்ரிட்டிஷாரின் படைப் பிரிவுகள் அதிகரிக்கப்பட்டன. ப்ரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்த கொர்க்கா பிரிவுகள் போன்றவை தக்கவைக்கப்பட்டு, அவை அதிகரிக்கப்பட்டன. பழைய முறையில் இருந்த குற்றங்கள் களையப்பட்டு, சிப்பாய்களிடம் பீரங்கிப் படைகள் விடப்படவில்லை. ப்ரிட்டிஷ் இந்தியாவில் கிளர்ச்சிக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட இந்த மாற்றங்கள் 20ம் நூற்றாண்டு தொடக்கம் முதல் நிலவின. 
மூன்று மாகாணங்களான வங்காளம், மதராஸ், பம்பாய் ஆகியவற்றில் கிழக்கிந்திய கம்பெனியின் ஐரோப்பிய படைகள் ராணியின் படையாக மாற்றம் அடைந்தது. இது 1859ல் வெள்ளையர்களின் ராணுவப் புரட்சியாக வெடித்தது. ஏனென்றால், கம்பெனியின் ராணுவமாக சேர்ந்த ஐரோப்பிய துருப்புக்கள், ப்ரிட்டிஷ் ராணுவத்தில் மீண்டும் இணைய பெரும் வெகுமதியை எதிர்பார்த்தார்கள், அவர்கள் இந்த மாற்றத்தை கடுமையாக எதிர்த்தார்கள். ப்ரிட்டிஷ் ராணுவம் இது வரை கண்டிராத மிகப் பெரிய எதிர்ப்பை வங்காளத்தின் ஐரோப்பிய துருப்புக்கள் செய்தன; இதனால் இந்திய அரசு அவர்கள் வெளியேறுவதை ஏற்றுக் கொண்டது, இதை பத்தாயிரம் பேர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த எதிர்ப்பு இந்தியாவில் இருந்த ஐரோப்பிய படைகளை ராணியின் படையின் அதிகாரத்தில் வைத்தது. வைஸ்ராய் நிலப் பறிப்பை நிறுத்தி, மத சகிப்புத்தன்மையை வலியுறுத்தி, இந்தியர்களை சிவில் சேவைகளில் அனுமதித்தார், ஆனால் துணைப் பதவிகளில் மட்டுமே. பஹாதுர் ஷா ஸஃபர் தேச துரோகத்துக்கான குற்றம் சாட்டப்பட்டு, ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்; அங்கே 1862ம் ஆண்டு அவர் இறந்தார்; இது முகலாய பரம்பரையை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1877ம் ஆண்டு பிரதம மந்திரி
பெஞ்ஜமின் டிஸ்ரேலியின் ஆலோசனையின் பேரில் விக்டோரியா மஹாராணி இந்தியாவின் பேரரசியாக முடி சூட்டிக் கொண்டார். 
மீண்டும் அதே கதை, மீண்டும் அதே ஓலம், மீண்டும் அதே அவலம்..... ”ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே” என்ற தேசக் கவி பாரதியின் அமர சொற்கள் தாம் நினைவில் தஞ்சம் அடைகின்றன. அவமானமும் வேதனையும் மனதைப் பிடிங்கித் தின்கிறது.... பரங்கியர் கூட்டம் ஜலியான்வாலா பாக் படுகொலைக்கு மன்னிப்புக் கேட்கக்  பல முறை யோசித்து கேட்ட அரை குறை மன்னிப்பு கூட, ஏதோ உறக்கத்தில் முனகுவது போலக் கேட்கிறதே, இத்தனை படுகொலைகளுக்கும், அநியாயங்களுக்கும், சூறையாடல்களுக்கும், சுரண்டல்களுக்கும் பல்லாயிரம் ஆண்டுகள் அல்லவா அவர்கள் கைகட்டி நம்மிடம் சேவகம் புரிய வேண்டும்? நம்மை அடக்கிக் கொடுமைப்படுத்தி ஆள யாரிவர்கள்? இந்த மண்ணின் மீது இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? கடல் கடந்து வந்து வஞ்சகத்தால் வாணிபம் என்ற பெயரில் நாட்டையே கொள்ளை கொண்ட பறங்கிக் கொக்குகளிடம் மானசீக அடிமைகளாகவும், இன்னும் அவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு முன்னே மண்டியிட்டுக் கொண்டிருக்கும் ஈனப் பதர்களாகவா நாம் இருப்பது? நாம் அனைவரும் காறி உமிழ்ந்தால் கூட அவர்கள் நாடு கடலில் மூழ்கி விடுமே! அப்படி இருக்க இன்னமும் கூட வஞ்சக சுதேசிகள், சூது நிறை விதேசிகளின் பொய்யுரைகளில் மூழ்கி எத்தனை காலம் தான் திராணியற்று, மானமிழந்து, கௌரவம் பறி போன நிலையில், வாழும் பதர்களாய், நடைபிணங்களாய், விலங்குகளைப் போல வீண் வாழ்வு வாழ்வோமோ?! என்று நம் உள்ளம் - என்ற  -உறைகளிலிருந்து சுயமரியாதை என்ற வாள் வெளிப்பட்டு, இது நம் நாடு, இவள் எம் தாய், இவர்கள் நம் மக்கள் என்று வீறு கொண்டு எழுந்து இந்த மண்ணை நம் நெற்றிகளில் ஏந்துகிறோமோ, அன்று தான் விழி நிறைந்து, வழி பிறக்கும், எம் அன்னை மகிழ்ச்சி அடைவாள். அது வரை நாம் என்ன உலகாயத முன்னேற்றம் அடைந்தாலும், அது சவத்தை சிரிக்க வைத்தது போலத் தான். ஆத்ம கௌரவமும், சுயமரியாதையும் இல்லாத ஒரு வாழ்வென்ன வாழ்வா? அப்படி ஒரு மாளிகை வாழ்வை, அரச போகங்களில் திளைத்து வாழ்வதைக் காட்டிலும், கௌரவத்தோடு, நம் மாண்பினையும், கண்ணியத்தையும், மரபுகளையும், கலாச்சாரத்தையும் காத்து குறை வயிறு உண்டாலும், நம் அன்னை புளகாங்கிதம் அடையமாட்டாளா?. அவள் மகிழ்வே நம் உயர்வு! அவள் குரலே நம் தேசிய கீதம்!! அவள் ஆசிகளே நமக்கு மேன்மை!!   வந்தே மாதரம்!
Read 11595 timesRate this item12345(3 votes)

No comments:

Post a Comment