KAKKAN AND MGR
.தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது,
பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.
உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, ‘இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன்’ என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார்.
கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன்.
எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் பிறந்தவர்.
பிறப்பு என்பது தற்செயலாக நடக்கும் இயற்கை நிகழ்வு. இதில் பெருமை படவோ அல்லது சிறுமை கொள்ளவோ எதுவுமில்லை. சுய (சொந்த) சாதி பெருமை பேசுவதும் சக மனிதனை தன்னை விட தாழ்தவன் என்று கருதுவதும் ஒரு வகையான 😨மன நோய்😬
கக்கன் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர்.ஆனாலும் சாதி அடையாளம் தன்மீது வராமல் பார்த்துக்கொண்டார். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.
இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது."(நாம் நடிகர் கருணாஸ் போன்ற தியாகிகளை ஜெயிக்க வைப்பவர்கள்)*" அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்:
எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’
தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன்.
1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார்.
அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு,
‘அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: ‘ஐயா! அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா’ யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அந்த வார்டைக் காட்டுங்க’ என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார்.
மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.
உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்.,
எதிரில் உள்ள நாற்காலி தானும் அமர்ந்தார். ‘தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்’ இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது.
கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும்?
சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்’ என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, ‘அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்’ என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, ‘என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்’ என்று வணங்கி விடை பெற்றார்.
கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார்.
அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன்.
கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க... ‘குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை!
No comments:
Post a Comment