Tuesday 15 May 2018

ONE NIGHT OF DRACULA







ONE NIGHT OF DRACULA

டிராகுலாக்களின் ஒரு இரவு!


நான் தூங்கி எழுந்த போது அப்பா வெளியே கிளம்ப தயாராக இருந்தார்.”சோம்பேறி! சூரியன் மறைந்து விட்டது.இன்னுமா தூக்கம்? போய் ரெடியாகிட்டு வா! “என்றார் அப்பா.

நான் பாத்ரூம் கடன்களை முடித்து விட்டு வெளியே வந்த போது அப்பா எதையோ தேடி கொண்டிருந்தார்.”என்னப்பா தேடுற? “என்றேன்.”என் பல் செட்டை காணோம்.எங்க தேடியும் கிடைக்கலை! “என்றார் சோகமாக.

“அப்ப நைட்டு பட்டினியா? எப்படி சாப்பிடுவ ?அந்த பூனைதான் எங்கியாவது கொண்டு போய் போட்டிருக்கும்! “என்றேன்.

“இங்க தான் டேபிள் மேல வைச்சேன்.அந்த பூனைதான் எங்கியாவது தள்ளி விட்டிருக்கனும்! “
“சரி! நான் சாப்பிட கிளம்புகிறேன்.நீ வரலையா? “

“பாசமே இல்லாத பையன்டா நீ! அப்பன் சாப்பிட்டானான்னு கொஞ்சமாவது கவலை இருக்கா?பணம் எதாவது இருந்தா கொடு! “

“முந்தா நாள் சாப்பாட்டுக்கு ஒருத்தனை கரெக்ட் பண்ணினேன்.அப்ப ஒரு 500 ரூபாய ஆட்டைய போட்டேன்.அதான் இருக்கு.!”

“கொடு! அதை வைச்சு எதாவது பண்றேன்! “

அப்பா அவரின் பல்செட்டை தேடி கொண்டிருக்க நான் வீட்டை விட்டு கிளம்பினேன்.வெளியே காரிருள் சூழ்ந்திருந்தது.ஆங்காங்கே டியூப் லைட்டுகளின் வெளிச்சம் மின்னியது.நான் நடக்க ஆரம்பித்தேன்.

உணவு தேடும் விசயத்தில் அப்பாவை அடித்து கொள்ள ஆளில்லை.அவ்வளவு தந்திரமாக, நைச்சியமாக இரக்கமாக பேசி காரியம் சாதிப்பார்.உணவை பார்சலாக்கி வீட்டிற்கே கொண்டு வரும் அவரின் திறமை எனக்கே இன்னும் கை வரவில்லை.அப்படியான பார்சல் சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது என்று சொல்லி கொடுத்தவர் அவர்தான்.

எனக்கோ சுடச்சுட சாப்பிடுவதுதான் பிடிக்கும்.இரவின் இருளில் ஒளிந்து நின்றிருந்தேன் நான்.எவனோ ஒருவன் குடித்து விட்டு பழைய பாட்டை பாடியபடி வந்து கொண்டிருந்தான்.போதையின் மயக்கத்தில் எதை கேட்டாலும் தருவான்தான்.ஆனாலும் நான் இவனை கேட்க போவதில்லை.

இப்படித்தான் ஒருமுறை ஒரு குடிகாரனுடன் சகவாசம் வைத்தேன்.கடைசியில் உணவருந்திய பின் போதை ஏறி மயங்கி விழுந்து விட்டேன்.நான் நேரத்திற்கு வீட்டிற்கு வராததால் அப்பா எங்கெங்கோ தேடி என்னை கண்டு பிடித்து சூரியன் உதிக்கும் முன்பாக வீட்டிற்கு கொண்டு வந்ததால் பிழைத்தேன்.அதிலிருந்து குடிகாரர்களின் சகவாசத்தை விட்டொழித்து விட்டேன்.சமீபமாக ஒரு பூனையையும் எங்கள் கூட்டணியில் சேர்த்திருக்கிறார்.

தெருவின் முனையில் ஒரு திடகாத்திரமான மனிதன் நடந்து வருவதை பார்த்தேன்.நான் அவனை பின் தொடர ஆரம்பித்தேன்.இன்றைய உணவுக்கு இவனை விட்டால் வேறு வழியில்லை.நிழல் படாத இருட்டை கடக்கும் போது “எக்ஸ்கியூஸ் மீ! “என்றேன்.அவன் நின்று திரும்பி பார்த்து “என்ன வேணும் உனக்கு? “என்றான்.நான் அவனது கையை பிடித்தேன்.

நான் அந்த மனிதனின் சகாயத்தால் வயிராற சாப்பிட்டு விட்டு வீட்டை நோக்கி நடந்தேன்.அப்பா எனக்கு முன்பாக வீட்டில் இருந்தார்.

“சாப்டாச்சாப்பா? “என்றேன்.
“ஆச்சு! “என்றவரை ஆச்சரியமாக பார்த்தேன்.
“பல் செட் கிடைச்சிருச்சா? “
“ம்!சோபாவுக்கு பின்னால கிடந்துச்சு.அந்த பூனையோட சேட்டை.!”

அப்பா பூனைக்கான உணவு வைக்கும் கப்பைஎடுத்தார்.சட்டை பாக்கெட்டிலிருந்து அந்த சிகப்பு நிற பாக்கெட்டை எடுத்து உடைத்து ஊற்ற ஆரம்பித்தார்.

“என்னப்பா இது? “
“பல் செட் இல்லாததால யாரையும் கடிக்க முடியலை.அதான் ப்ளட் பேங்குல மூணு பாக்கெட் இரத்தத்தை வாங்கினேன்.அவனை கரெக்ட் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு!இரண்டை குடிச்சுட்டேன்.ஒன்னை பூனைக்கு கொண்டு வந்தேன்.!

எங்கே அந்த பூனை? டாமி! "என்றார்.
எங்கிருந்தோ அந்த பூனை ஓடி வந்து இரத்தத்தை குடிக்க ஆரம்பித்தது.

“டிராகுலாவா வாழ்றது கஷ்டம்.
அதுவும் பல்லெல்லாம் கொட்டி போன பின்னாடி ரொம்ப கஷ்டமா இருக்கு!
எல்லாமே கலப்படம்.இரத்தத்துல கெமிக்கல் வாசம் அடிக்குது.பேதியாகும்னு நினைக்கிறேன். “என்றார் அப்பா.

“மறக்காம பல்செட்டை பாக்கெட்டுல வைப்பா! தொலைச்சிராத? 
சரி தூங்கலாமா? “
“சரி!தூங்கலாம்! “

அப்பா ஆடைகளை களைந்து விட்டு பல்செட்டை பத்திரப்படுத்தினார்.

இருவரும் ஆளுக்கொரு சவப்பெட்டியில் படுத்து தூங்க ஆரம்பித்தோம்

No comments:

Post a Comment