1911 MARCH 11 DELHI DURBAR
.தர்பார் என்பது பெர்சிய மொழிச் சொல். அரசவை என்று சொல்லலாம். தர்பாரை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் முகலாயர்கள். மாபெரும் சபைதனில் முகலாயப் பேரரசர் தலைமையில் கூடுவார்கள். தர்பாருக்கான நிகழ்ச்சி நிரலில், பேரரசரைப் புகழ்ச்சியால் சொறிந்துவிடும் உரைகள் பிரதானமானவை(அந்தப் பாரம்பர்யமே இன்றைக்குச் சட்டசபை வரை தொடருகிறது). தர்பார் நிகழ்வுகளைக் கண்டுகளிக்கப் பிற ராஜ்யங்களின் / தேசங்களின் விருந்தினர்கள் வருவதும் வாடிக்கை. விருந்தினர்கள் பேரரசருக்குப் பரிசுகள் அளிப்பதும், பதிலுக்குப் பேரரசர் விருந்தினரைப் பரிசுகளால் குளிப்பாட்டித் தன் செல்வாக்கை நிரூபிப்பதும் வழக்கம். ஏதாவது மகிழ்ச்சியான தருணம் என்றால், கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடுவார்கள். வியாபார விஷயங்களைப் பேசுவார்கள். எப்போதாவது தர்பாரில் மக்கள் நலத் திட்டங்கள்கூட அறிவிக்கப்படுவதுண்டு.
டெல்லி தர்பார்
காலனி ஆதிக்க இந்தியாவில் மூன்று முறை டெல்லியில் தர்பார் கூட்டப்பட்டது. ‘நாங்களே உங்களை ஆட்சி செய்கிறோம். நீங்கள் அனைவருமே எங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்’ என்று பிரகடனப்படுத்தும்விதமாக, பிரிட்டிஷார் இந்த தர்பார்களை வெவ்வேறு தருணங்களில் நடத்தினார்கள். நாங்களும் இந்தியர்களுக்கு, அவர்களது கலாசாரத்துக்கு நெருக்கமானவர்களே என்று காட்டிக்கொள்ளும் தந்திரமும் இதில் உண்டு.
1877 ஜனவரி 1 அன்று, பிரிட்டிஷாரின் முதல் இந்திய தர்பார் டெல்லியில் கூடியது. அதுவரை கிழக்கிந்திய கம்பெனியின் கையில் இருந்த அதிகாரம், பேரரசி விக்டோரியாவுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா அறிவிக்கப்பட்ட அந்த தர்பாரில், பல மகாராஜாக்களும் சில ராஜாக்களும் கலந்து கொண்டார்கள். ஆனால், விக்டோரியா கலந்துகொள்ளவில்லை. அப்போதைய இந்திய வைஸ்ராயான லிட்டன், தர்பாருக்குத் தலைமை தாங்கினார்.
டெல்லி தர்பார்
விக்டோரியாவிடமிருந்து வந்த ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. ‘எங்கள் ஆட்சியின்கீழ் நீங்கள் சுதந்தரம், சமத்துவம், நீதி மற்றும் பாதுகாப்பை உணரலாம். மக்களின் மகிழ்ச்சியைப் பெருக்குவதும், செழிப்பை அதிகரிப்பதும், முன்னேற்றத்தை ஊக்குவிப்பதுமே எங்கள் சாம்ராஜ்யத்தின் முக்கியக் குறிக்கோள்!’
இந்த தர்பாருக்கென ஏகப்பட்ட பணம் அநாவசியமாகச் செலவு செய்யப்பட்டது.
1876-78 காலகட்டத்தில் தென்னிந்தியா கடும் பஞ்சத்தில் சிக்கிக்கொண்டது. சென்னை மாகாணப் பெரும் பஞ்சம் அல்லது தாது வருடப் பஞ்சம் என்றழைக்கப்பட்ட இதன் விளைவாக, சுமார் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி இந்தியர்கள் வரை இறந்துபோனார்கள். இப்படியாக குயின் விக்டோரியாவின் ஆட்சி இங்கே நிர்வாகப் படுதோல்வியுடன் `அமோகமாக’ ஆரம்பமானது.
1903-ன் ஆரம்பத்தில் வைஸ்ராய் கர்ஸன், இரண்டாவது டெல்லி தர்பாரை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கிங் ஆக ஏழாம் எட்வர்டும், குயினாக அலெக்ஸாண்ட்ராவும் பதவி ஏற்றிருந்தார்கள். அவர்களை டெல்லிக்கு வரவழைத்து இங்கொரு பதவியேற்பு விழா நடத்த வேண்டுமென்பது கர்ஸனின் திட்டம்.
எல்லா மகாராஜாக்களுக்கும் கர்ஸனிடமிருந்து ஒரு கடிதம் சென்றது. கட்டளை என்றே சொல்லலாம். ‘அருமை மகாராஜாக்களே, தர்பாரில் ஊர்வலம் உண்டு. அதில் நீங்கள் எல்லோரும் அம்சமாக யானைமீது ஏறி வர வேண்டும். உங்களிடம் யானை இல்லை என்று காரணம் சொல்லக் கூடாது. யாரிடமாவது ஒரு யானையைக் கடன் வாங்கிக்கொண்டாவது வந்து சேருங்கள்.’
பல மகாராஜாக்கள் ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஜால்ரா பதில் அனுப்பினார்கள். ஆனால், பரோடா சமஸ்தானத்தின் மகாராஜா சாயாஜி ராவுக்கு அதில் விருப்பமில்லை. அவர் மானஸ்தர். முதுகெலும்புடன் வாழ்ந்த இந்தியாவின் அரிய மகாராஜாக்களுள் முதன்மையானவர். ‘யானைமேல் உட்கார்ந்து ஊர்வலம் வருவதற்கெல்லாம் என் உடல்நிலை ஒத்துழைக்காது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றொரு கடிதத்தைத் தன்மையுடன் அனுப்பிவைத்தார். அந்தக் கடிதம் பரோடா சமஸ்தானத்தின் ரெஸிடென்ட் (பிரிட்டிஷ் பிரதிநிதி) மூலமாக கர்ஸனைச் சென்றடைந்தது.
டெல்லி தர்பார்
கர்ஸனுக்குக் கடுப்பு. எப்படியாவது சாயாஜி ராவின் மூக்கை உடைக்க வேண்டும் என்று நினைத்தார். இன்னொரு கடிதத்தை அனுப்பினார். ‘தர்பாரில் கலந்துகொள்ளும் தங்கள் சமஸ்தானப் படைவீரர்களின் சிவப்பு நிறச் சீருடையை நீலமாக மாற்றிக்கொள்ளுங்கள். ஏனென்றால், வைஸ்ராய்க்குரிய பாதுகாவலர்களின் சீருடையும் சிவப்புதான்.’
கர்ஸன் வேண்டுமென்றே படுத்துகிறார் என்று சாயாஜி ராவுக்குத் தெளிவாகப் புரிந்துபோனது. அவர் கர்ஸனுக்கு இப்படி ஒரு பதிலை அனுப்பினார். ‘நான் தர்பாரில் கலந்து கொள்கிறேன். சொந்த விருப்பத்தினால் அல்ல. கலந்துகொள்ளாவிட்டால், அவமரியாதை செய்துவிட்டதாக நினைப்பீர்கள். அந்தச் சங்கடத்தைத் தவிர்ப்பதற்காகத்தான். என் வளர்ப்புத் தாய் ஜம்னா பாய் சமீபத்தில் இறந்துவிட்டார்கள். சமஸ்தானத்தில் துக்கம் அனுஷ்டிக்கிறோம். ஆகவே ஊர்வலத்தில் என்னாலோ, என் படைவீரர்களாலோ கலந்துகொள்ள முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.’
அதற்குமேல் கர்ஸனால் எந்த எதிர்வினையும் புரிய முடியவில்லை. சாயாஜி ராவ் கொடுத்த கடுக்காயைவிட, கிங் ஏழாம் எட்வர்ட் கொடுத்த அல்வா மிகவும் கசந்தது. எட்வர்ட், ‘தர்பாருக்கெல்லாம் நான் வரல. நீயே பார்த்துக்கோ’ என்று செய்தி அனுப்பியிருந்தார். வேலை மெனக்கெட்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்த கர்ஸன் நொந்துபோனார். எட்வர்ட்டுக்குப் பதிலாக அவரின் சகோதரர் இளவரசர் ஆர்தர் வந்தார். கிங்கின் சார்பில் அவரின் பிரதிநிதியாக, கர்ஸனே அனைத்து மரியாதைகளையும் ஏற்றுக்கொண்டார்.
டெல்லி தர்பார்
அநேக மகாராஜாக்கள் கர்ஸனின் கட்டளைக்கேற்ப தலைவணங்கி, யானையில் வலம் வந்து அவருக்கு மரியாதை செய்தனர். தர்பாரில், எல்லோர் முன்னிலையிலும் கர்ஸனை வணங்கினார் சாயாஜி ராவ். பின் தன் இருக்கை நோக்கிச் சென்றவர், ஏதோ நினைத்தவராகச் சட்டென்று திரும்பி, ‘கிங் ஏழாம் எட்வர்டுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுங்கள்’ என்றார் நக்கலாக சிரித்தபடியே. அதாவது, என் வணக்கம் வைஸ்ராய்க்கு அல்ல, கிங்குக்கு என்ற அர்த்தத்தில்.
இப்படியாக அன்றைய மதிப்பில் சுமார் £3,00,000 செலவில் இரண்டாவது டெல்லி தர்பார் கர்ஸனால் கோலாகலமாக நடத்தி முடிக்கப்பட்டது. கிங்குக்கான அனைத்து மரியாதைகளும் தமக்குக் கிடைத்ததில் கர்ஸனுக்கும் உள்ளூர சந்தோஷமே.
1911-ல் மூன்றாம் முறையாக டெல்லி தர்பாரைக் கூட்டுவதற்கான சூழ்நிலை வந்தது. புதிய கிங்காக ஐந்தாம் ஜார்ஜும் குயினாக மேரியும் பதவி ஏற்றிருந்தார்கள். அவர்களை இந்தியாவின் பேரரசராக, பேரரசியாக அறிவித்து, கோலாகலக் கொண்டாட்டங்களை அரங்கேற்ற வேண்டுமல்லவா. அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக ஹார்டிங் (Hardinge) இருந்தார். அவர், ஐந்தாம் ஜார்ஜுக்குப் பெரிய அளவில் மரியாதைசெய்து தன் ‘ராஜ விசுவாசத்தை’ அரங்கேற்ற நினைத்தார். 1911, டிசம்பரில் தர்பாருக்கான நாள் குறிக்கப்பட்டது. அந்த ஜனவரியிலிருந்தே அதற்கான வேலைகள் ஜரூராக ஆரம்பமாயின.
டெல்லி தர்பார்
டெல்லியின் வடக்குப் பகுதியில் மாபெரும் நிலம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தம் 17,920 ஏக்கர். அப்போதுதான் அங்கு மக்காச்சோள அறுவடை முடிந்திருந்தது. அந்த விளைநிலத்தைச் சமப்படுத்தும் வேலைகள் ஆரம்பமாயின. எங்கெங்கு, என்னென்ன, எப்படியெப்படி அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த வரைபடமும் தயாரானது.
தேவையான இடங்களில் தற்காலிகப் பாதைகள் அமைக்கப்பட்டன. நாற்பது மைல்களுக்குத் தார்ச்சாலை போடப்பட்டது. அடுத்ததாக இருப்புப்பாதைகள் முளைக்க ஆரம்பித்தன. சுற்று வட்டாரத்தில் பதினாறு குட்டி ரயில் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தர்பார் நடக்கும் நாள்களில் ஒட்டுமொத்த முகாமில் இரண்டரை லட்சம் பேர் கூடுவார்கள் என்று கணக்கிடப்பட்டிருந்தது. அத்தனை பேருக்கும் தேவையான உணவுப்பொருள்கள், காய்கறிகள், இறைச்சி, பால், ரொட்டி, பழங்கள், சோமபானங்கள் எல்லாம் ரயில்களிலும் மோட்டார் வாகனங்களிலும் வந்து இறங்கின. முப்பது இடங்களில் தற்காலிகத் தபால் நிலையங்கள் அமைக்கப்பட்டன. 116 இடங்களில் தபால் பெட்டிகள் தொங்கின. ஆங்கிலம் மற்றும் இந்தியாவின் முக்கியமான இருபது மொழிகளில் தந்தி சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிங் ஜார்ஜ் தங்குவதற்காகவும் பதவியேற்பு விழா மேடைக்காகவும் தனியாக மையப்பகுதியில் எண்பத்து மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதைச் சுற்றிலும் 233 இடங்களில் தனித்தனியே முகாம்கள் அமைப்பதற்காகத் திட்டமிட்டிருந்தார்கள். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரிட்டிஷ் விருந்தாளிகளும், இந்தியாவிலுள்ள அனைத்து சமஸ்தான மகாராஜாக்களும், ராஜாக்களும், குட்டி ராஜாக்களும் தங்குவதற்காக அந்த முகாம்கள்.
கிங்கின் முகாமில் தரையெங்கும் பெர்சியக் கம்பளங்கள், கூடாரங்களைச் சுற்றிப் பூச்செடிகள், உத்தரத்தில் கிரிஸ்டல் அலங்கார விளக்குகள். அந்தக் கூடாரத்தை ஒட்டி, 200 பேர் விருந்து உண்ணும் அளவில் ஒரு டைனிங் கூடாரம். கிங்கின் முகாமிலேயே 120 ஐரோப்பிய முக்கியஸ்தர்கள் தங்குவதற்காகச் சிறப்புக் கூடாரங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. பில்லியர்ட்ஸ் விளையாடத் தனிக் கூடாரங்கள்.
டெல்லி தர்பார்
ஹைதராபாத், மைசூர், பரோடா போன்ற இருபத்தொரு குண்டு மரியாதைகொண்ட பெரிய சமஸ்தான மகாராஜாக்களுக்குரிய முகாம்கள் என்பது சற்றே பெரியதாக, கிங் முகாமுக்கு அருகிலேயே இருப்பதுபோல அமைக்கப்பட்டிருந்தன. அதேபோல, தரம் வாரியாக முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான கூலியாள்கள், கூடாரங்கள் அமைப்பதற்காக வெட்டவெளி மொட்டை வெயிலில் உழைத்தார்கள்.
ஒவ்வொரு மகாராஜாவும் தங்களுக்குரிய முகாமில் தேவையான பிரத்யேக வசதிகளைச் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ‘ஆளுயரக் கண்ணாடியால் கூடாரம் நிறைந்திருக்க வேண்டுமா? அமைச்சுக்கோ. கூடாரத்துக்குள்ளேயே ரோல்ஸ்-ராய்ஸ் வந்து செல்ல வேண்டுமா? ஓட்டிக்கோ. தங்கத்தாலான டாய்லெட்டில்தான் இரண்டுக்குச் சென்று பழக்கமா? போய்க்கோ.’ இவைதவிர மகாராஜாக்கள், தங்கள் சொந்த உபயோகத்திற்காகக் குதிரைகள், யானைகள், கார்கள் எதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அனைத்து இடங்களிலும் மின்சார வசதி செய்துகொடுக்கப்பட்டது. தர்பார் நடக்கவிருந்த காலம் குளிர்காலம் என்பதால், கிங்கின் கூடாரத்தில் மட்டும் மின்சார ஹீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. மற்றவர்கள் குளிர்காய, மார்பிள்களாலான கணப்பு அடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
பதவியேற்பு விழாவுக்கான மேடை தனியாகப் பல ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருந்தது. நடுவில் ஓர் உயரமான மண்டபம். அதன்மேல் அலங்கரிக்கப்பட்ட தங்க நிற டூம். மண்டபத்தைச் சுற்றி ஷாமியானா. பல்வேறு அலங்காரங்கள். அந்த நவம்பரின் மத்தியில் விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்திருந்தன.
நவம்பரின் இறுதி வாரத்தில் இந்தியாவே டெல்லியை நோக்கி நகருவது போலோர் உணர்வு. எல்லா சமஸ்தானங்களிலிருந்தும் மகாராஜாக்களும், ராஜாக்களும், மற்றவர்களும் விழாவில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்டார்கள். மாடு, குதிரை, யானை வண்டிகள் முதல் மோட்டார் வண்டிகள் வரை சக்கரங்கள் கிளப்பிய செம்மண் புழுதியில் டெல்லி சிவந்தது.
டெல்லி தர்பார்
அந்த மூன்றாவது டெல்லி தர்பாரில் கலந்துகொள்வதில் பரோடா மகாராஜா சாயாஜி ராவுக்கு விருப்பமே இல்லை. பழைய கசப்பு அனுபவங்கள் உறுத்தின. இருந்தாலும் பிரச்னை வேண்டாம் என்ற ஒரே காரணத்துக்காக சாயாஜி ராவும் தன் குடும்பத்தோடு டெல்லிக்குக் கிளம்பினார்.
கிங்கும் குயினும் படு அமர்க்களமான வரவேற்புடன் இந்தியாவுக்கு வந்திறங்கினார்கள். பம்பாய்க்கு, அப்போதைய இந்தியாவின் தலைநகரமான கல்கத்தாவுக்கெல்லாம் சென்றுவிட்டு, டிசம்பர் 7 அன்று பதவியேற்பு முகாமுக்குள் அடியெடுத்து வைத்தார்கள். வைஸ்ராய் ஹார்டிங்கின் ஏற்பாடுகளைக் கண்டு மனம் குளிர்ந்தார்கள்.
அடுத்த இரண்டு நாள்களில் பூமியும் குளிர்ந்தது. பருவம் தப்பி வந்த மழை. மிஸ்டர். வருணன் வந்து அமோகமாக விளையாட்டிவிட்டுப் போனார். பல மாதங்கள் பாடுபட்டுச் செய்த ஏற்பாடுகள் எல்லாம் பாழ். குறிப்பாக, போட்டு வைத்திருந்த இருப்புப்பாதையில் பாதி காணாமல் போயிருந்தது. பல கூடாரங்கள் பிய்ந்து தொங்கின. விழா மேடை அலங்காரங்கள் உட்பட அனைத்தும் சர்வ நாசம். விழா நடப்பது சந்தேகம்தான், கிங் கிளம்பிவிடுவார் என்று பேச்சுகள் எழ ஆரம்பித்தன.
வைஸ்ராய் ஹார்டிங் தவிதவித்துப்போனார். விழாவுக்கு மூன்றே நாள்கள்தான் பாக்கியிருந்தன. ஆயிரக்கணக்கான கூலி ஆள்களையும் ராணுவ வீரர்களையும் முடுக்கிவிட்டார். ‘எல்லாத்தையும் சரிபண்ணுங்க. ஒரு சொட்டுத் தண்ணிகூட உள்ள தேங்கி இருக்கக் கூடாது. எல்லாம் மழைக்கு முன்னாடி எப்படி இருந்துச்சோ, அதேமாதிரி ஆகிடணும். இட்ஸ் மை ஆர்டர்.’ கிட்டத்தட்ட மிரட்டத்தான் செய்தார். டிசம்பர் 12-ல் தர்பார். அதற்கு முந்தைய நாளே எல்லாம் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. வருணன் ரீ-என்ட்ரி கொடுத்துவிடுவாரோ என்று பயந்து, ஹார்டிங் அடிக்கடி வானத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். வானம் பொய்த்துவிட்டது.
இங்கிலாந்து அரச பரம்பரையில் அதுவரை முடிசூட்டு விழா என்பது லண்டனில் மட்டும்தான் நடைபெற்றுவந்தது. ஜார்ஜும் 1911 ஜூன் 22-ல் லண்டனில் முடிசூட்டிக்கொண்டார். ஆனால், இந்தியாவின் பேரரசராக இங்கு டெல்லி தர்பாரிலும் தனியாக முடிசூட்டிக் கொள்ள விரும்பினார். அவரது விருப்பத்துக்காக ராஜபரம்பரை விதிகள் தளர்த்தப்பட்டன. ஜார்ஜுக்காகப் புதிய கிரீடம் ஒன்று தயார் செய்யப்பட்டது.
லண்டனின் பிரபல நகை நிறுவனமான Garrard & Co-வினர் தயாரித்த அந்த கிரீடத்தின் மதிப்பு அறுபதாயிரம் பவுண்டு, எடை சுமார் ஒரு கிலோ. 6,100 சிறிய வைரக்கற்களோடு, மரகதம், ரத்தினம், நீலக் கற்களும் பதிக்கப்பட்ட அந்தக் கிரீடத்துக்கு வைக்கப்பட்ட பெயர், Imperial Crown of India. டெல்லி தர்பாருக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகுதான் ஜார்ஜுக்கு ஒரு விஷயம் உறுத்த ஆரம்பித்தது.
டெல்லி தர்பார்
இந்தியா, இந்துக்களும் இஸ்லாமியர்களும் நிறைந்த நாடு. அங்கு சென்று கிறிஸ்துவ மத முறைப்படி முடிசூட்டிக்கொள்வது முறையல்ல. வேறென்ன, செய்யலாம்?
ஒன்றும் செய்ய முடியாது. முடிசூடும் நாளும் வந்தது. டிசம்பர் 12, காலை நேரம். எந்தவிதச் சடங்குகளும் இன்றி, கிங் ஐந்தாம் ஜார்ஜ் தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டார். குயின் மேரியோடு தர்பாருக்குக் கிளம்பினார். இருவரது தகதக உடைகளுக்குப் பின்னாலும் முழுநீள புசுபுசு அங்கிகளையும் அணிந்திருந்தார்கள். அந்த அங்கிகளைத் தரையில் புரளவிடாமல் பிடித்தபடியே கிங், குயினுக்குப் பின்னால் செல்வதற்கு நான்கு சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள்.
நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட, தங்கநிறப் பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு நிற சாரட் ஒன்று காத்திருந்தது. கூண்டுள்ள வண்டி அது. ஜார்ஜும் மேரியும் ஏறி அமர்ந்தார்கள். குதிரைப்படை வீரர்கள் முன்னே அணிவகுக்க, தர்பார் மண்டபத்தை நோக்கி சாரட் நகர்ந்தது. அப்போதுதான் மைதானத்தில் ஒரு சலசலப்பு எழுந்து அடங்கியிருந்தது. அலங்காரங்களுடன் நிறுத்தப்பட்டிருந்த யானை ஒன்றுக்கு அந்த தர்பார் பிடிக்கவில்லைபோல. ஆகவே, மதம் பிடித்துவிட்டது. அது தறிகெட்டு அங்கும் இங்கும் ஓட ஆரம்பிக்க, வைஸ்ராய் ஹார்டிங்கின் ரத்த அழுத்தமும் எகிற ஆரம்பித்தது. பாகன்களின் கூட்டு முயற்சியால், யானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மகாராஜாக்கள், ராஜாக்கள், குட்டி ராஜாக்கள், ஐரோப்பிய விருந்தினர்கள், இந்திய பிரிட்டிஷ் அதிகாரிகள் என்று எல்லோருமே தங்களுக்காக ‘தரம் பிரித்து ஒதுக்கப்பட்ட’ இருக்கைகளில் கிங்குக்காகக் காத்திருந்தார்கள். மண்டபத்தின்முன் அரசுப் படை வீரர்கள் அரைவட்ட வடிவில் அணிவகுத்து நின்றார்கள். அந்த மைதானத்தில் பல சமஸ்தானங்களைச் சேர்ந்த வீரர்கள் வியர்வை வழிய வழிய வரிசை கட்டி நின்றார்கள். டெல்லி, பஞ்சாப் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ‘வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.’ எனவே, கூட்டம் ஓஹோ!
சாரட், தர்பார் மண்டபத்தின் அருகில் வந்து நின்றது. அந்த மாபெரும் மைதானமே எழுந்து நின்றது. கிங்கும் குயினும் இறங்கி மண்டபத்திலுள்ள சிம்மாசனங்களை நோக்கி நடந்தார்கள். அந்தச் சிறுவர்களும் வால்போல. கிங்குக்குரிய பதவியேற்பு மரியாதையாக நூற்றொரு முறை துப்பாக்கி குண்டுகள் முழங்கின. பிரிட்டிஷ் ராஜ பரம்பரைக் கொடி ஏற்றப்பட்டது. God Save the King! - வாழ்த்துகள் ஒலித்தன. முரசொலி முழங்கியது. பிரிட்டிஷாரின் மூன்றாவது டெல்லி தர்பார் இனிதே ஆரம்பமானது.
ஒவ்வொரு மகாராஜாவாக தர்பார் மண்டபத்துக்கு வந்து கிங்குக்கும் குயினுக்கும் மரியாதை செய்வது அடுத்த நிகழ்ச்சி. அதாவது சிரம் தாழ்த்தி வணக்கம் வைக்க வேண்டும் என்று முன்பாகவே வைஸ்ராய் ஹார்டிங்கிடமிருந்து எல்லா மகாராஜாக்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இந்த விஷயத்தில் இருபத்தொரு குண்டு மரியாதை கொண்ட ஹைதராபாத், பரோடா, குவாலியர், மைசூர், காஷ்மீர் மகாராஜாக்களுக்கு உடன்பாடு இல்லை.
டெல்லி தர்பார்
நாங்களும் மாபெரும் சமஸ்தானத்தின் மகாராஜாக்களே. அதனால், குனிந்தெல்லாம் வணக்கம் முடியாது. இப்படி வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் சாயாஜி ராவுக்கு மட்டுமே இருந்தது. அதை நாகரிகமான வார்த்தைகளில் ஒரு கடிதமாக எழுதி அனுப்பினார். வைஸ்ராய் அதற்குச் செவிமடுக்கவில்லை. தர்பாருக்கு வந்த மகாராஜாக்களுக்கு ‘கிங்குக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டும்’ என்று வகுப்பு எடுக்கப்பட்டது. ஒத்திகை செய்தும் காண்பிக்கப்பட்டது. அதாவது, கிங்குக்கு முன் சென்று நின்று மூன்று முறை குனிந்து வணக்கம் வைக்க வேண்டும். கையோடு எடுத்துச் சென்றிருக்கும் பரிசுப் பொருள்களைக் கொடுத்து கௌரவிக்க வேண்டும். பின்பு முதுகைக் காட்டாமல், அப்படியே ரிவர்ஸ் கியரில் கொஞ்ச தூரத்துக்குக் கீழே விழாமல் வந்தபின்பே திரும்பிச் செல்ல வேண்டும். கிங்கின் மூஞ்சிக்கு நேரே முதுகு காட்டி நடந்தால், அது அவமரியாதை. சாயாஜி ராவின் கவனத்துக்கு இந்த விதிமுறைகள் எல்லாம் வரவில்லை. அவருக்கு ஒத்திகை பற்றியும் எதுவும் தெரியாது.
தர்பாரில் மரியாதை செய்யும் படலம் ஆரம்பமானது. இந்தியாவின் மிகவும் உயரிய, செல்வாக்கு மிகுந்த சமஸ்தானமான ஹைதராபாத்தின் நிஜாமுக்கு முதல் வாய்ப்பு. அதாவது, அவர்தான் முதலில் கிங்குக்கு நலுங்கு செய்ய அழைக்கப்பட்டார். அப்போதுதான் ஹைதராபாத்தின் நிஜாமாகப் பதவியேற்றிருந்த கஞ்ச மகாபிரபு ஒஸ்மான் அலிகான், கிங்கை நோக்கி வந்தார். முறைப்படி மூன்று முறை குனிந்து வணக்கம் வைத்தார். அரை மனத்துடன் மரகத நெக்லெஸ் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துவிட்டு ரிவர்ஸ் கியரில் கிளம்பினார்.
அடுத்த மரியாதைக்குரியவர் பரோடா மகாராஜாதான். தர்பாருக்காக வந்திருந்த மகாராஜாக்களெல்லாம் உற்சவர்போல ஏகப்பட்ட நகைகளைச் சாத்திக்கொண்டு வந்திருந்தார்கள். படு ஆரம்பரமான உடை வேறு. எல்லோரும் பலவித கற்கள் பதிக்கப்பட்ட உடைவாள் வைத்திருந்தார்கள். ஆனால், மற்றவர்களைவிட சாயாஜி ராவ் மிக எளிமையாக வந்திருந்தார்.
குஜராத் பாணி வெள்ளை நிறப் பட்டுடை. தலைப்பாகை. சின்னதாக ஒரு வைரப்பதக்கம். கழுத்தில் ஒரு முத்துமாலை. அவர் இடையில் உடை வாள் இல்லை. தங்கக் கைப்பிடியுடைய கைத்தடி ஒன்றை எடுத்துக்கொண்டு கிங்கை நோக்கிச் சென்றார். தனக்குமுன் சென்ற நிஜாம் எப்படி மரியாதை செய்தார் என்றெல்லாம் சாயாஜி ராவ் கவனிக்கவில்லை.
கிங் முன் சென்று நின்றார். ஒருமுறை குனிந்து வணக்கம் வைத்தார். நகை ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். பின் முதுகைக் காட்டியபடி திரும்பி வந்துவிட்டார். வைஸ்ராய் ஹார்டிங்குக்குக் காதில் புகை. நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சாயாஜி ராவ், கிங்கை அவமானப்படுத்திவிட்டதாக நினைத்தார்கள். ஆனால், எதுவும் அறியாதவராகத் தன் இடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டார் சாயாஜி ராவ். விழா மும்முரத்தில் அப்போதைக்கு அதுபற்றிய சர்ச்சை கிளம்பவில்லை.
அடுத்ததாக குவாலியர், மைசூர், காஷ்மீர் மகாராஜாக்கள் மரியாதை செய்தார்கள். அதற்குப்பின் ரேங்க் வாரியாக. அவ்வளவு ஆடம்பரமான உடைகளுடன், நகைகளுடன் மகாராஜாக்கள் கேட் வாக் சென்றதைப் பார்க்கும்போது பேஷன் ஷோ போலத்தான் இருந்தது. பன்னா என்ற சமஸ்தானத்தைச் சேர்ந்த மகாராஜா, கிங்கின் அரியணைமேல் செருகி வைத்துக்கொள்ள 12 இன்ச் விட்டமுள்ள, ரத்தினக் குடை ஒன்றைக் கொடுத்தார். இப்படி விதவிதமான பரிசுகள் குவிந்துகொண்டிருந்தன.
அடுத்ததாக இந்தூர் மகாராஜா திகோஜி ராவ் கிங்கை நோக்கிப் புயல் வேகத்தில் கிளம்பினார். தங்க, வெள்ளிப் பட்டைகளுடன் கூடிய பட்டுடை. உடலெங்கும் ஆபரணங்கள். இடையில் வாள். அதுபோக, கையில் தங்கத்தலான, மரகதக் கல் கைப்பிடிகொண்ட கைத்தடி வேறு. அவ்வளவு உபரி எடையையும் சுமந்துகொண்டு, அந்தப் பளபள தரையில் கால் பதித்த திகோஜி ராவ், தத்தக்கா பித்தக்காவெனத் தடுமாறி விழுந்தார். கைத்தடி இரண்டு துண்டாகிப்போனது. நான்கைந்து பணியாளர்கள் வந்து அவரைத் தூக்கிவிடும்படி ஆகிவிட்டது. அதற்குப்பின் திகோஜி, தன்னைச் சரிப்படுத்திக்கொண்டு, வெகு ஜாக்கிரதையாக நடந்துசென்று கிங்குக்குக் கும்பிடு போட்டார்.
இப்படி ஒவ்வொருத்தராக வந்து குனிந்து நிமிர்ந்து சென்றுகொண்டே இருக்க, நீண்ட நேரத்துக்கு அசுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருந்தது தர்பார். சில சின்ன ராஜாக்கள், கிங்குக்குக் கும்புடு போட ஆர்வம் காட்டினார்கள். ஆனால், தகுதியைக் காரணம் காட்டி, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அந்த தர்பாரில் ஐந்தாம் ஜார்ஜ் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ‘இனி இந்தியாவின் புதிய தலைநகரமாக டெல்லி செயல்படும்.’
கல்கத்தா? அது இந்தியாவின் கிழக்கு மூலையில் இருந்தது. எனவே, இந்தியாவின் மையத்திலுள்ள டெல்லியைத் தலைநகரமாக வைத்துக்கொள்ளலாம் என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்திருந்தது. முகலாயர்களின் ஆட்சிக்குப்பின், மீண்டும் டெல்லி தலைநகரமானது.
கிங்கும் குயினும் யானைமேல் ஊர்வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கிங்குக்கு உள்ளுக்குள் உதறலெடுக்க, மறுத்துவிட்டார். மீண்டும் சாரட் ஏறி ஊர்வலம் போனார்கள். முன்னும் பின்னும் பெரும்படைகள். வழியெங்கும் பொதுமக்களின் உற்சாகக் கையசைப்பு. செங்கோட்டையில் உப்பரிகையில் அமர்ந்து ஜார்ஜும் மேரியும் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள்.
மறுநாள் காலை சாயாஜி ராவின் நெருங்கிய நண்பர் கோபால கிருஷ்ண கோகலே, அவரது கூடாரத்துக்கு வேகமாக வந்தார். ‘ஜி, கிங்கை நீங்கள் அவமதித்துவிட்டதாகப் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.’ கோகலே சொல்லச் சொல்ல, சாயாஜி ராவுக்கு நிலைமை புரிந்தது. வைஸ்ராய் ஹார்டிங்குக்குத் தன்னிலை விளக்கக் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார் சாயாஜி ராவ். ஆனால், ஹார்டிங்கின் கோபம் குறையவில்லை. கூடவே பிரிட்டன் பத்திரிகைகளும் சேர்ந்து கொண்டன. ‘சாயாஜி ராவின் செயல் ஷேம் ஷேம் பப்பி ஷேம்’ என்று இஷ்டத்துக்கு எகிறின. ‘அவரைப் பதவியிலிருந்து தூக்குங்கப்பா!’, ‘அந்த ஆளை நாடு கடத்துங்கப்பா!’, ‘அவருக்கான குண்டு மரியாதை குறைச்சாத்தான் சரிப்படுவாரு!’ - இப்படி எத்தனையோ எதிர்க்குரல்கள்.
ஆனால், இந்திய சுதந்தரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடு
இப்படி தேசியத் தலைவர்களிடமும் மக்கள் மத்தியிலும் சாயாஜி ராவுக்கு ஆதரவு பல்கிப் பெருகியதால், பிரிட்டிஷ் அரசு அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘விடுறா விடுறா’ எனத் தன் மீசை மண்ணைத் தட்டிவிட்டுக் கொண்டது.
இன்னும் மூன்று விஷயங்கள் மட்டும்.
1911 தர்பாரை நடத்துவதற்காக பிரிட்டிஷ் இந்திய அரசு செலவழித்த நம் பாட்டன் வீட்டுப் பணத்தின் மதிப்பு இரண்டு கோடி அமெரிக்க டாலர்.
மூன்றாம் தர்பாரில் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட அந்தக் கிரீடத்தை, ஜார்ஜ் அதற்குப் பின்பு அணியவே இல்லை. காரணம், அதன் எடை அவருக்கு எரிச்சலைக் கொடுத்தது. அவருக்குப் பின்னும் யாரும் அதை அணியவில்லை. இப்போது அந்தக் கிரீடம் லண்டன் டவரில் ஜுவல் ஹவுஸில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நான்காவதாக ஒரு டெல்லி தர்பார் நடத்தப்படுவதற்கான ஒரு சூழல் 1937-ல் உருவானது. அப்போது கிங்காகப் பதவியேற்றிருந்த ஆறாம் ஜார்ஜ், எட்வர்ட்போலவே இந்தியாவிலும் ஒருமுறை முடிசூட்டிக்கொள்ள விரும்பினார். ஆனால், சுதந்தரப் போராட்டம் வலுவடைந்திருந்த காரணத்தினாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கிங்கின் வருகைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதாலும் ஜார்ஜ் தன் யோசனையைத் தள்ளிவைத்தார். ‘காலம் கனியும்போது இந்தியாவுக்கு வருகிறேன்’ என்றார்.
காலம் கனியவே இல்லை.
.
No comments:
Post a Comment