Saturday 26 May 2018

LIFE IS A STRUGGLE





LIFE IS A STRUGGLE

ஒத்தை கையில எப்படி...?
வேற என்ன பண்றது? பசிக்குதே! கை வலியைப் பார்த்தா, சோறு திங்க முடியுமா?

சென்னை, கொடுங்கையூர் பகுதிக்கு அருகில் இருக்கிறது கண்ணதாசன் நகர். அங்கு, திருவள்ளுவர் சாலை துவங்கும் இடத்தில், ஒரு வீட்டின் வாசலில், சின்ன சின்ன மரத்துண்டுகளை வைத்து தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய மேஜை. அந்த மேஜையின் மீது, நான்காய் மடித்து விரிக்கப்பட்டிருக்கும் ஒரு போர்வை. 'வாசகர் முரளி சொன்ன இடம் இது தான்' என்பதை, கடைக்கு அருகில் குத்த வைத்திருந்த ஏழ்மை அப்பட்டமாய் உணர்த்தியது. கிழிசல் சட்டையுடன், இஸ்திரி பெட்டிக்கு கரி நிரப்பிக் கொண்டிருந்தவர், 'அய்யா...' எனும் நம் குரல் கேட்டு திரும்பினார். நாம் அறிமுகப்படுத்திக் கொண்டதும், தணல் தகிக்கும் ஐந்தரை கிலோ இஸ்திரி பெட்டியோடு எழுந்தார்.

அய்யாவோட பேரு தெரிஞ்சுக்கலாமா?
எம்.சீனி; வயசு 70; சொந்த ஊரு விருதுநகர்; இங்கே சென்னைக்கு வந்து, 50 வருஷத்துக்கு மேல ஆகுது!
நம் அடுத்தடுத்த கேள்விகளை யூகித்துக் கொண்டு, மொத்தமாய் பதில் சொன்னார் சீனி. புதிய கேள்விக்கு நாம் தயாராவதற்குள், அவரின் வலது கை விரல்கள், மேஜையில் இருந்த துணி மூட்டையை பிரிக்கத் துவங்கின. அவர் அணிந்திருந்த அரைக்கை சட்டைக்கு வெளியே, இரண்டு அங்குல நீளத்திற்கு துருத்திக் கொண்டிருந்தது இடது கை.

நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கை இது தானா?
ச்சே... ச்சே... எந்த மாதிரி வாழ்க்கைக்கும் நான் ஆசைப்பட்டது இல்லை! ஆசைப்படறதுக்கும் ஒரு அறிவு வேணுமில்ல; நான் பள்ளிக்கூடத்து பக்கமே போகாத ஆளுங்க! 20 வயசுலேயே கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க; ஆனா, அந்த வாழ்க்கை சரியா அமையலை! அதனால, 24 வயசுல ரெண்டாவது கல்யாணம் நடந்துச்சு. அந்த வாழ்க்கையில நிம்மதி தான்; ஆனா, கடவுளுக்கு அது பொறுக்கலை! என்னத்த சொல்றது... என் வாழ்க்கை என் கையில இல்ல! பரிதாபமாய் சொல்லும் சீனி, தற்போது தனி மனிதர். மனைவி ராஜம்மாள், 20 ஆண்டுகளுக்கு முன் காலமாகி விட, 3 ஆண் பிள்ளைகளும், 2 பெண் பிள்ளைகளும், தத்தமது குடும்பம், குழந்தை என பரபரப்பாகி விட, தனி ஆளாகி விட்டார் சீனி. இன்று, ஒரு துணிக்கு இஸ்திரி போட, 6 ரூபாய் வாங்குகிறார். இந்த அடிப்படையில், இவரது ஒருநாள் வருமானம், 100 ரூபாய் முதல் 200 ரூபாய்! இதற்கும் தினசரி உத்தரவாதம் கிடையாது. இந்த சூழலில், காலையில் ஒரு தோசை, ஒரு வடை; மதியம், 40 ரூபாய்க்கு சாப்பாடு; இரவு, இரண்டு பரோட்டாக்கள் இவரது உயிர் நீட்டிக்கின்றன!

ஒத்தை கையில எப்படி...?
வேற என்ன பண்றது? பசிக்குதே! கை வலியைப் பார்த்தா, சோறு திங்க முடியுமா? எனக்கு, இந்த கை போனதைப் பத்தியெல்லாம் கவலை இல்லை. 
ஆனா, என் ராஜம்மா என் கூட இல்லாதது தான் பெரிய சிரமமா இருக்கு. அவ மட்டும் இருந்திருந்தான்னா, எனக்கு மூணு வேளை சோறு ஒழுங்கா கிடைச்சிருக்கும். நான் எப்போ காசு கேட்டாலும், அவ உடனே கொடுத்திருவா தெரியுமா! ம்ஹும்... இப்போ பேசி என்ன பிரயோஜனம்; அவ திரும்பி வரவா போறா? என்ன ஒண்ணு... ஒத்தையா விட்டத்தை பார்த்துட்டு படுத்திருக்கிறப்போ எல்லாம், அவ ஞாபகம் வந்துடுது!
பெரும் ஏக்கத்துடன் சீனி சொல்லச் சொல்ல, 'ஒரு மனைவி கணவனுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை, அவனுக்கு முன் இறந்து போவது தான்' எனும் உண்மை நினைவிற்கு வந்தது.
இரண்டு சட்டைகளை முடித்து, மூன்றாவது சட்டைக்கு இஸ்திரி போடத் துவங்கியிருந்தார் சீனி. இடைவெளியில்லாமல் வலக்கை வேலை செய்ய, அவ்வப்போது, தன்னால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை செய்து தந்தது அவரின் இடக்கை.

இது எப்படி ஆச்சு?
விறகு வெட்ட போனப்போ, மணிக்கட்டுல முள்ளு கிழிச்சிடுச்சு. 'சின்ன காயம் தானே; தானா ஆறிடும்'னு கவனிக்காம விட்டுட்டேன். அது என்னடான்னா, சீழ் பிடிச்சு, கையை காவு வாங்கிடுச்சு! அது ஆச்சு, 20 வருஷம்!

'நான் இழந்த உறவுகளின் முன், இது வெகு சாதாரணம்' என்பது போல் பேசுகிறார் சீனி.

என்ன சேர்த்து வைச்சிருக்கீங்க?
நான் என்னத்த சேர்த்து வைக்கணும்? இந்தா, நேத்து ராத்திரி, 20 ரூபா வைச்சிருந்தேன். இன்னைக்கு காலையில டீ சாப்பிட்டது போக, இந்த சில்லரை தான் மீதி; இது போதும்! நான் சேர்த்து வைச்சு என்ன பண்ணப் போறேன்?

உங்களை, 'நல்ல மனிதர்'னு சொல்லலாமா?
அது எப்படி; எல்லா மனசுக்குள்ளேயும் கெட்டதும் இருக்கும்ல!
'அது என்ன கெட்டது?' என, சீனியிடம் தோண்டத் தோன்றவில்லை; காரணம், அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை. நம் பார்வையில், சீனி ஊனமானவர்; இருந்தும், ஊனத்தை வென்று உழைப்பவர். அது போதும்!

மனசுல ஏதாவது ஆசை இருக்கா?
இந்த கேள்விக்கு பதிலாக சீனியிடம் இருந்து வெளிப்பட்டது... ஒரு துளி கண்ணீர்!

ஒரே ஒரு வார்த்தையில்...
நாம்: மனித வாழ்வில் எது பொய்?
எம்.சீனி: பாசம்

No comments:

Post a Comment