Sunday 13 May 2018

KU.MA.BALASUBRAMANIAM DIALOGUE ,LYRICS BORN 1920 MAY 13 -





KU.MA.BALASUBRAMANIAM DIALOGUE ,LYRICS
BORN 1920 MAY 13 -





மாரிமுத்து-கோவிந்தம்மாள் தம்பதியருக்கு 13.05.1920 இல் ஒரே மகனாகப் பிறந்தவர் கு.மா.பாலசுப்பிரமணியம்.

அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ?,

யாரடிநீ மோகினி கூறடி என் கண்மணி,

சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி,

உன்னைக் கண் தேடுதே உன் எழில் காணவே உள்ளம் நாடுதே,

மலரும் வான்நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே,

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே,

ஆடாத மனமும் ஆடுதே 
போன்ற மறக்கமுடியாத பாடல்களை எழுதி திரையிசை வரலாற்றில் மங்காப் புகழ் பெற்றவர் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்.

இவர் பாடல் எழுதிய முதல் படம் அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய ஓர் இரவு (1951). "புவிமேல் மானமுடன் உயிர்வாழ வழியேதும் இல்லையே' என்று தொடங்கும் இவரின் முதல் பாடலுக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம்.கவிஞர் கு.மா.பா., ஓர் இரவு படத் தயாரிப்பின் போது அண்ணாவுக்கு, வசனப் பிரதியெடுத்து துணை புரிந்ததுடன் அப்படத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.


மகாகவி காளிதாஸ், கொஞ்சும் சலங்கை போன்ற புகழ் பெற்ற படங்களுக்குப் பாடல்களுடன் திரைக்கதை-வசனமும் எழுதியுள்ளார்.பாரதியார் எழுதிய ராதைப் பாட்டிலுள்ள ஆறு தமிழ்க் கண்ணிகளை அடியொற்றி, சக்கரவர்த்தி திருமகள் (1957) படத்தில், காதலெனும் சோலையிலே ராதே ராதே என்று தொடங்கும் பாடலை எழுதிய கு.மா.பா., கன்னம் குழிவதிலே ராதே ராதே எந்தன் எண்ணம் சுழலுதடி ராதே ராதே -என்று பாடலின் அடி தோறும் ஈற்றிரு சீர்களும் ராதே ராதே என்று முடியும்படி இப்பாடலை அடியியைபினில் அமைத்துள்ளார்.

காதலர்கள் காதலியை மலர், கனி போன்றவற்றுடன் ஒப்பிட்டு வர்ணித்துப் பாடுவது வழக்கம். ஆனால், கு.மா.பா., சிவனாரின் அவயங்களை காய்கறிகளுடன் ஒப்பிட்டு ஒரு வித்தியாசமான பாடலை எழுதியுள்ளார். சிவசக்தி (1956) என்ற மொழிமாற்று படத்தில் எஸ்.சி.கிருஷ்ணன் பாடும் "வெண்டைக்காய் என்று சொன்னாய்' என்ற பாடலே அது. வெண்டைக் காயை ஈசனாரின் விரலாகவும், முருங்கைக் காயை சடாமுடியாகவும், பூசணிக் காயை வயிறாகவும், வாழைக் காயை நெற்றியாகவும், சுண்டைக் காயை கண்ணாகவும் ஒப்பிட்டு, ஒரு அருமையான காய்கறி அமுது படையல் அளித்துள்ளார் கவிஞர்.

கவிஞர் கு.மா.பா.,கடைசியாகப் பாடல் எழுதிய படம் கனவுகள் கற்பனைகள் (1982). இப்படத்தில், கங்கை அமரன் இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் "வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்கள்' என்று தொடங்கும் பாடலை எழுதியுள்ளார். எமது தேடலின்படி இவர் 54 திரைப்படங்களில் 170 பாடல்கள் எழுதியுள்ளதாக அறியமுடிகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகிலுள்ள வேளுக்குடி என்ற ஊரில், மாரிமுத்து-கோவிந்தம்மாள் தம்பதியருக்கு 13.05.1920 இல் ஒரே மகனாகப் பிறந்தவர் கு.மா.பாலசுப்பிரமணியம். இவர்களின் பூர்வீகம் குறிச்சி என்ற சிற்றூரிலிருந்து குடிபெயர்ந்து வந்ததால், 
குறிச்சி மாரிமுத்து பாலசுப்பிரமணியம் என்பது கவிஞரின் முழுப்பெயரானது.

கு.மா.பாலசுப்பிரமணியத்தின் இளம் வயதிலேயே அவரது தந்தை இறந்து விட்டதாலும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் இவரால் ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இருப்பினும் எழுதப் படிக்கத் தெரிந்த இவரது தாய் இவருக்கு தேவாரம், திருவாசகம், திருவருட்பா போன்ற நூல்களை பயிற்றுவித்தார். கு.மா.பா., தனது பதினாறாவது வயதிலிருந்தே கதைகள், கவிதைகள் எழுதத் தொடங்கினார்.இவரது முதல் படைப்பான "இன்பத்துளி' என்ற சிறுகதை "சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் முதல் ஆசிரியர் நவீனன் நடத்தி வந்த "நவயுவன்' என்ற பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து திருமகள், சண்டமாருதம், பிரசண்டவிகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளில் இவரது படைப்புக்கள் பிரசுரமாயின.


பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, உடுமலை நாராயண கவி, புதுமைப்பித்தன், தி.ஜ.ர., கு.ப.இராஜகோபாலன் ஆகியோரின் இயல் இசை ஆக்கங்களால் இவர் ஈர்க்கப்பட்டார். கு.மா.பா.வின் தமிழார்வத்தைக் கண்ட, சென்னையிலுள்ள சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் திருவேங்கடம், கு.மா.பாவிற்கு யாப்பிலக்கணதைப் பயிற்றுவித்தார்.07.09.1941 இல் இவருக்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த மரகதவல்லிக்கும் சீர்காழியில் திருமணம் நடைபெற்றது.

1942 இல் மரகதவல்லி காலமானார். நான்கு ஆண்டுகளுக்குப்பின், 26.05.1946 இல், திருவாரூர் ஜெயலட்சுமி என்பவரைக் கரம் பிடித்து மீண்டும் இல்லற வாழ்க்கையினைத் தொடங்கினார். கவி கா.மு.ஷெரிப் இத்திருமணத்திற்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தி, வாழ்த்துக் கவிதை வழங்கினார். 13.05.1979 இல் கவிஞரது மணிவிழா சிறப்புற நடைபெற்றது.
கு.மா.பா., 1942 இல் மதுரையில் சி.பா.ஆதித்தனாரின் தமிழன் வார இதழிலும், 1944 இல் கோயம்புத்தூரில் வீரசக்தி மாத இதழிலும், 1945 இல் கொழும்பில் வீரகேசரி நாளிதழிலும், தமிழரசு கழக ஏடுகளான தமிழ் முரசு, செங்கோல் ஆகிய பத்திரிகைகளிலும் துணையாசிரியராகப் பணியாற்றினார். தமது நண்பர் பி.எம்.சேவுகரத்தினம் என்பவருடன் சேர்ந்து தமிழ்க் குரல் என்னும் இதழையும் நடத்தினார். தமிழக எல்லைப் போராட்டங்கள், தலைநகர் போராட்டம், தமிழ்நாடு பெயர்மாற்றப் போராட்டம், மாநில சுயாட்சிப் போராட்டம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைசென்ற மொழிப்போர் தியாகி கவிஞர்
கு.மா.பாலசுப்பிரமணியம். சென்னை மெரீனா கடற்கரை வள்ளுவர் சிலையின் பின்புறம் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறுவது கடற்கரை கவியரங்கம். இக்கவியரங்கத்தின் முதல் நிகழ்வை கவிஞர் பொன்னடியான் தலைமையில் தொடங்கி வைத்தவர் நமது கவிஞர் கு.மா.பா.தான். 2015 மே மாதம் நடைபெறுவது 529 ஆவது கவியரங்கமாகும்.உடுமலை நாராயண கவியைப் போலவே, கவிஞர் கு.மா.பா.வும் வெள்ளித் திரையில் வெண்பாவை விரவ விட்டவர். மகாகவி காளிதாஸ் (1966) படத்தில், இரு விகற்பங்களில் அமைந்த நேரிசை வெண்பாவினை நேர்த்தியாக எழுதியுள்ளார் இவர்.பூவில் இடங்கொள்ளப் போதாமல் என்னுடைய நாவில் இடங்கொண்ட நாயகியே நோவில்முடக்குற்ற தாயிவளும் முன்போல் எழுந்துநடக்கத் தருவாய் நலம்.வெள்ளித் திரையில் வெண்பாவை விரவ விட்ட கவிஞர் கு.மா.பா.வைப் பாராட்டி கிருபானந்த வாரியார் பாடிய வெண்பா இது:புகழ்பால சுப்பிரமணிப் புண்ணிய சீலன்தகவார் தணிகைச் சதகம் மிகவினிதாய்ப்பாடி வழங்கினான் பாரெலாம் போற்றியே நாடி உவக்கும் நயந்து."தே மா'வுக்கு சீரளித்தவர் "கு.மா.பா'. 25.01.1975 இல் தமிழக அரசால் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. 13. 05.1975 இல் ஈரோடு தமிழ்க் கவிஞர் மன்றம் இவருக்கு கவிக்குயில் என்ற பட்டம் அளித்தது. தமிழக அரசின் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் கவிஞர் பணிபுரிந்துள்ளார். 1989 இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் காரியதரிசியாகவும் பணியாற்றியுள்ளார் கவிஞர். 04.11.1994 அன்று காலை 9 மணியளவில் கவிஞர் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஏற்பட்ட நெஞ்சடைப்பு வலியினால் காலமானார். காலத்தால் அழியாத கவிகள் அளித்தவரை காலதேவன் அழைத்துக் கொண்டான்.கவிஞரின் துணைவியார் கு.மா.பா.ஜெயலட்சுமி சென்னை,மயிலாப்பூரில் நலமுடன் வசித்து வருகிறார். இவருடன் இவரின் புதல்வர்கள் கு.மா.பா.இளங்கோவன், கவிஞர் கு.மா.பா.திருநாவுக்கரசு (பணி ஓய்வு வங்கி அலுவலர்), கவிஞர் கு.மா.பா.கபிலன் (பணி ஓய்வு வங்கி அலுவலர்) ஆகிய மூவரும் நலமுடன் வசித்து வருகிறார்கள். கவிஞரின் புதல்விகளாகிய மங்கையர்க்கரசி கலியமூர்த்தியும், அங்கயற்கண்ணி
கிருஷ்ணகுமாரும் நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.படங்கள்: ஞானம்கு.மா.பா. எழுதிய புகழ்பெற்ற பாடல்களில் சிலஅமுதைப் பொழியும் நிலவே - தங்கமலை ரகசியம்ஆடாத மனமும் ஆடுதே - களத்தூர் கண்ணம்மாஆடவாங்க அண்ணாத்தே - சக்கரவர்த்தி திருமகள்இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே - வீரபாண்டிய கட்டபொம்மன்உன்னைக் கண் தேடுதே -கணவனே கண்கண்ட தெய்வம்ஏமாறச் சொன்னது நானோ -நானும் ஒரு பெண்கனவின் மாயா லோகத்திலே -அன்னையின் ஆணைகாதலெனும் சோலையிலே ராதே ராதே - சக்கரவர்த்தி திருமகள்குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே -மரகதம்சித்திரம் பேசுதடி -சபாஷ் மீனாசிங்கார வேலனே தேவா -கொஞ்சும் சலங்கைமலரும் வான்நிலவும் -மகாகவி காளிதாஸ்மாசிலா நிலவே நம் -அம்பிகாபதியாரடி நீ மோகினி -உத்தம புத்திரன்கவிஞர் கு.மா.பா. பாடல் எழுதிய படங்களில் குறிப்பிடத்தக்கவைஓர் இரவு (1951), ரத்தபாசம் (1954), கணவனே கண்கண்ட தெய்வம் (1955), அம்பிகாபதி (1957), சக்கரவர்த்தி திருமகள் (1957), தங்கமலை ரகசியம் (1957), அன்னையின் ஆணை (1958), உத்தம புத்திரன் (1958), பூலோக ரம்பை (1958),சபாஷ் மீனா (1958), மரகதம் (1959), களத்தூர் கண்ணம்மா (1960), விடிவெள்ளி (1960), வீரபாண்டிய கட்டபொம்மன் (1960), அரசிளங்குமரி (1961), திருடாதே (1961), கொஞ்சும் சலங்கை (1962), பட்டினத்தார் (1962), சித்தூர் ராணி பத்மினி (1963), நானும் ஒரு பெண் (1963), மகாகவி காளிதாஸ் (1966), தூரத்து இடிமுழக்கம் (1980), கனவுகள் கற்பனைகள் (1982)கவிஞர் எழுதிய நாவல்கள்: இன்பத் துளிகள், சூடிய மலர்கள், அதிர்ஷ்டக் குழந்தை, பச்சை மாலைகவிதை நூல்கள்:முதற் குரல், தணிகைவேள் சதகம், உளிக்கு பதிலளிக்க நாடகங்கள்: சகுந்தலை, சிலப்பதிகாரம், அல்லித் திருமணம், ரிஷ்ய சிருங்கர், உஷா கல்யாணம் ஆகிய நாட்டிய நாடகங்களை கவிஞர் எழுதியுள்ளார். இந்த நாடகங்கள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டு காவிய நடனம் என்ற தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது.கவிஞரைப் பற்றிய நூல்கள்: நான் விரும்பும் கவிஞர் கு.மா.பா.திரைப்படப் பாடல்கள் (கவிஞர் கு.மா.பா.கபிலன்) கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் திரை இசைப் பாடல்கள் (இக்கட்டுரையாசிரியர் எழுதியது).

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
"கலைமாமணி" கவிஞர். கு.மா.பாலசுப்பிரமணியம்
97ஆம் பிறந்தநாளில், நிழலாடும் நினைவுகள்:
எங்கள் தந்தையாரின் வாழ்க்கைப் பயணத்தை அவரே ஒரு சுயசரிதையாக எழுதியிருக்கலாம் என்ற எண்ணம் எனக்குண்டு. அடிமை நாடாக இருந்த நமது தேசத்தில், ஒரு சாதாரண எளிய வேளாண் குடும்பத்தில், 30 வயதைக் கடந்த ஒரு தாயின் வயிறு, தவமிருந்துப் பெற்ற ஒற்றை மகன் அவர். ஐந்து வயதிலேயே தன் தந்தையைப் பிரிந்து, தனியொருவனாக ஆளான அவருடைய இளமைப் பருவம் பல திருப்பங்களைக் கொண்ட சுவாரசியங்கள் நிறைந்தது. சரிதமாக அவர் வாழ்க்கை ஒரு நூலாக எழுதப்படவில்லை என்றாலும், அவரே பதிவுசெய்த அவரின் வாழ்க்கைக்குறிப்புகள் ஊடகங்களில் அவ்வப்போது இடம்பெற்றதுண்டு. அவர் ஒரு பத்திரிகை எழுத்தாளனாகப் பிரவேசித்து, கவிஞனாக, பாடலாசிரியனாக, தமிழ்ப்பற்றாளனாக, தேசபக்தனாக, தமிழக எல்லைகள் மீட்புப் போராளியாக, சட்டமேலவை உறுப்பினராக பரிணமித்து, காலத்தை வென்று நிற்கும் கவிதை நூல்களையும், திரைப்படப் பாடல்களையும் எழுதி பிரபலமானதை நம் தமிழ்கூறும் நல்லலுலகம் நன்கறியும்.
ஆகவே, பலரும் அறிந்த அந்தக் குறிப்புகளை மீண்டும் இந்தப் பிறந்தநாள் நினைவாகப் பதிவு செய்வதைவிட, அவரின் பிறப்புமுதல், இளைஞனாக ஓர் எழுத்தாளனாக கால்பதித்ததுவரை, அதிகம் அறியாதப் பக்கங்களை, அதுவும் செவிவழி நாங்கள் கேட்டறிந்த நிகழ்வுகளை நான் கவிதை வரிகளாகப் பதிவுசெய்துவைக்க விரும்புகின்றேன். இது எங்கள் நட்புலகத்திற்கும், எங்களின் குடும்பம்சார்ந்த வருங்காலத் தலைமுறையினருக்கும் பயனுள்ளதாக அல்லது தெரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கலாம். முப்பாட்டன் காலத்து போராட்ட வாழ்வை, கல்விச்சூழலை, பண்பாட்டை இன்றையத் தொழில்நுட்ப அறிவியல் வருங்காலத் தலைமுறையினர் நாகரிக உலகில் அறிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாகும். தாத்தா பாட்டி கதைசொல்லிகளாக வாழ்ந்த காலத்தைத் தள்ளிவைத்து விட்டு வாழும்சூழலில், இவர்கள் தாய் தந்தை குடும்பம் சார்ந்த முப்பாட்டன் பெயர்களைக் கூட தெரிந்துகொள்ள நேரமும் ஆர்வமும் இல்லையென்பதும் இதற்கு ஒரு காரணம்.
இதில் நிறைய தகவல்களைப் பதிவுசெய்ய நான் விரும்புவதால், முகநூலில் ஒரே பதிவாக வெளியிட இயலாது. ஆகவே, பகுதி பகுதியாய் வெளியிட்டால் படிக்க எளிதாகவும் அடக்கமாகவும் இருக்கும் என்று எண்ணுகிறேன். அனைவரும் தொடர்ந்து படித்துவர வேண்டுகிறேன்.
அன்புடன்,
கு.மா.பா.திருநாவுக்கரசு
நாள்: 13.5.2017

No comments:

Post a Comment