Thursday 22 October 2020

CHANDRABABU , STORY OF A LEGEND

 


CHANDRABABU , STORY OF A LEGEND




கடந்த, 1959ல், ஏவி.எம்., ஸ்டுடியோவில் படமானது, சகோதரி. படப்பிடிப்பு முடிந்ததும், படத்தைப் போட்டு பார்த்தார், ஏவி.எம்.செட்டியார். அவருக்கு திருப்தி இல்லை. 'படம் எடுபடாது; ஓட வைக்க என்ன செய்யலாம்...' என யோசித்தவருக்கு, அப்போது உச்சத்தில் இருந்த சந்திரபாபு நினைவுக்கு வந்தார். அவரது, காமெடி, 'டிராக்'கை படத்தில் இணைக்கலாம் எனத் தோன்ற, 'சந்திரபாபுவை அழைத்து வாருங்கள்...' என்றார்.

செட்டியார் அழைக்கிறார் என்றதும், உடனே, வந்தார், சந்திரபாபு.

'வா பாபு உட்கார்; நம்ம ஸ்டுடியோவில், சகோதரின்னு ஒரு படம் தயாரிச்சிருக்கிறோம்; அந்தப் படத்தைப் பாத்துட்டு, உன் கருத்தைச் சொல்...' என்றார். அன்று மதியமே படத்தைப் பார்த்தார், சந்திரபாபு.

காட்சிகள், ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருந்தன. 'இதில் நாம் என்ன செய்ய முடியும்...' என, யோசித்தவர், மாலையில் செட்டியாரைச் சந்தித்து, 'காட்சி அமைப்பு தெளிவாக இல்ல...' என்றார்.'உன் பொறுப்பில் விடுறேன்; நல்ல நகைச்சுவையை சேர்த்து, பத்து நாட்களில் படமாக்கி, கோர்வையாக்கிக் கொடு...' என்றார், செட்டியார்.

'யோசிச்சு சொல்றேன்...' என, சொல்லி விடை பெற்ற சந்திரபாபு, ஒரு நாள் முழுவதும் யோசித்தார்.

சரோஜாதேவியுடன் பழகியது, 



சந்திரபாபுவின் நண்பர்கள் சொன்ன சம்பவம் மற்றும் சில ஆண்டுகளுக்கு முன், எம்.ஜி.ஆர்., மற்றும் என்.எஸ். கிருஷ்ணனிடம் பால்காரனாக நடித்துக் காட்டியது என, அவர் நினைவுக்கு வந்த அந்தச் சம்பவங்களை பின்னணியாக வைத்து, நகைச்சுவை காட்சியை கற்பனை செய்ய, 'பால்கார பரமசிவம்' கதாபாத்திரம் உருவானது.

செட்டியாரிடம் சென்ற சந்திரபாபு, 'ஏழு நாட்கள்ல சிறப்பான நகைச்சுவைக் காட்சிகள உருவாக்கித் தர்றேன்; சம்பளமாக ஒரு லட்சம் ரூபா வேணும்...' என்றார். 'இது ரொம்ப அதிகம்; அவ்வளவு எல்லாம் முடியாது...' என்றார், செட்டியார்.

'அப்போ, எவ்வளவு தருவீங்க?' என்று கேட்டார்.'ஒரு நாளுக்கு பத்தாயிரம் ரூபாய் தர்றேன்...''சாரி செட்டியார்... என்னால முடியாது...' என்று கூறி, போய் விட்டார், சந்திரபாபு.செட்டியார் விடவில்லை; பேரம் தொடர்ந்தது.

'நானே காட்சிகளை அமைச்சு, வசனங்களை எழுதி, பாடி நடிக்கணும். நடித்துத் தருகிறேன் என்று கூறி, பல லட்ச ரூபாய்களை ஏப்பம் விட்டு ஏமாற்றுகின்றனரே சிலர்... நான் அப்படி செய்பவன் இல்ல. ஒரு நாளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தர்றதா சொல்றீங்க... நான் நினைச்சா, வேலைய பத்து நாட்கள் இழுத்து, ஒரு லட்சம் ரூபாய பெற முடியும்; ஆனா, என் மனச்சாட்சி  கேட்காது...' என, செட்டியாரிடம், விவாதம் செய்தார் சந்திரபாபு.

'சரி, பாபு... நீ வேலைய துவங்கு; பாத்துச் செய்றேன்...' என்றார், செட்டியார். சொல் தவற மாட்டார் செட்டியார் என்பதால், வேலையை ஆரம்பித்தார் சந்திரபாபு. மூன்று நாள் படப்பிடிப்பு முடிந்ததும், கண்ணதாசனை அழைத்து, தான் படமாக்கப் போகும் பாடலுக்கான காட்சி அமைப்பை விவரித்தார், சந்திரபாபு.

'நான் ஒரு முட்டாளுங்க...' என, பல்லவியையும் எடுத்துக் கொடுக்க, அடுத்த சில நிமிடங்களில், முழுப் பாடலையும் எழுதிக் கொடுத்தார், கண்ணதாசன்; அந்தப் பாடல் படமாக்கப்பட்டது.கதைக்கேற்ற பாணியில், நகைச்சுவை காட்சிகள் படமாக்கப்பட்டு, 'எடிட்' செய்யப்பட்டு, எங்கெங்கு தேவையோ, அங்கங்கு இணைக்கப்பட்டன.

செட்டியாருக்கு முழு திருப்தி; சந்திரபாபு கேட்ட தொகையை, மகிழ்வுடன் அளித்தார்.அப்போது, முன்னணி நடிகர்களே ஒரு படத்துக்கு, 50 ஆயிரம், 70 ஆயிரம் ரூபாய் என வாங்கிய நேரத்தில், சந்திரபாபு, ஒரு லட்சம் ரூபாய் வாங்கியது,பரபரப்பாகப் பேசப்பட்டது. சகோதரி படம் வெற்றி பெற்றது.

சுதர்சனம் மாஸ்டர் இசையமைப்பில், தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்து கொள்ளும், 'நான் ஒரு முட்டாளுங்க...' பாடல், ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.இயக்குனர், கே.சுப்ரமணியம் நடத்திய சினிமா பயிற்சிப் பள்ளியில் தான், குமாரி சச்சுவுடன், சந்திரபாபுவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. கே.சுப்ரமணியம் எடுத்த, பாண்டித்தேவன் (1959) என்ற படத்தில், சந்திரபாபு மற்றும் சச்சுவும் ஒப்பந்தமாயினர். அப்போது, சச்சுவுக்கு வயது, 12 தான்.

அப்படத்தில் ஒரு காட்சியில், ஜீப் ஓட்டி வருவார், சந்திரபாபு. ஜீப் பழுதாகி நின்று விட, உடனே, அவ்வழியில் செல்லும் ஒரு மாட்டு வண்டியில், ஜீப்பைக் கட்டி இழுத்துச் செல்வது போல் ஒரு காட்சி... மாட்டு வண்டி ஓட்டும் சின்னப் பெண்ணாக, சச்சு. இருவரும் சேர்ந்து நடித்த முதல் காட்சி அது தான்.

ஜீப்புக்குள், சந்திரபாபு; மாட்டு வண்டியில் சச்சு. எல்லாவற்றுக்கும் முன், கேமரா.'ரெடி, டேக்...' என்றதும், ஜீப் நகர, குறைந்த அளவு ஆக்சி லேட்டரை, ஜீப்புக்குள் இருக்கும், சந்திரபாபு கொடுக்க வேண்டும்.அவரோ விளையாட்டுத்தனமாக அதிக அளவு ஆக்சிலேட்டரைக் கொடுக்க, சச்சு அலற, கேமராமேன் பயந்து நடுங்க, நிலைமையை உணர்ந்த சந்திரபாபு, சட்டென்று, 'பிரேக்' போட்டு விபத்தைத் தவிர்த்தார்.

'டேக்' ஓ.கே., ஆனாலும், சின்னப் பெண் என்பதால், அதற்கு பின்னும், பயந்து நடுங்கியவாறு இருந்தார், சச்சு.அதன் பின், சச்சுவை, தன் சகோதரி போல் பாவித்து, பழகி வந்த சந்திரபாபு, அவர் குடும்பத்தின ரோடு கேலி, கிண்டல் மற்றும் தமாஷ் என, பொழுதைக் கழிப்பது வழக்கம்.ஒரு நாள், சச்சுவின் வீட்டுக்கு சந்திரபாபுவின் நண்பர் ஒருவர் போன் செய்து, தன்னை அறிமுகப்படுத்தி, 'எங்க வீட்டுக்கு என்னைப் பார்க்க வந்த சந்திரபாபு, திடீர்ன்னு, ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டான்...' எனச் சொல்லி போனை வைக்க, பதறி விட்டனர், சச்சுவின் குடும்பத்தினர். கண்ணீரோடு அந்த நண்பரின் வீட்டுக்கு ஓடினர்.

அங்கே, இறந்த வீட்டின் சூழலோ, யாருடைய முகத்திலும் கவலையோ இல்லை. இவர்களுக்கோ, உள்ளே கால் எடுத்து வைக்கவோ, பாபுவை அந்த நிலைமையில் பார்க்கவோ தைரியம் இல்லை.'என்ன ஆச்சு?' என்று சச்சு ஒருவரிடம் கேட்க, அவர் பதில் பேசாமல், அங்கிருந்து நழுவினார். 'பாபு ஏதாவது விளையாட்டுத்தனமாகக் கூட செய்வார்; ஆனால், இது நிஜமா, பொய்யா என, யாரிடம் கேட்பது...' என, அவர்களுக்குத் தயக்கம்.

தயங்கித் தயங்கி இவர்கள் வீட்டிற்குள் செல்ல, உள் அறையில் இருந்து திடீரென்று வெளிப்பட்டு, அங்கிருந்த சோபாவின் மேல், படாரென எகிறித் குதித்து உட்கார்ந்தார், சந்திரபாபு.'நான் செத்ததா சொன்னா, நீங்க எல்லாம் வர்றீங்களா இல்லயான்னு பாத்தேன்...' என்றார், சந்திரபாபு சிரித்தபடியே!

அந்த நண்பரிடம், 'நீங்க ஏன் அப்படிப் பொய் சொன்னீங்க...' என்று சச்சு கோபமாகக் கேட்க, 'நான் எவ்வளவோ மறுத்தும், பாபு தான் அப்படி பொய் சொல்லச் சொல்லி வற்புறுத்தினான்...' என்றார்.

'பாபு... இந்த மாதிரி இன்னொரு முறை தயவுசெஞ்சு சொல்லாதீங்க...' என, சந்திரபாபுவைக் கண்டித்தனர், சச்சுவின் குடும்பத்தினர்.

பலரை கவலைகள் மறந்து சிரிக்க வைத்த சந்திரபாபுவுக்கு, கவலை இல்லாத மனிதன் என்றொரு படம் ஒப்பந்தம் ஆனது. ஆனால், அந்தப் படத்தை எடுத்தவர், பல கவலைகளுக்கு உள்ளானார்.


No comments:

Post a Comment