ஜன்னலுக்கு வெளியே விளையாடி மகிழும் சக வயதினரைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சிறுமிக்கு ஏக்கம் பொங்கும். ஆனபோதும், விளையாட்டைப் புறக்கணித்த அவரது பெரும்பொழுதுகள், பரதநாட்டியப் பயிற்சியில் கழியும். அந்தச் சிறுமியின் தாயார், பிஞ்சு மனத்தில் தனியான கனவொன்றை விதைத்திருந்தார்.
திரையில் மின்னலென நாட்டியமாடும் வைஜெயந்திமாலாவைச் சுட்டிக்காட்டி, ‘பரதநாட்டியத்தில் வென்றால் நீயும் இவர்போல் புகழ் பெறலாம்’ என்று கூறியிருந்தார். ஹேமமாலினி என்ற அப்பெண்ணின் மனத்தில் ஆழப்பதிந்த அந்த பால்யத்துக் கனவு, அடுத்து வந்த ஆண்டுகளில் நனவானபோது, அவர் பாலிவுட்டின் ‘கனவுக் கன்னி’ என்ற பெருமைக்கு உரியவரானார்.
காவிரிக் கரையில் முளைத்த கனவு
தஞ்சை அருகே காவிரியின் மடியிலிருந்த கிராமமொன்றில் பிறந்த ஹேமமாலினி, தாயார் ஜெயாவின் அரவணைப்பால் 14 வயதுக்குள் பரதக் கலையில் தேறியிருந்தார். அவரது நடன ஆற்றல் சில தமிழ், தெலுங்குப் படங்களில் நடனமணியாகத் தலைகாட்ட உதவியது. அதற்கு அப்பால் சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ‘பெண்ணின் நீளமான முகவெட்டு கதாநாயகிக்குத் தோதுப்படாது’ என எடுத்த எடுப்பில் நிராகரித்தார்கள்.
இயக்குநர் தர் படத்தில் தருவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்த வாய்ப்பும் கடைசி நேரத்தில் காரணமின்றித் தட்டிப்போனது. தாயும் மகளும் தங்களது கனவு தகர்ந்ததாகச் சோர்ந்தபோது, பம்பாயிலிருந்து அழைப்பு வந்தது. அதுவும் ராஜ்கபூருக்கு ஜோடியாகும் வாய்ப்பு! ஹேமமாலினியின் தாயார் மகளை ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொண்டார்.
‘ட்ரீம் கேர்ள்’
‘சங்கம்’ திரைப்பட வெற்றியைத் தக்க வைப்பதற்கான முயற்சியில் ராஜ்கபூர் அப்போது மும்முரமாக இருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து அவருடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் வைஜெயந்திமாலா. திடீரென அவர் விலகிக்கொண்டது ராஜ்கபூருக்கு ஏமாற்றமளித்தது. வைஜெயந்தியைப் போன்றே நடனம் அறிந்த தென்னிந்திய முகத்துக்கு வலைவீசுமாறு தனது குழுவினரைப் பணித்தார். முதல் பார்வையிலேயே ஹேமமாலினியை ராஜ்கபூருக்குப் பிடித்துப்போனது.
16 வயது ஹேமமாலினி தன்னைவிட சுமார் 30 வயது மூத்த ராஜ்கபூரின் ஜோடியாக ‘சப்னோ கா சௌதாக’ரில் (1968) தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். படம் பெரிதாகப் போகாவிட்டாலும், படத்தின் பாடல்களும் அவற்றுக்கு உயிர்கொடுத்த புதுமுக நடிகையின் நடனமும் அழகும் ரசிகர்களைக் கிறுகிறுக்க வைத்தன.
படத்துக்கான விளம்பர வாசகங்களை வடிவமைக்கையில், நாயகிக்கு ‘ட்ரீம் கேர்ள்’ என்ற அடைமொழியைப் படத்தின் தயாரிப்பாளர் பி.அனந்த சுவாமி பரிந்துரைத்தார். அவரது வாய் முகூர்த்தம், அடுத்த இருபதாண்டுகளுக்கு பாலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம் வந்தார் ஹேமமாலினி.
அறுபதுகளுக்கே உரிய ஒருசில மசாலா படங்களில் தலைகாட்டிய ஹேமமாலினிக்கு, அடுத்து தேவ் ஆனந்தின் ஜோடியான ‘ஜானி மேரா நாம்’ (1970) படம் திருப்புமுனையானது. தொடர்ந்து எழுபதுகள் நெடுக அவருக்கு ஏற்றம்தான். சுழன்றாடும் நடனத் திறமையும் கவர்ந்திழுக்கும் அழகுப் பதுமையுமாகச் சக நடிகையர் மத்தியில் தனி அடையாளம் வாய்த்தது. நடிப்பிலும் ஜொலிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடி அமைத்துக்கொண்டார் ஹேமமாலினி. இளம் விதவையாக ‘அந்தாஸ்’ (1971), எதிர்மறையான கதாபாத்திரத்தில் ‘லால் பதார்’ (1971), சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை வாங்கித்தந்த ‘சீதா ஔர் கீதா’ (1972) என தனது தொடக்ககாலப் படங்களிலே நடிப்பில் வித்தியாசம் காட்டினார்.
இந்தத் தனித்தன்மை பாலிவுட்டின் வெற்றிகரமான வணிகப்படங்களின் கதாநாயகியாக அவரை நிலைநிறுத்தியதுடன், ஸ்மிதா படீல், சப்னா ஆஸ்மி என மாற்றுத் திரைப்படங்களின் வழியே களமிறங்கிய திறமை மிக்க நாயகிகளின் போட்டியையும் சமாளிக்க உதவியது. கலைவாழ்வின் உச்சமாக, தனது பெயரின் முன்னொட்டாக இருந்த ‘ட்ரீம் கேர்ள்’ (1977) என்ற தலைப்பிலான படத்திலும் நடித்து கனவுக் கன்னி அடையாளத்தைத் தக்கவைத்தார்.
ஈடேறிய கனவுகள்
ஐம்பதுகளிலும், அறுபதுகளின் தொடக்கத்திலும் தனது அழகும், நடிப்பும் ஒருசேர மிளிர்ந்த மதுபாலா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டார். நடிப்புலகின் உச்சத்திலிருந்த அவரின் அகால மரணம் ரசிகர்களை வெகுவாகப் பாதித்தது. மதுபாலா மறைந்த வேளையில் திரையுலகில் கால்வைத்த ஹேமமாலினி, மதுபாலாவின் வெற்றிடத்தை ஆக்கிரமித்தார். வைஜெந்திமாலாவை இலக்காக வரித்திருந்த ஹேமமாலினி, அவரையும் தாண்டி வெற்றிப்பாதையில் நடைபோட்டார். தமிழில் தன்னை நிராகரித்த இயக்குநர் தரின் புதிய இந்திப் படத்தில், அமிதாப் பச்சன் ஜோடியாக ஹேமமாலினி ஒப்பந்தமானதும் பின்னர் நடந்தது.
பட வாய்ப்புக்காகத் தவமிருந்தனர்
பெரும் நட்சத்திரங்கள் திரண்ட ‘ஷோலே’ (1975) பட வாய்ப்பை ஏற்பதில் ஹேமமாலினி ஏகமாகத் தயங்கினார். ‘அந்தாஸ்’ வெற்றியைத் தந்த ரமேஷ் சிப்பிக்காக அரைமனதுடன் ஒத்துக்கொண்டார். தனது ‘பஸந்தி’ என்ற வாயடிக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தை மெருகேற்றி, படத்தின் பெரும் வெற்றிக்கு இணையாகக் கொண்டாடப்பட்டார். ‘மெஹ்பூபா (1976), ஹாலிவுட் பாணியிலான ‘சரஸ்’ (1976) ஆகிய படங்கள் ஹேமமாலினியின் திறமைக்குத் தீனிபோட்டன. ‘கினரா’ (1977) அவரது பரதநாட்டிய திறமைக்கு மேடை தந்தது.
ஹேமமாலினி சேலை உடுத்தும் விதம், கண் மையிடுதல் போன்ற பாணி பிரபலமானது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரின் இந்தி உச்சரிப்பு தொடக்கத் திரைப்படங்களில் பரிகசிப்புக்கு ஆளானபோதும், பின்னர் சரளம் பயின்று அதன் வித்தியாசமான வேகத் தொனிக்காகவே ரசிகர்களைக் கொள்ளைகொண்டார். சக நடிகையரைவிட ஊதியத்தில் உச்சம் தொட்டதுடன், பாலிவுட்டில் தனது தனித்துவ நிபந்தனைகளை வீசும் முதல் நடிகையாக உருவெடுத்த ஹேமமாலினிக்காகப் படத் தயாரிப்பாளர்கள் காத்திருந்தது நடந்தது. ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல; உடன் நடித்த நடிகர்கள் மத்தியிலும் ஹேமமாலினியை முன்னிறுத்திக் கடும் போட்டி மூண்டது.
கனவுகளை வென்றார்
ஜிதேந்திரா, சஞ்சீவ் குமார், தர்மேந்திரா என ஒரே நேரத்தில் மூன்று முன்னணி நடிகர்கள் ஹேமமாலினியுடன் ஜோடி சேரத் துடித்தனர். திரைக்கு வெளியே இவர்களில் ஒருவருடன் காதல், ரகசியத் திருமணம் என்றெல்லாம் ஹேமமாலினி அடிக்கடி செய்தியானார். இந்தப் பட்டியலில் இறுதியாகச் சேர்ந்த தர்மேந்திரா, படப்பிடிப்பின் ‘ரீடேக்’ உட்பட சில பல ரசிக்கத்தக்க தகிடுதத்தங்களைச் செய்து ஹேமமாலினியின் மனத்தை வென்றார்.
ஏற்கெனவே திருமணமாகி சன்னி, பாபி என 2 மகன்களைக் கொண்டிருந்த தர்மேந்திரா, ஹேமமாலினியை மணந்து இஷா, அஹனா என 2 மகள்களுக்கும் தந்தையானார். கணவரின் துணையுடன் திருமணத்துக்குப் பின்னரும் பாலிவுட் வாய்ப்புகளில் சறுக்காதிருந்தார் ஹேமமாலினி. எண்பதுகளில் ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் ஆகிய நடிகர்களின் பல வெற்றிப் படங்களுக்கு அவரும் காரணமானார். அடுத்த பத்தாண்டுகளில் நடிப்புடன் படங்களைத் தயாரித்து, இயக்கவும் செய்தார். தொடர்ந்து அரசியலில் கால்வைத்தவர், பாஜகவின் மாநிலங்களவை (2003), மக்களவை (2014) உறுப்பினராகவும் ஒரு சுற்று வலம் வந்தார்.
அக்டோபரில் தனது 71-ம்பிறந்தநாளைக் கொண்டாடிய ஹேமமாலினி, அரசியலைக் குறைத்துக்கொண்டு மகள்களுடன் மரபான நடனக்கலைகளை வளர்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். நாட்டியம், நடிப்பு என ஹேமமாலினியின் பதின்மத்துக் கனவுகள் ஈடேறியதுடன், ஒரு தலைமுறை இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் நீடித்துள்ளார். இவற்றுக்கு அப்பால், சினிமாவில் கால் வைக்கும் பெண்களின் இலட்சியக் கனவாகவும் ஹேமமாலினி தொடர்கிறார்.
No comments:
Post a Comment