Saturday, 9 May 2020

VASANTHATHIL VOR NAAL MANAVARAI ORAM




VASANTHATHIL VOR  NAAL MANAVARAI ORAM 


வசந்தத்தில் ஓர் நாள் என்ற பாடல்
எஸ். ராமகிருஷ்ணன் 

திடீரென சில நாட்கள் காலையில் மனதில் ஒரு பாட்டு ஒடத்துவங்கிவிடுகிறது. அதை உடனடியாகக் கேட்க வேண்டும் என்ற உத்வேகம் உருவாகிறது. அப்படி இன்று காலை, வசந்தத்தில் ஓர் நாள் என்ற பாடல் மனதில் ஒடி மறைந்தது. அந்தப் பாடலைக் கேட்கத் துவங்கினேன்.

பாட்டு முடிந்து போகக்கூடாது என்பது போன்ற மனநிலை உருவானது. திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். அது எனது வழக்கம். சில நாட்கள் ஒரே பாடலை நாற்பது ஐம்பது முறை கேட்டிருக்கிறேன். பாடலின் வரிகள் மறைந்து. குரல் மறைந்து, வாசனை புகுவது போல பாடல் உடலுக்குள் சேகரமாகி விடும் வரை கேட்பேன்.


எனது சேமிப்பில் ஏராளமான சினிமா பாடல்கள் , மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை, மற்றும் பழைய இந்திப் பாடல்களை வைத்திருக்கிறேன். இசையமைப்பாளர்கள். பாடகர்கள் வரிசையாக ஆவணப்படுத்தியுள்ளேன். ஆகவே பாடலைத் தேடுவது எளிது. சில பாடல்கள் சேமிப்பில் இல்லாத போது உடனடியாக இணையத்தில் தேடிக் கேட்பது வழக்கம்.

சினிமா பாடல்களைக் கேட்பதில் உள்ள இன்பம் பார்ப்பதில் கிடையாது. பல நேரங்களில் பாடல் எந்தப் படம் என்று கூட அறிந்து கொள்ள மாட்டேன்.


சினிமா பாடல் என்பது ஒரு நினைவு. அழியா நினைவு. எதையோ தேடும் போது கையில் அகப்படும் பழைய புகைப்படம் போன்றதே சினிமா பாடல்களும்.

எனது ஆச்சி வீட்டில் சித்திகள் இருவரும் நன்றாகப் பாடுவார்கள் அதுவும் ரேடியாவில் பாட்டு ஒலிக்கும் போது கூடவே பாடுவார்கள். ஒரு சித்தி ரேடியாவில் அடுத்து என்ன பாடல் போடுவார்கள் என்று யூகித்துச் சொல்வதில் திறமைசாலி. அநேகமாக ரேடியோவில் போடுவதற்கு முன்பே பாடலை முணுமுணுக்கத் துவங்கிவிடுவார்.

சில பாடல்களைச் சினிமாவில் கேட்டதை விடவும் மெல்லிசை கச்சேரிகளில் கேட்கும் போது தான் நெருக்கமாக உணர்ந்திருக்கிறேன். டேப்ரிக்கார்டர் அறிமுகமான காலத்தில் சித்திகள் இருவரும் விருப்பமான பாடல்களைப் பதிவு செய்து வைத்துக் கொண்டு பகலிரவாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

இத்தனை ரசனையோடு இருந்த அவர்களுக்குத் திருமணவாழ்க்கை பாட்டே கேட்கமுடியாதபடியான துயரைத் தான் பரிசாகத் தந்தது. ஒரு சித்தி கசப்பான திருமண வாழ்க்கையின் துயரங்களைப் போக்கிக் கொள்ள ரேடியோவை தலையணை அருகே வைத்துக் கொண்டு தேன்கிண்ணம் கேட்டபடியே தன்னை அறியாமல் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பார்.

இன்னொருவர் வீட்டில் ரேடியோவில் பாடல் கேட்பது பிடிக்காது. அலுவலக வேலை, சமையல். வீட்டுப்பணிகள் என அவர் ஒடுங்கிப் போனார். எப்போதாவது சந்தித்துக் கொள்ளும் போது என்னுடன் பழைய பாடல்களைப் பற்றிப் பேசிக் கொள்வதுண்டு. அப்போது அவரது கண்ணில் சந்தோஷம் ஒளிர்வதைக் கண்டிருக்கிறேன்.

இனிமையாகப் பாடத்தெரிந்த எத்தனையோ பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தன் பாடும் திறமையைக் கைவிட்டுவிட்டார்கள். பாட்டு கேட்பதைக் கூட மறந்து போனார்கள். காலம் மிகக்குரூரமானது. அதுவும் பெண்கள் விஷயத்தில் அவர்களின் ஆசைகளை, ரசனைகளை குடும்பம் போல முடக்கியது எதுவுமில்லை.  இளவயதில் தான் எப்படியெல்லாம் இருந்தேன் என்பதைக் கூட மறந்தவர்கள் போல அவர்கள் நடந்து கொள்வது உச்சபட்ச துயரம்.

சித்தி ஒரு முறை அடுத்து வருவது மூன்று தெய்வங்கள் என்று ரேடியோவில் அறிவித்தவுடனே வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ எனப் பாடத்துவங்கிவிட்டார். இல்லை முள்ளில்லா ரோஜா தான் போடுவான் என்று இன்னொரு சித்தி மறுத்து பாடத்துவங்கினார். விளம்பரம் முடிந்து வந்த பாடல் வசந்தத்தில் ஓர் நாள்.

அந்தப்பாடலின் கூடவே சித்தி பாடினார். பாடி முடிக்கும் போது அவரது கண்ணில் கண்ணீர் பெருகியிருந்தது. சந்தோஷமான பாட்டிற்கு ஏன் அழுகிறார் என்று அப்போது புரியவில்லை. திருமணவயதிலிருந்து பெண்ணிற்கு அப்பாடல் தனது சொந்த வாழ்க்கையின் கனவு போலாகியிருக்ககூடும் என்று இப்போது தோன்றுகிறது.

சித்தியின் பாடலைக் கேட்டு எனது தாத்தா திட்டினார். அவருக்குச் சினிமா பாடல் கேட்பது பிடிக்காது. பாட்டு முடிந்து போன பிறகும் சித்தி ஹம்மிங் செய்வதை விடவில்லை. மையிட்ட கண்ணோடு மான் விளையாட மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி என முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார்.


பாட்டு ஒரு சுழல். அதற்குள் நாம் சிக்கிவிட்டால் வெளியேற முடியாது. அந்த நாள் அந்தப் பாடலுக்கே உரியதாகிவிடும். இப் பாடலை எப்போது கேட்கும் போதும் பாடலோடு சித்தியும் சேர்ந்து நினைவிற்கு வந்துவிடுகிறார். அதுவும் நம்மை விட்டு மறைந்து போனவர்கள் பாடல் வழியாக நினைவுபடுத்தப்படும் போது கண்ணீர் கசியாமல் பாட்டைக் கேட்க முடியாது

வசந்தத்தில் ஒர் நாள் பாடலை கேட்டுக் கொண்டேயிருந்தேன். சட்டென ஒரு புள்ளியில் பி.சுசிலாவின் குரல் மறைந்து என் சித்தியின் குரலில் பாட்டு ஒலிக்கத் துவங்கியது. அது புலன் மயக்கம். தொண்டையை இறுக்கும் உணர்ச்சி. கல்லில் விழுந்து சிதறும் மழைத்துளி போன்ற உணர்வு.

நோய் முற்றி மருத்துவசிகிட்சைகள் பலனற்று உருக்குலைந்த நிலையில் சித்தி தன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த போது ஒரு மதியம் அவரைக் காணச் சென்றிருந்தேன்.

கரைந்த மெழுகுவர்த்திப் போன்றிருந்த அவரது உருவத்தை ஏறிட்டு காணமுடியவில்லை. அப்போதும் கையில் டிரான்சிஸ்டர் ரேடியோ வைத்திருந்தார். அவராலும் பேசமுடியவில்லை.

இருவரும் அமைதியாக இருந்த போது சட்டென ரேடியாவில் வசந்தத்தில் ஓர் நாள் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

அவ்வளவு தான் சித்தி உடைந்து அழ ஆரம்பித்தார். என்னால் கண்ணீரைக் கட்டுபடுத்த முடியவில்லை. ஆனால் பாதியில் அழுகை நின்று அப்பாடலை சித்தி கூடவே பாடத்துவங்கினார். நோய்மையில் நடுங்கும் குரலது. பாடி முடிக்கும் போது அவர் முகத்தில் இனம் புரியாத சந்தோஷம்.

சினிமா பாடல் என்ன தரும் எனச் சிலர் ஏளனமாகக் கேட்கிறார்கள். பாடல் ஆற்றுப்படுத்துவது போல வேறு எதுவும் பெண்களை ஆறுதல் கொள்ளவைப்பதில்லை.

சித்தி இறந்த பிறகு அவருக்கு விருப்பமான பாடல்களைக் கேட்காமல் இருக்கப் பழகிக் கொண்டேன். ஆனால் என்னை மீறி சில நாட்கள் இப்படி ஒரு பாடல் மனதில் கிளர்ந்து எழுந்துவிடுகிறது.

பாடலின் சுழலில் இருந்து விடுபட முடியாத தருணத்தில் இந்தப் பாடலின் வீடியோவை இணையத்தில் கண்டேன். சிவாஜி. முத்துராமன். நாகேஷ் மூவரும் கடவுளர் கோலமாகத் தேவலோக காட்சிகளுடன் சீதா கல்யாணம் போலக் காட்சிப்படுத்தபட்டிருந்தது. படமாக்கபட்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. இப்பாடல் ஒரு பெண்ணின் சந்தோஷத்தை. கனவை, வெளிப்படுத்தக்கூடியது. அவள் தன்னைச் சீதாவாக உணருகிறாள். அவளே சீதாயில்லை. அவளது கனவை நிறைவேற்றிய மூவருக்கும் நன்றி சொல்வது போலவே பாடுகிறாள். கண்ணதாசனின் வரிகளும் எம்.எஸ்.வியின் இசையும் சுசீலாவின் குரலும் ஒன்று சேர்ந்து மயக்கத்தைத் தரும் பாடலது.

காட்சி சில நிமிசங்களில் மனதை விட்டுப் போய்விட்டது. ஆனால் இனிமையான அக்குரல் பால் பொங்குவது போல அத்தனை தூய்மையாக மனதில் வழிந்தோடியது.

காலம் சிலரை நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரித்திருந்தாலும் அவர்களின் விருப்பமும் நினைவும் இப்படிப் பாடலின் வழியே நம்மோடு கூடவே தானே இருக்கின்றன.

ஒவ்வொரு இரவிலும் யாரோ சிலர் பழைய பாடல்களைக் கேட்டுத் தங்கள் துயரங்களை, வலியை, வேதனையை ஆற்றுப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்குச் சினிமா பாடல்கள் அன்றி வேறு என்ன துணை இருக்கிறது சொல்லுங்கள்.

••

No comments:

Post a Comment