Thursday 22 October 2020

PETRAAL THAAN ANNAIYAA .பெற்றால்தான் அன்னையா ?

 


PETRAAL THAAN ANNAIYAA

பெற்றால்தான் அன்னையா ? 



மாமியின் வேதனை கலந்த முகம்

கீழ் வீட்டு லட்சுமி மாமியின் கூக்குரல் கேட்டு, அவசரமாக கீழே இறங்கி வந்து பார்த்த போது, எசகு பிசகாக தரையில் உட்கார்ந்திருந்தார், மாமி. முகத்தில் தாங்கமுடியாத வேதனை.
பதற்றத்துடன், ''என்ன ஆச்சு மாமி...'' என்றவாறு, அவரை கைத்தாங்கலாகத் தூக்கி, கட்டிலில் உட்கார வைத்தேன். பிளாஸ்க்கில் இருந்த தண்ணீரை கொடுக்க, ஒரு மடக்கு குடித்ததும், மாமிக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.

''ஒரே தலை சுத்தல்... எழுந்திருக்க முடியல...'' என்றார், மாமி, ஈன சுரத்தில்!
வழக்கம் போல் எதையும் பொருட்படுத்தாமல், தன் கால் கட்டை விரலின் காயத்திற்கு, கட்டுப் போட்டபடி இருந்தார், ரங்கராஜன் மாமா. லட்சுமி மாமியின் கூக்குரலோ, வேதனையோ அவரது கவனத்தை கலைத்ததாகத் தெரியவில்லை.

''மாமா... மாமி கீழ விழுந்திட்டாங்க...'' என்று அவர் காதருகே சென்று, சத்தமாக சொன்னேன். திடுக்கிட்டுத் திரும்பி பார்த்து, ''அப்படியா...'' என்று ஒரு ஆச்சரிய ரியாக் ஷன் கொடுத்தவர், ''அங்க, இங்க சும்மா நடக்காதேன்னு சொன்னா கேக்கறாளா...'' என்று முனங்கியவாறே, தன் வேலையைத் தொடர்ந்தார்.

பின், ''ராஜா... மார்க்கெட் போனேன்னா, கொஞ்சம் பேண்டேஜ் வாங்கிட்டு வாப்பா... தீர்ந்திடும் போல இருக்கு...'' என்றார்.

மாமிக்கு, 70ம், மாமாவுக்கு, 80 வயதையும் தாண்டியிருக்கும். 50 ஆண்டு குடித்தனம்; ஆனால், இருவருக்கும் இடையில் எப்போதும் பரஸ்பர கோபம் இருப்பதாகத் தோன்றும். எப்படி இவர்கள் இவ்வளவு ஆண்டுகள் ஒருவரை ஒருவர் சகித்து, வாழ்க்கை நடத்தினர் என்பது, புரியாத புதிர்!

மாமியும், மாமாவும் இந்த வயதில் தனிக் குடித்தனம். பையனும், பெண்ணும் அமெரிக்காவில் இருக்கின்றனர். இவர்களை அமெரிக்கா வரச் சொல்லி அவர்கள் வற்புறுத்தியும், 'சொந்த வீட்டை விட்டு, வேறு எங்கேயும் வரமாட்டேன்...' என்று, பிடிவாதமாக மாமா கூறி விட, அவரது பிடிவாதத்திற்கு முன், மாமியின் விருப்பம் எடுபடவில்லை.

இரண்டு மாடி வீடு; மேல் போர்ஷனில் வாடகைக்குக் குடியிருக்கும் நான் தான் மாமிக்கும், மாமாவுக்கு கேர் டேக்கர். ஒரு நாளைக்கு, குறைந்தது, 20 முறையாவது என்னைக் கூப்பிடாமல் இருக்கமாட்டார், மாமி.
'ராஜா... பேசாம உன் பேரை, ராமான்னு மாத்திக்கோடா... அடிக்கடி, ராமன் பேரை சொன்னா, போற வழிக்கு கொஞ்சம் புண்ணியமாச்சும் கிடைக்கும்...' என்று அவ்வப்போது சொல்வார்,

மாமி. மாமியைக் கண்டாலே தெருவில் உள்ள எல்லாருக்கும் பயம்; யார் கண்ணில் பட்டாலும், அவர்களுக்கு ஒரு வேலை வைத்திருப்பார், மாமி.
'ஏண்டிம்மா... நீ மார்க்கெட் போறச்சே, எங்காத்துக்கும் கறிகா வாங்கிண்டு வந்திடேன்...'

'அம்பி... நரசுஸ் காபிக்கடை வழியாத்தானே ஆபீஸ் போவே... வரச்சே, கால் கிலோ காபி தூள் வாங்கிண்டு வாயேன்...'

'சங்கரா... நீ எலக்ட்ரிக் பில் கட்டறச்சே இதையும் சேத்து கட்டிடு...'

'காசி... இந்த, 'ப்ரிஸ்கிரிப்ஷன்'ல மூணாவதா எழுதியிருக்கே... அதுல, ஒரு பத்து மாத்திரை வாங்கிண்டு வந்துடு...'

வயதானவர்கள், தனியாக சிரமப்படுகின்றனரே என்று முதலில் யாருக்கும் அனுதாபம் வரும்; ஆனால், போகப்போக மாமி, நம்மை கொஞ்சம் அதிகமாகவே உபயோகிக்கிறாரோ என்று தோன்ற வைத்துவிடும்.
அவளின் தொல்லை தாங்காமல், பல நாட்கள் காலையில் சீக்கிரமாக ஆபீஸ் போய், இரவு, நேரம் கழித்து வந்ததும் உண்டு.

இன்று, ஆபீசில் முக்கியமான வேலை இருந்ததால், எப்படியாவது மாமியின் கண்ணில் படாமல் நழுவி விட வேண்டும் என்று நினைத்திருந்தேன்; ஆனால், இன்று பார்த்து மாமியின் நிலைமை இப்படியாகி விட்டது.

மாமியைக் கைத்தாங்கலாகப் பிடித்து, எழுந்து நிற்க வைத்தேன்; அவரால் இரண்டு நிமிடம் கூட நிற்க முடியவில்லை. என்ன செய்யலாம்... இன்று ஆபீஸ் போயே ஆகவேண்டும்.

'பேசாம ஒரு, 'க்ரோசின்' போடச் சொல்லி, படுக்க வச்சுட்டு ஆபீஸ் கிளம்ப வேண்டியது தான்...' என நினைத்து, மாமியின் மாத்திரைப் பெட்டியை தேடினேன். மாமி ஒரு நடமாடும் பார்மசி; அனேகமாக எல்லா மாத்திரைகளும், அவரது பிளாஸ்டிக் டப்பாவில் இருக்கும். என்னென்ன உபாதைக்கு, என்னென்ன மாத்திரை என்பது அவருக்கு அத்துப்படி!

''என்ன... க்ரோசினா தேடறே...'' என்றார் மாமி, என் எண்ணத்தை அறிந்தவராக! நான் பதில் சொல்லும் முன், ''காலையிலேயே ஒண்ணு போட்டுண்டேன்; ஒண்ணும் கேக்கல... இது, சாதாரண தலை சுத்தல் மாதிரி தெரியல... எதுக்கும், டாக்டர் கிட்ட அழைச்சுண்டு போறயா...'' என்றார், கண்ணில் கெஞ்சலோடு!

கட்டுக்கட்டாக ஆபீஸ் பைல்கள், சிடு மூஞ்சி பாசின் முட்டை கண்கள் எல்லாம், ஒரு நொடி கண் முன் வந்து மிரட்டின. கண்டிப்பாக இன்று ஆபீஸ் போயே ஆகவேண்டும்.

''மாமி... காலையில வெறும் வயத்தோட இருந்தா இப்படித்தான் இருக்கும். என் மனைவிகிட்ட சொல்லி, கொஞ்சம் கஞ்சி போட்டுத்தர சொல்றேன்; அதை குடிச்சா கொஞ்சம் தெம்பு வரும். கொஞ்சம், 'ரெஸ்ட்' எடுங்கோ. நான், சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சு வந்ததும், டாக்டர்கிட்ட போகலாம்...'' என்றேன்.
வேறு வழியின்றி, மெதுவாகத் தலையாட்டி, கட்டிலில் படுத்தார், மாமி.

காலில் கட்டுப் போட்டு முடித்து, ஆயின்மென்டு, கத்திரிக்கோல், மிச்சமுள்ள பேண்டேஜ் எல்லாவற்றையும், டப்பாவில் போட்டுக் கொண்டிருந்தார், மாமா. நான், மெதுவாக வெளியேறி மாடிக்குச் சென்றேன்.

'கடகட'வென்று குளித்து, என் மனைவி தந்த இரண்டு தோசையை அவசரமாக விழுங்கி, சாப்பாட்டுப் பையை எடுத்து வெளியே வந்தேன். கீழ் போர்ஷனைக் கடக்கும் போது, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். படுத்திருந்தார், மாமி. அவர் முகத்தில் வேதனை தெரிந்தது.

வீட்டை விட்டு, பத்து அடி நடந்ததும், மொபைல் அழைத்தது; ஊரில் இருக்கும் அம்மாவிடம் இருந்து போன்...

''என்னடா ராஜா... ஆபீஸ் கௌம்பிட்டியா...''
''ஆமாம்மா... நீ என்ன செய்துட்டு இருக்கே... சாப்டியா?''

''எனக்கென்ன... ஏதோ இருக்கேன்...'' என்று சலித்துக் கொண்டாள்.

அப்பா போனதிற்குப் பின், அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்து விட வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தும், முடியவில்லை. 'மெட்ராஸ் எல்லாம் எனக்கு ஒத்து வராதுப்பா... நான் பாட்டுக்கு இங்கயே இருந்திடறேன்... பக்கத்துல தான் ஒத்தாசைக்கு எத்தனையோ பேர் இருக்கறாங்க... நீ, கவலைப்படாம உன் வேலைய கவனி...' என்று, ஒவ்வொரு முறையும் வர மறுத்து விடுவாள்.

''ராஜா... நேத்து மத்தியானம் தூங்கி எழுந்திருச்சு, பாத்ரூம் போறப்போ, தூக்கக் கலக்கத்துல கொஞ்சம் நிதானம் தெரியல; அப்படியே தடுக்கி விழுந்திட்டேன்...''

''அய்யயோ... அப்புறம் அடி கிடி பட்டுடுச்சா...'' என்றேன் பதற்றத்துடன்!

''அடியெல்லாம் ஒண்ணுமில்லப்பா... சொன்னா நீ, ரொம்ப பதட்டப்படுவேன்னு தான் நேத்து சொல்லல... பக்கத்து வீட்டு சீனு இல்ல... அவன் தான் உடனே ஓடி வந்தான்... ஆட்டோ வரவழைச்சு, டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனான். உடனே டாக்டரப் பாத்ததுனால, ஒண்ணும் பெருசா பாதிப்பு இல்ல. மருந்து குடுத்திருக்காங்க; வலியெல்லாம் குறைஞ்சிடுச்சு... ரெண்டு நாள்ல சரியாயிடும்...''

''ஏம்மா இப்படி தனியா கெடந்து கஷ்டப்படுறே... பேசாம இங்கே வான்னு சொன்னா கேக்கறயா...'' என்றேன், கொஞ்சம் சூடாக!

அம்மாவை தனியாகத் தவிக்க விட்டு, இங்கே இருக்கிறேனே என்ற குற்ற உணர்வு, தலை தூக்கியது.
''இங்கே தான் பாத்துக்க ஆளுங்க இருக்காங்கல்ல... சொந்தம் பந்தமா இல்லாட்டாக் கூட, அடுத்தவங்களுக்கு ஒத்தாசை செய்யணும்ங்கற குணம், இன்னும் கொஞ்சம் பேர்கிட்ட இருக்கிறதால தான் நாட்டுல மழை பெய்யுது...'' என்றாள்.

சட்டென்று, மாமியின் வேதனை கலந்த முகம், மனதில் தோன்றியது.

''சரிம்மா... உடம்பப் பாத்துக்கோ... இப்போ ஒரு அவசர வேலையா போய்கிட்டுருக்கேன்... அப்பறமா கூப்புடுறேன்,'' என்று லைனை துண்டித்து, ஆபீஸ் நம்பரைப் போட்டேன்.
லைனில் வந்தார், பாஸ்.
''சார் இன்னிக்கு லீவு வேணும்...''
''லீவா... இன்னிக்கு கண்டிப்பா வரணும்ன்னு நேத்தே சொன்னேனில்ல... அப்படியென்ன தல போற வேலை...'' என்று, எரிந்து விழுந்தார்.

''இல்ல சார்... இன்னிக்கு என்னால வர முடியாது. அம்மாவுக்கு உடம்பு முடியல; டாக்டர் கிட்ட போகணும்,'' என்று சொல்லி, அவர் பதிலுக்கு காத்திருக்காமல், லைனை துண்டித்து, மாமி வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

எஸ்.சிவா

No comments:

Post a Comment