BALASARASWATHI ,BHARATHANATYA DANCER
BORN 1918 MAY 13- 1984 FEBRUARY 9
பாலசரஸ்வதி born 1918 may 13
பரதநாட்டியத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பாலசரஸ்வதியின் நாட்டியம் ஒன்று. இன்னொன்று மற்றவர்களின் நாட்டியம்
தி ஜானகிராமன்
பாலசரஸ்வதியின் நாட்டியம் எப்படிப்பட்டதென்பதற்க்கு இவ்வரிகளே போதுமானவை என்று தோன்றுகிறது. தி ஜானகிராமனின் எழுத்துக்களை வாசித்தவர்கள் அவர் எத்தனை சிறந்த கலா ரசிகர் என அறிவார்கள்.
Dougles Knitht எழுதியுள்ள ‘Balasaraswathi - Her Art and Life’ என்ற புத்தகத்தை வாசித்தேன். பாலசரஸ்வதியின் கலை வாழ்க்கையை ஒரு காலகட்டத்தின் சமூக மாற்றத்துடன் இணைத்து எழுதப்பட்டுள்ள புத்தகம் என இதை சொல்லலாம்
பரதமுனி எழுதிய நாட்டிய சாஸ்திரம் நான்காம் நூற்றாண்டை சேர்ந்தது. இன்று பரதநாட்டியம் என பரவலாக அறியப்படும் நடனத்திற்க்கு சதிர் என்று பெயர். இந்த நடனமும் இசையும் காலம்காலமாக குரு சிஷ்ய மரபுப்படி பயிற்றுவிக்கப்பட்டு அன்று ஆண்ட அரசர்களால் பேணப்பட்டு வந்த கலைவடிவம். முக்கியமாக தேவதாசி சமூகத்தை சார்ந்தவர்கள் வழிவழியாக இக்கலையை சிரத்தையுடன் பயின்று தன் அடுத்த தலைமுறைக்கும் அதை கடத்தி பேணிப்பாதுகாத்தனர். தேவதாசி சமூகத்தில் இருந்தவர்கள் அனைவரும் இக்கலைகளில் ஈடுபடவில்லையானாலும் இச்சமூகத்தை சேர்ந்தவர்களே கணிசமாக ஈடுபட்டனர். அன்று தஞ்சாவூரை ஆண்ட அரசர்கள் இக்கலைகளை பேணும் பொருட்டு இவர்களுக்கு சிறப்பான பொருளாதார உதவிகளை செய்தும் வந்தனர். வெள்ளையர்கள் இந்தியாவை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்து ஆளத்தொடங்கியபோது இங்கு ஆண்ட அரசர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரமிழந்தபோது இச்சமூகத்தினர் வறுமைக்கும் புறக்கணிப்புக்கும் தள்ளப்பட்டனர்.
தேவதாசி குடும்பமுறை பெண்வழிச்சமூகமாதலால், பெண்ணே குடும்பத்தின் அத்தனை கடமைகளுக்கும் பொறுப்பானவள். கலையை பேணி வருமானமீட்ட முடியாத சூழலில் அவர்களை சமூகம் சுரண்ட ஆரம்பித்து, மெல்ல இழிநிலைக்கு தள்ளியது. இதனால் சமூக பொதுப்புத்தியில் தேவதாசி குலப்பெண்கள் விலைமகளிர் போன்ற சித்திரம் கட்டமைக்கப்பட்டது. ஆனால் நாம் இன்று பெருமைப்பட்டுக்கொள்ளும் இக்கலைச்செல்வங்களை நமக்கு வளர்த்து பேணிப்பாதுகாத்து தந்தவர்கள் அவர்களே. இச்சமூகத்திலிருந்து இந்திய, உலக அளவில் அறியப்பட்ட, போற்றப்பட்ட கடைசி ஆளுமை என பாலசரஸ்வதியை சொல்லலாம்.
ஏழுதலைமுறைகளாக இசையையும் நடனத்தையும் பாரம்பரியமாக கொண்ட தேவதாசி குடும்பத்தில் பிறந்தவர் பாலசரஸ்வதி. தலைமுறை தலைமுறையாக கலையை முறையாக பயின்று பேணிப்பாதுகாத்து அக்கலைகளில் மிகச்சிறப்பான தேர்ச்சியும் பெற்றவர்கள் அவரின் முன்னோர். பாலசரஸ்வதியின் தாய் ஜெயம்மாள் சிறந்த கர்நாடக இசைப்பாடகி. பாலசரஸ்வதியின் பாட்டி வீணை தனம்மாள் மிகச்சிறந்த வீணை இசை மேதை. வீணை தனம்மாளின் வெள்ளிக்கிழமை வீணைஇசை கச்சேரிக்கு அன்றிருந்த இசை ரசிகர்கள், வித்வான்கள் மத்தியில் வெகுபிரபலம். சென்னையில் சிறு வாடகை வீடொன்றில் அன்றைய அத்தனை இசை வித்வான்களும் சகஜமாக புழங்கிய சூழலில் பாலசரஸ்வதி வளர்ந்தார். குடும்ப வழக்கப்படி பாலசரஸ்வதிக்கு இசையில் பயிற்சியளிக்கப்பட்டது. ஆனால் பாலாவின் ஆர்வமும் மனமும் நடனத்திற்க்கு இயல்பாக சென்றது. பாலாவின் நடன ஆர்வம் வீணை தனம்மாவுக்கு கொஞ்சமும் உவப்பளிக்கவில்லை. கண்டிப்புடன் மறுத்தார். ஆனாலும் பாலாவின் அலாதியான ஈடுபாடு வீட்டிலிருந்த அனைவரையும் சமாதானப்படுத்தியது. பாலாவுக்கு அன்றயை முக்கிய நட்டுவனாரான கந்தப்பபிள்ளை குருவாக அமைந்தார். கந்தப்பபிள்ளை கலையில் எந்த சமரசமும் செய்ய ஒப்பாதவர். கண்டிப்பான செம்மையாளர் (perfectionist). ஒரு அசைவோ பாவனையோ சரியாக வரும்வரை அடுத்ததற்க்கு செல்லமாட்டார். கடுமையான ஓய்வில்லாத பயிற்சியை கந்தப்பபிள்ளையிடம் பாலா கற்றார். இன்றைய ஆசிரியர் – மாணவர் உறவு போலில்லாமல் அன்றைய குரு சிஷ்ய உறவு மிகவும் நெருக்கமானதும் கராரானதும்கூட. குருவுக்கு சிஷ்யரின் திறமையை மிளிரச்செய்ய எந்தவித அதிகாரத்தையும் பிரயோகிக்கும் உரிமையுண்டு. குடும்பம் அதில் பெரிதாக தலையிடாது. சிஷ்யரும் குருவை மிக உயர்வாக மதித்து பணிவுடன் நடந்துகொண்டே கற்றுக்கொள்ளமுடியும்.
ஓயாத பயிற்சியும், இசையும் நடனமும் இயல்பாக கலந்த வாழ்க்கைச் சூழலும் பாரம்பரியமாக கிடைத்த கலையறிவும் பாலசரஸ்வதியை நாட்டியத்தின் தலைசிறந்த கலைவெளிப்பாட்டுக்கு கொண்டுசென்றது. பொதுவாக நாட்டியம் அறிந்தவர்களுக்கு இசையில் பெரிய அறிமுகமோ தேர்ச்சியோ இருக்காது. ஆனால் பாலசரஸ்வதி இசையை முறையே கற்றவர். சிறப்பாக பாடக்கூடியவர். ஆகவே அவரின் நாட்டியக்கலை அதன் உன்னத மேன்மையை தொட்டது.
அவரின் இந்த பால்ய காலத்தில்தான் தேவதாசி ஒழிப்புச்சட்டம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியால் முனைப்புடன் முன்நெடுக்கப்பட்டது. முத்துலெட்சுமி ரெட்டி தேவதாசி சமூகத்தை சேர்ந்த பெண்களை கோவில்களில் பொட்டுக்கட்டுவதை தடைசெய்ய வேண்டுமெனவும் இதனாலேயே தேவதாசி சமூகத்தை சேர்ந்த பெண்கள் விலைமகளிர் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஒழியும் எனவும் வாதிட்டார். உண்மையில் அவர்களின் தாழ்ந்த நிலைக்கு பொருளாதார வறுமையே காரணம். இதைச்சரிசெய்யாமல் வெறுமனே தேவதாசிமுறையை மட்டும் ஒழித்தால் எந்த மாற்றமும் வராது எனவும், குடும்ப மரபாக பேணப்பட்டுவரும் இக்கலைகளுக்கு இனிமேல் யார் பொறுப்பு எனவும் விவாதங்கள் ஆதரவாகவும் எதிர்த்தும் அன்று தீவிரமாக பரிமாரிக்கொள்ளப்பட்டன. இப்படி ஒற்றைப்படையான புரிதலால், கீழான சமூகப்பார்வையால் பாலசரஸ்வதி குடும்பத்தைப்போல் அன்று கலையை வாழ்க்கைமுறையாக கொண்ட தேவதாசி கலைஞர்கள் இதனை எதிர்த்தனர்.
தங்களுக்கு வேண்டியது ஆன்மீக இலக்கிய கலைக்கல்வியும் பொருளாதார வருவாயுமே. அதற்க்கு வழிவகை செய்யப்படுமாயின் நாங்கள் இந்நாட்டின் கலை ஞான செல்வங்கள் என்றென்றைக்கும் உயர்ந்து விளங்க பாடுபடுவோம் என்று குரல்கொடுத்தனர். இச்சட்டத்தினால் தங்கள் குலமரபு ஒழிக்கப்பட்டு என்றென்றைக்குமாக தங்கள் கலையைவிட்டு அந்நியப்பட நேரும் எனவும் வாதிட்டனர். உண்மையில் இக்கலைஞர்கள் அவர்களின் வாழ்க்கைமுறையை மிகவும் உயர்வாக நினைத்தார்கள். பக்தியும் கலையும் தங்கள் ஒப்பற்ற செல்வங்கள் என்ற பெருமிதம் அவர்களிடமிருந்தது. ஆனால் முத்துலெட்சுமி ரெட்டி இவற்றை தட்டையாக புரிந்துகொண்டு ஒற்றைப்படையாக விலைமகளிர் நிலைக்கு தேவதாசி மரபை குருக்கிவிட்டார் என்பதே இவர்களின் குற்றச்சாட்டு. இ கிருஷ்ணய்யர் போன்றவர்கள் இக்கலை நலிவுற்ற அழியாமல் காக்கவேண்டும் என பெருமுயர்ச்சி எடுத்தனர். இந்த வாதங்கள் அன்றைய பத்திரிகை ஊடகங்களில் வெளியானதன் பயனாக படித்த பொதுமக்கள்மத்தியில் ஒரு விழிப்பு ஏற்பட்டது. மேலும் மெட்ராஸ் மியூசிக் அகாடமி போன்ற சாபக்களில் பாரதநாட்டியத்திற்க்கும் அரங்கு ஓதுக்கப்பட்டு இக்கலை ஊக்குவிக்கப்பட்டது.
இக்காலகட்டத்தை இந்திய கலைகளின் மறுமலர்ச்சி காலம் எனச்சொல்லலாம். அன்றுவரை அந்தந்த மாநிலங்களின் கலைகள் பொதுவாக அந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே அறியப்பட்டிருந்தது. வெள்ளையர் ஆட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக ஆழிந்து கொண்டிருந்த கலைச்செல்வங்களை மீட்டெடுத்து, வளர்த்து, அவற்றை ஒருங்கிணைத்து ஒரே மேடையில் நிகழ்த்துவதும், பல கலைஞர்கள் ஒன்றுகூடி கலந்து செயல்படுவது, புதிய பரிசோதனை முயற்சிகளை செய்யவும் இந்த மறுமலர்ச்சி காலம் வித்திட்டது. இந்திய அளவில் அதன் பிரதான உந்துசக்தியாக தாகூர் இருந்தார். அவரின் சாந்திநிகேதன் பல மகோன்னத கலைஞர்களை, படைப்பாளிகளை, சமூக செயல்பாட்டாலர்களை உருவாக்கிய கல்வி நிலையம். தமிழகத்தை பெருத்தவரை இ கிருஷ்ணய்யர், டி கே சி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, ருக்மிணி தேவி அருண்டேல் போன்றவர்களை சொல்லலாம். ருக்மிணி தேவி உருவாக்கிய கலாஷேத்ரா நாட்டியகலைக்கே புத்துயிரூட்டி செழித்து வளரத்தெடுத்த கலைக்கூடம். இன்றளவும் இக்கலைகள் அழியாமல் நாம் அனுபவிக்கவும் பெருமைப்பட்டுக்கொள்ளவும் முடிகிறதென்றால் அதன் காரணகர்த்தாக்கள் இவர்களே.
இதே ருக்மிணி தேவிக்கும் பாலசரஸ்வதிக்கும் பரதநாட்டியத்தை ‘தூய்மைப்படுத்தியது’ குறித்தும் ‘சிருங்காரம்’ குறித்தும் கடும் விவாதங்கள் நடந்தது. ருக்மிணி தேவியை பொறுத்தவரை அவர் பரதநாட்டியத்தை தேவதாசி மரபிலிருந்து பிரித்தெடுத்து அதனுடன் ஒட்டிக்கொண்டிருந்த ‘இழிவுகளை’ நீக்கி சிருங்கார பதங்களை மட்டுப்படுத்தி பக்திக்கும் புதுமுயற்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் தந்ததாகவும், பாலசரஸ்வதியோ ‘சிருன்காரத்தை’ இழந்த கலை வறட்டுதனமானது எனவும் சிருங்கார ராசமே இந்திய கலை அழகியலின் பிராத சாரம் எனவும் சிருங்காரத்தை நீக்கியதன் மூலமே பாரம்பரியமான நாட்டிய இசை குடும்பங்களை இக்கலையிலிருந்து வெளியேற்றிவிட்டீர்கள் எனவும் வாதிட்டார். இருவருமே இந்திய கலைக்காக வாழ்வை அர்பணித்த ஆளுமைகள். ஆனால் இரண்டு துருவங்கள். அன்று இருவருக்கும் இந்த தளம் சார்ந்து சர்ச்சையும் சில மனத்தாங்கல்களும் இருந்திருக்கிறது. பாலசரஸ்வதிக்கு நுணுக்கமான சில அவமதிப்புகளும் இருந்திருக்கிறது.
இப்புத்தகத்தில் பாலசரஸ்வதியின் கலைபற்றி அன்றைய விமர்சகர்களின் எழுத்துக்களை வாசிக்கும்தோறும் அவரின் உன்னதத்தை உணரமுடிகிறது. பாலசரஸ்வதிக்கு அன்று யாரும் நிகரில்லை என்பதே உண்மை. தி ஜானகிராமனின் பதிவுகள் இவை....
“பாலசரஸ்வதியின் புறங்கை வளையும் வளைவின் அழகு, விரல்கள் பின்னுக்கு அனாயாசமாக வளையும் குழைவு, குறிக்கப்படும் பொருட்க்களையோ படம் பிடித்துக் காண்பிக்கும் அவருடைய முத்திரைகளின் அசாதாரண அழகு – இவற்றை கண்டு அதிசயக்த்தான் வேண்டியிருக்கிறது. சஞ்சாரி பாவங்களை சித்தரிக்கும் அவருடைய கற்பனை எல்லை இல்லாதது. ஒரு பாட்டின் ஒரு அடியையோ, ஒரு சொல்லையோ தன் அபாரமான கற்பனை மூலம் எங்கெங்கு எத்தனை விதங்களில் வியாக்யானம் செய்யலாம். எங்கெங்கு குறிப்பாகக் காட்டிவிட்டுப் போகலாம் என்பதெல்லாம் ரசம் நிறைந்து அவருக்கு அற்றுபடி என்றே தோன்றுகிறது. மேடையில் ஏறிய கணம்முதல் கடைசி வரையில் அவருடைய உடலில் லயம் வியாப்பித்து நிற்கிறது. அவருடைய அசைவுகள், நடக்கும் நடை, இளைப்பாறுதல் எல்லாம் இந்த லயத்தின் ஆட்சியில்தான் நிகழ்கின்றன.”
இத்தனை உயர்ந்த கலைஞர் ஒரு நாட்டின் முக்கிய ஆளுமை அன்று பொருளாதார நெருக்கடிகலுடனே வாழ்ந்திறுக்கிறார். அவர் வாழ்க்கைத்துணையாக தேர்ந்துகொண்ட ஆர் கே சண்முகம்தான் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர். சண்முகம் பாலாவுக்கு பக்கபலமாக இருந்த போதிலும் பொருளாதார விஷயங்களில் பெரிய உதவிகளைச் செய்யவில்லை என்றே ஊகிக்க முடிகிறது. பாலசரஸ்வதி வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்சியலித்த வருமானத்திலேயே அவர் முதல்முதலில் சொந்தமாக வீடுவாங்கி கூடியேறியிருக்கிறார். இத்தனைக்கும் சண்முகம் செல்வந்தர். இப்புத்தகத்தில் சண்முகம் பற்றி பெரிய அளவில் குறிப்புகலில்லை. வெகுசில இடங்களிலேயே சில தகவல்கள் தரப்பட்டுள்ளது. மேலும் பாலசரஸ்வதிக்கும் சண்முகத்திர்க்குமான உறவென்பது அத்தனை அன்னோன்யமானதில்லை.
அன்று பாலசரஸ்வதிக்கு பொதுமக்களிடம் பெரிய அங்கீகாரம் இருக்கவில்லை. பாலசரஸ்வதிக்கு அது குறித்து எந்த புகாருமில்லை. அவரே சொல்கிறார் ‘பரதநாட்டியம் போன்ற கலை எல்லோருக்குமானதில்லை. அதை எல்லோரும் ரசிக்க வேண்டும் என எதிர் பார்ப்பதும் அபத்தமானது. இக்கலை ஈடுபாடும் நுணுக்கமான ரசனையும் கொண்டவர்களுக்கே’ என்கிறார்.
இக்கூற்றிக்கேற்ப அவர் சிறந்த ரசிகர் சபை ஒன்று கிடைத்து அங்கு மிகசொற்பமான நபர்களே இருந்தால் கூட நடனமாடியிருக்கிறார். சில சமயம் ஒரே ஒருவருக்காககூட நடனமாடியிருக்கிறார். அவர் வேண்டுவது அவரின் கலையை நுட்பமாக உணர்ந்து ரசிப்பதையே. அவருக்கு ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு சபை நிகழ்ச்சிகலே நடனமாட கிடைத்தது. சில வருடங்களில் ஒன்று அல்லது எதுவுமே இல்லாத ஆண்டுகள்கூட உண்டு. மேலும் அக்காலங்களில் படித்த தமிழ் மத்தியவர்க்கம் இக்கலையை தங்கள் பெண் குழந்தைகளுக்கு கற்றுத்தந்து நடனமாடுபவர்களின் எண்ணிகையை பெருக்கியது.
கலைமறுமலர்ச்சி காரணமாக இந்தியாவின் முக்கியமான கலைஞர்களுடன் தொடர்பும், அவரின் சகோதரர்கள் மூலம் வெளிநாட்டுக் கலைஞர்கலுடன் தொடர்பும் ஏற்பட்டது. நம்மைவிட அவரின் கலையின் மதிப்பை நன்கு உணர்ந்து மதித்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அவரை அங்கு அழைத்து நாட்டிய கலையை பயிற்றுவிக்க செய்தன. பல நாடுகளும் சென்று நிகழ்ச்சி நடந்தி பயிற்றுவித்திருக்கிறார். மெல்ல மெல்ல இந்தியாவிலும் அவரை பரவலாக அங்கீகரிக்கவும் பெருமைப்படுத்தவும், விருதுகள் வழங்கி கௌரவிக்கவும் செய்தனர். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் வழங்கி இந்தியா கௌரவித்தது. கலைக்கு தன்னையே ஒப்புக்கொடுத்து, தன் சமூகம் சார்ந்து பொதுப்புத்தியில் இருந்த அத்தனை தடைகளையும் மீறி மேலேலுந்து வந்த ஒப்பற்ற கலைஞர் பாலசரஸ்வதி.
பாலசரஸ்வதி குறித்து சத்யஜித் ரே இயக்கிய ஆவணப்படத்துக்காண இணைப்பு கீழே. மிகசிறந்தது இல்லை என்றாலும் ஒருமுறை பார்க்கலாம். நமக்கும் சத்யஜித் ரே இல்லையென்றால் இதுவும் பார்க்க வாய்த்திருக்காது.
No comments:
Post a Comment