Sunday, 4 October 2020

S.V.RENGARAO , A LEGENDARY ACTOR

 

S.V.RENGARAO ,

A LEGENDARY ACTOR




`சினிமாவில் அகில இந்திய அளவில் இன்றுவரை முதிய கதாபாத்திரங்களில் சோபித்தவர் யார்?’ என்று கேட்டால், அதற்கு ஒரே பதில், `எஸ்.வி.ரங்காராவ்’ என்பதாகத்தான் இருக்க முடியும். முதியவராக நடித்த சிறந்த நடிகர்களில் முதலிடம் இவருக்குத்தான்.


நீண்ட நெடுங்காலம் முதியவராக நடித்த ஒருவர், தன் வாழ்நாளில் 60 வயதைப் பார்த்ததேயில்லை என்பதுதான் அவருடைய வாழ்வின் அபத்தம். மறைந்தபோது அவருக்கு வயது 56. அவர் பிறந்த வருடம் 1919 என்று எடுத்துக்கொண்டால் 55 வயது. 1974-ம் வருடம், ஜூலை 18-ம் தேதி ரங்காராவ் இறந்தார்.


எஸ்.வி.ரங்காராவ்

அந்தக்கால குணச்சித்திர நடிகர்கள்  எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா மூவருமே முதுமையைக் காணாமலேயே மறைந்தார்கள். இவர்களுக்கெல்லாம்  சீனியரான எம்.ஆர்.ராதா மட்டும் முதுமையை எதிர்கொண்டு விட்டு, 72 வயதில் மறைந்தார். பாலையாவுக்கு 58 வயது. சுப்பையாவுக்கு 57 வயது. விநோதம் என்னவென்றால், படங்களில் `பெருசு’களாக இவர்கள் நடித்த காலத்தில், இளம் வாலிபர்களாக நடித்த கதாநாயகர்கள் எல்லோரும் முதுமையைப் பார்த்துவிட்டுத்தான் இறந்தார்கள், 52 வயதில் இறந்த முத்துராமன் தவிர. 



உயரமான, ஆஜானுபாகுவான தேக அமைப்பு, அழகான வழுக்கைத் தலை, விசேஷமான மூக்கு இவையெல்லாம் ரங்காராவுக்கு இயல்பிலேயே ஒரு தனித்தன்மையை அளித்திருந்தன.


எஸ்.வி.ரங்காராவ்

எஸ்.வி.ரங்காராவ்

நடிப்பு என்பதே மிகைசார்ந்த விஷயம் என்றிருந்த ஒரு காலத்தில், `மிக இயல்பாக நடிக்க இவரை எப்படி அனுமதித்திருப்பார்கள்?’ என்ற கேள்வி எழுகிறது. `சீர் மிக வாழ்வது’ என்பதுபோல, `சீர் மிக நடிப்பை’ நிகழ்த்திக்காட்டியவர்.


ஒரு தெலுங்கு நடிகரால் தமிழிலும் சாதிக்க முடிந்திருக்கிறது. இவரைப் போன்ற இன்னொருவர் நடிகை சாவித்திரி. கமல் ஹாசன் சொன்னார்... ``நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி.ரங்காராவும் அடக்கம்.’’


தெலுங்கு, தமிழ்ப்படங்களில் நடித்தவர். தெலுங்கு மக்கள், இவருக்கு `விஸ்வநாத சக்ரவர்த்தி’ எனப் பட்டம் அளித்தார்கள். அந்தப்  பட்டம், தமிழ்ப்பட டைட்டிலில் யாரும் பார்த்திருக்க முடியாதது.


அந்தக் காலத்துப் பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ்... பி.எஸ்ஸி. ஆங்கில நாடகங்களில் நடித்த `Shakespearean Actor.’



`ரங்காராவ் ஷேக்ஸ்பியரியன் ஆக்டர்’ என்பதை அடையாறு பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் `லீனா, ரீனா, மீனா’ ஷூட்டிங்கின்போது, வி.எஸ்.ராகவன் என்னிடம் சொன்னார். டி.வி பேட்டிகளில் கூடச் சொல்லியிருக்கிறார்.


எஸ்.வி.ரங்காராவ்

எஸ்.வி.ரங்காராவ்

நாடகங்களில்  நடித்திருந்தாலும்,திரைப் படங்களில் புராண கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், நாடகச் செயற்கைத்தனம் இல்லாமல் மிக இயல்பாக நடித்து, அளப்பரிய சாதனை செய்தார். ஒரு தெலுங்கு நடிகர், தமிழ்ப் படங்களில் செய்த  சாதனை அசாதாரணமானது.


ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால், அவர்தான் `Scene Stealer.’ ஏனைய நடிகர்கள் யாராக இருந்தாலும், தூக்கிச்சாப்பிட்டு விடுவார். ‘கற்பகம்’ படத்தில் நடித்தபோது, ஜெமினியின் நடிப்பைச் சிலாகித்த ரங்காராவ், ``தம்புடு, You know Iam a scene stealer. ஆனால், `கற்பக’த்தில் You have excelled me'' என்றாராம்.


`நானும்  ஒரு  பெண்' (1963) படப்பிடிப்பின் க்ளைமாக்ஸ்  ஷூட்டிங்குக்கு எம்.ஆர்.ராதா சரியான நேரத்தில் வந்து காத்திருந்து, பொறுமை இழந்த நிலை. ரங்காராவ் ரொம்பத் தாமதமாக உள்ளே நுழைந்தபோது, ராதா அவர் பாணியிலேயே,



ரங்காராவ் காதில் விழும்படி கமென்ட் அடித்திருக்கிறார்...  ``கெட்டவனா நடிக்கிறவன், ஒழுங்கா கரெக்டா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவனைப் பாரு. ஒரு ஒழுங்கு இல்லை. படாதபாடு படுத்துறான்.”


இதைக் கேட்டு ரங்காராவ் மிகவும் மனம் புண்பட்டுப்போய் இயக்குநரிடம், ``இன்றைக்கு  விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி. ஷூட்டிங்வைத்து க்ளைமாக்ஸ் காட்சியை முடித்துக்கொள்ளுங்கள். எனக்கு உடம்பு சரியில்லை. ஆனால் அது பற்றிக்  கவலையில்லை’’ என்று சொல்லிவிட்டு அதன்படியே நடித்துக் கொடுத்தாராம்.


`நானும் ஒரு பெண்’ணில் மரணப் படுக்கையிலிருக்கும் ரங்காராவை ``அத்தான்... ஒரே ஒரு கையெழுத்துப் போடு அத்தான்...” என்று எம்.ஆர்.ராதா படாதபாடு படுத்துவார்.


எஸ்.வி.ரங்காராவ், சிவாஜி கணேசன்

எஸ்.வி.ரங்காராவ், சிவாஜி கணேசன்

எந்தப் படத்திலாவது சந்திரபாபு செட்டில் இருந்தால், ரங்காராவிடம் அத்துமீறி விளையாடுவாராம். தாங்க முடியாத அளவுக்குக் கலாய்ப்பார். சகிக்க முடியாத அளவுக்கு பாபுவின் நடவடிக்கை இருக்கும்போது ரங்காராவ் ரொம்பவே மூடவுட் ஆகிவிடுவாராம். 


ரங்காராவ் `ஆதி பராசக்தி’ படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்கும் காட்சி ஷூட்டிங்கின்போது, ``கட்... கட்...’’ என்று கேமராவை நிறுத்தச் சொல்லி, இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ``என்னய்யா, எருமை மாடு மாதிரி நிக்கிறியேய்யா...’’ என்று ரங்காராவைத் திட்டினாராம். செட்டில் அப்போது இருந்தவர்களுக்கு, `இவ்வளவு பெரிய நடிகரைப் பார்த்து, இப்படிச் சொல்கிறாரே...’ என்று என்னமோ போலாகிவிட்டதாம்.



`பக்தபிரகலாதா’ (1967) படத்தில் இரண்யகசிபுவாக ரங்காராவ் நடித்தார். ஷூட்டிங் குக்கு ரங்காராவ் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார் காதுக்குத் தகவல்போனது.


`முழுக்க  ஷூட்டிங்கில்  நடிக்க மறுக்கிறார். ஒரு நாளில் மூன்று, நான்கு மணி நேரம் ஆகிவிட்டால், கிளம்பிவிடுகிறார்.’


செட்டியார் கோபமாகிவிட்டார். ``நான் இன்று செட்டுக்கு வருகிறேன். ரங்காராவைப் பார்த்துக்கொள்கிறேன்’’ என்றார். ஷூட்டிங் ஆரம்பித்துச் சில மணி நேரத்தில் செட்டியார் ஆஜர். ரங்காராவுக்கு சூட்சுமம் புரிந்துவிட்டது.


`கம்ப்ளெயின்ட் ஆகியிருக்கிறது.’  ஷாட் பிரேக்கில் அவரே செட்டியாரிடம் வந்தார். அவர் அணிந்திருந்த கவச ஆபரணங்களையெல்லாம் கழற்றிவிட்டுச் சொன்னார்... ``மிஸ்டர் செட்டியார், இந்த நகைகளைப் பிடியுங்கள்.’’


செட்டியார் அவற்றை வாங்கினார்.  சரியான கனம். ``இவ்வளவு கனமான நகைகளைப் போட்டுக்கொண்டு, புராண வசனமும் பேசி, எவ்வளவு நேரம் நான் உழைக்க முடியும் சொல்லுங்கள். நான் வீட்டுக்குப் போன பின்னரும் இந்த பாரம் சுமந்த வேதனை என்னை விட்டு நீங்காது’’ என்றார் ரங்காராவ்.  


செட்டியாரின் கோபம் பறந்துவிட்டது. அவர் பரிவுடன் சொன்னாராம்... ``நீங்கள் செய்தது சரிதான்.’’


ரங்காராவ் நடித்த காட்சிகள் மிகவும் விசேஷமானவை. `படிக்காதமேதை’யில் முதன் முதலாகப் படம் பிடிக்கப்பட்ட காட்சி, ரொம்பப் பிரபலமான நெஞ்சை உருக்கும் காட்சி. ரங்காராவ், வேலைக்காரன் சிவாஜியை வீட்டை விட்டு வெளியே போய்விடும்படி சொல்வார். ``மாமா… நிஜமாவே போகச் சொல்றீங்களா மாமா!’’ என்று கேட்பார் சிவாஜி.


``இந்தக் காட்சியைத்தான் முதலில் படமாக்குவது என்று முடிவு செய்துவிட்டோம். ம்ம்... எழுது வசனம்” என்று தயாரிப்பாளர் என்.கிருஷ்ண சுவாமி சொன்னவுடன், கதையை முழுக்க அசை போட்டுவிட்ட வசனகர்த்தா கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பதறி, தழுதழுத்த குரலில் சொன்ன வார்த்தைகள்... ``குடலைப் புடுங்கிவெக்கச் சொல்றீங்களே முதலாளி…’’


`தேவதாஸ்’, `மிஸ்ஸியம்மா’ ஆரம்பித்து, `நானும் ஒரு பெண்’ மாமனார்-மருமகள் உறவு, விஜயகுமாரியின் மாமனாராக, ‘கற்பகம்’ படத்தில் ஜெமினி கணேஷின் மாமனாராக ரங்காராவுக்குத் தொடர்ந்தது.


‘அப்பா’ ரோல் திரைப்படங்களில் ரொம்ப மலிவானது. அதை மிகவும் உயர்த்திக் காட்டியவர் எஸ்.வி.ரங்காராவ். ‘கண்கண்ட தெய்வம்’  படத்தில், சுப்பையாவின் அண்ணன் ரோல்!


அவர் நடித்திருக்கும் முக்கியப் பாத்திரங்கள்...வில்லனாக ‘நம் நாடு’ படத்தில். இரண்யகசிபு வாக ‘பக்த பிரகலாதா’வில். ‘மாயா பஜாரி’ல் கடோத்கஜனாக. `சபாஷ் மீனா’, `எங்க வீட்டுப் பிள்ளை’, `சர்வர் சுந்தரம்’ போன்ற படங்களில் அவருடைய  இயல்பான நகைச்சுவை, திரைப்படங்களுக்கு வலுச்சேர்த்தது.


தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள், `நந்தி விருது’ பெற்றிருக்கின்றன. மேலும் சில தெலுங்குப்படங்களையும் இயக்கியிருக்கிறார். ‘நர்த்தன சாலா’ என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக, இந்தோனேஷிய திரைப்பட விழாவில் விருது வாங்கியிருக்கிறார். 


மற்றபடி இந்திய அரசாங்க கெளரவம் எதுவும் ரங்காராவுக்குக் கிடைத்ததில்லை. உலகின் மிகச்சிறந்த, அபூர்வ நடிகர்களில் ஒருவர், எஸ்.வி.ரங்காராவ்.


டி.வி சேனல்களில்  எவ்வளவோ  நடிகர்களை பலரும் மிமிக்ரி செய்வதைப் பார்க்க முடியும். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர்கூட இதுவரை நடிகர் ரங்காராவை இமிடேட் செய்ததே கிடையாது. ரங்காராவின் தனித்துவத்துக்கு இதுகூட உதாரணம். அவ்வளவு நுட்பமானவை அவருடைய நடிப்பின் பரிமாணங்கள்.


முதியவராக  நடித்தவர்  என்றாலும்,  இவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து, Brand செய்துவிட முடியாது. ஏனென்றால், அவர் எஸ்.வி.ரங்காராவ்!


கலைஞானம்

கலைஞானம்

ரங்காராவ் நினைவுகள் குறித்து, கலைஞானம்


``அண்மையில் எனக்குக் கலைவாணர் அரங்கில் பாராட்டுவிழா நடந்தது. அப்போது, `நான் முதன்முதலில் வியந்துபார்த்த சினிமா `பாதாள பைரவி.' அது எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த படம். நான் அறிமுகமான `அபூர்வ ராகங்கள்' படத்தில் பேசிய முதல் வசனம் `பைரவி வீடு இதுதானே' என்பது. கலைஞானம் சார் என்னிடம் `பைரவி' என்ற டைட்டிலைச் சொன்னவுடனேயே எனக்குள் ஒரு வைப்ரேஷன் உண்டானது. மறுபேச்சுப் பேசாமல் உடனே `பைரவி' படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டேன்' என்று ரஜினி சொன்னார். அந்த `பாதாள பைரவி' படத்தில் அறிமுகமானவர், எஸ்.வி.ரங்காராவ். சினிமாவில் வாலிப வயதுடைய சிலருக்கு முகத்தில் தாடி, மீசையை ஒட்டவைத்தால் பெரியவர் தோற்றம் வந்துவிடும். வி.கே.ராமசாமியின் 18 வயதில் அவருக்கு மீசை, தாடி ஒட்டவைத்து, `நாம் இருவர்' அப்பா வேடத்தில் அறிமுகம் செய்தனர். தோற்றத்தில் நெடுநெடு உயரம் கொண்ட ரங்காராவுக்குப் பால்வடியும் முகம். முகத்தில் தாடியும் மீசையும் ஒட்டவைத்து மந்திரவாதியாக நடித்தபோது திரையில் பார்த்தவர்கள் மிரண்டுபோனார்கள். அதுவும் என்.டி.ராமாராவுடன் மோதும் காட்சிகள் அந்தக் காலத்தில் பிரசித்திபெற்றவை. நான் சிறுவயதில் சினிமா தியேட்டரில் முறுக்கு விற்றபோது பலமுறை அந்தப் படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். `பலே பாண்டியா' படத்தில் `நீயே எனக்கு என்றும் நிகரானவன்...' பாடல் காட்சியில் எம்.ஆர்.ராதாவும் சிவாஜியும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அப்போது ராதா முகத்தில் சிவாஜியே எதிர்பாராத வகையில் அஷ்டகோணலாக விதவிதமான முகபாவனைகள் காட்டியிருப்பார். எம்.ஆர்.ராதா மூத்தவர் என்பதால் சிவாஜி அதைப் பொறுத்துக்கொண்டார். எஸ்.வி.ரங்காராவும் ராதா மாதிரியே முகத்தில் எப்போது, எந்தவிதமான எக்ஸ்பிரஷன் காட்டுவார் என்று யூகிக்கவே முடியாது. டைரக்டர் பீம்சிங்கிடம் `ரங்கராவ் நடிக்கும் குளோசப் காட்சிகளை முதலில் எடுத்து அவரை அனுப்பிவிடுங்கள். பிறகு நான் நடிக்க வேண்டிய சீன்களைப் படம்பிடியுங்கள்' என்று சொல்லிவிடுவார் சிவாஜி. `படிக்காத மேதை' படத்தில் வெகுளி ரங்கன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவாஜி `மாமா... மாமா...’ என்று வெள்ளந்தியாக பாசத்தில் உருகுவார். ரங்காராவும் நிமிஷத்துக்கு ஒருமுறை `டேய் ரெங்கா வீட்டை விட்டு வெளியே போடா' என்று கோபமாகச் சொல்வார். பிறகு `எங்கிருந்தோ வந்தான்...' பாடலில் தானும் கலங்கி, காணும் கண்களையும் அழவைக்கும் அவரை நடிப்பில் விஞ்சுவதற்கு யாருமே இல்லை. உலகமே சிவாஜி நடிப்பை வியந்துகொண்டிருந்த காலத்தில், ரங்காராவின் நடிப்புக்கு ரசிகனாகியிருந்தார் சிவாஜி. `அவர் ஆஜானுபாகுவான தோற்றத்தோடு இருப்பதால் சக நட்சத்திரங்களோடு நடிக்கும்போது சிக்கல் ஏற்படலாம்’ என்று சிலர் நினைக்கலாம்.சினிமாவில் குள்ளம், உயரம் எல்லாவற்றையும் சமமாகக் காட்டும் டெக்னிக் இருக்கிறது. கண்ணாம்பாளைவிட ஓர் அடி குள்ளமானவர் பி.யு.சின்னப்பா. இருவரும் சேர்ந்து `கண்ணகி' படத்தில் நடித்தார்கள். எஸ்.வி.ரங்காராவுக்கும், எம்.என்.நம்பியாருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. நம்பியார், வருஷத்துக்கு ஒருமுறை ஒரு மாதம் தன் குடும்பத்தோடு சென்று ஓய்வெடுப்பார் . சபரிமலைக்கு மாலை போட்டிருந்தால்கூட அட்ஜஸ்ட் செய்து நடித்துக்கொடுத்து விடுவார். ஆனால், ஊட்டியில் இருக்கும் சமயத்தில் யாருக்கும் கால்ஷீட் தேதிகளைத் தர மாட்டார். அதேபோல ரங்காராவும் முன்கூட்டியே `இந்த இந்தத் தேதிகளில் இத்தனை மணிக்குப் படப்பிடிப்புக்கு வருவேன்; குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்குப் போய்விடுவேன். இடையில் என்னை எந்தத்


தொந்தரவும் செய்யக் கூடாது’ என்று கட் அண்டு ரைட்டாகச் சொல்லிவிடுவார். அந்த நேரங்களில் அவருக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால், அவ்வளவுதான். பொரிந்துதள்ளிவிடுவார். நான் எடுத்த `வாழையடி வாழை' படத்தில் முற்போக்குவாதியாக, பிரமாதமாக நடித்திருந்தார். சில நடிகர்களின் முகம் எல்லா வேடத்துக்கும் பொருந்தும். அப்படி ஓர் அற்புதமான முக அமைப்பைக் கொண்டவர் எஸ்.வி.ரங்காராவ். `வேறு வேலையே இல்லை; ஜீவனம் நடத்தியே தீர வேண்டும்’ என்று சினிமாவுக்கு வந்தவரில்லை ரங்காராவ். ஆந்திராவில் அவர் பார்த்துவந்த அரசாங்க வேலையை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்தவர். திரையுலகில் அவர் சாதனை தனித்துவமானது.’’


நீங்கள் மேலும்

6

No comments:

Post a Comment