Monday 21 May 2018

N.S.KRISHNAN ,MAN OF PHILANTHROPHY






N.S.KRISHNAN ,MAN OF PHILANTHROPHY





1941 -ம் ஆண்டு கோவை வருமான வரி அலுவலகம். அதிகாரிக்கு முன் என்.எஸ்.கிருஷ்ணனின் ‘அசோகா பிலிம்ஸ்’ கணக்கு நோட்டுகள் இருந்தன. வருமான வரி அதிகாரி, ‘‘என்னய்யா... எல்லா பக்கத்திலும் ‘தர்மம்... தர்மம்’ என்று எழுதியிருக்கிறது. இதெல்லாம் உண்மையா. என்ன ஆதாரம்..?’’ என்று கேட்கிறார்.


சில நிமிடங்களுக்குப் பிறகு, அதிகாரி அனுமந்தராவ் எந்த பந்தாவும் இல்லாமல் படக் கம்பெனிக்குப் போய் என்எஸ்கே முன் நிற்கிறார்.

‘‘யார்... என்ன?’’

‘‘ஐயா, என் மகள் கல்யாணம் ஆயிரம் ரூபாய் வரதட்சணை பாக்கிக்காக நிற்கிறது...’’ என்றார் அதிகாரி.

‘‘அடடா, ஒரு பெண்ணின் வாழ்க்கை ஆயிரத்திலேயே நிற்கிறது. என் படக் கம்பெனி கணக்காளர், வருமானவரி அதிகாரியைப் பார்க்கப் போயிருக்கிறார். அவர் வரட்டும். வாங்கித் தருகிறேன். கவலை வேண்டாம். போகும்போது என் காரிலேயே உங்களை ஏற்றி அனுப்பி வைக்கிறேன். பணத்தோடுதான்..!’’

நிலைபெற்ற ஆளுமை

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆளுமை நிலைபெற்றது, ஒற்றைத் திரியில்தான். அத்திரி, மனிதர்களின் முகத்தில் மகிழ்ச்சியை மட்டும் தேடியது. தன் நடிப்பு, பேச்சு மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது. மனிதர்கள் கவலையில் சுருங்கிக் கிடக்கிறார்களா? எதனால்? பணம் இல்லாமையால். ஏதோ என்னிடம் இருக்கிறது. எடுத்துச் செல்லுங்கள். இதுவே அந்தத் திரி வாழ்ந்து தீர்த்தது.

கிருஷ்ணன் அத்தனை பெரிய பணக்காரரா? அவரே சொல்கிறார்: ‘‘நான் திரைப்படத்தில் நடித்து ஏராளமான பணம் சம்பாதிப்பதால் என்னைப் பணக்காரன் என்றே எல்லோரும் கருதுகிறார்கள். உண்மையில் நான் இப்போது பணக்காரர்தான். ஆனால், நான் இறக்கும்போது பணக்காரனாக இறக்க மாட்டேன். என் பணம் ஏழைகளுக்கு உதவும். பணக்காரர்களிடம் இருக்கும் பணம் ஏழைகளை உறிஞ்சத்தான் உதவும்..!’’

வாழும் வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலுக்கு அருகில் இருக்கும் சின்னஞ்சிறிய கிராமத்தைச் சேர்ந்த சுடலையாண்டிப் பிள்ளை, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு 1908-ல் நவம்பர் 29 அன்று பிறந்தவர் கிருஷ்ணன். 1957, ஆகஸ்ட் 30 காலை 11.10 மணிக்குச் சுவாசிப்பதை நிறுத்திக் கொண்டார். 49 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமும் பெருமையும் நிறைந்த வாழ்க்கை.

மதுரம் அம்மையாரிடம் அவர் ஒருமுறை சொன்னார்: ‘‘மதுரம். எவருமே 50 வயதுக்கு மேல் உயிரோடு இருக்கக் கூடாது. இருந்தால் சிரிப்புச் சேவை கிழடுதட்டிவிடும். எனவே, நான் 50 வயதுக்குள் இறந்துவிடப் போகிறேன். இப்போது எனக்கிருக்கும் மதிப்போடு இறந்துவிடுவது மேலானது.’’

அப்படியே நிகழ்ந்தது. தமிழ்ச் சினிமாவில் எம்.ஜி.ஆரைத்தான் ‘வாரிக் கொடுத்த வள்ளல்’ என்பார்கள். ‘இந்த வள்ளலை உருவாக்கியதே கிருஷ்ண வள்ளல்தான்’ என்று எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். ‘மனிதனாகப் பிறந்ததே மத்தவங்களுக்கு உதவி செய்யத்தான். சிரிக்க வைக்கிறது கூட ஒரு உதவி மாதிரிதான்’ என்று கிருஷ்ணன் ஒருமுறை சொன்னது அவருடைய அனுபவம்.

கிருஷ்ணனின் அரசியல் பார்வையும் கொள்கையும் திடுமென ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பினால் அல்ல. முதலில் அவர் சுதந்திர ஈடுபாடு கொண்ட மனிதர். மகாத்மா காந்தி, காமராஜர் முதலான தலைவர்கள் மேல் மரியாதை. அவர்கள் செயல்பாடுகளில் ஈடுபாடு. பின்னர் தந்தை பெரியாரின் சுயமரியாதை உணர்வு. தோழர் ஜீவானந்தம் மூலம் பெரியார் இணைவு. பின்னர் ஏற்பட்ட நண்பர்கள் அண்ணா துரை, மு.கருணாநிதி, பாரதி பரம்பரை தேசிய விநாயகம் பிள்ளை போன்றவர்களுடன் நட்பு. இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த கிருஷ்ணன், மக்கள் சார்ந்த அரசியல் உணர்வு கொண்டவராக இருந்ததன் காரணமாகப் பெரியார், அண்ணா என்று தன் இருப்பைத் தேர்ந்து கொண்டார்.

கூட்டத்தில் ஒருவர்

கிருஷ்ணன், தன் படைப்பு அறிவு காரணமாகச் சொந்தமாகப் பல வசனங்களைப் பல சீன்களில் சேர்த்து நாடகத்தை வெற்றிபெறச் செய்யும் சாதுர்யம் கொண்டவர். தேசபக்தி நாடகத்தில் ஒரு காட்சி. சேரி மக்கள் பற்றிய காட்சி. சேரி மக்கள் கூடி ‘‘நம்மில் யாரும் குடிக்கவே கூடாது. மீறிக் குடிப்பவனை சாதியை விட்டுத் தள்ளி வைத்துவிட வேணடும்’’ என்று தீர்மானித்தார்கள். அதில் ஒருவன், ‘‘இருக்கிற சாதிகளிலே நம்ம சாதிதானே அண்ணே கடைசி. இதுக்குக் கீழ் சாதியே கிடையாதே. குடிக்கிறவனை நாம் எங்கண்ணே தள்ள முடியும்?’’ என்று கேட்கிறான்.

யாரும் எதிர்பாராத வகையில் கிருஷ்ணன் அந்த கேள்விக்கு, ‘‘இதுக்குக் கீழே சாதி இல்லேன்னா, அவன் மேல்சாதி எதிலயாவது போய்ச் சேர்ந்துக்கட்டும். குடிக்கிறவனை மேல் சாதியிலாவது தள்ளிவிட்டுடுவோம். நம்ம சாதியில் மட்டும் சேர்த்துக்க மாட்டோம்’’ என்றார். கொட்டகையில் கைதட்டலும் கலகலப்பும் அடங்க நாலைந்து நிமிஷங்களானது.

சினிமா சென்ட்ரல் தியேட்டரில் 31.10.1931-ல் டி.பி.ராஜலட்சுமி நடித்த தமிழின் முதல் பேசும் படம் ‘காளிதாஸ்’ வெளியானது. ஆனந்த விகடன் இதழில் எஸ்.எஸ்.வாசன் எழுதிய முதல் நாவல் சதிலீலாவதி, பின்னர் அது புத்தகமாக வெளிவந்தது. அது படமாயிற்று. இந்த படத்தில்தான் என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் அறிமுகம் ஆயினர். படத்தை இயக்கியவர் எல்லீஸ் ஆர்.டங்கன் என்ற அமெரிக்கர்.

அந்தக் காலத்து நகைச்சுவை மிகவும் தாழ்நிலையில்தான் இருந்தது. வெ.சாமிநாத சர்மா இப்படி எழுதினார்: கிழட்டு பிராமணன் ஒருவன் தனது இரண்டாம் தாரத்துக்கு தலைவாரி விடுவது, குறத்தி குறி சொல்வது, வண்ணான் வண்ணாத்தி காட்சி இதெல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் படமாகின. கிருஷ்ணனின் சாதனையே, இதைக் குப்புறக் கவிழ்த்ததுதான். முற்ற முழுக்க பெரியாரும், அண்ணாவும் மேடைகளில் என்ன பேசினார்களோ, அவற்றுக்கு காட்சி வடிவம் கொடுத்தார் கிருஷ்ணன்.


‘தட்சயக்ஞம்’ என்ற படம் நடித்துக் கொண்டிருக்கும்போது, கிருஷ்ணன் பெரியார் ரசிகரானார். வாசகர் ஆனார். அந்தப் படம் தொடங்கி, கடவுள்களைக் கிண்டல் செய்வது, விமர்சனம் செய்வது முதலான விஷயங்களில் ஈடுபட்டார். படத்துக்குப் படம் கருத்துகள் சொல்ல ஆரம்பித்தார் கிருஷ்ணன்.

நட்பு பட்டாளம்

கருத்து எங்கிருந்து சுரக்கும்? ஒரு பெரும் கூட்டத்தைத் தம்மைச் சுற்றி வைத்துக் கொண்டார் கிருஷ்ணன். கே.எஸ்.மணி, டி.எஸ்.துரைராஜ், எம்.ஆர்.சாமிநாதன், எஸ்.வி.சகஸ்ரநாமம், திருவேங்கடம், புளிமூட்டை ராமசாமி, யதார்த்தம் பொன்னுசாமி என்று ஒரு பெரிய பட்டாளத்தையே வைத்திருந்தார் கிருஷ்ணன்.

மிக உயரம், மேலும் உயரம் என்று போய்க் கொண்டிருந்த கிருஷ்ணனைக் கவிழ்த்தது லட்சுமிகாந்தன் கொலை வழக்காகும். லட்சுமிகாந்தன் என்பவர் மஞ்சள் பத்திரிகை நடத்தியவர். நடிக - நடிகைகள், பிரமுகர்கள் முதலான பலரையும் பற்றி கீழ்த்தரமாக எழுதி பத்திரிகைத் துறைக்கு இழிவு சேர்த்த லட்சுமிகாந்தனை பாதிக்கப்பட்ட யாரோ கொலை செய்தார்கள். அதுதொடர்பாக, 1944-ல் டிசம்பர் 28 அன்று கோவையில் தங்கியிருந்த என்.எஸ்.கேயைத் தேடி போலீஸ் வந்தது. அப்போது கிருஷ்ணன் கதை விவாதத்தில் இருந்தார். கைது வாரண்டோடு வந்த போலீஸ் அவரைக் கைது செய்தது. அதற்கு முதல்நாளே தியாகராஜ பாகவதர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ‘பட்சிராஜா பிலிம்ஸ்’ ஸ்ரீராமுலு நாயுடுவும் கைது செய்யப்பட்டார். முதலில் ஜாமீன் வழங்கப்பட்டு பிறகு ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது.

1945, ஜனவரி 27 அன்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. பிறகு இறுதியாக மே மாதம், அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்து ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இறுதியாக ஏப்ரல் 25, 1947-ல் இறுதித் தீர்ப்பு வந்தது. கலைஞர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

புரண்டு படுக்கும் வாழ்க்கை

காலம் முழுதும் ஒரு காசும் பையில் வைத்திராமல், கொடுத்துக் கொண்டே இருந்த கிருஷ்ணன், 1945-1947 இரண்டாண்டுகள் வழக்குப் பிரச்சினையில் உண்மையிலேயே கைநீட்டிக் கடன் வாங்கும் நிலைக்கு உள்ளானார். வாழ்க்கை புரண்டு படுக்கும்போதுதான் சுருக்கம் தெரிகிறது. இப்போது நண்பர்கள் யார்? பகைவர்கள் யார் என்று தெரிந்தது. மதுரம் அம்மையார் திரை உலகத்தினர் பலரையும் சந்தித்து கடன் கேட்கப் போனார். எஸ்.எஸ்.வாசன் ‘‘கடன் தர மாட்டேன், அன்பளிப்பாகத் தருகிறேன்’’ என்றார். மனிதர்கள் இப்படியும் உண்டுதானே? மதுரம் கடன்தான் வாங்கி வந்தார்.

கலைவானர் சிறை மீண்ட பிறகு, பங்கு கொண்டு எடுத்தப் படம் ‘பைத்தியக்காரன்’. ‘மணமகள்’ என்ற ஒரு படம் எடுத்தார் கிருஷ்ணன். பல ஆண்டுகளுக்கு முன், ஒரு விழாவில் 8 வயதுக் குழந்தை அழகாக நடனம் ஆடியதைக் கண்டார் கிருஷ்ணன். அந்தக் குழந்தைக்குத்தான் பரிசுக் கோப்பை தரப் பட வேண்டும். ஆனால், பெரிய மனிதர் வீட்டுக் குழந்தை ஒன்றுக்கு கொடுக்கச் சொல்லி அழுத்தம் தரப்பட்டது.

கிருஷ்ணன் மேடையில் சொன்னார்: ‘‘உண்மையில் பரிசு பெறும் தகுதி இந்தக் குழந்தைக்குத்தான் இருக்கிறது. ஆனால், பரிசை வேறு ஒருவருக்குத் தரச் சொல்கிறார்கள். நான் தேர்ந்தெடுத்த குழந்தை நிச்சயம் ஒரு காலத்தில் வெற்றிபெறும்!’’

பல ஆண்டுகளுக்குப் பிறகு, கிருஷ்ணன் எடுக்க இருக்கும் புதிய படமான ‘மணமகள்’ படத்தின் கதாநாயகி பத்மினிதான், அன்று 8 வயதுக் குழந்தையாக அருமையாக நடனம் ஆடியவர். ஆம். லலிதா, ராகிணியின் சகோதரியான அதே பத்மினிதான். தமிழுக்கு பத்மினி அப்படித்தான் அறிமுகம் ஆனார்.

‘என்.எஸ்.கே. கலைவாணரின் கதை’ - என்ற பெயரில் ஒரு நல்ல புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார் முத்துராமன். அர்த்தமற்ற பேச்சுகள் இல்லாமல், வரலாற்றை முழுக்கவும் பதிவு செய்திருக்கிறார். நல்ல புத்தகம். ‘வானவில் புத்தகாலயம்’ இதை வெளியிட்டுள்ளது.

கிருஷ்ணன், 1957 ஆகஸ்ட் 30 அன்று காலை 11.10 மணிக்கு இயற்கை எய்தி, அவர் ஆசைப்பட்டபடியே 50 வயதுக்கு மேல் நகைச்சுவை நடிகன் வாழக்கூடாது என்பதைத் தன் அளவில் நிறைவேற்றிக் கொண்டார்.

மருத்துவமனையில் கலைவாணரைப் பார்க்க எம்ஜிஆர் வந்திருந்தார். போகும்போது படுக்கையில் கட்டுக்கட்டாகப் பணம் வைத்துவிட்டுச் சென்றார். போனவரைக் கிருஷ்ணன் அழைத்தார். ‘‘ராமச்சந்திரா... பணத்தை இப்படிக் கட்டுக்கட்டா வெச்சுட்டுப் போறியே... சில்லறையா மாத்தி வெச்சிட்டுப் போ. மற்றவங்களுக்குக் கொடுக்கலாம் இல்லையா!’’ என்றார்.

எம்ஜிஆர் அப்படியே செய்துவிட்டுப் போனார்.

- சுடரும்...

எண்ணங்களைப் பகிர: writeprapanchan@gmail.com


(ஆகஸ்டு 30-ந் தேதி) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்.

சிரிப்பு... இந்த உலகத்தின் மாமருந்து... வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் - இது பெரிசுங்க சொல்ற ‘கிழமொழி’ மட்டுல்ல, இன்றைக்கு உள்ள ‘யூத்’களுக்கும் தேவையான ‘இளமொழி’. மனிதர்களை மிருகங்களிடம் இருந்து பிரித்து காட்டும் ஒரே அற்புதம் இந்த சிரிப்பு மட்டும்தான். இதை சொன்னவர் தென்னிந்தியாவின் சார்லி சாப்ளின், கலைவாணர், நகைச்சுவை வேந்தர், சிந்தனைச் சிற்பி, என்.எஸ்.கிருஷ்ணன் தான்.

அவருக்கு பிறகு தமிழ்த்திரையுலகில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் உதயமானாலும், ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் என்.எஸ்.கே. காரணம் சமுதாயத்தின் தேவைகளை பல சீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவை மூலமாக நாட்டு மக்களுக்கு கொடுத்தார். எத்தனையோ சொல்லலாம். உதாரணத்துக்கு சில.. ‘மணமகள்’ படத்தில் ஒரு காட்சி


டி.ஏ.மதுரம் படிப்பறிவு இல்லாதவர். அவர் பெயருக்கு ஒரு மணியார்டர் வருகிறது. மகன் அனுப்பி இருக்கிறான். 25 ரூபாய் போஸ்ட் மேனிடம் பெற்றுக்கொள்கிறார். பிறகு அவனிடம் இந்தாப்பா இதில் என்னமோ எழுதியிருக்கு என்னன்னு படிச்சு சொல்லு என்கிறார். உடனே போஸ்ட்மேன் படிக்கிறார். “அன்புள்ள அம்மா நீ அனுப்பிய பணத்தில் படித்து பாசாகி நல்ல வேலையிலும் சேர்ந்து விட்டேன். என் முதல் மாத சம்பளத்தில் உனக்கு 25 ரூபாய் அனுப்பி இருக்கிறேன். அத்துடன் என் அன்பு ‘கிஸ்’சையும் அனுப்பி இருக்கிறேன்”.

உடனே மதுரம் கோபமாக, ‘ஏம்ப்பா’ போஸ்டமேன் 25 ரூபாய் கொடுத்தே சரி! ஏதோ ‘கிஸ்’னு ஒண்ணு அனுப்பி இருக்கானாமே அதையும் குடுத்துட்டு போ” என்றவுடன் போஸ்ட்மேன் ஓட்டம் பிடிப்பார்.

அப்போது வீட்டில் உள்ளே இருந்து வரும் என்.எஸ்.கே., ‘இதுக்குத்தான் பெண்களுக்கு எழுத்தறிவு, படிப்பறிவு வேணும்கிறது’- என்பார்.

எப்பேர்ப்பட்ட, நகைச்சுவை! தேன் தடவிய கருத்து மாத்திரை!

இன்னொரு படத்தில் பானுமதி குதிரையில் வருகிறார். அப்போது எதிரில் சைக்கிள் பழகும் கலைவாணர் விழுந்து, எழுந்து நிற்கிறார்.

பானுமதி (பேன்ட் சட்டை அணிந்து) குதிரையில் இருந்து இறங்க...

‘ஐயா! மன்னிச்சுக்குங்க... எனக்கு இது புது பழக்கம்’ என்கிறார், கலைவாணர்.

உடனே பானுமதி கோபமாக, ‘என்னது ஐயாவா?’ என்று கேட்க,

கலைவாணர், அவரை ஏற இறங்கப் பார்த்து விட்டு,

‘ஆ! அம்மா ... இதென்னம்மா வேஷம்?’- என்பார்.

உடனே பானுமதி “ஷட் அப்” என்பார்.

அதன் பிறகு, பானுமதி கேட்கும் கேள்வி எதற்கும் பதிலே சொல்லாமல் சிரிப்பார் கலைவாணர்.

‘ஏன்யா, பதில் சொல்ல மாட்டேங்கிற?’- என்பார் பானுமதி.

அதற்கு அவர், ‘நீங்கதானே ‘ஷட் அப்’னு சொன்னீங்க’- என்பார்.

உடனே பானுமதி ‘சே’ உனக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியுமா?- என்று வியப்புடன் கேட்க... அதற்கு அவர் “தெரியும்மா?... ஆனா உங்கள மாதிரி இங்கிலீஷ்-ஐயும், தமிழையும் கலந்து பேச மாட்டேன்” என்று பஞ்ச் அடிப்பார். தமிழ் தெரிந்தும் ஆங்கிலம் பேசுவதை ஒரு உயர்வாகக் கருதும் பழக்கத்தை அப்போதே நையாண்டி செய்திருக்கிறார்.

இன்னொரு படத்தில் ஓர் கருத்தாழமிக்க காட்சி என்.எஸ்.கேவும் இன்னொருவரும் பேசும் வசனங்கள்...

‘அண்ணே! நம்ம செல்லமுத்து நடக்கிறது சரியில்லை’

என்.எஸ்.கே: ஏன் கால்ல கட்டியா?

இல்லண்ணே! நடத்தை சரியில்லைன்னு சொல்ல வந்தேன்!

ஏன் என்ன ஆச்சு?

‘பொண்டாட்டிய ஊருக்கு அனுப்பி வைச்சுட்டு யாரையோ கொண்டாந்து வீட்டில வைச்சிருக்காராம்... நைட்டு ரெண்டு மணி வரைக்கும் லைட் எரியுதாம்... இனி அவரு உருப்பட்ட மாதிரிதான்’ என்று சொல்லி அந்த நபர் சிரிக்க, கூடவே என்.எஸ்.கேவும் போலியாக சிரித்து விட்டு “அப்ப இனி செல்லமுத்து கதை குளோஸ்” அப்படித்தானே!

ஆமாண்ணே! குளோஸ்தான்...

நல்லா தெரியுமா?...

தெரியும்ணே...

“சரி! தம்பி! இப்ப உன் சட்டைப் பையிலே என்ன வைச்சிருக்கே?”

கொஞ்சம் சில்லரைக் காசு, பேப்பர், பேனா இருக்குண்ணே!

“அப்படிச் சொல்லக்கூடாது தம்பி! சில்லரைன்னா எவ்வளவு சில்லரை, பேப்பர்னா எத்தனை பேப்பர், அதில என்ன எழுதியிருக்கு”- கரைக்டா சொல்லணும்.

‘சே! அப்படிச் சொல்லணுமா? - என்று சட்டைப் பைக்குள் கையை விட போனவரை, தடுத்து கலைவாணர்,

“தம்பி! பாக்காம சொல்லணும் தம்பி”

‘அதெப்பிடிண்ணே! பாக்காம சொல்ல முடியும்?’

‘சே! உன் சொந்த சட்டைப் பையில் இருக்கிறதையே உன்னால பாக்காம சொல்ல முடியல, ஆனா யாரோ செல்லமுத்து வீட்டுக்குள் நடக்கிறது மட்டும் உனக்கு தெளிவா தெரியுதா?’- என்று ஆரம்பித்து அந்த நண்பருக்கு ‘வதந்தி’ பரப்பக்கூடாது என்று நல்ல புத்தி சொல்லியிருக்கிறார் நம் என்.எஸ்.கே.

அவர் காமெடியன் மட்டுமல்ல... கருத்து சொல்லும் கலைஞர் மட்டுமல்ல... விஞ்ஞானம் பேசும் நாகரிகக் கோமாளியும் கூட...

“பட்டனத் தட்டினா... தட்டில் இரண்டு இட்லியும் சட்னியும் வர வேண்டும்”, என்று குக்கரும் ஒவன் அடுப்பும் வரும் முன்னாடியே பாடினார்.

மதுவிலக்குக்காக அவர் எழுதிப் பாடிய பாடல்:

‘குடிச்சுப் பழகணும்’- என்று ஆரம்பித்து ஒரு அதிர்ச்சியைக் கொடுத்து விட்டு... அதன் பின் “காலையில் பல் தேய்ச்சவுடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சுப் பழகணும்” என்று ஆரோக்கிய வாழ்வுக்காக அட்வைசும் செய்கிறார். காலங்கள் கடந்தாலும் கலைவாணர் என்.எஸ்.கே. இன்றும் மக்கள் நினைவில் நீங்கா இடம்பிடிக்க காரணம், அவரது நகைச்சுவையோ, கருத்தோ, பாடும் திறமையோ, பாடல் புனையும் திறமையோ, நகைச்சுவை எழுதும் திறமையோ மாத்திரம் அல்ல. அவரது ‘கொடுக்கும் குணம்’. இல்லை என்று வருபவருக்கு ‘இல்லை’ என்று சொல்லாமல் அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல் அவர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கூறும் போது, ‘பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் எனக்கு வந்ததற்கு காரணமே அண்ணன் என்.எஸ்.கே. வுடன் பழகியது தான்’ என்கிறார். அந்த அளவுக்கு தானம் செய்வதில் தாராளமாக இருந்தவர் கலைவாணர். அதனாலேயே தன் சொத்துகளை இழந்தார் என்றும் கூறுவோரும் உண்டு.

முத்தாய்ப்பாக ஒரு நிகழ்வு. கலைவாணர் தன் வாழ்நாளின் நிறைவுக்காலத்தில் உடல் நலமின்றி படுக்கையில் இருக்கும் போது அவரை பார்க்க எம்.ஜி.ஆர். வருகிறார். பேசி முடித்து விட்டு கிளம்பிச் செல்லும்போது, அவர் என்.எஸ்.கேவுக்கு தெரியாமல் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு கிளம்ப, இதை அறிந்து கொண்ட கலைவாணர், ‘தம்பி! ராமச்சந்திரா... வைக்கிறது வைக்கிற இப்படி ஆயிரமா வைச்சா எப்படி? 100 ரூபாயா சில்லரைமாத்தி வைச்சின்னா உதவி கேட்டு வருகிறவங்களுக்கு குடுக்க வசதியா இருக்குமே’- என்கிறார். அவர்தான் என்.எஸ்.கே. என்ற கலைவாணர்.


அதனால்தான் இன்று ‘சிலையாக’ ஆனாலும் மக்கள் மனதில் ‘நிலை’யாக வாழ்கிறார்.!

ஆகஸ்டு-30, 1957...

அவர் இறந்த போது அவர் வயது வெறும் நாற்பத்தி எட்டு! ஆனால் அம்மகா கலைஞனின் நினைவு என்றும் நீங்காது, நம் மனதை விட்டு....

நடிகர் விவேக்





No comments:

Post a Comment