Thursday, 1 October 2020

ILAIYA NILA S.P.BALASUBRAMANIAM THOUGHT WAVES

 



ILAIYA NILA S.P.BALASUBRAMANIAM  THOUGHT WAVES 


இளைய நிலா நினைவலைகள்!

ஆர்.சரவணன்

எஸ். பி. பாலசுப்பிரமணியம்

எஸ். பி. பாலசுப்பிரமணியம்

ஓவியம்: தமிழ்


பிரீமியம் ஸ்டோரி

கே.வி.மகாதேவன் இசையில் தமிழில் அறிமுகமாகி, நேற்றுவந்த புது இசையமைப்பாளர் வரை பாடியவர், 40 ஆயிரம் பாடல்கள், 55 ஆண்டுக்கால இசைப்பயணத்தில் பாடி ஒரு இசை சகாப்தமாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். 74 வயதில் தன் குரலை நம்மிடையே விட்டுவிட்டுப் பறந்துபோன பாட்டுக்குயில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இவை.


1 படிப்பில் சுட்டி. பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவர், அதைப் பாதியில் விட்டு சென்னைக்கு நிரந்தரமாக வந்துவிட்டார். ‘உனக்கு என்ன விருப்பமோ செய். ஆனா, செய்யும் தொழிலை நேசிச்சு செய்.இரட்டைக்குதிரை சவாரி செய்யாதே!’ என்ற தந்தையின் அறிவுரை வழிகாட்ட, சென்னை வந்தவரை வாரி அணைத்துக்கொண்டது தமிழ்நாடு!


2 பாட்டுப்போட்டிக்காக 1966-ல் சென்னை வந்த பாலு இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணியிடம் முதல் பரிசை வாங்கியதோடு அவர் இசையில் தெலுங்குப் படமான ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ராமண்ணா’ படத்தில் ‘ஏமி ஈவிந்த மோகம்’ என்ற பாடலைப் பாடித் திரையுலகில் அறிமுகமானார். முதல் பரிசுக்கான பாடல், ‘ராமு’ படத்தில் பி.பி.சீனிவாஸ் பாடிய ‘நிலவே என்னிடம் நெருங்காதே!’


3 சென்னை வந்த பிறகு பாடகராக ஆரம்பத்தில் மேடைக் கச்சேரிகளில் பிஸியாக இருந்தார் பாலு. அப்போது பாரதிராஜாவின் பரிந்துரையால் பாலுவின் குழுவில் வந்து சேர்ந்தவர்கள்தாம் பாஸ்கர், ராசய்யா (இளையராஜா), அமர்சிங் என்ற மூவர். இவர்கள் வந்தபிறகு ‘பாவலர் சகோதரர்கள்’ என்று குழுவுக்குப் பெயரும் மாறிப்போனது. ராசய்யா கிட்டாரும், ஹார்மோனியமும் கூடவே பெண் குரலிலும் பாடி ஆல்ரௌண்டராகக் கலக்க... பாலு ஸ்டார் பாடகராக மிரட்ட நூற்றுக்கணக்கான கச்சேரிகளின் மூலம் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ரீச் ஆனது இந்தக்குழு!


4 தந்தை சாம்பமூர்த்தியின் ஆசை, பாலு சாஸ்திரிய சங்கீதம் பயின்று மேடையில் கச்சேரி செய்ய வேண்டும் என்பது. ஆனால், ரெக்கார்டிங் என நாள் முழுவதும் பாடிவிட்டு வீட்டுக்கு வரும் அவரால் நேரம் ஒதுக்கிக் கற்றுக்கொள்ள முடியவில்லை. தந்தை மரணத்துக்குப் பிறகு சங்கீதம் கற்க எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.


5 தமிழில் எம்.ஜி.ஆருக்குப் பாடிய ‘அடிமைப்பெண்’ படத்தின் ‘ஆயிரம் நிலவே வா’ தான் அதிகாரபூர்வமாக முதல் பாடல். ஆனால், ‘சாந்தி நிலையம்’, ‘குழந்தை உள்ளம்’ படங்களில் முன்பே பாடி, தாமதமாக ரிலீஸானது. முதன்முதலில் அவரைப் பாட அழைத்தது எம்.எஸ்.வி தான். எல்.ஆர்.ஈஸ்வரியோடு டூயட் பாடியிருந்தார் பாலு. ஆனால், ‘ஹோட்டல் ரம்பா’ என்ற அந்த படம் ரிலீஸாகவில்லை!


6 ‘செய்கிற கலையில் குறைவான தவற்றைச் செய்பவன்தான் மிகச் சிறந்த கலைஞன். எனக்கிருக்கும் குறைவான இசை ஞானத்துக்கு நிறைய புகழை வாரிக்கொடுத்திருக்கிறான் இறைவன்!’ - பாலுவின் தன்னடக்கம் இது.


7 தேசிய விருதுகள்-6. கே.வி மகாதேவன், லக்‌ஷ்மி காந்த் - பியாரிலால், இளையராஜா, ஹம்சலேகா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வாங்கியிருக்கிறார். ராஜாவுடன் மட்டும் இரண்டு!


8 ஆரம்பக்கால சென்னை நாள்களில் ஸ்கூட்டரில்தான் ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களுக்கு வருவார். பாடகர் முகமது ரஃபியின் ரசிகர் என்பதால் அவரைப்போலவே பியட் கார் வாங்க வேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டிருந்தார். 1970-ல் ‘63-ன் மாடல் பியட் காரை வாங்கினார். சமீபமாக அவர் மெர்சிடிஸ் பென்ஸ் S 400 மற்றும் E 200 கார்களைப் பயன்படுத்தி வந்தார்.


9 அன்னக்கிளிக்காக ‘தொண்டை கட்டிக்காம பார்த்துக்கோ’ என இளையராஜா சொல்லியிருந்்தார். ஆனால், ரெக்கார்டிங்குக்கு முன் பாலுவுக்குத் தொண்டைகட்டிக்கொண்டது. அடுத்தடுத்த படங்களில் நண்பரைத் தவிர்த்திருக்கிறார் ராஜா. ‘ஏன்டா டே... நான்லாம் உனக்குப் பாடகராவே தெரியலையா..?’ - சினிமா விழாவில் தன் ஆர்க்கெஸ்ட்ரா காலத்து நண்பன் இளையராஜாவிடம் உரிமையாகக் கோபப்பட்டார் பாலு. அந்த உரிமையான கோபத்துக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்த ராஜா, ‘சரி, நாளைக்கு ரெக்கார்டிங் வா’ எனச் சொல்லி ‘உறவாடும் நெஞ்சம்’ படத்தில் ‘ஒருநாள் உன்னோடு ஒருநாள்!’ என்ற டூயட் பாடலை ஜானகியோடு பாட வைத்திருக்கிறார்.


10 முதல் தேசிய விருதைப் பெற்றுத்தந்த ‘சங்கராபரணம்’ படத்தின் இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு எஸ்.பி.பி நெருங்கிய உறவினர். படத்தில் பாலமுரளி கிருஷ்ணாவைப் பாட அழைக்க அவர் மறுத்துவிட்டார். இதனால் அனைத்துப்பாடலையும் எஸ்.பி.பிக்குப் பயிற்சி கொடுத்துப் பாடவைத்தனர். படம் ஹிட்டாக பாலமுரளி கிருஷ்ணா கடுமையாக பாலுவை விமர்சித்தார். ஆனால், ‘குருவின் கருத்துக்குத் தலைவணங்குகிறேன்’ என்று பாலு பொறுமை காக்க, சிலநாள்களில் பாலமுரளி கிருஷ்ணாவே, ‘என்னைப்போல அவரால் பாடமுடியும். அவரைப்போல் என்னால் பாட முடியாது!’ என்று சொல்லி, தன் சீடனாக ஏற்றுக்கொண்டார்.


11 75 படங்களில் நடித்துவிட்டார். மேடை நிகழ்ச்சியொன்றில் பாலு ‘மைம்’ செய்ததைப் பார்த்து கே.பாலச்சந்தர் ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார். ஷூட்டிங்குக்கு முந்தைய தினம் பாலுவின் தந்தை தவறிவிட, சுஹாசினியின் கால்ஷீட்டை மாற்றி 15 நாள்கள் காத்திருந்து ஷூட்டிங் நடத்தினார் பாலசந்தர். படத்தில் பாலுவின் மொட்டை தோற்றத்துக்கு இதுதான் காரணம்.


12 ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள் சாப்பிடுவதில் பெருவிருப்பம். “நிறைய பாடகர்கள் ஜில்லுனு எதுவும் சாப்பிடக்கூடாதுன்னு சொல்வாங்க. ஆனால், பாலமுரளி அண்ணா ஐஸ் வாட்டர் மட்டும்தான் குடிப்பார். முகமது ரஃபி, கச்சேரி பாடும்போது அரை கிளாஸ் ஐஸ் போட்ட கூல்ட்ரிங்ஸ் குடிச்சிட்டே இருப்பார். தூசி, புகை மட்டுமே பாடகனுக்குப் பகை” என்று சிரிப்பார் பாலு.


13 `சீக்கிரமே ஒரு படமாவது டைரக்ட் பண்ணணும்!’ என்பது பாலுவின் நிறைவேறா இன்னொரு கனவு. ‘ஒரு டைரக்டர்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்ந்து எல்லா டிப்பார்ட்மென்ட்டும் கத்துக்கிட்டு இண்டிபெண்டன்ட் டைரக்டர் ஆகணும்!’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.


14 குரல் மாற்றிப்பாடுவது இவர் ஸ்பெஷல் என்பார்கள். “நடிகர்களுக்காக நான் குரலை மாற்றியெல்லாம் பாட முயல்வது இல்லை. நான் பாடுன பிறகு அவங்க நடிப்பால எனக்குப் பெருமை தேடித் தந்திடுறாங்க!” என்று தன்னடக்கத்தோடு சொன்னாலும், ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ படத்திற்காக இளையராஜா இசையில் எம்.ஆர்.ராதா குரலில் ‘அப்பன் பேச்சைக் கேட்டவன் யாரு’ பாடலைப் பாடி அசத்தினார்.


15 இந்தியாவின் 16 மொழிகளில் பாடியவர் பாலு. எப்படி சாத்தியமானது?


“ ‘எங்க மொழியை அவர் சரியா உச்சரிக்கலை’ன்னு இதுவரை யாரும் புகார் சொன்னது இல்லை. தங்கள் தாய்மொழியைச் சேர்ந்த எத்தனையோ பாடகர்கள் இருக்கும்போது, எங்கேயோ இருந்து நம்மளைக் கூட்டிட்டு வந்து பாடவெச்சு நமக்கு வாய்ப்பு கொடுக்கிறாங்க இல்லையா... அந்த மரியாதைக்கு நாம நன்றியுடையவனா இருக்கணும்’’ என்று நெகிழ்ந்தவர் பாலு!


16 காதல் வழியப் பாடுவதில் வல்லவரான எஸ்.பி.பி காதல் திருமணம் செய்தவர். இளம் வயதிலேயே காதலித்து வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், தனது காதலி சாவித்திரியை விசாகப்பட்டினத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று, நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.


17 பாடகி ஜானகி முதன்முதலாக பாலுவைப் பார்த்தது குண்டூரில் ஒரு பாட்டுப்போட்டியில். நடுவராக வந்திருந்த ஜானகி யாரையும் இமிடேட் செய்யாமல் பாடிய பாலுவின் தலையில் கைவைத்து, ‘உனக்கு சினிமாவில் பெரிய எதிர்காலம் காத்திருக்கு’ என்று ஆசீர்வாதம் செய்திருக்கிறார். பின்னாளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை அவருடனே பாடிய பாலு, அந்த ஆசீர்வாதத்தால்தான் நான் பாடகரானேன் என எல்லா மேடைகளிலுமே சொல்வார். பின்னே... முதல் பரிசு பெற்றவரை அப்படி வாழ்த்தாமல் இரண்டாம் பரிசைப் பெற்ற பாலுவை மட்டும் வாழ்த்தினால்..!


18 2012-ல் தெலுங்கு நடிகர் தணிகலபரணியின் இயக்கத்தில் நடித்த ‘மிதுனம்’ படம்தான் அவர் நடிப்பில் அவருக்கே பிடித்த படம். ‘படத்தில் லட்சுமியும் நானும் என ரெண்டே கேரக்டர்கள் மட்டும்தான். போட்டி போட்டு நடித்தோம். நந்தி விருதெல்லாம் கிடைச்சது. அதுபோல சவாலான ரோல்கள் கிடைச்சா நல்லது!’ என்று தன் ஏக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார் பாலு.


19 1981-ல் பாலிவுட்டில் அறிமுகமான முதல் படம் ‘ஏக் துஜே கேலியே’. ஆனால், பாலு பாடுவது படத்தின் இசையமைப்பாளர்கள் லக்‌ஷ்மிகாந்த்-பியாரிலாலுக்குப் பிடிக்கவில்லை. தமிழ் பேசும் இளைஞனாகக் கமல் நடித்திருப்பதால் பாலு பாடினால் சரியாக இருக்கும் என கே.பாலசந்தர்தான் வற்புறுத்திப் பாட வைத்திருக்கிறார். லதா மங்கேஷ்கருடன் டூயட் என்பதால் பதற்றத்தோடு பாடியிருக்கிறார். ஆனால், அந்த ஆண்டுக்கான சிறந்த பாடகருக்கான தேசிய விருது பாலுவுக்குக் கிடைத்தது. அதன் பிறகு லக்‌ஷ்மிகாந்த்-பியாரிலாலுக்குப் பிடித்த பாடகர்களில் பாலுவும் ஒருவர்.


20 80, 90 களில் பாலிவுட்டில் சல்மான் கானின் படங்களுக்கு பாலுதான் பின்னணி பாடினார். மெய்னே பியார் கியா, ஹம் ஆப்கே ஹெய்ன் கோன், சாஜன் என பல படங்களில் சல்மான்கானுக்கு மியூசிக்கல் ஹிட் கொடுத்தது பாலுதான்.


இளைய நிலா நினைவலைகள்!

21 எம்.ஜி.ஆர்., ‘ஆயிரம் நிலவே வா’ எனப் பாட அழைத்து வந்தால், 1971-ல் ‘சுமதி என் சுந்தரி’ படத்துக்காக ‘பொட்டு வைத்த முகமோ’ என்று பாட அழைத்து வந்தார் சிவாஜி. காரணம் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் ரிலீஸான அன்று ஓர் இரவில் அந்தப் பாடலை 35 முறை கேட்டாராம் சிவாஜி. ‘அண்ணனுக்கு அழகா பாடுன பய நமக்கும் பாடணும் ஆமா!’ என கண்டிஷனே போட்டுவிட்டாராம்!


22 90களில் சில மாதங்கள் குரல் உடைந்து பாடமுடியாமல் வீட்டிலேயே இருந்தார். திரை உலகில் பலர் வருத்தப்பட, ‘நான் இவ்வளவுதூரம் பாடுவேன்னே நினைச்சதில்லை. கடவுள் கொடுத்ததை அவனே எடுத்துக்கொண்டான்!’ எனச் சொல்லி சமாதானப்படுத்தியிருக்கிறார். அதிசயத் திருப்பமாக... மீண்டும் குரல் அதுவாகவே சரியானது!


23 இசையமைப்பாளராக 60 படங்கள் இசையமைத்திருக்கிறார். கொங்கணி உள்ளிட்ட எல்லா இந்திய மொழிப்படங்களும் இதில் அடங்கும். ‘துடிக்கும் கரங்கள்’, ‘சிகரம்’ போன்ற படங்களில் அதிக கவனம் ஈர்த்தார் எஸ்.பி.பி. ‘ஆனா யாரும் வாய்ப்பு கொடுக்கல... நானும் கேட்கல!’ என்று வெள்ளந்தியாய்ச் சொன்னவர் பாலு.


24 யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என நினைக்கும் மனிதர். தமிழ் சினிமாவில் நடிகர்களில் ஜெய்சங்கரைப்போல, பாடகர்களில் எஸ்.பி.பி என்பார்கள். நிறைய பாடல்களுக்கு சன்மானம் வாங்காமல் தயாரிப்பாளர்களின் நிதிச்சுமை கருதி சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார். பாடிய பிறகு பெற்றுச் சென்ற பல செக்குகள் பவுன்ஸ் ஆகி வருமாம்!


25 ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜ்குமார் உடையார் என்ற சிற்பியிடம் தன் பெற்றோரின் சிலைகளை ஆர்டர் கொடுத்துச் செய்த பாலு, சில மாதங்களுக்கு முன் தன் சிலையையும் செய்யச் சொல்லியிருக்கிறார். மரணத்தை முன்பே உணர்ந்தாரா பாலு என்பதுதான் அவர் ரசிகர்களின் கண்ணீர்க் கேள்வி!


26 சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழும் பழக்கம் கொண்டவர் பாலு. பாடல்களை ஹம் செய்துகொண்டு வாக்கிங் போகும்போது அவரை அடையாளம் கண்டுகொண்டு பேசுபவர்களோடு பேச ஆரம்பித்தால், நேரம்போவதே தெரியாது என்கிறார் உதவியாளர். இதனாலேயே மனைவியோடு செல்லமாய் சண்டை வருவதும் உண்டு.


27 முன்பு ஷட்டில்காக் நன்கு விளையாடியவர் பின்னர் பேரக்குழந்தைகளோடு செஸ் விளையாடுவதிலும், அந்தாக்‌ஷரி விளையாடுவதிலும் அவர் கடைசிக்காலம் கழிந்தது.


28 உலகமெங்கும் இருக்கும் ரசிகர்களோடு உரையாடுவதில் ஆர்வம் காட்டுவார். வெளிநாட்டிலிருந்து யாரேனும் ரசிகர்கள் பரிசுப் பொருள்களைக் கொண்டுவந்தால் அன்போடு தவிர்ப்பார். “இறைவன் அருளாலும் உங்கள் அன்பாலும் நான் நல்லாவே இருக்கேன்!” என்பார்.


29 1978-ல் ரஜினியின் மாறுபட்ட பரிமாணத்தில் வெளியான ‘முள்ளும் மலரும்’ படத்தில் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ பாட்டு எஸ்.பி.பி பாடியது. ஒருவகையில் ரஜினிக்கு எஸ்.பி.பி பாடிய முதல் மாஸ் பாடல் அதுதான்! ஆனால், 1977-ல் ரஜினிக்கு ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் ‘ராஜா என்பார் மந்திரி என்பார்’, ‘விழியிலே மலர்ந்தது’ என 2 மெலடி பாடல்கள் பாடியிருக்கிறார் பாலு!


30 “பருத்த சரீரத்தோடு நான் எப்படி ‘மண்ணில் இந்தக் காதலன்றி’ பாடலை மூச்சு விடாமல் பாடினேன்னு ஆச்சர்யப்படுறவங்களுக்கு நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். அது ஜிம்மிக்ஸ்தான். டெக்னாலஜியினால, ராஜாவின் மேதமையினால அது சாத்தியமாச்சு. ஆனாலும், அதுக்கு முன்பே, ஆறிலிருந்து அறுபதுவரை ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ பாடலில் தம் கட்டிப் பாடியிருக்கேன்!” என்று ரகசியம் பகிர்ந்தவர் பாலு.


இளைய நிலா நினைவலைகள்!

31 தான் பாடிய பாடலில் பிடிக்காத பாடல் எதுவுமில்லை என்பார். ‘சினிமாவுல எத்தனையோ நாள்கள் யோசித்து ஒரு காட்சியை உருவாக்கி அதுல பாடலையும் வைக்கிறாங்க. பாடப்போன நான் அதப் பத்திலாம் கருத்து சொன்னா அபத்தம். அதனால எந்தக்குறையும் சொல்லாம பாடிட்டு வந்துருவேன்’ என்பார்.


32 அடிக்கடி சொல்லும் வாக்கியம் சுவாமி விவேகானந்தரின் ‘Every soul is potentially divine!’ (ஒவ்வொரு ஆன்மாவும் தெய்விகமானது). அது அவரது மனசுக்கு மிகவும் நெருக்கமானது.


33 “கடவுள் கொடுத்த சரீரத்தையும் சாரீரத்தையும் நல்லா பார்த்துக்க பாலு!”- சில வருடங்களுக்கு முன் யேசுதாஸுக்கு எஸ்.பி.பி பாதபூஜை செய்தபோது யேசுதாஸ் பாலுவுக்குச் சொன்ன அட்வைஸ் இது.


34 ரெக்கார்டிங் ஸ்டூடியோவரை போய் பாடாமல் திரும்பியதில்லை. 12 நிமிடங்களில்கூட பாடிக்கொடுத்துவிட்டுக் கிளம்பிவிடுவார். 2010க்குப் பிறகுதான், ஆடியோவை அனுப்பச் சொல்லி தன்னால் பாடமுடியுமா என டெஸ்ட் செய்து படங்களுக்கு ஓகே சொல்லுவதை வழக்கமாக்கினார்.


35 தன் ரசிகர்களை வைத்து நலிந்த மேடைப்பாடகர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்துக்காகவும் டிரஸ்ட் ஆரம்பித்து சத்தமில்லாமல் பலருக்கு உதவி வந்தார்.


36 பழைய நட்புகளைப் பேணுவதில் எஸ்.பி.பி தனித்துவமிக்கவர். அனந்தபூரில் பொறியியல் படித்து டிஸ்கன்டினியூ செய்தாலும் இன்றும் கல்லூரி நண்பர்களோடு நட்பாய் இருக்கிறார். பள்ளித்தோழரான விட்டல்தான் கடைசிவரை அவரது ஹெல்த் மற்றும் கால்ஷீட்டை உடனிருந்து பார்த்துக்கொண்டது!


இளைய நிலா நினைவலைகள்!

37 பாடகர்கள் சோகப்பாட்டையே பாடினாலும் வரிகளில் அவச் சொற்கள் வராமல் இருக்க வேண்டும் என்று சொல்வார். உதாரணமாக பிஸியாகப் பாடிக்கொண்டிருந்த டி.எம்.எஸ் அவர்கள் ‘என் கதை முடியும் நேரமிது’, ‘நான் ஒரு ராசியில்லாத ராஜா’ என்றெல்லாம் ‘ஒருதலை ராகம்’ படத்தில் பாடியதைக் குறிப்பிட்டுச் சொல்வார்.


38 பணிவுக்கே பெயர்போனவர் எஸ்.பி.பி. அவரையே ஆச்சர்யப்படுத்தியது ஏ.ஆர்.ரஹ்மான். “ராஜாகிட்ட இருக்குற இசை மேதைமையை நான் எங்குமே பார்த்ததில்லை. அதேபோல ரஹ்மான்கிட்ட இருக்குற பணிவையும் நான் உலகில் எங்குமே கண்டதில்லை!” என்று சொல்லியிருக்கிறார் எஸ்.பி.பி.


39 நடிப்புத்திறமையைப் பார்த்து ‘முதல் மரியாதை’ படத்தில் பாரதிராஜா நடிக்க அழைக்க, அன்போடு தவிர்த்திருக்கிறார் பாலு.


40 சக கலைஞர்கள்மீது அதிக அக்கறை கொண்டவர். அவர்களுக்கே தெரியாமல் தனக்குப் பாடவரும் வாய்ப்பை ரகசியமாக மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். மலேசியா வாசுதேவனும், மனோவும் இவருக்கு ரொம்பவே ஸ்பெஷல்.


41 இயக்குநர் ஷங்கருக்கு ஆரம்பத்தில் பாலுவை வில்லனாக்கிப் பார்க்க ஆசை. ‘காதலன்’ படத்தின் காக்கர்லால் பாத்திரத்தை பாலுவுக்காக யோசித்து வைத்திருந்தாராம். ஷங்கர் வீட்டிலேயே அதற்கு எதிர்ப்புக் கிளம்ப, திட்டம் ரத்தானது.


இளைய நிலா நினைவலைகள்!

42 எஸ்.பி.பியை எல்லோருக்கும் பிடிக்கக் காரணமே அவரின் எளிமைதான். 40 ஆயிரத்துக்கும் மேலான பாடல்கள், கின்னஸ் சாதனை, 6 தேசிய விருது உட்பட ஆயிரக்கணக்கான விருதுகள்... ஆனாலும், எதிரில் இருப்பவர்களை வியந்து பார்த்து, “நான்லாம் ஒண்ணுமே இல்லை சார்!” என்றே பேச ஆரம்பிப்பார்.


43 கங்கை அமரனின் காதலுக்கு பாலுதான் தூது போனார். 22 வயதிலேயே ஊர்விட்டு ஊர் டூவிலரில் காதலியைக் கடத்திய பராக்கிரமங்களை நண்பர்களிடம் சொன்னதால் பாலுதான் இந்த பாவலர் சகோதரர்கள் கேங்கில் சூப்பர் ஹீரோ. பாலு தூது போன ராசி, கங்கை அமரனின் காதல் கைகூடியது!


44 ’புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே!’ என இளையராஜாவுக்கே பின்னணி கொடுத்தவர் எஸ்.பி.பி. ‘நிழல்கள்’ படத்தில் திரையில் தோன்றிப் பாடும் இளையராஜாவுக்குக் குரல் கொடுத்ததை, ‘நான் செய்த பாக்கியம்!’ என்று சொல்வார் எஸ்.பி.பி.


45 உணவு விஷயத்தில் அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டார். சின்னவயதில் அப்பாவிடம் அடிவாங்கிய ஒரே விஷயம் நின்றபடியே சாப்பிடுவதற்குத்தான். தயிர்சாதமும் மாவடுவும் பிடித்த உணவு!


46 கருப்பு வண்ணம் பிடிக்கும். ‘பந்த்கலா கோட்’ அவரின் ஃபேவரைட் ஆடை!’மாஷா அல்லாஹ்’, ‘ப்ரைஸ் தி லார்ட்’, ‘ஓம் நமச்சிவாய’ - இவ்வார்த்தைகளை அதிகம் உச்சரிப்பார் பாலு.


47 என்.டி.ஆர்-நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி- நாகார்ஜுனா, எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன், ரஜினி- கமல் என வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் நடித்த உச்ச நடிகர்களுக்கு அதிகம் பின்னணி பாடிய பாடகர் இவர் மட்டும்தான்!


48 பாடும்போது மெல்லிசாய் சிரிப்பது, குரலில் சேட்டை பண்ணுவதெல்லாம் எஸ்.பி.பி ஸ்டைல். இளையராஜா இசையில் இதை விளையாட்டாகச் செய்ய, அவரும் அதை ஆமோதிக்க அதை அளவோடு வழக்கமாக்கிக்கொண்டார்!


இளைய நிலா நினைவலைகள்!

49 எம்.ஆர்.ராதா, சுருளி ராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, செந்தில் எனப் பலரின் குரலில் இளையராஜா இசையில் பாடியிருக்கிறார். ‘பள்ளி நாள்களில் நான் மிமிக்ரி நல்லா பண்ணுவேன். அதுதான் இப்படிப் பாடக் காரணம்’ என்பார்.


50 தன்னிடம் சில வருடங்களுக்கு முன்புவரை இருந்த மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை அவர் மீடியா முன் மறைத்ததே இல்லை. ‘நல்ல தூக்கத்துக்காக அளவா குடிப்பேன். I am a social drinker. என் நலன்மீது அக்கறைகொண்ட உறவினர்களும் நண்பர்களும் சொல்லிக் கேட்காத நான் உடம்பு ஒத்துழைக்க மறுத்தபோது விட்டுவிட்டேன்!’ என்பார். சார்மினார் சிகரெட் புகைப்பது வழக்கம். மகள் பல்லவிக்குக் கொடுத்த சத்தியத்தால் சிகரெட் பழக்கத்தை எப்போதோ விட்டுவிட்டார்.


51 ஆர்மோனியம் நன்றாக வாசிப்பார். தூக்கம் வராத இரவுகளில் புல்லாங்குழல் வாசித்துவிட்டு அசதியில் படுப்பது வாடிக்கை.


52 கிரிக்கெட் பாலுவுக்கு அவ்வளவு பிரியம். கிரிக்கெட் வீரர்களில் சச்சின் ஆரம்பித்து தினேஷ் கார்த்திக்வரை இவர் பாடல்களுக்கு ரசிகர்கள் லிஸ்ட் பெருசு. அவர்கள் கேட்கும் பேவரைட் பாடல்களைப் பாடி அவர்களோடு செல்பி எடுத்துக்கொள்வார் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு!


53 அண்டார்ட்டிகா கண்டத்தைத் தவிர்த்து எல்லாக் கண்டத்திலும் காலடித்தடம் பதித்து இசை நிகழ்ச்சி நடத்திய பெருமை எஸ்.பி.பிக்கு உண்டு. பிடித்த நாடு கத்தார். ‘கலை மற்றும் பாரம்பர்யத்துக்கு அந்நாடு கொடுக்கிற மரியாதை ரொம்பப் பிடிக்கும்’ என்பார்!


54 ஒரே நாளில் வெவ்வேறு இசையமைப்பாளர்களிடம் எவ்வளவு பிஸியாக பாடினாலும், படத்தின் கதை என்ன என்பதையும் சிச்சுவேஷனையும் ஆர்வத்தோடு கேட்டுத் தெரிந்துகொண்டு பாடலுக்கான மூடு கிரியேட் செய்தபின்தான் பாடவே செல்வார்.


இளைய நிலா நினைவலைகள்!

55 மனதை இலகுவாக்க ஓய்வுநேரத்தில் படங்கள் வரைவார் பாலு. பத்து வருடங்களுக்கு முன்வரை தனியாக கார் ஓட்டுவதில் அதீத ஆர்வம் காட்டியவர். “என்னைவிட சிறப்பா ஓட்டுறது சார்தான்!” என்கிறார் அவரின் டிரைவர்.


56 தனக்குக் கிடைத்த சுதந்திரம் தன் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தவர் பாலு. மகள் பல்லவியை அவர் விருப்பப்படி பாடகியாகவும், மகன் சரணை நடிகர், தயாரிப்பாளர், பாடகராகவும் உருவாக்கினார்.


57 தெலுங்கில் டப் ஆகும் கமல்ஹாசன் படங்கள் பலவற்றுக்கு டப்பிங் பேசியது எஸ்.பி.பிதான். ‘சத்யா’ படத்தின் வில்லன் பாத்திரமான கிட்டியின் குரலுக்கு ஒரு சாப்ட் வாய்ஸ் தேவைப்பட, கமல் சொல்லி அதையும் டப்பிங் பேசி அசத்தினார் எஸ்.பி.பி. தெலுங்கில் இருந்து தமிழுக்்கு வந்த ‘சிப்பிக்்குள் முத்து’ படத்்திலும் கமலுக்குப் பதில் தமிழ் டப்்பிங் பேசியதும் எஸ்.பி.பிதான்.



58 விஜய் தன் அப்பா படங்களில் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதும், அம்மா மேடைப்பாடகியாக இருந்தபோதும் பாலுவுக்கு குட்டி விஜய்யை ரொம்பவே பிடிக்கும். நிகழ்ச்சிகளில் விஜய்யைப் பார்த்தால் கார்ட்டூன் கேரக்டரைப்போல பேசிச் சிரிக்க வைப்பார். பின்னாளில் பிஸி ஷெட்யூலில் ஹீரோவாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’, மற்றும் ‘ரசிகன்’ படங்களில் விஜய்க்குப் பின்னணி பாடினார். ‘நீயும் பாடலாம்டா கண்ணா’ என, பாட நம்பிக்கை கொடுத்ததே பாலுதான். ‘பிரியமானவளே’ படத்தில் நடித்த நாள்களில் யாரிடமும் அதிகம் பேசாத விஜய் பாலுவின் கேரக்டரால் ஈர்க்கப்பட்டு வெல்விஷராக பல அட்வைஸ்களை எஸ்.பி.பியிடம் கேட்டிருக்கிறார். அதன்பின் பாலு மறையும்வரை அவரிடம் நேரிலோ போனிலோ அவ்வப்போது பேசுவதை, குழப்பமான சமயங்களில் அறிவுரை கேட்பதை வழக்கமாக்கியிருக்கிறார் விஜய்!


59 ஆரம்பப் போராட்டக் காலங்களில் எஸ்.பி.பியிடம் நிறைய மனம்விட்டுப் பேசியிருக்கிறார் அஜித். எஸ்.பி.பி. சரணின் கிளாஸ்மேட். அமராவதியில் 4 ஹிட் பாடல்களில் நல்ல ஓப்பனிங் கொடுத்ததிலாகட்டும், 2 தெலுங்குப் படங்களில் அஜித் பெயரைப் பரிந்துரை செய்ததாகட்டும் பாலு காட்டிய அன்பை அஜித் எப்போதும் நினைவுகூர்வார். ‘He is my Philosopher’ என்று சொல்லும் அஜித், அவரை ‘குரு’ என்றுதான் அழைப்பாராம். கார்களைப் பற்றி அஜித்திடம் ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வாராம் பாலு!


60 ‘பேட்ட’க்குப் பாட வந்திருந்தபோது, அனிருத்திடம் ‘உன்னை நான் பெரிய பையனா இருப்பேன்னு நினைச்சேன்!’ எனச் சொல்லியிருக்கிறார். எஸ்.பி.பியிடம் வாங்கிய ஆட்டோகிராப், ஒரு விழாவில் அவருடன் எடுத்த போட்டோவைக் காட்டி நெகிழ்ந்்திருக்கிறார் அனிருத். ஆனால், பேட்டையில் எஸ்.பி.பியை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற விமர்சனம் வந்தபோது பாலுவிடம் அனிருத் ‘ஸாரி’ கேட்க, ‘கிரிட்டிக்ஸ் எதையாச்சும் சொல்லிட்டேதான் இருப்பாங்க. நான் உன் மியூஸிக்ல பாடுனதை பெருமையா நினைக்கிறேன்’ என மென்மையாகச் சொல்லியிருக்கிறார் பாலு. “சும்மா கிழி பாடவைத்து நல்ல பெயர் வாங்கிட்டேன். இல்லைனா எனக்கு உறுத்தலாவே இருந்திருக்கும்!” என்கிறார் அனி!



61 சேட்டிலைட் சேனல் ரியாலிட்டி ஷோக்களுக்கு பாலு வருவாரா என்ற தயக்கத்தோடு நேரில் அழைக்கச் செல்ல, “நான் இப்ப அடுத்த ஜெனரேஷனுக்கு வழிவிட்டுட்டு ப்ரீயாதான் இருக்கேன்பா... இதுக்கு எதுக்கு சுத்தி வளைச்சுக் கேக்குறீங்க. ஐ ஆம் ரெடி டூ ராக் இன் எனி மீடியம்!” என்று சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.


62 லாக்டௌனுக்கு முன்பு புது இசையமைப்பாளர் ஒருவருக்கு ஜிங்கிள்ஸ் பாட அவரின் புது ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார் பாலு. பதற்றத்தில் சுருதி விலகி அவர் நோட்ஸ் கொடுக்க, “உன்னோட நோட்ஸ்க்கு என் குரல் செட்டாகுமான்னு தெரியலை. நான் மூணு மாடுலேஷன்ல பாடுறேன். எது பெட்டரோ போய்க்கலாம்!” எனப் பாடிக் கொடுத்திருக்கிறார். “ரஹ்மான்கிட்ட பத்தே நிமிஷத்துல பாடிக்கொடுத்துக் கிளம்பும் மனுஷன் எனக்காக 2 மணிநேரம் ஒதுக்கி ஒரு விளம்பரத்துல பாடினார்! He is Not only a Legend... He is so simple and humble soul!” என்கிறார் அவர்.


63 சினிமாவுக்காக ரஜினியின் ‘அண்ணாத்தே’ படத்தில் பாடியதுதான் கடைசிப் பாடல். மே 30 அன்று ‘பாரத பூமி’ என்ற பாடலை இளையராஜா இசையில் பாடியிருந்தார். கொரோனா மீட்புப்பணியில் இருக்கும் முன்களப்பணியாளர்களைப் பாராட்டும்வண்ணம் இந்த வீடியோவை இளையராஜாவுடன் சேர்ந்து வெளியிட்டார்.


64 ஒலிப்பதிவுக்கூடங்கள் அனலாக்கிலிருந்து கம்ப்யூட்டரில் டிஜிட்டலாக மாறிய சமயத்தில் சவுண்ட் மிக்ஸிங்கில் ஜாம்பவான்களே பாடகர்களின் ஒரிஜினல் வாய்ஸைத் தவறவிட்டுத் திட்டுவாங்குவதுண்டு. ஆனால், எஸ்.பி.பி மட்டும் இந்த இடைப்பட்ட காலத்தில் பாடும்போதே ஏற்ற இறக்கங்களில், மீட்டர்களில் சூழலுக்குத் தகுந்தாற்போல ஏற்ற இறக்கங்களோடு பாடுவார். ஹெட்போன் மாட்டிக்கொண்டு தன் குரல் எப்படிப் பதிவாகிறது எனக் கேட்டுப் பாடும் பாடகர்கள் மத்தியில் ரொம்ப கேஷுவலாக எதுவும் மாட்டாமல் பாடுவார். டெக்னாலஜி அவரை எதுவுமே பாதிக்கவில்லை! உயிருடன் இருந்தால் இன்னும் பத்து வருஷத்துக்கு யூத்புல்லாகப் பாடிக்கொண்டிருப்பார்!” என்கிறார் சவுண்ட் இன்ஜினீயர் கம் மியூஸிக் டைரக்டர் மரியா மனோகர்!


65 இளையராஜாவை இன்றும் ‘வாடா போடா’ என அழைக்கும் இருவரில் ஒருவர் பாரதிராஜா. மற்றொருவர் பாலு. ‘சீக்கிரம் எழுந்து வா பாலு... உனக்காகக் காத்திருக்கேன்!’ என்ற இளையராஜாவின் குரலில் தெரிந்தது நடுக்கமல்ல... பாலு ராஜாமீது வைத்திருந்த அன்பின் அலைவரிசை அது!


66 திடீரென தன் ரசிகர்களின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பதைப் பல வருடங்களாக வாடிக்கையாக வைத்திருந்தார் பாலு. மனசு சரியில்லை என்றால் மைசூரிலிருக்கும் ஜானகியம்மாள் வீட்டுக்குச் சொல்லாமலே போய் நிற்பார். ‘வாடா குழந்தை!’ என வாஞ்சையாக வரவேற்பார் ஜானகி.


67 எஸ்.பி.பி அரசியலே பேச மாட்டார் என்று நினைப்பவர்களுக்கு... வீட்டிலும் நெருங்கிய வட்டத்திலும் சீரியஸாய் அரசியல் பேசுவார். கோபப்படுவார். உணர்ச்சிவயப்படுவார். ‘என் அரசியலைப் பொதுவெளில சொல்லணும்னு அவசியமில்லை’ என்பது அவர் நிலைப்பாடு. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஓட்டுபோடும் ஜனநாயகக் கடமையை அவர் மறந்ததில்லை!


68 “பாடகராகத் தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். சில வருடங்களுக்கு முன் கடனிலிருந்து முழுவதும் மீண்டுவந்தேன். தினமும் 5 பாட்டு பாடிவிட்டு வீட்டுக்கு வந்தால் வீட்டு வாசலில் சேட்டு நிற்பான். ஆனா, நாளைக்கு வா என்று சொல்லும் நிலையை இறைவன் எனக்குக் கொடுக்கலை. அந்த அளவுக்கு என் குரலைக் கேட்டு வளர்த்துவிட்ட ரசிகர்களுக்குக் கைம்மாறு செய்ய இன்னொரு ஜென்மம் எனக்கு வேண்டும்!” என்பதே பாலுவின் மறு ஜென்ம ஆசை!



69 மருத்துவமனையின் இறுதிநாள்களில் நண்பர்கள் பேசிய வீடியோக்களை மகன் சரண் அப்பாவிடம் ப்ளே பண்ணிக்காட்ட, பாலுவின் உலர்ந்த உதட்டில் புன்னகைக்கீற்று. இளையராஜாவின், ‘பாலு எழுந்து வா’ வீடியோவைப் பார்த்ததும் செல்போனை சைகையில் கேட்டு, ரீப்ளே பண்ணிப் பார்த்து, விர்ச்சுவல் முத்தம் கொடுத்திருக்கிறார் பாலு! அப்போது அருகிலிருந்த மருத்துவர் தீபக் சுப்ரமண்யம் ஆச்சர்யத்தில் அசந்துவிட்டார்.


70 “டேய் எனக்கு உன் அளவுக்கு பஞ்சமம் சட்ஜமம்... ராகம்லாம் தெரியாதுடா... அப்படியே ஹை பிட்ச்ல போறேன். பிசிர் தட்டுற இடத்துல சிக்னல் கொடு!”- இப்படித்தான் நோட்ஸ் கொடுக்கும் இளையராஜாவிடம் சொல்லுவார் பாலு. பெரும்பாலும் சொதப்பாமல் பாடி, “டேய் படவா, எங்கே கத்துக்கிட்டே இந்த வித்தைய?” என ராஜாவிடமே பாராட்டு வாங்கிடுவார் பாலு! “எனக்காகத்தான் ராஜா பிறந்தான்... அவனுக்காக நான் பிறந்தேன்!” - இதயத்தின் அடி ஆழத்திலிருந்து இந்த வார்த்தைகளை பாலு சொன்னபோது இந்தக்கூட்டணியின் ஆயிரக்கணக்கான பாடல்களின் முதல்புள்ளி நம் முன் மின்னலாய் வெட்டிச் செல்லும்!


71 தன் குரலில் பேசும் ஆட்டோ காலர் டியூனாக செல்போன் சேவையில் இணைத்து வைத்திருந்தார் பாலு. அவரால் போனை எடுக்க முடியாவிட்டால் அவர் குரல் ஸாரி சொல்லி காத்திருக்கச் சொல்லும். பிறகு லைனில் வருவார். இப்போது உலகமே காத்துக்கொண்டிருக்கிறது!


72 எஸ்.பி.பி சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டியதில்லை. தன் ரசிகர்கள் வற்புறுத்தலால் வெப்சைட் மட்டும் ஆரம்பித்து மெயில்களுக்கு ரிப்ளை பண்ணுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். ‘`மத்தவங்களைப் பத்தி எளிதா அவதூறு சொல்லிடுறாங்க. விர்ச்சுவல் உலகத்தைவிட நேர்ல மனிதர்களோடு பழகுறதுதான் ஆரோக்கியம். ஃபேஸ்புக் எதுக்கு ரியல் ஃபேஸ் இருக்கும்போது?’’ என்பார்.


73 60 வயதுக்கு மேலே ஒவ்வொரு நாளும் போனஸ்தான். எனக்கு வாழ்க்கை இப்ப லீஸ்லதான் போய்க்கிட்டு இருக்கு. 70ஐத் தாண்டியும் பி.பி, சுகர் இல்லாம நல்லாத்தான் இருக்கேன். ஒருவேளை சாவு வந்துட்டா ஓடவா முடியும்? நாம எல்லோரும் தூங்கி எழுந்தாதான் நாம உயிரோட இருக்கோம்னே உணர்றோம். அதுபோலத்தான் இந்த வாழ்க்கை. எப்போவேணா இறைவன் எடுத்துக்குவான் இருக்கும்வரை மத்தவங்களுக்குத் துன்பம் கொடுக்காம வாழ்ந்துட்டுப் போவோம்!’’ - சமீபத்தில் தன் பிட்னெஸ் ரகசியம் பற்றிக் கேட்டபோது இப்படிச் சொல்லியிருந்தார் எஸ்.பி.பி!


74 ``நீங்க அரசியலுக்கு வரலாமே?’’ என்று கேள்வி கேட்பவர்களுக்கு முகம் சுளிக்காமல் பதில் சொல்வார். ``அரசியலுக்கான தகுதி எங்கிட்ட இல்லைன்னு நம்புறேன். கடவுள் நம்ம எல்லோருக்கும் மிஷன் வெச்சிருக்கார். இந்த ஜென்மத்துல நான் உங்களை ஏதோவொரு வகையில மகிழ்விக்கப் பிறப்பெடுத்திருக்கேன். அதுக்கே என்னை உச்சியில உட்கார வெச்சிருக்கீங்க. இதைவிடப் பெரிய சிம்மாசனம் அரசியல்ல கிடைக்காது!’’ என்று சொல்வார்.


.


No comments:

Post a Comment