HANUMAN ROLE IN RAMAYANAM
ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு சேவை செய்ய பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன. பரமேஸ்ரவரனுக்கும் அந்த அவதாரத்துக்கு சேவை செய்யும் எண்ணம் ஏற்பட்டது. தன் விருப்பத்தை அவர் தேவியிடம் தெரிவித்தார். வானரப்பிள்ளை ஒன்றைப் பெற்றுத்தர கேட்டார். தனக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்க வானரப்பிள்ளை தேவையில்லை என அவள் மறுத்துவிட்டாள். எனவே, ருத்ராம்சமான தன் சக்தி உலகத்தில் எத்தனையோ குழந்தை இல்லாத தாய்மார்களில் ஒருத்திக்கு கிடைக்கட்டுமே என நினைத்தார் பரமேஸ்வரன்.
தன் சக்தியை எடுத்துச்செல்லும் படி வாயு பகவானுக்கு உத்தரவிட்டார். புஞ்ஜிகஸ்தலை என்ற தேவலோக அப்சரஸ் பூலோகம் வந்தாள். ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷியின் உருவத்தை கேலி செய்தாள். ஏ பெண்ணே! உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ, என சாபமிட்டார். புஞ்ஜிகஸ்தலையின் முகம் வானர முகமாகி விட்டது. அவள் அழுது புலம்பினாள். சாப விமோசனம் கேட்டாள். அவளது கண்ணீர் கண்டு கலங்கிய ரிஷி, பெண்ணே! நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன், என்ற வரம் அளித்தார்.
அந்தப்பெண் ஒரு பிறவியில், கேஸரி என்ற வானரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப் பிறவியில் அவளுக்கு அஞ்ஜனை என்ற பெயர். கேஸரி என்றால் சிங்கம். அஞ்ஜனை என்றால் மை பூசிய பேரழகி. ஒருநாள், அப்சரஸாக உருமாறி ஒரு மலைச்சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது தான் வாயு பகவான் அவளைப் பார்த்தான். அவளது அழகில் மயங்கி தழுவிக்கொண்டார். தன்னை அணைப்பதை உணர்ந்த அவள், அணைப்பது யார் என தெரியாமல் ஒரு பெண்ணிடம் இப்படியா தவறாக நடப்பது, என கதறினாள். அப்போது வாயுபகவான் காட்சியளித்து பெண்ணே! தவறான நோக்கத்துடன் உன்னை நான் தழுவவில்லை.
மனதால் மட்டுமே ஸ்பரிசித்தேன். ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய். நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. நீ உலகம் புகழும் ஒரு புத்திரனைப் பெறுவாய், என சொல்லி மறைந்தார். அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். வாயுமைந்தன் பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறந்தான். அழகில் சிறந்த அவனுக்கு மாருதி என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை.
அனுமன் பெயர்க்காரணம்:
ஒருமுறை குழந்தை அனுமன் வானில் சூரியன் உதயமாவதைப் பார்த்து அதை பழமென நினைத்து பறிக்கச் சென்றான். அந்நேரத்தில் ராகுவும் அதை பிடிக்க வந்தான். குழந்தையின் வேகம் கண்ட ராகு பயந்து போய் இந்திரனைச் சரணடைந்தான். அவன் அனுமனை அடித்து கீழே தள்ளினான். அந்த அடியில் அனுமனின் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தோள்பட்டை எலும்பை ஹனு என்பர். எனவே அவர் ஹனுமான் ஆனார். தமிழில் அனுமன் என்கிறோம்.
No comments:
Post a Comment