Wednesday 28 October 2020

DAUGHTER - IN - LAW

 

DAUGHTER - IN - LAW



அது வேறு காலம்!

களை பிடுங்கி, கொஞ்சம் கம்மங் கதிர்களை அறுத்து வரும்போதே, பாக்கியத்தின் மனதில் ஏதோ பட்டது...
'ஒருவேளை, இன்று பாரி அழைப்பானோ... கட்டாயம் வரவேண்டும் என்று வற்புறுத்துவானோ?'
அதே போலத்தான் ஆயிற்று.
ஒரு மணி போல சற்றே கண்ணயர்ந்த போது, 'மொபைல் போன்' அலறியது.
''அம்மா... பாரி பேசுறேன்... என்னா பண்ணுற, எப்புடி இருக்குற?'' என்றான்.
''இன்னைக்கு களை எடுக்கிற வேல முடிஞ்சுதுப்பா... உலை கொதிச்சு அடங்குச்சு... கொஞ்சம் படுக்கலாம்ன்னு பாத்தேன்... சொல்லுப்பா... நீ, சுவாதி, புள்ளங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா?'' என்றாள். குரலில் உற்சாகத்தை வரவழைத்துக் கொள்வது, கடினமாகவே இருந்தது.
''அதெப்படிம்மா... ஏண்டா மூணாவது புள்ள பெத்துகிட்டோம்ன்னு இருக்கு... அவங்கம்மா அப்பப்ப வந்து பாத்துக்குறாங்க... சுவாதி இன்னும் முழுசா, 'நார்மல்' ஆகலே, 'டெலிவரி'க்கு பின், வரச் சொன்னா நீயும் பிகு பண்ணிக்கிற... அம்மா, இப்ப தயவுசெஞ்சு மறுப்பு எதுவும் சொல்லாதே... களை எடுக்கிற வேல முடிஞ்சாலே பாதி முடிஞ்ச மாதிரி தான்... பத்து நாள் இங்க வந்து தங்கிட்டு போ... 'ப்ளீஸ்' எனக்காக, உன் பேரப் புள்ளைகளுக்காக!''
''சரிப்பா வரேன்.''
''உண்மையாவா... அப்புறம் மாத்த மாட்டியே... மருந்தடிக்கணும், மோட்டார், 'ரிப்பேர்' பாக்கணும்ன்னு காரணம் தேடி,'' என்றான் வேகமாக.
''இல்லப்பா... வரேன்... பத்து நாள் தானே?''
''ரொம்ப, 'தாங்க்ஸ்' மா... சுவாதி, பிரபு, மிருது எல்லாம் அவ்வளவு சந்தோஷப்படுவாங்க... எனக்கே எவ்வளவு பிடிக்கும் தெரியுமா, உன் சமையல்... சரிம்மா, வெச்சுடறேன்.''
வாசல் கதவு மெல்ல திறந்து, உள்ளே வந்தாள், வள்ளி.
''என்ன மகன் பேசுனானா... என்னவாம், வந்து, வேலைக்காரி, சமையல்காரி வேலை பாத்துட்டு போன்னு சொல்றானா...'' என்றாள்.
''ம்ம்ம்... அவந்தான்... ஆனா, வீட்டு வேலை செய்யுறதுல ஒண்ணும் பிரச்னை இல்லே வள்ளி,'' என்று இழுத்தாள் பாக்கியம்.
''பின்ன?''
''மருமக தான்.''
''அதானே பாத்தேன்... பொறந்த வீட்டுப் பெருமைய எடுத்து வுடுறாளா... உன்னை கிராமத்து பொம்பளன்னு மட்டம் தட்டுறாளா?''
''அதெல்லாம் இல்ல,'' என்று சமாளித்தாள், பாக்கியம்.
சுவாதி, பொதுவாக நல்ல பெண். மகனாக தேடிக்கொண்ட பெண், என்றாலும், பண்பு, மரியாதை தெரிந்தவள். அத்தை, அத்தை என்று வாய் நிறைய அழைப்பவள். ஆனால், ஒரு சில விஷயங்களில் அவள் நடந்து கொள்வது தான் பாக்கியத்திற்கு பிடிக்கவே இல்லை.
பேரக் குழந்தை பிரபுவுக்கு ஏழு வயதாகிறது. மிருதுளாவுக்கு, ஆறு. பெண் குழந்தை தான் செல்லம், சுவாதிக்கு.
பிரபுதான் சாப்பிட தட்டு எடுத்து வைக்க வேண்டும் என்பாள். தோசை சுட, தேங்காய் துருவ, துணி காயப்போட, தண்ணீர் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவாள். 'டிவி' பார்க்கும்போது, மிருதுளா தரையில் உட்கார்ந்தால், அவளை எழுப்பி, 'குஷன் சேரில்' அமரச் சொல்வாள். பிரபுவை தரையில் உட்கார வைப்பாள்.
மிருது, கராத்தே வகுப்பு, பிரபு, கர்நாடக சங்கீத வகுப்பு என்று போகின்றனர். 'டிவி' பார்க்கும்போது ரிமோட், மிருதுளா கையில் தான் இருக்க வேண்டும். சினிமாவா, 'பீச்'சா இல்ல பூங்காவா... எங்கே போகலாம் என்பதை மிருதுளா தான் தீர்மானிக்க வேண்டும்.
மிருதுளா குட்டி ரொம்ப அழகு தான். நல்ல புத்திசாலி தான். பிரபு அடர்ந்த கருமை, இறுக்கமான முகம் தான். அதற்காக, பெண்ணை தலையில் துாக்கி வைத்து கொண்டாட வேண்டுமா... மகனை காலில் போட்டு மிதிக்க வேண்டுமா...
அதுவும் கடைசியாக போனபோது நடந்தது, பாக்கியத்திற்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
பச்சை குழந்தைக்கு பாலுாட்டியபடி இருக்க, பிரபு உள்ளே வருவதும், போவதுமாக இருந்தான். என்னதான் தாய், மகன் என்றாலும், கூச்சம் இருக்க வேண்டாமா... அவள் பாட்டுக்கு அவனிடம் சாதாரணமாக பேசிக்கொண்டே இருக்கிறாள்; மழலையோ பால் அருந்தியபடி இருக்கிறது. பாக்கியத்திற்கு, 'திக்'கென்றாகி விட்டது. வெளியில் வந்து விட்டாள்.
மகனிடம் எந்த புகாரும் சொல்லி வழக்கமில்லை. அப்படியே சொன்னாலும், 'என்னம்மா நீ... சுவாதி, பெங்களூர்ல வளர்ந்த பொண்ணு... 'மாடர்னா' இருக்கிறவ... அவளுக்கு எல்லாம் தெரியும்...' என்று தான் அடக்குவான்.
இதெல்லாம் பிடிக்காமல் தான் கிளம்பி வந்தவள், மூன்று மாதங்கள் ஆகியும், சென்னைக்கு போகவேயில்லை. மாமண்டூரில் இருந்து கூப்பிடுகிற துாரம் தான். மனதும் அடித்துக் கொள்கிறது தான். இருந்தாலும், பிடிக்கவில்லை.
தன் இள வயது காலத்தை நினைத்துப் பார்த்தாள்...
ஆம்பிளை பசங்க சைக்கிளில் சுற்றுவர். பெண் பிள்ளைகளும், ஓரக்கண்ணால் அவர்களை பார்ப்பர். அவ்வளவு தான், அதற்கு மேல் தைரியம் கிடையாது.
குளம், ஆறு என்று நீர் பிடிப்புகளில், 'தொப் தொப்'பென்று குதித்து, பெண் பிள்ளைகளின் கவனம் ஈர்ப்பர். கடப்பாரை நீச்சல், முங்கு நீச்சல் என்று படம் காட்டுவர்.
சைக்கிளை, 'சர்க்கஸ்' போல ஓட்டிக் காட்டி, இறுக்கமாக சட்டை போட்டு, கிராப் வெட்டி, 'ஸ்டைலாக' வருவர். பார்வை முழுக்க பெண்கள் மேல் இருக்கும். கோதை அக்கா மாதிரி ஒரு சில பெண்கள் தைரியமாக, 'ரெக்கார்டு' நோட்டுகள் பரிமாறிக் கொள்வர்.
ஏன், விமலாக்கா போல காதலித்தவர்களும் உண்டு. விமலாக்காவின் அப்பாவுக்கு திடீர் கேரளா மாற்றல் வந்தபோது, அவள் அழுதுகொண்டே போனாள். அவளால் நேசிக்கப்பட்ட பால்ராஜ், தாடி வளர்த்து, பேச்சு குறைந்து, கண்ணில் குழி விழுந்து, பள்ளிக்கூடம் விட்டே நின்றது கூட நடந்தது.
அப்படி இருந்தது ஆணும், பெண்ணும் வளர்ந்த காலம். ஈர்ப்பும் இருந்தது, அச்சமும் இருந்தது. ஆசையும் பட்டனர், அளவாகவும் இருந்தனர். இயற்கையில் இருந்த சமநிலை, இளைய மனங்களிலும் இருந்தது.
இப்படி வெட்கம், கூச்சம் இல்லாமல், மனப்பண்பாடு இல்லாமல், கட்டுப்பாடும், மரியாதையும் இல்லாமல், ஒருநாளும் இருந்ததே இல்லை.
மன விருப்பம் இல்லாமலே சென்னைக்கு கிளம்பினாள், பாக்கியம்.
அதே போல தான் இருந்தது மகனின் வீடு.
மகனை விரட்டிக் கொண்டிருந்தாள், சுவாதி.
''பிரபு... என்ன வேடிக்கை பாத்துகிட்டு... பாப்பாக்கு, 'டயப்பர்' மாத்த சொன்னேனே, மாத்தினியா?
''வேலம்மா பெருக்கி, தண்ணி தெளிச்சுட்டாங்களா... பிரபு கண்ணு, அன்னிக்கு சொல்லிக் கொடுத்தேன்ல, நாலு புள்ளி, நாலு வரிசைல, அந்த ஸ்டார் கோலம் போடுப்பா வாசல்ல.
''மிருது, நாளைக்கு உனக்கு, 'கேரம் போர்டு டோர்னமென்ட்' இருக்கில்ல... போடாம்மா, போய், 'பிராக்டிஸ்' பண்ணு.
''பிரபு, நீ வெளில கிளம்பறதுக்கு முன், மிருதுவோட சைக்கிளை நல்லா துடைச்சு வெச்சிடு என்ன?''
பாக்கியத்திற்கு ஒரு வாரத்திற்கு மேல் இருக்க முடியவில்லை. சுவாதியின் நாட்டாமை, எரிச்சலை தந்தது. பேரனை, ஒருதலைபட்சமாக நடத்துவதும், கண்டிப்பு காட்டுவதும் பிடிக்கவே இல்லை.
''பயிருக்கு, தண்ணி பாச்சணும்... நான் கெளம்பணும்மா சுவாதி,'' என்றாள் ஜன்னலை பார்த்தபடி.
''கோவமா அத்தை?'' என்றாள், சுவாதி.
''இல்லம்மா... நா யாரு கோவப்பட... உன் வீடு இது... உன் விருப்பப்படி தான் இருக்கும்... எனக்கு தான் வேல இல்லே இங்க.''
''இல்லே அத்தே... வருத்தம் உங்களுக்கு... புரியுது... பிரபுகிட்ட, 'ஸ்டிரிக்டா' இருக்கேன்... மிருதுகிட்ட, 'சாப்ட்டா' இருக்கேன்... பிடிக்கலே உங்களுக்கு... சரியா?''
''ஆமா... ஏம்மா அப்பிடி?''
''சொல்றேன் அத்தே... உங்க காலம் வேறே... எல்லாத்துலயும் ஒரு ஒழுங்கு இருந்த காலம்... குறிப்பா, ஆண்கள்கிட்டே சுய கவுரவம், சுய கட்டுப்பாடு இருந்த அழகான காலகட்டம் அது... காதல்ல தோக்கிற ஆண் என்ன செஞ்சான் அத்தை... தேவதாஸ் மாதிரி தண்ணி அடிச்சான், தாடி வளத்தான், தன்னைத் தானே அழிச்சுகிட்டான்...
''இப்போ, என்ன செய்றான்... காதலித்த பெண் மேலே, 'ஆசிட்' அடிக்கிறான்... பொது இடத்துல, கத்தியால வெட்டி கொல்றான்... காதலன்னு சொல்லிக்கிறவனும், அவளை தனியான இடத்துக்கு கூட்டிட்டு போய் நண்பர்களோட சேர்ந்து சீரழிக்கிறான்... இதை விட கொடுமையா, ஏழு, எட்டு வயசு பெண் குழந்தைகளை வன்கொடுமை செஞ்சு, படுகொலையே செய்யுறான்...
''ஏன் அத்தை... இதுல யார் மேல குற்றம் சொல்றது... யார் பொறுப்பு இதுக்கு... பெரும்பாலும் தாய்மார்கள் தான் பொறுப்பு... ஆண் பிள்ளைகளை பெத்துட்டா, அவங்களுக்கு தனியா ஒரு கர்வம் வந்துடுது...
''ஊட்டி விடுறது, இடுப்புல துாக்கி வெச்சுகிட்டு நடக்கிறது, கொஞ்சோ கொஞ்சுன்னு கொஞ்சி, சின்ன வயசுலயே அவனை சோம்பேறி ஆக்கிடறாங்க... அம்மாக்கு தலைவலின்னா, ஒரு மாத்திரை வாங்க தெரியாது பையனுக்கு... காபி போட்டு கொடுக்கத் தெரியாது... அம்மா என்கிற வேலைக்காரியால வளர்க்கப்படும் பையன்கள், தனக்கு வருகிற மனைவியையும் வேலைக்காரியாத்தானே பாப்பாங்க... மனைவியோடு போயிடுமா, எல்லா பெண்களையும் அப்படித்தான் பாப்பாங்க...
''தனக்கு அடிமை இவள், இன்பமூட்ட மட்டுமே ஆனது தான் பெண் குலம். தன் சந்தோஷத்துக்காக, இவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்ன்னு நினைப்பாங்க... பாசம் என்கிற பெயர்ல சமூக விரோதிகள், சோம்பேறிகள், முரடன்கள், உதவாக்கரைகள்ன்னு உருவாக்குகிற அம்மாக்கள் போல, நான் இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன் அத்தை...
''பிரபுவுக்கு, பெண்கள் மேல மரியாதை வரணும், தானும், தங்கையும் சமமான உரிமை கொண்டவர்கள்ன்னு தெரியணும்... ஆணாலும், வீட்டு வேலை எல்லாத்தையும் செய்ய முடியும்ன்னு உணரணும். குழந்தை பிறப்பு என்கிறது, பெண்ணுக்கு எவ்வளவு பெரிய சாதனைன்னு தெரியணும், பெண் உடல் என்பது, மகத்தான ஆளுமை கொண்டது, தாய்ப்பால் என்பது, சிசுவின் உயிரையே தாங்கிப் பிடிப்பது என்கிறதை அவன் உணரணும்... பிரபுவுக்கு, இப்போ எல்லாம் தெரியும் அத்தை...
''தன் தங்கையை, பாட்டியை, அம்மாவை, டீச்சரை, தோழிகளை அவனால பரிவோட நேசிக்க முடியும்... நல்ல குடிமகனா, இந்த சமூகத்துக்கு பங்காற்ற முடியும்... ஆணோட வலிமையுடனும், பெண்ணோட மென் மனதுடனும், அவன் அற்புதமா வளர்கிறான் அத்தை... சொல்லுங்க... நான் செய்யிறதுல ஏதாவது தப்பு இருக்கா?''
''இல்லம்மா... இல்லவே இல்ல,'' என்று நெகிழ்ச்சியுடன் மருமகளை அணைத்துக் கொண்டாள், பாக்கியம்

No comments:

Post a Comment