KALAIGNAM FIXED RAJINIKANTH
AS HERO ,FIRST HE BOUGHT HOUSE
GIVE IT TO HIM AS A GRATITUDE
தேவர் ஃபிலிம்ஸ் கதை இலாகாவில் பணையாற்றிவந்த கலைஞானத்தை...‘நீ தனியா படம் பண்ணு... நான் உனக்கு ஃபைனான்ஸ் ஏற்பாடு பண்ணித்தர்றேன்...’ எனச் சொன்னார் தேவர். இதன்படிதான்‘பைரவி’படத்தை ரஜினியை கதாநாயகனாக வைத்து தயாரித்தார் கலைஞானம். ஆனால்... ரஜினியை ஹீரோவாக்கியதில் தேவருக்கு அப்போது உடன்பாடில்லை. ‘ஜெய்சங்கரை ஹீரோவாப் போடு... ரஜினியை வில்லனாப் போடு’ என்றார். ஆனால்... ரஜினிதான் ஹீரோ என்பதில் கலைஞானம் உறுதியாக இருந்ததால்... அந்தப் படத்திற்கு ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்துதர மறுத்துவிட்டார் தேவர். இருப்பினும்... விடாமுயற்சியோடு போராடி... ‘பைரவி’படத்தி தயாரித்தார் கலைஞானம். இங்கிருந்துதான் ரஜினி என்கிற சூப்பர்ஸ்டார் உருவானார்.
"நான் ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழிப் படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிச்சிக்கிட்டிருந்தப்போ... கலைஞானம் சார் வந்து, “பைரவி என்கிற கதையைச் சொல்லி... 25 ஆயிரம் சம்பளம் தர்றேன்... நீங்கதான் ஹீரோ.. நான் நாளைக்கி வந்து... ஃபைனல் பண்ணிக்கிறேன்னு சொன்னார். எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. நான் வில்லனாகத்தான் நடிக்க ஆசைப்பட்டேன். அதுதான் எனக்கு சரியா இருக்கும்... ஹீரோன்னா... அதுல அதுல பல கஷ்டங்கள் உண்டு. என்ன செய்யலாம்?னு புரியாத நிலையில ஒரு முடிவுக்கு வந்தேன். நாளைக்கி கலைஞானம் வந்ததும்... சம்பளத்தை உயர்த்திக் கேட்டா... நம்மளை விட்டுடுவார்னு நினைச்சேன். மறுநாள்... கலைஞானம் சார் வந்தார். ‘சார்... 50 ஆயிரம் ரூபா சம்பளம் வேணும்... அட்வான்ஸா ஐயாயிரம் குடுங்க’னு சொன்னேன். உடனே அவர்...‘இந்தாங்க அட்வான்ஸ்’னு 30 ஆயிரம் ரூபாயை மொத்தமா கொடுத்து அசத்தியதோடு... ‘உங்களுக்கு ஜோடி ஸ்ரீப்ரியா’னும் சொன்னார். அடேங்கப்பா... ஆட்டுக்கார அலமேலு புகழ் நடிகையா?னு எனக்கு வியப்பு... அந்த வியப்பு முடியும் முன்னமே... ‘சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் ஸ்ரீகாந்த் உங்களுக்கு வில்லனா நடிக்கிறார்’னு சொன்னார். மகிழ்ச்சியில் நான் திக்குமுக்காடிப்போனேன்.
படம் வெளியான பிறகு... கலைஞானம் சார் என்னைப் பார்க்கும்போதெல்லாம் தூரத்துல இருந்தபடியே ‘ரஜினி சௌக்கியமா?’னு புன்னகையோடு... என் பதிலுக்குக்கூட காத்திருக்காமல் போய்க்கிட்டே இருப்பார். ‘ஒரு படம் செய்து கொடுங்க’னு என்கிட்ட கேட்கவே மாட்டார். அழுதபிள்ளைதானே பால் குடிக்கும்... ஆனா அவரோ...‘நான் (ரஜினி) நல்லா இருந்தாபோதும்ங்கிற நல்ல உள்ளம் கொண்டவர்.
கலைஞானம் சார்... நான் தப்பு செய்துட்டேன். அவருக்கு நான் ஒரு படம் செய்து கொடுத்திருக்கணும்... “இப்படி... 25.12.2017 அன்று... ராகாவேந்திரா திருமண மண்டபத்தில் தன் ரசிகர்களிடம் அரசியல் அறிவிப்பை வெளியிட்டபோது கலைஞனத்தை கௌரவப்படுத்தினார் ரஜினி.
ரஜினி தலைமையில், பாரதிராஜாவின் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் 14.08.2019 அன்று கலைஞானம் அவர்களின் கலைச் சேவையைப் பாராட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது.
இதில் பேசிய சிவக்குமார், “கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்” என்கிற தகவலைச் சொன்னார். இதையடுத்து... அமைச்சர் கடம்பூர் ராஜீ பேசும்போது... “கலைஞானத்திற்கு அரசு சார்பில் வீடு தரபப்டும்” என்றார். ரஜினி தனது பேச்சின்போது... “ஸாரி... கலைஞானம் அவர்கள் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்ங்கிறது எனக்கு இப்பத்தான் தெரியும். ‘நல்லாருக்கீங்களா?’னு கேட்டா... ‘நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கேன்’னு சொல்லுவார்.
வெள்லை வேட்டி சட்டையில பளிச்சுனு சிரிச்சமுகமா இருக்கிற அவரைப் பார்க்கும் போது... அவர் கஷ்டபப்டுறமாதிரி தோணாது. அழுத குழந்தைக்குத்தான் தாய்கூட பால் கொடுப்பா. கலைஞானம் என்கிட்ட கேட்டிருக்கணும். பத்து படமாவது அவருக்கு நான் செய்துகொடுத்திருக்கணும். கலைஞானத்துக்கு வீடு கொடுக்கிற வாய்ப்பை நான் அரசாங்கத்துக்கு தரமாட்டேன்... நான் வாங்கித்தருவேன். கலைஞானத்தோட கடைசி மூச்சு... நான் வாங்கித்தர்ற வீட்டுலதான் போகணும். இன்னும் பல்லாண்டுகாலம் கலைஞானம் நலமுடன் வாழணும்” என்றார் ரஜினி.
விழாவுக்குகான வெறும்பேச்சாக இல்லாமல்... கலைஞானத்திற்கு வீடு வாங்கித்தருவதில் கலைஞானத்தைவிட தீவிரமாக இருந்தார் ரஜினி. விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகைக்கு செக் போட்டு ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத்தான் ‘தர்பார்’ படப்பிடிப்பிற்குச் சென்றார் ரஜினி. கடந்த 5.10.2019 வெள்ளியன்று... அமுதினி ஃபிளாட்ஸ், 34 விநாயகம் தெரு, வெங்கடேசன் நகர், விருகம்பாக்கம், சென்னை முகவரில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் 1320 சதுரடியில் மூன்ரு படுக்கையறைகளும், இரண்டு கார் பாக்கிங்களும் கொண்ட வீடு வாங்கப்பட்டது.
07.10.2019 அன்று காலை பத்துமணிக்கு தான் வாங்கிக்கொடுத்த புதுவீட்டுக்கு ரஜினி வந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் கலைஞானம். பூஜையறையில் குத்துவிளக்கேற்றினார் ரஜினி. கூடவே பாபா படம் ஒன்றையும் பரிசளித்தார். அதன்ப்பின் ரஜினிக்கு மில்க் ஸ்வீட் தரப்பட்டது. அதைச் சாப்பிட்டபின் கலைஞானம் தன் குடும்பத்தினரை ரஜினிக்கு அறிமுகம் செய்துவைத்தார். பிறகு வீட்டைச் சுற்றிப்பார்த்த ரஜினி... “வீடு தெய்வீகமா இருக்கு” என மகிழ்ச்சி தெரிவித்தார். அதன்பின் விடைபெற்றுச் சென்றார் ரஜினி. கலைஞானத்திடம் நாம் இதுபற்றி கேட்டபோது.... மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக... அவர் சொன்னார்....“வீடு வாங்கிக்கொடுத்தார்... விளக்கும் ஏற்றிவைத்தார்”
No comments:
Post a Comment