NATURAL GAS PRODUCTION IN FOREST AREA
பொருளாதாரம் ஆசைகளை உற்பத்தி செய்து நுகர்வுகளை அதிகப்படுத்துவதாக இருக்கக் கூடாது. அது அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறனுடையதாக இருக்க வேண்டும். அத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கு உதாரணமாகச் சில பழங்குடிகள் திகழ்கிறார்கள்.
எது பொருளாதார வளர்ச்சி. பொருளாதாரம் வளர்ச்சியடைவதாகக் கூறுவதற்கு நாம் எதைக் கருத்தில் எடுக்கிறோம்?
நாட்டில் அதிக பணம் சம்பாதிப்பதற்கான செயல்களை, நடவடிக்கைகளை, அதிக உற்பத்தியை, அதிக லாபத்தைக் குறிக்கிறது. அதாவது எவ்வளவு உற்பத்தி நடைபெறுகிறது, எவ்வளவு லாபம் ஈட்டப்படுகிறது என்பதை வைத்துக் கணக்கிடப்படுகிறது. அதிகம், இப்போதைய பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பதற்குத் தேவைப்படும் ஒரே சொல். அதிக சரக்கு, அதிக பணம் ஆகியவையே இங்கு அதிக வளர்ச்சி. உண்மையில் வளர்ச்சி என்பது அனைத்து மக்களுக்குமானதாக இருப்பதில்லை. ஒருசிலரின் வளர்ச்சியே இங்கு பொருளாதார வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. உண்மையிலேயே பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் அதற்கான அளவீடுகளாக அனைத்து மக்களுக்குமான தேவைகளைப் பூர்த்தி செய்வதே அடிப்படைக் கருதுகோள்களாக இருக்க வேண்டும்.
பொருளாதாரம் ஆசைகளை உற்பத்தி செய்து நுகர்வுகளை அதிகப்படுத்துவதாக இருக்கக் கூடாது. அது அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறனுடையதாக இருக்க வேண்டும். அத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கு உதாரணமாகச் சில பழங்குடிகள் திகழ்கிறார்கள். தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளப் போதுமான நிதியுதவி கிடைத்தால் அதை எந்த அளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்த முடியுமென்பதற்கும் சான்றாகத் திகழ்கிறார்கள் அந்தப் பழங்குடிகள். தற்சார்புப் பொருளாதாரம் பற்றி நாம்
பழங்குடிகளிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அத்தகைய பழங்குடிகளைப் பார்க்க நாம் கூடலூர் செல்ல வேண்டும். ஏர் பஸ் என்ற ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனம் கொடுத்த நிதியுதவி இன்று அந்த மக்களுடைய வாழ்வைச் செழுமைப்படுத்தியுள்ளது. இன்று அந்த மக்களின் குழந்தைகள் கல்லூரி படிப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் அவர்கள் தங்கள் கிராமத்தின் முதல் பட்டதாரியையும் பார்க்கப் போகிறார்கள்.
தற்சார்புப் பொருளாதாரம்
கூடலூரில் அமைந்திருக்கிறது செருக்குனு என்ற கிராமம். அங்குதான் வெள்ளச்சி பாட்டியைச் சந்தித்தேன். அது ஒரு கூட்டுக் குடும்பம். இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் என்று அனைவருடைய குடும்பமும் ஒன்றாகவே வாழ்கிறார்கள். 80 வயதான வெள்ளச்சிப் பாட்டிதான் அவர்களில் மூத்தவர், முதன்மையானவர். அவர்தான் அந்தக் குடும்பத்தை வழிநடத்துபவர். பனியர் பழங்குடியினத்தைச் சேர்ந்த அவரும் அவர் வாழும் கிராமத்தைச் சேர்ந்த மற்ற பழங்குடியின மக்களும் அடிப்படையில் வேட்டையாடுவதையும் வனப் பொருள்களையும் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தவர்கள். பனியர் மட்டுமன்றி அந்தக் கிராமங்களில் வாழும் காட்டுநாயக்கர், குறும்பர், இருளர் போன்ற பழங்குடிகளும் அவர்களோடு வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் வனப் பொருள்களைச் சேகரிப்பதன் மூலமாகவும் எரிபொருளுக்காகக் காடுகளில் விறகு சேகரித்தும் வாழ்ந்துகொண்டிருந்தது அவருடைய குடும்பம். 10 ஆண்டுகளுக்குமுன் ஏர் பஸ் நிறுவனம் செருக்குனு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வதற்கான வசதிகளைச் செய்துகொடுத்தது. இன்று வெள்ளச்சி பாட்டி மட்டுமன்றி அவருடைய குடும்பத்தில் யாருமே எரிபொருளுக்காக மரம் வெட்டுவதில்லை. அது அவர்களுடைய பெரும்பாலான நேரத்தைச் சேமித்தது. அந்தச் சேமிப்பு மேலும் பல நன்மைகளுக்கு வழிவகுத்தது.
ஏர் பஸ் நிறுவனம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரண்டாயிரம் லிட்டர் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் திறனுடைய எரிவாயுக் கூடம் அமைத்துக் கொடுத்தனர். இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ய மாட்டுச் சாணம் தேவை. 20 ஆண்டுகளுக்குமுன் சத்தியமங்கலம் பகுதிகளில் மக்கள் இதேபோன்று எரிவாயுக் கூடங்களை அமைத்துவிட்டுச் சாணம் கிடைக்காமல் அல்லல்பட்டனர். காலப்போக்கில் அந்த எரிவாயுக்கூடங்கள் வெற்றுக் குழிகளாகிப் பயனற்றுப் போயின. இந்தக் கூடங்களும் அப்படிப் போய்விடக் கூடாதென்பதில் கவனம் செலுத்தினார்கள். எரிவாயு உற்பத்திக்குத் தேவைப்படும் மாட்டுச் சாணத்துக்காக அலைந்துகொண்டிருக்க முடியாது. அதற்காகவே ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா இரண்டு மாடுகள் வழங்கப்பட்டன. அந்த மாடுகள் இடும் சாணம் இயற்கை எரிவாயு உற்பத்தியில் பங்கு வகிக்கும். அவற்றிடமிருந்து கிடைக்கும் சாணம் அவர்களின் எரிவாயுப் பயன்பாட்டுக்கு உதவுகிறது. அதோடு நிற்காமல் அந்த மாடுகளிடமிருந்து கிடைக்கும் பால் மூலம் தங்கள் பயன்பாட்டையும் பூர்த்திசெய்து கொள்கின்றனர். மீதியைக் கூடலூரிலேயே விற்றும் விடுகின்றனர். அதன்மூலம் அந்த மக்களுக்குக் கணிசமான தொகை வருமானமாக வருகிறது. இதுபோக எரிவாயு உற்பத்திக்குப் பிறகு, வெளியாகும் சாணத்தை வைத்து பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரங்களையும் சில பூச்சி விரட்டிகளையும் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
பழங்குடியினர் குழந்தைகள்
பழங்குடியினர் மற்றும் கிராம வளர்ச்சி அறக்கட்டளையைச் (centre for Tribals and Rural Development) சேர்ந்த ரங்கநாதன் ஏர் பஸ் நிறுவனத்தின் உதவியோடு அந்த மக்களுக்குத் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களைச் செய்துகொண்டிருக்கிறார். இயற்கை எரிவாயுக் கூடங்கள் குறித்து அவரிடம் பேசியபோது, "முன்பு ஒவ்வொரு நாளும் சமையல் போன்ற வேலைகளுக்காக கிலோ கணக்கில் விறகுகளைக் கொண்டு வருவார்கள். அதற்காக அவர்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டும். அது மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் போன்ற சிக்கல்களுக்கும் வழிவகுத்துக் கொண்டிருந்தது. அதுபோகத் தங்கள் பெரும்பாலான நேரத்தை விறகு சேகரிப்பதிலேயே செலவழித்துக்கொண்டிருந்தனர் இந்த மக்கள். இன்று இந்த இயற்கை எரிவாயுக் கூடங்கள் அவர்களுக்குப் பல நன்மைகளைச் செய்திருக்கின்றன.
இந்த ஆண்டோடு இந்த மக்கள் இயற்கை எரிவாயுப் பயன்பாட்டுக்கு மாறி பத்து ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் இவர்கள் குளிர்காய, தண்ணீர் சுடவைக்க போன்ற ஒருசில விஷயங்களுக்காக மட்டும் விறகு சேகரிக்கிறார்கள். அவையெல்லாம், முன்பு சேகரித்ததில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே. அதைத் தங்கள் வீடுகளைச் சுற்றி அவர்கள் வளர்த்திருக்கும் மரங்களிலிருந்தே சேகரித்துக்கொள்கிறார்கள். ஓர் எரிவாயுக் கிடங்கு அமைக்க இரண்டரை லட்சம்வரை செலவாகிறது. அதன்மூலம் அவர்கள் எரிவாயு மட்டும் பெறுவதில்லை. அதற்காக வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து பால் கறந்து பயன்படுத்துகின்றனர். அதைக் கூடலூர் பால் சொசைட்டிகளில் விற்று லாபம் ஈட்டுகின்றனர். மாடுகள் கன்றுகளை ஈனுகின்றன. அவையும் பயனளிக்கின்றன. விறகு சேகரிக்கக் காடுகளுக்குள் செல்ல வேண்டிய தேவை இல்லாததால் அவர்களுக்குக் கிடைக்கும் நேரங்களில் தங்களைச் சுற்றி மா, பலா, வாழை, துளசி, செம்பருத்தி, சரக்கொன்றை போன்ற தாவரங்களை வளர்த்துப் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்றனர்" என்று கூறினார்.
பால் பொருட்கள் மூலம் கிடைத்த வருமானம்
இயற்கை எரிவாயுக் கிடங்குகளுக்காக வழங்கப்பட்ட மாடுகள் எரிவாயு உற்பத்தியில் உதவியதோடு மட்டுமன்றி அந்த மக்களின் வருமானத்துக்கும் வழிசெய்தது. அவை கொடுத்த பால் மூலம் அவர்களுக்குக் கிடைத்த பொருளாதாரப் பலன்களின் விவரம்.
"இந்தப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம். சமயங்களில் புலி, சிறுத்தைகள் நடமாட்டமும் இருக்கும். இந்தச் சூழ்நிலையில் விறகு சேகரிப்பதற்காகக் காட்டுக்குள் சென்றுவருவது எவ்வளவு ஆபத்தானது என்பதை நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த ஆபத்து இப்போது எங்களுக்கில்லை. எங்கள் மொத்த குடும்பத்துக்கும் இப்போது இயற்கை எரிவாயு உற்பத்தி பயன் தருகிறது. எரிவாயு மட்டுமன்றி மாடுகள் இருப்பதால் பால் விற்பனையும் செய்கிறோம். நாங்கள் லிட்டருக்கு 23 ரூபாய் என்ற விலையில் விற்கிறோம். அதுவே வாடிக்கையாளர் எங்கள் மாடுகளுக்கான தீவனங்களை வழங்குவதாக இருந்தால் லிட்டருக்கு 20 ரூபாய் என்ற விலைக்கு விற்கிறோம். அதோடு எங்கள் பாட்டியும் அவருடைய இத்தனை ஆண்டுக்கால வாழ்வில் தற்போது பால் கலந்த தேநீர் அருந்துகிறார். அதற்குக் காரணம் எரிவாயுக் கூடத்தோடு வந்த மாடுகள். அவை எங்கள் பயன்பாட்டுக்கு மட்டுமன்றி எங்களுக்கு வருமானம் தரும் அளவுக்கும் பால் கொடுக்கிறது. இப்போது நாங்கள் விறகுகளைத் தேடிக் காட்டுக்குள் செல்வதில்லை. அதோடு எங்கள் கிராமத்தின் குழந்தைகள் மேற்படிப்பு படிக்கவும் போதுமான நிதி சேமிப்பு எங்கள் கைகளில் நிற்கிறது" என்கிறார் பனியர் பழங்குடியினத்தைச் சேர்ந்த வெள்ளச்சி பாட்டியின் பேரனும் ஊர்க்காவற்படையில் பணிபுரிபவருமான குட்டன்.
வெள்ளச்சி பாட்டி
வெள்ளச்சி பாட்டி அவரின் கொள்ளுப் பேரனுடன்...
இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து தற்போதுவரை ஒருவேளை அவர்கள் விறகுகளைப் பயன்படுத்தியிருந்தால் இதுவரைக்கும் ஒட்டுமொத்தமாகச் சுமார் 8,89,500 கிலோ விறகுகளைப் பயன்படுத்தியிருப்பார்கள். இந்தத் திட்டத்தால் அது வெறும் 83,130 கிலோவாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ விறகுகளை எரிக்கும்போது 1.820 கிலோ அளவுக்கான கரிம வாயு வெளியேறும். விறகு எரிப்பதைக் குறைத்ததன் மூலமாக அவர்கள் 13,86,230.3 கிலோ அளவுக்குக் கரிம வாயு வெளியேற்றத்தைக் குறைத்துள்ளனர். இந்தக் கிராமங்களில் அதைச் சாதித்துக்காட்டிய ஏர் பஸ் நிறுவனத்துக்கு வாழ்த்துகள். "கூடலூர் பல்லுயிர்ச்சூழல் திட்டம் சூழலியல் பாதுகாப்பு, பல்லுயிர்ப் பெருக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு என்று பல இலக்குகளை அடைந்துள்ளது. எங்கள் நிறுவனப் பணியாளர்கள் பலரும் இங்கு வந்து பழங்குடிகளோடு தங்கி அவர்களுடைய தற்சார்பு பொருளாதாரம் கொண்ட வாழ்க்கைமுறையைக் கற்க முயலுகின்றனர். அதோடு அவர்களும் தனிப்பட்ட முறையில் நிதி திரட்டி மேலும் பல இயற்கை எரிவாயுக் கூடங்களை அமைத்துக் கொடுக்கின்றனர். இப்போது ஏர் பஸ் நிறுவனம் அமைத்துக் கொடுத்த 53 எரிவாயுக் கூடங்களோடு ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் நிதி திரட்டி அமைத்துக்கொடுத்த மேலும் சில இயற்கை எரிவாயுக் கூடங்களும் செயல்படுகின்றன. இவையனைத்துமே இந்த மக்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்வதோடு அவர்களுடைய சேமிப்புகளையும் அதிகப்படுத்தியுள்ளது" என்கிறார் ஏர் பஸ் நிறுவனத்தின் சர்வதேச இயக்குநரான ஹானியா தபெத்...
கூடலூர் பழங்குடியின மக்கள் இன்று தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்திசெய்துகொண்டு வாழ்கின்றனர். அதேசமயம், தமிழகத்தில் தற்சார்புப் பொருளாதாரம் சாத்தியப்படுவதற்கும் சான்றுகளாக விளங்குகிறது இவர்களின் வாழ்க்கைமுறை. அவர்களைப் போலவே அனைத்துப் பழங்குடியின கிராமங்களும் செழித்து வளரத் தேவை குறைந்தபட்ச ஆரம்பகட்ட நிதியுதவியே. அது கிடைத்தால் செருக்குனு, வெள்ளெரி போன்ற கிராமங்களைப் போலவே மற்ற பழங்குடியினக் கிராமங்களும் செழித்தோங்கும் என்பதில் ஐயமில்லை.
.
.
No comments:
Post a Comment