MANIMEKALAI - KOTRAVAI ,
GOD OF POOMBUHAR
1. கடற்காவல் தெய்வம் மணிமேகலை
பௌத்தமதத்தின் உயர்ந்த தெய்வம் புத்தர் பெருமான். புத்தர் பரிநிர்வாணம் அடைந்தபிறகு அவருடைய உடம்பைக் கொளுத்தி அதில் எஞ்சிய எலும்பு சாம்பல் ஆகிய இவற்றை எட்டுப் பங்காகப் பங்கிட்டு ஒவ்வொரு பங்கையும் ஒவ்வோர் ஊரில் கொண்டுபோய்ப் புதைத்து அதன்மேல் சேதியங்களைக் கட்டினார்கள். புத்தருடைய தலைமயிர், நகம், பல் முதலிய தாதுக்களையும் சேமித்து அவற்றின்மேல் சேதியங்களைக் கட்டினார்கள். இவற்றிற்குச் சாரீரிக சைத்தியம் என்பது பெயர். சேதியம் எனினும் சைத்தியம் எனினும் ஒன்றே.
புத்தர் பெருமான் உபயோகித்துவந்த கைத்தடி, ஆடை, பாத்திரம், மிதியடி முதலிய பொருள்களையும் சேமித்து வைத்து, அவரின் நினைவுக்குறியாக அவற்றை வணங்கினார்கள். இவற்றிற்குப் பாரிபோக சைத்தியம் என்பது பெயர். புத்தகயாவில் புத்தர் போதிஞானம் பெற்ற அரசமரம் இன்றும் வணங்கப்படுகிறது. இந்த அரசமரமும் பாரிபோக சைத்தியமாகும்.
பகவன் புத்தர் காலமான பிறகு சில நூற்றாண்டு வரையில் அவருக்கு உருவம் அமைக்கப்படவில்லை. ஆனால், தரும பீடிகை, பாதபீடிகை ஆகிய உருவங்கள் மட்டும் பௌத்தர்களால் வணங்கப்பட்டன. தருமபீடிகை என்பது சக்கரம் போன்ற உருவமாக அமைக்கப்பட்டது. பாதபீடிகை என்பது புத்தரின் பாதங்கள் போன்று உருவம் அமைத்து வணங்கப்பட்டது.
சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு புத்தரின் உருவங்கள் கல், கதை, செம்பு முதலிய பொருள்களால் அமைக்கப்பட்டு வணங்கப்பட்டன. இவ்வுருவங்களுக்கு உத்தேசிக சைத்தியம் என்பது பெயர்.
பௌத்தர்கள் புத்தரின் உருவங்களை வணங்கி வந்ததோடு, வேறுசில சிறு தெய்வங்களையும் வணங்கி வந்தார்கள். அந்தத் தெய்வங்களைப்பற்றி கூறுவோம்.
சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்னும் வணிகன் மகளுக்கு மணிமேகலை என்பது பெயர். இந்த மணிமேகலையைப் பற்றித் 'தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்' என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம்.
இந்த மணிமேகலையைக் கதைத் தலைவியாகக் கொண்டு, அவளது வரலாற்றினைக் கூறும் சீத்தலைச் சாத்தனாரியற்றிய காப்பியத்துக்கும் 'மணிமேகலை' என்பது பெயர். இந்த நூலினைப் பற்றித் ' தமிழ்ப் பௌத்த நூல்கள்' என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம்.
இங்கு 'மணிமேகலை' என்னும் கடல் தெய்வத்தைப் பற்றி ஆராய்வோம். இந்தத் தெய்வம் 'சமுத்திர மணிமேகலை' என்றும் கூறப்படும். 'முது மணிமேகலை' என்றும் கூறுவர். இது பௌத்தர்களுக்குரிய சிறு தெய்வங்களில் ஒன்று. இதன் வரலாறு வருமாறு:
பௌத்தர்களுக்குரிய ஆறு தெய்வலோகங்களுள் 'மகாராஜிக லோகம்' என்பது ஒன்று. இந்த உலகத்தின் குணதிசையைத் 'திருதராட்டிரர்' என்பவரும், குடதிசையை 'விருபாக்ஷர்' என்பவரும், வடதிசையைத் 'வைசிரவணர்' என்பவரும் ஆட்சி செய்து வருகின்றார்கள். இவர்களுக்குச் 'சாதுர் மகராஜிகர்' என்பது பெயர். துடிதலோகத்தில் வீற்றிருக்கும் போதிசத்துவர் மாயாதேவியின் திருவயிற்றில் கருத்தரித்து மண்ணுலகிற் பிறந்து வாழ்ந்து இறுதியில் பரிநிர்வாணம் அடைகின்றவரையில், அவருக்கு யாதோர் இடையூறும் நேரிடாவண்ணம் காப்பதாக மேற்சொன்ன நான்கு தெய்வ அரசர்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அன்றியும், பௌத்த தர்மத்தைப் பின்பற்றி யொழுகும் நல்லோர்க்கும், பெற்றோர், ஆசிரியர் முதலியவரை வழிபட்டொழுகும் சீரியோர்க்கும் யாதேனும் இடையூறு நேரிடுமாயின், அவற்றினின்று அன்னவரைக் காப்பாற்றவும் இவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இவ்வாறு கடமை ஏற்றுக்கொண்ட இவர்கள் மண்ணுலகில் ஆங்காங்க்கே சிறு தெய்வங்களை இருக்கச் செய்து, நல்லோருக்கு நேரிடும் துன்பத்தைத் தீர்க்கும்படி அச் சிறு தெய்வங்களுக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு இருத்தப்பட்ட தெய்வங்களில் மணிமேகலையும் ஒன்று. கடலில் கப்பல் யாத்திரை செய்யும் நல்லோருக்கு இடுக்கண் நேரிடுமாயின், அன்னவரின் துயர்தீர்த்து உதவிசெய்வது மணிமேகலைத் தெய்வத்தின் பொறுப்புவாய்ந்த கடமையாகும்.
இவ்வாறு பொறுப்பேற்றுக்கொண்ட மணிமேகலை, தனது கடமையைச் செய்துவருவதாகப் பௌத்தர்கள் கருதுகின்றார்கள். நடுக்கடலில் கப்பல் உடைந்து நீரில் மூழ்கி இறக்குந் தறுவாயிலிருந்த நல்லோரை இந்தத் தெய்வம் காப்பாற்றிய செய்திகள் பௌத்த நூல்களில் கூறப்பட்டுள்ளன. மிகப் பழைமையானதென்று கருதப்படுகின்ற புத்தஜாதகக் கதைகளில் இரண்டு இடங்களில் இத்தெய்வத்தைப் பற்றிய வரலாறு கூறப்படுகின்றது. அவற்றின் சுருக்கமான வரலாற்றினைக் கீழே தருகின்றோம்.
சங்கஜாதகம்: 'மோலினி' என்னும் பெயருடைய காசிமா நகரத்தில் சங்கன் என்னும் அந்தணன் செல்வத்திற் சிறந்தவன். இவன் காசிநகரத்தின் நான்கு கோட்டை வாயிலிலும், நகரத்தின் நடுவிலும் தனது இல்லத்திலும் ஆக ஆறு அறச்சாலைகள் அமைத்து நாள்தோறும் அறவினையை முட்டின்றிச் செய்துவந்தான். ஒருநாள் இவன் 'குன்றத்தனை செல்வமும் ஒரு காலத்தில் குன்றும். அக்காலத்து அறம் செய்யப் பொருள் முட்டுப்படுவதற்கு முன்னரே யான் மேன்மேலும் பொருள் ஈட்டுவேன்' என்று சிந்தித்துத் தேர்ந்து மனைவியை அழைத்து அவளுக்குத் தன் கருத்தைத் தெரிவித்து, 'யான் திரும்பிவருமளவும் நான் செய்துவரும் இவ்வறச்சாலைகளைச் செவ்வனே நடத்திக் கொண்டிரு' என்று கட்டளையிட்டு, சொர்ணபூமி என்னும் பர்மா தேசத்திற்குச் செல்லப் புறப்பட்டான். ஏவலாளர் தன் பின்னர் வர, இவன் காலில் செருப்பணிந்து, குடைபிடித்துச் செல்லும்போது, நண்பகல் ஆயிற்று. அப்போது கந்தமாதன மலையில் வீற்றிருந்த பாச்சகபுத்தர் என்னும் போதிசத்வர் இந்தச் சங்கன் என்னும் அந்தணன் போவதையறிந்து, ஒரு மனிதனாக உருக்கொண்டு, அனல்வீசும் மணல்வழியே செருப்பும் குடையுமின்றி இவன் எதிரில் தோன்றினார். ஓர் ஆள் வெயிலில் வாட்டமுற்று வருந்தி வருவதைக் கண்ட சங்கன்,அந்த வழிப்போக்கனை அருகில் அழைத்து, ஒரு மரநிழலில் அமரச்செய்து, காலை நீர்கொண்டு கழுவி, தான் அணிந்திருந்த செருப்பைத் துடைத்து எண்ணெயிட்டு அவருக்குக் கொடுத்ததுமின்றி, தன் குடையினையும் கொடுத்துதவினான். இவற்றைப் பெற்றுக்கொண்ட அந்த ஆள் தமது உண்மை உருவத்தோடு வானத்தில் பறந்து தம் இருப்பிடம் சேர்ந்தார்.
பிறகு சங்கன் துறைமுகம் அடைந்து, கப்பலேறிக் கடல்யாத்திரை புறப்பட்டான். கப்பல் கடலில் ஏழு நாள்கள் சென்றன. ஏழுநாள்களுக்குப் பின்னர், புயலடித்துக் கப்பல் பாறைமேல் மோதி உடைந்துவிட, பிரயாணிகள் மூழ்கி இறந்தனர். சங்கனும் அவன் வேலையாள் ஒருவனும் உயிருடன் கடலைக் கையினால் நீந்திக் கொண்டிருந்தனர். ஏழுநாள் வரையில் இவர்கள் நீந்திக் கொண்டிருந்தனர். அப்போது கடற்தெய்வமாகிய மணிமேகலை அங்குவந்து சங்கன் கண்களுக்கு மட்டும் தோன்றி, தங்கத்தட்டில் அமிர்தம் போன்ற அறுசுவை உணவை அவனுக்குக் கொடுத்தது. அதனைச் சங்கன் மறுத்து 'இன்று உபவாசநாள்; ஆகையால், இன்று நான் உணவு உட்கொள்ளேன்.' என்றான். சங்கன் தனக்குள் ஏதோ உளறுகிறான் என்று அவனுடன் நீந்திக் கொண்டிருந்த வேலையாள் கருதி, 'ஐயா, என்ன பிதற்றுகின்றீர்?' என்றான். சங்கன், 'நான் பிதற்றவில்லை; என் கண்முன் நிற்கும் பெண்முன் பேசுகிறேன்' என்றான். ஏவலாளன், 'அங்ஙனமாயின் அவள் மண்ணுலக மங்கையா, தெய்வலோகத் தெய்வமா என்பதைக் கேளும் அன்றியும் இப்போது இந்தத் துன்பத்தினின்றும் காப்பாற்ற உதவி செய்ய முடியுமா என்றும் கேளும்' என்றான். சங்கன் மணிமேகலையை இக்கேள்விகளைக் கேட்க, அவள், 'நான் இக்கடலில் வாழ்கின்ற தெய்வம். நீ செய்த நற்செயலுக்காக உன்னைக் காப்பாற்ற வேண்டுவது எனது கடமையாதலால் நான் இவ்விடம் வந்தேன். நீ இப்பொது எங்குச் செல்ல விரும்புகின்றாய்?' என்று கேட்க, அவன் 'எனது காசிமாநகரம் செல்லவேண்டும்' என்று சொன்னான். உடனே மணிமேகலை தனது தெய்வ ஆற்றலினால் பெரிய கப்பல் ஒன்றினைச் செய்தது. அது நிறைய விலையுயர்ந்த பண்டங்களை அமைத்துச் சங்கனையும் அவனது ஏவலாளையும் அதில் ஏற்றி, தானே கப்பலைச் செலுத்திக் காசிமாநகரம் கொண்டு போய்விட்டது.
'மகாஜனக ஜாதகம்' என்னும் கதையிலும் இந்தத் தெய்வம் உதவி செய்த வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் பின்வருவது:
மிதிலை தேசத்து அரசன் ஜனகன் என்பவனுக்கு அரிட்டஜனகன், பொலஜனகன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். தகப்பன் இறந்த பின்னர், மூத்தவனான அரிட்டஜனகன் அரசனானான். இப்போது இளையவனான பொலஜனகன் தமையன் மேல் பகைகொண்டு, படை திரட்டி வந்து சண்டை செய்தான். சண்டையில் அரிட்டஜனகன் இறக்க, அவன் தம்பி அரசனானான். இறந்த அரிட்டஜனகனின் மனைவி, அப்போது வயிறு வாய்த்திருந்தவள், பெருஞ் செல்வத்தை எடுத்துக்கொண்டு, ஒருவருமறியாமல் சண்பை நகரம் சென்று, அங்கு ஓர் ஆண்மகவைப் பெற்றாள். அக்குழந்தைக்கு மகாஜனகன் என்று பெயர் இடப்பட்டது. குழந்தையாகிய மகாஜனகன் பெரியவனாக வளர்ந்தபிறகு, தன் சிற்றப்பன் தனது நாட்டைக் கவர்ந்து ஆள்கிறான் என்பதறிந்து, தன் நாட்டை மீட்கக் கருதி, அதன் பொருட்டுச் செல்வம் தேட உறுதி கொண்டான். இக்கருத்தைத் தன் தாய்க்குத் தெரிவித்து, அவள் உத்தரவு பெற்றுக் கப்பல் ஏறிச் சுவர்ண பூமிக்குப் புறப்பட்டான். இடைவழியில் நடுக்கடலில் புயலடித்துக் கப்பல் உடைந்துவிட, மற்றவர் மூழ்கி இறந்தனர். மகாஜனகன் முயற்சியை விடாமல் கையினால் கடலை நீந்திக் கொண்டிருந்தான். ஏழாம் நாள், மணிமேகலை அவன் முன்தோன்றி 'இப்பெரிய கடலைக் கையினால் நீந்திக் கடக்க முடியுமா?' என்று கேட்க, 'கரை சேர்வது கூடுமா கூடாதா என்பது பற்றி கவலையில்லை; ஆனால் முயற்சி செய்ய வேண்டுவது என் கடமையல்லவா?' என்று விடையிறுத்தான். இவனது ஊக்கத்தை மெச்சிய மணிமேகலை, இவன் செய்துள்ள நற்கருமங்களுக்காக இவனது இடுக்கணைத் தீர்க்கக் கருதி, தான் யார் என்பதை அவனுக்குத் தெரிவித்து, அவன் போக நினைத்த இடம் யாது எனக் கேட்டது. மகாஜனகன் தான் மிதிலை நகரஞ் செல்ல விரும்புவதாகச் சொல்ல, மணிமேகலை, தாய் குழந்தையைத் தூக்குவது போல, அவனை இரு கையாலும் தூக்கிக் கொண்டு வானத்தில் எழுந்து பறந்து சென்று, மிதிலை நகரத்து மாஞ்சோலையில் விட்டுவிட்டுச் சென்றது.
இதற்குள் மிதிலை நகரத்தை ஆண்ட பொலஜனகன் இறந்துவிட, அவனின் ஒரே மகளாகிய 'சீவாலி தேவி' என்பவளை மகாஜனகன் மணந்துகொண்டு அரசனானான். அவளை மணப்பதற்குமுன், ஆயிரம் வீரராலும் வளைக்க முடியாத வில்லை வளைத்தல் முதலியவற்றைச் செய்தான். பிறகு இவன் தன் பிள்ளைக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்றான்.
பௌத்தக் கதைகள் அடங்கிய இரசவாகிளி என்னும் நூலிலும் 'பலக கண்டதின்னஸ்ஸ வத்து' என்னும் துண்டுப் பலகை கொடுத்தவன் கதையில், மணிமேகலை கடலில் ஒருவனைக் காப்பாற்றிய செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் இது:
வறட்சிமிக்க வேனிற் காலத்தில், தென்னாட்டினின்றும் வடநாட்டிற்கு யாத்திரை சென்ற ஒருவன், நீர் வேட்கை கொண்டு எங்கும் நீர் கிடைக்காமல் வருந்தி, ஒரு மரநிழலில் அமர்ந்து, தன்னிடமிருந்த இரண்டு வெற்றிலைகளையாவது மென்று சாற்றினை விழுங்கி, வேட்கை தீர்க்கலாம் என்று எண்ணினான். அவ்வமயம் அவனைப் போலவே வடநாட்டினின்று தென்னாட்டிற்கு யாத்திரை வரும் ஒருவன், நீர் வேட்கை மிக்கவனாய், பருக நீர் கிடைக்காமல் வருந்தி, அதே மரத்தடியில் வந்து அமர்ந்தான். வந்தவன் முன்னவனைப்பார்த்து, 'ஐயா, எனது நீர் வேட்கை தீர ஒரு வெற்றிலையாவது கொடும்,' என்று இரந்து வேண்டினான். அதற்கு அவன், 'எனக்கும் நீர் வேட்கை மிகுதியாயிருக்கின்றது. என்னிடமுள்ளது இரண்டு வெற்றிலைகளே; ஒன்றை உமக்குக் கொடுத்துவிட்டு யான் என்ன செய்வது?' என்று சொல்லி மறுத்தான். பின்னவன், 'என்னிடம் காசு இருக்கிறது; தருகிறேன்; ஒரு வெற்றிலை தாரும்' என்று கேட்க, அதற்கும் அவன் மறுத்தான். பின்னர், பெருந்தொகை கொடுப்பதாகச் சொன்னபோது, அவன் அப்பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு ஒரு வெற்றிலையைக் கொடுத்தான். இருவரும் ஒவ்வொரு வெற்றிலையை மென்று ஒருவாறு நீர்வேட்கையைத் தீர்த்துக் கொண்டனர்.
பின்னர், இருவரும் புறப்பட்டு வெவ்வேறு வழியே சென்று, கடைசியாக ஒரு துறைமுகத்தை அடைந்து, மரக்கலம் ஏறிக் கப்பல் யாத்திரை புறப்பட்டனர். ஆனால், அக்கப்பலில் இருவரும் ஒருங்கே யாத்திரை செய்வது அவர்களுக்குத் தெரியாது. சில நாள் சென்றபின், நடுக்கடலில் புயல் அடிக்க, மரக்கலம் உடைந்துவிட்டது. கப்பல் யாத்திரிகரில் சிலர் மூழ்கி இறந்தனர். சிலர் தம் உயிரைக் காக்கக் கடலில் நீந்திக் கொண்டிருந்தனர். அவ்வாறு நீந்தியவர்களில் வெற்றிலையைப் பெரும் பொருள் கொடுத்து வாங்கியவன் ஒரு மரப்பலகையைப் பற்றிக்கொண்டு அதன் உதவியினால் நீந்திக் கொண்டிருந்தான். வெற்றிலையை விற்றவனோ யாதொரு பற்றுக்கோடுமின்றி அப்பெருங்கடலினைத் தன் வெறுங்கைகளால் நீந்தித் தவித்துக் கொண்டிருந்தான். அப்போது பலகையுள்ளவன் அவனைக் கண்டு, பெருந்தொகை பெற்றுக்கொண்ட போதிலும், தக்க நேரத்தில் ஒரு வெற்றிலையையாவது கொடுத்து உதவி செய்த அவனது நன்றியை நினைவுகூர்ந்து, தன்னிடமிருந்த ஒரே மரப்பலகையை அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் வெறுங்கைகளால் நீந்தத் தொடங்கினான்.
அப்போது மணிமேகலை இவனது இரக்கமுள்ள மனப்பான்மையினையும் தன்னலமற்ற உதவியையுங் கண்டு மெச்சி, இத்தகைய நன்மகனைக் காப்பாற்ற வேண்டுவது தனது நீங்காக்கடமை எனக்கண்டு, அவன் மீது அருள் கூர்ந்து, அவன் கண்களுக்குத் தோன்றாமலே அவனை ஒரு கரையிற் கொண்டு போய்விட்டது. பின்னர், நெடுநேரஞ் சென்று, தனக்குக் கிடைத்த மரப்பலகையின் உதவியினால் மற்றவன் கடலை நீந்தி அதே கரையையடைந்தான். அடைந்தவன், தனக்கு முன்பே தன் நண்பன் வந்திருப்பதைக் கண்டு வியப்புற்று, 'ஐயா, வெறுங்கையினால் இப்பெருங்கடலை நீந்தி எனக்கு முன்னரே எவ்வாறு வந்தீர்? பலகையுள்ள எனக்குக் கரைசேர இவ்வளவு நேரம் சென்றதே! கையினால் கடலை நீந்தியதோடு, களைப்பின்றியும் காணப்படுகின்றீரே!' என்று வினவினான். அதற்கு மற்றவன், 'நான் இங்கு வந்த விதம் எனக்குத் தெரியாது,' என்று சொன்னான். அப்போது, அதுவரையில் அவர் கண்களுக்குப் புலப்படாதிருந்த மணிமேகலா தெய்வம் அவர் கண்முன்னர்த் தோன்றி, 'நானே உன்னை இங்குக் கொண்டு வந்தேன். பெற்றோரைப் பேணி ஒழுகுகின்றவர்களையும், புத்த தர்ம சங்கம் என்னும் மும்மணிகளைச் சரணடைந்து ஒழுகுகின்றவர்களையும், பஞ்சசீலம், அஷ்டாங்க சீலம், பிரதிமோக்ஷ சம்வரசீலம் என்னும் சீலங்களை மேற்கொண்டு ஒழுகுகின்றவர்களையும், மெய் மொழி மனங்களால் பிறருக்கு நன்மை செய்கின்றவர்களையும், செய்ந்நன்றி அறிந்து உதவி செய்கின்றவர்களையும் துன்பத்திலிருந்து தேவர்கள் காப்பாற்றுவார்கள்' என்று சொல்லிற்று.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் பலகை கொடுத்துதவியவன், 'தாங்கள் சொல்லிய தர்மங்களில் ஒன்றையேனும் நான் செய்தவனல்லவே! அப்படியிருக்க, என்னைக் கடலினின்றுங் காப்பாற்றிய வகை என்ன?' என்று வியப்புடன் வினாவினான். அதற்கு அத்தெய்வம், 'உனக்கு ஒரு வெற்றிலை கொடுத்து உதவிய நன்றியை நினைத்து, நடுக்கடலில் உன் உயிரையும் பாராமல் மற்றவனுக்கு உன் பலகையைக் கொடுத்து உதவினாய். இந்த நன்றியறிதல் என்னும் உனது நற்குணத்துக்காக உன்னை நான் காப்பாற்றினேன்' என்று சொல்லி, அக்கடற்றெய்வம் மறைந்து விட்டது.
கம்போடியா தேசத்திலும் சீயாம் தேசத்திலும் மணிமேகலையைப் பற்றிய கதைகள் வழங்குகின்றனவென்று திரு. 'சில்வன் லீவி' (Silvain Levi) என்னும் ஆசிரியர் எழுதியிருக்கின்றார். அதன் சுருக்கம் இதுவாகும்:
கம்போடியா தேசத்து இராமாயணத்தில் கீழ்கண்ட பகுதி காணப்படுகின்றது. தேவர்களும் தெய்வமகளிரும் ஓர் அரங்கத்தில் கூட நடனம் செய்கிற வழக்கப்படி, அரங்கத்தில் ஒருநாள் தேவர்கள் கூடியிருந்தார்கள். அக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள மணிமேகலா தெய்வம் தனது ஒளிவீசும் அணிகளை அணிந்து, கையில் மாணிக்கக் கல் ஒன்றனை எடுத்துக் கொண்டு சென்றது. செல்லும் வழியில் 'ராமசூரன்', அல்லது 'ராம பரசு' என்னும் பெயருள்ள அசுரன் அவள் கையில் உள்ள ஒளிவீசும் மாணிக்கக் கல்லைப் பிடுங்கிக்கொள்ள விரும்பி அவளைத் தொடர்ந்தான். அதனை அறிந்த மணிமேகலை மேகத்தில் மறைந்தொளிந்தாள். அசுரன் அங்கும் அவளைத் தொடர அவள் தன் கையிலிருந்த மாணிக்க நகையை அவன் கண்முன் காட்ட அதன் ஒளியினால் கண்கூசி, அவ்வரக்கன் திகைத்து நின்றான். அப்போது மணிமேகலை அவனிடமிருந்து தப்பி ஓடினாள். அவ்வமயம் தெய்வங்களின் அரங்கத்திற்குச் செல்லுவதற்காகப் போய்க்கொண்டிருந்த வீரமிக்க 'வர்ஜூன்' என்னும் தேவன், ராமபரசு என்னும் அசுரன் மணிமேகலையைத் துரத்துவது கண்டு, அவ்விடம் வர, அவனுக்கும் ராமசூரனுக்கும் பெரும் போர் நடந்து, கடைசியில் வர்ஜூன் என்பனை ராமசூரன் தன் பரசு என்னும் ஆயுத்திதினால் கொன்று வென்றான். இந்தக் கதை கம்போடியா தேசத்து அரண்மனையில் நாடகமாக நடிக்கப்பட்டு வருகின்றது.
சயாம் தேசத்து இராமாயணத்திலும் இதே கதை கூறப்பட்டிருக்கின்றது. கி.பி 1783 முதல் 1809 வரையில் அரசாண்ட சயாம் தேசத்து அரசன், 'முதலாவது ராமன்' என்பவன் காலத்தில், இந்த இராமாயணம் எழுதப்பட்டது. இதுவும் கம்போடியா தேசத்து இராமாயணம் போன்றதே. இதில் காணப்படும் சிறு மாறுபாடு என்னவென்றால், 'வர்ஜூன்' என்னும் தேவன் பெயர் 'அர்ஜூனன்' என்று காணப்படுவதுதான். கம்போடியா, சயாம் தேசத்துக் கதைகளும் மணிமேகலை சமுத்திரத்தில் வாழ்வதாகவும் அது கடற்தெய்வம் என்பதாகவும் கூறுகின்றன.
'ச-கேச-தாது வம்சம்' என்னும் (Cha-Kesa-Dhatuvamsa) பிற்காலத்துப் பாலிமொழிப் பௌத்த நூலில், புத்தர் தமது ஆறு சீடர்களுக்கு ஆறு உரோம தாது கொடுத்ததாகவும், அவர்கள் அவற்றைக் கொண்டு தென்னாட்டிற்கு வந்தபோது, கடலால் சூழப்பட்ட ஓர் அசோக வனத்துக்கு வந்ததாகவும், அப்போது அந்தத் தாதுவை வைக்கத் தூபி கட்டுவோரைக் காணாமல் அச்சீடர்கள் வருந்த, புத்தர் கட்டளையினால் மணிமேகலா தெய்வம் அவர்களுக்குத் தோன்றி, ஒரு தூபியைக் கட்டியதாகவும் காணலாம். (மணிமேகலை 'பாசாத' என்னும் பெயருள்ள பௌத்தப் பள்ளி ஒன்று இலங்கையில் இருந்த தென்பதும், அதனை 'இரண்டாவது சேனன்' என்னும் அரசன் பிற்காலத்தில் பழுதுபார்த்துப் புதுப்பித்தான் என்பதும் தெரிகின்றன. இந்தப் பள்ளி மணிமேகலை கட்டியதாகக் கூறபடும் தூபி அன்றென்பது உறுதி.)
இலங்கையில் சிங்களவர் வழங்கும் கதை சிலவற்றிலும் மணிமேகலையைப் பற்றிய குறிப்புகள் காணபடுகின்றன. அவற்றையெல்லாம் இங்கு எழுதவேண்டுவதில்லை. ஆனால், அக்கதைகள் ஒன்றில் தமிழருக்கு வியப்பைத் தருவன எவையென்றால், 'பாலங்கா' என்பவன் தன் மனைவி 'பத்தினி' என்பளுடன் மதுரைக்குச் செல்லும் வழியில் 'வைத' என்னும் ஆறு குறுக்கிட்டதால், பத்தினி தன் விரலில் அணிந்திருந்த ஆழியைக் கழற்றி ஆற்றில் எறிய, அந்த ஆற்றுநீர் விலகி இவர்களுக்கு வழிவிட்டது என்பதும், அக்கரையையடைந்த பின்னர், மணிமேகலா தெய்வம் வந்து ஆற்றில் எறியப்பட்ட மோதிரத்தை எடுத்து பத்தினியிடம் கொடுத்தது என்பதுவுமே. இங்கே பாலங்கா என்பவன் கோவலன்; பத்தினி என்பவள் கண்னகி: வைத என்பது வைகை ஆறு.
சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு தமிழ்க் காவியங்களிலும் மணிமேகலா தெய்வத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. கடலில் கப்பலோட்டி வாணிகம் செய்த கோவலனுடைய குலதெய்வமாக இருந்தது மணிமேகலா தெய்வம் என்றும், கோவலனுடைய மூதாதையார் ஒருவர் வாணிகத்தின் பொருட்டுக் கடலில் கப்பலேறிச்சென்றபோது, நள்ளிருளில் கப்பல் கவிழ்ந்து துன்புற்றபோது, அத்தெய்வம் அவரைக் காப்பாற்றியதென்றும், அந்நன்றியை மறவாமல் கோவலன் தன் மகளுக்கு அத்தெய்வத்தின் பெயரையே சூட்டினான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது; (சிலம்பு, அடைக்கலக் காதை 21-39) கோவலன் மகள் மணிமேகலைக்கு, உதயகுமரனால் நேர இருந்த இடையூறுகளை மணிமேகலா தெய்வம் நீக்கிய செய்தி மணிமேகலை நூலினால் அறியப்படும். காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த இந்திரவிழாவை, ஓர் ஆண்டு, சோழமன்னன் நடைபெறாமல் நிறுத்திய காரணத்திற்காக மணிமேகலா தெய்வம் கோபங்கொண்டு சபிக்க, அவ்வூர் வெள்ளத்தினால் அழிந்தது என்று நூலினால் அறியப்படுகிறது. இத்தெய்வத்தைக் கடல் காவலுக்காக இந்திரன் நிறுவினான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
(மணிமேகலைத் தெய்வத்தின் படம் சயாம் தேசத்து அரசரின் அரண்மனையில் இருக்கிறது.)
2. தரைக்காவல் தெய்வம் சம்பாபதி
சாதுர் மாகராஜிக லோகம் என்னும் தெய்வலோகத்தில் உள்ள நான்கு தேவர்கள், நிலவுலகத்திலே நல்லவர்களுக்கு நேரிடுகிற துன்பங்கங்களைப் போக்கச் சில தெய்வங்களை நிறுவினார்கள் என்பது பௌத்தர்கள் நம்பிக்கை. அவ்வாறு நிறுவப்பட்ட தெய்வங்களுள் மணிமேகலை என்பது ஒன்றென்றும், இத்தெய்வம் கடலில் மரக்கலத்தில் செல்வோருக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்கி அவர்களைக் காப்பாற்றியது என்று மேலே விளக்கினோம். தரையில், நல்லவர்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்க, அத்தேவர்கள் சம்பாபதி என்னும் தெய்வத்தை நிறுவினார்கள் என்று கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால், சம்பாபதி என்னும் தெய்வத்தைக் கோதமை என்பவள் இவ்வாறு போற்றியதாக மணிமேகலை நூல் கூறுகிறது.
"துறையும் மன்றமும் தொல்வலி மரனும்
உறையுளும் கோட்டமும் காப்பாய், காவாய்!"
(மணி 9-ஆம் காதை)
"நாவலோங்கிய மாபெருந் தீவினுள், காவல் தெய்வம்" என்று சம்பாபதி கூறப்படுகிறபடியினாலே, இத்தெய்வம் நாவலந் தீவு (இந்தியா தேசம்) முழுமைக்கும் காவல் தெய்வமாக அமைந்திருந்தது. இமயமலையினின்று இத்தெய்வம் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், நாவல் மரத்தின் கீழ்த் தங்கி அரக்கரால் மக்களுக்கு நேரும் துன்பங்களைப் போக்க இத்தெய்வம் தவம் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
"இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கொளி மேனி விரிசடை யாட்டி
பொன் திகழ் நெடுவரை யுச்சித் தோன்றித்
தென்றிசைப் பெயர்ந்த இத்தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு தன்கீழ் நின்று
மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற
சம்பு என்பாள் சம்பா பதியினள்."
(மணி பதிகம் 1-8)
சம்பாபதி தெய்வம், முந்தை முதல்வி, முதுமூதாட்டி, தொன்மூதாட்டி, முதியாள், அருந்தவமிதியோள் என்றும்; சம்பு, கன்னி, குமரி என்றும் மணிமேகலை நூலில் கூறப்படுகிறது. இத்தெய்வத்தின் கோயில் குச்சரக்குடிகை எனப் பெயர் கொண்டிருந்ததென்றும், இக்கோயில் காவிரிப் பூம்பட்டினத்தில் இடுகாட்டிற்கு அருகில் இருந்ததென்றும் அந்நூல் கூறுகிறது.
இத்தெய்வத்தைப் பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. சார்ங்கலன் என்னும் பார்ப்பனச் சிறுவன், தன்னந் தனியனாய்ச் சுடுகாட்டிற்குச் செல்ல, அங்கு ஒரு பேய்மகள் பிணத்தின் தலையொன்றினைக் கையிலேந்திக் கூத்தாடியதைக் கண்டு அஞ்சி நடுங்கினான். அவ்வச்சம் நீங்காமல் அவன், வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி அச்சத்தினாலே உயிர்விட்டான். அவனுடைய தாய் கோதமை என்பவள், ஆறாத் துயரத்துடன், அவனது உடலைத் தோளில் தூக்கிக் கொண்டு சம்பாபதி கோயிலுக்கு வந்து, அவனை உயிர்பித்துக் கொடுக்கும்படி வரம் வேண்டினாள். சம்பாபதி தெய்வம் அவள்முன் தோன்றி, "அவன் விதிவசத்தினால் இறந்தானேயன்றி அவனைப் பேய் கொல்லவில்லை. அவன் ஆயுள் அவ்வளவுதான். இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் எனக்குக் கிடையாது" என்று கூறியது. இதனைக் கேட்ட கோதமை மனம் வருந்தி, "தெய்வங்கள் கேட்ட வரத்தைக் கொடுக்கும் என்று உலகோர் கூறுகிறார்கள். உனக்கு இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் இல்லை என்று கூறுவது என்னை?" என்று வினவினாள். அப்போது சம்பாபதி தெய்வம், அவள் முன்பாக, சக்கரவாளங்களிலுள்ள எல்லாத் தெய்வங்களையும் தனது தெய்வ ஆற்றலினால் வரவழைத்து, "இவர்களில் யாரேனும் இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் உடையவராயிருந்தால், நானும் உன் மகனை உயிர்ப்பித்துக் கொடுப்பேன்" என்று கோதமைக்குக் கூறியது. வந்த தெய்வங்கள் எல்லாம், 'தமக்கு அத்தகைய ஆற்றல் இல்லை' என்று கூறின. அதனால் மனம் தெளிந்த கோதமை, தன் இறந்த மகனது உடலைச் சுடலையில் அடக்கம் செய்து சென்றாள். இக்கதை மணிமேகலை (6-ஆம் காதை) யில் கூறப்பட்டுள்ளது.
சாயாவனம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலின் தென்பக்கத்தில் சம்பாபதி கோயில் ஒன்று இப்போதும் இருக்கிறதென்றும், இக்கோயில் சம்பாபதியம்மன் தெய்வம் என்றும், பிடாரி கோயில் என்றும் வழங்கப்படுகிறதென்றும் கூறுவர் டாக்டர் சுவாமிநாத ஐயர் அவர்கள். (மணி. அரும்பத அகராதி)
பிடாரி என்பது பீடையை (துன்பத்தை) அரிப்பவள் (போக்குபவள்) என்று பொருள்படும். சம்பாபதி அம்மன், உலகில் உள்ள நல்லவர்களுக்கு வரும் துன்பங்களைப் போக்குகிறவள் ஆதலின், பிடாரி என்று கூறப்படுகிறாள் போலும்.
சீர்காழி இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கே 14 மைல் தூரத்தில் உள்ள காவிரிப்பூம்பட்டினம் (இப்போது சிறுகிராமமாக) இருக்கிறதென்றும், இங்குள்ள மருவத்தூர் கிராமம் என்னும் இடத்தில், சம்பாபதி கோயில் இருக்கிறதென்றும், இங்குள்ள பல்லவனேச்சரம் என்னும் சிவன் கோயிலுக்கருகில் இரண்டு மண்மேடுகளும், சம்பாபதி கோயிலுக்கருகில் இரண்டு மண்மேடுகளும் காணப்படுகின்றன என்றும் ஆர்க்கியாலஜி இலாகா அறிக்கை கூறுகிறது.
இவ்வறிக்கையில் கூறப்படுகிற மருவத்தூர் கிராமம் என்பது சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற காவிரிப்பூம்பட்டினத்தின் மருவூர்ப்பாக்கமாக இருக்கக்கூடுமோ? இவ்வறிக்கையில் கூறப்படுகிற மேடுகளை அகழ்ந்து பார்த்தால், தமிழ்நாட்டுச் சரித்திர சம்பந்தமான பழைய பொருள்கள் ஏதேனும் கிடைக்கக்கூடும்.
3. கந்திற் பாவை
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த குச்சரக்குடிகை என்னும் பெயருள்ள சம்பாபதி கோயிலிலே ஒரு தூணில் கந்திற்பாவை என்னும் தெய்வ உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. (கந்து - தூண், பாவை - பதுமை) இவை இரட்டைத் தெய்வங்களின் உருவங்கள். துவதிகன், ஓவியச்சேனன் (சித்திரச்சேனன்) என்னும் பெயருடையவை. இவையும் பௌத்தர்களால் போற்றப்பட்ட சிறு தெய்வங்களாம். இத்தெய்வங்கள் முக்கால நிகழ்ச்சிகளை அவ்வப்போது, தம்மை வழிபடுவோருக்குக் கூறிவந்தன என்று மணிமேகலை நூலினால் அறிகிறோம்.
4. சாதுர் மகாராஜிகர்
உலகத்தின் நான்கு திசைகளிலும் நான்கு தெய்வங்கள் காவலாக நிறுத்தப்பட்டனர். அவர்களுக்குச் சதுர் மகாராஜிகர் என்பது பொதுப் பெயர். உலகத்திலே மனிதர் செய்கிற நன்மை தீமைகளை அறிந்து அவற்றை அவ்வப்போது இந்திரனுக்குத் தெரிவிக்கவேண்டியது இவர்கள் கடமை. இவர்களைத் திசைக் காவலராக நியமித்தவன் இந்திரனே. இவர்களின் பெயர் வருமாறு;
திருதராட்டிரன்: இவன் கிழக்குத் திசைக்குத் தெய்வம். இவன் கந்தவர்களுக்கு அரசன்.
விருதாட்சன்: இவன் தெற்குத் திசைக்குத் தெய்வம். இவன் கும்பாண்டர்களுக்கு அரசன்.
விருளாட்சன்: இவன் மேற்குத் திசைக்குத் தெய்வம். இவன் இயக்கருக்கு அரசன்.
வைசிரவணன்: இவன் வடக்குத் திசைக்குத் தெய்வம். இவன் நாகர்களுக்கு அரசன்.
இந்த நான்கு தெய்வங்களும் சக்கனுக்கு (இந்திரனுக்கு) அடக்கமானவர்கள் என்பதும், உலகத்திலே நான்கு திசைகளிலும் நிகழ்கிற எல்லாச் செய்திகளையும் இவர்கள் அவ்வப்போது இந்திரனுக்குத் தெரிவிக்கிறார்கள் என்பதும் பௌத்தர்களின் நம்பிக்கை.
5. சக்கன்
சக்கன் என்னும் சக்கரன் விண்ணுலகத்துக்கு அரசன். இவனை இந்திரன் என்றும் கூறலாம். இவன் பௌத்தச் சிறு தெய்வங்களுக்கெல்லாம் தலைவன். இவன் பௌத்த தர்மப்படி நடக்கிற நல்லவர்களுக்கு உதவி செய்கிறான் என்பது பௌத்தர்களின் நம்பிக்கை. இவன், விண்ணுலகத்திலே சிம்மாசனத்தின் மேல் விரிக்கப்பட்ட பாண்டு கம்பளத்தின்மேல் அமர்ந்திருக்கிறான் என்றும், ஏதேனும் சிறப்பான நிகழ்ச்சிகள் உலகத்தில் நிகழுமானால் இவனுடைய பாண்டு கம்பளம் சூடுகொள்ளும் என்றும், அப்போது இவன் அந்நிகழ்ச்சிகளை அறிந்துகொள்கிறான் என்றும் பௌத்தர்கள் நம்புகிறார்கள். இந்திரனைப் பற்றிய பல கதைகள் பௌத்த நூல்களிலே கூறப்படுகின்றன. இந்தச் சக்கனாகிய இந்திரன் வேறு; வைதீக மதத்தில் கூறப்படுகிற இந்திரன் வேறு.
6. அவலோகிதர்
பௌத்தரால் வணங்கப்படும் தெய்வங்களில் அவலோகிதரும் ஒருவர். இவர் மேலே கூறப்பட்ட தெய்வங்களுக்கு மேற்பட்டவர். ஆனால், புத்தருக்குக் கீழ்ப்பட்டவர். இவருக்கு உலகநாதர் என்றும் போதிசத்துவர் என்றும் பெயர் உண்டு. துஷிதலோகத்திலே இவர் இருக்கிறார். அறநெறியைப் பூவுலகத்தில் போதிப்பதற்காகப் புத்தராகப் பிறக்கிறவர் இவரே.
"அறிவு வறிதா யுயிர்நிறை காலத்து
முடி தயங் கமரர் முறைமுறை யிரப்பத்
துடித லோக மொழியத் தோன்றித்
போதி மூலம் பொருந்தி யிருந்து
மாரனை வென்று வீர னாகிக்
குற்றம் மூன்றும் முற்ற வறுக்கும்
வாமன் வாய்மை யேமக் கட்டுரை
யிறந்த காலத் தெண்ணில் புத்தர்களும்"
என்று மணிமேகலை கூறுவது காண்க.
இந்த அவலோகிதர் இடத்திலே அகத்திய முனிவர் தமிழ்மொழியைக் கற்றார் என்பது தமிழ்நாட்டுப் பௌத்தர்களின் நம்பிக்கை. வீரசோழிய நூலாசிரியராகிய புத்தமித்திரர் இதனைக் கூறுகிறார்.
"ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன்கேட்
டேயும் புவனிக் கியம்பிய தண்டமிழ் ..."
என்று அவர் கூறுகிறார்.
அவலோகிதரைப் பௌத்தர்கள் வணங்குகிறார்கள். தமிழ்நாட்டிலும் பௌத்தமதம் பரவியிருந்த காலத்தில் அவலோகிதர் உருவ வழிபாடு நடந்து வந்தது. நாகைப்பட்டினத்தில் இருந்து கிடைத்த அவலோகிதரின் செம்பு உருவங்களைச் சென்னைக் காட்சிச் சாலையில் இன்றும் காணலாம்.
Image may contain: 1 person
பூம்புகாரின் காவல் தெய்வம் சம்பாபதி தேவி
முற்காலச் சோழர்களின் தலைநகராக மட்டுமின்றி, துறைமுக நகரமாகவும் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த ஊர், பூம்புகார். மிக மிகத் தொன்மையான வரலாற்றுச் சிறப்பு இந்த நகரத்துக்கு உண்டு. பூம்புகார் கடலின் சீற்றத்தால் மறைந்துபோனாலும், இன்றைக்கும் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் மூலமாக அதன் சிறப்புகளையும் பெருமைகளையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
அன்றைய பூம்புகாரைக் கடல் கொண்டுவிட்டாலும், கடல் சீற்றத்திலிருந்து தப்பி எஞ்சி இருக்கும் ஒரு பகுதி இன்றைக்கும் உண்டு. அது பூம்புகாரின் காவல் தெய்வமாகக் கொண்டாடப்படும் சம்பாபதி கோட்டம். தற்போது இந்தப் பகுதி `சாயாவனம்’ என்று அழைக்கப்படுகிறது.
பூம்புகாருக்குக் `காவிரிப் பூம்பட்டினம்’ என்ற இன்னொரு பெயர் ஏற்பட்டதற்குக் காரணம், இந்தச் சம்பாபதி கோட்டத்தில் அருள்புரியும் பெண் தெய்வமான சம்பாபதிதான். இதை மணிமேகலை காப்பியத்திலிருந்து நாம் அறிந்துகொள்ள முடியும்.
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் றனாது
காகங் கவிழ்த்த காவிரிப் பாவை
செழுங்குணக் கொழுகிய சம்பா பதியயல
பொங்கு நீர்ப்பரப்பொடு பொருந்தித் தோன்ற
முற்காலத்தில் சூரிய குலத்தைச் சேர்ந்த காந்தமன் என்ற மன்னன், தனது நாட்டில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மக்கள் தவிப்பதைக் கண்டு, தண்ணீர் வேண்டித் தவம் புரிந்தான். தன் குடிமக்களின் துன்பம் போகத் தன்னை வருத்தித் தவமியற்றும் மன்னன் காந்தமனிடம் அன்பும் இரக்கமும்கொண்ட அகத்திய முனிவர், தம் கைக் கமண்டலத்தில் இருந்த காவிரி நீரை விடுவித்தார். அது கிழக்காகப் பாய்ந்துசென்று சம்பாபதிக் கோயிலுக்கு முன்பாகத் தவழ்ந்தோடியது. வரப்போகும் காலத்தில் சோழர்தம் குலக்கொடியாகத் திகழப்போகும் காவிரி, தன்னை விடுவித்த அகத்திய முனிவரின் உத்தரவின்படி, பெண்ணாக வடிவெடுத்துச் சம்பாபதி தெய்வத்தைத் தொழுது நின்றாள்.
தனக்கு முன்பாகத் தவழ்ந்து வந்து, பெண்ணுருக்கொண்டு தன்னைத் தொழுது நின்ற காவிரியைப் பார்த்து, `எப்போது பிரம்மதேவன் இந்த உலகத்தையும் உலகத்தில் உள்ள உயிரினங்களையும் படைத்தானோ, அப்போது முதலே இந்த ஊர் என் பெயரில் சம்பாபதி என்று அழைக்கப்பட்டது. இனி, உன் பெயரால் இந்த ஊர் காவிரிப்பூம்பட்டினம் என்று அழைக்கப்படுவதாக' என்று வரம் தந்து வாழ்த்தினாள்.
இந்தச் சம்பாபதி தெய்வம் உலகம் தோன்றிய போதே தோன்றியவள் என்பதால், இவளையே `முதல்வியான இறைவி’ என்றும் `முதியோள்’ என்றும் சிறப்பித்துச் சொல்கிறார்கள். இவளுடைய கோயில், `முதியோள் கோட்டம்’ என்று அழைக்கப்பட்டதாக `பதியோர் தம்மொடு பலர் தொழுதேத்து முதியோள் கோட்டம்' என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. மேலும், `தீவ தெய்வம்’ என்றும் சம்பாபதியைப் போற்றுகிறது மணிமேகலை காப்பியம். தீவினை காக்க வந்த தெய்வமாம் இவள்!
தீவு என்பது மேருமலைக்குத் தெற்கிலிருந்த நாவலந்தீவைக் குறிப்பதாகும். ஆதிகாலத்தில் மேருமலைக்குத் தெற்கில் உள்ள நாவலந்தீவுப் பகுதியில் அரக்கர்களின் தொல்லை அதிகமாக இருந்தது. அரக்கர்களின் தொல்லையிலிருந்து மக்களைக் காப்பதற்காக, உலகின் ஆதிமுதற் தெய்வமான அம்பிகையே சம்பாபதி தெய்வமாகத் தோன்றினாளாம்! அவள் எங்கு தோன்றி எப்படி இங்கு வந்தாள்?
பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றி
தென்திசை பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்
பொன்போல் ஒளிரும் சிகரங்களைக் கொண்ட மேருமலையின் உச்சியில் தோன்றிய பெண் தெய்வமாம் இவள். பின்னர், தென் திசை மக்களைக் காக்கத் திருவுள்ளம்கொண்டு பூம்புகாரை அடைந்த அந்தப் பெண் தெய்வம்,
சாகைச் சம்பு தன் கீழ் நின்று
மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
வெந்திற லரக்கர்க்கு வெம்பகை தோற்ற
சம்பு என்பாள் சம்பாபதியினள்
அடர்த்தியான கிளைகளை உடைய பெரிய நாவல் மரத்தினடியில் வந்து அமர்ந்ததால், `சம்பு’ என்று பெயர் பெற்றாள். சம்பு என்றால் `நாவல்’ என்று பொருள். வடமொழியில் `ஜம்பு’ என்றும் அழைப்பார்கள். நாவல் மரங்கள் அடர்ந்து இருந்தபடியால்தான் அந்தத் தீவு `நாவலந்தீவு’ என்றும் `ஜம்புத்வீபம்’ என்றும் அழைக்கப்பட்டது.
சம்பாபதி தெய்வம், அரக்க குணம் கொண்டவர்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற மட்டும் வரவில்லை. பூம்புகாரின் நீர்நிலைகள், பசுமையான சோலைகள், மக்களின் வாழ்விடங்கள், தெய்வங்கள் உறையும் திருக் கோயில்களையும் காக்கும் காவல் தெய்வமாகவும் இருந்துள்ளதை...
`துறையும் மன்றமுந் தொல்வலி மரனும்
உறையுளுங் கோட்டமும் காப்பாய்' - என்று பூம்புகாரின் மக்கள் சம்பாபதி தெய்வத்தை வாழ்த்தி வணங்கியதிலிருந்து நம்மால் அறிய முடிகிறது. பூம்புகார் மக்கள் மட்டுமல்லாமல், வாணிபத்தின் பொருட்டுப் பலப் பல அயல் தேசங்களிலிருந்து வந்தவர்களும் வழிபட்ட சம்பாபதி தெய்வத்தின் கோயிலை, `முதியோள் கோட்டம்’ என்றே மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது. இந்தக் காப்பியத்தில் வரும் சில சம்பவங்கள் இந்தக் கோயிலுடன் தொடர்பு கொண்டிருந்ததையும் நம்மால் அறிய முடிகிறது.
மாதவியின் மகளான மணிமேகலையின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை அடைய விரும்பினான் இளவரசனான உதயகுமாரன். ஒருமுறை அவன் மணிமேகலையை அடைய விரும்பி அவளைத் துரத்தியபோது, அவனிடமிருந்து தப்புவதற்காக, மணிமேகலை அடைக்கலம் புகுந்தது சம்பாபதி கோயிலுக்குள் தான். அங்கே அவள் தன்னை காயசண்டிகையாக மாற்றிக்கொள்கிறாள் என்று நீளும் கதை.
தகாத விருப்பத்துடன் வந்தவன் என்பதால், உதயகுமாரனால் முதியோள் கோட்டமான சம்பாபதி கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. எனவே, வெளியில் இருந்தபடியே
'முதியாள் உன்றன் கோட்டம் புகுந்த
மதிவாள் முகத்து மணிமேகலை தனை
ஒழியப் போகேன்' என்று சூளுரைத்ததாக மணிமேகலை குறிப்பிடுகிறது.
இப்படி மணிமேகலை காப்பியத்தில் மிகவும் சிறப்பாக விவரிக்கப்பட்டிருக்கும், நாவலந்தீவின் மூத்த தெய்வம் சம்பாபதி தெய்வம் குடியிருக்கும் ஆலயம், கடல்கோளால் மூழ்காமல் இருந்தாலும் கூட, கோயில் முற்றாகச் சிதைந்துபோய், தற்போது ஒரு சிறிய செங்கற் கட்டடத்தில் முறைப் படியான பூஜைகள் எதுவும் இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
பூம்புகாருக்குச் சுமார் இரண்டு கி.மீ தொலைவில் உள்ள சாயாவனம் என்ற ஊரின் தென்புறத்தில், அடர்த்தியான புதர்கள் மண்டிக்கிடக்கும் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றால், சற்றுத் தொலைவில் ஒரு வெட்டவெளியில் முதலில் நம் கண்களில் படுவது ஆண் பூதம், பெண் பூதம் என்ற இரண்டு பூதங்களின் பிரமாண்டமான சிலைகள். இந்த இரண்டு பூதங்கள்தான் சம்பாபதி கோயிலைக் காவல் காத்து வருவதாகச் சொல்கிறார்கள். பிரமாண்டமான அந்தப் பூதங்களின் உடல்கள் மெல்லிய ஒற்றை ஆடையால் போர்த்தப் பட்டிருப்பதைக் கண்டதுமே, கோயிலின் நிலைமை நமக்குப் புரிந்துவிட்டது.
பூதங்களுக்கு அருகில் ஒரு சிறிய செங்கற் கட்டடத்தில், ஒற்றை விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் சம்பாபதி அம்மன் திருக்காட்சி தருகிறாள். சிதிலமடைந்த ஆலயத்திலும், கண்களில் கனிவும், கம்பீரமும் பளிச்சிட காட்சி தரும் சம்பாபதி தேவிக்கு, ஒருகாலத்தில் மிக விமர்சையாகத் திருவிழாக்கள் நடைபெற்றதாகவும், தற்போது தினசரி ஒரு கால பூஜைக்கே மிகவும் சிரம நிலையில் இருப்பதாகவும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள். திருவிழாக்கள் நடைபெற்றது என்று சொன்னால், உற்சவ மூர்த்தம் இருக்க வேண்டுமே என்று நினைத்து, உற்சவ மூர்த்தம் பற்றிக் கேட்டோம். போதிய பாதுகாப்பு இல்லாததால், உற்சவ மூர்த்தம் அதே ஊரில் உள்ள சாயாவனேஸ்வரர் கோயிலில் இருப்பதாகத் தெரிவித்தார்கள்.
வடதிசை மேருமலையிலிருந்து தென்திசை காக்க வந்த மூத்த தெய்வம்; சம்பாபதி என்று தன் பெயரில் வழங்கப்பட்ட ஊரின் பெயரை, சோழர்தம் குலக்கொடியாக விளங்கிய காவிரியின் பெயர் கொண்டு காவிரிப்பூம்பட்டினம் என்று அழைக்கும்படி செய்த கருணையின் உருவம்; மணிமேகலைக்கு அடைக்கலம் தந்த அன்பு வடிவமான சம்பாபதி தெய்வம் அருளும் சம்பாபதி கோயிலின் தொன்மைச் சிறப்பை உணர்ந்து, சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் கோயிலைப் புதுப்பித்துச் சம்பாபதி தெய்வத்துக்கு நித்திய பூஜைகள் நடைபெறச் செய்வார்களா? அவளுடைய திருவருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்வார்களா?' என்ற ஆதங்கத்துடனேயே அங்கிருந்து புறப்பட்டோம்.
No comments:
Post a Comment