Sunday 18 October 2020

SAROJ NARAYANASWAMY - ALL INDIA RADIO

 


SAROJ NARAYANASWAMY - ALL INDIA RADIO



ஆல் இண்டியா ரேடியோ .. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி ..

TV காலத்துக்கு முந்தையவர், எங்களை ப்போல.

இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இவரின் இன்முகம் காண்போமே .. !


வயது 85


இந்த உலகில் அழகால் அறியப்படுபவர்களுக்கு இணையாக குரலால் அறியப்பட்டு, அழியாப் புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள். இப்படி தமது குரலால் புகழ் பெற்றவர்களில் முக்கியமான ஒருவரைத் தேடி கண்டடைந்தோம். அவர்தான் அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான “கலைமாமணி’ சரோஜ் நாராயண சுவாமி.


சென்ற தலைமுறை தமிழர்கள், தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை இவரது கம்பீரமான குரலுக்காகவும், உச்சரிப்புக்காகவும் விரும்பிக் கேட்டிருக்கிறார்கள். இப்போது மும்பையில் வசிக்கும் சரோஜ் நாராயணசுவாமி இந்த 82 வயதிலும் முதுமையின் சுவடுகள் எதுவும் முகத்தில் தெரியாமலும், அதே கம்பீரமான குரலுடனும் பேசுகிறார்.

அவர் நம்மிடம் பகிர்ந்ததை கேளுங்கள்



“என்னுடைய முன்னோர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஆனால் நான் பிறந்து வளர்ந்து பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தது எல்லாம் மும்பையில்தான். எனக்கு மும்பை ஜென்மபூமி. தில்லி கர்மபூமி. அதாவது நான் பிறந்தது மும்பை என்றாலும் சம்பாதித்து புகழ் பெற்றது எல்லாம் தில்லியில். நான் அகில இந்திய வானொலிக்கு வருவதற்கு முன்பு யூகோ வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த வங்கியும் அகில இந்திய வானொலிக்கு அருகிலேயே இருந்தது.பின்னர் அகில இந்திய வானொலியில் தேர்வுகள் எழுதி பணிக்குச் சேர்ந்தேன். 



பல்வேறு மாநில மொழிகளில் வரும் செய்தி அறிக்கைகளில், நான் தமிழ்ச் செய்தி வாசிப்பாளரானேன். படிப்படியாக முன்னேறி, செய்திப் பிரிவில் உயர்ந்த பதவிகளை அடைந்தேன்.செய்தி வாசிப்பில் உச்சரிப்பு என்பது ஆத்மாவைப் போன்றது. எனக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் உச்சரிப்பை உற்றுக் கவனித்து தவறு இருந்தால் திருத்துவேன். செய்தி வாசிப்பாளருக்கு ஒரு மொழியியல் அறிஞரைப் போல மொழியைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். செய்தி வாசிப்பில் பிறநாட்டு வார்த்தைகள் வந்தால், அந்தநாட்டு தூதரகத்தையோ, கலாசார மையத்தையோ தொடர்பு கொண்டு அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்த பின்னர்தான் செய்தியில் பயன்படுத்துவேன். உச்சரிப்பில் தவறு வந்துவிடக்கூடாதே என்பதற்காகத் தான் இந்த முயற்சி.


செய்தி வாசிப்பாளர்க்கு ஆங்கிலம், ஹிந்தியிலிருந்து பிராந்திய மொழியில் மொழி பெயர்க்க வேண்டும். அதிகாலை 5.30க்கு செய்தி என்றால் 3.30க்கே மொழி பெயர்ப்பு செய்வதற்காக வந்துவிடுவேன். கடும் குளிரும், கடும் வெப்பமும் நிலவும் தில்லியில் எனது குரல் எந்தவிதத்திலும் பாதிக்காதது எனது அதிர்ஷ்டமே. 



வானொலி நிலையத்திலுள்ள திரைப்பிரிவிலும் நான் வாய்ஸ் தந்துள்ளேன்.மொரார்ஜிதேசாய், இந்திராகாந்தி, பி.வி.நரசிம்மராவ் போன்ற பாரத பிரதமர்கள், முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமனையும் நேர்காணல் செய்திருக்கிறேன். 


இந்திரா காந்தி என்னைக் கவர்ந்த பெண்மணி. 

ஒரு பிரதம மந்திரியாக மட்டும் இல்லாமல் இந்திராவை ஒரு சகோதரி போல நினைத்தேன். அன்னை இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட நாளன்று மாலை தகன நிகழ்ச்சிகளை, நான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு படித்தேன்.அந்தக் காலத்தில் கேபினட்டில் இருந்த ஒரே “ஆண்மகன்’ அன்னை இந்திராகாந்தி என்பேன்.

முப்பத்தைந்து ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பின் செய்திப் பிரிவில் பணியாற்றினேன். எனது பிள்ளைகளின் அனைவரது அரவணைப்பிலும் அன்பிலும் மனநிம்மதியாக இருக்கிறேன்.ஓய்வு நேரங்களில் டி.வி. பார்க்கிறேன். குறிப்பாக செய்தியைக் கவனிக்கிறேன்.சில பேர் உச்சரிப்பில் தவறு செய்கிறார்கள். ழ, ல, ள, வித்தியாசம் பலருக்குத் தெரியாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.



தமிழ் தனியார் பண்பலைகளைக் கேட்டதில்லை. பேசத் தெரிந்தால் போதும், எதைவேண்டுமானாலும் பேசலாம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நம் நாட்டில் ரேடியோ ஒலிபரப்புக்கென்று ஒரு பாரம்பரியம் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனக்கு கடந்த 2008ம் ஆண்டு கலைமாமணி விருது, கலைஞர் கையால் கிடைத்தது. நான் ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தை.நான் வாழ்வதும், உங்களுடன் பேசிக் கொண்டிருப்பதும் பாபா தந்த அருள்தான்.’


பேட்டி எடுத்தவர் - ராகவ்குமார்


முகமறியா அன்பர்களுக்காக 

இப்புகைப் படம் பதிவு

.


எல்லோரும் ‘Male வாய்ஸ் மாதிரி உனக்கு இருக்கே’ன்னு சொல்வாங்க. அவங்களுக்கெல்லாம் என்னுடைய பதில் ஆமா, என் குரல் மேலான வாய்ஸ்தான்!


பூர்வீகம் தஞ்சாவூர். ஆனா, பிறப்பு, படிப்பு எல்லாமே மும்பைல. புகுந்த வீடும் சம்பாதிச்சு புகழ் பெற்றதும் தில்லில. பிஏ ஆங்கிலம் படிச்ச எனக்கு தமிழ் வாசிப்பாளர் வேலை! கேட்கவே கொஞ்சம் வித்யாசமாக இருக்கும். பெரும்பாலும் வானொலி அறிவிப்பாளர்னா அந்தந்த மொழிகள்ல புலமைபெற்றவர்களா இருப்பதுதான் வழக்கம். இதுக்கு மாறா நான் வந்தேன். கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரி என்பதில் எப்பவும் எனக்கு பெருமைதான்.


நாராயணசுவாமியை கல்யாணம் செய்துட்டு அவர் கூட தில்லிக்கு வந்தேன். யூகோ வங்கில வேலை கிடைச்சது. இந்த வங்கிக்கு பக்கத்துலயே இந்திய வானொலி மையம். திடீர்னு வானொலி மேல பற்று வந்தது. இப்ப மாதிரி அப்ப கடுமையான தேர்வுகள் எல்லாம் இல்ல. வானொலில வேலை செய்ய வாணி சான்றிதழ் கேட்பாங்க. இதுக்கு தேர்வு எழுதணும். தில்லியின் பல மொழிகளுக்கான வாசிப்பாளர்கள் வரிசைல எனக்கு தமிழ் வாசிப்பாளருக்கான வேலை கிடைச்சது.


வானொலியைப் பொறுத்தவரை உச்சரிப்பு முக்கியம். தினம் தினம் உச்சரிப்புல புதுசு புதுசா தெரிஞ்சுப்போம். ஆக, ஒவ்வொரு நாளும் நான் மாணவிதான். கத்துக்கவும் திருத்திக்கவும் தயங்கினதே இல்ல. உச்சரிப்பு மாதிரியே மொழிபெயர்ப்பும் முக்கியம். செய்திகள் எப்பவும் ஆங்கிலம் அல்லது இந்தில இருக்கும். நாமதான் அதை மொழிபெயர்ப்பு செய்துக்கணும். தினமும் அதிகாலை 5.30 மணிக்கு செய்திகள். இதுக்காக 3 மணிக்கே மொழிபெயர்ப்பு வேலை ஆரம்பிக்கணும். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. அப்ப அந்தந்த நாட்டுத் தூதரகங்களுக்கு போன் செஞ்சு தெளிவு பெறுவேன்.


என் வேலை வாசிப்போருக்கு செய்தியை ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழில மொழி பெயர்ப்பது. இப்ப இருக்கற பண்பலைகள் மாதிரி அப்ப வானொலி வேலை சுலபமில்ல. ழ, ல, ள உச்சரிப்புகள் எல்லாம் சரியா இருக்கணும். இப்ப மாதிரி அப்ப பேசத் தெரிஞ்சாலே வேலைக்கு எடுத்துக்க மாட்டாங்க.


பொதுவா இப்ப வானொலி நிகழ்ச்சிகளை நான் கேட்கறதில்ல. டிவி சேனல்ஸும் பார்க்கறதில்ல. கேட்க நேர்ந்தா... பார்க்கும் வாய்ப்பு கிடைச்சா... பிழைகள் தெரிஞ்சா... உடனே போன் செஞ்சு திருத்திக்க சொல்வேன். அதை ஏத்துக்கறதும் ஏத்துக்காம போறதும் அவங்க விருப்பம். ஆனா, சொல்வது என் கடமை.


1962ல வானொலி வேலை கிடைச்சது 2008ல தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் சார்பா கலைமாமணி விருது பெற்றேன். சாய்பாபா மேல எனக்கு தீவிர பக்தி. அவர் அருள்தான் இப்ப வரை என்னை வழி நடத்திட்டிருக்கு. முகமே தெரியாம வான்வழியா ஒரு மாநிலமே என் குரலைக் கேட்க காத்திருந்தது என்பதெல்லாம் வரம்.


இப்ப 83 வயசாச்சு. ஒரு மகன், ஒரு மகள். பிள்ளைங்க என்னை அன்பா பார்த்துக்கறாங்க. அம்பது வருஷங்கள் தில்லி ஆகாசவாணில பறந்துட்டேன். என்னதான் இந்தியப் பிரஜையா இருந்தாலும் தமிழகத்தை சுத்தணும்னு ஆசை. குறிப்பா மதுரை மீனாட்சி அம்மன், கோவை சிறுவாணி தண்ணீர், பாண்டிச்சேரி... இங்க எல்லாம் சுத்தணும்.


நான்கு மொழிகள்ல எனக்குப் புலமை உண்டு. ஆனா, சுமார் 22 மொழிகளுக்கு பிராம்ப்ட் செய்யணும். ‘பாரதம்’னு சரியா நான் உச்சரிக்கறதா பலரும் சொல்றாங்க. இதுக்கு காரணம், மத்தவங்க ‘B’ சப்தத்துல சொல்றப்ப நான் ‘P’ உச்சரிப்புல சொல்வேன்.என் வெற்றிக்குப் பின்னாடி என் கணவர் இருக்கார். இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஈடு கொடுக்கறார். எங்க அன்பைப் பார்த்து பிள்ளைகளே ஆச்சர்யப்படறாங்க.


என் கணவர் என்கிட்ட அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்திருக்க முடியுமானு கேட்டார். ஒரு கப் டீ அல்லது காபி. இது மட்டும்தான். அதிகாலைல கடும் குளிர், கடும் வெயில் இரண்டுமே இருக்கும் நகரம் தில்லி. அதை பெருசா கண்டுக்கலை. என் குரலையும் அந்தக் குளிர் பாதிக்கலை. எல்லாரும் தூங்கறப்ப வேலை செய்யவும், எல்லாரும் வேலைக்குப் போறப்ப வீட்ல இருக்கவும் எனக்குப் பிடிச்சிருந்தது. குடும்ப வேலைகள்ல ஒருகுறையும் வைச்சதில்ல.


அப்ப எல்லாம் ஒரு பெண் டிகிரி படிக்கணும்னு சொன்னா உடனே அடங்காப்பிடாரி வரிசைல சேர்த்துடுவாங்க. என் விஷயத்துல அப்படி எதுவும் பிறந்த வீட்லயும் புகுந்த வீட்லயும் நடக்கலை. ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், மீடியா வேலை. அதுவும் அதிகாலை இல்லை. சொல்லப்போனா இரண்டாம் ஜாமத்தில் வேலை. கேட்க வேண்டுமா. போதாதா... ஏகப்பட்ட கிசுகிசுக்கள். எதையும் காதுல வாங்கிக்கலை.


‘என்னை யார் திருமணம் செஞ்சுப்பாங்க’னு பலரும் முணுமுணுத்த நேரத்துல நாராயணசுவாமி வந்து நின்னார். டிகிரி படிச்ச, சொந்தக் கால்ல நிற்கும் பெண்தான் தனக்கு வேணும்னு இருந்தார். என்னை கட்டிக்கிட்டார். பாரத் ஹெவி எலட்ரானிக்ஸ்ல வேலை பார்த்த அவர் எனக்கு கணவரா அமைஞ்சது நான் செஞ்ச பாக்கியம்.என் மாமனாரும் மாமியாரும் அவருக்கும் மேல. என் வேலையைப் பார்த்து அவ்வளவு பெருமைப்பட்டாங்க. எந்தக் கேள்வியும் என்கிட்ட அவங்க கேட்டதில்ல. அவங்களுக்கு எந்தக் குறையும் நானும் வைச்சதில்ல.


வடக்க இருந்து செய்திகள் வாசிப்பது அவ்வளவு சுலபம் இல்ல. பாட்டேல், பாட்டில் பெயர்களைக் கூட நாங்க சரியா உச்சரிக்கணும். இல்லைனா ஊரே மாறிடும். இந்திரா காந்தியை பேட்டி கண்டது மறக்க முடியாத அனுபவம். அதே இந்திரா காந்தி மரணத்தை நானே அறிவிக்க வேண்டிய நிலை. என் மனநிலை எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சுப் பாருங்க.


என்னைக் கவர்ந்த கம்பீரப் பெண்கள்ல அவங்களே முதன்மையானவர். அவர் மரணம் ரொம்பவே என்னை பாதிச்சது. ஆனாலும் சுகமோ துக்கமோ அது குரல்ல வெளிப்படக் கூடாது. இதுதான் செய்தியாளர்களின் முக்கியமான கடமை. இதையும் மீறி சற்றே தழுதழுத்துதான் இந்திரா காந்தி மரணத்தை அறிவிச்சேன். எங்கம்மா குடிச்ச காவிரி தண்ணீரும், நான் பார்த்த தமிழ் சினிமாக்களும்தான் என் தமிழ் உச்சரிப்புக்கு காரணம். பாரதியார் கவிதைகள் அவ்வளவு பிடிக்கும். திரும்பத் திரும்ப அதைப் படிப்பேன்.


ஒருமுறை இயக்குநர் கே.பாலசந்தர், ‘திருமணத்துக்கு முன்னாடியும் இப்படி கர்வமாதான் இருந்தியா’னு கேட்டார். ‘கல்யாணத்துக்கு முன்னாடி கர்ப்பமாவதுதான் தப்பு... கர்வமா இருக்கறதில்ல’னு சொன்னேன். இந்த பதில் அவருக்குப் பிடிச்சிருந்தது.


கணவரைப் போலவே பிள்ளைகளும் எனக்கு உறுதுணையா இருக்காங்க. பையன் ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சதால என் வேலை பாதிக்கப்படலை. ஆரோக்கியமான, அளவான சாப்பாடுதான் என் சிரிப்புக்கும் வரிசையான பற்களுக்கும் காரணம்.


75 வயசுல என் கணவர் மறைந்தார். அவ்வளவுதான் பாக்கியம்னு என்னை நானே தேத்திக்கிட்டேன். என்னை விட இரண்டரை வயசு பெரியவர். அவர் நினைவுகள்தான் இப்பவும் என்னை வழிநடத்திட்டு இருக்கு. எனக்கு ஒண்ணுன்னா கலங்கிடுவார்.


என் பெயர் சரோஜா. அப்பா பெயர் விஸ்வநாதன். அம்மா பெயர் விசாலாட்சி. வடக்கு பள்ளில நிறைய வட இந்தியப் பெயர்கள். குழப்பம் வேண்டாம்னு சரோஜ் ஆனேன். வானொலிக்குப் பிறகு அழைப்பின் பெயரால் ஒரு பிரபல தேசிய சேனல்ல உயர் பதவி வகிச்சேன். பல நாடுகளின் தமிழ்ச் சங்கங்களின் அழைப்புகள், மரியாதைகள் கடந்து எவ்வித நோயும் இல்லாம வாழறேன். இடைல சின்னதா டயாபடிஸ் பிரச்னை வந்தது. டயட், மருத்துவரின் பிரமாதமான கவனிப்புல பத்தே நாட்கள்ல அதுவும் இல்லாமப் போச்சு. இப்பவும் தமிழகத்தையும் அதன் வாழ்வியலையும் நினைச்சு ஏங்கிட்டு இருக்கேன்!         


ஷாலினி நியூட்டன்


ஆ.வின்சென்ட் பால்




.


.

No comments:

Post a Comment