AL.GADAFFI ,2011 OCTOBER 20 ,
LOST SOME OPPURTUNITY
.முஅம்மர் முகம்மது அபு மின்யார்
அல்-கதாஃபி (Muammar Muhammad Abu Minyar al-Gaddafi[1] (அரபு மொழி: مُعَمَّر القَذَّافِي Muʿammar al-Qaḏḏāfī இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க; சூன் 1942 – 20 அக்டோபர் 2011), அல்லது பொதுவாக முஅம்மர் கதாஃபி (Muammar Gaddafi) அல்லது கேர்னல் கடாஃபி அல்லது முஅம்மர் அல்-கத்தாஃபி, லிபியாவின் அதிகாரமிக்க தலைவராக[2][3] 1969 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு அவரது அரசு பதவியில் இருந்து அகற்றப்படும் வரை இருந்தவர். 1969 ஆம் ஆண்டில் லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்தார். 42 ஆண்டு காலம் பதவியில் இருந்து அரபு நாடொன்றில் அதிக காலம் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றர். கதாஃபி ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக 2009 பெப்ரவரி 2 முதல் 2010 சனவரி 31 வரை இருந்தார்.
1969 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததும், லிபியாவின் 1951 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இரத்துச் செய்தார். மூன்றாவது பன்னாட்டுக் கொள்கை என்ற தனது அரசியல் சித்தாந்ததை அமுல் படுத்தினார்[4]. இது பசுமைப் புத்தகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது[5][6]. எரிபொருள் விலை அதிகரிப்பு, பெற்றோலியம் அகழ்வு போன்றவற்றால் லிபியாவின் வருவாய் அதிகரித்தது. எரிபொருள் ஏற்றுமதியை அதிகரித்ததில் லிபியாவின் வாழ்க்கைத் தரம் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உயர்ந்தது. அதே வேளையில், ஏனைய மத்திய கிழக்கு எண்ணெய் வளம் மிக்க நாடுகளினதும் வாழ்க்கைத் தரமும் மிக அதிக அளவில் அதிகரித்தது[7][8]. கதாஃபி ஆட்சியின் ஆரம்ப காலத்தில் நாட்டின் வருவாயின் பெரும் பகுதியை கதாஃபியின் உறவினர்களே கைப்பற்றிக் கொண்டனர். இதே வேளையில், கதாஃபி பல போர்களில் ஈடுபட்டு இரசாயன ஆயுதங்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டார்[9]. ஐரியக் குடியரசுப் படை, மற்றும் பல நாடுகளுக்கும் இராணுவ ஆயுதங்களைக் கொடுத்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பு கதாஃபியின் லிபியாவை "ஒதுக்கப்பட்ட நாடு" என அறிவித்தது[10][11]. 1980களில் உலகின் பல நாடுகளும் கதாஃபியின் அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன[12].
பெப்ரவரி 2011 இல் எகிப்து, மற்றும் துனீசியாவில் இடம்பெற்ற எழுச்சிப் போராட்டங்களை அடுத்து, கதாஃபியின் ஆட்சிக்கெதிராக ஆங்காங்கே கிளர்ச்சிகள் இடம்பெற்றன. இவை பின்னர் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. கதாஃபிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் பெங்காசி நகரில் தேசிய இடைக்காலப் பேரவை என்ற பெயரில் இடைக்கால அரசு ஒன்றை அமைத்தனர். இந்நடவடிக்கை நாட்டில் உள்நாட்டுப் போரை தோற்றுவித்தது. லிபியாவின் வான் எல்லைப் பரப்புத் தடை, மற்றும் பொதுமக்களைப் பாதுகாத்தல் போன்ற தீர்மானங்களை ஐநா பாதுகாப்புச் சபை அறிவித்தது. இதற்கமைய நேட்டோ தலைமையிலான கூட்டுப் படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத, மற்றும் வான் வழி உதவிகளைத் தாராளமாக வழங்கினர். கதாஃபி மற்றும் அவரது உறவினர்களின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. மனித இனத்துக்கு எதிராகச் செயல்பட்டமைக்காக 2011 சூன் 27 இல் பன்னாட்டுக் காவலகம், மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியன கதாஃபி மீதும், அவரது மகன் சைஃப் அல்-இசுலாம் ஆகியோருக்குப் பிடிவிறாந்து பிறப்பித்தன[1][13][14][15]. 2011 ஆகத்து மாதத்தில் தலைநகர் திரிப்பொலி கிளர்ச்சிப் படைகளினால் கைப்பற்றப்பட்டது. 2011 செப்டம்பர் 16 இல் ஐநா சபையில் லிபியாவின் இடத்தை தேசிய இடைக்காலப் பேரவை பிடித்தது[16]. ஆனாலும், கதாஃபியின் சொந்த இடமான சேட் மற்றும் சில இடங்களை கதாஃபியின் ஆதரவுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. கதாஃபி தலைமறைவானார்[17]. இறுதியில், 2011 அக்டோபர் 20 ஆம் நாள் கிளர்ச்சிப் படையினர் சேர்ட் நகரைத் தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர். கதாஃபி உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் உடனடியாகவே சுட்டுக் கொல்லப்பட்டார்[18].
• மப்றூக்
இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படுமானால், கப்பல் அனுப்பி வைத்து முஸ்லிம் மக்கள் அனைவரையும் கடாபி தன்னுடைய நாட்டுக்கு எடுத்து விடுவார் என்று எங்களூர் பெரிசுகள் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் பேசிக் கொண்ட கதைகள் இப்போதும் எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றன.
பச்சை நிறத்திலான அரபு எழுத்துக்களுடன் லிபியத் தலைவர் கடாபியின் (அவரின் சரியான முழுப் பெயர் முஅம்மர் முஹம்மது அபு மின்யார் அல் - கதாஃபி என்பதாகும்) உருவம் கொண்ட வெள்ளை நிற ரீ சேட்களை எங்கள் கிராமத்தின் அப்போதைய இளைஞர்களில் சிலர் அணிந்து கொண்டு வலம் வந்த நினைவுகள் மறக்க முடியாதவை!
சில தசாப்தங்களுக்கு முன்னர் தேசங்கள் கடந்து லிபியத் தலைவர் கேணல் கடாபி – ஒரு ஹீரோவாக முஸ்லிம் மக்களால் நேசிக்கப்பட்டார், மதிக்கப்பட்டார். கடாபி என்கின்ற சொல் - விடுதலையை விரும்பும் முஸ்லிம் வீரர்களின் அடையாளமாகக் கொண்டாடப்பட்டது.
ஆனால், அதே கடாபி – அவரின் தேசத்து மக்களாலேயே அடித்து இழுத்துக் கொண்டு சென்று கொல்லப்பட்டுள்ளார் என்பதை – நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் தங்கள் இதயங்களில் கடாபியை ஒரு ரோசாப்பூவைப் போல் சூடியிருந்த லிபிய மக்கள் - இன்று ஒரு எச்சில் இலை போல தூக்கி எறிந்திருக்கின்றார்கள் என்றால், இதற்கு என்னதான் காரணம்??
நம்மில் அநேகமானோர் நம்பிக் கொண்டிருப்பது போல் கடாபி அத்தனை நல்லவரில்லை! ஆனால், கேணல் கடாபி அத்தனை கெட்டவருமில்லை!!
லிபியாவை ஜனநாயகமற்றதொரு நாடாகவே கடாபி ஆட்சி செய்தார். அங்கு கட்சிகள் இல்லை, தேர்தல்கள் இல்லை, நாடாளுமன்றம் என்று எதுவுமேயில்லை! ஆனாலும், லிபியர்களை கடாபி தனது ஆட்சிக் காலத்தில் செல்வந்தர்களாக மாற்றினார். அந்த மக்களுக்கு - அதிக பொருளாதார சலுகைகளை வழங்கினார். நம்பினால் நம்புங்கள், லிபிய மக்கள் 'கரண்ட் பில்' கட்டுவதேயில்லை. லிபியர்களுக்கு மின்சாரத்தைக் கூட கடாபி இலவசமாகவே வழங்கினார்.
பிறகேன் கடாபிக்கு எதிரான புரட்சி வெடித்தது என்கிறீர்களா? எல்லாமே கடாபிதான் - கடாபிதான் எல்லாமே என்கிற 40 ஆண்டுகளுக்கும் மேலான சர்வதிகாரம் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், ஆத்திரமுமே புரட்சியாக வெடித்தது! இந்தப் புரட்சிக்கு எண்ணெய் ஊற்றி உசுப்பேத்தி விட்டன அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும்!
ஒருவரின் மரணத்தின் பிறகுதான்- அவர் அதிகம் பேசப்படுவார், விமர்சிக்கப்படுவார். கடாபியின் மரணம்தான் அவரின் எல்லாக் கோணங்களையும் பேசச் செய்கிறது!
கடாபி ஒன்றும் ராஜ வம்சத்து ஆளில்லை! ஆடுகளையும், ஒட்டகைகளையும் மேய்த்துத் திரிந்த நாடோடிப் பெற்றோருக்குப் பிறந்தவர்தான் இந்த மனிதர். ஆனால், தனது 27ஆவது வயதில் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றி – சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு சக்கரவர்த்தியைப் போல் ஆண்டு அனுபவித்தார்!
இயற்கையில் கடாபி ஒரு ரசனையாளர். தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அலாதிப் பிரியங் கொண்டவர். ஒரு நாளில் ஏராளமான தடவைகள் ஆடைகளை மாற்றிக் கொள்வார். தன்னைச் சந்திக்க விருந்தினர்கள் வந்து காத்துக் கொண்டிருக்கும் போதும், தனது அறைக்குச் சென்று மீண்டும் ஆடைகளை மாற்றிக் கொண்ட பிறகுதான் சந்திக்க வருவார். அதிலும், வெள்ளை நிறம் சார்ந்த ஆடைகளில் கடாபிக்கு நிறையப் பிரியம்.
லிபிய அதிபர் கேணல் கடாபி பற்றி அவரின் மருத்துவத் தாதிகளில் ஒருவராகப் பணியாற்றிய உக்ரேன் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய ஒக்சானா பலின்ஸ்கயா எனும் யுவதி கூறும் தகவல்களைக் கேட்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.
'எனக்கு அரபு மொழியில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. அதிபர் கடாபிக்கு எங்களிடையே 'பபிக்' என்று ஒரு செல்லப் பெயர் வைத்திருந்தோம். 'பபிக்' என்றால் ரஷ்ய மொழியில் சிறிய தந்தை என்று அர்த்தம்.
நான் தாதியாகக் கடமையாற்றிய காலத்தில் எனக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. இரண்டு படுக்கையறை கொண்ட வீடு, அழைத்தவுடன் ஆஜராகும் சாரதி என்று எல்லாமே சௌகரியமாகத்தான் இருந்தன. ஆனால், என்னுடைய நடத்தைகள், செயற்பாடுகள் என்று - எனது தனிப்பட்ட வாழ்க்கையின் அத்தனை விடயங்களும் கண்காணிக்கப்பட்டன' என்கிறார் ஒக்சானா!
அதிபர் கடாபி 1942ஆம் ஆண்டு பிறந்தவர். மரணிக்கும் போது 69 வயது. ஆனால், அவரின் உடல் ஆரோக்கியம், குறிப்பாக - இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை எப்போதும் ஓர் இளைஞனுடையவை போன்று மிகவும் சிறப்பாக இருக்கும் என்கிறார் மருத்துவத்தாதி ஒக்சானா.
'உக்ரேன் நாட்டு ஊடகங்கள் எங்களை கடாபியின் 'அந்தப்புரத்துப் பெண்கள்' என்றுதான் எழுதும். உண்மையில் அது முட்டாள்தனமானதொரு கூற்றாகும். கடாபியின் மருத்துவத் தாதிகளாகப் பணியாற்றிய எங்களில் எவரொருவரும் அவரின் காதலியாகவோ, அந்தப்புரத்து நாயகியாகவோ இருந்ததில்லை! இன்னும் சொன்னால், அவரின் இரத்த அழுத்தத்தைப் பார்ப்பது போன்ற மருத்துவக் கடமைகளின் போது மட்டும்தான் அவர் மீது எங்கள் கைகள் படுவதுண்டு!
கடாபி கவர்ச்சியான உக்ரேன் பெண்களையே அவரின் தாதியர்களாகத் தெரிவு செய்து வைத்திருந்தார். எங்களுடைய தோற்றம் அதற்கு முக்கியமானதொரு காரணமாக இருந்திருக்கலாம். தன்னைச் சுற்றி அழகிய பொருட்களும், அழகிய மனிதர்களும் இருப்பதை அவர் பெரிதும் விரும்பினார்' என்கிறார் ஒக்சானா!
கடாபியிடம் விசித்திரமான பழக்க வழக்கங்கள் இருந்தன. அரபுப் பாடல்களை பழைய 'கசற் பிளேயர்'களில் கேட்பதில் அவருக்கு அலாதிப் பிரியம்.
ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் வேளைகளில் ஏழைச் சிறுவர்களைக் கண்டால் கடாபி தனது வாகனத்திலிருந்தபடியே காசையும், இனிப்புப் பண்டங்களையும் வெளியில் வீசி எறிவார். அவரின் வாகனத்தைத் துரத்தியபடியே சிறுவர்கள் அவற்றினைப் பொறுக்கிக் கொள்வார்கள். ஆனால், ஒருபோதும் அந்தச் சிறார்களின் அருகில் கடாபி சென்றதேயில்லை. காரணம், அவர்களிடமிருந்து தனக்கு நோய்கள் ஏதாவது தொற்றி விடுமோ என்கிற பயம்தான்.
இவை மட்டுமல்ல, கடாபி வெளிநாடுகளுக்குச் சென்றால், அங்கு தனது பெண் மெய்ப்பாதுகாவலர்களால் சூழப்பட்ட கூடாரத்தினுள்தான் தூங்குவாராம் என்றும் கூறப்படுகிறது.
இப்படி லிபியத் தலைவரிடம் நிறையவே விந்தையான பழக்க வழங்கங்கள் இருந்தன!
கடாபி வெளிநாடு செல்லும் போது, நல்ல 'மூட்'டில் இருந்தால், தன்னுடன் வருகின்ற தனது அலுவலர்கள் அனைவரையும் கடைகளுக்குச் சென்று விரும்பியவைகளையெல்லாம் வாங்கிக் கொள்ளுமாறு கூறுவார். எதிர்பாராத நேரங்களில் போனஸ் கொடுப்பார். தனது உருவம் பொறிக்கப்பட்ட தங்கக் கடிகாரங்களை ஒவ்வொரு ஆண்டும் தனது அலுவலர்களுக்கு பரிசளிப்பதை கடாபி ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார்.
கடாபியின் மருத்துவத்தாதி ஒக்சானா - கடாபி பற்றியும் அவருக்கெதிராக நிகழ்ந்த புரட்சி பற்றியும் இப்படிக் கூறுகின்றார். 'லிபியாவின் எல்லாமாக கடாபியே இருந்தார். அவருக்கு ஸ்ராலினை (ரஷ்ய நாட்டு சர்வதிகாரி ஜோசப் ஸ்ராலின்) ரொம்பப் பிடிக்கும். கடாபி அனைத்து அதிகாரங்களையும், சௌபாக்கியங்களையும் கொண்டிருந்தார். எகிப்தில் இடம்பெற்ற புரட்சியை முதன் முதலாக தொலைக்காட்சியில்தான் நான் பார்த்தேன். ஆனால், அவ்வாறானதொரு புரட்சியை எங்கள் 'பபிக்'குக்கு (கடாபி) எதிராக எவராவது மேற்கொள்வார்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. ஆனால், ஒரு சங்கிலித் தொடர்ச்சியாக அந்தப் புரட்சி துனூசியா, எகிப்து என்று – லிபியாவையும் தொற்றிக் கொண்டு விட்டது'!
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்கும் கடாபிக்கும் வரலாற்றில் எப்போதும் முறுகல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. 1986ஆம் ஆண்டு பேர்லின் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில் குண்டு வெடிப்பொன்று நிகழ்ந்தது. இதில் இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். இந்தக் குண்டு வெடிப்பின் பின்னணியில் லிபியா செயற்பட்டதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, லிபியாவின் தலைநகரான திரிப்போலியிலும் மற்றும் பெங்காசி நகரிலும் கடுமையான விமானத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலில் கடாபியின் வளர்ப்பு மகளொருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லிபியா மீது அந்த அமெரிக்க வான்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்ட் றீகன் பதவி வகித்தார். கடாபியோடு மிகக் கடுமையாக மோதிப் பார்த்த அமெரிக்கத் தலைவர்களில் றீகன் குறிப்பிடத்தக்கவர். ஒருமுறை கடாபியை 'மத்திய கிழக்கின் பைத்தியக்கார நாய்' (Mad dog of the Middle East) என்று மிகக் கேவலமான வார்த்தைகளால் றீகன் சாடியிடிருந்தமையை உலகு அத்தனை இலகுவில் மறந்திருக்காது. இதை வைத்தே – கடாபி மீது அமெரிக்கா கொண்டிருந்த குரோதத்தை ஓரளவேனும் நாம் புரிந்து கொள்ள முடியும். அந்தக் குரோதங்களின் நீட்சியும், உச்சகட்டக் காட்சியும்தான் - நேட்டோவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட புரட்சியும், கடாபியின் கறை படிந்த மரணமுமாகும்!
கடாபியின் சரி – பிழைகளுக்கப்பால், வரலாற்றின் அதிக பக்கங்களில் அவர் - இனி ஒரு கொடுங்கோலனாகவே நமது குழந்தைகளால் வாசிக்கப்படுவார். ஏனெனில், துரதிர்ஷ்டவசமாக கடந்த சில தசாப்தங்களாய் வரலாறுகளை - அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளுமே தமக்கு ஏற்றாற் போல் புனைந்து வருகின்றன.
கடாபி ஒரு வரலாற்று நாயகன் என்பதில் இரண்டு கதைகள் இல்லை. ஆனால், அந்த நாயகன், நம்மில் அநேகமானோர் நினைத்துக் கொண்டிருப்பது போல் - அத்தனை நல்லவருமில்லை, அத்தனை கெட்டவருமில்லை!!!
No comments:
Post a Comment