Sunday 20 May 2018

AROOR DAS ,DIALOGUE WRITER, GEM OF TAMIL CINEMA





AROOR DAS ,DIALOGUE WRITER,
GEM OF TAMIL CINEMA  


ஆரூர்தாஸ் போன்ற மாமனிதர்களோடு பழகும் பாக்கியம் - Ravi Prakash

என் மதிப்புக்குரிய வி.ஐ.பி. நண்பர்களில் ஒருவர் - திரைக்கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள். 500 படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதி, கின்னஸ் ரிக்கார்டில் தன் பெயரைப் பதித்தவர். ஆனால் ஆச்சரியம்... நேரில் பழகும்போது அந்தப் பெருமிதம், கர்வம் எதுவும் இன்றி, மிக எளிமையாக, நமக்குச் சரிசமமாகப் பழகுபவர்.

கடந்த ஏழு ஆண்டுகளாகத்தான் எனக்கு இவரோடு அறிமுகம். முதல் முறை பார்த்தபோது, “என் பெயர் ஆரூர்தாஸ். பல திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதியிருக்கிறேன். என் பெயரை நீங்க கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்” என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ஆரூர்தாஸ் என்கிற பெயரை எனக்கு ‘தெய்வ மகன்’ காலத்திலிருந்து பரிச்சயம். தீவிர சிவாஜி ரசிகராக இருப்பவர் யாரும் ஆரூர்தாஸ், பாலமுருகன் ஆகிய இரண்டு கதை வசனகர்த்தாக்களின் பெயர்களைக் கடந்து வந்திருக்கவே முடியாது. அப்படியிருக்க, எளிமையான கதர்ச் சட்டையும் ஒரு சாதாரண மில் வேட்டியுமாக என் எதிரே அமர்ந்திருப்பவர் அந்த ஆரூர்தாஸேதானா என்று என்னால் நம்பவே முடியவில்லை.

சிவாஜி கணேசன் பற்றித் தான் எழுதிய கட்டுரைகளை விகடன் பிரசுரத்தில் ஒரு புத்தகமாகப் போடுவதற்காக வேண்டி அவர் வந்திருந்தார். நேரே விகடன் பிரசுரத்தில் அவர் தொடர்பு கொண்டிருந்தால், அவரைச் சந்தித்துப் பழகும் பாக்கியம் எனக்குக் கிட்டாமலே போயிருக்கக்கூடும். யாரை அணுகுவது என்று தெரியாமல், ஆனந்த விகடன் என்று விசாரித்து வந்தவரை நான் சந்திக்கும்படிச் செய்தது இறைவனின் திருவுளம்தான்.

வந்தவர், புத்தகம் தொடர்பான விஷயங்களைத் தவிர, வேறு பல விஷயங்களை அந்த முதல் சந்திப்பிலேயே மனம் விட்டுப் பேசினார். சிவாஜிக்கும் அவருக்கும் உண்டான நட்பு, ‘பெற்றால்தான் பிள்ளையா’ என எம்.ஜி.ஆரின் பாணிக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு வித்தியாசமான கதையை அவருக்காக உருவாக்கித் தந்த சூழல், நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகருடனான நட்பு என ஏகப்பட்ட விஷயங்களை அன்று அவர் என்னோடு பகிர்ந்து கொண்டார்.
ஆர்.எஸ். மனோகர் தந்ததாகச் சொல்லி சில ருத்திராட்சங்களை அவர் அன்று காண்பித்தார். ருத்திராட்சங்கள் இயற்கையில் விளையக்கூடியவை. அவற்றில் திரிசூலம், ஓம் ஆகிய வடிவங்கள் இருப்பதைக் காண்பித்தார். இன்னொரு ருத்திராட்சத்தில் சிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு, பிறை நிலா ஆகிய வடிவங்களும் இருந்தன. காஞ்சிப் பெரியவர், மனோகருக்கு அன்புடன் அளித்த இந்த அதிசய, அபூர்வ ருத்திராட்சங்களை, மனோகர் தன் அன்புக்குரிய ஆரூர்தாஸுக்கு அளித்திருக்கிறார்.

மனோகர் பற்றி ஆரூர்தாஸ் அன்று சொன்ன ஒரு விஷயம் என்னை மிகவும் நெகிழ வைத்தது. தனக்கு ஒரு நாடகம் எழுதித் தரும்படி ஆரூர்தாஸைக் கேட்டுக் கொண்டே இருப்பாராம் மனோகர். ஆனால், அந்நாளில் ஆரூர்தாஸ் இருந்த மும்முரத்தில், மனோகரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போனதாம். இம்மாதிரி நிலையில் ஆரூர்தாஸ் ஒரு புத்தகம் எழுதினார். (ஏழு வருடம் கழித்து எழுதுவதால், அந்தப் புத்தகத்தின் பெயர் மறந்துவிட்டது.) அதற்கு இயல், இசை, நாடகம் என மூவரிடம் அணிந்துரை கேட்க விரும்பிய ஆரூர்தாஸ் (இசைக்கு இளையராஜாவிடம் அணிந்துரை கேட்டார் என்று ஞாபகம். இயலுக்கு யார் என்று மறந்துவிட்டது.) நாடகத் துறைக்கு ஆர்.எஸ்.மனோகரிடம் அணிந்துரை கேட்டிருக்கிறார்.

அவரும் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட தேதியில் எழுதித் தருவதாகச் சொன்னாராம். ஆனால், அன்றைய தினம் தரவில்லை. ஆரூர்தாஸ் போன் செய்து கேட்க, இரண்டு நாளில் தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், இரண்டு நாள் கழித்தும் மனோகர் அணிந்துரை தரவில்லை. அவர் நாடகம் கேட்டுத் தான் எழுதித் தராமல் சாக்குப்போக்கு சொல்லித் தட்டிக் கழித்ததால், தம்மைப் பழிக்குப் பழி வாங்குகிறார்போலும் என்கிற எண்ணம் ஆரூர்தாஸுக்கு. எனவே, கொஞ்சம் கோபமாகவே ‘அணிந்துரை தரமுடியுமா, முடியாதா?’ என்பது போல் கேட்டிருக்கிறார்; ‘முடியாதென்றால் வேறு யாரிடமாவது வாங்கிக் கொள்கிறேன்’ என்கிற தொனியில். “காலையில் அணிந்துரை உங்கள் வீட்டில் இருக்கும்” என்றாராம் மனோகர்.

அதன்படியே, மறுநாள் காலையில், “அணிந்துரை ரெடி! வந்து வாங்கிப் போகலாம்” என்று மனோகரிடமிருந்து போன்கால். ஆரூர்தாஸே நேரடியாகப் போயிருக்கிறார், அணிந்துரையை வாங்கி வர. ஆனால், மனோகரின் வீடே ஒரு இறுக்கத்தில் இருந்ததைப் பார்த்திருக்கிறார். மனோகர் அணிந்துரையைக் கொடுத்து, அங்கேயே படித்துப் பார்த்து அபிப்ராயம் சொல்லும்படி ஆரூர்தாஸைக் கேட்டிருக்கிறார். அதைப் படிக்கப் படிக்க, ஆரூர்தாஸின் புத்தகத்தில் உள்ள அருமையான இடங்கள் அனைத்தையும் மறக்காமல் குறிப்பிட்டுச் சிலாகித்து எழுதி, மிக அற்புதமான ஒரு அணிந்துரையை எழுதியிருக்கிறார் மனோகர் என்பது புரிந்ததாம். ஆரூர்தாஸ் நெகிழ்ச்சியோடு மனோகரின் கையைப் பற்றி நன்றி சொல்ல, “ஆரூரா! உனக்கு என் மேல கோபம் இருக்கலாம், நான் லேட் பண்ணிட்டேன்னு. எனக்கு நாடகம் எழுதித் தராத கோபத்தை இதுல காண்பிச்சுட்டேன்னுகூட நீ நினைச்சிருக்கலாம். ஆனா, சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சுப்பா!” என்று கரகரத்த குரலில் சொல்லத் தொடங்கியிருக்கிறார் மனோகர்.

“சில நாட்களுக்கு முன்னே என் அன்புக்குரிய அக்கா இறந்துட்டாங்க. என்னைத் தாய் போல வளர்த்தவங்க அவங்க. அக்கா மறைவினால நான் மனசொடிஞ்சு கிடந்தேன். எதுலேயுமே எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லே. நீ போன் பண்ணிக் கேட்டபிறகுதான் ஞாபகம் வந்துது. அதான், இனிமேலும் தாமதிக்கக் கூடாதுன்னு நேத்து ராத்திரி உட்கார்ந்து மொத்த புஸ்தகத்தையும் படிச்சு முடிச்சுட்டு, கையோட அணிந்துரை எழுதி வெச்சுட்டேன்! லேட்டா கொடுத்ததுக்கு ரொம்ப ஸாரிப்பா!” என்றாராம் மனோகர்.

“அதை ஏன் கேக்கறீங்க ரவி, அவர் இப்படிச் சொன்னதும் நான் அப்படியே ஆடிப் போயிட்டேன். இந்த நல்ல மனுஷனையா கோவிச்சுக்கிட்டேன்னு என்னை நானே சபிச்சுக்கிட்டேன். மனோகர் மாதிரியான ஒரு மனிதாபிமான மனிதரைப் பார்க்கவே முடியாது!” என்று நெகிழ்ந்து சொன்னார் ஆரூர்தாஸ்.

அதற்குப் பிறகு, மனோகருக்காக ஆரூர்தாஸ் ஒரு நாடகம் எழுதித் தந்து, அதை மனோகர் குழுவினர் ரிகர்சல் எல்லாம் பார்த்து, கடைசியில் அதை மேடை ஏற்றுவதற்குள்ளாக மனோகர் மறைந்துவிட்டது ஒரு பெரிய சோகம்!

ஆரூர்தாஸ் அன்றைய முதல் சந்திப்புக்குப் பிறகு, பல முறை விகடன் அலுவலகம் வந்து என்னைச் சந்தித்திருக்கிறார். விகடனிலும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவரின் இரண்டாவது மகள் உஷா இறந்துபோனது ஒரு பெரிய சோகம். டீச்சராகப் பணியாற்றியவர் உஷா. ஆரூர்தாஸின் துக்கத்தில் பங்கு கொள்ள, அன்று அவரது தி.நகர் இல்லத்துக்கு நான் சென்றிருந்தேன். பின்னர், உஷாவின் ஆத்மா சாந்தியடைய சர்ச்சில் பைபிள் படித்து, பெயர்களை வாசிக்கும் நிகழ்ச்சிக்கும் சென்று கலந்துகொண்டேன். அன்னாரின் நினைவாக, குறிப்பிட்ட சில நெருங்கிய நண்பர்களுக்கு அன்றைய தினம் விருந்து அளித்தார் ஆரூர்தாஸ். அதிலும் கலந்து கொண்டேன்.

அடிக்கடி ஆரூர்தாஸ் என்னைக் குடும்பத்தோடு தம் வீட்டுக்கு விருந்துண்ண ஒரு நாள் வந்துபோகும்படி அழைப்பார். எனக்குத்தான் சூழ்நிலை வாய்க்கவில்லை.

சமீபத்தில் தி.நகர் வீட்டை விற்றுவிட்டு, வில்லிவாக்கம் நாதமுனி பகுதியில் புது பிளாட் வாங்கிக் குடியேறிவிட்டார். அங்கும் வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கு முன், அவரது பேரன் வினோத் ஜேசுராஜுக்குத் திருமணம் என்று எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். “ரவிபிரகாஷ், அவசியம் என்னுடைய மகளையும் பேரப் புள்ளைங்களையும் அழைச்சுக்கிட்டு வந்துடுங்க!” என்றார் அன்பு ததும்பும் குரலில், என் மனைவியையும் என் குழந்தைகளையும் குறிப்பிட்டு. (ஆமாம், அவருக்கும் உஷா என்று ஒரு மகள் இருந்தார்தானே! என் மனைவி உஷாவும் அவருக்கு ஒரு மகள்தான்!)
அந்தத் திருமண வரவேற்பு வைபவம், சென்னை ஜீவா பூங்காவை ஒட்டியிருக்கும் மேம்பாலத்துக்குப் பக்கத்தில் உள்ள டி.சி.மேனர் ஹோட்டலில் நடந்தது. தரைக்குக் கீழே இரண்டாவது தளத்தில் நடந்த அந்த திருமண வரவேற்பில் முதல்வர் கலைஞர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவகுமார், எஸ்.பி.முத்துராமன், ஏவி.எம்.சரவணன், நல்லி குப்புசாமி எனப் பலப்பல வி.ஐ.பி-க்கள் கலந்துகொண்டனர். அத்தனைப் பெரிய தலைகள் கலந்து கொண்ட விழாவில் எங்களையும் அன்போடு வரவேற்று உபசரித்ததோடு மட்டுமின்றி, மறுநாள் தொலைபேசியில் அழைத்து, குடும்பத்தோடு வந்து கலந்துகொண்டதற்கு எனக்கு நன்றியும் சொன்னார் திரு. ஆரூர்தாஸ்.

ஆரூர்தாஸ் போன்ற மாமனிதர்களோடு பழகும் பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நெஞ்சு நெகிழ நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

Ravi Prakash at Monday, May 31, 2010

No comments:

Post a Comment