LIVES OF MAHARAJAS DURING BRITISH PERIOD
கொக்கரக்கோ...கோ என சேவல் சாதகம் பண்ணும் அதிகாலையில் ஒரு மகாராஜா என்ன செய்துகொண்டிருப்பார்? சூரிய நமஸ்காரம், யோகா, உடற்பயிற்சி... சேச்சே, ஏதோ ஒன்று இரண்டு 'உத்தம’ மகாராஜாக்கள் அப்படி வேண்டாத வேலை செய்திருக்கலாம். அசல் ஐ.எஸ்.ஓ-9001 மகாராஜா எனப்படுபவர், அந்த நேரம் குப்புறப்படுத்து, குதூகலமாகத் தூங்கிக் கொண்டிருப்பார் அல்லது நள்ளிரவு எல்லாம் குடித்துக் கொட்டமடித்துவிட்டு அப்போதுதான் தூங்கவே ஆரம்பித்திருப்பார்.
பஞ்சாபின் ஜிந்த் சமஸ்தானத்தைச் சேர்ந்த மகாராஜா ரன்பிர் சிங் ராஜேந்திர பகதூர் இரண்டாம் வகை. விடிய விடிய முடிந்தவரை குஜால் கூத்தடித்துவிட்டு, விடியலில்தான் படுக்கையில் விழுவார். ஆனால், அவர் தூங்க ஆரம்பித்த நேரத்தில் இருந்து பணியாளர்களுக்கு கிலி பிடித்துவிடும். எப்போது எழுவார் எனத் தெரியாது. எழும் நேரத்தில் இன்னென்ன விஷயங்கள் இம்மி பிசகாமல் சரியாக இருக்க வேண்டும் என்பது ராஜ கட்டளை.
என்னென்ன?
குறிப்பிட்ட பணிப் பெண்கள், குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்து பதமாக அவரது கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பணிப்பெண்கள் அவரது தலைமாட்டில் நின்று, குறைவான வால்யூமில் கோரஸாக சில பாடல்களை (மட்டுமே) பாடிக்கொண்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பணிப்பெண், எவ்வளவு மணி நேரமானாலும் சரி, 'சூடான’ தேநீர்க் கோப்பையோடு காத்திருக்க வேண்டும்.
இதுதான் ராஜ வாழ்க்கை!
இந்தப் பணிப்பெண்கள் ஆள் மாறவோ, இடம் மாறவோ கூடாது. மகாராஜா பள்ளியெழுச்சி ப்ரேக்ஃபாஸ்ட்டில் நிகழலாம்; லன்ச்சில் அமையலாம்; அல்லது சாவகாசமாக சாயங்காலம் நிகழலாம். வேறு வழி இல்லை, பணிப்பெண்கள் தேவுடு காத்தே தீர வேண்டும்... ஆறாத தேநீருடன். போனால் போகிறது என மெதுமெதுவாகக் கண்கள் திறக்கும் ரன்பிர் சிங், தன் பார்வையால் சுற்றியிருக்கும் பணிப்பெண்களை நோட்டமிடுவார். அவர்கள் என்னதான் களைப்பாக இருந்தாலும் அப்போது பூத்த மலரைப்போல, வளையோசை கலகல மெட்டில் புன்னகைத்தே தீர வேண்டும். மகாராஜா எழுந்து உட்காரும் வேளையில் நொடி பிசகாமல் ஆவி பறக்கத் தேநீர் நீட்டப்பட வேண்டும்.
ரன்பிர் சிங், தேநீரை உறிஞ்ச ஆரம்பிக்கும் வேளையில், அரண்மனை ஆஸ்தான ஜோதிடர் பண்டிட் கரன் சந்த், மகாராஜாவின் உச்சி குளிர நான்கைந்து நிமிடங்கள் வாழ்த்தித் துதிபாடிவிட்டு, அன்றைய தினப்பலன்களையும் சொல்வார். 'நான்கில் கேது, ஒன்பதில் குரு இருவர் பார்வையும் நீசபங்க ராஜயோகப் பார்வையாக இருப்பதால், சத்ரு ஜெயம், ஆரோக்கிய விருத்தி, அனுகூலத் திருப்பங்கள் உண்டாகும்...’ - இப்படி ரன்பீர் சிங்கின் பள்ளியெழுச்சிப் பொழுதில் ஏதாவது ஓரிரு குறைகள் நேர்ந்துவிட்டால் அவ்வளவுதான், அன்றைக்கு அரண்மனைப் பணியாளர்களுக்கான ஒட்டுமொத்த தினப்பலன் மரண பயம்.
இதுதான் ராஜ வாழ்க்கை!
இன்னொரு நவாப் இருந்தார். அவரது காலைப் பொழுதே மிகவும் வித்தியாசமாகத் தொடங்கும். காலை எழுந்ததுமே ஒப்பனை. அதுவும் இப்படி எல்லாம்கூட ஒப்பனை செய்துகொள்ள முடியுமா என பெண்களே வெட்கி, வெம்பி, வேதனைப்பட்டு தலைகுனியும் அளவுக்கு, தலை முதல் அடி வரை உச்சபட்ச ஒப்பனை. ஆம், அந்த நவாப் ஒப்பனை வெறியர். அவர் பெயர் சாதிக் முகமத் கான் நான்காம் அப்பாஸி. இந்திய சமஸ்தானங்களில் ஒன்றாக இருந்த பஹவல்பூரை (தற்போது பாகிஸ்தானில் ஒரு மாவட்டம்) 1866 - 1899 காலத்தில் ஆட்சி செய்தவர். காலைக்கடன்களை எல்லாம் கடகடவென முடித்துவிட்டு, ஆளுயரக் கண்ணாடி முன் சென்று நவாப் நிற்கும் வேளையில், சகல சௌந்தர்ய ஏற்பாடுகளுடனும் 'பல பேர் கொண்ட ஒப்பனைக் குழுவினர்’ தயாராக இருக்க வேண்டும். அங்கே ஒப்பனைப் படையெடுப்பு ஆரம்பமாகும். முதலில் உடையலங்காரம். ரகரகமான மஸ்லின் கால்சட்டைகள், வகைவகையான முழுநீள பட்டு ஜிப்பாக்கள், தகதகவென வெல்வெட் மேலங்கிகள். அவற்றில் நவாப் தேர்ந்தெடுக்கும் உடை, அவர் மேலேறும். அவருக்குச் சற்றே நீண்ட கூந்தல். ஆக, உடையலங்காரத்துக்குப் பின் சிகை அலங்காரம், அடுத்து நகை அலங்காரம், பின் மிகை அலங்காரம். நவாபுக்குத் திருப்தி உண்டாகும் வரை ஒப்பனை மணிக்கணக்கில்கூட நீளும். ஒரு சில சமயங்களில் ஒப்பனை செய்யும் பணியாள், களைப்பில் மயங்கி விழுந்ததும் உண்டு. நவாப் அசரவே மாட்டார் கிண் என்று நிற்பார். அவர் உடலில் எங்கு எல்லாம் அணிய முடியுமோ அங்கு எல்லாம் நகை ஜொலிக்கும். அத்தனையும் விதவிதமான, நவாபுக்காகவே வடிவமைக்கப்பட்ட தனித்துவ ஆபரணங்கள். இறுதியாக, வைரமும் மரகதமும் பதிக்கப்பட்ட ஒன்பது பவுண்ட் எடையுள்ள தங்கக் கிரீடம் தலையேறும். ஏதாவது அவசர காரியம் என்றாலும்கூட, பல மணி நேர ஒப்பனையில் திருப்தி ஏற்பட்ட பிறகே நவாப் நகர்வார். அப்படிப்பட்ட அதகள நவாப், தான் இரவில் படுத்து உறங்குவதற்காகவே பிரத்யேக டிசைனில் கட்டில் ஒன்றை பாரீஸில் ஆர்டர் செய்தார். அந்தக் கட்டில் தயாராகி வருவதற்கு முன்பாக, வெவ்வேறு அரண்மனைகளில் எத்தனை விதமான கூத்துகள் எல்லாம் நிகழ்ந்தன என, ஓர் எட்டு பார்த்துவிட்டு வரலாம்.
இதுதான் ராஜ வாழ்க்கை!
இதுதான் ராஜ வாழ்க்கை!
இதுதான் ராஜ வாழ்க்கை!
திருவாங்கூர் அரண்மனையில் பின்கட்டில் சிவப்புநிற நீர் கொதிக்கிறது என்றால், மகாராணி சேது லட்சுமிபாய் குளிக்கப்போகிறார் என அர்த்தம். பணிப்பெண்கள் கையில் வெள்ளிக் கிண்ணங்களோடு, மகாராணி குளிக்கும் இடம் நோக்கி அணிவகுப்பார்கள். நான்கு பெரிய பித்தளைக் கொப்பரைகளில் நீர் வகைகள் தயாராக இருக்கும். அதாவது கூந்தலை அலச ஒருவித நீர். அலசிய பின் தலைக்கு ஊற்ற ஒன்று. உடலுக்கு ஊற்ற மற்றொன்று. ஒவ்வொன்றுமே விதவிதமான மூலிகைகள் கலந்து கொதிக்கவைக்கப்பட்டது. மகாராணி சேது லட்சுமிபாய் வந்து
உட்கார்ந்ததும் அரை மணி நேரத்துக்கு கூந்தலில் தேங்காய் எண்ணெய் மசாஜ். பின் சில மூலிகைப் பச்சிலைகளால் தயார்செய்த கலவையைத் தடவுவார்கள். கூந்தலை அலசி முடித்த பின், உடலுக்கு எண்ணெய் மசாஜ். அடுத்ததாக சீயக்காய் மற்றும் இதர வாசனைப் பொருட்கள் கலந்த பொடிகளால் தேகாபிஷேகம். இன்னும் சில அபிஷேகங்கள். இப்படி மகாராணி குளிரக் குளிரக் குளித்து முடிக்க மட்டும் இரண்டு மணி நேரம் பிடிக்கும். அடுத்து கூந்தலை சாம்பிராணி, இதர வாசனை வஸ்துக்கள் எல்லாம் சேர்த்து புகைபோட்டு உலர்த்த மேலும் அரை மணி நேரம். இப்படி திருவாங்கூர் மகாராணியின் குளியல் சேவை செய்வதற்கு என்றே பிரத்யேக வேலைக்காரப் பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
இதுதான் ராஜ வாழ்க்கை!
இதுதான் ராஜ வாழ்க்கை!
இதுதான் ராஜ வாழ்க்கை!
குளித்தாயிற்று. காலை உணவுக்கு ஹைதராபாத் சமஸ்தான அரண்மனைக்குப் போகலாம்.
அது 20-ம் நூற்றாண்டின் இறுதி. வைஸ்ராய் கர்ஸன், ஒரு நாள் காலை உணவுக்காக ஹைதராபாத் அரண்மனைக்கு வருவதாகச் சொல்லியிருந்தார். அப்போதைய நிஜாம் மெஹபூப் அலி கான், கர்ஸனை அசத்துவதற்குத் தயார் ஆனார். இந்த நிஜாமும் ஒப்பனைப் பிரியரே. தன் வாழ்வில் ஒரு முறை அணிந்த உடையை இன்னொரு முறை தொட்டுக்கூடப் பார்க்காதவர். நாளரு உடையும் பொழுதொரு பெர்ஃப்யூமாகத்தான் வலம் வருவார். அவருக்கும் பிற மனிதர்களைப் போல இரண்டே கால்கள்தான் இருந்தன. என்றாலும், ஆயிரக்கணக்கான ஜோடி காலணிகளை வாங்கி அடுக்கிவைத்திருந்தார். உடையும் செருப்பும் புதிது புதிதாகத் தேவைப்பட்டதுபோல அந்தப்புரத்தில் பெண்களும்... ம். வைஸ்ராய் கர்ஸன் வருகிறார் என்றதுமே, மெஹபூப் அரண்மனைச் சமையல் நிபுணர்களை முடுக்கிவிட்டார். நிற்பன, நடப்பன, பறப்பன, ஊர்வன, தவழ்வன, நீந்துவன என விதவிதமான ஜீவராசிகள் எல்லாம், வைஸ்ராயே வந்து தங்களுக்கு இறுதி மரியாதை செய்யவிருக்கிறார் என்ற இறுமாப்புடன், பதார்த்தங்களாக டைனிங் டேபிளில் மல்லாந்துகிடந்தன. வந்தார் வைஸ்ராய். வரவேற்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டார். டைனிங் டேபிள் முன் பசியுடன் அமர்ந்தார். அங்கே குவித்துவைக்கப்பட்டிருக்கும் பதார்த்தங்களைக் கண்டதும் அவருக்கு அஜீரணமாகிவிட்டதுபோல. இதெல்லாம் யாருக்கு என்பதுபோல நிஜாமை நோக்கினார்.
இதுதான் ராஜ வாழ்க்கை!
இதுதான் ராஜ வாழ்க்கை!
'சாப்பிடுங்கள் வைஸ்ராய்’ என்றார் நிஜாம் பெருமிதத்துடன்.
'பிரட் பட்டர் ஜாம் கிடைக்குமா?’ என கர்ஸன் கேட்கவும், 'போடா வெண்ணெய்’ எனச் சொன்னதுபோலவே கேட்டது நிஜாமுக்கு.
இப்படி வைஸ்ராயிடம் அசிங்கப்பட்ட நிஜாமும் மெஹபூபும் லேசுப்பட்டவர் அல்ல. அவர், எங்கேயாவது விருந்துக்குச் செல்கிறார் என்றால், விருந்து கொடுப்பவர்களை எந்த விதத்தில் திணறடிக்கலாம் என யோசித்தபடிதான் செல்வார்.
ஒருமுறை ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட சிறு பகுதி ஒன்றை ஆண்டுவந்த நவாப் முஸலாம் ஜங், நிஜாமை விருந்துக்கு அழைத்திருந்தார். நிஜாமுக்கு என ஹைதராபாத் சமையல் கலாசாரத்தில் என்னென்ன உண்டோ அத்தனையையும் தயார்செய்தும் வைத்திருந்தார். விருந்துக்கு வந்த நிஜாம், அணிவகுத்திருக்கும் உணவுகளின் மரியாதையை பார்வையால் ஏற்றுக்கொண்டார். நவாபைப் பார்த்தார். 'சக்னா இல்லையா?’ என்றார் முகச்சுளிப்புடன். நவாபுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சக்னா என்பது ஆட்டின் வயிற்றுப் பகுதி இறைச்சி கொண்டு செய்யப்படும் குழம்பு போன்ற பதார்த்தம். ஹைதராபாத்தின் ஏழை இஸ்லாமியர்கள் உண்ணும் உணவு. அந்தஸ்து குறைந்த உணவை ஐயன்மீர் கேட்கிறாரே என ஒரு நொடி பதைபதைத்த நவாப், வேறு வழியின்றி பணியாள்களை ஏவினார், 'இப்போதே இங்கே சக்னா வரவேண்டும்.’ இப்படி எப்போது எதைக் கேட்பார், எதைச் செய்வார் என்றே தெரியாத எடக்குமடக்கு மகாராஜாக்களிடம் பணியாளராக இருப்பது பூர்வஜென்மங்களில் செய்த பாவங்களுக்கான ஒட்டுமொத்த தண்டனை.
பிகானிர் மகாராஜா கர்னி சிங்கின் அரண்மனையில் ஏராளமான வேலைக்காரர்கள் உண்டு. குறிப்பாக அந்த 'நோட்ஸ்’ வேலைக்காரர். அதாவது, எப்போது மகாராஜா என்ன சொன்னாலும், அதை அந்த வேலைக்காரர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் ஒரு நோட்டில் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும். 'அரண்மனைக்கு புதிய பூத்தொட்டிகள் வாங்க வேண்டும்’ எனச் சொன்னாலும் சரி, 'காலையில சாப்பிட்ட புலாவில் உப்பு அதிகம்’ எனச் சொன்னாலும் சரி, வேலைக்காரர் குறித்துக்கொள்வார். அந்தக் குறிப்புகளைக்கொண்டு என்ன செய்தார்கள்? ஒன்றும் செய்யவில்லை. நோட்டு காலியானதும் அடுத்த நோட்டில் குறிப்புகளை எடுக்க ஆரம்பித்தார் அந்த வேலைக்காரர், அவ்வளவுதான்.
இதுதான் ராஜ வாழ்க்கை!
கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் அரண்மனை வேலைக்காரர்களை 'பட்டக்கார்’ என அழைப்பார்கள். வெள்ளை உடை, சிவப்பு நிறத் தலைப்பாகை அவர்களது சீருடை. ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வரும்போது பட்டக்கார்கள் வணக்கம் வைக்க வேண்டும். சாதாரணமாக அல்ல, முதலில் ஏழு போல வளைந்து, உள்ளங்கை இரண்டையும் சேர்க்க வேண்டும். பின் அப்படியே முட்டிபோட்டு, முன் நெற்றியால் தரையைத் தொட வேண்டும். மகாராணியோ, மகாராஜாவோ அவர்களைக் கடக்கும்போது எல்லாம் இதேபோல ஏழு முறை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இத்தனை முறை வணங்கினால் போதும் என்ற கணக்கு எல்லாம் கிடையாது. அதுபோக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த குஞ்சு, குளுவான்கள் வந்தால்கூட, வணக்கம் வைக்க வேண்டியது பட்டக்கார்களின் தலையெழுத்து. ஆனால் அந்தக் குஞ்சு, குளுவான்களுக்கு பட்டக்கார்களைப் படுத்துவதற்கு என்றே அவர்கள் முன்பாக வருவதும் திரும்பிப்போவதுமாக இருப்பார்கள். பட்டக்கார்கள்தான் பாவம், இடுப்பொடிய வணக்கம் வைத்துக்கொண்டே இருப்பார்கள்.
சில பணியாளர்கள் தன் அப்பாவித்தனத்தால் அல்லது அடப்பாவித்தனத்தால் மகாராஜாக்களை 180 டிகிரி கவிழ்த்துவிட்ட சம்பவங்களும் சரித்திரத்தில் உண்டு. உதாரணத்துக்கு ஒன்று. ஒருமுறை இரானின் ராஜ வம்சத்தைச் சேர்ந்த, 47-வது இமாம் இரண்டாம் அகா கான், பம்பாயில் 'ராயல் விருந்து’ ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பல்வேறு சமஸ்தானங்களைச் சேர்ந்த (இந்து) மகாராஜாக்கள், முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, தனது பார்ஸி இனத்தைச் சேர்ந்த தலைமை செஃபிடம், 'மாட்டு இறைச்சி இருக்கவே கூடாது’ எனக் கறாராகக் கட்டளையிட்டிருந்தார் அகா கான். ஆனால், விருந்தின் ஆரம்பத்திலேயே எருதுத் தலை ஒன்று சமைத்து, அலங்கரித்து எடுத்து வந்தார்கள். விருந்தினர்கள் வெலவெலத்துப் போக, அகா கான் உடனே விருந்தை நிறுத்தச் சொன்னார். உச்சபட்சக் கோபத்துடன் பார்ஸி செஃபிடம் கத்தினார். 'என்ன செய்திருக்கிறாய் நீ?’ சமையல்காரர் அப்பாவியாக, நடுநடுங்கச் சொன்ன பதில், 'ஐயா, மாட்டு இறைச்சிதானே கூடாது என்றீர்கள். நான் எருதைத்தானே சமைத்திருக்கிறேன்.’
அதற்குப் பின் அந்த பார்ஸி செஃபின் நிலை என்ன ஆனது என்பது பற்றி எந்தக் கல்வெட்டிலும் செதுக்கப்படவில்லை. ஆனால், ஐரோப்பிய செஃப்கள் பலரும், இந்திய அரண்மனையில் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை சரித்திரம் பதிவுசெய்திருக்கிறது. சீக்கியர்கள், ராஜபுத்திரர்கள், மராத்தியர்கள், இஸ்லாமியர்கள் என, அரண்மனைகளில் அவரவர் இனத்துக்கு ஏற்ப உணவுப் பழக்கவழக்கங்கள், சமையல் கலாசாரங்கள் இருந்தன. எப்போது ஆங்கிலேயர்கள் அரண்மனைகளுக்குள் புகுந்தார்களோ, அப்போது இருந்தே ஐரோப்பியக் கலாசாரமும் சமையல்கட்டுகளில் 'ஃப்ரை’ ஆக ஆரம்பித்தது. அரண்மனைகளில் ஐரோப்பிய பாணி சமையல்கட்டுகள் உதித்தன. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தியிருக்க, பிரிட்டிஷ் செஃப்கள் ராஜ குடும்பத்தின் நாக்குகளை, தங்கள் சமையலால் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.
20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அந்த ஐரோப்பிய செஃப்கள் பெற்ற மாதச் சம்பளம் ரூ.500. காலை உணவு தயாரிக்க ஒரு குழு. மதிய உணவுக்கு தனிக் குழு. இரவு உணவுக்கு இன்னொரு குழு. சிறப்பு உணவுகளுக்கு மற்றொரு குழு. விருந்து என்றால் வேறு ஒரு குழு... என, சமஸ்தானங்களில் யானைப் படை, குதிரைப் படை இருந்ததோ இல்லையோ, சமையல் படை மட்டும் தனியாக இருந்தது. அப்படி சமையல் படை வைத்திருந்தவர்களில் முக்கியமானவர் ராம்பூர் நவாப் ஹமித் அலி கான். அவரது வாழ்வின் மகோன்னதமான லட்சியம் ஒன்றே ஒன்றுதான். நாக்குக்கு எந்தக் குறை வைக்காமல், நன்றாக, ரசித்து, ருசித்துச் சாப்பிட வேண்டும். நவாபின் இந்த உன்னத லட்சியத்தை நிறைவேற்றுவதற்காகவே அரண்மனையில் சுமார் 300 சமையல்காரர்கள் இருந்தார்கள். ஒருவர் மீன்கறி சமைப்பதில் எக்ஸ்பர்ட் என்றால், அவருக்கு அது மட்டுமே வேலை. இன்னொருவர் தலைக்கறி செய்வதில் தல என்றால், அவர் ஆயுசுக்கும் அதற்கு என்றே நேர்ந்துவிடப்பட்டவர். இப்படி 300 பேரும் தங்களுக்கான பதார்த்தத்தில் தன்னிகரற்றவர்கள். தவிர, ஐரோப்பிய பாணி உணவு வகைகளைப் பக்குவமாகச் சமைப்பதற்கு என்றே தனிப் படை ஒன்றையும் வைத்திருந்தார் நவாப். ஆனால், ஒரு நாளைக்கு ஒரே ஒரு வேளை, அதுவும் இரவில் மட்டுமே உண்டார் நவாப். அதுவும் எப்படி? 'இன்னிக்கு முகலாய வகை சாப்பாடு தயார் செஞ்சுருங்கப்பா’ என நவாபின் கட்டளை, மதிய வேளையில் சமையல் அறைக்குள் புகும். முகலாய சமையல் கலைஞர்கள் பரபரப்பாவார்கள். ஆறு மணிக்கு எல்லாம் சமையல் மேஜையில் சாப்பாடு தயாராக இருக்கும். குறைந்தது 100 பதார்த்தங்கள். ஏழு மணிக்கு வந்து அமரும் நவாப், ஒன்றரை மணி நேரம் உட்கார்ந்து ஆற, அமர அசைபோடுவார். எல்லாம் சேர்த்து சில கிலோக்கள் உணவு உண்பார். எதையும் வேண்டாம் என ஒதுக்க
மாட்டார். குறைந்தபட்சம் ஒரு கரண்டி பதார்த்தமாவது அவரது நாக்கில் முக்திபெறும். சாப்பிட்டு முடித்ததும் நிறைய ஜில் தண்ணீர் குடிப்பார். ஏப்பம் வந்ததும் அவரது உதடுகள் துருக்கி சிகரெட்டுகளைக் கவ்விக்கொள்ளும். அன்றைய தினத்துக்கான உணவு அவ்வளவே. மற்றபடி காலை, மதியத்தில் பசித்தால்கூட சாப்பிட மாட்டார். சிகரெட் மட்டுமே.
வேட்டையாடுதல், இந்திய மகாராஜாக்களின் பொழுதுபோக்குகளில் மிக முக்கியமானது. இதுவரை தான் வேட்டையாடிய புலி, சிங்கம், கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் ஸ்கோரை, பிற சமஸ்தான மகாராஜாக்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். சமஸ்தானத்தில் வனப்பகுதி இருந்தால் போதும்; அதற்குள் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஒரு வேட்டை அரண்மனையை கட்டி வைத்திருப்பார்கள். அவ்வப்போது அங்கு சென்று குடும்பத்தோடு தங்கி, டுமீல்... டுமீல்!
இப்படி வேட்டையாடுவதற்காகவே வைஸ்ராயும், பிற பிரிட்டிஷ் அதிகாரிகளும் ஏன் பிரிட்டன் கிங், பிரின்ஸ்கூட இந்தியாவுக்கு வருவது உண்டு. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வேட்டை பிரசித்தம். உதய்பூர், ஜோத்பூர், குவாலியர், பஞ்சாப் பகுதிகளுக்குச் சென்றால் புலிகளை, புளியங்காய் அடிப்பது போல அடிக்கலாம். தோல்பூர், பரத்பூர் பகுதிகளுக்குச் சென்றால், விதவிதமான பறவைகளையும் கொத்துக் கொத்தாக வாத்துகளையும் அள்ளலாம். குஜராத் வனப்பகுதிகளில் சிறுத்தைகளுக்குக் குறிபார்க்கலாம். இந்தியா முழுவதிலுமே மான்களுக்குப் பஞ்சமிருந்தது இல்லை. தெற்கே கேரள வனப்பகுதிகளுக்கு வந்தால், யானை வேட்டை சாத்தியம். இவை போக கரடி, ஓநாய், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை, காண்டாமிருக வேட்டைகளும் நடந்தன. பிரிட்டிஷார், புலி வேட்டையாடுவதை கௌரவமான ஒன்றாகக் கருதினார்கள். சுட்ட புலியைக் குப்புறப் போட்டு, அதன்முன் லேடி வைஸ்ராயோடு நின்று, துப்பாக்கியுடன் சிரித்தாற்போல புகைப்படம் எடுத்துக் கொள்வதை வைஸ்ராய்கள் அளப்பரிய சாதனையாக நினைத்தார்கள். தாங்கள் சுடும் புலி, குறைந்தபட்சம் பத்து அடி நீளமாவது இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தார்கள். மிரள வைக்கும் வேட்டை புள்ளிவிவரங்களில் சில. கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயண், தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள், 207 காண்டாமிருகங்கள், 311 சிறுத்தைகளை வேட்டையாடியிருக்கிறார். சர்குஜா சமஸ்தான ராஜா, ராமானுஜ் சரன் சிங், தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ரேவா சமஸ்தான மகாராஜா குலாப் சிங்கின் புலி ஸ்கோர், தொள்ளாயிரத்துச் சொச்சம்.
சரி, அரண்மனைக்குள் வந்ததே வந்துவிட்டோம். சற்றே அந்தப்புரத்தையும் எட்டிப்பார்த்துவிடுவோம். பொதுவாக, இந்து சமஸ்தானங்களின் அந்தப்புரம் எந்த வகையில் இயங்கி வந்தது? மகாராஜாவின் அதிகாரபூர்வ முதல் மகாராணியே அந்தப்புரத்தின் முதலமைச்சர். அந்த மகாராணிக்கு ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில், பட்டத்து இளவரசரைப் பிரசவிக்கும் மகாராணிக்குப் பதவி கைமாறுவது உண்டு. மகாராணிகளுக்கு அடுத்த நிலையில் வருபவர்கள் ராணிகள். அதற்கு அடுத்து ஆசைநாயகிகள். அந்தப்புரத்தில் மகாராணிகளின் அறைகளே மிகமிகப் பெரியது. அவர்களுக்குச் சேவகம் செய்யவே நூற்றுக்கணக்கான பெண்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். ராணிகளின் அறைகள் ஓரளவு பெரியவை. ஒரு சில பணிப் பெண்கள் இவர்களுக்கு உண்டு. மகாராஜாவின் அப்போதைய ஆசைநாயகிகளுக்கு அந்தப்புரத்தில் சிங்கிள் பெட்ரூம் ஒதுக்கப்படும். மற்ற பெண்களுக்கு? பொது அறைகளே. இங்கே இந்தப் பெண்களுக்கு உரிய உடைகள், நகைகள், உணவு எல்லாமே தராதரம் பார்த்துதான் வழங்கப்படும். மகாராணிகளின் நகைகள், உடைகள் பற்றி கேட்கவே வேண்டாம். ராணிகளுக்கும் குறை இல்லை. ஆசைநாயகிகளுக்கு? அது மகாராஜா அவர்கள் மேல் வைத்துள்ள தனிப்பட்ட காதலையும் காமத்தையும் பொருத்தது.
இதுதான் ராஜ வாழ்க்கை!
பொதுவாக ஒரு நாளைக்கு அரண்மனையில் 50 முதல் 70 பதார்த்தங்கள் வரை சமைப்பார்கள். மகாராணிகள் தங்களுக்கான தங்கத் தட்டில் விருப்பமான எதையும் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். ராணிகளுக்கு அதிகபட்சம் 30 வகை பதார்த்தங்கள் வரை வெள்ளித் தட்டுகளில் பரிமாறப்படும். ஆசைநாயகிகளுக்கு அதிகபட்சம் 10 பதார்த்தங்களே. அதுவும் பித்தளைத் தட்டில் அளவுச் சாப்பாடு. ஆக, அந்தப்புர வாழ் பெண்கள், மகாராஜாவின் கடைக்கண்ணில் விழுந்து ஆசைநாயகியாகப் போராடியதும், ஆசைநாயகியாக இருக்கும் பெண் ராணியாகப் பதவி உயர்வு பெறப் போராடியதும், அந்தப்புரச் சிறையில் இருந்து எப்படியாவது தப்பித்து வெளியேறி விடமாட்டோமா என சில பெண்கள் போராடியதும்... நிகழ்ந்த நிஜங்களே.
சரி, பஹவல்பூர் நவாப் சாதிக் முகமத் கான் பாரீஸில் ஏதோ கட்டில் ஆர்டர் செய்திருந்தாரே. அது எப்படிப்பட்ட கட்டில்? Christople. இது 1830-ம் ஆண்டில் விதவிதமான வெள்ளி அலங்காரப் பொருள்கள் தயாரிப்பதற்கு என்றே பாரீஸில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். இங்கேதான் நவாப் தனக்கான தனித்துவக் கட்டிலுக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். கட்டில் அரண்மனைக்கு வந்து இறங்கியதும் நவாப் அதன் மீது ஏறிக் குதித்தார் குழந்தைபோல. அதன் அழகு அப்படிப்பட்டது. முழுக்க ரோஸ்வுட் - அதன் மேல் வெள்ளியால் இழைக்கப்பட்ட கட்டில். கட்டிலின் நான்கு புறமும் ஆளுயர அழகிய பெண்களின் நிர்வாணச் சிலைகள். அந்தப் பெண்களில் கைகளில் விசிறி. நவாப் படுத்துக்கொண்டே ஒரு பட்டனைத் தட்டினால், அந்தச் சிலைகள் விசிற ஆரம்பிக்கும். இன்னொரு பட்டனைத் தட்டினால், அடுத்த 30 நிமிடங்களுக்கு கட்டிலில் இணைக்கப்பட்டிருந்த இசைப் பெட்டியில் இருந்து மெல்லிய இசை கிறக்கத்துடன் ஒலிக்கும். இப்படிப்பட்ட அழகுக் கட்டிலில், கிறங்கும் இசை ஒலிக்க, அந்தப் பேரழகுப் பொம்மைகளைப் பார்த்தபடி நவாப் சும்மா தூங்கியிருப்பாரா என்ன எனக் கேட்டால்... மீதி உங்கள் கற்பனைக்கு!
..
No comments:
Post a Comment