Sunday 20 May 2018

A.V.M.SARAVANAN ,A RARE PERFECTIONIST IN TAMIL CINEMA





A.V.M.SARAVANAN ,A RARE 
PERFECTIONIST IN TAMIL CINEMA



ஏவி.எம்.சரவணன் அறிமுகப்படுத்திய அந்த இயக்குநர் யார் என்று சொல்வதற்கு முன்பு, 
- எஸ்பி.முத்துராமன்

சரவணன் சாரைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். முதலாளி என்பதைவிட என் வாழ்க்கையின் உதாரண மனிதர் அவர்தான்! மனிதநேயமிக்க மாமனித ராகத்தான் அவரைப் பார்க்கிறேன். வெள்ளை உடை, நெற்றியில் குங்குமம், எப்போதும் மனம்திறந்த புன்னகை, இன்முகம்.

தொழிலபதிபர், ஸ்டுடியோ அதிபர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவராக இருந்தாலும் ஸ்டுடியோவில் வேலை பார்த்த எல்லோருடனும் தானும் ஒரு தொழிலாளி என்கிற நினைவோடுதான் பணிபுரிவார். எங்களை ஒரு சகோதரராகத்தான் நினைத்து அனைத்து உதவிகளையும் செய்வார்.

திருமண நிகழ்ச்சி முதல் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அழைப்பு வந்துவிட்டால் தவறாமல் போய் வாழ்த்துவார். அப்படி வாழ்த்துவதுதான் அழைப்பு கொடுப்பவர்களுக்கு காட்டும் மரியாதை என்பார். ஒருநாளில் பல விசேஷங்கள் என்றாலும் அதில் பெரிய ஆட்கள் வீட்டுக்குப் போவதை விட, ஏழைத் தொழிலாளியின் வீட்டு நிகழ்ச்சிக்குப் போவதை விரும்புவார். ‘அந்தத் தொழிலாளி, நான் நிச்சயம் விசேஷத்துக்கு வருவேன் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார். அவரையும், அவர் குடும்பத்தையும் ஏமாற்றக் கூடாது’ என்பார்.

கார் கோடம்பாக்கம் வழியே செல்லும்போது, கோடம்பாக்கம் பாலத் துக்கு முன் இடதுபக்கம் இருக்கும் இந்து கோயிலை கும்பிடுவார். கார் பாலத்தின் மீது ஏறும்போது அதே இடதுபக்கம் தெரியும் மசூதியைப் பார்த்து வணங்குவார். அடுத்து கார் மேலே ஏறும்போது லயோலா கல்லூரி வளாகத்தில் இருக்கும் சர்ச்சைப் பார்த்து கும்பிடுவார். ஆக மொத்தத்தில் ‘எம்மதமும் சம்மதம்’ என்ற கொள்கையைக் கொண்டவர்.

அரசியலைப் பொறுத்தவரைக்கும் காமராஜர், கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெய லலிதா, சோனியா காந்தி இப்படி எல் லோருடனும் ஒரே மாதிரி பழகு வார். எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். எல்லா அரசியல் தலை வர்களிடமும் தொடர்பு உண்டு. ஆனால், அரசியலில் தொடர்பு இல்லை. ‘வியாபாரிகளுக்கு அரசியல் வேண்டாம்’ என்ற செட்டியாரின் கொள்கையை ஏற்று வாழ்பவர்.

பத்திரிகை துறையிலும், ஊடகங் களிலும் இவருக்கு எல்லோரும் நண் பர்கள். இவரைப் பற்றிய செய்திகள் வரும்போது உடனே நன்றிக் கடிதம் எழுதுவார். அது நல்ல உறவை ஏற்படுத் தும். எல்லா நிகழ்ச்சிகளிலும் கையைக் கட்டிக்கொண்டு நிற்கும் இவரது ‘பணிவு’ எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

பெங்களூரில் இருந்து வாங்கி வந்த ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற வாசகம் பொறித்த பலகையை தன் மேசையின் மீது வைத்தார். திடீரென ஒருநாள் இந்த வாசகத்தில் ஒரு சக்தி இருக்கிறது. எல்லா விஷயங்களிலும் இதைப் பயன்படுத்துவோமே’ என்று பயன்படுத்தத் தொடங்கினார். அதுவே இன்று ஏவி.எம்மின் லட்சியக் குரலாக ஒலிக்கிறது!

அவருடைய பல நல்ல பழக்கங்களை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த நல்ல மனிதர் அறிமுகப்படுத்திய ‘உயர்ந்த மனிதர்’ இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர்! அவரை சரவணன் சாருக்கு அறிமுகப்படுத்தியவர் நடிகர் அசோகன். குழந்தை மனம் கொண்ட வில்லன். நடிப்பில் மட்டும்தான் வில்லன். வாழ்வில் மற்றவர்களுக்கு உதவுவதே அசோகனின் லட்சியம்.

திருலோகசந்தர்

இரண்டு கதைகளோடு வந்து சரவணன் சாரை சந்தித்தார். இரண்டுமே சரவணன் சாருக்குப் பிடித்து விட்டது. அதில் ஒன்று பீம்சிங் இயக் கத்தில் வெளிவந்த ‘பார்த்தால் பசி தீரும்’ படம். இரண்டாவது ‘வீரத்திருமகன்’. அந்தக் கதையை அவரையே இயக்கச் சொன்னார்கள்.

‘வீரத்திருமகன்’ பட வேலைகள் ஆரம்பித்தபோது சரவணன் சார் திருலோகசந்தரிடம் ‘‘முத்துராமன் எங்கள் ஸ்டுடியோவில் வேலை பார்ப் பவர். அவர் உங்களுக்கு உதவியாக இருப்பார்’’ என்று என் கையைப் பிடித்து திருலோகசந்தரிடம் ஒப்படைத்தார். எனது குருவை எனக்கு அடையாளம் காட்டியவர் சரவணன் சார் என்று சொல்லும்போது பெருமையாக இருக்கிறது.

‘வீரத்திருமகன்’ படத்துக்கு வசனம் எழுத ஒப்பந்தமானார் ஆரூர் தாஸ். அவர் வசனம் எழுதுவதற்காக நட்சத்திர ஹோட்டல்களுக்கோ, வெளி நாட்டுக்கோ போகவில்லை. சென்னை செம்பரப்பாக்கம் ஏரிக் கரையில் இருந்த பொதுப்பணித்துறை விடுதியில் தங்கித்தான் வசனம் எழுதினார். அங்கே இருந்த இரண்டு அறைகளில் ஓர் அறையில் ஆரூர்தாஸும். மற்றொரு அறையில் நான், உதவி இயக்குநர் ராஜேந்திரன், கார் ஓட்டுநராகவும் புரொ டெக்‌ஷன் உதவியாளராகவும் இருந்த மலையப்பனும் இருப்போம்.

ஆருர் தாஸுக்கு மிகவும் பிடித்த விஷயம் சாப்பாடு. உணவு முதல் பீடா வரைக்கும் ‘இந்த இடத்தில், இந்தக் கடையில்தான் வாங்க வேண்டும்’ என்று லிஸ்ட் போட்டு மலையப்பனை அனுப்புவார். ஒரே வாரத்தில் படத்தின் முழு வசனத்தையும் எழுதிவிடுவார். எவ்வளவு கவனமாக ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்கிற கடமை உணர்வை அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

வசனம் தயாரானதும் படப்பிடிப்பு ஏற்பாடுகள் தொடங்கின. நடிப்பு, நடனம், சண்டை எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய ஆனந்தன்தான் ‘வீரத்திரு மகன்’ படத்தின் கதாநாயகன். ‘விஜயபுரி’ ஆனந்தன் என்றும் அவரை அழைப் பார்கள். அன்றும் இன்றும் ‘குமாரி சச்சு’ என்று அழைக்கப்படும் சச்சுதான் படத்தின் கதாநாயகி. மழலைப் பருவத்தில் இருந்தே சச்சுவுக்கு நடிப்பு கை வந்தக் கலை. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ என்கிற பாடல் காட்சியை ஒகேனக்கல்லில் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

சச்சு ரெஃப்ளெக்டர் வெளிச்சத்தில் கண்ணை மூடாமல் இருக்க ஒத்திகை பார்க்கப்பட்டது. ரெஃப்ளெக்டர் வெளிச்சத்தை அவர் முகத்தில் போட்டு, பாடலையும் ஓடவிட்டு சச்சு கண்களை மூடாமல் நடிக்க அவருக்குப் பயிற்சி அளித்தோம். இப்படி எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் படத்தில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் தங்களுடைய இசை ஆற்றல் மூலம் கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கு உயிர் தந்திருப்பார்கள்.

‘வீரத்திருமகன்’ ராஜா ராணி கதை என்பதால் செட், உடை, மேக்கப் எல்லாம் உரிய வகையில் இருக்க வேண்டும் என ஒவ்வொரு விஷயத் திலும் திருலோகசந்தர் திட்டமிட்டு, தரமாக படத்தை எடுத்தார்.

சரவணன் சார் இப்போதும் ‘முத்துராமன் இவ்வளவு ஃபர்பெக்டா ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கிறார் என்றால் அது திருலோகசந்தரிடம் அவர் கற்றுக் கொண்ட பாடம்தான் காரணம்’ என்பார். இப்படி பல படங்களில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் இன்னும் இருக்கின்றன.

-எஸ்பி.முத்துராமன்

No comments:

Post a Comment