JOHN SULLIVAN ,FOUNDER OF OOTY
உதகமண்டலம் எப்படி உருவானது
.அந்த மலைக்கு மேல் போன மக்கள் யாரும் உயிருடன் திரும்ப முடியாது. அங்கு பூதங்களும் பிசாசுகளும் வசிக்கின்றன’ - இப்படி ஒரு பயம், அன்றைய சமவெளிப் பிரதேச மக்களுக்கு இருந்தது. அந்த மலைக்கு மேல் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலும், அந்த மலையைப் பற்றி உலா வந்த கதைகளின் காரணமாக, அதை நெருங்க பயந்தனர். அந்த மலை, இன்று சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி.
மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமே வாழ்ந்த, பெரும் காடாக விளங்கிய, மற்ற மக்கள் நெருங்க பயந்த நீலகிரியை, நவீன உலகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்கு உரியவர், ஜான் சல்லிவன். கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்தவர். வாருங்கள்... ஜான் சல்லிவனின் கதையோடு, நவீன நீலகிரியின் வரலாற்றையும் அறிவோம்.
தோடமலாவில் என்ன இருக்கிறது?
1800-களில் நீலகிரி, 'தோடமலா’ என்றே அழைக்கப்பட்டது. அந்த மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களில் சிலர், அவ்வப்போது கீழே இறங்கிவருவதும், அவர்களுக்குத் தேவையான பொருட்களைப் பண்டமாற்று முறையில் பெற்றுச் செல்வதும் நடந்துவந்தன. அந்த மலைவாழ் மக்களுடன் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலரே வணிகம் செய்துவந்தனர். மற்றவர்கள் அவர்களை
விநோதமானவர்களாகவே பார்த்துவந்தனர். திடீர் திடீரென சமவெளிப் பகுதியில் பிரசன்னமாகி, தங்கள் தேவை முடிந்தவுடன் மாயமாக மலை மீது ஏறிச் சென்றுவிடும் அவர்களைக் கண்டு பயமும் மக்களுக்கு இருந்தது. அதேசமயம், 'தோடமலாவில் அப்படி என்னதான் இருக்கிறது’ என அறிந்துகொள்ளும் ஆர்வமும் சமவெளிப் பிரதேச மக்களுக்கு அதிகமாக இருந்தது. மலை மேல் என்ன இருக்கிறது என்பது குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் மக்கள் மத்தியில் உலவின. 'அங்கே பூதங்களும் பிசாசுகளும் வசிக்கின்றன. அங்கே சென்ற சமவெளிப் பிரதேச மக்கள் யாரும் உயிருடன் திரும்ப முடியாது’ என்றே பேசி வந்தனர். இந்தக் கதைகளின் காரணமாக, மலையை நெருங்க மக்கள் பயந்திருந்த நிலையில், மலையின் மீது ஏறி முதல் கட்டடத்தைக் கட்டினார் ஜான் சல்லிவன்.
ஊட்டி பிறந்த கதை!
1602-ம் ஆண்டில் இருந்தே நீலகிரி மலை மீது ஏறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மலபார் பகுதியில் இருந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை, ஜேகோம் பினிஷியோ என்ற பாதிரியாரை அனுப்பிவைத்தது. 'மலை மீது மக்கள் சிலர் வசிக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவர்களின் வழித்தோன்றலாக இருக்கலாம்’ என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அந்தப் பாதிரியார் அனுப்பி வைக்கப்பட்டார். இன்றைய கேரளத்தின் 'மன்னார்க்காடு’, 'கெத்தை’ வழியாக மலையேறிய அவர், மலைவாழ் மக்களைக் கண்டார். அவர்கள் கிறிஸ்துவ வம்சாவளியை சேர்ந்தவர்கள் இல்லை என்று தெரியவந்ததும், தன் பயணத்தை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.
அதன் பிறகு வெவ்வேறு காலகட்டங்களில், மலை மீது ஏறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியிலேயே முடிந்தன. இந்த நிலையில், நீலகிரியை உள்ளடக்கிய கோவை மாவட்டத்துக்கு கலெக்டராக வந்து சேர்ந்தார் ஜான் சல்லிவன். அவருக்கு தோடமலையைப் பற்றி உலா வரும் கதைகள் வியப்பைத் தந்தன. அதை எல்லாம் நம்ப அவர் தயாராக இல்லை. 'மலை மீது குறிப்பிட்ட சில இன மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தனித்தே வாழ்கிறார்கள்’ என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது. அதுமட்டும் அல்லாமல், 'தோடமலையை முழுக்க சர்வே செய்ய வேண்டும்... அங்கு வாழும் மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும்’ எனத் தணியாத ஆர்வமும் ஏற்பட்டது. எனவே, தோடமலையைப் பற்றி அறிந்து வர ஆட்களைப் பணித்தார்.
1818-ம் ஆண்டு ஜான் சல்லிவனால் அனுப்பட்ட ஜே.சி.விஷ் மற்றும் என்.டபிள்யூ.கிண்டர்ஸ்லே என்கிற அவருடைய உதவியாளர்கள், குறிப்பிட்ட தூரம் வரை மலை மீது ஏறி, 'அங்கு உள்ள பள்ளத்தாக்குகளிலும் மலைச்சரிவுகளிலும் மக்கள் வாழ்கிறார்கள். அதை தூரத்தில் இருந்து பார்த்தோம்’ என்று பாசிட்டிவ்வான பதிலைச் சொன்னார்கள். அதன் பிறகே, 'நானே புறப்பட்டுச் செல்கிறேன்’ என சல்லிவன் களத்தில் இறங்கினார்.
ஜான் சல்லிவனின் முன்கதை!
ஜான் சல்லிவனுக்கும் இந்தியாவுக்கும் அவருடைய தந்தை காலத்தில் இருந்தே தொடர்பு உண்டு. காரணம், சல்லிவனின் தந்தையும் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியவர். அந்த வகையில் மகனையும் கிழக்கிந்திய கம்பெனி பணிக்காகத் தயார்ப்படுத்தினார். லண்டனில் பிறந்து வளர்ந்த ஜான் சல்லிவன், தனது 15-வது வயதில் கிழக்கிந்திய கம்பெனியில், மதறாஸ் பிராந்தியத்தில் ரைட்டராகப் பணியில் சேர்ந்தார். வருவாய் துறை, நீதித் துறை என வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர், படிப்படியாகப் பணி உயர்வு பெற்று, 1815-ம் ஆண்டு கோவையில் சிறப்பு வருவாய் கமிஷனராகப் பதவிஏற்றார். அதே ஆண்டிலேயே கோவை மாவட்டத்தின் நிரந்தர கலெக்டராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் தன் ஆளுகைக்கு உட்பட்ட 'தோடமலா’ என்று அழைக்கப்படும் நீலகிரி மலையின் ரகசியம் அறியும் முயற்சியில் இறங்கினார்.
ஊட்டி பிறந்த கதை!
தன்னால் அனுப்பிவைக்கப்பட்ட உதவியாளர்கள் பாசிட்டிவ்வான பதிலைச் சொன்னதை அடுத்து, 1819-ம் ஆண்டு, ஜனவரி மாதம் நீலகிரி மலை மீது முதன்முதலாக ஏறினார். மலை மீது ஏறும் முயற்சியில் கோவைச் சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ''தோடமலையை நோக்கிப் பயணம்; மலையேறி, வெற்றிகரமாகத் திரும்பி வந்தால், உங்களுக்கு விடுதலை. பயணத்திலேயே உயிர் போகும் ஆபத்தும் உண்டு'' என்று சொல்லியே அழைப்பு விடுக்கப்பட்டது. கைதிகள் மற்றும் சிப்பாய்களுடன் குதிரைப் படை, யானைப் படையையும் அழைத்துக்கொண்டு போருக்குப் புறப்படுவதுபோலக் கிளம்பினார்கள்.
சிறுமுகைப் பகுதியில் இருந்து பயணத்தை ஆரம்பித்தார்கள். பவானி ஆற்றை ஒட்டிய தனநாயக்கன் கோட்டைப் பகுதியில் இருந்து மலையேறினார்கள் (தனநாயக்கன் கோட்டை என்பது திப்புசுல்தான் ஆட்சிக் காலத்தில் வரி வசூல் மையமாகத் திகழ்ந்தது. அதன் காரணமாக, அதற்கு 'தண்டல் நாயக்கன் கோட்டை’ என்ற பெயரும் உண்டு. அந்த தனநாயக்கன் கோட்டை இப்போது இல்லை. பவானி சாகர் அணை கட்டப்பட்டபோது, அதில் மூழ்கிவிட்டது).
அடிவாரப் பகுதியைத் தெம்பாகக் கடந்தார்கள். மலையேற்றத்தில்தான் சிக்கல் தொடங்கியது. குறிப்பிட்ட தூரத்துக்குப் பிறகு யானைகள் மற்றும் குதிரைகளால் மலையில் ஏற முடியாமல் போகவே, அவை திருப்பி அனுப்பப்பட்டன. மற்றவர்கள் மட்டும் மலை ஏறும் முயற்சியைத் தொடர்ந்தார்கள். வழியில் காட்டருவி ஒன்று தென்பட... அதனைக் கடக்க முடியாமல் தவித்தார்கள். இருப்பினும், முயற்சியில் இருந்து பின்வாங்காமல் அந்த அருவியைக் கடக்கத் திட்டமிட்டார்கள். அந்த அருவியில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாக... மீதம் உள்ளோர் மட்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நீண்ட பயணத்துக்குப் பிறகு, 'திம்மட்டி’ (திம்மஹட்டி) என்ற இடத்தை அடைந்து, அங்கே டென்ட் அடித்துத் தங்கினார்கள். திம்மட்டி என்ற ஊர்தான் தற்போது 'கன்னேரிமுக்கு’ என்று அழைக்கப்படுகிறது. இது கோத்தகிரியின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது.
தோடமலாவில் சல்லிவன் கண்டது என்ன?
'தோடமலா’ தோடர்கள் வாழும் மலைப்பகுதி என்பது சல்லிவன் உள்ளிட்டவர்கள் அறிந்துவைத்திருந்ததுதான். ஆனால், மலையில் அமைந்திருக்கும் பெரும் பள்ளத்தாக்குகளும் சமவெளிப் பிரதேசங்களும் அவர்களை ஆச்சர்யப்படுத்தின. மலைச் சரிவுகளிலும் மக்கள் வாழ்ந்ததைக் கண்டு வியந்தனர்.
ஊட்டி பிறந்த கதை!
மலை உச்சியில் தோடர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் எருமையை நம்பி வாழ்கிறார்கள். அவர்கள்தான் மற்ற மலைவாழ் மக்களுக்கு பால் சப்ளை செய்கிறார்கள். தோடர்களுக்கு அடுத்த நிலையில் கோத்தர்கள் வசிக்கிறார்கள். கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இசைக் கருவிகளை வாசிப்பதிலும் வல்லவர்களாக இருக்கிறார்கள். விவசாயமும் இவர்களுக்கு கைவந்த கலை. இவர்கள்தான் அதிக அளவில் சமவெளிப் பகுதிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
குரும்பர்களும் இருளர்களும் மலைச் சரிவுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் காட்டை நம்பி வாழ்கிறார்கள். வேட்டையாடியும், மலைப் பொருட்களைச் சேகரித்தும் வாழ்க்கை நடத்துகிறார்கள். நீலகிரியில் பெரும்பான்மையான பகுதிகளில் படுகர்கள் வசிக்கிறார்கள். நீலகிரி முழுவதும் கிட்டத்தட்ட 150 ஊர்களில் அவர்கள் வசித்தனர். இன்றும் நீலகிரியில் பெரும் அளவில் வசிப்பவர்கள் இவர்கள்தான்.
தான் பார்த்த விஷயங்கள் பற்றி தங்கள் தலைமைக்கு கடிதம் எழுதினார் சல்லிவன். 'மலையில் இங்கிலாந்தைப் போல குளிரான காலநிலை நிலவுகிறது. இரவு நேரத்தில் பாத்திரத்தில் ஊற்றி வைத்திருந்த தண்ணீர் உறைந்து போய்விட்டது என்றால், அங்கு உள்ள குளிரின் தன்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்று எழுதினார். இருப்பினும், மேலிடம் அதை நம்புவதாக இல்லை.
சல்லிவனின் அடுத்த பயணம்!
மீண்டும் அதே வருடம், மே மாதம் தனது நண்பரான தாவரவியலாளர் லெச்சினால்ட் உடன் சென்றார் சல்லிவன். பயணத்தின் பாதி வழியிலேயே சல்லிவனின் நண்பர் நோய்வாய்ப்பட்டார். உயிர் பிழைப்பாரா என்பதே சந்தேகமாக இருந்தது. 'சரி வந்தது வந்துவிட்டோம்... மேலே போய்ச் சேருவோம்’ என பயணத்தைத் தொடர்ந்தார்கள். திம்மட்டி வந்து சேர்ந்ததும், லெச்சினால்ட்டின் உடல்நிலை சீரானது. அங்கும் இங்குமாக ஓடி, ஆடினார். திம்மட்டியிலேயே பண்டமாற்று முறையில் ஆறு ஏக்கர் நிலத்தை வாங்கி, சிறிய கல் வீடு ஒன்றைக் கட்டினார்கள். அங்கேயே சில காலம் சுற்றித் திரிந்தார்கள். தாங்கள் வாங்கிய நிலத்தில் பரிசோதனை முயற்சியாகப் பல வெளிநாட்டு தாவரங்களைப் பயிர் செய்துபார்த்தார்கள்.
ஊட்டி பிறந்த கதை!
அப்போதைய காலகட்டத்தில் நம் நாட்டின் சீதோஷ்ணம் தாங்க முடியாமலோ, காயம்பட்டோ, இதர காரணங்களாலோ நோய்வாய்ப்பட்ட சிப்பாய்களை சிகிச்சைக்காக, மொரீசியஸ் தீவுக்கு அல்லது தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனுக்கு அனுப்பிவைப்பது வழக்கம். அவர்கள் கப்பல் பயணத்தின்போது பாதி வழியிலேயே மரணிப்பதும் சகஜமான ஒன்று. எனவே, கோவைக்குத் திரும்பியதும், உடல்நிலை சரியில்லாத லெச்சினால்ட்டின் உடல்நிலை, மலை மீது ஏறியதும் அதிசயத்தக்க வகையில் குணமானதைக் குறிப்பிட்டு மீண்டும் மேலிடத்துக்கு கடிதம் எழுதினார் சல்லிவன். 'நோய்வாய்ப்பட்ட சிப்பாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சானட்டோரியம் (நீண்டகால நோய்களுக்கான சிகிச்சை மையம்) அமைக்க சிறந்த இடம் இது’ என்றும் குறிப்பிட்டார். அதற்கும் பாசிட்டிவ்வான பதில் இல்லை.
இந்த நிலையில் அடுத்த ஒன்றரை ஆண்டு காலம் நிர்வாகப் பணி நிமித்தம் சல்லிவன் மதராஸில் இருக்க வேண்டிய சூழல். அப்போது ஹென்ட்ரியேட்டா சிசிலியா என்பவருடன் அவருக்குத் திருமணம் நடந்தது. அதன் பின்னர் மீண்டும் கோவை வந்தார். மீண்டும் சல்லிவனின் நீலகிரி பயணம் ஆரம்பமானது. 1821-ம் ஆண்டு உதகமண்டலம் பகுதியை அடைந்தார் சல்லிவன். மிகப் பெரிய சமவெளிப் பகுதியைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார். உதகமண்டலம் பகுதியில் ஒரு கல் வீட்டைக் கட்டினார். அடுத்து சாலை வசதிகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார். கோத்தகிரி சாலை அமைக்கப்பட்டது. அதனை அடுத்து ஆங்கிலேய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதகமண்டலத்தில்
குடியேறினார்கள். ஜான் சல்லிவனும் பெரும்பாலான நாட்கள் தன் குடும்பத்துடன் உதகமண்டலத்திலேயே வசிக்க ஆரம்பித்தார்.
ஊட்டி ஏரியைக் கட்டியவரும் சல்லிவன்தான்!
சல்லிவன் உதகமண்டலத்துக்கு வந்த பிறகு, விவசாயத்திலும் பல பரிசோதனை முயற்சிகளைச் செய்தார். டீ, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் மூன்றையும் பயிர்செய்யும்படி மக்களை ஊக்கப்படுத்தினார். அது அங்கு குடியேறியுள்ள ஆங்கிலேய மக்களின் தேவைக்கும், உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவும் என்று நம்பினார்.
ஊட்டி பிறந்த கதை!
அப்போது, மழைக்காலங்களில் மலையில் இருந்து கீழே பாயும் நீர் வீணாவதைக் கண்டார். அதனை சேகரிக்கும்விதமாக ஏரி ஒன்றை அமைத்தால் உள்ளூர் மக்களுக்குப் பயன் தருமே என நினைத்தார். அதோடு சீகூர், ஈரோடு போன்ற சமவெளிப் பகுதிகளின் விவசாயத்துக்கும் பயன்படுத்தலாம் என அப்போதைய கவர்னருக்கு ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்தும் அனுப்பினார். 'நீலகிரியில் ஏரி அமைத்து, அங்கு இருந்து சமவெளிக்கு நீர் கொண்டு செல்ல, நிறையப் பணச் செலவு ஏற்படும்’ எனச் சொல்லி, அந்தத் திட்டம் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அழகுடன்கூடிய பயன்பாடு என்ற நோக்கத்தில் ஏரி மட்டும் அமைத்துக்கொள்ள அனுமதி தரப்பட்டது. ஜான் சல்லிவனின் நேரடி மேற்பார்வையில் 1825-ம் ஆண்டு ஏரியின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
கிட்டத்தட்ட 65 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த ஏரி, கால ஓட்டத்தின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கியது. ஏரியின் மேற்பகுதியில் ஊட்டி பஸ் ஸ்டாண்ட், ரேஸ் கோர்ஸ் ஆகியவை உருவாகின. மிச்சமிருக்கும் ஏரிப் பகுதி, 'போட் ஹவுஸ்’ என்ற பெயரில் சுற்றுலாவாசிகளின் பொழுதுபோக்கும் இடமாக விளங்குகிறது.
வந்தது சானட்டோரியம்...
இப்படி நீலகிரியில் படிப்படியான முன்னேற்றங்கள் நடந்துகொண்டிருந்தாலும், 'உதகமண்டலத்தில் சானட்டோரியம் அமைக்க வேண்டும்’ என்ற சல்லிவனின் எண்ணம் மட்டும் அவ்வளவு சுலபத்தில் ஈடேறவில்லை. அதற்கு பலகட்டப் போராட்டங்களும், பல ஆண்டு காத்திருப்பும் தேவைப்பட்டது. தொடர்ந்து மேலிடத்துக்கு கடிதங்கள் எழுதியதன் விளைவாக, 1825-ம் ஆண்டு அப்போதைய கவர்னரான தாமஸ் மன்றோ வந்து சல்லிவன் கட்டிய கல் வீட்டில் தங்கினார். உதகமண்டலம் பகுதியைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார். இரண்டு ஆண்டுகள் கழித்து, கிட்டத்தட்ட தனது மரணத் தருவாயில்தான் சானட்டோரியம் அமைக்க தாமஸ் மன்றோ கையெழுத்து போட்டார். அதன் பின்னரே நீலகிரியில் சாலை வசதிகள் பெருக, ஆங்கிலேய மக்களும் அதிக அளவில் குடியேற, சர்ச்சுகள், பள்ளிகள் கட்டப்பட, முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த... நீலகிரி விறுவிறு வளர்ச்சியைப் பெற்றது.
மனைவியின் மரணமும் மகனின் வருகையும்!
ஜான் சல்லிவனின் மனைவி ஹென்ட்ரியேட்டாவும் மூத்த மகள் ஹேரியேட்டும் மரணம் அடைந்தது ஊட்டியில்தான்.
ஊட்டி பிறந்த கதை!
1820-ல் ஹென்ட்ரியேட்டாவை சல்லிவன் திருமணம் செய்துகொண்ட பிறகு, கோவையில் திருமண வாழ்க்கையைத் தொடங்கினார்கள். அடுத்த வருடமே அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்து, சில மாதங்களிலேயே இறந்துபோனது. அதன் பின்னரே சல்லிவன் உதகமண்டலத்தைக் கண்டறிந்து, அங்கு ஒரு கல் வீடு கட்டினார். பெரும்பாலான நாட்கள் தன் மனைவியுடன் அங்கேயே தங்கினார். அதன் பிறகு அவருக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தன.
1838-ம் ஆண்டு... நீலகிரியில் காசநோயும் மலைக் காய்ச்சலும் பெருமளவில் பரவின. அதற்கு சல்லிவனின் மனைவி ஹென்ட்ரியேட்டாவும், மகள் ஹேரியேட்டும் தப்பவில்லை. இருவருக்கும் கடுமையான காசநோய் ஏற்பட... அப்போது அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத காரணத்தால், அவர்களைக் குணப்படுத்த முடியவில்லை.
சல்லிவனின் மூத்த மகள் ஹேரியேட் 1838-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி இறக்க... அந்தச் சோகம் தீர்வதற்குள் மனைவி ஹென்ட்ரியேட்டா செப்டம்பர் 3-ம் தேதி இறந்தார். அவர்களுக்கு ஊட்டி செயின்ட் ஸ்டீஃபன் சர்ச் பின்புறத்தில் கல்லறைகள் அமைந்திருக்கின்றன. அந்த சர்ச் அவர்களின் இறப்புக்குப் பின்னரே கட்டப்பட்டது. அந்த சர்ச்சில் இவர்கள் நினைவாக கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கிறது.
மனைவியும் மகளும் இறந்துபோன மூன்று ஆண்டுகளில், அதாவது, 1841-ம் ஆண்டு ஜான் சல்லிவன் பணி ஓய்வு பெற்று ஏழு குழந்தைகளுடன் லண்டனுக்குத் திரும்பிச் சென்றார். அங்கே சென்று விட்டாலும், அவரின் எண்ணம் முழுவதும் நீலகிரியைச் சுற்றியே இருந்தது. தனது இறுதிக் காலத்தை நீலகிரியில் கழிக்கவே விருப்பம் தெரிவித்தார். அந்த ஆசை நிறைவேறவில்லை. தனது 66-வது வயதில் லண்டனிலே காலமானார்.
சல்லிவனின் மரணத்துக்கு முன்னரே, அவருடைய மகன் ஹென்றி எட்வர்டு சல்லிவன், கிழக்கிந்திய கம்பெனியில் மதராஸ் பிராந்தியத்தில் பணியில் சேர்ந்தார். 1869-ம் ஆண்டு, தன் தந்தை பணியாற்றிய கோவை மாவட்டத்துக்கே கலெக்டராக பணியமர்த்தப்பட்டார். இப்படி, சல்லிவன் இறந்த பின்பும் அவரின் வாரிசுகள் மூலம் இந்தியாவுடனான பந்தம் தொடர்ந்தது.
ஊட்டி பிறந்த கதை!
நீலகிரியில் கல் வீட்டைக் கட்டி குடியேறிய சல்லிவன், தன்னுடன் தோட்டக்காரர் ஒருவரையும் அழைத்துச் சென்றார். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அவர் பெயர், ஜான்ஸ்டன். அவர்தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தாவரங்கள், நீலகிரி மண்ணில் வளர்கிறதா என்ற பரிசோதனையில் ஈடுபட்டவர். உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் ஆகியவற்றை இங்கு உள்ள மண்ணில் விளைவித்துப்பார்த்தார். ரோஜா வகைகளையும் வளர்த்துப் பார்த்தார். அந்தத் தோட்டக்காரர் ஏற்படுத்திய நம்பிக்கையின் அடிப்படையிலேயே, அவற்றை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்துவைத்தார் சல்லிவன். ஜான் சல்லிவனால் நீலகிரியில் கட்டப்பட்ட கல்வீடு, தற்போது ஊட்டி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இருக்கிறது. அதனை ஒட்டி சல்லிவனால் வளர்க்கப்பட்ட மரம் ஒன்றும் பட்டுப்போன நிலையில் நிற்கிறது.
ஜான் சல்லிவன் முதன்முதலில் கட்டடம் கட்டிய கன்னேரிமுக்கு பகுதியில், அதே இடத்தில் தற்போது ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த நினைவிடம் அமைக்க முயற்சி எடுத்தவர்களில் முக்கியமானவர், தர்மலிங்கம் வேணுகோபால். இவரின் தந்தை தர்மலிங்கம், நீலகிரியில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பணியாற்றியவர். படுகர் இனத்தைச் சேர்ந்த முதல் பத்திரிகையாளர். தந்தை வழியில் பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளில் பொருளாதாரக் கட்டுரைகள் எழுதிவரும் வேணுகோபால், பொதுத்துறை வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நீலகிரி ஆராய்ச்சி மற்றும் ஆவணக் காப்பக மையத்தின் இயக்குநராக இருக்கிறார். ஜான் சல்லிவனின் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்காக தீவிர முயற்சி எடுத்த இவர், அதற்காக லண்டன் வரை பயணம் மேற்கொண்டார்.
.
ஊட்டி பிறந்த கதை!
சல்லிவனின் வரலாறு முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லையே!’ என்ற கவலை பேச்சில் வெளிப்பட்டது. அப்போது அவர், சல்லிவனின் மனைவி மற்றும் மூத்த மகளின் கல்லறைகள் ஊட்டியில்தான் இருக்கிறது என்ற தகவலைச் சொன்னார். ஆங்கிலேய அரசின் பிரதிநிதியாக இருந்தாலும், நமக்காகப் பல திட்டங்களைத் தீட்டி மனைவி, மகளையும் இங்கேயே பறிகொடுத்த சல்லிவனின் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதற்காக, பல இடங்களுக்கும் பயணம் செய்தேன்.
லண்டனில் சல்லிவனின் கொள்ளுப்பேரன் டேவிட் சல்லிவன் இருக்கும் தகவலை அறிந்து, அவரைச் சந்தித்தேன். சல்லிவன் பற்றிய பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார். லண்டன் அப்டவுன் பகுதியில், செயின்ட் லாரன்ஸ் சர்ச்சில் இருந்த சல்லிவனின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினேன். சல்லிவனின் வம்சாவளியைச் சேர்ந்த பலரையும் சந்தித்தேன். அரசாங்கப் பதிவேடுகளில் இருந்தும் பல தகவல்களைப் பெற்றேன். இன்றும் ஜான் சல்லிவனின் வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்தும் என் பயணத்தைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறேன்'' என்கிறார் வேணுகோபால்.
சான் சல்லிவன் (ஜான் சல்லிவன்; John Sullivan) 1815 முதல் 1830 வரை அன்றைய பிரித்தானிய அரசின் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும் இவராலேயே, 1819ம் ஆண்டுவாக்கில் நீலகிரி மாவட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. 1804ம் ஆண்டு சென்னை கிழக்கிந்திய நிறுவனத்தில்யில் சாதாரண எழுத்தராக சேர்ந்த சல்லிவன், தனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து 1839ம் ஆண்டு ஆளுனர் அவை உறுப்பினராக உயர்ந்தார். இயற்கை, சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரின் முயற்சியாலேயே ஊட்டி ஏரி வெட்டப்பட்டது[1]. 1841ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பிய பின், 1855ம் ஆண்டு மரணமடைந்தார்.
இளமைக்காலம்
சல்லிவன் 1788ம் ஆண்டு சூன் 15ம் நாள் இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனில் பிறந்தார். இவரது தந்தை சிட்டீபன் சல்லினன், தஞ்சை நகரில் கிழக்கிந்திய நிறுவனத்தின் சார்பாக பணியாற்றியவர்.[2]. இவரின் முயற்சியால் தஞ்சையை சுற்றி பல ஆங்கில வழி கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. தாயார் பெயர் ஆன் சல்லினன் ஆகும். சான் சல்லினன் அரித்மெடிக் அண்ட் மெர்ச்சன்ட் அக்கௌன்டிங்க் ( Arithmetic and Merchant Accounting ) பிரிவில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார்.
கிழக்கிந்திய நிறுவனப்பணி
சல்லிவன், தனது 15ஆவது வயதில் (ஆகத்து 1803) சென்னை கிழக்கிந்திய நிறுவனத்தில் எழுத்தராக சேர்ந்தார். இதன் பிறகு சிறிது சிறிதாக உயர்ந்த இவர், 1806ம் ஆண்டு தென்னார்க்காடு மாவட்ட நீதிமன்ற பதிவராகவும், 1807ம் ஆண்டு ரகசிய காப்பு, அரசியல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக தலைமை செயலரின் உதவியாளராகவும், 1809ம் ஆண்டு மைசூரில் அமைந்திருந்த இங்கிலாந்து அமைச்சக உதவியாளராகவும், 1814ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், 1815ல் கோவை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு அதே ஆண்டு கோவை மாவட்ட நிரந்தர ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டார்.
நீலகிரி உருவாக்கம்
கோத்தகிரியில் உள்ள நினைவகம்
இதன் பிறகு 1819ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் நாள், பிரான்சு நாட்டை சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலரான சேன் பாபிசுட் லூயிசுடனும் (Jean Baptiste Louis), படகா பழங்குடியின வழிகாட்டியுடனும் உதகமண்டலப் பகுதியை அடைந்தார். சுமார் மூன்று வார காலம் அந்த பகுதியை சுற்றிப்பார்த்த இவர், அங்கேயே ஒரு கல் வீட்டையும் கட்டினார்[1]. நீலகிரியின் முதல் கட்டிடமான இது இன்றளவும் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உள்ளது. இதன் பிறகு இந்தப் பகுதியை கோடை இருப்பிடமாக மாற்ற எண்ணி, இந்த பகுதியில் நிறைய குடியேற்றங்களை உருவாக்கினார். மேலும், மக்கள் எளிதில் இந்தப் பகுதியை அணுகவேண்டி, 1820ஆம் ஆண்டு சிறுமுகையில் இருந்து ஒரு புதிய தரைவழிப் பாதையை ஏற்படுத்தினார். இதன் பிறகு ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பல வகையான மலர்கள், காய்கள், பழம் தரும் மரவகைகளை இறக்குமதி செய்து நீலகிரி மாவட்டத்தில் நட்டார். படகா பழங்குடி இன மக்களின் உயர்வுக்காக மேம்படுத்தப்பட்ட பார்லி விதைகளையும் இறக்குமதி செய்தார். மேலும் ஊட்டி நகரின் நடுவில் ஒரு மிகப்பெரிய ஏரியையும் வெட்டினார். மேலும் மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர்வளத்தை உறுதி செய்தார்.
குடும்பம்
சல்லிவன் கென்ரித்தா என்பவரை 1820ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 1822ம் ஆண்டு காரியட் ஆன் என்ற முதல் பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து மொத்தம் ஒன்பது குழந்தைகள் இவர்களுக்குப் பிறந்தன. இதில் இரண்டு குழந்தைகள் ஊட்டியிலேயே இறந்து விட்டன. மேலும் 1838ம் ஆண்டு கென்ரித்தாவும் ஊட்டியிலேயே இறந்துவிட்டார். இவர்கள் மூவரின் உடல்களும் அங்கேயே புனித சிட்டீபன் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரின் முதல் மகன் கென்றி எட்வர்ட் இவரைப் போலவே கோவை மாவட்ட ஆட்சியராக பின்னாட்களில் (1869ம் ஆண்டு) நியமிக்கப்பட்டார்[2].
இறப்பு
பல கம்பெனி பொறுப்புகளை வகித்த சல்லிவன், 1841ம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு பெற்றுக்கொண்டு இங்கிலாந்துக்குத் திரும்பினார். அங்கு தனது குழந்தைகளுடன் தனது இறுதி நாட்ளைக் கழித்தார். 1855ம் ஆண்டு சனவரி 16ம் நாள் தனது 66ம் வயதில் அங்கேயே இறந்தார். விடுதலை பெற்ற இந்தியாவில், சல்லிவனைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரின் கல்லறையை கண்டுபிடிக்கும் பணி 1999 தொடங்கி 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இறுதியில் சூலை 14, 2009 அன்று, இங்கிலாந்தின் ஈத்ரு விமான நிலையம் அருகில் உள்ள புனித லாரன்சு பேராலயத்தில் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது[3].
.
No comments:
Post a Comment