Sunday 27 May 2018

திரைப்பார்வை: சாவு நிலம் - ஈ.ம.யா(மலையாளம்)








திரைப்பார்வை: சாவு நிலம் - ஈ.ம.யா(மலையாளம்)



மலையாள சினிமாவின் தொடக்க காலகட்டத்தில் கதையே அதன் நடுநாயகமாக இருந்து. 2000-க்குப் பிறகு கதாநாயகர்கள் அதன் மையமாக ஆனார்கள். மோகன்லால், மம்மூட்டி மட்டுமல்லாது திலீப், குஞ்சாக்கோ போபனும்கூட இந்தக் கதாநாயகப் பிம்பத்தின் ஓர் அம்சமாக மசாலாக்களை உருவாக்கினர். இந்தநிலை 2010-ன் இறுதியில் மாறத் தொடங்கியது. 21-ம் நூற்றாண்டின் இளம் இயக்குநர்கள் அதைச் சாத்தியப்படுத்தினர். அவர்களுள் ஒருவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

   
‘நாயகன்’, ‘சிட்டி ஆஃப் காட்’, ‘ஆமென்’ ‘ டபுள் பேரல்’, ‘அங்கமாலி டைரீஸ்’ என முற்றிலும் வித்தியாசமான கதைக் களங்களுடன் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் லிஜோ. அதனால் பல மோசமான தோல்விகளையும் சந்தித்திருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் முன்னேறிவருபவர். அவரது சமீபத்திய முயற்சி ‘ஈ.ம.யா’ (ஈசோ மரியம் யா(அ)வுசேப்பு - RIP என்பதம் மலையாளக் கிறித்துவச் சொல்). வெளிவருவதற்கு முன்பே சிறந்த இயக்குநருக்கான விருது உள்ளிட்ட கேரள அரசின் 3 விருதுகளை பெற்றிருந்தது இந்தப் படம். ‘அங்கமாலி டைரீஸ்’ இயக்குநரின் அடுத்த படம் என்பதால் கேரளம் தாண்டியும் எதிர்பார்ப்பு இருந்தது.

அப்பனும் மகனும்

கொச்சிக்கு அருகிலுள்ள செல்லாவனம் என்னும் கடற்கரைக் கிராமம்தான் கதைக்களம். காற்று ஊளையிட்டுக்கொண்டே இருக்கும் ஓரிரவில் தொடங்கி அடைமழைபெய்யும் மறுநாள் பகல் வரைதான் கதையின் காலகட்டம். இதற்கிடையில் மனித மனத்தின் விநோதங்களை இயல்பாகப் படம் சித்திரிக்கிறது. அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் பரதேசம் போய்விடும் வாவச்சன், ஒரு வாத்துடன் அன்று வீடு திரும்புகிறார். வரும்வழியில் கடைத் தெருவில் ஒருவரைத் தள்ளிச் சாய்த்துவிடுகிறார். அப்பன் வீடு திரும்பிய சந்தோஷத்தில் அந்த வீடு, பண்டிகைக்கான குதூகலத்தை அடைகிறது.

மகள், தேநீர் போட்டுத் தருகிறாள். மனைவியும் மருமகளும் வாத்தைச் சமையலுக்கு ஆயத்தப்படுத்துகிறார்கள். கூட்டுறவுச் சங்கத்தில் வேலை பார்க்கும் மகனும் அப்பனுக்கான மதுவுடன் வீடு திரும்புகிறான். அப்பன், தன்னுடைய அப்பனின் சாவுச் சடங்கை ஆசையுடன் விவரிக்கிறார். அதைவிடச் சிறப்பாக அப்பனின் சாவைக் கொண்டாடுவேன் என மகன் உறுதி அளிக்கிறான். அதற்குப் பிறகு முறுக்கேறிய அந்த மனிதர்கள் பாசத்தில் கட்டித் தழுவுவதற்குப் பதிலாகச் சண்டை இட்டுக்கொள்கிறார்கள். செல்லச் சண்டை. கடல் காற்றும் அவர்களுக்கு இடையில் மல்லுக்கட்டுகிறது.

காற்றும் மழையும்

பெண்கள் அடுப்படியில் கறி சமைத்துக்கொண்டிருக்க, அப்பன் இளமைக்காலத்துச் சவட்டுக் களியை (மிதி நடனம்)மகனுக்கு நிகழ்த்திக் காட்டுகிறார். தொலைபேசி அழைப்புக்கு மகன் எழுந்து செல்வதற்கு இடையில் அது நடக்கிறது. பார்வையாளர்களாலும் அதைப் பார்க்க முடியவில்லை. அப்பன் விழுந்துவிட்டார். பேச்சு மூச்சு இல்லை. இந்த இடத்திலிருந்து ஒரு மர்மம் தொற்றிக்கொள்கிறது. அப்போது காற்றுடன் அடைமழையும் சேர்ந்துகொள்கிறது. பார்வையாளர்களை இந்த மர்மத்துடன் இணைக்க காற்றையும் மழையையும் லிஜோ புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியுள்ளார்.

நள்ளிரவில் நடக்கும் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த வீடு இழவு வீட்டுக்கான லட்சணங்களைச் சிறிது சிறிதாக அடைகிறது. அக்கம் பக்கம், சொந்தபந்தம், பகைவர்கள், நண்பர்கள் என எல்லோரும் கூடிவர அதன் பூரணத்தை அடைகிறது. இந்த மரணத்தை இவர்கள் ஒவ்வொருவரும் எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் காட்சிகள் சொல்கின்றன. சிலருக்கு இது கொலையாக இருக்க வேண்டும். இரவில் உறங்காமல் டிடெக்டிவ் நாவல் வாசிக்கும் பாதிரியாருக்கும் அப்படியான ஆசை. இருட்டில் தன் மீதே டார்ச் அடித்துப் பார்க்கும் இயல்பு அவருக்கு. புதைப்பதற்கான அனுமதியை பாதிரி இழுத்தடிக்கிறார்.


இலக்கியத்திலிருந்து…

விக்ரம் சுகுமாரனின் ‘மதயானைக்கூட்ட’த்தை நினைவுபடுத்தும் இந்தப் படம் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது இனத்தின் சடங்குகளைச் சித்திரிப்பதில் காட்டும் முனைப்பைவிட, அபத்தங்களைச் சித்திரிப்பதில்தான் தீவிரம் காட்டுகிறது. ஆனால் அதை நகைச்சுவையாகக் காட்ட முயன்றிருக்கிறது. உதாரணமாக அப்பனின் சவப்பெட்டிக்காக மனைவியின் தாலியை அடகுவைத்து 35,000 ரூபாய்க்குப் பெட்டி வாங்குகிறான் மகன். 4,000 ரூபாய்க்கும் பெட்டி கிடைக்கிறது. சவத்தைப் பெட்டியில் வைத்துத் தூக்கும்போது பெட்டி சரிந்துவிடுகிறது. ‘அப்பனுக்குப் பெட்டிகூடப் பாத்து வாங்கலையா?’ என்கிறார்கள் ஊர்க்கார்கள்.

மலையாள எழுத்தாளர் பி.எஃப்.மாத்யூவின் ‘சாவுநிலம்’ என்னும் நாவலை அடிப்படையாக் கொண்டு இந்தப் படத்தை லிஜோ உருவாக்கியுள்ளார். படத்துக்கான எழுத்தும் மாத்யூவினுடையுதுதான். கதைக்கு அப்பாற்பட்டு மனிதர்களின் தனிப்பட்ட இயல்புகளைக் காட்சிகள் வழியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தியிருக்கிறார் லிஜோ. வாவச்சன் மகளின் காதலனுக்கு அவள் உடல் மீது தீராக் கள்வெறி. அப்பன் இறந்த துக்கத்தில் ஆதரவாக அணைக்கும்போது துடியாய்த் துடிக்கிறான். அவளை ஒருதலையாய்க் காதலிக்கும் ஆல்பினின் கிளாரிநெட் இசை ஊனமாக இருக்கிறது. வாவச்சன் வீட்டு வாசல் டியூப் லைட் துடிப்பதை அப்பன், மகன் இருவரும் சரிசெய்ய வெவ்வேறு காட்சிகளில் முயல்கிறார்கள்.

இவை அல்லாமல் காணக்கூடிய வகையில் இருட்டை இயல்பாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். கேமராக்கோணம் கதாபாத்திரங்களைப் பின்பற்றிச் சம்பவத்துக்குள் செல்கிறது. இதனால் பார்வையாளனும் கதைக்குள் இழுக்கப் பட்டுவிடுகிறான். சாவு ஊர்வலத்தின் கிளாரிநெட் இசை அல்லாது கள சப்தங்களே பின்னணிக்காகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.

சாதாரண மனிதனின் மரணத்துடன், மதம், காவல் துறை போன்ற அதிகாரமிக்க அமைப்புகளும் தனி மனித அபிப்ராயங்களும் நிகழ்த்தும் குறுக்கீடுகளைச் சொல்வது இந்தப் படத்தின் முதன்மையான பணி எனலாம். அத்துடன் வீட்டாரும் இதை அணுகும் விதத்தையும் படம் சித்திரிக்கிறது. வாழ்க்கையைப் பல விதமாகச் சித்திரிப்பது சினிமாவின் பணி. இந்தப் படம் வாழ்வின் முடிவில், மரணத்தின் பக்கம் நின்று வாழ்க்கையைப் பார்க்கிறது.

தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

No comments:

Post a Comment