Tuesday 15 May 2018

Sangili Murugan actor ,producer born may 15, 1944







Sangili Murugan actor ,producer 
born may 15, 1944
சங்கிலிமுருகன்


சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் 1979-இல் அறிமுகமான சங்கிலிமுருகன் லோ பட்ஜெட் இயக்குநர் ராம நாராயணன் இயக்கிய பல படங்களில் நடித்தார். அதே போல் விஜயகாந்தின் பல படங்களில் வில்லன்களில் ஒருவராக நடித்து வந்தார். இந்த பழக்கத்தின் காரணமாக விஜயகாந்தை நாயகனாகவும், ராம் நாராயணனை இயக்குநராகவும் போட்டு தனது மீனாட்சி ஆர்ட்ஸ் மூலம் கரிமேடு கருவாயன் என்னும் படத்தை தயாரித்தார். 

அதற்கு முன் வெளியாயிருந்த மலையூர் மம்பட்டியான் பாதிப்பில் அதே மாதிரி பல படங்கள் அப்போது வந்தன. ஆனால் இந்தப் படம் மட்டுமே வெற்றி பெற்றது. அதன்பின் அவர் பல வெற்றிப்படங்களைத் தயாரித்தார். இளையராஜா இவருக்காகவே அட்டகாசமான பாடல்களை வழங்கி இவரை தூக்கி நிறுத்தினார்.

சங்கிலிமுருகன் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர். இவரை தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரின் நீட்சியாகப் பார்க்கலாம்.

அவரைப் போலவே இவரும், நடிக்க வந்து படம் தயாரித்தவர்கள். அவருக்கு எம்ஜியார், இவருக்கு இளையராஜா.

அவரும் தன் நடிகர்களுக்கு,கதையாசிரியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுப்பார். இவர் விஜயகாந்துக்கு வெள்ளித்தட்டில் வைத்து பெரிய மருது படத்துக்காக கொடுத்த 50 லட்சம் அப்போது பரபரக்கப்பட்டது.

ஆனால் சின்னப்பா தேவர், தன் படங்களில் தேவர் ஜாதியை தூக்கிப் பிடித்ததில்லை.

சங்கிலிமுருகனின் பெரும்பாலான கிராமப் படங்களில் நாயகன் தேவர் ஜாதியை சேர்ந்தவராகவே சித்திரிக்கப் பட்டுள்ளார்.
படம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர், பசும்பொன் குருபூஜை நடக்கும் இடம், தேவரின விழாக்கள் போன்ற வசனங்கள், காட்சிகள் விரவியிருக்கும்.

அதேபோல் சங்கிலிமுருகன் படங்களில் தவிர்க்க முடியாதவர் எம் என் நம்பியார். ஆரம்ப காலத்தில் வில்லனாக உடன் நடித்ததால் ஏற்பட்ட பாசப் பிணைப்பாக இருக்கலாம்.

சங்கிலி முருகன் தயாரித்த படங்கள்

கரிமேடு கருவாயன்
எங்க ஊரு பாட்டுக்காரன்
எங்க ஊரு காவக்காரன்
சர்க்கரைப்பந்தல்
பாண்டி நாட்டு தங்கம்
பெரிய வீட்டு பண்ணக்காரன்
கும்பக்கரை தங்கய்யா
நாடோடி பாட்டுக்காரன்
பெரியமருது
பாசமுள்ள பாண்டியரு
காதலுக்கு மரியாதை
சுறா

இதில் காதலுக்கு மரியாதை படத்தை மொத்தமாக தற்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்று அழைக்கப்படும் அன்றைய என் எஸ் ஸி ரவி மொத்த விலைக்கு வாங்கி, நல்ல அறுவடை செய்து விட்டார். பின் சுறாவும் இவரிடம் இருந்து சில கைமாறி சன் பிக்சர்ஸ் மூலம் வெளியானது.

பாசமுள்ள பாண்டியருக்காக ராஜ்கிரணுக்கு ஏகப்பட்ட தொகை கொடுத்தது, படம் அதிக நாள் தயாரிப்பில் இருந்தது ஆகியவை படம் ஓடாடதால் இவரைப் பாதித்தன.

ராமராஜனுக்கு முதல் பெரிய ஹிட் என்றால் எங்க ஊரு பாட்டுக்காரன் தான். அப்படம் மூலம்தான் அவருக்கு பசு நேசன் என்ற பெயரும், டவுசர் என்ற பெயரும் கிட்டியது.

எங்க ஊரு காவக்காரனிலும் அருமையான பாடல்கள். சர்க்கரைப்பந்தலில் சரண்ராஜ், நிஷாந்தி ஜோடி. இந்தப் படம் வசூலில் பெரிய அடி வாங்கியது. வசதியான, தப்பு வழிக்குச் செல்லும் கணவரைத் திருத்தும் பெண் வேடம் நிஷாந்திக்கு.

பாண்டி நாட்டு தங்கம் மதுரையில் ஒரு தியேட்டரில் 150 நாள் ஓடியது. கார்த்திக் சூட்டிங்கிக்கே வர சோம்பேறித்தனம் படுவார். சங்கிலி முருகன் சிக்கனவாதி. எந்த விளம்பரமோ, வற்புறுத்தலோ இல்லாமல் அந்தப் படம் ஓடியது. இந்தப் படத்தை இயக்கியவர் டி பி கஜேந்திரன்.

என் கே விஸ்வனாதன் இயக்கிய பெரிய வீட்டு பண்ணக்காரனும் 100 நாள் ஓடியது. கும்பக்கரை தங்கய்யா முதலுக்கு மோசமில்லை. இதன்பின் இவருக்கு சரிவு தோன்றியது எனலாம்.

கும்பக்கரை தங்கய்யாவுக்குப் பின் கமல்ஹாசனை வைத்து, கங்கை அமரன் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கப் போவதாக செய்தி வந்தது. ஜோடியாக லட்சுமி மகள் ஐஸ்வர்யா எனவும் தகவல்கள் வந்தன.

ஆனால் அது கைகூட வில்லை. பின்னர் அவர் தேவர்மகன் படத்தில் கணக்குப் பிள்ளையாக நடித்தார். உடன் அவரது தயாரிப்பு நிர்வாகி? ராமு மச்சானும் நடித்தார். பின்னர் சில இடங்களில் அவர், கமல் என் படத்தில் நடிக்காமல் ஏமாற்றி விட்டார் என்று சொல்லி வந்தார்.

கார்த்திக் மோகினி நடிப்பில் வெளிவந்த நாடோடி பாட்டுக்காரன் ஓரளவே ஓடியது. பெரிய மருதும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

2005-ஆம் ஆண்டு சிங்கம் புலி இயக்கிய மாயாவி படத்தில் ஆசாரியாக மிக சிறப்பாக நடித்திருந்தார். இப்போது உடல்நலக் குறைவினாலோ அல்லது வேறு காரணங்களாலோ நடிப்பதில்லை.

No comments:

Post a Comment