Monday 10 August 2020

LAST METER GAUGE TRAIN





LAST METER GAUGE TRAIN

நினைவுகள்: 
மீட்டர்கேஜ் பாதையின் கடைசி ரயில்
சு.குமரேசன்

சிவாஜி குமாரின் ரயில் பயணங்கள்

.

106 வருடப் பழைமைகொண்டது புனலூர் - செங்கோட்டை ரயில்வே தடம். மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகல ரயில் பாதையாகத் தற்போதுதான் மாற்றப்பட்டிருக்கிறது. இயற்கை அழகு ததும்பி நிற்கும் இதன் மீட்டர்கேஜ் பாதையில் பயணித்த ரயிலை, தனி ஒருவராக ஓராண்டுக்காலமாக விதவிதமாகத் தன் கேமராக் கண்களால் புடைப்படம் எடுத்திருக்கிறார், கேரளாவைச் சேர்ந்த சிவாஜி குமார். கேரளாவிலுள்ள ஒரு பத்திரிகையில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றும் இவர், மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகை ரயிலோடு தொடர்புபடுத்தி அற்புதமாக ஆவணப் படுத்திருக்கிறார் இந்தக் கலைஞர்.

நினைவுகள்: மீட்டர்கேஜ் பாதையின் கடைசி ரயில்
`கடைசி ரயிலைப் பிடிப்பதற்காக...' என்ற தலைப்பில், மீட்டர்கேஜில் பயணித்த ரயிலின் புகைப்படத் தொகுப்பைக் கண்காட்சியாக மக்கள் பார்வைக்கு வைத்துவருகிறார் சிவாஜி குமார்.



சிவாஜி குமார்

``புனலூர் - செங்கோட்டை ரயில் பாதையைப் படம்பிடிப்பதில் என்ன இருக்கிறது?’’ என்ற கேள்வியோடு சிவாஜி குமாரைச் சந்தித்தோம். ``தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலத்துக்கு மூன்று ரயில் தடங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் அழகியலோடு கட்டப் பட்டது கொல்லம்- செங்கோட்டை ரயில் பாதை. அதில், கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு செல்லும் வழியும், நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியும் ஏற்கெனவே அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுவிட்டன. மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட பாதை, மலைகளை இணைத்துச் செல்லும் பாலங்கள் என இந்த ரயில்பாதை, பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். 1873-ம் ஆண்டு, செங்கோட்டை முதல் புனலூருக்கு 49.38 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. 28 ஆண்டுகளுக்குப் பிறகு 1901-ம் ஆண்டில் இந்த ரயில் பாதைப் பணிகள் முடிந்தன. 1904-ம் ஆண்டில் கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டைக்கு முதல் பயணிகள் ரயில், புனலூர் வழியாக 21 குண்டுகள் முழங்க இயக்கப்பட்டது. செங்கோட்டை - புனலூருக்கு இடையிலான 49.38 கி.மீ தூரத்தில் 13 கி.மீ தமிழகப்பகுதியிலும் 36.38 கி.மீ கேரளப்பகுதியிலும் உள்ளது. ஐந்து குகைகள், 23 பெரிய பாலங்கள், 178 சிறிய பாலங்கள் கொண்டதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது இந்தப் பாதை. இந்த 49.38 தூர ரயில் பாதையில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமாக வளைவுகள் இருக்கின்றன. இவற்றில் 52 வளைவுகள் 10 டிகிரியிலும், 5 வளைவுகள் 12.3 டிகிரியாவும் உள்ளது. எனவே, 30 - 40 கி.மீ வேகத்தில்தான் ரயில்கள் செல்லும்'' என்றவர், அவருக்கும் இந்த ரயில் பாதைக்குமான தொடர்பை ஆர்வமாக விவரிக்க ஆரம்பித்தார்.

நினைவுகள்: மீட்டர்கேஜ் பாதையின் கடைசி ரயில்
``சிறு வயதில் திருவனந்தபுரத்திலிருந்து குற்றாலம் செல்வதற்காக இந்த ரயில் பாதையில் பயணித்திருக்கிறேன். அதன் பிறகு பயணித்த தில்லை. மீட்டர்கேஜாக இருந்த பாதையை அகல ரயில் பாதையாக மாற்றவிருப்பதாகச் செய்தியில் படித்தேன். அப்படியென்றால், பல நாள்களுக்கு ரயில் பயணம் தடைப்படும், அதற்கு முன்னர் மீண்டும் ஒருமுறை இந்த ரயில் பாதையில் பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். திருவனந்தபுரத்திலிருந்து டூ வீலரில் புனலூருக்கு நண்பருடன் கிளம்பினேன். 2009-ம் ஆண்டில் புனலூரிலிருந்து செங்கோட்டை வரை செல்ல ஒன்பது ரூபாய்தான் டிக்கெட். ரயிலுக்குள்ளிருந்து நிறைய படங்கள் எடுத்தேன். அழகான மலைத்தொடர்கள், நீரூற்றுகள் என விதவிதமாக எடுத்தேன். மனதுக்கு நிறைவைத்தந்த பயணம் அது. சில மாதங்களுக்குப் பிறகு, ரயிலுக்குள்ளிருந்து எடுத்த புகைப்படங்களைப் பார்த்தேன். அவ்வளவு அழகாக இருந்தன. நூறு வருடப் பழைமைகொண்ட பாதையில் ஓடும் ரயிலை இன்னும் படமெடுக்க நினைத்தேன். விடுமுறை நாள்களில் திருவனந்தபுரத்திலிருந்து தென்மலைக்கு டூவீலரில் வருவேன். அங்கிருந்து ரயிலில் செல்வேன். தினமும் 250 கி.மீட்டருக்கும் அதிகமான பயண தூரம். ஆனால் ஒரு நாளும் அலுப்பு ஏற்பட்டதில்லை. வெறும் அழகியல் மட்டும் போதாது; பயணிகளையும் ரயில்வே ஊழியர்களையும் மையமாகவைத்துப் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காகப் பிரத்யேகமாக ஃப்ரேம் வைத்துப் புகைப்படங்கள் எடுத்தேன். மழைநாளில் இந்த ரயிலைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக செங்கோட்டையிலிருந்து பகவதிபுரம் வரை நடந்தே சென்றிருக்கிறேன். ஒரு வருடத்துக்கும் மேல் இந்த ரயிலையும், ரயில் பாதையையும் என்னால் முடிந்தவரை படமெடுத்தேன்.

நினைவுகள்: மீட்டர்கேஜ் பாதையின் கடைசி ரயில்
2010, ஜனவரி மாதம் மீட்டர்கேஜ் பாதையில் இந்த ரயிலின் கடைசிப் பயணத்தை வழியனுப்ப ஆயிரக்கணக்கான மக்கள் புனலூருக்கு வந்திருந்தார்கள். அது, என்னால் மறக்கவே முடியாத தினம். அந்த ஒரு வருடத்தில் நான் எடுத்த புகைப்படங்களை, மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ச்சியாகக் கண்காட்சி நடத்திவருகிறேன். தற்போது, பல ஆண்டுகளுக்குப் பிறகு, அகல ரயில்பாதை பல மாற்றங்களோடு முழுமையடைந்திருக்கிறது. இப்போது இந்த அகல ரயில் பாதையில் பயணித்தாலும், மனம் என்னவோ அந்த மீட்டர்கேஜ் பாதையின் நினைவுகளையே மீண்டும் மீண்டும் நாடுகிறது'' என்கிறார் சிவாஜி குமார்.

படங்கள்: சிவாஜி குமார்

No comments:

Post a Comment