Friday 14 August 2020

GOLDEN DAYS OF TAMIL CINEMA 1980`S




GOLDEN DAYS OF
 TAMIL CINEMA 1980`S




பாட்டு புக், டேப் ரெக்கார்டர்..! - சினிமா உலகின் எவர் கிரீன் காலகட்டம் `1980s’ #MyVikatan-மணிகண்டபிரபு

80களில் பிறந்தவர்களின் காலம் பொற்காலம் எனலாம். இணையம் இல்லாத உலகம் அது. தன் பிரிய நடிகரை ஆத்மார்த்தமாய் ரசித்தது, பாட்டு புத்தகத்தை இறை வாழ்த்து போல் மனனம் செய்தது, டேப் ரெக்கார்டரில் பாட்டு கேட்டது, போஸ்டரை பார்த்தாலே தியேட்டருக்கு வர ஆர்வம் ஏற்படுத்தியது என ரசனையான காலம் 80களின் உலகம். ரசிகர்களுக்கு பயந்தே நல்ல படங்கள் வந்தகாலம். குடும்பத்துடன் திருவிழாவுக்கு போவதைப் போல அப்போது மக்கள் தியேட்டருக்குச் சென்றனர்.

ஒரு நடிகனின் முகம் ரசிகனை தியேட்டருக்கு வரவழைப்பதாய் இருந்தாலும் அவனை இரண்டரை மணி நேரம் உட்கார வைப்பது தான் இயக்குநரின் சாமர்த்தியம். அன்றைக்கு இருந்த நவீன உக்திகள் கொண்டு இயக்குநரும் எழுத்தாளர்களும் சிக்ஸர் அடித்த களம் 80 களின் காலம். 1980 முதல் 1990 வரை 50க்கும் மேற்பட்ட படங்கள் சதமடித்தவை, இரட்டை சதமடித்தவை. ஒரு படம் நூறு நாள் ஓடினால் அவை இரண்டாம் முறை தியேட்டரில் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டின.

#ரஜினி Vs கமல்

தற்போது பெரிய நடிகர்களின் படங்கள் ஒன்றாய் வருவது குறைந்துவிட்டாலும் அன்றைய உச்ச நட்சத்திரங்களான ரஜினி,கமல் படங்கள் வருவது இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பார்ப்பது போல சுவாரஸ்யமானது.

1980-வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வேலையில்லா காலகட்டத்தை சிறப்பாக காட்டியிருப்பார்கள். ரஜினியின் பொல்லாதவன் படம் மாறுபட்ட கதைக்களம், வித்தியாசமான நடிப்பு என அதகளப்படுத்தியது. இதே ஆண்டு பில்லா, முரட்டுக்காளை என பல படங்கள் ஹிட்டடித்தன.


1982 ஆண்டு தெலுங்கில் வந்த பிரேமாபிஷேகம் படம் வாழ்வே மாயமாய் மாறியது. அக் கதாபாத்திரமாக கமல் வாழ்ந்திருப்பார். அதே ஆண்டில் வந்த சகலகலா வல்லவன் பட்டி தொட்டியெல்லாம் தாறுமாறு தக்காளிச்சோறு. அதே காலத்தில், மிக வித்தியாசயமாக ரஜினியின் எங்கேயோ கேட்ட குரல் வந்தது.

அடுத்தடுத்த ஆண்டில் கமலின் தூங்தூங்காதே தம்பி தூங்காதே, காக்கிச்சட்டை, ஜப்பானில் கல்யாணராமன், நாயகன், வெற்றிவிழா, அபூர்ச சகோதரர்கள், சத்யா என பல படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன.

ரஜினியின் கிராப்பில் 80 முதல் 90 வரை ஹிட்டடித்த படங்கள் அதிகம். நல்லவனுக்கு நல்லவன், நான் சிகப்பு மனிதன், படிக்காதவன் என அவரது ஹேர்ஸ்டைலுக்காகவே ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அதுவரை ஒரே ஹேர்ஸ்டைலில் இருந்தவர் அடுத்து வந்த மனிதனில் முடியை தூக்கி சீவ ஆரம்பித்து வித்தியாசம் காட்டினார். அடுத்து மாப்பிள்ளையில் சிக்ஸர் அடித்திருப்பார். ஒவ்வொரு முறை இருவரின் படத்தில் யாரேனும் ஒருவரின் படம் தோல்வியடைந்தால் அடுத்த பட வெற்றிக்கு ரசிகர்கள் மானசீகமாய் தவமிருந்தார்கள்.

# இயக்குநர்கள்

1980ல் முற்றிலும் புது முகங்களுடன் வந்தது ஒருதலைராகம். முதல் ரவுண்டில் சில தியேட்டர்களில் படம் ஓடாமல் அடுத்து பாடல் மூலம் பரபரப்பு ஏற்படுத்தி மாஸ் ஹிட்டானது. அடுத்த ஆண்டில் ரயில் பயணங்களில் என டேக் ஆப் ஆனது தமிழ் சினிமா.

இதயகோயில், பகல்நிலவிற்கு பின் வந்த மெளனராகம் மூலம் தான் ஒரு சிறந்த இயக்குநராய் மனதில் நின்றார் மணிரத்னம். அடுத்து நாயகன் எனும் க்ளாசிக் படம் வந்தது 87ல் தான். இன்று வரை பார்க்கப்படும் எவர்க்ரீன் படமாய் இருக்கிறது நாயகன்.

பெரிய நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் வந்து அனைவரையும் கவனிக்க வைத்த பயணங்கள் முடிவதில்லை 500 நாட்கள் ஓடியது. சண்டை படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்தை வைதேகி காத்திருந்தாள் மூலம் குணசித்திர நடிகராக்கி 80 களில் அழகு பார்த்தவர் ஆர்.சுந்தர் ராஜன்.

81 -ல் வந்த பன்னீர் புஷ்பங்கள் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர் சந்தான பாரதி, பி.வாசு கூட்டணி. அந்த படம் மூலம் ஊட்டி கான்வென்ட் படிப்பு என ஒரு ட்ரென்ட் உருவானது.

நிழல்கள் மூலம் கதை வசனகர்தாவாய் அறிமுகமாகி கோபுரங்கள் சாய்வதில்லை மூலம் கவனம் ஈர்த்தார் மணிவண்ணன். முதல் நாளே நூறாவது நாள் என போஸ்டர் ஒட்டி நூறு நாட்கள் கல்லா கட்டிய நூறாவது நாள் எனும் த்ரில் படத்தில் மோகன், சத்யராஜ் கவனம் ஈர்த்தனர்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு கிடைத்த வரவு ஃபாசில். இவரின் எல்லாப் படங்களும் பெரும்பாலும் வெள்ளிவிழா படங்களே. பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, வருஷம் 16 என 80 - களில் வந்த இவரது படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆல்டைம் ஃபேவரைட்டாக அமைந்தன.

பூவிழி வாசலிலே
ஆபாவாணன் வரவு திரைபடக் கல்லூரி மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்தது. ஊமைவிழிகளில் மிரட்டினால், உழவன் மகனில் வரும் பிரம்மாண்ட ரேக்ளா ரேஸை தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இன்றுவரை ரேக்ளா ரேசிற்கு பெரிய ரெஃப்ரன்ஸாக இருக்கிறது உழவன் மகன்.

#நடிகர்கள்

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என மூவரும் இருந்தது போல், ரஜினி கமலுக்குப் பிறகு மூன்றாம் இடம் யார் என்ற போட்டி 80களில் அதிகம் நடைபெற்றது. விஜயகாந்த், கார்த்திக், முரளி, மோகன், பிரபு என மாறி மாறி வந்ததால் நிலையாக இவர்தான் என சொல்ல முடியவில்லை. அக்காலத்தில் பெரிய நடிகர்களை போல் வெள்ளிவிழா நாயகனாக மோகன் வலம் வந்தார்.
பயணங்கள் முடிவதில்லையில் ஆரம்பித்து உதயகீதம், குங்குமச்சிமிழ் என அனைத்தும் வெற்றி நடை போட்டவை. சத்யராஜ் இரண்டாவது இன்னிங்சில் முதல் வசந்தம், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு, வேதம்புதிது என வெரைட்டி காட்டினார். விஜயகாந்த் அம்மன் கோவில் கிழக்காலே, செந்தூரப்பூவே, பொன்மனச்செம்மல் என அவரும் தன் பங்கிற்கு இறங்கி அடித்தனர். கோழி கூவுதுவில் பிள்ளையார் சுழி போட்ட பிரபு ரஜினியுடனும் கமலுடனும் இணைந்து நடித்து இரு ரசிகர்களுக்கும் செல்லப் பிள்ளையானார். மெளனராகம் வாயிலாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டார் கார்த்திக்.

# நடிகைகள்

நடிகைகளில் ராதா, அம்பிகா, ராதிகா, ரேவதி அதிக படங்களில் நடித்தனர். இளம் வரவாக நதியா, அமலா கவனம் ஈர்த்தனர். அக்கால சாக்லேட் பாய் ஹீரோக்களாக சுரேஷ், ராம்கி கனவு நாயகர்களாயினர். வேலையின்மை, வறுமை, நக்சல்பாரிகள் போல் புரட்சிப் படங்கள், இந்தியில் வெளியான வெற்றிப்படங்கள் மொழிமாற்றம் என கலவையாய் அமைந்தது அந்த காலம்.
வெற்றி என்றால் வெற்றி, தோல்வி என்றால் தோல்வி தான், படத்தின் தரத்தை கொண்டு ரசிகர்கள் நியாயமான தீர்ப்பு வழங்கினர். இத்தனை ரசனை மிக்க காலகட்டத்தில் இருந்தோம் என தைரியமாய் காலரை தூக்கிவிடலாம் 80கிட்ஸ்.

#க்ளாசிக் படங்கள்

பாலு மகேந்திராவின் மூடுபனி, மூன்றாம்பிறை,பாரதி வாசுவின் பன்னீர் புஷ்பங்கள், மகேந்தரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே,பாக்யராஜின் அந்த 7 நாட்கள், மெளன கீதங்கள்,இது நம்ம ஆளு,முற்றிலும் புதியவர்கள் நடித்த பாலைவனச்சோலை, தியாகராஜனின் மலையூர் மம்பட்டியான்,பாரதிராஜாவின் மண்வாசனை,ஒரு கைதியின் டைரி, சிகப்பு ரோஜாக்கள்,முதல் மரியாதை, பாலச்சந்தரின் சிந்துபைரவி, பாண்டியராஜனின் கன்னிராசி, ஆண்பாவம்,பாட்டி சொல்லைத் தட்டாதே, விசுவின் சம்சாரம் அது மின்சாரம், பார்த்திபனின் புதிய பாதை, பூந்தோட்ட காவல்காரன், கங்கை அமரனின் கரகாட்டக்காரன் என விதவிதமான படங்கள் தமிழ் ரசிகர்களை எப்போதும் உற்சவ மனநிலையில் வைத்திருந்தன.

#இசை - நகைச்சுவை

இந்த பத்தாண்டுகளில் 99% படங்களில் இளையராஜாவே கோலோச்சினார். நரசிம்மன், சங்கர்கணேஷ், எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா ஆகியோர் இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்தது 80களின் காலகட்டம் தான். 85ன் பிற்பகுதியில் பக்திப்படங்கள் அனைத்தும் மினிமம் கேரன்டி அடிப்படையில் ஓடி வசூல் கண்டதால் ஐயப்பன்,அம்மன் படங்களும் வர ஆரம்பித்தன.கவுண்டமணி-செந்தில்-நகைச்சுவை எழுத்தாளர் ஏ.வீரப்பன் கூட்டணி அமைந்து பல படங்களுக்கு பக்க பலமாய் அமைந்தது.

இன்றும் 80 களில் பார்த்த படங்களை பற்றி கேட்டால் தியேட்டர் வாரியாக கதை சொல்லும் ரசிகர்கள் உள்ளனர். இந்திப்படங்களை பெருமிதத்தோடு பார்த்த காலத்தில் தமிழ் சினிமாவிலும் நல்ல கதையமைப்புடன் படம் உருவாக்கி ரசிகர்களை பெருமிதம் கொள்ள வைத்தனர்.

வெற்றி என்றால் வெற்றி, தோல்வி என்றால் தோல்வி தான், படத்தின் தரத்தை கொண்டு ரசிகர்கள் நியாயமான தீர்ப்பு வழங்கினர். இத்தனை ரசனை மிக்க காலகட்டத்தில் இருந்தோம் என தைரியமாய் காலரை தூக்கிவிடலாம் 80கிட்ஸ். கடந்த காலத்திற்குள் நம்மை அழைத்துப் போவதற்கு கால இயந்திரம் தேவையில்லை.ஒரு 80 களின் படம் போதும்..ஏனெனில் என்றும் அவை பொக்கிஷங்கள்.

- மணிகண்டபிரபு
.
.

No comments:

Post a Comment