Monday 10 August 2020

AROOR DASS , MY FAVOURITE DIALOGUE WRITER


AROOR DASS , MY FAVOURITE 
DIALOGUE WRITER


நெஞ்சில் பூத்த பாசமலர்

கற்பனையான சினிமா கதைகளை விட, திரை உலகப் பிரபலங்களின் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தவை. அவற்றை அறிந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஆரூர்தாஸ்.தன் திரை உலகப் பயணத்தை எழுதும் அவர், சினிமாவின் மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.ஆரூர்தாஸ் வசனம் எழுதிய முக்கிய படங்களாவன:–

சிவாஜிகணேசன் நடித்தவை: பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ மகன், பைலட் பிரேம்நாத், நான் வாழவைப்பேன்,விஸ்வரூபம், தியாகி,விடுதலை, குடும் பம் ஒரு கோவில்,பந்தம்,அன்புள்ள அப்பா.

எம்.ஜி.ஆர். நடித்தவை: தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், அன்பே வா, குடும்பத்தலைவன், நீதிக்குப்பின்பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், ஆசைமுகம், பெற்றால்தான் பிள்ளையா?

ஜெமினிகணேசன் நடித்தவை: வாழவைத்த தெய்வம், சவுபாக்கியவதி, பாசமலர், பார்த் தால் பசி தீரும், திருமகள், பெண் என்றால் பெண்.
இதர படங்கள்: வெள்ளிக்கிழமை விரதம், பத்ரகாளி, இதய கமலம், மகுடம் காத்த மங்கை.

‘டப்பிங்’ படங்கள்:
பூ ஒன்று புயலானது,
இதுதான்டா போலீஸ்,
வைஜயந்தி ஐ.பி.எஸ்,
மை டியர் குட்டிச்சாத்தான்,
அம்மன்,
ஸ்ரீராமபக்த அனுமான்,
ஜிம்போ,
நாட்டியதாரா.

1. நெஞ்சில் பூத்த பாசமலர்

என் சினிமா வாழ்க்கையில், 1960–ம் ஆண்டு ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு முதன் முதலாக ‘‘பாச மலர்’’ படத்திற்கு வசனம் எழுதினேன். அது என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.‘‘பாசமலர்’’ வெற்றியினால், சிவாஜியின் 28 படங்களுக்கு வசனம் எழுதினேன். வேறு எந்த ஒரு கதை – வசன கர்த்தாவுக்கும், சிவாஜியின் இத்தனை படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.இன்றளவுக்கும் என் பெயருக்கு புகழ் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் படம், பசுமையான ‘‘பாசமலர்’’ படம்தான்.

இந்தப் பாசமலரைப் பறிப்பதற்கு நான் அதைத் தேடிச்செல்லவில்லை. அதுவாக வலிய என்னை நாடி வந்தது. நான் அதைப் பறித்துக்கொண்டேன். தரித்துக் கொண்டேன். அந்தச் சுவையான கதையை இங்கு சொல்கிறேன்.



1958–59களில் நான் தேவர் பிலிம்சின் ‘‘வாழ வைத்த தெய்வம்’’ படத்திற்கு முதன் முறையாக கதை – வசனம் எழுதி, அதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்ததைத் தொடர்ந்து, என்னை எப்படியாவது சிவாஜிகணேசன் நடிக்கும் படங்களுக்கு எழுதச் செய்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் சேர்ந்து திட்டமிட்டு அதில் முனைப்பாக இருந்தனர். என் அதிர்ஷ்டமும், யோகமும் அவர்கள் இருவருடைய வடிவங்களாக வந்தன! ‘‘பதிபக்தி’’, ‘‘பாகப்பிரிவினை’’ ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் தொடர்ந்து சிவாஜி நடிக்கும் படங்களை இயக்கிப் புகழேணியில் ஏறிக்கொண்டிருந்த டைரக்டர் ஏ.பீம்சிங்கிடம் என்னைப்பற்றி சாவித்திரியும், சிவாஜியிடம் ஜெமினியும் பரிந்துரைத்து, என்னை எழுத வைக்கவேண்டும் என்று ஏற்பாடு.அந்தச் சமயத்தில்தான் ‘‘பாசமலர்’’ படத்தில் நடிப்பதற்கு ஜெமினியும் சாவித்திரியும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சாவித்திரி பீம்சிங்கிடம் என்னைப்பற்றிக்கூறி, ‘‘குடும்பக் கதைகளுக்கு அவர் மிக நன்றாக வசனம் எழுதுவார். அவரையே ‘பாசமலர்’ படத்திற்கு எழுதச் சொன்னால் நன்றாக இருக்கும்’’ என்று கூற, அதற்கு அவர், ‘‘நீங்கள் சொன்னால் அது சரியா இருக்கும். எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை. சிவாஜி ஒப்புக்கொள்ளணும். அவ்வளவுதான்’’ என்று சொல்லிவிட்டார்.
படம்
‘‘அதை சிவாஜிகிட்டே அவர் (ஜெமினி) சொல்லிக்குவாரு’’ என்றார் சாவித்திரி.

1959–ம் ஆண்டில் ஒருநாள். அன்றைக்கு ஜெமினிக்கும் சாவித்திரிக்கும் ஷூட்டிங் இல்லை. அதனால் நான் சாவித்திரி வீட்டிற்குச் சென்றேன். மூவரும் டிபன் சாப்பிட்டு முடித்து ‘கேரம்’ ஆடத் தொடங்கினோம். சாவித்திரி ஜெமினியைக் கேட்டார்:–
‘‘என்னங்க? பாசமலர் டயலாக் விஷயம் சிவாஜிகிட்டே சொல்லிட்டீங்களா?’’

ஜெமினி:– சொன்னேன். ‘புதுப்பையன்னு சொல்றே. பார்க்கலாம்’னு இழுக்குறான். அதோட (என்னைக்காட்டி) இவன் வேற சிவாஜிகிட்டே வரமாட்டேங்குறான்.

சாவித்திரி (என்னிடம்):– ‘‘ஏன் போகமாட்டேங்குறீங்க?’’

நான்:– ‘‘அண்ணி! அது பெரிய யூனிட்! நான் புதுசு. சிவாஜி என்னை ஏதாவது குறைவா பேசிட்டார்னா, அதைக்கேட்டு நான் பொறுக்கமாட்டேன். பதிலுக்கு ஏதாவது சூடா சொல்லிடுவேன். என்னைப்பத்தி ஒனக்கு நல்லா தெரியும். வீண் வம்பு எதுக்கு? வேண்டாம். எனக்கு தேவர் பிலிம்ஸ் இருக்கு. டப்பிங் படங்கள் இருக்கு. அது போதும்.’’

சாவித்திரி:– அதெல்லாம் சிவாஜி ஒண்ணும் சொல்லமாட்டாரு. அப்படிப் பாத்தா எப்படி முன்னேற முடியும்? நான் சொல்றதைக் கேளுங்கள். பேசாம இவரோட போங்க. கால்ஷீட்டெல்லாம் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. திடீர்னு வேற ஒரு ரைட்டரை ‘பிக்ஸ்’ பண்ணிட்டாங்கன்னா, எங்க முயற்சி வீணாப்போயிடும். (ஜெமினியிடம்) இதோ பாருங்க. சிவாஜி எங்கே இருக்கார்னு தெரிஞ்சிக்கிட்டு, இவரை அழைச்சிக்கிட்டுப்போயி அறிமுகப்படுத்தி ‘பிக்ஸ்’ பண்ணிடுங்க. இப்பவே ரொம்ப லேட்டு. வளத்தாதிங்க.

ஜெமினி:– ‘‘சரி. இப்போ ஷூட்டிங்ல இருந்தாலும் இருப்பான். பேசமுடியாது. பன்னெண்டு மணிக்கு மேல ‘லஞ்ச்’ டயத்துக்கு முன்னால அழைச்சிக்கிட்டுப் போறேன்.’’
நான்:– ‘‘அண்ணே! அவசியமா? வேண்டாமே!’’

ஜெமினி:– நீ சும்மாருப்பா. நான் பாத்துக்குறேன்.’’

ஜெமினி, சிவாஜி பிலிம்சுக்கு போன் பண்ணி அவர் அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோவில் இருப்பதாக அறிந்து கொண்டார்.

மதியவேளை! வலுக்கட்டாயமாக ஜெமினி என் கையைப்பிடித்து இழுத்துச்சென்று அவர் காரின் முன்சீட்டில் தள்ளி உட்கார வைத்து அவரே ஓட்டிக்கொண்டு போனார்.அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோ! குறிப்பிட்ட ஒரு மேக்–அப் அறை! கதவைத் தட்டிவிட்டு ஜெமினி உள்ளே சென்றார். நான் அவரைப் பின்தொடர்ந்தேன்.

சிவாஜி சாப்பிட்டு முடித்த நிலையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். அன்றைக்குத்தான் நடிகர் திலகத்தை நான் நேருக்கு நேராகப் பார்த்தேன். என் மனதிற்குள் மகிழ்ச்சி மலர்ந்தது!
சிவாஜி ஜெமினியைப் பார்த்து, ‘‘வாடா’’ என்று வரவேற்றார்.
(சிவாஜியைவிட ஜெமினி எட்டு வயது மூத்தவர். ஜெமினி பிறந்தது 1920–ல். சிவாஜி 1928. ஆனாலும் அவர் ஜெமினியை ஒருமையில்தான் அழைப்பார்.)

சிவாஜி:– (என்னைப்பார்த்து அலட்சியமாக) இவன் யாரு?
ஜெமினி:– அதாம்பா. ஏற்கனவே ஒங்கிட்டே சொன்னேன் பாரு – ஆரூர்தாஸ். இவன்தான்.
சிவாஜி (என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு):– ‘‘ஆரூர்தாஸ்! ஆரூர்னா....’’
நான்:– ‘‘திருவாரூர்.’’
சிவாஜி:– அட! நம்ம ஜில்லாக்காரன்! சினிமாவுக்குப் புதுசா வந்திருக்கே போலிருக்கு. இப்போ தேவர் பிலிம்சுக்கு எழுதுறதாவும், குடும்பக்கதைகளுக்கு நல்லா வசனம் எழுதுவேன்னும் இவன் சொன்னான். சாவித்திரியும் சொன்னதா பீம்சிங் சொன்னாரு.

அப்பா ஆரூரான்! இது ரொம்ப பெரிய படம். நான், இவன், சாவித்திரி நடிக்கிறோம். பீம்சிங் டைரக்ட் பண்றாரு. கண்ணதாசன் பாட்டு. விஸ்வநாதன் ராமமூர்த்தி மியூசிக். எல்லாம் பெரிய செட்டு! நீ சின்னப்பையன். தாங்குவியா?’’

(‘தாங்குவியா’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அவர் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டால் என்னைச் சுட்டதுபோல ‘சுளீர்’ என்றது.)

நான் அவருக்குச் சொன்னேன்:– ‘‘அண்ணே! மடல் பெரிது தாழை. மகிழ் இனிது கந்தம். உடல் சிறியர் என்றிருக்க வேண்டாம். கடல் பெரிது மண்ணீருமாகா – அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும்.’’
சிவாஜி:– ‘‘இதுக்கு என்னா அர்த்தம்?’’
நான்:– ‘‘மடல் பெரிது தாழை – தாழம்பூவோட மடல் பெரிசா இருக்கும். பெண்கள் ஜடையோட சேர்த்து வைச்சிப் பின்னிக்குவாங்க. அடுத்த நாளே அது வாடி வதங்கிப் போயிடும். எடுத்து எறிஞ்சிடுவாங்க. மகிழ் இனிது கந்தம் – மகிழம்பூ பாக்குறதுக்கு சின்னதா இருக்கும். பெண்கள் ஊசி நூல்ல கோர்த்து தலையிலே வச்சிக்குவாங்க, சாமி படத்துக்குப் போடுவாங்க... அது வாடிப்போனாலும் வாசனை போகாது.

கடல் பார்க்கிறதுக்குப் பெரிசா இருக்கும். ஆனால் உப்புத்தண்ணி. அதைக்குடிக்க முடியாது. அந்தக் கடலுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன ஊத்து தோண்டினால் அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம். இன்னொண்ணு சொல்றேன்.’’
சிவாஜி:– ‘‘சொல்லு.’’
நான்:– ‘‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும். உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.’’
சிவாஜி:– ‘‘இது என்னா?’’
நான்:– ‘‘திருக்குறள்!’’
சிவாஜி:– ‘‘என்னா சொல்றாரு உன் திருவள்ளுவரு?’’
நான்:– ‘‘ஒருவருடைய உருவத்தைப் பார்த்து அவரை இகழாமல் இருக்கணும். ஏன்னா உருள்கின்ற பெரிய தேருக்கு சின்ன அச்சாணி காரணமா இருக்கிறது மாதிரியானவுங்களும் உண்டு. இன்னொரு குறள் சொல்லட்டுமா?’’

சிவாஜி:– ‘‘சொல்லு.’’
நான்:– ‘‘கொக் கொக்க கூம்பும் பருவத்து. மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து.’’
சிவாஜி:– ‘‘அப்படின்னா?’’
நான்:– ‘‘கூம்பி, அதாவது ஒடுங்கிப்போய் இருக்கிற காலத்துல கொக்கு மாதிரி காத்திருக்கணும். நல்ல காலம் வரும்போது அந்தக் கொக்கு மீனைக் குத்துறது மாதிரி விரைந்து செயல்படணும். நான் அந்தக் கொக்கு மாதிரி இப்போ சந்தர்ப்பத்துக்காக காத்துக்கிட்டிருக்கேன். அது வரும்போது குத்தி எடுத்திடுவேன்.’’
சிவாஜி:– ‘‘நல்லா படிச்சிருக்க போலிருக்கு.’’
நான்:– ‘‘நிறைய படிச்சிருக்கேன். நான் தடுக்கி விழுந்து வசனகர்த்தாவாகலே; தமிழ் படிச்சிட்டு வந்திருக்கேன். தஞ்சை கரந்தை தமிழ்க் கல்லூரியில் படிச்சு புலவர் பட்டம் வாங்கி, தமிழாசிரியரா போகவேண்டியவன் தவறிப்போய் தலைவிதி காரணமாக சினிமாவுக்கு வந்திட்டேன். கும்பகோணத்துக்குப் போகவேண்டிய நான் திசை மாறி கோடம்பாக்கத்துல வந்து விழுந்திட்டேன்.
(இதைக்கேட்டு சிவாஜி ஒரு சிறு சிரிப்பு சிரித்தார்).

கடைசியாக உங்களுக்கு ஒண்ணு சொல்லட்டுமா?’’
சிவாஜி:– ‘‘சொல்லு. நீதான் சொல்லிக்கிட்டிருக்கே. நான் கேட்டுக்கிட்டிருக்கேன். நல்லாருக்கு. சொல்லு.’’

நான்:– ‘‘நான் பி.யு.சின்னப்பாவோட தீவிர ரசிகன். சின்ன வயசுல – மாணவப் பருவத்துல அவரோட நடிப்பையும், வசன உச்சரிப்பிலேயும் என் மனதைப் பறிகொடுத்தவன். சின்னப்பா செந்தமிழ் நாடக மன்றம் என்கிற பேரில் என் நண்பர்களைச் சேர்த்து நாடகம் நடத்தி இருக்கிறேன்.

அவர் நடித்த ‘‘கண்ணகி’’ படத்தை அவருடைய நடிப்புக்காகவும், இளங்கோவனுடைய அழகான வசனத்துக்காகவும் பல தடவை பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன்.அந்தப் படத்தில் இருக்கிற இருபத்திரெண்டு பாட்டுகளும் மொத்த வசனமும் எனக்கு மனப்பாடம். இப்போ கேட்டாலும் சொல்லுவேன். இன்றைக்கு அதுபோல் அழகாக வசனம் பேசுவது நீங்கதான். உங்க வசன உச்சரிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். முனைமுறியாமல் கடைசி எழுத்து தேஞ்சி கீழே விழாமல் தெளிவாக பேசுவீங்க.நீங்க சொன்ன மாதிரி இது பெரிய செட்டுன்னு எனக்கு முந்தியே தெரியும். அந்தப்பயம் எனக்கு இல்லை. உங்களுக்கு எழுத ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா ஒரு அடி அடிச்சுக் காட்டுவேன். இது உறுதி. பரவாயில்லே. சந்தர்ப்பம் வரும்போது சந்திக்கிறேன். இப்போ உங்களைச் சந்தித்ததில் சந்தோஷம். வர்றேன்’’ என்று சொல்லிமுடித்து, அடி எடுத்து வைத்து நகர இருந்த என்னைத் தடுத்தபடி சிவாஜி என் கையைப் பிடித்துக்கொண்டார்.மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ‘டென்ஷன்’ ஆகிவிட்ட அவர், சிகரெட்டை டிரேயில் திணித்து விட்டு ஜெமினியிடம் சொன்னார்.:

சிவாஜி:– ‘‘கணேசா! இவன் என்னடா என்னென்னமோ சொல்றான். இவன் சொல்லச்சொல்ல எனக்கு பழைய ஞாபகம் வந்திடுச்சி. அன்னிக்கு ‘‘பராசக்தி’’ படத்தில் இருந்து என்னைத் தூக்கிட்டு, எனக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியை வச்சு நான் நடித்திருந்த சீன்களை எல்லாம் மறுபடியும் ஷூட் பண்ண முயற்சி நடக்கிறதாக கேள்விப்பட்டு நான் கண்ணீர் விட்டேன்.
‘இந்தச் சந்தர்ப்பத்தை விட்டா இனி வாழ்நாள் முழுவதும் சாதாரண நடிகனாகவே இருந்து சாகவேண்டியதுதான். நடக்கிறது நடக்கட்டும். என்ன ஆனாலும் சரி. ஒரு அடி அடிச்சிக்காட்டணும்’னு என் மனதுக்குள்ளே முடிவு பண்ணிட்டேன்.

அன்னிக்கு எனக்கு ஒரு வெறி வந்திடுச்சு. அந்த வெறியை இப்போது இவன்கிட்டே பார்க்கிறேன்.

இவன் ஒரு ‘பாசமலர்’ இல்லை, பத்து ‘பாசமலர்’ எழுதுவான். அந்த அளவுக்கு இவன்கிட்டே சரக்கு இருக்கு. இவனை நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன். நீ இவனைப் பத்தி சொன்னது சரிதான். பின்னிடுவான்.

நீ இப்பவே இவனை சிவாஜி பிலிம்சுக்கு அழைச்சிக்கிட்டுப் போயி தம்பி ஷண்முகத்துகிட்டே அறிமுகம் பண்ணி வச்சிட்டு, அட்வான்ஸ் வாங்கிக்கொடு. அதுக்குள்ளே நான் அவனுக்குப் போன் பண்ணி சொல்லிவிடுகிறேன். டைரக்டர்கிட்டேயும் சொல்றேன். ராஜாமணி பிக்சர்ஸ் மோகன், சந்தானம் அண்ணேகிட்டே நீ சொல்லிடு’’ என்றார். இதைக்கேட்டுக் கண் கலங்கிய நான், ‘‘நன்றி’’ என்று கரம் கூப்பினேன்.
சிவாஜி தொடர்ந்தார்:– ‘‘இப்போ நீ சொன்னே பாரு, அடிச்சிக்காட்டுவேன்னு. அடிச்சிக்காட்டவேண்டாம். எழுதிக்காட்டு. அதுபோதும். ‘‘ஆல் த பெஸ்ட்’’ என்று கை குலுக்கினார்.

ஜெமினி என்னை சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். ஷண்முகத்தின் அறை! அப்போதுதான் தம்பி ஷண்முகம் சிவாஜியுடன் பேசிவிட்டு போன் ரிஸீவரை வைத்தார்.
ஜெமினியைப் பார்த்து ‘‘வாங்கண்ணே! இப்போதான் அண்ணன் சொன்னாரு. ரொம்ப சந்தோஷம்’’ என்று என் கையைப் பற்றிக் குலுக்கினார்.
‘சீனிவாசன்’ என்று கூப்பிட்டார். அவர் வந்தார். அவரிடம் ஆள்காட்டி விரலைக் காட்டினார். அவர் சிவாஜி பிலிம்ஸ் நிர்வாகி என்று பிறகு தெரிந்து கொண்டேன்.என்னைப்பார்த்து ஷண்முகம், ‘‘நீங்க திருவாரூரா?’’ என்றார். ‘‘ஆமா’’ என்றேன். சீனிவாசன் ஒரு கவரைக் கொண்டுவந்து ஷண்முகத்திடம் நீட்டினார். அவர் அதை வாங்கி என்னிடம் கொடுத்து ‘‘நல்லா எழுதுங்க. இது ரொம்ப பெரிய படம். ஆல் த பெஸ்ட்’’ என்றார். ‘‘வித் யுவர் விஷ்ஷஸ். தேங்க்யூ’’ என்றேன். பொறுக்க முடியாத பசியுடன் புறப்பட்டோம்.
.

No comments:

Post a Comment