- Menstrual Hygiene Day MAY 28
மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்புக்களில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதை குறிக்கும்.[1] இடக்கரடக்கலாக வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு என்றும் சொல்வழக்கு உண்டு. மருத்துவப்படி, ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்கான தயார்ப்படுத்தலுக்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (endometrium) போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. ஒரு பெண் கர்பமடைவாரேயானால், கருப்பையில் தங்கும் கருக்கட்டிய முட்டைக்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவே இந்த குருதி நிறைந்த மடிப்புக்கள் உருவாகியிருக்கும். பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம் மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந் தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதத்திற்கு ஒருமுறை யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும்.
மாதவிடாய் மாதவிடாய்ச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய் பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும்போது ஏற்படுகிறது. இந்நிகழ்வு அனைத்து பாலூட்டிகளிலும் நடந்தாலும், மனிதன், மற்றும் பரிணாம வளர்ச்சியில் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடைய சிம்பன்சி போன்ற சில விலங்கினங்களிலேயே இவ்வாறு வெளிப்படையாக கருப்பை மடிப்பு வெளியேறுகிறது. மற்ற பாலூட்டிகளில், இனப்பெருக்க சுழற்சியின் இறுதிக் காலத்தில் கருப்பைமடிப்புகள் மீளவும் உள்ளே உறிஞ்சப்படுகின்றது.
சுழற்சி
மாதவிடாய் என்பது மாதவிடாய் சுழற்சியின் வெளியே காணக்கூடிய காலமாகும். மாதவிடாய் சுழற்சி உதிரப்போக்கின் முதல்நாளில் இருந்து கணக்கிடப்படுகிறது.
கருத்தரித்திருக்கும் காலத்திலும் குழந்தை பிறந்த சில மாதங்களுக்கும் மாதவிடாய் இருப்பதில்லை. அதாவது, குருதிப்போக்கு இருப்பதில்லை. இச்சுழற்சி மீண்டும் துவங்கும்வரை, பாலூட்டும் காலத்தில் கருத்தரிப்பு நடக்காது. சில குறிப்பிட்ட பாலூட்டும் பழக்கங்களை பின்பற்றினால் இந்த காலத்தை நீடிக்க முடியும். இதனை குடும்பக் கட்டுப்பாட்டு முறையாகவும் கையாளலாம்.
நிலைகள்
ஒழுகுதல்
பெண் பூப்பெய்துவதற்கு ஒரு வருடம் முன்பே அவளது யோனியில் இருந்து கலங்கிய வெள்ளைத் திரவம் வெளியேறத் தொடங்கும். அது மர வண்ணமாக மாறும்போது அடிக்கடி வெளியேறும். அவள் பூப்பெய்தும் நேரம், இந்த நிகழ்வு 3-5 நாட்கள் என வெளியேற்றம் சீராகும். உடல் சமநிலைப்படும்போது 2-7 என இது நிலைப்படும்.
மாதவிடாய்
பெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லி. வரை உதிரம் இழக்கிறார்கள். இந்த நாட்களில் தங்கள் உள்ளாடைகள் கறைபடாதிருக்க அணையாடை அல்லது அடைப்பான் பாவிக்கின்றனர். கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் மாதவிலக்கு நிற்பது என்றாலும் சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.
மாதவிலக்கு நிற்பது
இந்த நிலைக்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கிய காரணமாக இருக்கும். குறிப்பாக புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவத்தின் கடைசியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன், போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.
நோய் என எடுத்துக்கொண்டால், நாள்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடுகள், உடற் பருமன், நரம்புத் தளர்ச்சி நோய், போன்றவற்றால் மாதவிலக்கு தொடராது. ஆகவே மாதவிலக்கு நின்றுவிட்டது என்று தாங்களாகவே முடிவுக்கு வந்துவிடக்கூடாது. சரியான மருத்துவரை அணுகி காரணத்தை அறிந்து சரிசெய்துகொள்ள வேண்டும்.
மாதவிடாய் நிறுத்தம்
மாதவிடாய் நிறுத்தம் என்பது, 45-70 வயது காலகட்டத்தில் ஒரு பெண்ணில் மாதவிடாயினால் ஏற்படும் உதிரப்போக்கு நின்றுவிடுவதைக் குறிக்கிறது. இக்காலத்தில் பெண்ணின் பாலின பண்பிற்கு காரணமான எஸ்ட்ரோஜன் எனும் நொதி சுரப்பது குறைகிறது. காரணமின்றி எரிச்சல்படுவது, உடல் வெப்பமடைதல், யோனி எரிச்சல் மற்றும் உலர்ந்திருத்தல் ஆகியன சில அறிகுறிகளாகும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்கள், அதன் பின்னர் இனப்பெருக்கத்தில் பங்கேற்க இயலாது.
முன்விளைவுகள்
அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின் போது வயிற்றுப்பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற சில உபத்திரபமான அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்தக்காலத்தின் முன்னும் பின்னும் சுரக்கும் இயக்குநீர்களாலும், உள உணர்வுகள் மாறுபட்டு வித்தியாசமாக உணர்வார்கள். இது மாதவிலக்குக்கு முந்தைய அறிகுறி (premenstrual syndrome or PMS) என அழைக்கப்படுகிறது.
இயக்குநீர்களின் செயலால் புணர்ச்சிவேட்கை அதிகமாகலாம். பிடிவாதம் அதிகரிக்கலாம்; தற்கொலை கூட முயற்சிக்கலாம். மனத்தகைவு அல்லது உளச்சோர்வு நோயால் பாதிக்கப்படலாம். இதே உணர்வுகள் குழந்தை பிறக்கும்போதும் ஏற்படுகிறது.
மாதவிடாய் கோளாறுகள்:
சரியான சுழற்சியில் மாதவிடாய் நிகழாமல் இருப்பது
மாதத்திற்கு ஒருமுறை அல்லது மாறுபட்ட சுழற்சியில் மாதவிடாய்.
மாதவிடாய் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை வராமல் இருப்பது
மாதவிடாய் உண்டாகும்போது அதிகமான அடிவயிற்று வலி, உடல் அசதி, வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாத நிலை.
மாதவிடாய் ஒழுங்காக வந்தாலும் அளவுக்கு அதிகமாக உதிரம் போவது.
மாதசுழற்சிக்கு இடையில் ஓரிரு நாட்கள் உதிரம் படுவது.
மாதவிடாயின்போது அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும்.
பண்பாடும் நாகரீகமும்
மாதவிடாய் இயற்கையின் இயல்பாக இருப்பினும் மக்கள் இதனை பொதுவிடங்களில் குறிப்பிட தயங்கினர். அதனாலேயே இடக்கரடக்கலாக வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு என்ற சொல்வழக்கு எழுந்தது. குறிப்பிட்ட காலத்தில் நிகழாது தாமதமாகும்போது தள்ளிப்போயிற்று எனக்கூறுவர். தள்ளிப்போதல் ஒரு பெண் கருவுற்றிருப்பதன் முதல் அறிகுறியாகும். ஆனால் இது மட்டுமே கருத்தங்கலை உறுதிப்படுத்தாது. சீரற்ற மாதவிடாய் சுழற்சி ஆரம்ப ஆண்டுகளில் இயல்பானது. தவிர பெண்ணின் உள/உடல் தகைவுகள் இச்சுழற்சியை பாதிக்கும். கருத்தரித்த காலத்திலும் முதலிரு மாதங்களில் சில பெண்களுக்கு மாதவிடாய் ஒழுகல் தொடர்வதும் உண்டு. மாதவிடாயினாலான உதிரப்போக்கு நின்ற பிறகு (3-7 நாட்களில்) தலைக்கு நீர்விட்டு குளிப்பதும் உண்டு. இதனால் குளிக்காமல் இருக்கிறாயா என்பது கருத்தரித்திருக்கிறாயா என்னும் பொருளில் பொதுமக்களிடையே நிலவும் சொற்றொடராகும்.
பல சமயங்களிலும் மாதவிடாய் குறித்த வழக்கங்கள் சில உள்ளன. இக்காலத்தில் உடலுறவு கொள்வதை சூடாயியம், இந்து மற்றும் இசுலாமிய சமயங்கள் தடை செய்கின்றன. சில பழங்குடிகள் பெண்களை இந்தக் காலம் முடியும் வரை தனிக் குடிலில் தங்க வைக்கிறார்கள். தமிழக சமூகங்களிலும் அண்மைக் காலங்களில் அவர்களை வீட்டிற்கு வெளியே, புறக்கடையில், தங்க வைத்திருந்தனர். இந்த நாட்களில் அவர்கள் சமையலறை, சமய சடங்குகள் எதிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. பல இடங்களில் மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், குளித்தால் சளி பிடிக்கும், காயம் படும், கனமான பொருட்களை தூக்கக்கூடாது, பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும், தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும்... என்பதான நம்பிக்கைகள் உள்ளன. கிராமப்புறங்களில் மாதவிலக்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, குளிக்க வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்குக் கொடுத்தனுப்பும் வழக்கம் உண்டு. ஐரோப்பியாவில் கூட சில காலங்களுக்கு முன்னர் வரை உணவகங்களில் வேலை செய்யும் பெண்கள் அந்த நாட்களில் உணவைத் தொடக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. மாதவிலக்கின் போது குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் கை பட்ட உணவுகள் பழுதடைந்து விடுமென்ற நம்பிக்கையே அதற்குக் காரணமாக இருந்தது. 1960 இல் இருந்து சில பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றும் மருந்துகளைக் கொண்டு மாதவிடாய் நேருவதையும் கருத்தரிப்பதையும் சுயகட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றனர்.
மாதவிடாய் குறித்து இசுலாமியக் கருத்து
"மாதவிலக்கு என்பது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"மாதவிலக்கு பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் (இயற்கை) உபாதை. எனவே, மாதவிலக்கின் போது (தாம்பத்திய உறவு கொள்ளாமல்) பெண்களிடமிருந்து விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மை அடைந்து விட்டால், அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அவர்களிடம் செல்லுங்கள். பாவத்திலிருந்து மீள்வோரை அல்லாஹ் நேசிக்கிறான், தூய்மையானவர்களையும் நேசிக்கிறான் எனக் கூறுவீராக!" (அல்குர்ஆன், 002:222)
No comments:
Post a Comment