Saturday 24 October 2020

UNITED, NATIONS ,FORMED, 1945, OCTOBER 24

 

UNITED NATIONS FORMED

 1945 OCTOBER 24



ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த தேசங்களின் அணி (Leagf Nations) என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா 'சமாதான விரும்பி' நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. செப்டெம்பர் 2010 நிலைவரப்படி, 192 உறுப்புநாடுகள் இருந்தன. ஜுலை 9, 2011 இல் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று ஐ.நா வில் இணைந்ததுடன் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன.

வரலாறு


தேசங்களின் அணி இரண்டாம் உலகப்போர் நடக்காமல் தடுக்கத் தவறியதால் வலிமை மிக்க ஒரு புதிய அமைப்புக்கான தேவை எழுந்தது. மேலும் இரண்டாம் உலகப்போர் முடிவில் மற்றொரு உலகப்போர் நடைபெற்றுவிடக் கூடாது என மக்கள் அஞ்சத் தொடங்கினர். அவ்வாறு மீண்டும் ஒரு போர் மூண்டால் மனிதகுலம் தாங்காது எனக்கருதியதால் வலிமையான ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டால் 1939 ஆம் ஆண்டு முதலில் பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தை 1942 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அதிகரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது.


1943 அக்டோபரில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, ஆகிய நாடுகள் மாஸ்கோவில் ஒன்றுகூடி, உலகில் அமைதியை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் விளைவாக 1945 இல் சான்பிரான்சிஸ்கோ மாநாடு நடைபெற்றது. இதில் அச்சு நாடுகளுக்கு எதிராக 50 நாடுகள் கலந்துகொண்டன. அக்டோபர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் நிறுவனம் நிறுவப்பட்டது. இதற்கென தனி சாசனம் வரையப்பட்டது. அதில் நிறுவனத்தின் நோக்கம், அதில் அமைக்கப்பட்ட சபைகள், அவற்றின் செயல்கள் ஆகியனபற்றித் தெளிவாகக் கூறப்பட்டன.


நோக்கங்கள்

கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்;

பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்.

மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல்

மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.

இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே.

உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது

No comments:

Post a Comment