Sunday, 17 May 2020

FILM WORLD RASCALS LIKE R.M.VEERAPPAN





FILM WORLD RASCALS LIKE R.M.VEERAPPAN 

திரை உலக துரோகங்கள்

“அரச கட்டளை” படத்தில் ரவீந்தரின் பங்களிப்பு திட்டமிட்டு மறைக்கப்பட்டது என்பது மறுக்கப்படாத உண்மை. வேண்டுமென்றே அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

பாடுபடுபவன் ஒருவன். புகழ் தேடிக் கொள்பவன் மற்றொருவன்.

மாடாய் உழைப்பவன் ஒருத்தன். மார்தட்டிக் கொள்பவன் இன்னொருத்தன்.

உடல் உழைப்பு செய்பவன் ஒருத்தன். மெடல் குத்திக் கொள்பவன் இன்னொருத்தன்.

மரம் வைத்தவன் ஒருவன். பலனை அனுபவித்தவன் வேறொருவன். “

அரச கட்டளை” படத்தில் இக்கூற்று ரவீந்தருக்கு நன்கு பொருந்தும்.

“நாடோடி மன்னன்” படம் வெளிவந்தபோது ரவீந்தர் புதியவராக இருந்தார். அதனால் அவருடைய பெயர் கண்ணதாசன் பெயரோடு இணைத்து காட்டப்பட்டது என்றார்கள். போகட்டும் என்று விட்டு விடலாம்.

ஆனால் “அரச கட்டளை” படம் வெளிவந்தபோது ரவீந்தர் எத்தனையோ படங்களுக்கு கதாசிரியராக, வசனகர்த்தாவாக பணியாற்றி அனுபவ முதிர்ச்சி பெற்றிருந்தார். அப்படியிருந்தும் அவர் பெயரை இருட்டடிப்புச் செய்தார்கள்.

எம்.ஜி.ஆர். நடித்து வெளிவரவிருந்த “சிரிக்கும் சிலை” என்ற படத்தில் கூட இதே நிலைமைதான் ரவீந்தருக்கு ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்தப்படம் வெளிவரவில்லை. இரவு பகல் பாராது கண்துஞ்சாது கஷ்டப்பட்டு அந்தப் படத்திற்கு ரவீந்தர் கதை வசனம் எழுதினார். அந்தப் படம் ஓடவேண்டுமென்றால் நிச்சயமாக “Face Value” மிகுந்த பிரபலம் தேவை என்ற கண்ணோட்டத்தில் “திரைக்கதை – வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரம் செய்யப்பட்டு ‘ஒப்புக்குச் சப்பாணியாக’ ரவீந்தர் பெயரையும் இணைத்துக் காண்பித்தார்கள்

அந்தக் கால கட்டத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக திராவிட இயக்க வசனகர்த்தாக்களுக்கு அதீத மவுசு கூடியிருந்தது. கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதி பிரபலமடைந்த மந்திரிகுமாரி (1950), பராசக்தி (1952), திரும்பிப்பார் (1953), மனோகரா (1954), போன்ற படங்களுக்குப் பிறகு அரசியல் பின்னணி கொண்ட
வசனகர்த்தாக்களுக்கு தனியொரு நட்சத்திர அந்தஸ்து ஏற்பட்டிருந்தது. ஏ,வி,பி,.ஆசைத்தம்பி முதற்கொண்டு முரசொலி சொர்ணம் உட்பட திரைப்பட வசனகர்த்தாக்களாக மாறி இருந்தனர். முரசொலி மாறன் “மறக்க முடியுமா (1966)” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதானித்திருந்தார். அதற்கு முன்பே நல்லதம்பி (1949), வேலைக்காரி படத்தின் மூலம் சி.என்.அண்ணாத்துரை பிரபலமாகியிருந்த செய்தி அனைவரும் அறிவர்.

ரவீந்தர் ஏன் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டார்? எதற்காக அவருடைய திறமை மட்டும் அங்கீகரிக்கப்படவில்லை? என்ன காரணத்திற்காக அவர் ஒவ்வொரு படத்திலும் ஓரங்கட்டப்பட்டார்? ஏன் அவர் மீது மட்டும் இந்த ஓர வஞ்சனை?

அவர் அரசியல் பின்புலம் இல்லாத மனிதர் என்ற ஒரே காரணத்தினாலா? இந்தக் கேள்விக்கு இதுவரை பதிலில்லை.

உண்மையைக் கூற வேண்டுமென்றால் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளரின் பெயர் முதற்கொண்டு அவரது கார் ஓட்டுனர் பெயர்வரை எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அனைத்தும் அத்துப்படியாக இருந்தது.

ஆனால் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரியவராக, எப்போதும் அவர் கூடவே இருந்த காஜா மெய்தீன் என்கின்ற ரவீந்தரின் பெயர் மட்டும் யாருக்குமே தெரியாது. ‘யாருக்குமே தெரியாது’ என்று சொல்வதை விட யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸில் நாட்டாமை செய்து வந்தவர்கள் கண்ணுங் கருத்துமாக இருந்து வந்தார்கள் என்று கூறுவதே சாலப்பொருத்தம்.

“யார் அந்த ரவீந்தர் என்று ஆச்சரியமாக இருந்தது. திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை”

என தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனே கூறுகின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

அதைவிட பெரிய ஆச்சரியம் என்னவென்றால், உலக நடப்புகளை விரல் நுனியில் தெரிந்து வைத்திருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ரூமி உட்பட ரவீந்தரின் மறைவுச் செய்தியை அறிந்து வைத்திருக்கவில்லை என்பது எதர்த்தமான உண்மை.

ரவீந்தர் உயிரோடிருந்த போதும். அவர் நோய் வாடப்பட்டு இருந்தபோதும், அவர் மறைந்தபோதும் கூட அனைத்து ஊடகங்களும் சினிமாத்துறையினரும் பாராமுகமாகவே இருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

“அரச கட்டளை” படத்தின் ஸ்டில்கள் காண்பிக்கையில் அதன் திரைக்கதையை வடிவமைத்தது “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா” என்று காண்பிப்பார்கள்.

“எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்பதோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை. அதற்கும் கீழே R.M.வீரப்பன், வித்வான் வே.லட்சுமணன், S.K.T.சாமி என்று மூன்று பேர்களுடைய பெயர்களை மட்டும் காண்பித்து ரவீந்தரின் பெயரை இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

இப்பொழுது இயற்கையாகவே நம் மனதில் ஒரு கேள்வி பிறக்கிறது. “அரச கட்டளை” படத்தில் உண்மையிலேயே ரவீந்தரின் பங்களிப்புதான் என்ன?

ஆர்.எம்.வீ. ஒரு மாபெரிய கதாசிரியர், பிரமாண்டமான படத்தயாரிப்பாளர், சிறந்த நிர்வாகி, தமிழார்வலர், கம்பராமாயணச் சிற்பி என்பது போன்ற ஒரு மாயையை மக்கள் மத்தியில் அவரே உருவாக்கியிருந்தார். அவருடைய உண்மையான முகம் என்னவென்று சினிமா உலகில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாகவே தெரியும். எழுத்து நாகரிகம் கருதியும், சில பேருக்கு தர்ம சங்கடத்தை உண்டு பண்ணக்கூடாது என்று நல்லெண்ணத்தாலும் அவரது வஞ்சகச் சூழ்ச்சி அனைத்தையும் இங்கு என்னால் வடிக்க இயலவில்லை.

“அரச கட்டளை” படத்தின் கதை எப்படி பிறந்தது என்பதற்கு சின்னதாக ஒரு “FLASHBACK” தேவைப்படுகின்றது. அதை ரவீந்தர் வாயிலாகவே அறிந்துக் கொள்வோம். இப்படத்தில் ரவீந்தரின் பங்கு என்ன என்பது அப்போது விளங்கும்.

1962 ம் ஆண்டு , தேர்தல் சமயம்.

தி மு க வினர் அன்றைய முதல்வர் காமராஜரை மிக மோசமாக, தரம் தாழ்ந்து விமர்சித்து வந்தக் காலக் கட்டம். ஆனால் மக்கள் திலகமோ காமராஜரை மரியாதைக் குறைவாக விமர்சிக்க மறுத்தார்.

அப்பொழுது நடந்த நிகழ்வு …

தேர்தல் பிரசாரத்துக்காக போகிறோம். கும்மிடிப் பூண்டி ரயில் நிலையம் பிரதான சாலையில் ஒரு ரயில்வே கேட் அப்பொழுது பிரசித்தம் . மூடினால் சீக்கிரம் திறக்க மாட்டார்கள். சில துரித ரயில்கள் போனப் பின்னர் தான் திறப்பார்கள்.

அங்கு மக்கள் திலகத்தின் வண்டி நின்றது. அந்தக் காரின் எண் எல்லோருக்கும் தெரியும் . கூட்டம் கூடிவிட்டது. மக்கள் திலகத்தின் காருக்கு முன்னே ஒரு கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்றுக் கொண்டிருந்தது. மக்கள் திலகம் அவரது உதவியாளர் சபாபதியிடம் சொல்கிறார் …

” அது யார் கார் ? காமராஜர் ஐயா கார் மாதிரி தெரியுதே, சபாபதி போய் பார்த்து வா… ”

சபாபதி போய் பார்த்து விட்டு வந்து “ஆமா அவுங்க தான்” என்று சொல்ல , உடனே மக்கள் திலகம் தன் காரை விட்டு இறங்கிப் போய் அவருக்கு வணக்கம் சொன்னார்.

காமராஜர் கீழே இறங்க எத்தனிக்க, மக்கள் திலகம் தடுத்து விட்டார் .

“இதென்ன தனியே செக்கியூரிட்டி இல்லையா? ” என்று கேட்டார் மக்கள் திலகம். அப்பொழுது காமராஜர் முதல்வர் .

“என்னை யார் என்ன செஞ்சிடப் போறாங்க எனக்கு பாடி கார்டு வைச்சுக்க ” என்றார் காமராஜர் .

இருவரும் கொஞ்ச நேரம் குசலம் விசாரித்தப் பின் வந்து அமர்ந்தார்கள். ரயில் போனதும் கார் புறப்பட்டது .

மக்கள் திலகம் என்னைப் பார்த்துச் சொன்னார் “ரவீந்திரன், அடுத்த படத்துக்கு , ஐடியா கிடைச்சிட்டது , நம்ம காமராஜர் ஐயா தான் ஹீரோ. ஒரு நாட்டுக்கு உண்மையான அரசன் யாருன்னா கத்தியில்லாம, தனக்கு சவால் இல்லாம யார் மக்கள் மத்தியிலே பவனி வருகிறானோ அவன் தான். இதை வச்சு கதை எழுதணும், நானல்ல டைரக்டர் என் அண்ணனை செய்யச் சொல்லப் போறேன் ” என்றார் …

அப்படி உருவானப் படம் தான் “அரசக் கட்டளை” .

இது ரவீந்தரே பொம்மை இதழில் எழுதியது. தான் ஏற்கனவே பலமுறை மாற்றியமைத்து எழுதிய “இணைந்த கைகள்” படத்தின் ஒரு சில பகுதியை மையமாக வைத்தும், எம்.ஜி.ஆர். சொன்ன குறிப்புகளை வைத்தும் ரவீந்தர் தீட்டிய திரைக்கதைதான் “அரச கட்டளை”.

இந்தக் காட்சியை இப்படி வைக்கலாம், அப்படி வைக்கலாம் என்று ஏதாவது ஆலோசனை கூறிவிட்டு, ரவீந்தரின் மூளையை கசக்கிப் பிழிய வைத்து விட்டு, கஷ்டப்படாமல் பெயரைத் தட்டிக் கொண்டு போவது ஆர்.எம்,வீரப்பனின் வழக்கமாக இருந்தது. திரைக்கதை என்று பெயர் போடுகையில் ஆர்.எம்.வீரப்பன் பெயர்தான் முதலாவதாக இடம்பெறும்.

கதை எழுதும் கலையையும், வசனம் எழுதும் கலையையும் கற்று வைத்திருந்த ரவீந்தர் ஒரே ஒரு கலையைக் கற்க தவறியாதால்தான் அவரால் முன்னுக்கு வர முடியாத நிலை.ஆம். ஜால்ரா அடிக்கும் கலை ரவீந்தருக்கு வரவேயில்லை.

சரி.. திரைக்கதையில்தான் ரவீந்தர் பெயர் இடம்பெறவில்லை. விழுந்து விழுந்து “அரச கட்டளை” படத்திற்கு வசனம் எழுதிய அவருடைய பெயர் “உரையாடல்” என்ற தலைப்பிலாவது காட்டப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. அதற்கும் அரசியல் செல்வாக்கு வேண்டுமே. முரசொலி சொர்ணத்தின் பெயர் காட்டப்பட்டது.

எம்.ஜி.ஆர். தனது அண்ணன் குடும்பத்திற்காக ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமென விரும்பினார். எம்.ஜி.ஆர். தனது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியின் பிள்ளைகள் எம்.சி.ராமமூர்த்தி மற்றும் மூத்த மகள் சத்யபாமா இவர்களுக்காக “சத்யராஜா பிக்சர்ஸ்” என்ற பட நிறுவனத்தின் பெயரில் தயாரிக்க வைத்து தன் அண்ணனையே டைரக்ட் செய்ய வைத்த படம்தான் “அரசகட்டளை”.

எம்.ஜி. ஆருடன் ஜெயலலிதாவும், சரோஜாதேவியும், சந்திரகாந்தாவும், “அரச கட்டளை” படத்தில் நடித்திருந்தனர்.

எம்.ஜி.ஆர். சுடப்பட்டபோது, தயாரிப்பில் இருந்த படங்கள் இரண்டு. ஒன்று சத்யராஜா பிக்சர்ஸ் “அரச கட்டளை”. மற்றொன்று சத்யா மூவிஸ் “காவல்காரன்” ஆகியவை.

படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் “எடிட்டிங்”, “ரீ ரிக்கார்டிங்” போன்ற ஒரு சில வேலைகளே மிச்சமிருந்தது. அந்தப் பணிகள் முடிந்து படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்தது,.

இப்படத்தில் வாலி, முத்துகூத்தன் மற்றும் ஆலங்குடி சோமு எழுதிய பாடல்கள் அமர்க்களமாக இருந்தன. இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக கவிஞர் வாலி அவர்கள்

“ஆண்டவன் கட்டளைக்கு முன்னாலே – உன்

அரசகட்டளை என்னாகும்”

என்ற பல்லவியை எழுதிக்கொடுக்க முகம் சிவந்த எம்.ஜி.ஆர். வாலியை கடிந்துக் கொண்டார். காரணம் “ஆண்டவன் கட்டளை” சிவாஜி நடித்த படம். “அரச கட்டளை” அச்சமயம் தயாரிப்பில் இருந்த எம்.ஜி.ஆர். படம். எம்.ஜி.ஆர். இதனை சுட்டிக்காட்டிய போது வாலிக்கு தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது. இப்படியொரு பொருள்படும் என்ற கோணத்தில் அவர் சிந்திக்கவேயில்லை. இப்பாடல் வரிகளில் திருப்தி அடையாத எம்.ஜி.ஆர். கவிஞர் முத்துக்கூத்தனை வைத்து வேறொரு பாடலை எழுத வைத்தார்.

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” – என்று தொகையறாவாகத் தொடங்கி “ஆடி வா ! ஆடி வா! ஆடி வா! ….. ஆளப் பிறந்தவனே! ஆடிவா!” என்ற பாடல்தான் அந்த மாற்றுப் பாடல்.

இந்த சம்பவத்தைச் சொன்னவர் ரவீந்தர். இதை உறுதிப்படுத்தும் வகையில் இதே சம்பவத்தை கவிஞர் வாலி அவர்கள் விலாவாரியாக “எனக்குள் எம்.ஜி.ஆர்”. என்ற தன் நூலில் எழுதியுள்ளார்.

கவிஞர் கண்ணதாசன் தன் சொந்த அனுபவங்களை, எண்ணங்களை, மனத்தாங்கல்களை எத்தனையோ பாடல்களில் கொட்டித் தீர்த்திருக்கின்றார். “அண்ணன் என்னடா, தம்பி என்னடா, அவசரமான உலகத்திலே” போன்ற பாடல்கள் இதற்கு நல்ல உதாரணம்.

“நான் எப்பவுமே சொந்த வாழ்க்கை அனுபவங்களை பாடல்களாக வடித்ததே இல்லை. ஆனால் அரசகட்டளை படத்துக்கு பாடல் எழுதும் போது என் மன உணர்வை வெளிக்காட்டும் விதமாக எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு பாடல் எழுதினேன்.”

என்று கவிஞர் வாலி, பொதிகைத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

“என்னைப் பாடவைத்தவன் ஒருவன். என் பாட்டுக்கு அவன் தான் தலைவன்” என்ற பாடல், வாலிக்கு வாய்ப்பு வழங்கி அவருடைய வாழ்வில் ஒளியேற்றிய எம்.ஜி.ஆருக்கு நன்றிக்கடன் செய்யும் வகையில் எழுதப்பட்ட பாடல்.

இப்படத்தில், கே.வி.மகாதேவன் இசையில் உருவான அத்தனைப் பாடல்களும் மனங்கவர் பாடல்களாக அமைந்திருந்தன.

”அரசகட்டளை”யில் ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் இடம்பெறும் ஒரு காட்சி. சொர்ணத்தின் உரையாடல் என்று நம்பப்படும் ரவீந்தரின் வசனங்கள் இன்றைய அரசியல் நாடகங்களுக்கு அப்பட்டமாக பொருந்தும் வகையில் உள்ளன.

”எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அந்தப் பாவிகளின் நாக்கை துண்டுத்துண்டாக வெட்டி..”

”அதனால்தான் அதிகாரம் உன் கையில் இல்லை. மதனா.. கல்லடியும் சொல்லடியும் கடமைவாதிகள் சந்திக்க வேண்டிய முதல்படி, அரசியல் அகராதிப்படி”

“அப்படியா, இப்படி இன்னும் எத்தனைப் படிகளோ, உருப்படியாய் ஓடிவிடுவோம் வாருங்கள்”

”ஓடு ஓடு என்று யார் சொன்னாலும் நாடு நாடு என்றுதான் முழங்கிக்கொண்டிருப்பேன் என் லட்சியம் நிறைவேறும்வரை”

”ஆபத்து இருந்தாலும் (ஆட்சி) எவ்வளவு சுகமாக இருக்கிறது”

” இந்த சுகத்திலேதான் பதவி வெறியே பிறக்கிறது மதனா..இதில் மயங்கித்தான் ஆட்சியிலே இருந்தவர்கள் மக்களை மறந்தார்கள்..துன்பத்தை விதைத்தார்கள். துயரத்தை வளர்த்தார்கள்.”

“உன் உயிரைப் பறிப்பேன்” என்று உடைவாளை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரைத் தாக்க வரும் நம்பியார் கூற “செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர்…” என்று சொல்லும் எம்.ஜி.ஆர். சற்று இடைவெளி விட்டு புன்னகை சிந்த “.நீங்கள் நினைத்தவுடன் கை நீட்டிப் பறிப்பதற்கு” என்பார். நறுக்குத் தெறித்தார்போல் காணப்பட்ட இதுபோன்ற வசனங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன.

புகழ் யாவும் சொர்ணத்திற்கு அர்ப்பணமாயின. ரவீந்தருக்கு வழக்கப்படி பிஸ்கோத்து, “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற மலைக்கள்ளன் படத்தில் இடம்பெற்ற எம்.ஜி.ஆரின் பாடல்தான் என் நினைவில் நிழலாடியது.

கதாசிரியர்கள் நட்சத்திர அந்தஸ்து பெற்று அமோகமான பேரும் புகழும் பெற்றிருந்த காலத்தில் ரவீந்தர் எழுதிக் கொண்டிருந்தபோதும் கூட அவரால் ஒளிவிட்டு பிரகாசிக்க முடியவில்லை; அவரது பெயர் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டது என்பது வருத்தத்திற்குரிய விடயம்.

– அப்துல் கையூம்



.

No comments:

Post a Comment