FLOATING IN SHOPPING -BANGKOK
நம் காஷ்மீர் படகு வீடுகள் உலகப் பிரசித்தி பெற்றவை. ஜீலம் நதியில் படகுகளிலேயே பல்வேறு பொருட்கள் விற்பனையாகும். இந்தப் படகு மார்க்கெட், உலகம் எங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை காந்தம்போல இழுத்தது எல்லாம் ஒரு காலம். இப்போது ஆங்காங்கே தொடர்ந்து எழும் துப்பாக்கிச் சத்தங்களும், தொடர் கலவரங்களும் மகிழ்ச்சியை உருக்குலைக்கின்றன.
ஆனால், வேறு ஒரு நாட்டில், நகரில் இப்படி 'மிதக்கும் கடைத் தெரு’க்களில் பொருட்கள் வாங்கும் அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும்.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இரண்டு, மூன்று முக்கிய 'மிதக்கும் கடைத் தெரு’க்கள் உள்ளன. நாங்கள் சென்றது 'டாம்னோயென் சடெனக்’ மிதக்கும் கடைத் தெரு. இது ரட்சாபுரி என்ற பகுதியில் உள்ளது. இது மிகவும் பழம்பெரும் மிதக்கும் கடைத் தெரு. பாங்காக்கில் இருந்து 100 கி.மீ தூரம் தென்மேற்காகச் செல்ல வேண்டும்.
படகுக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு சிறிது நேரம் காத்திருக்க நேரிட்டது. அப்போது ஆளுக்கு ஓர் இளநீர் கொடுத்தார்கள். அந்த இளநீர் குடிக்கக் குடிக்கத் தீருவதாகவே இல்லை. அளவு, சுவை இரண்டுமே அதிகம்!
பாங்காக்கில் மிதந்தபடி ஷாப்பிங்!
மிதக்கும் கடைத் தெருவை அடைய வேண்டுமானால், சுமார் 20 நிமிடங்கள் படகுப் பயணம் செய்ய வேண்டும். அந்தப் பயணமே மறக்க முடியாததாக இருந்தது. குறுகியும் அகலமுமாக அந்த உப்பங்கழி நீர், படகுக்கு நிறைய ஆட்டங்களைக் கொடுத்து, மனதைக் குதியாட்டம் போடவைத்தது.
போகும் வழியில் சில எளிய வீடுகள் தென்பட்டன. நம் அடுக்ககங்களில் கீழ்ப் பகுதியில் கார்களை நிறுத்த, கீழ்த் தளத்தையே காலியாக விடுவார்கள் இல்லையா... அதுபோல இவற்றில் தண்ணீர் நுழைவதற்கு விட்டிருக்கிறார்கள். அதற்கு மேல்தான் தங்கும் இடங்கள்.
பக்கத்து வீட்டுக்குப் போவதற்குக்கூட 15 நிமிடங்கள் தேவைப்படும். தள்ளித்தள்ளி இருப்பதோடு, படகு கட்டிக்கொண்டுபோக வேண்டுமே! ஏதாவது அவசர மருத்துவ உதவி தேவை என்றால், என்ன செய்வார்கள்? 'இங்கே 108 மிதக்கும் ஆம்புலன்ஸ் வருமா’ என்ற கேள்வி ஒன்று முளைத்தது.
பாங்காக்கில் மிதந்தபடி ஷாப்பிங்!
ஒருவழியாக, மிதக்கும் கடை ஒன்று கண்ணில் பட்டது. இந்த இடத்தில் விற்பனைப் பெண்களின் பணிவையும் புன்னகையையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். யாரையும் வேண்டி வருந்திக் கூப்பிடுவது இல்லை. நாமாகச் சென்றால், விலையைச் சொல்கிறார்கள். ஆங்கிலம் சிக்கல் என்பதால், இவர்களில் கணிசமானவர்கள் கையில் சிலேட்டில் தொகையை எழுதிக் காட்டுகிறார்கள். நாம் வாய்மொழியாகப் பேரம் செய்ய, அவர்கள் சிலேட்டில் கொஞ்சம் கொஞ்சமாக விலையை இறக்கிக்கொண்டு வர... வேடிக்கைதான்!
பாங்காக்கில் மிதந்தபடி ஷாப்பிங்!
படகுகளில் விற்பனையாகும் பழங்களும் காய்கறிகளும் அப்படி ஒரு பசுமை. 'தண்ணீரில் தள்ளாடியபடி சரக்குகள் வாங்குவது’ என்பதற்கு ஆரோக்கியமான அர்த்தம் கிடைக்கிறது. இது மலாகாவில் இருந்து (மலேசியாவின் ஒரு பகுதி) வந்திருக்கும் திராட்சை, இது சீனத் திராட்சை என்று எல்லாம் சொல்லி விற்கிறார்கள். நட்சத்திரப் பழம் என்றும் ஒன்று பிரபலமாக இருக்கிறது. பாங்காக் நகரத்தில் விற்கப்படுவதைவிட இங்கு விலை சற்று அதிகம்தான். எனவே, சாம்பிளுக்கு வாங்கிக்கொண்டு, மிதக்கும் கடைத் தெருக்களைக் கண்களால் பருகிச் செல்பவர்களே அதிகம்.
நடுவில் ஒரு மிகப் பெரிய கட்டடத்தின் அருகே ஒரு படகு நிறுத்தப்பட்டிருந்தது. அங்கே பல பொம்மைகள் விற்பனைக்கு இருந்தன. சிரிக்கும் புத்தர்கள் ஒருபுறம் இருந்தாலும், பழக் கூடையைச் சுமந்தபடி நிற்கும் பெண்ணின் பொம்மை கண்ணைக் கவருவதாக இருந்தது. ஐரோப்பியர்கள் தொப்பிகளை அதிக அளவில் வாங்கிக் கொண்டிருந்தனர். அந்தக் கட்டடத்தின் மற்றொரு பிரிவில் ஒரு தனி வாசனை. கரும்பைக் காய்ச்சி வெல்லப் பாகு செய்வார்கள் அல்லவா, அதுபோல இளநீரைக் காய்ச்சிக்கொண்டிருந்தார்கள். அதில் எழுந்ததுதான் அந்த மணம்.
மிதந்துகொண்டே ஷாப்பிங் செய்வது மறக்க முடியாத அனுபவம்தான் இல்லையா?
.
No comments:
Post a Comment