Saturday 5 May 2018

AYOTHIDASR - FOUGHT AGAINST RACISM PERIYAR`S PERIYAR BORN 1845 MAY 20 - MAY 4,1914





AYOTHIDASR - FOUGHT AGAINST RACISM
PERIYAR`S PERIYAR BORN 1845 MAY 20 - MAY 4,1914


பெரியாருக்கெல்லாம் பெரியார் ஒரு பைசாத் தமிழன்: அயோத்திதாசப் பண்டிதர் நினைவு நாள்.


பெரியாருக்கெல்லாம் பெரியார் இவர்...
அது 1892-ம் ஆண்டு வெயில் கக்க துவங்கிய ஏப்ரல் மாதம். சென்னை விக்டோரிய டவுன் ஹாலில் சென்னை மஹாஜன சபையின் கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. அப்போது பரந்து விரிந்திரிந்த சென்னை மாகாணத்தின் அனைத்து ஜில்லாக்களிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். மக்களின் பிரச்னைகளை வந்திருந்த பிரதிநிதிகளிடம் கேட்டு, விவாதித்து முக்கியமானவற்றை பிரிட்டிஷ் அரசிற்கு கோரிக்கையாக அனுப்புவது தான் அந்த கூட்டத்தின் நோக்கம். அந்த கூட்டம் நடந்த கூடம் முழுவதும் மேட்டுக்குடி மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அந்த கூட்டத்திற்கு நீலகிரியிலிருந்து நல்ல அடர் கருப்பு நிறத்தில் நடுவாந்திர உயரத்தில் ஒருவர் வருகிறார். சிலர் அவரை முகசுளிப்புடன் பார்க்கிறார்கள், பலர் அவரை உதாசினப்பார்வையில் சீண்டுகிறார்கள். தீர்க்கமான மனப்பாங்கு கொண்ட அவர், இது எதையும் பொருட்படுத்தவில்லை. தாம் வந்த நோக்கம் தான் அவருக்கு பெரிதாக தோன்றியது.

கூட்டம் ஆரம்பிக்கிறது, ஒவ்வொரு கோரிக்கையாக வாசிக்கப்படுகிறது, அலசப்படுகிறது. அடுத்து அந்த நீலகிரி மனிதர் எழுதிய கோரிக்கை வருகிறது. அதை வாசிக்க அந்த சபையின் தலைவர் அரங்கைய நாயுடு தயங்குகிறார். பின் சுதாரித்து, “தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து எழுதப்பட்டு இருக்கிறது... பிரிட்டிஷ் அரசிற்கு இது குறித்து நன்கு தெரியும் என்பதால்... நாம் இந்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க தேவையில்லை... நாம் அடுத்த கோரிக்கைகளை பார்ப்போம்...” என்று அதை சுலபமாக கடக்க முயல்கிறார். கூட்டத்திற்கு வந்திருந்த மேட்டுக்குடி மக்கள் பலருக்கும் அது தான் சரியெனப்பட்டது. எல்லாரும் அமோதிக்கிறார்கள். அப்போது நீலகிரியிலிருந்து வந்திருந்த அந்த மனிதர் எழுகிறார். தலைவரை பார்த்து பேசத் துவங்குகிறார். அவர் பேசியதன் சாரம் இது தான், “சில பிரிட்டிஷ் அதிகாரிகள் எங்கள் கஷ்டங்களை உணர்ந்து இருக்கிறார்கள். எங்களுக்கு சில உதவிகளையும் செய்து இருக்கிறார்கள். ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் படும் வேதனைகளுக்கு காரணமான நீங்கள் அல்லவா, அவர்களை முன்னேற்றுவது குறித்து ஏதேனும் செய்ய வேண்டும். அவர்களின் இழிநிலைக்கு காரணமான நீங்களே இவ்வாறு கைக்கழுவி விடுவது போல் பேசுவது நியாயமாகுமா...?” என்கிறார் தீர்க்கமாக.

அரசு சபையில் முதல் கலக குரல்:
கூட்டம் சலசலக்க துவங்குகிறது. தலைவரை பார்த்து இப்படி கேள்வி கேட்பதா என்று அந்த மாநிற மனிதர்கள் முணுமுணுக்க துவங்குகிறார்கள். தலைவர் அனைவரையும் அமைதி படுத்துகிறார். “இந்த சபை உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்...?” என்கிறார் கொஞ்சம் எள்ளலுடன்.
அந்த கரிய மனிதர், “ஐயா... பலர் ‘தெய்வம் அனைவருக்கும் பொதுவானது’ என்கிறார்கள். அது உண்மையாயின் தெய்வம் குடிக்கொண்டுள்ள கோயில்களும் அவ்வாறாகத்தானே இருக்க முடியும். எங்களுக்கும் கடவுளை நேரில் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்கும் அல்லவா... ஏன் எங்களை மட்டும் கோயில்களுக்கு அனுமதிக்க மறுக்கிறீர்கள்...?” என்று மிக மென்மையான குரலில் கேள்வி எழுப்புகிறார்.
இந்த கேள்வியை முடிப்பதற்கு முன்பே, பலர் காதுகளை பொத்திக் கொள்கிறார்கள். சிலர் இவரை பேசவிட்டதே தவறு என்று தலைவரை கடிந்து கொள்கிறார்கள்.
ஒரு அரசு கூட்டத்தில் தீண்டாமைக்கு எதிராக முதல் கலக குரலை எழுப்பிய அந்த மனிதர் தான் அயோத்திதாசப் பண்டிதர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட காத்தவராயன். தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்பு போராளியும் இவரே.

ஒரு பைசாத் தமிழன்:
1845-ம் ஆண்டு, மே மாதம் 20-ம் நாள் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்த அயோத்தி தாசர், பின்பு நீலகிரிக்கு புலம்பெயர்ந்தார். தமிழ், ஆங்கிலம், பாலி ஆகிய மொழிகளை நன்கு கற்றறிந்தார். சித்த மருத்துவத்திலும் நிபுணத்துவம் பெற்றார். எவ்வளவு தான் கற்றாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று வேதனை உற்ற அவர், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தீவிரமாக செயல்பட துவங்குகிறார்.
அதற்காக வேண்டியே 1907-ம் ஆண்டு ஜூன் மாதம், ‘ஒரு பைசாத் தமிழன் ’ என்ற இதழை துவங்குகிறார். இதழுக்கான காரணமாக அவரே குறிப்பிட்டவை, “உயர் நிலையும், இடைநிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றை கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும், இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிகையை ‘ஒரு பைசாத் தமிழன் ” என்கிறார். ஓராண்டுக்கு பிறகு, வாசகர்களிடம் வேண்டுகோளுக்கு இணங்க ‘தமிழன்’ என்று இதழ் பெயரை மாற்றிவிடுகிறார்.

இலவச கல்வி மற்றும் நிலம்:
முதன் முதலாக தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்காக குரல் கொடுத்தவர் அயோத்திதாச பண்டிதர் தான். முன்னேற்றத்திற்கு கல்வி மட்டுமே வழிவகை செய்யும் என்று நம்பிய அவர், தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு நான்காம் வகுப்பு வரை இலவச கல்வி கொடுக்க வேண்டும் மற்றும் வெறுமனே கிடக்கின்ற நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.
போராட்ட களத்தில் மட்டுமல்ல, பெளத்த பார்வையில் பல ஆய்வுகளை நடத்தி இருக்கிறார். சாக்கிய முனிவரலாறு, நந்தன் சரித்திர தந்திரம், பூர்வ தமிழ்மொழியாம் புத்தரது ஆதி வேதம், திருவள்ளுவர் வரலாறு, புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி உட்பட பல ஆய்வு நூல்களையும் எழுதியவர் அயோத்திதாசப் பண்டிதர்.
இன்று அயோத்திதாசப் பண்டிதர் நினைவு நாள்.
- மு. நியாஸ் அகமது.




எங்கள் அறிவு ஆசான் பண்டிதர் 
க.அயோத்தி தாசர்



தமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெடுத்தார் அறிவு ஆசான் பண்டிதர் அயோத்திதாசர். வர்ணத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை தமிழகத்தில் மீட்டெடுக்க தத்துவ பிரம்பெடுத்தவர் பண்டிதர் ஆவார்.    லூதரால் தொடங்கப்பட்ட மதச் சீர்த்திருத்தம், ஐரோப்பிய மக்களின் விடுதலைக்கு துணை இருந்தது. முகமது நபியின் மதப்புரட்சி அரேபியர்களின் அரசியல் எழுக்ச்சிக்கு வழிவகுத்தது. இந்தியாவில் சந்திரகுப்த மௌரியரால் நடத்தப்பட்ட அரசியல் புரட்சிக்குப் புத்தரின் மதப்புரட்சியும் சமுதாயப் புரட்சியும் முன்னோடியாக இருந்தது என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறுவார். அதைப்போலவே அம்பேத்கரின் பௌத்தமதப் புரட்சி தலித் மக்களின் விடுதலைக்கு வழி வகுத்தது என்றால் அதற்கு அயோத்தி தாசரின் பௌத்தமே முன்னோடியாக இருந்தது.    

தமிழகத்தில் தலித் மக்களின் அரசியல் மறுமலர்ச்சிக்கும், மதமறுமலர்ச்சிக்கும் தோற்றுவாயாக இருந்தவர், தமிழ் மண்ணில் தத்துவத்தையும், தன்மானத்தையும் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தவர் அயோத்தி தாசர் ஆவார்.    பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கிற ஆரிய, திராவிட போர் தமிழகத்தில் வீரியமாய் நடந்த காலத்தில் அதற்கு அடித்தளமாய் பல ஆண்டுகளுக்கு முன்னால் வேத எதிர்ப்பு, சாதி மறுப்பு என்று வருண சனியை வலு கொண்டு தன் கருத்து ஆயுதத்தால் அடித்து நொறுக்கியவர்.வாழ்க்கைச் சுருக்கம்    பண்டிதர் அயோத்திதாசர் 20.05.1845 இல் தமிழகத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஊர் குறித்து ஆய்வாளர் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றார்கள். ராயபுரத்தில் பிறந்தார் என்றும், தேனாம்பேட்டை மங்கித்தோட்டத்தில் பிறந்தார் எனவும், மேலும் கோவை அரசம்பாளையம் எனவும் எழுதி வருகின்றார்கள்.    இவருடைய தந்தை பெயர் கந்தசாமி, தாயார் பெயர் தெரியவில்லை. இவரின் பாட்டனார் பெயர் பட்லர் கந்தப்பன் ஆகும். ஆங்கிலேயரிடம் பட்லராகப் பணிபுரிந்த இவர், பாதுகாத்து வைத்திருந்த ஓலைச்சுவடியில் உள்ள திருக்குறளை எல்லிசு துரைக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர்களே தேச வரலாறையும் இலக்கிய வரலாறையும் பாதுகாத்தார்கள் என்பதற்கு இது மாபெரும் எடுத்துக்காட்டாகும்.    

அயோத்திதாசருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் காத்தவராயன் ஆகும். பிறகு தன் பெயரை அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார். தோடர் குலப்பெண்ணை அக்காலத்திலேயே சீர்திருத்தத் திருமணம் செய்து புரட்சி செய்தார். இருவருக்கும் தசரதராமன் என்கிற மகன் இருந்தார் எனவும் தெரிகிறது. இவரது மனைவியார் மரணமடைந்தபிறகு பண்டிதர் உறவினர்களின் வற்புறுத்தலினால் சமூகப்போராளி இரட்டைமலை சீனிவாசன் தாத்தா அவர்களின் சகோதரி தனலட்சுமி அம்மையாரை மணம் முடித்துக் கொண்டு இல்லற வாழ்வை நடத்தினார். தசரத ராமனோடு இவருக்கு ஐந்து மகன்களும் இரண்டு பெண் பிள்ளைகளையும் பெற்றெடுத்தார்.பண்டிதரின் அறிவுத் தேடல்    ஒவ்வொருவரும் இந்து சதுர்வர்ண சதியை புரிந்து கொள்ளும்போது அதன் கொடூரம்  வெளிப்படும். அந்த வகையில் அயோத்தி தாசர் தன் சமூகம் சாதிய வன்கொடுமையை அனுபவிப்பதற்கு காரணங்களை ஆராய்ந்து தெளிந்த போது இந்து சமயத்தையே உதறித் தள்ளுகின்றார்.    பண்டிதர் இளமையிலேயே கற்கும்  ஆர்வத்தினை கொண்டு, குருகுலத்தில் சேர்ந்து கல்வி கற்றார். மானுடத்தில் ஒடுக்கப்பட்ட என்று சொல்லப்படுகின்ற பூர்வகுடி தலித் மக்கள் கல்வி கற்றால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற மடையன் மனுவின் அதர்மத்தை தான் அனைத்தையும் கற்று பயின்றதின் மூலம் உடைத்தெரிகிறார் அயோத்தி தாசர். ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினைவினை பூர்வ குடிமக்கள் தருவோம் என்று அயோத்தி தாசர் படித்து கல்வி மாமேதை அம்பேத்கருக்கு முன்னால் எதிர்வினையாற்றினார்.    

தமிழ், ஆங்கிலம், பாலி மொழிகளில் தேர்ச்சி பெற்றார். இஸ்லாம், கிருத்துவ இந்து சமய தத்துவங்களை ஆழ கற்று உணர்ந்தார். அனைத்து துறைகளிலும் கற்று உணர்ந்து கொள்வதின் மூலம் அறிவுடைய சமூகமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அரசர்கள், ஆங்கிலேயர்களுக்கு அடிவருடியாக இருந்த ஆரியவர்க்கத்தின் ஆணிவேரை வெட்டி எரிய முடியும் என்றும் அறிந்தார் போலும்.பண்டிதரின் பன்முகம்    19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை அயோத்தி தாசரின் காலம் என குறிக்கலாம். தமிழ் அறிவு, சமூக அறிவு, மருத்துவ அறிவு, ஆரிய எதிர்ப்பு, பகுத்தறிவு புரட்சி, திராவிட எழுச்சி, தமிழ் உணர்வு, இன உணர்வு என்று அனைத்திலும் பண்டிதரே தமிழகத்திற்கு மட்டும் அல்லாது இந்தியாவிற்கே தத்துவ நோக்கில் வழிகாட்டி வழி நடத்தினார் என்றால் மிகையல்ல.    தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆழமாக கற்றுணர்ந்து தமிழ் அறிஞராக இருந்தார். இவர் கற்ற பழந்தமிழ் நூல்கள் இன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கல்வியும் புலமையும் ஆதிக்க வல்லுறுக்களின் வன்கருத்தியலை சிதைத்தது. அனைத்து துறைகளிலும் கற்று வல்லவராக இருந்தார் என்பது மட்டுமல்ல களப்பணியாற்றி பூர்வகுடிமக்களின் உரிமையும் பெற்றுத் தந்தார்.    1870களில் தமிழகத்தில் பதிவுச் செய்யப்படாத பல ஆதித்திராவிட சங்கங்கள் இயங்கி வந்தன.    1870-ல் அத்வைதானந்த சபையை நீலகிரில் நிறுவினார். 1882 தியோசபிகல் சொசைட்டி அடையாற்றில் இயங்கி வந்தது. இந்த சொசைட்டியில் ஹென்றி ஆல்காட், அயோத்தி தாசர், பேரா பி.லட்சுமிநரசு என வேத எதிர்ப்பு போராளிகள் ஒன்றிணைய தியோசபிகல் சொசைட்டி வழிவகுத்தது.    1890 இல் திராவிட சங்கத்தை நிறுவினார். திராவிடர்களை அமைப்பாக்குகின்ற பணியை அயோத்திதாசர் இச்சங்கத்தின் மூலம் செய்தார்.    

1891 இல் திசம்பர் 1 ஆம் தேதி திராவிட சங்கத்தின் முதல் மாநாடு நீலகிரியில் அயோத்திதாசர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தலித் மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, அதிகார பகிர்வு, சமூக இழிவு நீங்க போராடுவது என அத்தீர்மானங்கள் முன்மொழிந்தன. இந்த மாநாடே ஆதிக்க வர்கத்தின் அடிதளத்தை அசைத்தது.    1892 அன்றைய ஆளும் ஆங்கிலேயே அரசுக்கு அயோத்தி தாசர் இரண்டு கொள்கைகளை முன்வைத்தார். 
 (i)    பூர்வகுடி மக்களுக்கு 4 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும்.    
(ii) பூர்வகுடி மக்களுக்கு புறம்போக்கு நிலம் இலவசமாக வழங்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையே பின்னாளில் தலித்துக்களுக்கு பஞ்சமி நிலம் ஆங்கில அரசு வழங்க தோன்றலாய் அமைந்தது. 

  அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஹென்றி ஆல்காட் (Colonal Hendry Olcott) அவர்களின் நட்புறவு அயோத்தி தாசர் களப்பணிகளுக்கும், அவர் மேற்கொண்ட உரிமைப் போர்களுக்கும் மேலும் வலு சேர்த்தது.    1894-ல் ஆல்காட் மற்றும் அன்னிபெசன்ட் அம்மையாரின் உதவியோடு சென்னையில் ஐந்து இடங்களில் பஞ்சமர் பள்ளிகளை நிறுவி சாதி இந்துக்களின் கல்வி கற்கும் பள்ளிகளில் தலித் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது கல்வி அருமை தெரிந்த அயோத்தி தாசர் தலித்துக்களின் கல்வி உரிமையை மீட்டெடுத்தார்.பௌத்த மாற்றம்    இந்துமத தத்துவங்கள், தலித் மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதை நன்குணர்ந்தார் அயோத்தி தாசர். தன் சமூக மக்கள் சமூக  இழிவுகளுக்கு இந்து மதம் உட்படுத்துவதாலும் சதுர்வர்ண சாதி கட்டமைப்பை கட்டுடைக்கவும், சமூகத் தலித்தில் தலித் மக்களின் வாழ்வை மீட்டெடுப்பதற்காகவும் அக, புற, சுதந்திர உணர்வோட தம் மக்களின் வாழ்க்கையை நிலை நிறுத்த அயோத்தி தாசர் பௌத்தத்தை முன்மொழிந்தார்.    பௌத்த ஆர்வலர்களை நாடியே அவரின் சிந்தனை நகர்ந்தது. 1898 ஹென்றி ஆல்காட்டையும், அனகாரிகா தர்மபாலாவையும் சந்தித்து, தானும் தம் மக்களும் பௌத்த மதத்தை தழுவ இருப்பதாகத் தெரிவித்தார்.    அதனடிப்படையில் அயோத்தி தாசர், ஆல்காட் பஞ்சமர் பள்ளி ஆசிரியர் பி.கிருஷ்ணசாமி முதலியோர் 1898-இல் கொழும்புக்கு சென்று பௌத்த சமயத்தைத் தழுவி தலித் மக்களின் விடுதலைக்கும், தலித் மக்கள் பூர்வ பௌத்தர்கள் என்பதை நிலை நிறுத்தினார்.    சென்னை ராயப்பேட்டையில் 1898-இல் இதன் இந்திய சாக்கிய பௌத்த சங்கத்தை நிறுவினார். விகார்களையும் நிறுவி பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்கினார். தமிழகத்தில் கி.மு.300 முதல் கி.பி.600 வரை எழுச்சியோடு இருந்த பௌத்தத்தை இந்து மதம் தன்வயப்படுத்தியது. அந்தப் பண்பாட்டின் மீட்டெடுப்பை 1898-இல் அயோத்தி தாசர் மீட்டெடுத்து பௌத்தத்தை மீண்டும் தமிழகத்தில் வலுப்பெறச் செய்தார்.    தமிழகத்தில் திராவிட உணர்வையும் பகுத்தறிவு உணர்வையும் ஆழமாக உள்வாங்கி கொண்டு, பிராமணீய எதிர்ப்புக்கிடையில் பத்திரிக்கை நடத்தி காட்டினார்.தமிழ்த் தேசியத் தந்தை    ''தமிழ்த் தேசியத் தந்தை'' என்று அயோத்தி தாசர் அவர்களை முன்னிறுத்தலாம். 1907 இல் ஒரு பைசாத் தமிழன் என்ற செய்தி வார ஏட்டை தொடங்கினார். ராயப்பேட்டையில் இருந்து 19.06.1907 முதல் வெளிவந்து தமிழகத்தின் மூட வழக்காறுகளை, புராணங்களை, இந்துமத வெற்று கருத்துக்களை எதிர்த்து பிராமணியத்தின் வேரறுக்க தமிழன் வெளிவந்தது.    

திராவிடன் ''தமிழன்'' என்கிற உணர்வை திராவிடர்களுக்கு உணர்த்தவும், தமிழனின் பண்பாட்டை காக்கவும், தமிழகத்தில் வீற்றிருந்த தலைவர்களுக்கு தத்துவார்த்த, பகுத்தறிவு வழிக்காட்டவும் அயோத்தி தாசர் வெற்றிகரமாக தமிழன் இதழை 19.06.1907 முதல் 1914 வரை நடத்தினார். பிறகு தமிழன் இதழை அடுத்த தலைமுறையினர் நடத்தினர்.அயோத்திதாசர் இதழின் வாயிலாக    பூர்வ குடிமக்களே தமிழகத்தில் பகுத்தறிவையும், தமிழ் உணர்வையும், இன உணர்வையும், உணர்த்தினார்கள் என்ற வரலாறையும் மற்றும் சாதியத்தின் வேர் அறுக்க அஞ்சாத சிங்கங்களாக இருந்தார்கள் என்ற வரலாற்றை தமிழகத்து அறிவுலகம் மறைத்தது என்பது (அயோத்தி தாசர்) வரலாற்று இரட்டிப்பாகும்.அயோத்திதாசரின் சில படைப்புகள்    அயோத்தி தாசர் 1912-இல் புத்தரின் வரலாற்றை ''புத்தரது ஆதிவேதம்'' என்ற நூலாக எழுதி பெரும் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டும் அல்லாது ஸ்ரீ முருகக் கடவுள் வரலாறு அரிச்சந்திரன் பொய்கள், இந்திரர் வேத சரித்திரம், திருவள்ளுவர் வரலாறு யதார்த்த பிராமண வேதாந்த விவரம் வேஷ பிராமண வேதாந்த விவரம் விபூதி ஆராய்ச்சி என்று முதலிய பல்வேறு ஆராய்ச்சி நூல்களையும் எழுதினார்.    தன் தலித் இனத்தின் வரலாற்றை தாங்கியும், இந்த இனத்தில் இழிவுகளை ஆய்ந்து தன் இழிவுகளை துடைக்க முற்படாத எவரும் வரலாற்றில் இடம்பெற மாட்டார்கள். தன் இனத்தின் மீது ஏவப்பட்ட சமூக கொடுமைகளை கண்டு தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு துயரங்களுக்கு இடையில் தன் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தந்து தன் சமூக விடுதலைக்கு பௌத்தத்தை முன்வைத்து, தன் வாழ்வை அர்பணித்து பணியாற்றிய அயோத்திதாசர் அவர்கள் 05.05.1914-இல் பரிநிர்வாணம் அடைந்தார்.    அவரின் கொள்கையைப் பரப்பவேண்டும். அவரது வரலாற்றை வன்கொடுமை செய்தவர்களின் அடுத்த தலைமுறை அவரது கொள்கைகளைப் படிக்க வேண்டும். தலித் பூர்வகுடிமக்களின் முழு வரலாறாகவும் தமிழகத்தில் அயோத்தி தாசர் விளங்குகிறார். திராவிட பண்பாட்டின் தாயாகவும், தமிழ்த் தேசியத்தின் தந்தையாகவும், அயோத்தி தாசர் விளங்குகிறார் என்பதை தமிழகம், ஏற்றுக் கொள்வதே அறிவுடைமையாகும். தலித் அறிஞர்களும், ஆய்வாளர்களும் அயோத்திதாசரின் கருத்தை மக்கள் மன்றங்களுக்கு எடுத்துச் செல்வதும், அவரின் சிந்தனைகள் எளிய பிரதிகளாக அடுத்த தலைமுறைக்கு அறிவுறுத்துவதும் உடனடித் தேவையாகும். ஒரு நூற்றாண்டுகளாக தாசரின் வரலாற்று, அவரின் நூற்றாண்டு இறுதியில் தான் பரப்புரையானது என்பது இந்த சமூகத்திற்கு மேலும் செய்த சிந்தனை வன்கொடுமையாகும். இனி மறைந்த வரலாறுகளை மீட்டெடுப்போம் அயோத்தி தாசரின் பௌத்த நெறியில் அணிவகுப்போம்.

து.பார்த்திபன்
நாள்:    09.01.2009
இடம்: பெருமாட்டு நல்லூர் 
கூடுவாஞ்சேரி


நன்றி : www.ambedkar.in

No comments:

Post a Comment