Monday, 4 May 2020

JEYALALITHA DURING ADOLESCENT PERIOD -PRE - ENTRY TO CINEMA




JEYALALITHA  DURING ADOLESCENT 
PERIOD -PRE - ENTRY TO CINEMA




.''நீங்கள் தேடுவது, உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது'' என்பார் ரூமி. ஆனால், அம்மு விஷயத்தில் அவர் தேடாதது எல்லாம்  வாழ்க்கை முழுவதும் அவரை அதி தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தது.  இதற்கு என்ன காரணம்...  ஏன் வேண்டாமென்றாலும், அவரை வாய்ப்புத் துரத்தியது...? சந்தியாவின் பதில் இப்படியானதாக இருக்கிறது. “அம்முவுக்கும் படிப்பில்தான் மிகுந்த விருப்பம். அப்படி இருந்தும் அம்மு நடிப்புத் துறைக்கு வந்துவிட்டாள் என்றால், அதை விதியின் வலிமை என்றுதானே கூற முடியும்?” என்றார் சந்தியா ஒரு நேர்காணலில்.  அவர் வேண்டுமானால், விதி மீதி பழிபோட்டுக் கொள்ளட்டும். ஆனால், விதி மட்டும் அம்முவின் வாழ்வை வடிவமைக்கவில்லை, சந்தியாவும் சேர்ந்துதான் வடிவமைத்திருக்கிறார்.  தன் உள்ளுணர்வு சொல்லும்  பாதையில்  அம்மு செல்லவில்லை... அவர் சென்றது சந்தியா காட்டிய வழியில் தான்.

எதிர்ப்புத்  தெரிவித்த தாத்தா... அடம்பிடித்த அம்மு!

’சின்னட கொம்பே’ திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே சில காட்சிகளைப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீதர். நாடகத் துறையில் கோலோச்சிய ஒய்.ஜி.பார்த்தசாரதியை,  ஜனாதிபதியின் மகன் சங்கர் கிரியை, பிரம்மாண்ட இயக்குநர் பந்தலுவைக் கவர்ந்த  அம்முவின் நடிப்பு  ஸ்ரீதரையும் கவர்ந்திருக்கிறது. ஹூம்... கவராமல் போனால்தானே ஆச்சர்யம். ஆன்மாவிலிருந்து கலையை வெளிப்படுத்துபவரை யாருக்குத்தான் பிடிக்காமல்போகும்...? சந்தியாவை அணுகுகிறார்.  “நான் எடுக்கப்போகும், ’வெண்ணிற ஆடை’ படத்தில் அம்முவை கதாநாயகியாக நடிக்கவைக்க விரும்புகிறேன்... உங்களுக்குச் சம்மதமா?” அந்தச் சமயத்தில் உச்சத்தில் இருந்த ஓர் இயக்குநர் கேட்கிறார். மறுக்க விருப்பமில்லைதான்... இருந்தாலும் ஒரு  சிறு குழப்பம்.  தனக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லோரிடமும் கேட்கிறார். இறுதியாகத் தன் அப்பாவிடமும்.
 “அம்முவை நடிக்கவைக்க வாய்ப்புத் தொடர்ந்து வருகிறது... நான் என்ன செய்யட்டும்...?” என்று கம்மியக் குரலில் கேட்கிறார் சந்தியா. அவருக்குத் தெரியும்தானே, தான் நடிப்பதே அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பது!

சந்தியாவை நடிக்க கேட்டபோது தயாரிப்பாளர் கெம்ப்ராஜுவுக்கு ரெங்கசாமி, என்ன பதிலைச் சொன்னாரோ... அதையேதான் இன்னும் உரிமையாக... இன்னும் கோபமாகச் சொல்கிறார். “அம்மு நன்றாகப் படிக்கிறாள். நீயும் உன் தங்கையும் (வித்யாவதி) சினிமாவில் நடிப்பது போதாதா? அம்முவையும் ஏன் சினிமாத் துறைக்கு இழுக்கிறாய்?” என்கிறார் காட்டமாக.

ஆனால், சந்தியா முன் முடிவுடன்தான் இந்தக் கேள்வியையே கேட்டார். ஆம், அவர் முன்பே முடிவு செய்துவிட்டார், அம்முவைத் தொடர்ந்து நடிக்கவைப்பது என்று.சந்தியா முடிவு செய்தால் மட்டும் போதுமா...? அம்முவின் முடிவுதானே முக்கியம்...! ரெங்கசாமியின் வார்த்தைகளை வேண்டுமானால் புறந்தள்ளலாம். ஆனால், அம்மு முடியாது என்று சொல்லிவிட்டால்... என்ன செய்வது? குழப்பத்துடனே அம்முவிடம் தேன் தடவிய வார்த்தைகளில் கேட்கிறார் சந்தியா, “அம்மு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வருகிறது... எனக்கு நன்கு புரிகிறது உனக்குப் படிப்பின் மீதுதான் விருப்பம் என்று... ஆனால், தொடர்ந்து வரும் வாய்ப்பை நாம் அவமதிப்பது துரதிர்ஷ்டத்தை நாமே அழைப்பதுபோல்... என்ன சொல்கிறாய்?”

அம்மு, அந்தச் சமயத்தில் அழுது அடம்பிடித்துத்தான் விட்டார். ஆம், எப்போதும் அம்மாவை எதிர்த்துப் பேசாத அம்மு, முதன்முறையாக கோபமாக எதிர்த்துப் பேசுகிறார்.  ’‘முடியாது... என்னால் முடியவே முடியாது...’’ என்று வீட்டில் ஒரு சூறாவளியையே உண்டாக்கிவிட்டார். அப்போது அவர் அந்த அளவுக்குப் பிடிவாதமாக இருந்ததற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஆம், அந்தச் சமயத்தில்தான் மெட்ரிக் பள்ளி ரிசல்ட்டும் வந்து இருந்தது. பரீட்சையில் நிறைய மார்க்குகள் வாங்கியிருந்த அம்முவுக்கு மேற்படிப்புக்குச் சிறப்பு ஸ்காலர்ஷிப்பும் கிடைத்து இருந்தது. அம்மு இந்த வாய்ப்பைவிடத் தயாராக இல்லை. சந்தியாவும் விட்டுத் தர தயாராக இல்லை.
அம்மு ஒரு முடிவுக்கு வருகிறார். ‘ஏன் இரண்டு குதிரைகளிலும் ஒரே நேரத்தில் பயணம் செய்யக் கூடாது... செய்துதான் பார்ப்போமே...?’.
மேற்படிப்பைத் தொடர்ந்துகொண்டே, சினிமாவில் நடிக்க முடிவு செய்கிறார். அதற்கு, சந்தியாவும் சம்மதிக்கிறார்.
இப்படியாகத்தான் மேற்படிப்பைக் கைகழுவினார்!

அந்தச் சமயத்தில் ஒரு வழக்கம் இருந்திருக்கிறது. சர்ச் பார்க் பள்ளியில் படித்த பெரும்பாலான மாணவிகளும்  ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலேயே சேர்வார்களாம். ஜெயலலிதாவும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலேயே சேர விரும்பியிருக்கிறார். விரும்பினால் மட்டும் போதுமா...? என்னதான் பெரிய அந்தஸ்த்தில் இருந்தாலும், கல்லூரியில் சேர்வதென்றால் அடிப்படையான சில விஷயங்களைச் செய்ய வேண்டும் அல்லவா...? விண்ணப்பம் வாங்க வேண்டும், விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும், குறிபிட்ட நாளில் விண்ணப்பத்தை கல்லூரித் தேர்வுக் குழுவிடம் அளிக்க வேண்டும்... இந்தக் காலத்து மந்திரிகளின் பினாமிகள் நடத்தும் கல்லூரிகளில் வேண்டுமானால், இதுவெல்லாம் தேவையில்லாமல், பணமே மட்டுமே பிரதானமானதாக இருக்கலாம். ஆனால், அப்போது அப்படி இல்லை.  கடுமையான கட்டுப்பாடுகள் இருந்திருக்கின்றன. அம்முவோ தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து இருக்கிறார். அவரால்  கல்லூரிக்குச் சென்று விண்ணப்பத்தை வாங்கி, பிடித்த பாடத்தை அதில் தேர்வு செய்வது என்பது  இயலாத காரணமாக இருந்திருக்கிறது.  அந்தச் சமயத்தில் அவருக்கு உதவியர், அவரின் பள்ளித் தோழி ஸ்ரீமதி.

அம்மு அவரிடம், “எனக்காக விண்ணப்பம் வாங்கி, நீ என்ன பாடத்தைத் தேர்வு செய்கிறாயோ அதே பாடத்தை எனக்கும் தேர்வு செய்து விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து கல்லூரியில் கொடுத்துவிட முடியுமா...?” என்று கேட்க, ஸ்ரீமதியும் சம்மதித்திருக்கிறார்.கல்லூரியில் இடம் கிடைக்கிறது. ஆமாம், முதல் மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு எந்தக் கல்லூரிதான் இடம் தர மறுக்கும்...?


கல்லூரி திறக்கிறது. ஒரு நாள் சுசிலா மேரி என்ற பேராசிரியை பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்பிலிருந்து நேராகக் கல்லூரிக்கு வந்த அம்முவின் கைகளில் எந்தப் புத்தகமும் இல்லை. அந்தப் பேராசிரியைக்கு அம்மு குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. கண்டிப்பான பேராசிரியையான அவர்,
அம்முவின் கைகளில் எந்தப் புத்தகமும் இல்லாததைப் பார்த்துக் கடும் கோபம் அடைந்து,  சில கேள்விகளைக் கேட்டு இருக்கிறார். அம்மு அமைதியாக நிற்க, அந்தப் பேராசிரியை கோபமாக, “பொம்மை மாதிரி ஆடை உடுத்துவதற்கா கல்லூரிக்கு வருகிறாய்...?” என்று எரிந்து விழுந்து இருக்கிறார்.  அம்முவுக்கு சங்கடமாகிவிட்டது. அமைதியாக வகுப்பில் அமருகிறார். நல்லவேளையாக, சிறிது நேரத்தில் மதிய உணவு இடைவேளை வருகிறது. அப்போது வீட்டுக்குச் சென்றவர், பின் எப்போதும் கல்லூரி திரும்பவேயில்லை...!

ஸ்ரீமதி அம்முவை சந்தித்து, “ என்ன ஆனது... ஏன் கல்லூரிக்கு அதன்பின் வரவில்லை” என்று கேட்டதற்கு, “என்னால் அதுபோன்ற ஓர் இறுக்கமான இடத்தைச் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறேன்” என்று அம்மு கூற. ’’சரி... வேறு ஏதாவது கல்லூரியில் சேர்’’ என்று ஆலோசனை வழங்கிய ஸ்ரீமதியிடம்,  “இல்லை... எந்த வேலையையும் என்னால் அரை மனதுடன் செய்ய முடியாது.  இனி நடிப்புத்தான் என்று முடிவு செய்துவிட்டேன்”
என்று கூறியுள்ளார். அவர் ஜெயலலிதாவாகப் புகழ்பெற்ற பின், அவர் அளித்த ஒரு பேட்டியிலும் இதை நினைவுகூர்ந்து, “சிறு விஷயத்துக்கும் முழுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன்... அது என் வீட்டு நாய்க்குட்டியைக் குளிப்பாட்டுவதாக இருந்தாலும்கூட... அங்கு பாதி, இங்கு பாதி என்று என்னால் பயணிக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.  இப்படியாகத்தான் மேற்படிப்பு குறித்த அவரது கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.  ரூமியிடம் தொடங்கினேன்... அவரிடமே இந்த அத்தியாயத்தை முடிக்கிறேன்... “உங்கள் ஆன்மா சொல்வதன்படி நீங்கள் எவ்வளவு விரைவாகச் செயல்படுகிறீர்கள் என்பதில்தான் வாழ்வின் மொத்த விஷயமும் இருக்கிறது” என்பார் ரூமி.
ஆனால், கெடுவாய்ப்பாக... அம்மு சந்தியாவின் ஆன்மா  சொல்வதன்படி செயல்பட்டுக்கொண்டிருந்தார்.  

(தொடரும்)

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு 
விட்டுக்கொண்டிருந்தவர்...  அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...?

இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

செய்ந்நன்றி கொல்லாத அம்மு...!

அம்மு, பள்ளி நாட்களில் வெகுநேரம் தன்னை அழைக்கவரும் வண்டிக்காகக் காத்திருந்திருக்கிறார். ஆம், அது எப்போதும் தாமதமாகத்தான் வந்து இருக்கிறது. அம்முவுக்கு மெட்ரிக் தேர்வுகள் தொடங்கிவிட்டன. சர்ச் பார்க் பள்ளியில், தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு, லேடி வெல்லிங்டன் பள்ளிக்குத் தேர்வு எழுத போகவேண்டும். ஹால் டிக்கெட் வாங்கியாகிவிட்டது. ஆனால், அவரை அழைத்துச்செல்ல வாகனம் வரவில்லை. அனைத்து மாணவிகளும் சென்றுவிட்டார்கள். அம்முவும், அவர் தோழி ஸ்ரீமதியும் மட்டும் பள்ளியில் காத்திருக்கிறார்கள். வாகனம் வரவில்லை. பிடித்தமானவர்களுடன் இருக்கும்போது, கடிகார முட்களுக்கு றெக்கை முளைத்துவிடும் அல்லவா...? அதுபோல றெக்கை முளைத்துக் காலம் பறக்கிறது... அந்தச் சமயத்தில் ஸ்ரீமதியை அழைத்துச் செல்ல... அவரின் தந்தை வருகிறார். ஸ்ரீமதியின் தந்தையும் பிரபலமான புகைப்படக்காரர். அவருக்கு சந்தியாவை நன்றாகத் தெரியும். அம்முவுக்கும் அவரை நன்றாகத் தெரியும். அவர், “அம்மு உன் வாகனம் வருவதுபோல் தெரியவில்லை... எங்களுடன் வா, உன்னைப் பள்ளியில் விட்டுவிடுகிறேன்...” என்கிறார். அம்முவுக்குத் தயக்கம். அவர் எவரிடமிருந்தும் எந்த உதவியையும் எதிர்பார்த்ததும் இல்லை... பெற்றதும் இல்லை. தயங்கி நிற்கிறார். ஸ்ரீமதியும், “இப்படியே நின்றுகொண்டிருந்தால், தேர்வைக் கோட்டைவிட்டுவிடுவாய். வா... அப்பாவுடன் செல்லலாம்” என்று வற்புறுத்துகிறார்.

அம்மு உணர்கிறார். இந்தத் தேர்வுக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். அதைவிட்டால் எல்லாம் வீணாகிவிடுமே...! வேறு வழியில்லை... வாகனம் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. “அம்மாவின் வேலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவருக்கு என் படிப்பு குறித்தும், என் தேர்வு குறித்தும் எந்தக் கவலையும் இல்லையா...?” என்று கண்ணீர் சிந்தியபடி, ஸ்ரீமதியின் அப்பாவுடன் தேர்வெழுதச் செல்கிறார்.

கவலையுடன்தான் அந்தத் தேர்வை எழுதினார். நடுவே கண்ணீரும் சிந்தத்தான் செய்தார். ஆனால், இது எதுவும் அவர் வெற்றிக்குத் தடையாக இல்லை. ஆம், இந்தத் தேர்வில்தான் அதிக அளவில் மதிப்பெண் பெற்று, மாநில அளவில் சாதனை படைத்தார்.

அவர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதோ அல்லது அதற்காக விருது வாங்கியதோ மட்டும் செய்தி இல்லை. அதற்குப் பின்னால் இன்னொரு செய்தி இருக்கிறது. அதை ஸ்ரீமதியே சொல்கிறார், “அன்று நாங்கள் செய்தது சிறு உதவிதான். ஆனால், என்னைப் பார்க்கும்போதெல்லாம், ‘உன் அப்பா மட்டும் என்னை அழைத்துச் செல்லவில்லை என்றால், என்னால் தேர்வெழுதி இருக்கவே முடியாது’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். சிறு உதவியையும் மறவாதவர் அம்மு.”

ஆம். சிறு வயதில் அம்முவிடம் இருந்த இந்தப் பழக்கம்தான், சினிமாவில், அரசியலில் ஜெயலலிதாவாக பல உச்சங்களைத் தொட்டபின்னும் தொடர்ந்து இருக்கிறது. அதில் ஒன்றுதான் சசிகலாவுடனான இறுக்கமான நட்பு.

அனைவரும் கைவிட்ட ஒரு கடினமான காலத்தில் சசிகலா உடன் இருந்தார். அந்த நன்றியை என்றும் ஜெயலலிதா மறக்கவில்லை. அதுதான் சசிகலாவை இந்த அளவுக்கு அவரிடம் நெருக்கம் ஆக்கி இருக்கிறது.

ஜெயலலிதாவே சசிகலா குறித்து ஒரு பேட்டியில் இவ்வாறாகச் சொல்கிறார், “என் மீதான அவருடைய விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாகச் சித்தரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர். எனக்காக அவர் மிகச் சிரமப்பட்டிருக்கிறார்.”

‘‘ஆம்.. நான் தமிழச்சிதான்...!’’

ஜெயலலிதா, நன்றி மறக்காதவர் மட்டும் அல்ல. அசாத்திய தைரியம் கொண்டவரும்தான். சினிமாவில்  பரப்பரப்பாக நடிக்கத் தொடங்கிவிட்டார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக கர்வார் பகுதியில் ஒரு சிறு தீவில் நடக்கிறது. அந்தப் பகுதியில் வசதியான அறைகள் எதுவும் இல்லாததால், படப்பிடிப்புக் குழு முழுவதும் மூன்று மணி நேரம் தொலைவில் உள்ள கோவாவில் தங்கி இருக்கிறது. ஏதேச்சையாகப் படப்பிடிப்புக் குழு அம்முவை மறந்து கோவாவில் தனியாகவிட்டுச் சென்றுவிடுகிறது. 17 வயது பெண். அப்போது சிகரம் தொட்ட நடிகையும் இல்லை. அதுவும் கோவாவில் அவரை யாருக்கும் தெரியவும் தெரியாது. ஆனால், அவர் கொஞ்சமும் அஞ்சவில்லை. தைரியமாகச் சூழ்நிலையைக் கையாள்கிறார். தனியாக கர்நாடகா சென்று, அங்கு ஒரு கட்டுமரக்காரர் துணையுடன் படப்பிடிப்பு நடந்த அந்தச் சிறு தீவு பகுதியை அடைகிறார். ஆம், அப்போதிலிருந்து, இப்போது வரை இந்தத் தைரியம்தான் ஜெயலலிதா.

இன்னோர் உதாரணமும் இருக்கிறது. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், வார இதழ் ஒன்றுக்கு, “என் பூர்வீகம் தமிழகம். நான் தமிழச்சி...” என்ற தொனியில் ஒரு பேட்டி தருகிறார். அந்தச் சமயத்தில், கர்நாடகாவில் பலரும், அவரைக் கன்னடப் பெண் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால், இவர் அளித்த இந்த பேட்டி அவர்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. கன்னடவெறியர்களுக்கு இது அசெளகர்யத்தைக் கொடுத்தது.  அதே நேரத்தில், ஒரு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கர்நாடகாவில் சாமுண்டி ஸ்டூடியோ செல்கிறார். இந்தத் தகவல் அறிந்து 100-க்கும் மேற்பட்ட கன்னடவெறியர்கள், அந்த ஸ்டூடியோவை முற்றுகையிடுகிறார்கள். ‘‘ஜெயலலிதா மன்னிப்புக் கேட்டால்தான், இந்த இடத்திலிருந்துச் செல்வோம்’’ என்கிறார்கள். படப்பிடிப்புக் குழு எவ்வளவோ பேசிப் பார்க்கிறது. அவர்கள் கலைவதாக இல்லை. ஜெயலலிதாவிடம் இந்த விஷயத்தைச் சொல்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா கொஞ்சமும் அஞ்சாமல், அந்தக் கூட்டத்தைப் பார்த்து, “நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும். நான் என்ன தவறாகச் சொல்லிவிட்டேன். நான் தமிழச்சிதான்..!” என்கிறார்.
ஆம். இந்த அசாத்திய தைரியம்தான் ஜெயலலிதா...! அனைவராலும் கைவிடப்பட்டு, எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வல வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டபோதும், அரசியல் வாழ்க்கையில் தனித்துவிடப்பட்டபோதும், இந்தத் தைரியம்தான் தனியனாக அனைத்திலிருந்தும் மீண்டு, மீட்டு, கட்சியை, ஆட்சியைப் பிடிக்க அவருக்கு உதவி இருக்கிறது.
(தொடரும்)
‘‘இனி, வாரம் ஒருமுறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன்’’ என்று 2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா சொன்னார். ஆனால், அவர் வார்த்தைகள் காற்றில் கரைந்துதான் போயின. ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிகபட்சமாக அவர், ஐந்து முறை பத்திரிகையாளர்களைச் சந்தித்து இருப்பார்... அவ்வளவுதான்.  வரலாற்றைக் கொஞ்சம் ஊடுருவிப் பார்த்தோமானால், அவர் தொடக்கக் காலத்தில் இவ்வாறாக இல்லை. ஆம்...  ஊடகவியலாளர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டி இருக்கிறார். அப்போது, பல அதிகார மையங்களைத் தாண்டியெல்லாம் இல்லை... வெகு சுலபமாக அவரைச் சந்திக்க முடிந்து இருக்கிறது. அவரும் மனம்விட்டுத் தன் சொந்தப் பிரச்னைகளைக்கூடப் பகிர்ந்து இருக்கிறார். ஏன்? ஒரு வார இதழ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புடவைகள்கூட விற்று இருக்கிறார்!

ஜெயலலிதாவுக்குப் புடவை விற்கத் தெரியுமா...?

கோவையில் நடைபெற்ற கைத்தறிக் கண்காட்சி நிகழ்வில் மா.பொ.சிவஞானம், “சினிமா நட்சத்திரங்கள் தேச நலன் கருதி கைத்தறிப் புடவைகளைத்தான் உடுத்தவேண்டும். தான் உடுத்துவது மட்டுமல்லாமல் தன் ரசிகர்களுக்கும் இதையே பரிந்துரைக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார். இதை முன்வைத்து அப்போது ஒரு வார இதழ், கட்டுரை எழுத முடிவு செய்தது. அதாவது, ஒரு பிரபலத்தைப் புடவை விற்கவைத்து, அந்த அனுபவங்களைக்  கட்டுரையாக எழுதுவது. இதற்காக அவர்கள் தேர்வுசெய்த பிரபலம் ஜெயலலிதா...!

இதை ஜெயலலிதாவிடம், அந்த பத்திரிகையின் நிருபர் திரைஞானி சொன்னவுடன், ஜெ. கேட்ட கேள்வி, “சரி நான் வருகிறேன்... ஆனால், எனக்கொரு சந்தேகம். என்னை ஏன் இதற்காகத் தேர்வுசெய்தீர்கள்...?” என்பதுதான்.

இதுதான் காரணமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், திரைஞானி ஒரு பதிலைச் சொல்லி சமாளித்து இருக்கிறார். அந்தப் பதில் இதுதான், “ ‘கைத்தறிப் புடவைகளைத்தான் உடுத்த வேண்டும்’ என்று சொன்னவர் பெயர் சிவஞானம். நீங்கள் குடியிருக்கும் தெருப்பெயர் சிவஞானம் தெரு. அதனால்தான்...!”

ஜெ. சிரித்தப்படி... “சரி... தெருத்தெருவாகத்தான் விற்க வேண்டுமா...” என்று தயக்கத்துடன் கேட்க, அதற்கு திரைஞானி, “தெருத்தெருவாகக் கூவி விற்க வேண்டும் என்பதில்லை. தெரிந்தவர்கள் யாருக்காவது விற்றால் போதும்” என்றிருக்கிறார்.

ஜெயலலிதா கைத்தறிப் புடவை உடுத்திக்கொள்ள... ஒரு மூட்டை கைத்தறித் துணிகளுடன், அவர்கள் புடவை விற்கச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற இடம் அந்தச் சமயத்தில் ஜெ-வுக்கு நெருக்கமாக இருந்த எழுத்தாளர் சிவசங்கரி வீடு.

ஏதோ ஒரு கட்டுரைக்காகத்தானே செல்கிறோம் என்றில்லாமல்... புடவைகள் குறித்து முழுவதுமாகத் தெரிந்துகொண்டு, “இது கோயம்புத்தூர் காட்டன்; இது காஞ்சிபுரம்; இது கந்துவால்; இது வெங்கடகிரி...’’ என்று ஒவ்வொரு புடவையின் சிறப்புக் குறித்தும் விளக்கி இருக்கிறார். இதுகுறித்து திரைஞானி, “ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதைப்பற்றி முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு இண்டலெக்ஸுவலாக நடந்துகொள்வார்...” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுபோல இன்னொரு சம்பவமும் இருக்கிறது. பாலா என்ற பத்திரிகையாளர் ஒரு திரைப்படப் படப்பிடிப்பு நடக்கும்போது, ஜெயலலிதாவை பேட்டிகாணச் சென்றிருக்கிறார். இவர் கேட்ட கேள்விகளுக்கு... ஜெ., சுவாரஸ்யமாக பதில் சொல்லிக்கொண்டிருக்க... அப்போது அந்தப் படத்தின் கதாநாயகன் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார். பாலா தயக்கத்துடன் அங்கிருந்து எழ... அதற்கு ஜெயலலிதா, “ஏன் எழுகிறீர்கள்... இப்போது நீங்கள் என் கெஸ்ட்... யாருக்காகவும் எழுந்திருக்கத் தேவையில்லை” என்றிருக்கிறார். இதைப் பின்னாளில் பாலா, தான் எழுதிய ஒரு கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார்.இதையெல்லாம் படிக்கப்படிக்க உண்மையில் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்ட ஜெயலலிதாவா இது...? 2001-ம் ஆண்டு பத்திரிகையாளர்களை ஓடஓட விரட்டித் தாக்கிய ஜெயலலிதாவா இது...?

ஹூம்... பெருமூச்சு விட்டுக்கொள்ள வேண்டியதுதான். காலமும், அது தந்த பதவியும்... பதவி தந்த அதிகாரமும் ஒரு மனிதனை இவ்வளவு இறுக்கமாகவா ஆக்கும்...? ஆம்... இவரை ஆக்கி இருக்கிறது! இப்போது புடவை எல்லாம் விற்க வேண்டாம்தான். அது ஒரு முதல்வரின் வேலையும் இல்லைதான். ஆனால், தமிழகத்தின் தலையாயப் பிரச்னைகளின் போதாவது, ஊடகவியலாளர்களைச் சந்தித்து இருக்கலாம்.
சந்தியாவுடனான சண்டை!

சரி வாருங்கள்... விட்டஇடத்துக்கே செல்வோம்....! ஆறாவது அத்தியாத்தில், இனி நடிப்புத்தான் தன் எதிர்காலம் என்று அம்மு முடிவு செய்துவிட்டார் என்று பார்த்தோம்தானே? என்னதான் நடிப்பு என்று முடிவு செய்துவிட்டாலும், படிப்பின் மீதான காதல் அவரது ஒவ்வோர் அணுவிலும் இருக்கத்தான் செய்திருக்கிறது. அதை அவரால் கைவிட முடியவில்லை. அந்தச் சமயத்தில், அவருக்கு வடிகாலாக இருந்தது, ஆங்கில இலக்கியங்கள்தான். ஆம், படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதாவை மேக்கப் இல்லாமல்கூட பார்க்க முடியும். ஆனால், அவரது கரங்களில் புத்தகம் இல்லாமல் பார்க்க முடியாது.

பள்ளியும், அவர் படித்த ஆங்கில இலக்கியங்களும் அந்தச் சமயத்தில் அவருக்கு இன்னொன்றையும் கற்றுத் தந்து இருந்தது. அது, தேவையற்ற போலி மரியாதைகளைத் துறப்பது...! ஆனால், வெற்று மரியாதைகளால் கட்டமைக்கப்பட்டத் திரைத்தொழிலுக்கு இது உதவாதுதானே...? ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பு. ஜெயலலிதா தன்னுடைய பகுதி படப்பிடிப்பு முடிந்ததும், தளத்தில் அமைதியாக நாற்காலியில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து புத்தகம் படித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர் வந்ததைக்கூட அவர் கவனிக்காமல், மொத்த கவனத்தையும் புத்தகத்தில் குவித்து இருக்கிறார். இதைப் பார்த்தவுடன் தளத்தில் இருந்த மூத்த கலைஞர்களுக்குச் சங்கடமாக ஆகிவிட்டது. அவர்கள் சந்தியாவை அழைத்து, “சந்தியா... அம்முவுக்குப் படப்பிடிப்புத் தளத்தில் சீனியர்கள் முன்பு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடு...” என்று கடிந்துகொண்டிருக்கிறார்கள்.

சந்தியா, அம்முவிடம் இதைச் சொன்னவுடன்... அம்மு கொதித்து எழுந்துவிட்டார். “ஏன் இந்த வெற்று மரியாதைகள் எல்லாம்...? என்னால் இதுபோன்ற வெற்றுச் சட்டங்களுக்குக் கீழ்படிய முடியாது. அதற்குக் கீழ்படிய வேண்டுமென்றால், என்னால் இனி படப்பிடிப்புக்குச் செல்ல முடியாது” என்று கடிந்திருக்கிறார். சந்தியா நிகழ்த்திய ஒரு நீண்ட போராட்டத்துக்குப் பின்பே அம்மு இதற்குச் சம்மதித்து இருக்கிறார்...! 

இதைப் படிக்கும்போது, ஜெயலலிதா வாகனத்தின் முன்பு சாஷ்டாங்கமாகப் படுத்துவணங்கும் அமைச்சர்கள்  உங்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல...!

No comments:

Post a Comment