Saturday, 16 May 2020

ANURADHA RAMANAN , WRITER BORN JUNE 29,1947 - MAY 16,2010



ANURADHA RAMANAN , WRITER BORN 
JUNE 29,1947 - MAY 16,2010




..அனுராதா ரமணன் (Anuradha Ramanan) (ஜூன் 29, 1947 – மே 16, 2010)[1] சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன.
வாழ்க்கைக் குறிப்பு
1947 இல் அனுராதா தமிழ் நாட்டிலிலுள்ள தஞ்சாவூரில் பிறந்தவர். நடிகரான அவரது தாத்தா ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் இவர் எழுத்தாளரானார்.[2] இவர் கணவர் பெயர் ரமணன்[3]. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு.

ஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் தொடங்கிய அனுராதா தொடக்கத்தில் முக்கியமான இதழ்களில் வேலைதேடி முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை.[2] பின் ’மங்கை’ இதழாசிரியர் அனுராதாவின் படைப்புகள் நன்றாக இருப்பதை அறிந்து அவரைப் பணியில் சேர்த்துக் கொண்டார். 1977 இல் மங்கை இதழ் மூலமாக தனது எழுத்துலகப் பணியைத் தொடங்கினார் அனுராதா.[2]

இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்[4] 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 800 புதினங்களும் 1,230 சிறுகதைகளும் எழுதியுள்ளார்.[2] அவரது கதைகள் பெரும்பாலும் குடும்பத்தையும் அன்றாட நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டிருந்தன. ஆனந்த விகடனில் வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப் பதக்கம் வென்றது.[3] இச் சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.[3] கூட்டுப்புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய புதினங்களும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.[2] அவற்றுள் கே. பாலசந்தர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் திரைப்படம் பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991 இல் பெற்றது. [5] இவரது கதையைக் கொண்டு 1988 இல் வெளியான ஒக்க பாரிய கதா என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது.[6] மேலும் இவரது கதைகள் அர்ச்சனைப் பூக்கள், பாசம், கனாக்கண்டேன் தோழி போன்ற இவரது பல கதைகள் தொலைகாட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.[3] தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. ஆர் இவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கியுள்ளார்.[3]
திரைப்படங்கள்
சிறை

கூட்டுப்புழுக்கள்
ஒரு மலரின் பயணம்
ஒரு வீடு இருவாசல்
தொலைக்காட்சித் தொடர்கள்
பாசம்
புன்னகை
அர்ச்சனைப் பூக்கள்
பன்னீர் புஷ்பங்கள்
பதக்கம்
1978 ஆம் ஆண்டு எம். ஜி. ஆரிடம் இருந்து தங்கப்பதக்கம் பெற்றார்.

இறப்பு
மே 16, 2010 இல் மாரடைப்பால் சென்னையில் தனது 62 வது அகவையில் இவர் மரணமடைந்தார்.[3]


ஆன்மீகவாதியாக திகழ்ந்த ஜெயேந்திரர் என்னிடம் மிகவும் ஆபாசமாக பேசினார், கையைப் பிடித்து இழுத்து மிகஅநாகரீகமாக நடந்து கொண்டார், தனது ஆசைக்குப் பணியுமாறு கேட்டுக் கொண்டார் என்று ஜெயேந்திரர்குறித்து பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் பரபரப்புப் புகார் கூறியுள்ளார்.

காவல்துறையிடம் ஒரு பெண் எழுத்தாளர் புகார் கூறியிருப்பது குறித்து தகவல்கள் கிடைத்தவுடன், அது அனுராதாரமணன் தான் என்றும் தெரியவந்தது. ஆனால், அவரது பெயரைக் கெடுக்க வேண்டாம் என்பதால் நிருபர்கள்அனைவருமே பெயரைச் சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்தனர்.பல ஆண்டுகளுக்கு முன் அனுராதா ரமணனிடம் ஜெயேந்திரர் ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து கொண்டதாககடந்த ஆண்டு தான் அரசல் புரசலாக பேச்சு எழுந்தது.ஜெயேந்திரரின் அந்தரங்க அசிங்க வாழ்க்கை குறித்து குமுதம் வார இதழில் அவர் தொடராக எழுத ஆரம்பித்தார்.இதில் தமிழகத்தைச் சேர்ந்த சில பிரபல பாஜக தலைவர்களின் இருண்ட முகங்கள் குறித்தும் அவர் எழுதினார்.ஆனால், பல்வேறு தரப்பு பிரஷர்களால் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டுவிட்டது.


தற்போது சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கு நேர்ந்தஅவமானத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் அனுராதா. சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைஅவர் சந்தித்தார். பேச்சின்போது பலமுறை உடைந்த அழுதார்.

சில ஆண்டுகளுக்கு முன் சங்கர மடத்திலிருந்து என்னை அழைப்பதாக சங்கர மடத்திற்கு நெருக்கமான ஒரு பெண்என்னை அழைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார்களை தெய்வமாக நினைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவள் நான். எனவே தெய்வமே என்னை அழைத்துள்ளதாக எனது தந்தை சந்தோஷப்பட்டார். உடனே செல்லுமாறு என்னைஅனுப்பி வைத்தார். நானும் மிகவும் சந்தோஷமான மன நிலையில் அந்தப்
பெண்மணியுடன் காஞ்சிபுரம் சென்றேன். சங்கர மடம்சார்பில் தொடங்கப்படவுள்ள அம்மா என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றுவது தொடர்பாகஎன்னுடன் ஜெயேந்திரர் பேசினார். அவர் பேசியவற்றில் சிலவற்றை எனது குறிப்பேட்டில் நான் எழுதிக் கொண்டிருந்தேன். தற்செயலாக நான்நிமிர்ந்து பார்த்தபோது, என்னை அழைத்து வந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் ஜெயேந்திரர்.அவர்கள் இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு செய்த அசிங்கம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அதிலிருந்து நான் சுதாரிப்பதற்குள், ஆன்மீகவாதியாக பேசிக் கொண்டிருந்த ஜெயேந்திரர் ஆபாசமாக பேசத்தொடங்கினார். அறுவறுப்பான சிரிப்புடன் அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் மிகவும்
அநாகரீகமானவை. அந்தப் பெண்மணியைப் போலவே என்னையும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதிர்ந்து போன நான் சட்டென எழுந்து விட்டேன். சீ, நீயும் ஒரு மனுஷனா என்று வேகமாக கேட்டவாறேஅங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். உடனே அதிர்ந்த ஜெயேந்திரர், முன் கூட்டியே இவளிடம் (என்னிடம்)எல்லாவற்றையும் கூறவில்லையா என்று அந்தப் பெண்ணிடம் ஆவேசமாக கேட்டார். அவர் இல்லை என்றவுடன், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் அந்தப் பெண்மணியை திட்டினார். பின்னர் அதே வேகத்தில் என்னிடம் திரும்பி, என்னுடன் ஒத்துழைத்துப் போனால் நல்லது. இங்கு நடந்தவற்றைவெளியில் கூற நினைத்தால், உனக்கும் 10 ஆண்களுக்கும் தொடர்பு உள்ளதாக கதை கட்டி உன் வாழ்க்கையையேசீரழித்து விடுவேன் என்று மிரட்டினார். புருசனை இழந்த நீ என்ன விதவைக் கோலத்திலேயே இருக்கே... பூவும் பொட்டுமாகத்தானே இருக்கே
என்றுகூறியவாறே என் உடலை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த அசிங்கத்தில் கூனிக் குறுகிப் போன நான் அங்கிருந்து எப்படியோ திரும்பி விட்டேன். மறுநாள் என்னைசங்கர மடத்துக்கு அழைத்துப் போன பெண் தன் கணவருடன் என் வீட்டுக்கு வந்தாள். இருவரும் குடித்திருந்தனர்.இருவரும் சேர்ந்து மடாதிபதியை எதிர்த்துப் பேசுறியா என்று கேட்டபடி அடித்து உதைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் நான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் அதிர்ந்து போனேன். அடுத்து உடல் நலமும்பாதிக்கப்பட்டது. இந்தத் தகவலை அப்போது உயர் பதவியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியை தனியே சந்தித்துக் கூறினேன்.அவர் உடனே புகார் கொடுங்க.. அவனை உள்ளே வைக்கிறேன் என்றார். ஆனால், சங்கர மடத்தின் பலம் அறிந்தவள் நான். இதனால் புகார் கொடுக்க நான் தயாராக இல்லை என்றேன்.அவரிடம் கதறி அழுதபடியே எழ முயன்றேன். அப்போது எனக்கு ஒரு கால் வரவில்லை, தொடர்ந்து ஒரு கையும் வரவில்லை. பக்கவாதம் தாக்கியிருந்தது. சரிந்துவிழுந்த என்னை அந்த அதிகாரி தான் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அங்கு வைத்து என்னைக் கொலை செய்யவும் முயற்சிநடந்தது. சங்கர மடத்து ஆட்கள் இருவர் விஷ ஊசியுடன் அங்கு அனுப்பப்பட்டனர். ஆனால், அதிர்ஷ்டவசமாகநல்லவர்கள் சிலரின் துணையால் தப்பிவிட்டேன். ஒரு வழியாய் பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்தேன். ஆனால், மடத்தில் எனக்கு நடந்த ஆபாசம் என் மனதைபுண்படுத்தியிருந்தது. இதனால் ஒரு வருடம் எழுதுவதையே கூட நிறுத்திவிட்டேன். அப்புறம் நடந்து சென்றபோது லாரி ஏற்றிக் கொல்லவும் அவர்கள் முயற்சித்தார்கள். அதிலிருந்தும் நான்மீண்டேன்.


ஆனால், இதை போலீசில் சொல்லவில்லை. என்னையும் என் இரு மகள்களையும் அவர்கள் அழிக்கும் சக்திபடைத்தவர்கள் என்பதை நான் உணர்ந்திருந்தேன். என் மகள்கள் மீது ஆசிட் வீசப் போவதாகவும் மிரட்டினார்கள். கணவர் இல்லாத நான் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வரையிலாவது உயிரோடு இருக்க வேண்டுமேஎன்பதற்காக அனைத்தையும் எனக்குள்ளேயே புதைத்துக் கொண்டேன். என் மகள்களுக்கு மணமுடித்த பின்னர் என் ஒட்டுமொத்த மன பலத்தையும் திரட்டிக் கொண்டு வார இதழ் ஒன்றில்மடத்தில் நடந்த ஆபாச சம்பவத்தை தொடராக எழுத ஆரம்பித்தேன். இதையடுத்து எனக்கு மடத்திலிருந்து மிரட்டல்கள் வந்தன. அந்தப் பத்திரிக்கைக்கும் பல வகையில் மிரட்டல்கள்வந்தன. இதனால் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டுவிட்டது. பின்னர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் என்னை கூப்பிட்டு அனுப்பியது மடம். இந்த முறை சிலரது துணையுடன்அங்கு போனேன். அப்போது நடந்த சம்பவத்தை அப்படியே மறைத்துவிட வேண்டும், என்னை மன்னிக்கவேண்டும், இதை யாரிடமும் சொல்லக் கூடாது. எவ்வளவு பணம் வேண்டும் என்று பேரம் தொடங்கினார்சங்கராச்சாரியார். ஆனால், உன்னை நானும் கடவுளும் மன்னிக்க வேண்டும் என்றால், உன் காவி உடையை உடனே நீகலைந்துவிட்டு மடாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும். அது தான் நீ செய்துள்ள பாவங்களைப் போக்கஒரே வழி என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். லட்சக்கணக்கான குடும்பங்களில் கடவுளாக பூஜிக்கப்படும் ஒரு மனிதரின் மறு பக்கம் எனக்குத் தெரியவந்தபோது நான் மிகவும் அதிர்ந்து போனேன். அவர் தற்போது செய்திருக்கும் செயல்கள் கடவுளால் கூடமன்னிக்க முடியாதது. அந்த கருப்பு மனிதரின் முகத் திரையை கிழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனக்கு நேர்ந்த அவமானத்தைஇப்போது வெளியிட்டுள்ளேன். மற்றபடி இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. மேலும் என் பெயரை மறைமுகமாகக் குறிப்பிட்டு பல செய்தி ஊடகங்களும் எழுத ஆரம்பித்துவிட்ட நிலையில்,இனியும் உண்மையை மறைப்பதில் பலனில்லை என்பதால் வெளியில் சொல்கிறேன் என்றார். பேசும்போது பல முறை மூத்த எழுத்தாளரான அனுராதார ரமணன் உடைந்து போய் அழுததும், தனக்கு நேர்ந்தஅவமானங்களை கண்ணீருடன் அவர் சொன்னதும் மனதை பெரிதும் வருத்தியது. பேட்டியின்போது இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பைச் சேர்ந்த சுதா சேஷய்யன் உள்ளிட்ட மகளிர்அமைப்புகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர். அனுராதாவின் சார்பில் மடத்துக்கு எதிராக வழக்கை நடத்தவும்அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. அனுராதாவிடம் போலீஸ் விசாரணை: இந் நிலையில் அனுராதா ரமணன் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் சுமார் 4 மணி நேரம்விசாரணை நடந்துள்ளது. மடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் இன்ஸ்பெக்டர் சரஸ்வதியிடம் விளக்கினார். இதை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்துள்ளது.      

.- எஸ்.ரஜத்

இரட்டை எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ் - பாலா) இருவரில், சுரேஷின் மனைவியும், அனுராதா ரமணனின் தங்கையுமான ஜெயந்தி சுரேஷ், 33 ஆண்டுகள், அனுராதா ரமணனுடன், அவர் நிழல் போல வாழ்ந்தவர். அவருக்கு செகரட்டரியாக, உற்ற தோழியாக, உடல் நலம் பேணுபவராக, நெருக்கமான துணையாக, அவர் எழுத்துக்களுக்கு முதல் வாசகியாக, வாழ்ந்திருக்கும் ஜெயந்தி சுரேஷ், சமீபத்தில் காலமான அனுராதா ரமணன் பற்றி நினைவு கூர்கிறார்...
சொந்தத்தில், அனு எனக்கு அக்கா என்றாலும், அவரது இரு மகள்கள் சுதா, சுபா இருவரைப் போலவே, எனக்கும் அவர் பாசமிக்க அனும்மா தான். அவர், எழுத்துலகிற்கு வந்த ஆண்டு 1977. எழுதிய சிறுகதைகள், ஆயிரத்திற்கும் மேலே. எழுதிய நாவல்கள், தொடர் கதைகள் 850க்கும் மேல். திரைப்படமான நாவல்கள் பல. தொலைக்காட்சி தொடர்கள் பலப்பல. அவரது 18ம் வயதில், அவருக்கு திருமணம் நடந்தது; அவருடைய 28 வயதில், அவர் கணவர் ரமணன் இறந்தார்.
மொத்த திருமண வாழ்க்கை, பத்தே ஆண்டுகள் தான்.
ஓவியம் வரைவதில் வல்லவர். சென்னை எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில், முறையாக ஓவியம் பயின்றார். பரீட்சை சமயத்தில், வலது கையில் எலும்பு முறிவு ஏற்படவே, இடது கையினாலும் வரையப் பயின்று, பரீட்சையில் வெற்றி பெற்றார்.
இந்தியன் ஹவுஸ் ஒய்ப், மங்கையர் மலர், அதன் இந்தி பதிப்பு மூன்று இதழ்களிலும், "லேஅவுட்' ஓவியராக அவர் பணியாற்றிய சமயம். தினமணி கதிரில், உதவி ஆசிரியர் சி.ஆர்.கண்ணனை நேரில் சந்தித்து, ஓவியங்கள் வரைய வாய்ப்பு கோரினார். அப்போது, அவர் மறந்துவிட்டுச் சென்ற பென்சில் ஓவியங்கள், அவற்றில் இருந்த குறிப்புகளை ரசித்த கண்ணன், "நீங்கள் எழுதியிருக்கும் குறிப்புகள் நன்றாக, வித்தியாசமாக இருக்கின்றன... எழுதுங்கள்!' என்று உற்சாகப்படுத்தினார். அனுராதா ரமணன் என்ற எழுத்தாளர் உருவானார்.
சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர் என்ற பரிமாணங்களைத் தவிர, அனுராதா ரமணன் செய்த மற்றொரு முக்கிய சாதனை, பல்லா யிரக்கணக்கான வாசகர்களின் சொந்த வாழ்க்கை யில் ஏற்படும் பிரச்னைகளை, கனிவாக புரிந்துகொண்டு, அவற்றுக்கு யதார்த்தமான தீர்வுகள் கூறியது தான்.

தினமலர் வாரமலர் இதழில், 15 ஆண்டு களுக்கு மேலாக, ஒவ்வொரு வாரமும், "அன்புடன் அந்தரங்கம்' பகுதியில், இவர் எழுதிய பயனுள்ள ஆலோசனைகனை, ஏராளமான வாசகர்கள் படித்து, பயன் பெற்றனர். ஒரு வார இதழில், தொடர்ந்து, ஒரு எழுத்தாளர் இத்தனை வருடங்கள் எழுதியிருப்பதும் மாபெரும் சாதனை.
தினமலர் வாரமலர் மூலம், ஆலோசனை பெற்ற பலர், அவரது விலாசம் அறிந்து, வீட்டுக்கும் சென்று தொடர்பு கொண்டனர். அவர்களோடு பேசி, பிரச்னைகளை அலசி, தீர்வு சொல்லும் நேரடி கவுன்சிலிங், கடந்த 10 ஆண்டுகளாக வெகுவாக அதிகரித்தது.
மே 2000ல், இவருக்கு, "பைபாஸ் சர்ஜரி' - இதய மாற்றுவழி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 35 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார். "நான் பிழைச்சு வந்ததே பெரிய விஷயம். நான் வாழ்கிற ஒவ்வொரு நாளுமே, எனக்கு போனஸ் மாதிரி தான்!' என்றார். அதை அடுத்து எடுத்த முடிவு தான், நேரம் கிடைக்கும் போதெல் லாம் நேரடி கவுன்சிலிங்.
டெலிபோனில், நேரில், வாரமலர் இதழ் மூலம், அக்கறையாக பிரச்னை களுக்கு தீர்வு சொல்வார். அவரை ஒரு தாயாக, சகோதரியாக, நல்ல தோழியாக மற்றவர் கள் கண்டனர். தனக்கு கிடைக் கிற நேரத்தை கூட, மத்தவங்க வாழ்க்கை சிறப்பாக, சரியாக வேண்டும் என்பதற்கே முன்னுரிமை அளிப்பார்.

நேரடி கவுன்சிலிங் போது, எப்போதும் கூடவே இருந்தவள் என்ற முறையில், அனு கையாளும் பலவிதமான பிரச்னைகளைக் கண்டு, வியந்திருக்கிறேன். ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாதது, புரிதல் இல்லாதது, பல பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது என்பதை உணர முடிந்தது.
தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துவிட்ட ஒரு இளம் பெண்ணை, முதலில் சாப்பிட வைத்து, அன்பாக பேசி, அவரது பிரச்னைக்கு காரணம் கண்டு, சரி செய்து, மீண்டும் நம்பிக்கையோடு வாழ வைத்திருக்கிறார்.
மறக்க முடியாத அனுபவம் ஒன்று:
தன் காதலனை நம்பி, கர்ப்பமாகிவிட்ட இளம் பெண்; துபாயில் பணி புரியும் இளைஞர். கர்ப்பத்தை இனியும் மறைக்க முடியாத நிலை. உடனே சென்னைக்கு வர முடியாத சூழ்நிலையில் காதலன். தன் சொந்த செலவில், துபாய்க்கு அன்று மட்டும் ஐந்து முறை பேசி, காதலனை கன்வின்ஸ் பண்ணி, இளம் பெண்ணை, அவர் உடனே ஏற்றுக் கொள்ளச் செய்தார். இரு குடும்பங் களும், அவர்கள் காதலை ஏற்று, இப்போது கணவன், மனைவி, குழந்தை மூவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
நம்மில் பலருக்கு, உடல்நிலை பிரச்னை, ஆபரேஷன், ஐ.சி.யு., வாசம் என்றாலே பயம் தான் வருகிறது. ஆபரேஷன், சிகிச்சை என்று பல தடவை மருத்துவமனை வாசம், அதிலும் ஐ.சி.யு., என்பதை சிறிதும் கவலையின்றி, நகைச் சுவையோடு பார்க்கவும், ஐ.சி.யு.,க்கு செல்வதை ஒரு பிக்னிக் போல என்று வர்ணிக்கவும் அனுவால் மட்டும் தான் முடியும். மருத்துவமனையில் இருந்தாலும், "பளிச்'சென்று, சிரித்த முகத்தோடு, நன்றாக உடையணிந்து இருப்பார். இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் செரியன் கூட, "எல்லா பேஷன்ட்களும் உங்களை மாதிரி குதூகலமாக, சிரித்துக் கொண்டு இருந்தால், எங்களுக்கு ரொம்ப தெம்பாக இருக்கும்...' என்பார்.
சுயசரிதம் என்றோ, வாழ்க்கை வரலாறு என்றோ, பிரத்யேகமாக அவர் புத்தகம் எழுதவில்லை. ஆனாலும், தன் வாழ்க்கை அனுபவங்களை, தன் உணர்வுகளை, எண்ணங்களை, நான்கு மாறுபட்ட புத்தகங்களாக எழுதியிருக்கிறார். "மீண்டும் மீண்டும் உயிர்த் தெழலாம்!' என்ற தலைப்பில், மங்கையர் மலரில் தொடராக எழுதினார்.
எப்போதுமே பார்ப்பதற்கு நன்றாக இருக்கணும் என்பது அனுவின் நித்ய மந்திரம். வீட்டிலோ, விழாவிலோ, மருத்துவமனையிலோ... எந்த இடமாக இருந்தாலும் சரி, கண்ணுக்கு மை, உதட்டுக்கு லிப்ஸ்டிக், திலகம் பொட்டு, கீழே வெள்ளை சாந்தில் பிறை நிலா, கீழே அரக்கு நிற சாந்து பொட்டு, பளிச்சென்று பட்டுப்புடவை. இவை அவரது டிரேட் மார்க் தோற்றம்.
"என் இறுதி யாத்திரையின் போது, எதுவும் கலைந்தோ, சரியாக இல்லாமலோ இருக்கக் கூடாது...' என்பது, அவர் எனக்கு இட்ட கட்டளை. அவருக்கு மிகவும் பிடித்த அரக்குப் புடவை கட்டி, அவருக்கு பிடித்த டிரேட் மார்க் தோற்றத்துடன், அவர் இறுதி யாத்திரை நடைபெற்றது. திருமணமாகி, அமெரிக்காவில் வசிக்கும் தன் மகள்கள் சுதா, சுபா இருவரிடம், அனும்மா சொன்ன கடைசி வார்த்தைகள் - "பீ பாசிடிவ்!' இறப்பற்கு முந்தைய நாள், என்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள், "எப்போதும் சிரிக்கக்கிட்டே இரு!' - பிறகு நினைவு தவறியது.
அனு, எங்களை விட்டுப் போனது, மே 16ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. அன்று அட்சய திரிதியை. தான் இறந்த பிறகு, தன் உடலை மருத்துவ படிப்பிற்காக, தானம் செய்ய விரும்பினார். 33 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் உடலை தானம் செய்ய இயலவில்லை; ஆனால், கண்கள் மட்டும் நன்றாக இருந்தன. சங்கர நேத்ராலயாவிற்கு போன் செய்து வரச் சொன்னேன். உடனே வந்து, அவரது கண்களை எடுத்துச் சென்றனர். இனி யாரோ இருவர், அனுவின் கண்களால் பார்வை பெறுவர். அட்சய திரிதியை அன்று, தானம் கொடுக்க வேண்டும் என்பர். அதற்கேற்ப, அனுவின் கண்கள், அன்று தானம் செய்யப்பட்டன.

நீளமாக மை தீட்டிய கண்கள், நீண்ட திலகம், நிறைய கற்கள் வைத்த மூக்குத்தி, பளீர் சிரிப்பு என தமிழ் எழுத்து உலகில் மறக்கமுடியாத குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரர் அனுராதா ரமணன். ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வெகுஜன வாசகர்களை தம் பக்கம் இழுத்தவர். அவருடனான தன் மலரும் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பல காலம் அவருடன் இருந்த அவருடைய சகோதரி ஜெயந்தி. “அக்காவிற்கு உடன் பிறந்த சகோதரர்கள் இரண்டு பேர். சகோதரி ஒருவர். அக்காதான் மூத்தவர். 1947ல் பிறந்தார். அக்காவின் அம்மா வழி தாத்தா ஆர். பாலசுப்ரமணியம் பிரபல நடிகர். ‘மதுரை வீரன்’ படத்தில் பானுமதிக்கு அப்பாவாக நடித்தவர். அக்காவின் பெற்றோர் மேட்டூரில் வசித்தபோது அக்கா மட்டும் சென்னையிலே அவரது தாத்தா வீட்டிலே வளர்ந்தார்.

அக்காவிற்கு பதினெட்டு வயது இருக்கும் போது திருமணம் நடந்தது. இரு மகள்கள் பிறந்தனர். பெரிய கொண்டாட்டமில்லாத திருமண வாழ்க்கை. அதுவும் பத்து வருடங்களில் முடிந்து போனது. நான் அக்காவிற்கு பெரியப்பா மகள். சொந்த சகோதரியாக இல்லாதபோதும் சின்ன வயதில் இருந்தே அக்காவுக்கும் எனக்கும் ஒரு நல்ல புரிதல் இருந்தது.அவர் கணவர் இறந்தபோது நான் அடிக்கடி அக்காவைப் பார்க்க போவேன். அவரது சொந்த சகோதரிக்கு அப்போதுதான் திருமணம் முடிந்து வெளியூரில் இருந்ததால் அக்காவிற்கு நான் ஒரு சிறந்த துணையாகிப் போனேன். அக்கா ஓவியம் நன்றாக வரைவார். அதனால் கணவர் இறந்தபிறகு குழந்தைகளை வளர்ப்பதற்காக சென்னையில் ஒரு பத்திரிகையில் ஒரு வருடம் லே அவுட் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றினார்.

ஒரு சமயம் அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என பத்து நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்தார். பத்து நாட்கள் விடுமுறை முடிந்து போனால் அங்கு இன்னொரு ஓவியர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட கருத்து மோதலில் அக்கா அந்த வேலையை விட்டுவிட்டு வெளியே வந்தார்.‘இன்னும் ஆறு மாதங்களில் மஞ்சள் பத்திரிகையைத் தவிர என் பெயர் எல்லா பத்திரிகைகளிலும் வரும்படி செய்வேன்’ என ஒரு கோபத்தில் கூறி விட்டு வெளியே வந்தார். அந்தப் பத்திரிகையில் இருந்து வெளியே வந்த பின் அங்கிருந்தபோது உடன் வேலை பார்த்த உதவி ஆசிரியை ஒருவரின் கதைகளை ஃபேர் காப்பி எழுதி கொடுக்க ஆரம்பித்தார்.

அக்கா அந்தக் கதைகளில் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போன அந்த உதவி ஆசிரியர் ‘நீயே கதை எழுதலாம். உனக்கு அந்த திறமை இருக்கு’ என ஊக்குவித்தார். அடுத்து ‘மங்கை’ என்ற பத்திரிகையில் வேலை விஷயமாக போய் பேசிய போது அதன் ஆசிரியர் நீங்களே ஒரு கதை எழுதி அதற்கு படமும் வரைந்து வாருங்கள் எனச் சொல்லி அனுப்பினார்.

அடுத்து ‘தினமணிக் கதிரில்’ ஓவியர் வேலை விஷயமாக சென்ற போது அக்கா தனது ஓவிய புத்தகத்தை அங்கேயே மறந்து வைத்து விட்டு வந்துவிட்டார். எப்போதும் தனது ஓவியப்புத்தகத்தில் தனக்குப்பிடித்த ஓவியங்களை வரைவதோடு அது சம்பந்தப்பட்ட சில விஷயங்களையும் சுவாரஸ்யமாக எழுதும் பழக்கம் உடையவர் அக்கா.

அதை பார்த்த தினமணிக்கதிரின் ஆசிரியர் சி.ஆர்.கண்ணன் இவரை கூப்பிட்டு ‘தமிழில் பெண் எழுத்தாளர்கள் அவ்வளவாக இல்லை. நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். கதை எழுதுங்கள். நன்கு வளரமுடியும்’ என ஊக்குவித்தார். இளம் பருவத்திலேயே அக்காவிற்கு நிறைய வாசிக்கும் பழக்கம் இருந்தது. நல்ல கற்பனைத்திறனும் இருந்தது. மேலும் இப்படி பலரும் சொல்லவே அக்கா கதை எழுத ஆரம்பித்தார்.

அக்காவின் முதல் கதை ‘கனவு மலர்கள் கருகும் போது'...  ‘மங்கை’ இதழில் வெளியானது. அதில் படத்திற்கு மட்டும் ‘அனு’ என தன் சொந்த பெயரைப் போட்ட அக்கா கதையை ‘சாம்பவி’ என்ற புனைப்பெயரில் எழுதி இருந்தார். அந்த கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அந்த ‘சாம்பவி’ யார் என கேட்டு நிறைய பேர் கடிதம் எழுதி இருந்தனர்.

அதன் பிறகு ‘தினமணிக்கதிரில்’ தனது சொந்தப் பெயரிலே அக்கா கதை எழுதினார். அதற்கும் நல்ல பாராட்டு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். சில கதைகள் திரும்பி வந்த போதும், கதையில் குறைவில்லை. இந்தந்த இடத்திற்கு இப்படி கதைகள் எழுத வேண்டும் என புரிந்து கொண்டார். எந்தப் பத்திரிகைக்கு எந்த கதை சரியாக இருக்கும் என பார்த்து அனுப்பி வைப்பார். அது வெளியாகும். அதன் பிறகு அவரது எழுத்துலக வாழ்க்கை வேகம் பிடிக்க ஆரம்பித்தது.

‘இதயம் பேசுகிறது’ 1978ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் அக்காவின் கதை தங்கப் பதக்கம் பெற்றது. அப்போதைய முதலமைச்சரான எம்.ஜி.ஆர் கையில் அக்கா அந்த தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அனு அக்கா நாவல்களும் எழுத ஆரம்பித்தார். நாவல்களுக்கு நடுவில் ஒரு மாற்றத்துக்காக சிறுகதைகள் எழுதுவார். தொடர்களும் எழுத ஆரம்பித்தார். 

ஆண்டு தொடக்கத்தில் இரண்டு பெரிய டைரிகள் வாங்குவார். அதில் ஒன்றில் தனிப்பட்ட விஷயங்களும் மற்றொன்றில் கதைக்கான குறிப்புகளும் எழுதி வைப்பார். தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை சின்ன கருக்களாக குறித்து வைத்துக் கொள்வார். இந்த சமயத்தில் இந்தப் பத்திரிகைக்கு இது சரியாக இருக்கும் என அந்தக் கருவை கதையாக எழுதுவார்.

அவரது நாவல்கள் சில சினிமாவாக வெளிவந்தன. ‘கூட்டுப்புழுக்கள்’, ‘சிறை’ ஆகிய நாவல்களை ஆர்.சி. சக்தி படமாக்கினார். ஆர்.சி. சக்தி அக்காவின் எழுத்துக்கு நல்ல ரசிகர். நடிகை லஷ்மி அக்காவின் தோழி. அவர் ‘சிறை’ கதையை படித்து அது தனக்கு மிகவும் பிடித்திருந்ததால் ஆர்.சி. சக்தியிடம் அது குறித்துச் சொல்லி ‘இந்த கதையை நீங்கள் படமாக எடுத்தால் நான் நடிக்கிறேன்’ என சொன்னாராம்.

பின்னர் அதன்படி நடிக்கவும் செய்தார். அந்தப் படம் நல்ல வெற்றி பெற்றது. அந்தக் கதை ‘ஆனந்த விகடன்’ நடத்திய போட்டிக்காக நான் அனுப்பியது. அக்கா ‘நீயே ஏதாவது ஒரு கதையை அனுப்பி வை’ என்றார். அக்கா எழுதியதில் இந்தக் கதைதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அதையே அனுப்பிவைத்தேன்.

‘சிறை’ யில் வருவதுபோன்ற ஒரு சம்பவத்தை அக்கா பார்த்திருந்ததால் அதன் பாதிப்பில் அப்படி ஒரு கதையை எழுதி இருந்தார். விகடன் பொன்விழாவில் அந்தக் கதை முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாய் பெற்றது. அந்தக் கதை வெளியானபோது பிராமணர் சங்கத்தினரிடம் இருந்து பயங்கர எதிர்ப்பு வந்தது. வீட்டுக்கு வந்து மிரட்டினர்.

அக்கா அசரவில்லை. ‘எனக்கோ, என் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணுக்கோ நடந்திருந்தால் எப்படி இருக்கும் எனத் தோன்றியதை எழுதினேன்’ என வலிமையாக பேசி அவர்களை அனுப்பி வைத்தார். அந்தக் கதை தேர்வுக் குழுவில் எழுத்தாளர் லஷ்மி இருந்தார். பரிசு அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் ஒரு சமயம் அக்காவிடம் ‘உன் எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நீ நன்றாக வருவாய்’ என பாராட்டினார். எங்களுக்கு விருந்து வைத்தார். அதற்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் அம்மா - மகள் போன்ற ஒரு அன்பு இருந்தது. அக்காவின் பல கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்தன. நான் பல சமயங்களில் அக்காவுக்குத் துணையாக இருந்தேன். எனக்குத் திருமணமான பின்னரும் கூட அக்காவிற்கு உதவியக இருந்தேன்.

ஆனால் குழந்தைகள் பிறந்தபிறகு என்னால் அவருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. என் குழந்தைகள் வளர்ந்த பிறகு மறுபடி அக்காவிற்கு உதவியாக இருக்க ஆரம்பித்தேன். அக்கா எனக்கு நிறைய நல்ல விஷயங்கள் கற்றுத்தருவார். மனிதர்களுடன் பேசுவது எப்படி, பழகுவது எப்படி என கற்றுத் தந்தார். மனிதநேயத்தையும் கற்றுத் தந்தார்.

எனக்கும் என் கணவருக்கும் (இரட்டையர்கள் எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலா(சுபா) இணையில் சுரேஷ்) திருமணம் பேசி முடித்து வைத்ததும் அக்காதான். சீரியஸாகப் பெண்களின் கதையை எழுதினாலும் அக்காவிற்கு ஜனரஞ்சகமான படங்கள் பார்க்கத் தான் பிடிக்கும். துன்பியல் படங்களை பார்க்க விரும்ப மாட்டார். புதிதாக எழுத வருபவர்களுக்கு வழிகாட்டுவார்.ஏதாவது ஒரு உதவி தேவைப்பட்டால் செய்வார். அக்காவிற்கு சமையலில் தனிப்பிரியம். நன்கு ருசியாக சாப்பிடக் கூடியவர். யாராவது பத்திரிகையாளர்கள் வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வருமுன்னே சமைத்து வைத்துவிடுவார். அவர்கள் சாப்பிடாமல் திரும்பிப் போக முடியாது.வீட்டில் இப்படி, பார்த்துப் பார்த்து ருசியாக சமைத்து சாப்பிடுபவர் வெளியிடங்களில் யாரேனும் அன்பாக பரிமாறும் விருந்து சுமாராக இருந்தாலும் நன்றாக இருக்கிறது எனச் சொல்லி சாப்பிடுவார். ‘நம் வார்த்தை அவர்களுக்கு எத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கிறது பார்’ என்பார். பெண்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என ஒரு பத்திரிகையுடன் இணைந்து ஒரு நலத்திட்டத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் சிலருக்கு உதவிகளும் செய்தார். ஆனால் அதனை தொடர முடியாமல் போய்விட்டது.

தன் கணவர் இறந்தபோதும் தன்னை யாரும் பரிதாபமாக பார்க்கக் கூடாது என்று விரும்பினார். அதனால் எப்போதும் தன்னை நன்கு அலங்கரித்துக்கொள்ள விரும்புவார். எவ்வளவு உடம்பு முடியாத போதும் காலை எட்டு மணிக்கெல்லாம் தயாராகிவிடுவார். பைபாஸ் சர்ஜரிக்கு பின் ஏதாவது நல்ல விஷயம் செய்ய வேண்டும் என நினைத்து ‘அன்புடன் அந்தரங்கம்’ பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில்கள் எழுதினார்.அது பல பெண்களுக்கு வழிகாட்டியது. பலர் நேரிலும் கவுன்சிலிங்கிற்காக வர ஆரம்பித்தார்கள். ஏழைகளிடம் அவர் ஒரு போதும் பணம் வாங்கியதே இல்லை. அதுமட்டுமில்லாமல் யார் எந்த நேரத்தில் வந்தாலும் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து உட்கார்ந்துவிடுவார். தன் கண்களை தானம் செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லி இருந்தார்.அதன்படி 2010ம் ஆண்டு அவர் மறைந்த போது அவரது கண்களை தானம் கொடுத்தோம். தனது கடைசி காலம் வரை அவர் எழுத்தை கைவிடவில்லை. அவர் இறந்தபோது பல கதைகள் பாதியில் நின்று போயின. தான் இறந்த பிறகும் தன்னை அழகுப்படுத்த வேண்டும் என்று அக்கா கேட்டுக்கொண்டதால் அவருக்கு மேக்கப் போடும் பியூட்டீசியனை அழைத்து வந்து மேக்கப் போட்டோம்.

அந்தப் பெண் ‘இதுவரை யாருக்கும் இப்படி செய்ததில்லை. அம்மா என்பதால்தான் போடுகிறேன். இப்படி அவர்களுக்கு மேக்கப் போடுவேன் என நினைக்கவில்லை’ என அழுது கொண்டே மேக்கப் போட்டுவிட்டார். கடைசி காலத்தில் கூடவே உதவி யாய் இருந்த ஒரு பெண் இப்போது வந்தாலும் அக்காவை நினைத்து வருந்துவார். ‘அம்மா போன பின்தான் எனக்கு சாப்பாட்டின் அருமையே தெரிகிறது’ என்பார்.அக்கா கடைசியாக மருத்துவரிடம் பேசும்போது ‘இன்னும் இரண்டு ஆண்டுகள் நான் உயிரோடு இருக்க வேண்டும். எனக்கு சில கடமைகள் உள்ளன’ என சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் என்ன செய்ய நினைத்திருந்தார் என்பது தெரியாமலே போய்விட்டதுதான் வருத்தம். கடைசியாக ஆம்புலன்ஸில் அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வர மருத்துவர்கள் என்னை வண்டியில் ஏறச் சொன்ன போது ‘எப்போதும் என் கூடவே இருந்தாய், கடைசியாக இப்போதும் எனக்குத் துணையாக வா’ என அக்கா சொல்வது போல் இருந்தது.

எனக்குத் தாங்க முடியவில்லை. எத்தனை முறை அவரோடு இந்த வழியில் பயணித்திருக்கிறேன் என நினைத்து நெஞ்சம் கலங்கிவிட்டது” என சொல்லும் போது தன் சகோதரியை நினைத்து ஜெயந்தியின் கண்கள் குளமாகி இருந்தன. எழுத்து அவருக்கு சுவாசித்தல் மாதிரி சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் அனுராதா மேடத்தின் உதவியாளராக இருந்தவர் சர்ச்சில் பாண்டியன். ஒரு சிஷ்யனாக ஒரு குருவை பற்றி மரியாதையுடனும், பரவசத்துடனும், லயிப்புடனும் அவர் நம்மோடு அனுராதா ரமணன் குறித்து பகிர்ந்து கொண்டார்.“பல படங்களில் நடித்தவர் ஆஜானுபாகுவான தோற்றமும் ராஜ லட்சணமும் கொண்ட ஆர். பாலசுப்ரமணியம். அவரின் பேத்தி என்பதாலோ என்னவோ அதே கம்பீரத் தோரணை அமையப்பெற்றதோடு நெஞ்சில் ஈரமும் மனித நேயத்தோடும் வளர்ந்தவர் அனுராதா மேடம். எழுத்துத் திறமையும், ஓவியத் திறமையையும் ஒரு சேர அமையப்பெற்றவர். ஒன்றின் அடிப்படை - மனித உணர்வு, மற்றொன்றின் அடிப்படை- அழகுணர்ச்சி.

ஓர் உன்னத கலைஞரை உருவாக்க இது தானே தேவை? சொந்த வாழ்வின் சோகத்தைத் துரத்த பேனாவைக் கையில் எடுத்தவருக்கு கடைசிவரை அதுவே உற்ற துணையாக மாறியது.  கடைசி வரையில் பேனா மட்டுமே அவருக்கு சம்பாதித்துக் கொடுத்த கற்பதரு. சந்தோஷத்தை அள்ளித் தெளித்த சினேகிதி. மனக்கவலைக்கு அருமருந்து. கணவன்… கடவுள்... எல்லாம்.எழுதுவது என்பது சுவாசித்தல் மாதிரி இவருக்கு இயல்பானது. வாசகர்களை மட்டுமே முன்னிறுத்தி, எதையும் நேர்மையாக எழுத வேண்டும் என்பது எழுத்து பற்றிய இவரது தெளிவு. எப்போதும் கறுப்பு நிற மையில் அடித்தல், திருத்தல் இல்லாமல், கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி முத்து முத்தாய் எழுதுவார். எந்த ஒரு சூழலிலும் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு பேனாவை கையில் எடுத்து ‘இது நன்கு வரவேண்டுமே’ என்று அறிமுக எழுத்தாளரை போன்ற உத்வேகத்தோடு எழுதுவார். நான் அறிந்த வகையில் ஒரு போதும் கதைக்காக அவர் சிரமப்பட்டதே இல்லை. உண்மைச் சம்பவங்களோடு புதிய திருப்பங்களை கற்பனை செய்து படிப்போர் மனதை சிறை வைத்துவிடுவார். உபநிஷத் கதைகளில் வரும் ஒரு சின்ன வார்த்தை கூட இவரது கைவண்ணத்தில் நட்சத்திர சிறுகதை ஆகி விடும்.‘நாவல் மற்றும் தொடர்கதை எழுதுவது என்பது பங்களாவில் ஐந்தாறு அறைகளில் வசதியாக வாழ்வது மாதிரி. எப்படி வேண்டுமானாலும் அந்த வீட்டை அலங்காரம் செய்யலாம். ஆனால் சிறுகதை என்பது ஒரே அறையில் வாழ்வது மாதிரி. அந்த சிறிய அறையை அழகாக காட்டுவது பளிச்சென்று வைத்துக்கொள்வது என்பதுதான் சவால்’ என்பார்.

இவரது கதைகளின் முதல் வரியே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடும். படித்து முடித்துவிட்டு தான் புத்தகத்தை கீழே வைக்கத் தோன்றும். அதே போல் முடிவும் பளீரென பொட்டில் அறைந்த மாதிரி இருக்கும். இவரது எழுத்துக்கள் நடுத்தர குடும்பத்து சாதாரண மனிதர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவை. ‘பெண்ணே உன்னால் முடியும்’ என்று பெண்களுக்கு ஒரு பிடிப்பையும் தன்னம்பிக்கையையும் தருபவை.எழுத்தாளர் என்பதைத் தாண்டி இவர் சிறந்த ஒரு மனிதாபிமானி. எழுத்தாளர்களை நேரில் பார்ப்பது சிரமம் என்றிருந்த காலத்தில் எல்லோருடனும் இயல்பாக பழகியவர். இவரைத்தேடி வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு தனது அலுவல், உடல்நிலை பற்றி எல்லாம் கவலைப்படாமல் எப்போதும் போல் அதே புன்சிரிப்புடன் வரவேற்று அன்பாய்ப் பேசி அனுப்பி வைப்பார்.
அழுத்தமான சம்பவங்கள், ஆழமான பாத்திரப்படைப்பு, விரிவான கண்ணோட்டம், அன்றாட பிரச்னைகளின் அலசல் என தன் வாசகர்களோடு எழுத்துச் சங்கிலியால் தன்னை பிணைத்துக்கொண்டவர். தனது ஆலோசனைகள் மூலம் தாயாய், சகோதரியாய், தோழியாய் லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்.

‘வாழ்க்கையை துணிச்சலாக எதிர் கொள்ளுங்கள். தோல்வி என்பது கவனக்குறைவாக இருக்கும் போது நமக்கு ஏற்பட்ட சறுக்கல் அவ்வளவே தானே தவிர வாழ்க்கை இதோடு முடிந்து போவதில்லை. மீண்டும் முயன்றால் உற்சாகமாய் உயிர்த்தெழலாம்’ என்பார். தன்னை இலக்கியவாதி என ஒருபோதும் அவர் காட்டிக்கொள்ள விரும்பியதே இல்லை. ‘இலக்கியம் என்பது பயமுறுத்தும் வார்த்தை.எனக்கு இலக்கியம் தெரியாது. இதயங்கள்தான் தெரியும்’ என்பார். இன்று பத்திரிகை உலகில் இருக்கும் சிலர் இவரால் முன்னுக்கு வந்தவர்கள். உடல் நிலை முடியாத பல சமயங்களில், ஏன் தீவிர சிகிச்சையில் இருந்த போதும் கூட அவர் முகத்தில் குறையாத அலங்காரம் குறித்து டாக்டர் செரியன் வியந்து போனதை நான் பார்த்திருக்கிறேன். உடல் ரீதியான சவால்களை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு வெளியே சிரித்தபடி வளைய வர அவரால் முடிந்ததற்கு கடவுள் தந்த அவரது வெள்ளை மனம்தான் காரணம். கதை நாயகியாய் 25 ஆண்டு காலம் தமிழ் பத்திரிகை உலகில் கொடிகட்டிப் பறந்தவர் ‘பத்திரிகை உலகிற்கு நான் தேவைப்படும்போதே இந்த உலகில் இருந்து நான் விடைபெற்றுக்கொள்ள வேண்டும் பாண்டியன்’ என்பார்.அதன்படியே நடந்தது. மூக்கிலும், வாயிலும் டியூப்புகள் சொருகப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்த போதும் அத்தனை சிரமத்திலும் கூட என்னை பார்த்து தனது வலது கையை உயர்த்தி ‘தம்ஸ் அப்’ காட்டிய அந்தத் தருணங்கள் இன்றைக்கும் என் கண்களில் நீரை பெருக்குகிறது.”



No comments:

Post a Comment