JEYALALITHA , AFTER ENTERING IN CINEMA
.ஒரு பேட்டியில் ஜெயலலிதா இவ்வாறாகச் சொன்னார், “நான் இதுவரை நிபந்தனையற்ற அன்பை உணர்ந்ததே இல்லை. கதைகளில், இலக்கியங்களில், திரைப்படங்களில் வேண்டுமானால் அத்தகைய நிபந்தனையற்ற அன்பு இருக்கலாம். ஆனால், அத்தகைய அன்பு நிஜவாழ்க்கையில் இருப்பதாக நான் கருதவேயில்லை” என்று. அத்தகைய பேரன்பைத்தான் புத்தகங்களின்... வார்த்தைகளின் இடுக்குகளில் தேடினாரோ, என்னவோ...? ஆம்... எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் அவர் திரைத் துறையின் தொடக்கக் காலத்திலிருந்து இருந்திருக்கிறார். புத்தகம் அவர் தேடிய, ஏங்கிய பேரன்பை வழங்கியதா என்றெல்லாம் தெரியவில்லை... ஆனால், அவருக்குக் கட்டற்ற உலக ஞானத்தை வழங்கியது. ‘‘அவரிடம், அயர்லாந்து தேர்தல் பற்றியும் உரையாடலாம்... மாசேதுங் பற்றியும் பேசலாம்’’ என்கிறார், 1970-களில் ஜெயலலிதாவை அதிகம் பேட்டி கண்ட திரைஞானி. அவரே, அந்தச் சமயத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.
‘‘நான் அரசியலுக்கு வந்திருப்பேன்!’’
அந்தச் சம்பவம் இதுதான். “அயர்லாந்தில் நடந்த தேர்தலில் ஒரு பெண் வெற்றி பெற்றார். அயர்லாந்து குறித்தெல்லாம், நமக்குத் தெரியாதுதானே...? ஆனால், ஜெயலலிதா தேர்தல் நடக்கும் சில தினங்களுக்கு முன்பே.... ‘அந்தப் பெண்தான் வெற்றி பெறுவார்’ என்று சரியாகக் கணித்துச் சொன்னார். உண்மையில், நான் வியந்துதான் போனேன்..!” என்கிறார் திரைஞானி. அந்தச் சமயத்தில் திரைஞானி இன்னொன்றையும் எழுதி இருந்தார், “நான் நினைக்கிறேன். ஜெயலலிதா, சினிமாவுக்கு வரவில்லையென்றால் அரசியலுக்குத்தான் வந்திருப்பார்” என்று. ஆம், அதுதான் நிகழ்ந்தது. ஜெயலலிதா, சினிமாவுக்கு வந்தது வேண்டுமானால் ஏதேச்சையானதாக இருக்கலாம்... விதியின் பாதை என்று சொல்லலாம். ஆனால், அவருடைய அரசியல் பிரவேசம் அவ்வாறானது இல்லை. அவருக்கு எப்போதுமே ஆழ்மனதில் அரசியல் குறித்து அலாதி விருப்பம் இருந்திருக்கிறது. அதை, ஜெயலலிதாவே பின்பு ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.
இதோ ஜெயலலிதா சொல்கிறார்,
“அரசியலில் தீவிரமாக இறங்கி, பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஒருவேளை, நான் சினிமாவுக்கு வராமலிருந்திருந்தால்... இன்று தேர்தலுக்காக அல்லது உபதேர்தலுக்காக எங்காவது மேடையில் பேசி வெளுத்து வாங்கிக்கொண்டிருப்பேன். இப்படிச் சினிமாவுக்கு வந்து நடிப்போம் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எல்லாம் தலைவிதிதான். ஆனால், கொஞ்சம் அதிர்ஷ்டமான தலைவிதி’’ என்று.
அவர் செல்லமாகக் கடிந்துகொண்ட இந்த அதிர்ஷ்டமான தலைவிதிதான், அவரின் அரசியல் பிரவேசத்தைச் சுலபமாக்கப்போகிறது என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
‘‘நான் எம்.ஜி.ஆர் ஆகப்போகிறேன்...!’’
அம்முவாக ஜெயலலிதா பள்ளிக்கூடத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோதே அவருக்கு விருப்பமான நடிகராக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார். அவருடைய படத்தைப் பார்த்துவிட்டு வந்து, அதுபோல வீட்டில் நடித்துப் பார்த்து இருக்கிறார். ஜெயலலிதாவே சொல்கிறார், “நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம். எம்.ஜி.ஆர் நடித்த அனைத்துப் படங்களையும் நானும், என் சகோதரரும் பார்த்துவிடுவோம். அந்தப் படங்களில் வரும் சண்டைக்காட்சிகள்போல, வீட்டில் ஆளுக்கொரு கம்பை எடுத்துக்கொண்டு சண்டைபோடுவோம். ‘நான்தான் எம்.ஜி.ஆர்... நீதான் வீரப்பா’ என்று நான் சகோதரனிடம் சொல்வேன். ஆனால், அவன் ஒப்புக்கொள்ள மாட்டான். ‘நான்தான் எம்.ஜி.ஆர்... நீதான் வீரப்பா’ என்பான். இதனால், எங்களுக்குள் பலத்த சண்டை வந்துவிடும். அம்மா வந்து சண்டையை விலக்குவார். சண்டையின் காரணத்தை அம்மாவிடம் சொல்வோம். உடனே அம்மா, ஒரு காசை எடுத்துச் சுண்டி மேலேபோட்டு, ‘பூவா... தலையா’ என்று எங்களைக் கேட்டு, எங்களில் ‘யார் எம்.ஜி.ஆர்... யார் வீரப்பா’ என்பதைப் பற்றி முடிவுசெய்வார். பிறகும், நான் விட்டுத் தரமாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹூம்... ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் இடத்தைப் பிடிப்பதற்கு ஆர்.எம்.வீரப்பன், நெடுஞ்செழியனை மட்டும் ஓரங்கட்டவில்லை, இளம் வயதில் தன் சகோதரனையும்தான் ஓரங்கட்டி இருக்கிறார்...!
ஜெ-வுக்காகப் படப்பிடிப்பை ரத்துசெய்த எம்.ஜி.ஆர்...!
கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம் அல்லவா? நீண்ட போராட்டத்துக்குப் பின், ஜெயலலிதா படப்பிடிப்புத் தளத்தில், சந்தியா சொல்வதுபோல் நடக்கத் தொடங்கிவிட்டார். மூத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் வந்தால் எழுந்து வணக்கம் சொல்வது என அதன் அனைத்து விதிகளையும் பழகிவிட்டார். இவற்றை எல்லாம் அவர் பிடித்துச் செய்தாரா என்றெல்லாம் தெரியாது... ஆனால், இதனால் அவருக்கு கைமேல் பலன் கிடைத்தது. ஆம், அனைவரின் விருப்பமான நடிகையாக ஆகிவிட்டார். அவருக்கு படங்கள் வந்து குவியத் தொடங்கின. குறிப்பாக, எம்.ஜி.ஆர் படங்கள். அந்தச் சமயத்தில், அவர் நடித்த அனைத்துப் படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி.
‘அடிமைப்பெண்’ படப்பிடிப்பு அப்போது தார் பாலைவனத்தில் நடந்துகொண்டிருந்தது. சினிமாவுக்கென சில விதிகள் இருக்கின்றன அல்லவா.... மைனஸ் டிகிரி குளிரில் கதாநாயகர்கள் ஆடை மேல் ஆடை போட்டு நடித்துக்கொண்டிருக்கும்போது, கதாநாயகிகள் மட்டும் மெலிதான உடை அணிந்து சிரமப்பட்டு நடித்துக்கொண்டிருப்பார்கள். அந்தச் சமயத்திலும் அதுதான் நிகழ்ந்தது. ஆம், தார் பாலைவனம் மிகக் கடுமையான வெப்பம். அனைவரின் கால்களிலும் தடிமனான செருப்புகள் அணிந்திருந்தபோது... அந்தக் காட்சியின் தேவை கருதி ஜெயலலிதாவுக்கு மட்டும் செருப்புத் தரவில்லை..
முதலில் ஜெயலலிதா எவ்வளவோ சமாளித்துப் பார்த்தார்... ஆனால், நேரம் ஆக ஆக வெப்பம் கூடிக்கொண்டே போனது. அவரால் ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க முடியவில்லை. இதை யாரிடம் சொல்ல வேண்டும் என்றும் தெரியவில்லை...? ஆனால், இதை எம்.ஜி.ஆர் பார்த்துவிட்டார். எங்கே ஜெயலலிதாவின் செருப்பு என்று கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டிருக்கிறார். அது வாகனத்தில் இருக்கிறது என்று தெரிந்ததும், அதை எடுக்க ஒரு நபரை அனுப்பி இருக்கிறார். வாகனம் வெகுதொலைவில் இருந்ததால், சென்றவர் வரத் தாமதமாகி இருக்கிறது. கோபமடைந்த எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை ரத்துசெய்துவிட்டு, ஜெயலலிதாவை வாகனம்வரை தூக்கிச் சென்றிருக்கிறார்.
இதைப் பின்னர் ஒரு நிகழ்வில் நினைவுகூர்ந்த ஜெயலலிதா... “எம்.ஜி.ஆர் திரையில் மட்டும் அல்ல, நிஜத்திலும் நாயகன்தான்...!” என்றார்.
அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா உணவகம் என நீளும் பட்டியலில்... அந்த கதாநாயகன் பெயரை ஏதாவது ஒன்றுக்காவது வைத்து இருந்திருக்கலாம்...!
“அன்பும், தனிமையும் ஒருவரை வதைக்கும்போது... ஆன்மாவின் வெற்றிடத்தை அகங்காரம் நிரப்பும்.” - இது கேரளாவில் நான் சந்தித்த பழங்குடி சொல்லியது.“நான் வாழ்க்கையில் என்றுமே நிபந்தனையற்ற அன்பை உணர்ந்ததே இல்லை” - இது ஜெயலலிதா சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியது. இந்த இரண்டு வரிகளையும் பொருத்திப் பாருங்கள்... ஏன் ஜெயலலிதா,“ என் தலைமையிலான, என்னால், நான்...” என்ற வாசகங்களை தன் பேச்சில் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார் என்று புரியும். இந்த அகங்காரம், அவர் அரசியலுக்கு வந்த பிறகு, அதிகாரத்தின் சுவையைக் கண்ட பிறகு உண்டானது இல்லை. அவர் நடிகையாக இருந்தபோதும் இவ்வாறாகதான் இருந்திருக்கிறார்.
எழுபதுகளில் ஒரு வார இதழ், திரைப்பட பிரபலங்களை தாழ்வாக பறக்கும் சிறு ரக விமானத்தில் அழைத்துச் சென்று, அவர்களின் அனுபவங்களைத் தொடராக எழுதத் திட்டமிட்டது. அவர்கள் முதலில் ஜெயலலிதாவை அணுகி இருக்கிறார்கள். ஜெயலலிதாவும் சந்தோஷமாக சம்மதித்து இருக்கிறார். ஆனால், கடைசி நேரத்தில் அவரால் வர இயலாமல் போய் விட்டது. அதனால் நடிகர் சுருளியையும், மனோரமாவையும் அழைத்துச் சென்று, முதல் வாரத் தொடரை எழுதி இருக்கிறார்கள். இரண்டாம் வாரம்தான் ஜெயலலிதா சென்றிருக்கிறார். ஆனால், அவருக்கு முதல்வாரத்தில் இன்னொருவரை அழைத்து சென்றது தெரியாது. பின்னர், இதழ் வந்தவுடன் கோபமாக , அந்த பத்திரிக்கையாளரிடம் “முதல் பயணம் என்னுடையதாகதான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், முதல் பகுதியில் வேறொருவரை வைத்து எழுதி இருக்கிறீர்களே... இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை..?” என்று கோபமாக கூறியிருக்கிறார்.
இதை மேலோட்டமாக பார்த்தால், இது சாதாரணமானது தானே...? எப்போதும் பிரபலங்களிடம் இருக்கும் ஈகோதானே என்று தோன்றும். ஆனால், ஜெயலலிதா எந்த ஒரு சிறு விஷயத்திலும் ஈகோவுடன் இருந்ததற்கு, அன்புக்காக ஏங்கிய அவரின் தனிமையும் கூட காரணமாக இருந்திருக்கலாம்...!
நிலைக்குலைந்த ஜெ...!
இப்போது அசாத்திய முடிவுகளை எடுக்கும் ஜெயலலிதா... திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கியபோது, ஒரு புடவையைத் தேர்ந்தெடுக்கக் கூட அவ்வளவு திணறியிருக்கிறார். இதை அவரே சொல்லியிருக்கிறார். “எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்குப் புறப்பட எண்ணும் நான், எந்தப் புடவையைக் கட்டிக் கொள்ளலாம் என்று அலமாரியில் உள்ள அத்தனை புடவைகளையும் வைத்துக் கொண்டு பரிதவிப்பேன். ‘அம்மு, ஏன் இப்படி உட்கார்ந்துக் கொண்டிருக்கிறாய்...? ஒரு சிறு காரியத்தில் கூடக் கவனம் செலுத்த முடியாத நீ, எப்படி பெரிய காரியங்களைக் கவனிக்கப் போகிறாய்’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டு, அவரே ஒரு புடவையை எடுத்து தருவார். ஆம், அவருக்கு எல்லாம் அம்மாவாகதான் இருந்திருக்கிறார்.
கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் இன்னொருவர் எடுக்கிறார்... நீங்கள் அணியும் ஆடையைக் கூட உங்களால் தேர்வு செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் உங்களுக்கான முடிவுகளை எடுப்பவர் இறந்து போகிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்? நிலைக்குலைந்துதானே போவீர்கள்... ஆம், ஜெயலலிதா தன்னுடைய 23-வது வயதில், தன் அம்மாவை இழந்தவுடன் வெறுமை அவரை கவ்வியது... திசைவழி தெரியாமல் தான் நின்றார்...!
“அம்மா தான் எனக்கு எல்லாம். அவர் தான் எனக்காக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார். எனக்கு அந்த சமயத்தில் எதுவுமே தெரியாது... என் வங்கி கணக்கு, என் சம்பளம், கால்ஷீட், காசோலை கையெழுத்து, வருமான வரி எவ்வளவு கட்ட வேண்டும்... வீட்டில் பணியாளர்கள் எவ்வளவு என எதுவும் தெரியாது.... கையறு சூழலில் நின்றேன். ஒரு குழந்தையைக் கண்ணை கட்டி காட்டுக்குள் விட்டது போல இருந்தது...” என்று அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
இருள் பூசிய இந்தத் தனிமையிலிருந்து தம்மை மீட்பார்கள்... அம்மாவின் பேரன்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை... குறைந்தபட்சம் அன்பாவது தனக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிய உறவினர்களும் அவருக்குக் காயத்தைதான் பரிசாகத் தந்தனர். ஆம், ஒரு நெருக்கடி சமயத்தில், அவர்களுக்கு ஜெயாவின் நலனைவிட... அவரின் சொத்து மீதுதான் முழு கவனமும் இருந்திருக்கிறது.
மயங்கிய ஜெ... பதறிய எம்.ஜி.ஆர்...!
சென்ற அத்தியாயத்தில், அடிமை பெண் படப்பிடிப்பின் போது, வெயிலில் இருந்து ஜெ-வை காக்க எம்.ஜி. ஆர் அவரைத் தூக்கி சென்றார் என்று பார்த்தோம்தானே...? அதுபோல, இன்னொரு சம்பவமும் நிகழ்ந்து இருக்கிறது. ஆம், ஜெயலலிதா ஒரு சமயம் கடுமையான டயட்டில் இருந்தார். அதன் பின் விளைவாக, வீட்டில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து விட்டார். வீட்டில் உள்ள வேலையாட்கள், உறவினர்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் அவர் எழவே இல்லை. அவர்களுக்குப் பதற்றமாகிவிட்டது... என்ன செய்வது என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் மேனேஜருக்கு தகவல் போகிறது... அவர் உடனடியாக எம்.ஜி. ஆருக்கு தகவல் தெரிவிக்கிறார். எம்.ஜி.ஆர் உடனடியாக ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஏற்பாடுகளை செய்தார்.
இந்த பதற்றமான சூழலிலும் ஜெயலலிதாவின் உறவினர்கள் சிலர், வீட்டில் உள்ள முக்கிய பீரோ சாவியை யார் வைத்துக் கொள்வது என்று தங்களுக்குள் சண்டையிட்டு இருக்கிறார்கள். இதில் தலையிட்ட எம்.ஜி.ஆர், சாவியைதான் கைப்பற்றி, ஜெயலலிதா குணமடைந்த பின் அவரிடம் ஒப்படைத்து இருக்கிறார். நடந்த சம்பவங்களைக் கேட்ட ஜெயலலிதா நொந்துதான் போய்விட்டார்...!
இந்த சம்பவம் தான், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை முழுமையாக நம்பியதற்கும், தன் உறவினர்களைத் தள்ளி வைத்ததற்கும் முதல் காரணமா இருந்திருக்க வேண்டும்...!
படப்பிடிப்புத் தளத்திலும் சரி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது அதிக அக்கறையாக இருந்திருக்கிறார். அதை ஜெயலலிதாவே, தான் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
ஜெயலலிதா வார்த்தைகளிலிருந்தே,“ ‘கண்ணன் என் காதலன்’ படப்பிடிப்பின் போது ஒரு நாள் காலை அவருக்கான காட்சிகள் முடிவடைந்துவிட்டதால், காரில் ஏறப் போனவர் (எம்.ஜி.ஆர்), “மத்தியானம் என்ன எடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.
“ஜெயலலிதா மாடிப் படியில், சக்கர நாற்காலியில் உருண்டு விழும் காட்சி...!” என்றார் இயக்குநர். உடனே எம்.ஜி.ஆர் காரை விட்டு இறங்கிவிட்டார். “அதை எடுக்கும் போது, நானும் இருக்கிறேன். அது கொஞ்சம் ரிஸ்கானது...! அந்த பெண் விழுந்துவிட்டால்...?” என்று சொல்லிக்கொண்டே அன்று எங்களுக்கு உதவி செய்ய வந்துவிட்டார். அன்று முழுவதும், படப்பிடிப்பு முடியும் வரை எங்களுடனேயே இருந்தார்...”
அன்புக்காக ஏங்கிய ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு, உண்மையில் இந்த அக்கறை அளவற்ற சந்தோஷத்தை தந்திருக்க வேண்டும்.
இதனால்தான் பின் தான் அளித்த ஒரு பேட்டியில் ஜெயலலிதா இவ்வாறாக சொன்னார், “அவர் (எம்.ஜி.ஆர்) தான் எனக்கு எல்லாம். அவர் தான் என் தந்தை, என் தாய், என் நண்பர், என் வழிக்காட்டி, என் ஆசான்... எல்லாம் அவர் தான்” என்று.
ஆனால், அதே எம்.ஜி. ஆர் தான், பின் ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டுக்கு குடியேறிய போது, அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாமல் தவிர்த்தார். ஆம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வீட்டு கிரகபிரவேசத்தில் கலந்துக் கொள்ளவில்லை, அவர் அளித்த பரிசு பொருள் மட்டும் தான் சென்றது...!
(தொடரும்)
மிகவும் உறுதியாக இருப்பது எந்த பலனையும் தராது...அதிக காயங்களும், துன்பங்களும் வேண்டுமானால் பரிசாக கிடைக்கலாம் என்பார் தென் ஆஃப்ரிக்க கலைஞர் கயோஸ். அவர் தன் எந்த வலியிலிருந்து வார்த்தைகளை எடுத்து இதை வடித்தார் என்று தெரியவில்லை. ஆனால், இந்த சொற்கள், ஜெயலலிதாவின் வாழ்வுக்கு மிகச் சரியாகப் பொருந்தியது. ஆம், ஜெயலலிதா, தன் திரை உலக வாழ்வில் அனுபவித்த எல்லா வலிகளுக்கும், அவருடைய உறுதியான பண்புதான் காரணம். ஆனால், அதே உறுதிதான் அவர் தன் வலிகளில் இருந்து மீண்டு வரவும் உதவியது.
ஆளுமை செய்த எம்.ஜி.ஆர்... வெகுண்டெழுந்த ஜெ...!
திரை உலகமே திரண்டிருந்த ஜெயலலிதாவின் புதுமனை புகுவிழாவுக்கு எம்.ஜி.ஆர் வரவில்லை என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம் அல்லவா....? அதற்கு ஒரு காரணம் இருந்தது. ஆம், எம்.ஜி. ஆர், தன்னை ஆளுமை செய்கிறார், தன் சுதந்திரத்தில் தலையிடுகிறார் என்று ஜெயலலிதா அப்போது நினைத்தார். அதனால் ஏற்பட்ட மன வருத்தத்தினால் தான் எம்.ஜி.ஆர், அந்த விழாவில் பங்கேற்காமல், அதே நேரம் மனம் கேட்காமல் பரிசுப் பொருளை மட்டும் அனுப்பி வைத்தார். ஆனால், அடுத்த நாளே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது.
ஜெயலலிதா தன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு அடுத்த நாள் , காஷ்மீரில் ஒரு திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. அதற்காக விமானத்தில் முன் பதிவும் செய்யப்பட்டு இருந்தது. ஜெயலலிதா விமானம் ஏறிய பிறகு தான் பார்த்தார். தன் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் எம்.ஜி.ஆர். இது ஏதேச்சையாக நடந்ததா அல்லது எம்.ஜி.ஆரின் திட்டமிட்ட ஏற்பாடா என்றெல்லாம் தெரியாது...? ஆனால், இதுதான் நிகழ்ந்தது. எம்.ஜிஆருக்கும் காஷ்மீரில் படப்பிடிப்பு இருந்தது. அதனால், அவரும் அதே விமானத்தில் பயணமானார். ஜெயலலிதாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை... கடலின் மேற்புறத்தில் காதைக் கிழிக்கும் சத்தம் கேட்டாலும், ஆழ்கடலில் ஒரு அமைதி நிலவுமே...? அது போல, விமானத்தின் சிறகுகள் சத்தத்தை கடந்து இருவருக்குள்ளும் ஒரு அமைதி நிலவியது. விமானம் மேலே பறக்க பறக்க, அமைதியின் இறுக்கம் குறைந்தது. இருவரும் மீண்டும் பேசத் துவங்கினார்கள். காஷ்மீரில் விமானம் இறங்கியபோது, முற்றாக சகஜ நிலைக்கு திரும்பினார்கள்.
காஷ்மீரில் ஜெயலலிதாவுக்கு வேறொரு இடத்தில் படப்பிடிப்பு, எம்.ஜி,ஆருக்கு வேறொரு படத்தில் படப்பிடிப்பு. ஜெ, நடித்த படத்தின் கதாநாயகன் சிவாஜி. அந்த படப்பிடிப்பு தளம், எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த தளத்திலிருந்து ஏறத்தாழ 60 மைல் தொலைவு. ஆனால், எம்.ஜி.ஆர் தன்னுடன் ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். ஜெயலலிதாவால் மறுத்துப் பேச முடியவில்லை. தினமும் ஏறத்தாழ 60 மைல் அந்த பள்ளத்தாக்கு பகுதியில் பயணம் செய்துதான், ஜெ படப்பிடிப்பில் கலந்து கொண்டார், இதை ஜெயலலிதா விரும்பித் தான் செய்தாரா... அல்லது எம்.ஜி.ஆரின் வற்புறுத்தலை மீறி, ஜெயாவால் எதுவும் செய்ய முடியவில்லையா என்று தெரியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆரின் முடிவு தான், ஜெயாவின் வழியானது. அது தான் அவருக்கு வலியாகவும் அந்த சமயத்தில் ஆனது.
தனியாக ஒரு நாடக அணியை உண்டாக்கி, ஜெயலலிதா நாட்டிய நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருந்தார். அந்த நாடகக்குழு மிகவும் பிரபலம் அடைந்தது. அந்த நாடகத்தை தங்கள் ஊரில் அரங்கேற்றச் சொல்லி உலகெங்கிலும் இருந்து அவருக்கு அழைப்புகள் வரத் துவங்கியது. ஜெயலலிதாவும் இதற்கு இன்முகத்துடன் சம்மதித்தார். அதற்கான முன் பணத்தையும் பெற்றார்.
அந்த சமயத்தில், உலகத் தமிழ் மாநாடு சிங்கப்பூரில் ஒருங்கிணைக்கப்பட்டது. அந்த நிகழ்வுக்கு எம்.ஜி.ஆர் தான், சிறப்பு விருந்தினர். எம்.ஜி. ஆர், ஜெயலலிதாவையும் தன்னுடன் உலகத் தமிழ் மாநாட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால், ஜெயலலிதா எனக்கு நாடக அரங்கேற்றம் இருக்கிறது. என்னால் வர முடியாது என்று மறுத்தார். ஆனால், எம்,ஜி. ஆரின் அழைப்பு கட்டளையானது. சிங்கப்பூரிலிருந்து நீ நாட்டிய அரங்கேற்றத்துக்கு செல் என்று வற்புறுத்தினார். இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, தன் மொத்த திட்டத்தையும் ரத்து செய்துவிட்டு, வாங்கிய முன்பணத்தையும் திரும்ப தந்து விட்டார். அது மட்டுமல்ல, தன் நாடக குழுவையும் இதனால் கோபமடைந்து கலைத்து விட்டார்.
ஆம்... தம் முடிவுகள் அனைத்தையும் இன்னொருவர் எடுக்கிறார் என்றால், ஒருவருக்கு கோபம் வரத் தானே செய்யும்... வெகுண்டெழுந்து விட்டார் ஜெயலலிதா... ஆனால், இந்த கோபமும் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. தனக்கு யாருமே இல்லை என்று உணரும் ஒருவர், இருக்கிற ஒரு உறவையும் இழக்க துணிய மாட்டார் அல்லவா...? அத்தகைய மனநிலையில் தான் அப்போது ஜெயலலிதா இருந்திருக்கிறார். நெகிழ்ந்திருக்கிறார்.
வாக்கு தவறாதவராக இருக்க வேண்டும்...!
நமக்கு இப்போது மிகவும் இறுக்கமானவராக தெரிகிறார் அல்லவா ஜெயலலிதா...? ஆனால், திரைப்படத்துறையில் உச்சத்தில் இருந்த போது இவ்வாறானவராக இல்லை. நகைச்சுவை உணர்வு அவரிடம் ததும்பி இருந்திருக்கிறது.
எழுபதுகளில் ஜெயலலிதா, ' ஆனந்த விகடனில்' ஒரு கட்டுரை எழுதினார். அதில் தனக்கு நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து இருந்தார். ஒரு ரசிகர் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கடிதமாக எழுதிக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு கடிதத்தில், “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்... இந்த தேதிக்குள் சம்மதிக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன்...” என்று ஒரு தேதியை குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். ஜெயலலிதாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோல நிறைய கடிதம் வருகிறது. அதில் இதுவும் ஒன்று என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். சில நாட்கள் கழித்து மீண்டும், அதே நபரிடமிருந்து கடிதம்... மீண்டும் அதே புராணம்... “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்... இந்த தேதிக்குள் சம்மதிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்...” என்று மீண்டும் ஒரு தேதியைக் குறிப்பிடுகிறார். இப்போதும் ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை.... நாட்கள் நகர்கிறது... மீண்டும் அதே நபரிடமிருந்து கடிதம் வருகிறது... “என்னை திருமணம் செய்ய சம்மதியுங்கள்... இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்...” என்று.
அவருக்கு பதில் கடிதத்தை, இவ்வாறாக ஜெயலலிதா எழுதி இருக்கிறார், “எனக்கு கணவராக வர வேண்டியவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கூடியவராக இருக்க வேண்டும். மற்ற கொள்கைகளைவிட இது தான் முக்கியம்...சொன்ன வாக்கை மீண்டும் மீண்டும் மீறும் உங்களை எப்படி நான் மணக்க முடியும்...?”
ஆம்... அப்போது இது தான் ஜெயலலிதா...!
(தொடரும்)
No comments:
Post a Comment