CORONO VIRUS SPOILED
AUTO DRIVERS
செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !
கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களது நிலையை படம்பிடித்து காட்டுகிறது
அறுபது நாட்களைக் கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்? லாக்டவுனுக்குப்பிறகு அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன?
”இந்த மூனு மாசமும் ஹிந்திக்காரன்தான் சார் எனக்கு சோறுபோட்டான். பத்து அடிக்கு பத்து அடி போலீசா நின்னுச்சு அதையும் மீறி வண்டி ஓட்டுனேன். கிண்டி ஸ்டேஷனிலிருந்து சென்ட்ரலுக்கு போக வழக்கமா 300 – 350 வாங்குவோம். அஞ்சு அஞ்சு பேரா ஏத்திகிட்டு சவாரி போனேன். ஆளுக்கு அம்பதோ நூறோ அவன்கிட்ட இருந்தத வாங்கிட்டு ஓட்டுனேன். வயசான ஒருத்தரு 100 ரூபாய்தான் இருக்கு, என்ன அங்க விட்டுருன்னாரு. வழக்கமா அவர் சொன்ன இடத்துக்கு போக 300 வாங்குவோம். என்ன பன்றது, கஷ்டத்துல இருக்கவங்களுக்கு ஏதோ நம்மால ஒரு உதவி. ஒன்னும் இல்லாம இருக்கிற நமக்கு அவரு கொடுக்குற நூறு ரூபா உதவினு நினைச்சுதான் ஓட்டுனேன். ஏதோ போயிருச்சி, இனிதான் என்ன ஆகுமுன்னு தெரில.
வீட்லே இரு வீட்லே இருன்னு சொன்னா எப்படி சார் இருக்க முடியும்? குடும்பத்த யாரு பாக்கிறது? தில் இருந்தாதான் பிழைக்க முடியும். அதான் கொரோனாவது எதாவதுனு வண்டி ஓட்டிட்டுருக்கேன். இதுவரைக்கும் ரெண்டு வாட்டி போலீசு மறிச்சிச்சு. பத்திரிகைக்காரர் ஒருத்தர விட்டுட்டு திரும்புறப்ப ஐஸ்ஹவுஸ் பக்கம் போலீசு மறிச்சி, லத்தி உடையற அளவுக்கு அடிச்சது. அப்புறம் இன்ஸ்பெக்டர் வந்து ஊசி போடவச்சி அனுப்பிவச்சாரு. இந்தா இன்னும் கைய வழக்கம் போல மடக்க முடியல. அப்புறம் கோயம்பேடு பக்கம் போனப்ப மதியம் 2 மணிக்கு புடிச்சி ராத்திரி 11 மணி வரைக்கும் ஸ்டேஷன்ல ஒக்கார வச்சி திட்டி அனுப்பினாங்க.
இந்த மூனு மாதமா இந்திகாரன்தான் எனக்கு சோறு போட்டான். கிண்டியிலிருந்து சென்ட்ரலுக்கு அஞ்சு அஞ்சு பேரா ஏத்திட்டுப் போவேன்; ஆளுக்கு அம்பதோ நூறோ கொடுப்பாங்க என்கிறார் மோகன்ராஜ்.
”அதான் கவருமெண்ட் வண்டி ஓட்டக்கூடாதுனு சொல்லிருக்குல்ல… அப்புறம் ஏன் ஓட்டுறனு” கேட்டாரு ஒரு போலீசுகாரர். ”நான் திருடன் ஆயிட்டா சந்தோஷமா? வழிப்பறிக் கொள்ளை செஞ்சா ஒன்னும் பண்ண மாட்டீங்களா?”னு கேட்டேன். வண்டிய ஓட்ட விட்டா, ஏதோ கிடைக்கிறத வச்சி கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு பொழப்ப ஓட்டிட்டு போயிடுவோம்” என்கிறார், மோகன்ராஜ்.
”மனைவியின் சேமிப்பிலிருந்து மார்ச் மாசம் சமாளிச்சிட்டோம். தெரிந்த நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி ஏப்ரல் மாசத்தை ஓட்டிட்டோம். அடுத்து என்னதான் பன்றதுனு குழப்பத்துல இருக்கிறப்பவே, வாட்சப் குரூப் வழியா தொடர்புகொண்ட பள்ளி நண்பர் ஒருவர் தாமாக முன்வந்து கொடுத்த உதவியிலிருந்து மே மாசத்தையும் கடந்தாச்சி. அடுத்து என்ன என்பது கேள்விக்குறிதான்.
நானே ராஜா, நானே மந்திரி எவன்கிட்டயும் கைகட்டி வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் ஒரு சுயதொழிலாக நினைத்து ஆட்டோ ஓட்ட வந்தேன். 23 வருசத்தையும் அப்படித்தான் கடந்திருக்கிறேன். தற்போது, பள்ளி நண்பர் ஒருவர் எனது நிலைமையைப் பார்த்து உதவி செய்திருக்கிறார். இருந்தாலும், சுயமாக சம்பாத்தியம் இல்லை என்பது மனசுக்கு பாரமாகத்தான் இருக்கிறது. வாங்கிய பணத்தை சூழ்நிலை பொறுத்து திரும்பக்கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். ஆனாலும் மனதை அறுக்கிறது” என்கிறார், ஜெயராமன்.
மூனுமாசம் வாடகை குடுக்கல; கிடைக்கிறத வச்சி எப்படியோ சமாளிச்சிட்டோம்; இனி என்ன செய்யப்போறோமுன்னு தெரியல… என்கிறார் ராஜேஷ்.
”22 வயசுல ஆட்டோ ஓட்ட வந்தேன். பத்து வருசமா ஓட்டிட்டிருக்கேன். பேங்க் பேலன்ஸ் பத்து பைசா இல்லை. அன்றாடம் வரவுக்கும் செலவுக்கும்தான் சரியா இருக்கும். அதவச்சி குடும்பம் ஓட்றதே பெரும்பாடு. மூனுமாசம் வாடகை குடுக்கல. கிடைக்கிறத வச்சி எப்படியோ சமாளிச்சிட்டோம்.” என்கிறார் ராஜேஷ்.
”யார் கையையாவது எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இப்பக்கூட பக்கத்து தெருவில் நாலுமணிநேரம் காத்திருந்து நிவாரண உதவி வாங்கியாந்தேன். ஹவுஸ் ஓனருக்கு முழுசா வாடகை கொடுக்கலை. கிடைச்ச காசுல கொஞ்சம் கொடுத்திருக்கேன். முந்தி மாதிரி அவரும் நம்மகிட்ட சரிவர பேசுறதில்லை; ஒருமாதிரி நடத்துறாரு. அதுவே மனசுக்கு கஷ்டமா இருக்கு.
ஆட்டோ தொழிலுக்கு வர்றதுக்கு முன்னாடி, குடிசைத்தொழில் மாதிரி, அஞ்சு ரூபா பாக்கெட்ல மசாலா பொருள் போட்டு மளிகைக்கடைக்கு சப்ளை பண்ணிகிட்டு இருந்தேன். முத மாசம் அந்த தொழில செய்வோம்னு ஆரம்பிச்சேன். அடுத்த மாசம் அதக்கூட தொடர முடியல. 400 ரூபாய்க்கு வித்த பொருள் 600 ரூபாய்க்கு வித்தா அஞ்சு ரூபாய்க்கு நான் எப்படி பாக்கெட் போட முடியும்? வேற வழி என்னன்னு வீடுங்களுக்குத் தண்ணீர் கேன் போட்டுகிட்டு இருக்கேன். இப்படித்தான் போகுது” என்கிறார், முத்து.
பயணிகள் யாரேனும் வரமாட்டார்களா என மவுண்ட் ரோட்டின் ஒரு ஓரத்தில் காத்திருந்தார் மணி. சென்னையில் ஆட்டோக்கள் ஓடக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறார்களே, நீங்கள் எப்படி வேலைக்கு வந்திருக்கிறீர்கள்? என்று பேச்சு கொடுத்தோம்.
ஒருபக்கம் போலீசு, மறுபுறம் வயிற்றுப்பசி. நிற்காதே, ஓடு என இரண்டுமே துரத்துகிறது. மவுண்ட் ரோட்டில் பயணிகள் யாரேனும் வரமாட்டார்களா எனக் காத்திருக்கும் மணி.
”வீட்டில இருந்தா யாரு சாப்பாடு போடுறது? முப்பது வருசமா ஆட்டோ ஓட்டிக்கிட்டிருக்கேன். அரசாங்கம் என்ன உதவி செஞ்சிருச்சி? ஆயிரம் ரூபாய வச்சிகிட்டு எத்தன மாசத்தை ஓட்டுவீங்க? ரேஷன்ல அரிசி போட்டோம்னு சொல்றாங்களே, சட்டதிட்டம் போடுறவன் தின்பானா சார் அந்த அரிசியை? ஆட்டோ தொழில விட்டா எனக்கு வேற தொழில் தெரியாது. அம்பது வயசாவுது இனிமே நான் எந்த வேலைக்கு போறது. நல்லதோ கெட்டதோ, ஆண்டவன் விட்ட வழி அப்படியே போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்” என்கிறார், மணி.
சொந்தமாக தொழில் செய்த நாங்கள், அடுத்தவர் உதவியை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்கிறார், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் முத்து.
”ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், கிண்டி ரயில்வே கிளையின் தலைவராக இருக்கிறேன். நான் ஆட்டோ ஓட்ட வந்தப்ப இதே கிண்டி ரயில்வே ஸ்டேஷன்ல 32 பேர் இருந்தோம். இப்ப பழைய ஆளுங்க 4 பேருதான் இருக்கோம். வருமானம் இல்லைன்னு, எல்லாம் வேற வேற தொழிலுக்கு மாறி போயிட்டாங்க. ஸ்டேண்ட்ல இப்போ 16 ஆட்டோதான் ஓடுது. ஸ்டாண்டுக்கு வெளியே ஒரு 30 – 40 ஆட்டோ நிற்கும். ஓலா உபேர் வந்து எங்க பொழப்ப கெடுத்தது இல்லாம, மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைப்பு வாகனம்னு விட்டதுல எங்களுக்கு பெரிய அடி. கிண்டி ஸ்டேஷன்லருந்து டி.எல்.எஃப்.க்கு ரெகுலர் சவாரி கிடைக்கும். வேற வழியில்லாம, நாங்களும் மூனுபேரு நாலு பேர சேர்த்துக்கிட்டு ஷேர் ஆட்டோ மாதிரிதான் ஓட்டிகிட்டு இருந்தோம். இப்போ அதுவும் இல்லாமப் போச்சு. இந்த நிலைமையில ஆட்டோவுக்கு ஒருத்தரத்தான் ஏத்தனும்னா வண்டி ஓட்ட முடியுமா?” என்கிறார், முத்து.
ஈகிள் ஃபிளாஸ்க் கம்பெனி மூடினதால ஆட்டோ ஓட்ட வந்தேன்; இப்ப ஆட்டோ ஓட்டவும் வழியில்ல, 50 வயசுக்கும் மேலே இனி, எந்தத் தொழிலுக்குப் போக முடியும் எனப் புலம்புகிறார், முகம்மது ரபி.
”வண்டி புதிதாக போட்டு 4 மாசம்தான் ஆகுது. மாசம் 7600 டியூ கட்டனும். இன்னும் 3 வருசம் கட்டியாகணும். டியூ கட்ட டெய்லி 250 ரூபா தனியா எடுத்து வச்சிருவேன். உடம்புக்கு சுகமில்லைன்னாலும் அந்த காசுல கை வைக்க மாட்டோம். சோத்துக்கே வழியில்லை, இப்போ டியூ எங்க கட்றது? டியூ கட்டலைன்னு வண்டிய எடுக்க வந்தான்னா, உன் பொருள் எடுத்துட்டுபோனு விட்றுவேன். வேறு என்ன பன்ன சொல்றீங்க” என்கிறார், முகம்மது ரபி. கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கிவந்த ஈகிள் பிளாஸ்க் காண்டிராக்டராக பணிபுரிந்து வந்த முகம்மது ரபி, கம்பெனி மூடிய பிறகு, ஆட்டோ தொழிலுக்கு மாறியவர். மீண்டும் நான் எந்தத் தொழிலுக்குப் போக முடியும் எனப் புலம்புகிறார், அவர்.
”பத்துவருசம் ஓடுன வண்டிக்கு எல்லாம் பெர்மிட் புதுப்பிக்கப் போறதில்லைனு பேசிக்கிறாங்க. அப்படி ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா என்னால இப்போ இருக்குற நிலைமைக்கு புது வண்டி போட முடியாது. வருசம் 3000 இருந்த இன்சூரன்ஸ் பத்தாயிரமாச்சு. எப்.சிக்கு 25,000 ரூபாய் எடுத்து வைக்கணும். எல்லாமே கடன்தான் வாங்கியாகணும். எங்களுக்கு பேங்க்ல கடனும் கொடுக்க மாட்டான்; சேட்டுக்கிட்டதான் வண்டிய ரீ பைனான்ஸ் போட்டு காசு வாங்கியாகணும்.
டீ பத்து ரூபாய் ஆனபோதே கடையில் டீ-சிகரெட் குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். யாரா இருந்தாலும் சென்னையில் மிக சாதாரணமா பத்தாயிரம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாது. பத்தாயிரத்துக்கு என்ன வழி? தொழிலை தொடரமுடியாது. இதுவரை ஆட்டோவை நம்பி, வாங்கிய கடனை கட்டிவந்தோம். இனி அந்த நேர்மையை காப்பாற்ற முடியாது என்ற அச்சம் வாட்டுகிறது.”
வீட்ல கொஞ்சம் நல்லா சமைப்பாங்க, அதவச்சி சின்னதா ஒரு டிப்ஃபன் கடை போடலாமானு யோசிச்சுகிட்டிருக்கேன் என்கிறார் ஜெயராமன்.
”இனிமே குனிஞ்சு நிமிந்து வேற வேல செய்ய முடியுமா? உக்காந்தே வேலை செஞ்சு உடம்பு பழக்கமாயிடுச்சு. கூரியர் கம்பெனிக்கு போலாமா? செக்யூரிட்டி வேலைக்குப் போலாமான்னு யோசனையில் இருக்கேன். வீட்ல கொஞ்சம் நல்லா சமைப்பாங்க, அதவச்சி சின்னதா ஒரு டிப்ஃபன் கடை போடலாமானு யோசிச்சுகிட்டிருக்கேன். பொண்ணுக்கு ஆண்டுக்கு 25,000 ரூபாய் கல்விச்செலவு ஆகும். இறுதியாண்டு முடிக்க வேண்டும். பையன் பி.எச்.டி. படிக்க ஆசைப்படுகிறான். மகனை வேலைக்குப் போ என தொரத்துகிறார் மனைவி. இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்பது குடைச்சலாக இருக்கிறது.” என்கிறார் ஜெயராமன்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான “ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம்”, கிண்டி ரயில் நிலையம் (மேற்கு) பகுதியின் பொருளாளராக இருப்பவர் ஜெயராமன் கூறும்போது. ”முன்னெல்லாம் ஸ்டாண்டுக்கு வந்தா எப்படியும் 600 ரூபாய்க்கு வண்டி ஓட்டிரலாம்னு நம்பிக்கை இருந்துச்சி. டெய்லி வீட்டுக்கு 300 ரூபாய கொடுத்துட்டு, வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு, கைச்செலவுக்கு 100 ரூபாய எடுத்துட்டு, சங்க வேலை பார்க்க கிளம்பிவிடுவேன். ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம், தொழிலாளர்களை சந்திக்கிறதுனு அரசியல் வேலை செய்வேன். இருக்கிற நிலைமையில அதையெல்லாம் தொடர முடியுமானு அச்சமா இருக்கு” என்கிறார்.
”வண்டி ஓடலை, வருமானம் இல்லைனு இப்போ அமைதியா இருக்காங்க; இதே நிலை தொடர்ந்துச்சின்னா, சும்மா இருப்பாங்களா?. இப்பவே, குடும்பத் தேவைன்னா உன்கிட்டதானே கேட்கமுடியும்னு சொல்லி சண்டை போடுறாங்க; இது மேலும் அதிகமாகி, அவங்க ஒன்னு பேச நா ஒன்னு பேச குடும்பத்துல பிரச்சினைதான் வரும். வீட்டில் அவமானத்தை சந்திக்க நேரிடும்” என்கிறார் முத்து.
.
சுனாமி வந்தப்போ மீன் வெட்டுறத விட்டுட்டு, ஆட்டோ ஓட்ட வந்தேன்; இப்ப கொரோனா வந்ததால திரும்பவும் மீன் வெட்ட போகவேண்டியதுதான் என்கிறார், தனசேகர்.
”இதுக்கு முன்ன, கிழக்கு கடற்கரையில மீன் வெட்டிகிட்டு இருந்தேன். சுனாமி வந்திச்சி, பொழப்பும் போயிருச்சு, ஆட்டோ ஓட்ட வந்துட்டேன். பதினஞ்சி வருசம் ஓடிருச்சி. இந்தா இப்ப கொரோனானு இன்னொரு சுனாமி வந்துருக்கு; திரும்பவும் கிழக்கு கடற்கரைக்கு ஓட வேண்டிதான்” என்கிறார், தனசேகர்.
.
.
.
.
No comments:
Post a Comment