Saturday 9 May 2020

ILAIYARAJA VS P.SUSHILA



ILAIYARAJA  VS  P.SUSHILA


இசைஞானி இளையராஜாவின் இசையில் இசையரசி பி.சுசீலாம்மா அதிகமாக பாடல்களைப் பாடவில்லையே என்ற ஏக்கம் அவரது ரசிகர்களுக்கு உண்டு. ஏதோ இருவருக்குமிடையில் மனஸ்தாபமோ என்கிற எண்ணத்தில் நிறைய கற்பனை குறுஞ்செய்திகள் கோடம்பாக்கத்தில் உலா வந்து கொண்டிருந்தன.

இந்த நேரத்தில் சுசீலாம்மா-ராஜாண்ணன் இடையில் துவக்கக் காலத்தில் ஏற்பட்ட மோதல் ஒன்றை இப்போது வெளியில் சொல்லியிருக்கிறார் இளையராஜாவின் தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன்.

‘நக்கீரன்’ பத்திரிகையில் ‘பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’ என்கிற தலைப்பில் பாவலர் பிரதர்ஸின் வாழ்க்கைக் கதையை எழுதி வரும் கங்கை அமரன், இரு வாரங்களுக்கு முன்பாக இளையராஜா-பி.சுசீலா சம்பந்தப்பட்ட கதையையும் எழுதியிருக்கிறார்.

அது இங்கே :
“இளையராஜா எவ்வளவு தன்மானம் உள்ளவர்ங்கிறதுக்கு இன்னொரு சம்பவம். பிரபல மியூஸிக் டைரக்டரான வி.குமார்கிட்ட நான், குன்னக்குடி வைத்தியநாதனெல்லாம் மியூஸீஸியனாக வேலை செஞ்சுக்கிட்டிருந்த நேரம்.அது என்ன பாட்டுன்னு ஞாபகம் வரலை. வி.குமார் மியூஸிக்ல சுசீலாம்மா பாட வர்றாங்க. ராஜாண்ணன் கிடார் வாசிக்கப் போயிருக்கார்.

டேக் போகுது.பல்லவிய பாடிட்டாங்க சுசீலாம்மா.
சரணம் பாடும்போது விட்டுட்டாங்க.
“சுசீலாம்மா.. ஏன்.. என்னாச்சு..?”ன்னு வி.குமார் கேட்க..
“எனக்கு அவர் கிடார் வாசிக்கல. கிடார் ஃபாலோ எனக்கு வரல. கார்டு குடுக்கல”ன்னு சுசீலாம்மா, ராஜாண்ணனை குறை சொல்ல..

“என்ன ராஜா?”ன்னு குமார் கேட்க..
“நான் கார்டு குடுத்தேன். வேணும்னா ரீவைண்ட் பண்ணிப் பாருங்க”ன்னு ராஜாண்ணன் சொல்ல..
“ஏய்.. என்ன பேசுற..? நீ கார்டு குடுக்கல”ன்னு குமார் சொல்ல..
“குடுக்கல இல்ல.. குடுத்தேன். ரெக்கார்டு ஆகியிருக்குல்ல. அத திரும்பப் போட்டுப் பாருங்க. நான் என்ன சும்மாவா உக்காந்திருக்கேன்.? வாசிக்கத்தான் வந்திருக்கேன். வாசிச்சிருக்கேன். ரீவைண்ட் பண்ணி கேட்டுப் பாருங்க. வாசிக்காமல் விட்டிருந்தால் ‘ஸாரி’ கேட்டிருப்பேன். நீங்க குடுத்த நோட்ஸ்படி வாசிச்சிட்டேன். போட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க”ன்னு ஸ்பெட்ப்னா சொல்லிட்டார் ராஜாண்ணன்.

“குடுத்திருந்தா நான் பாடியிருக்க மாட்டேனா..?”ன்னு சுசீலாம்மா அங்கேயிருந்து கத்துறாங்க.
“நான் குடுத்திட்டேம்மா.. வாசிச்சிட்டேம்மா.. தட்ஸ் ஆல்”ன்னு சொல்லிட்டார் ராஜாண்ணன்.
அடுத்தடுத்த டேக்ல அந்தப் பாட்டு ரெக்கார்டு பண்ணி முடிக்கப்பட்டது.

தான் தப்பு செய்யாதப்ப.. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் இறங்கிப் போக மாட்டார் ராஜாண்ணன். இப்ப மட்டுமில்ல.. அப்பவுமே கெத்துவிடாமத்தான் இருப்பார் இளையராஜா. அதனால்தான் அவர் இளையராஜா.இந்தச் சம்பவத்தால் ராஜா மீது சுசீலாம்மாவுக்கு வருத்தம் இருந்திருக்கலாம். சுசீலாம்மா மீது ராஜாண்ணனுக்கு கோபம் இருந்திருக்கலாம்.

ராஜாண்ணன் இசையில் சுசீலாம்மாவைவிட ஜானகியம்மா அதிகப் பாட்டு பாடியிருக்காங்க. ஆனா.. இதுக்கு அந்த வருத்தம் காரணமில்லை.
நாங்க மியூஸீஸியனா வேலை செஞ்சது ஜி.கே.வெங்கடேஷ்கிட்டதான். அவர் எங்க குரு. ஜி.கே.வி. இசைல கன்னடம், தெலுங்கு படங்கள்ல அதிகமான பாடல்களைப் பாடியது ஜானகியம்மாதான். அவங்களோடு எங்களுக்கு நல்லப் பரிச்சயம் இருந்தது.

முதலில் எங்களுக்கு ஜானகியம்மா வாய்ஸ் பிடிக்கல. ‘கீச்சு.. கீச்சு’ன்னு பாடுறதா ஃபீல் பண்ணினோம். சுசீலாம்மா வாய்ஸ்தான் இனிமையா இருக்கும்கிறதுதான் எங்க அபிப்ராயம்.ஆனால், தொடர்ந்து ஜானகியம்மாவோட பாடல்களைக் கேட்க கேட்க.. அவங்களோட பழகப் பழக.. ஜானகியம்மாவோட வாய்ஸ் ரொம்ப டிப்ரண்ட்டா இருக்குறதை உணர்ந்தோம்.

அதனால்தான் ஜானகியம்மா எங்களோட முதல் படமான ‘அன்னிக்கிளி’யில் இருந்து அதிகமான பாடல்களை ராஜாண்ணன் இசைல பாடியிருக்காங்க. ஆக, எங்க இசையில் ஜானகியம்மா அதிகப் பாடல்களை பாடினதுக்குக் காரணம் எங்க குரு ஜி.கே.வெங்கடேஷ்தான்..”

– இவ்வாறு சொல்லியிருக்கிறார் கங்கை அமரன்

No comments:

Post a Comment