SIVAJIGANESAN A LEGEND
“இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்; அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.
அவரது நடிப்பை மிகை நடிப்பு என்று விமரிசிப்பவர்கள் கூட சிவாஜியின் திரையுலகச் சாதனையை மறுப்பதில்லை. பொதுவில் அவரது வாழ்க்கையைப் பொறுத்தவரை கலையுலகில் சாதனையாளராகவும், அரசியல் அரங்கில் பிழைக்கத் தெரியாத தோல்வியாளராகவும் அனுதாபத்துடன் மதிப்பிடப்படுகிறார்.
ஆனால் அவரது சமகால வரலாறும், அவரது திரைப்படங்களும், அதில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களும், அவரால் உருவாக்கப்பட்ட நடிப்பு பாணியும், ஒரு நட்சத்திரமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவர் செய்த முயற்சிகளும், அதையொட்டி மாறிய அவரது அரசியல் வாழ்க்கையும், ‘இமேஜ்’ கரைந்து போன பிற்காலத்தில் அவர் நடித்த கேவலமான படங்களும், வளர்ப்பு மகன் திருமணத்தில் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதரைப் போன்று பங்கேற்றதும், 80 – களின் இறுதியில் வேறு வழியின்றி அரசியல் துறவறம் மேற்கொண்டதும் – நமக்கு வேறு ஒரு மதிப்பீட்டைக் காண்பிக்கின்றன.
அவை சிவாஜி பற்றிய பாராட்டுரைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதோடு தவறு என்பதையும் தெரிவிக்கின்றன. கூடவே திராவிட இயக்கங்களின் அரசியலையும் – அதையொட்டிய திரையுலகத்தையும், அவையிரண்டின் வளர்ச்சியையும் – சமரசத்தையும் அதிலிருந்து பிரிக்க முடியாத சிவாஜி எனும் கலைஞனின் வாழ்க்கையையும் நமக்கு புரிய வைக்கின்றன.
பராசக்தி கால சமூகப் பின்னணி!
‘பராசக்தி’ தயாரிப்பளாருக்கு பண உதவி செய்த ஏ.வி.எம் செட்டியாருக்கு, புதுமுகமான சிவாஜியின் நடிப்பு பற்றி நம்பிக்கையில்லை. அதையும் மீறி கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில், கருணாநிதி வசனமெழுத 1952 – இல் வெளியான இப்படம் பெரும் வெற்றியடைந்தது. மேடை நாடகங்களில் கணீரென வசனம் பேசிக் கொண்டிருந்த சிவாஜிக்கு இப்பட வாய்ப்பு தற்செயலாக கிடைத்திருந்தாலும், பராசக்தியின் வெற்றிக்குத் தேவைப்பட்ட அவசியமான சூழ்நிலைகள் அப்போது உருவாகியிருந்தன.
அன்றைய திரையுலகம் பாட்டிலிருந்து வசனத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. புராணக் கதைகளில் சிக்கியிருந்த திரைக்கதை, பார்ப்பனியத்தின் அநீதியை எடுத்துரைக்கும் சமூக நோக்கம் கொண்டதாக விரிவடைய ஆரம்பித்திருந்தது. மவுசிழந்த தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா போன்ற நட்சத்திரங்களுக்குப் பதிலாக, திராவிட இயக்கக் கலைஞர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர்.
கலையுலகின் இம்மாற்றத்திற்கு முன்பாகவே அரசியல் உலகமும் மாறத் துவங்கியிருந்தது. காங்கிரசின் மேட்டுக்குடி நலனுக்கான அரசியல் பின்தங்கி, கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு முன்னணிக்கு வந்தது. இன்னொரு புறம் மொழிவழி மாநிலங்களுக்கான போராட்டப் பின்னணியில் திராவிட இயக்கமும் வளர ஆரம்பித்திருந்தது. மொழி – இனப் பெருமையை வைத்து, சாமானிய மக்களின் குரலாக உருவெடுத்து, விரைவிலேயே தமிழ் மக்களின் பிரதிநிதியாக இவ்வியக்கம் தன்னை முன்னிருத்திக் கொண்டது. அதற்கு அவ்வியக்கத் தலைவர்கள் தமது பிரச்சாரத்தை எளிய வடிவில் மக்களிடம் கொண்டு சென்றது ஒரு முக்கியமான காரணமாகும்.
திராவிட இயக்கமும் திரைப்பட முதலாளிகளும் !
1967 – இல் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் வரை முதன்மையான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுகளை அபாயமாகக் கருதிய முதலாளிகள், திராவிட இயக்கத்தை தமக்கு சாதகமானது என்று சரியாகவே கருதினர். சமூக அரங்கில் வரவேற்பைப் பெற்றிருந்த திராவிட இயக்க படைப்புக்களை திரையுலகில் ‘ஸ்பான்சர்’ செய்வதற்கு முதலாளிகள் தயாராயினர். இரு பிரிவினரும் தமது அரசியல் நலனைக் காப்பாற்றிக் கொண்டு பண ஆதாயம் பெறுவது உறுதி செய்யப்பட்டது.
அப்போதே அண்ணாவும், கருணாநிதியும் தமது வசனங்களுக்காக ஆயிரக்கணக்கில் ஊதியம் பெற்றனர். சிவாஜி தவிர எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.இரேசேந்திரன், கே.ஆர்.ராமசாமி, என்.எஸ். கிருஷ்ணன் போன்ற திராவிட இயக்க நடிகர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர். 47 – க்குப் பின் பிரச்சினையின்றி தனது படத்தில் பாரதி பாடலைச் சேர்த்த ஏ.வி.எம். செட்டியார் போன்ற முதலாளிகள் தயாரிப்பாளரானார்கள். ‘பராசக்தி’ காலப் படங்களில் பார்ப்பனிய எதிர்ப்பும், சமூகப் பிரச்சினைகளும் வீரம் – காதல் – கற்பு – பாசம் போன்ற ‘தமிழ் நெறி’களின் பின்னணியில் வெளிப்பட்டன. அந்தத் ‘தமிழ் நெறி’ அற்ப உணர்வாகவும், இனப்பெருமை சவடாலாகவும் சீரழிய அதிக காலம் ஆகவில்லை. அதுவே திராவிட இயக்கத்தின் அரசியல் வழிமுறையாகவும் உறுதியானது.
நட்சத்திர இலக்கணத்தில் சிவாஜியின் வளர்ச்சி !
சிவாஜி-கணேசன்-1இதனிடையே சிவாஜியின் சிம்மக்குரல் கர்ஜனையில் பணம், மனோகரா, இல்லற ஜோதி போன்ற படங்கள் வெளிவந்தன. இவை அவரது பாணி நடிப்பு – வசனமுறை உருவாவதற்கும், சிவாஜி என்ற நட்சத்திரம் உதிப்பதற்கும் அடித்தளமிட்டன. 50 -களில் எழுதப்பட்ட கதைகளில் சிவாஜி நடித்தார் என்ற நிலை மாறி, 60 – களில் சிவாஜிக்கு ஏற்ற கதைகள் எழுதுவது தொடங்கியது. அப்போது அவர் ‘இமேஜ்’ முழுமையடைந்த ஒரு உயர் நட்சத்திரமாகிவிட்டார்.
அவரது ‘இமேஜூ’க்குப் பொருத்தமான, அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையிலான பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதைச் சுற்றியே ஏனைய நடிகர்கள், ஒலி, ஒளி, பாடல், இசை, இயக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர், ரஜினி, அமிதாப் தொடங்கி ஹாலிவுட்டின் நடிகர்கள் வரை அனைத்து ‘சூப்பர் ஸ்டார்’ களுக்கும் இதுவே இலக்கணம்.
எம்.ஜி.ஆர் – ரஜனியின் நட்சத்திரச் சுமையை சண்டை, சமூக நீதிப் பாட்டு, கவர்ச்சி நாயகிகள், ஆடம்பர அரங்குகள், வில்லன்கள் போன்றோர் சுமந்தனர். கமலஹாசனுககு ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்ட கதையும், வித்தியாசமான மேக் – அப்பும், மணிரத்தினம் – ஷங்கர் போன்ற இயக்குநர்களும் வேண்டியிருந்தது. ஆனால் சிவாஜி மட்டும் தன் சுமையை – தனது நடிப்பாற்றலால் – தானே சுமந்தார் என்பதே அவருக்குள்ள திறமையாகும்.
இத்தகைய நட்சத்திர நடிகர்கள், தமது ஒரு சில படங்களின் வெற்றியை வைத்து, வெற்றி பெரும் கதை, மக்களின் ரசனை, தமது திறமையின் மகிமை போன்றவை இன்னதுதான் என தமக்குத்தானே தீர்மானிக்கின்றனர். உலகமே தம்மை மேதைகளாக மதிப்பதாகவும் கருதிக் கொள்கின்றனர்.
திரையுலகில் திறமையும் – சமூக நோக்கமும் கொண்டவர்கள் நுழைய முடியாமல் இருப்பதும், இருந்தால் ஒழிக்கப்படுவதும் மேற்படி நட்சத்திர முறையின் முக்கிய விளைவுகளாகும். திரையுலகத்தைக் கோடிகளைச் சுருட்டும் மாபெரும் தொழிலாக மாற்றிவிட்ட முதலாளிகளுக்கு,இந்த ‘சூப்பர் ஸ்டார்கள்’ நம்பகமான மூலதனமாக இருப்பதால், நட்சத்திரங்களை அவர்களே திட்டமிட்டு உருவாக்கவும் செய்கின்றனர்.
நடிகர்களின் திறமை, முதலாளிகளின் ஆதரவு போக இந்த நட்சத்திரங்கள் எழுவதற்கும், குறிப்பிட்ட காலம் மின்னுவதற்கும், பின்னர் மங்குவதற்கும் குறிப்பான – சமூக வரலாற்றுக் காரணங்களும் தேவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரசின் மேட்டுக்குடி அரசியலுக்கு மாற்றாக தமிழினப் பெருமை பேசி வந்த திராவிட இயக்கம், உழைக்கும் மக்களின் ஏக்கப் பெருமூச்சாய் சில பத்தாண்டுகள் நீடித்தது. அதனால்தான் தி.மு.க.வின் தமிழ்ப் பண்பான காதல், வீரம், கற்பு, தாய்ப் பாசம், மொழி – இனப் பெருமை போன்றவை கலந்து ஒரு நாட்டுப்புற வீரனாய் உருவெடுத்த எம்.ஜி.ஆரின் இமேஜ் செல்வாக்குடன் பல ஆண்டுகள் நீடித்தது.
உயர்குடி மாந்தராக சிவாஜியின் இமேஜ் !
இதே காலப் பின்னணியில் உருவான சிவாஜியின் இமேஜ் வேறு ஒரு பின்புலத்தைக் கொண்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் – அதன் பின்னரும் பின்தங்கிய நிலவுடைமைச் சமூகம் மெல்ல மெல்ல மாறத் துவங்கியிருந்தது. தொழில் துறை – நகரங்களின் வளர்ச்சி, பழைய சமூக உறவுகளை அப்படியே நீடிப்பதற்கு அனுமதிக்கவில்லை. பார்ப்பன – பார்ப்பனரல்ல்லாத மேல்சாதிகளும், மேல்தட்டு வர்க்கங்களும் இந்த மாற்றத்தின் பொருளாதார ஆதாயங்களைப் பெற்றாலும் மறுபுறம், தமது பிற்போக்கான, பழமையான சமூக மதிப்பீடுகள் அழிவதாகவும் அரற்றிக் கொண்டன. இந்த முரண்பாட்டில் சிக்குண்ட மேல்தட்டு மனிதர்கள் மற்றும் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதர்களின் பெருமை, ஏக்கம், புலம்பல், இத்யாதிகளை, சற்று அழுத்தமான மிகை நடிப்பில் வெளிப்படுத்துவதற்கு ஒரு சிவாஜி தேவைப்பட்டார்.
பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும் உயர்குடி நாயகர்களாக, பக்தர்கள் மீது பழமையை நிலைநாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கனவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியைத் திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் ஏகப்ப்டட தந்தைகளாக சிவாஜி நடித்தார், நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழ இயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் – என்று எதையெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்.
ஆண்டான் அடிமை படங்களும் ஜப்பானிய இரசனையும் !
ஜப்பானில் முத்து, எஜமான், அண்ணாமலை போன்ற ரஜினி படங்கள் வெற்றிகரமாக ஓடியது குறித்து வாசகர்கள் அறிந்திருக்கலாம். காட்சி உலகின் அதிநவீனக் கருவிகளை உலகிற்களிக்கும் முன்னேறிய ஜப்பான் நாட்டு மக்கள், ரஜினியின் ஆண்டான் – அடிமைக் காட்சிளை ரசிப்பது எங்ஙனம்? 19 – ஆம் நூற்றாண்டு வரை விவசாய நாடாக இருந்த ஜப்பான் பெரும் சமூகப் புரட்சிகள் ஏதுமின்றியே தொழில்துறை நாடாக மாறியது. எனவே ராஜ விசுவாசம், பழமைவாதம், அடிமைத்தனம், மூத்தோர் பக்தி, முதலாளி மரியாதை போன்ற நிலவுடைமைப் பண்புகள் மீதான மயக்கம் இன்றளவும் ஜப்பானில் நீடிக்கக் காண்கிறோம்.
“சோம்பேறிகள் இல்லாத உழைப்பாளிகளின நாடு, வேலை நிறுத்தம் கிடையாது, பழுதான எந்திரங்களைச் சரி செய்யாத பொறியியலாளர்கள் கூட தற்கொலை செய்வார்கள்” போன்ற முதலாளிகளின் சுரண்டலை மறைக்கும் மோசடியான கருத்துக்கள் உலவுவதற்கும் இதுவே அடிப்படை. எனவேதான் அடிமைத்தனமும் – அற்ப உணர்வுகளும் கொண்ட ரஜினியின் படங்கள் ஜப்பானிய மக்களை வசியம் செய்ய முடிந்திருக்கின்றது.
சாதரண மக்களும் உயர்குடி உணர்ச்சியும் !
சிவாஜி-கனேசன்-3ஆகவே முன்னேறிய ஜப்பானுக்கே கதி அதுவென்றால், இன்னமும் பின் – தங்கிய விவசாய நாடாக இருக்கும் இந்திய சமூகத்தின் அடிமை மனப்பான்மை பற்றிச் சொல்லவே வேண்டாம். மேலும் வரலாறு முழுவதும் இன்று வரை ஆளும் வர்க்கமே ஆளப்படும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. நமது நாட்டுப்புறக் கலைகளின் கதைகளோ, தற்போதைய நவீனக் கலைகளின் கதைகளோ எதுவும் உயர்குடி மாந்தர்களின் வாழ்வோடும் – உணர்ச்சியோடும்தான் நம்மை ஒன்ற வைக்கின்றன.
இன்றும் ஒரு பார்ப்பனன் பிச்சை எடுப்பதும், ஒரு பண்ணையார் தெருவில் நடப்பதும், இந்திராவைப் பறிகொடுத்த ராஜீவின் சோகமும், கேளிக்கைச் சீமாட்டி டயானவின் மரணமும், மூப்பனார் சைக்கிள் ஓட்டியதும், ஜெயலலிதாவை மன்னிக்கலாம் என்ற கருணையும், கருணாநிதியின் ‘ஐயோ’வும் -போன்ற உயர்குடி மனிதர்களின் அவலம், சோகம், எளிமை, வறுமை, இரக்கம் போன்ற உணர்ச்சிகள் சாதாரண மக்களின் சொந்த உணர்ச்சியில் கலந்து விடுகின்றன. ஆனால் இதே நெருக்கடிகளுக்கு ஆளாகும் சாதாதரண மனிதர்களின் அவலத்தை, மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் அவை உழைக்கும் மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன; உயர்குடி மனிதர்களுக்கோ விலக்களிக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி விலக்களிக்கப்பட்ட உயர்குடி மனிதர்களின் வாழ்க்கையைத்தான் சிவாஜி மட்டுமல்ல அவரது சமகாலத் திரையுலகம், இயக்குநர்கள், நடிகர்கள் அனைவரும் பிரதிபலித்தனர். அப்போது இத்தகைய ‘குடும்பப் படங்கள்’ எனும் மதிப்புடன் வெளிவந்த கதைகளே வெற்றிக்குரிய சூத்திரமாகக் கருதப்பட்டன. அதில் சிவாஜி மட்டும் குறிப்பிடத் தகுந்த வகை நடிப்பைக் கொண்டிருந்தார் என்பதே அவருக்குரிய பங்காகும்.
சிவாஜியும் மிகை நடிப்பும்!
அதை மிகை நடிப்பு என்பாரின் விமரிசனமும், நமது கலைமரபின் தொடர்ச்சி என்பாரின் பாராட்டும், நடிப்பை மட்டும் கவனிக்கின்றன. கூத்தும், அதன் வளர்ச்சியான நாடகத்திலும் தொலைவிலிருக்கும் பார்வையாளருக்கு குரலையும், உடலசைவையும் உணர்த்திக் காட்ட மிகை நடிப்பு தேவைப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நாடக மரபுகளும் மிகை நடிப்பையே கொண்டிருப்பதால் இது நமக்கு மட்டுமே உள்ள மரபு அல்ல. எனவே நாடகப் பின்னணியில் தோன்றிய திரையுலகம் மட்டுமே சிவாஜியின் மிகை நடிப்புக்கு காரணம் என்று கூறிவிட முடியாது.
மேன்மக்களின் பாத்திரமேற்று நடித்த சிவாஜியின் சமகால நடிகர்களில் பலர் அவரைப் போல மிகையாய் நடிக்கவில்லை. உயர்குடி மாந்தர்களின் உணர்ச்சிகளையும், அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மிகைப்படுத்தி அவையே சமூகத்தின் பிரச்சினைகள் என்று நம்ப வைத்தன திரைக்கதைகள். அந்த ஜாடிக்கேற்ற மூடியாகப் பொருந்தி விட்டது சிவாஜியின் மிகை நடிப்பு.
தி.மு.க.வின் சவடால் அரசியலுக்கு ஏற்ற அலங்கார நடை அடுக்குத் தொடர் வசனங்கள் என்ற ஜாடிக்கும் இந்த மிகை நடிப்பு ஒரு பொருத்தமான மூடியாகவே இருந்தது.
முதலில் ஜாடிக்கேற்ற மூடி; பிறகு மூடிக்கேற்ற ஜாடி என்றவாறு அதாவது கதைக்கேற்ற நடிப்பு, பிறகு நடிகருக்கேற்ற கதை என்றவாறு அது முற்றத் தொடங்கியது.
கற்ற நடிப்பும் காட்டிய வித்தையும் !
சிவாஜி தனது நடிப்புத் திறனை எப்படி வளர்த்துக் கொண்டார்? அவரே கூறியிருப்பது போல பலரது வாழ்க்கைப் பாணிகளை பார்த்துப் பதிந்து கொண்டதுதான். ஆனால் யாரை – எதை பார்க்கப் பழகியிருந்தார் என்பதுதான் பிரச்சினை. சிவாஜியின் படங்களைப் போல அவரும் சமகால சமூகத்தைப் பற்றியும், அது மாறி வந்தது குறித்தும், மக்களின் யதார்த்தமான வாழ்க்கை – பிரச்சினைகளையும் அறியாதவராகவே இருந்தார். அப்படித் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை அவரது படங்களும் – பாத்திரங்களும் கோரவில்லை. கூடவே அவரது அரண்மனை வீடும், காங்கிரசின் மேட்டுக்குடி நட்பும், திரைப்பட முதலாளிகளின் சூழலும் – உயர்குடி மனிதர்களைப் பற்றியே சிந்திக்க வைத்திருக்க முடியும். நடிப்பும் – வாழ்க்கையும், இமேஜூம் – கற்பனையும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன.
ஆகவே சிவாஜி கற்றுக் கொணடு நிகழ்த்திக் காட்டிய ஸ்டைலாக – புகைவிடுவது, கம்பளியுடன் இருமுவது, தலையைப் பிய்த்து நிம்மதி தேடுவது, தரை அதிரவோ – நளினமாகவோ நடந்து வருவது போன்ற ஜோடனைகளுக்கும், சர்க்கஸ் வித்தைகளுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. சீனியர் சங்கராச்சாரியையப் பார்த்து அப்பராக நடித்ததைப் பெருமையுடன் குறிப்பிடும் சிவாஜி, தனது வித்தியாசமான வேடங்கள் பலவற்றையும் எங்கிருந்து கற்றார் என்பதை எங்கேயும் கூறியதில்லை.
வீழ்ந்த நட்சத்திரம் !
சிவாஜி கால உயர்குடி மிகை யதார்த்தப் படங்களுக்கான வரலாற்றுக் காரணங்கள் மாறத் துவங்கிய போது அவரது நட்சத்திர இமேஜ் மங்கத் தொடங்கியது. அதைச் சரிகட்ட சிவாஜியும் – எம்.ஜி.ஆரும் 70 – களின் வண்ணப் படங்களில் நாயகிகளைத் துகிலுரிவதிலும், காதலைக் காமமாக மாற்றுவதிலும் போட்டியாக ஈடுபட்டனர். இதன் பின்னர் 80 – களின் துவக்கத்தில் பேரன் – பேத்திகளைப் பெற்றெடுத்த நிலையிலும் ‘தர்மராஜா’வில் ஸ்ரீதேவியுடனும், ‘லாரி டிரைவர் ராஜாக் கண்ணுவில்’ ஜெயமாலினியுடன் ஆடிப் பாடிய சிவாஜியை அவரது ரசிகர்களாலேயே சகிக்க முடியவில்லை.
இனிமேலும் அவர் ஒரு நட்சத்திரமில்லை என்பது முடிவு செய்யப்பட்டது. அதன் பின் சிவாஜி நடித்த ‘முதல் மரியாதை, தேவர் மகன்’ திரைப்படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பிற்காக வரவேற்கப் பட்டாலும், இவையும் வாழ்ந்து கெட்ட கவுரவமான மனிதர்களின் பாத்திரம்தான். இறுதியாக 90-களில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இளைய தளபதி விஜயின் சில்லறைக் காதலுக்கு உதவிடும் சில்லறைத் தந்தையாக நடித்தார். இதுபோக அவர் பெரியாராக நடிக்க விரும்பிது நிறைவேறவில்லையே என்று சிலர் வருத்தப்படுகின்றனர். பெரியார் பிழைத்தார் என்று நாம் மகிழ்ச்சியடைவோம்.
சிவாஜியும் அரசியலும் !
சிவாஜி-கனேசன்-4அடுத்து ‘ அரசியலில் மட்டும் சிவாஜி தோல்வியடைந்தார்’ என்ற கருத்தைப் பரிசீலிக்கலாம். முதலில் இந்த மதிப்பீடே நேர்மையற்ற மதிப்பீடு. காரணம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அரசியலில் ஈடுபடும் ஒருவர் தோல்வியடைந்தால் அப்படி மதிப்பிடலாம். மாறாக தனது ‘நடிகர் திலகம்’ இமேஜைத் தக்க வைக்கவும், விரிவுபடுத்தவும், அதன்மூலம் அரசியலிலும் புகழடைய வேண்டும் என்ற சிவாஜியின் நோக்கமே பச்சையான சுயநலமாகும். இது பெருங்கனவாக வளருவதற்கு எம்.ஜி.ஆரின் போட்டி ஒரு காரணமாக இருந்தது.
திராவிட இயக்கத்தின் முன்னணிக் கலைஞராக வளர்ந்த சிவாஜி 1955- இல் திடீரென திருப்பதி சென்று வழிபட்டார். கொதித்தெழந்த உடன்பிறப்புகளோ “திருப்பதி கணேசா! திரும்பிப் பார் நடந்துவந்த பாதையை, நன்றி கெட்டுப்போனாயே நல்லதுதானா?”என்று கேட்டனர். திராவிட அரசியலும் -நாத்திகமும் தனது இமேஜை குறுக்கிவிடும் என்று கருதிய சிவாஜி தேசியமும் – தெய்வீகமும் உள்ளவராகக் காட்டிக் கொண்டார். அதன்படி அடுத்த சில ஆண்டுகளில் ஏ.பி.நாகராஜனின் புராணப் படங்களில் நடித்து, 50களில் புதையுண்டு போயிருந்த புராணப் புரட்டல்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
இதே ஏ.பி.நாகராஜன்தான் திராவிட இக்கங்களைப் பல படங்களில் கொச்சைப்படுத்தி கேலி செய்தவர். பராசக்தியில் சிவாஜியுடன் நடித்த எஸ்.எஸ். இராசேந்திரன் போன்றோர் புராண, கடவுள் படங்களில் நடிப்பதில்லை என்று உறுதியுடன் கடைபிடித்தார்கள். இந்தக் குறைந்த பட்ச நாணயம் கூட சிவாஜியிடம் இல்லை.
காங்கிரசில் சேர்ந்த ‘கூத்தாடி’ !
திரையுலகில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கினால் காழ்புணர்ச்சியடைந்த காங்கிரசு கட்சி நடிகர்களை ‘கூத்தாடிகள் ’ என்று கேவலப்படுத்தியது. கோபக்கார நடிகரான சிவாஜி இதில் மட்டும் ரோசமின்றி 62 – இல் காங்கிரசில் பகிரங்கமாகச் சேர்ந்து, 67 தேர்தலில் பிரச்சாரமும் செய்தார். ஒரு வகையில் சாதாரண பாத்திரங்களிலிருந்து உயர்குடி மாந்தர்களின் வேடங்களுக்கு மாறிய சிவாஜிக்கு இந்த மாற்றம் பொருத்தமாகவே இருந்தது.
50-களில் ‘தாராசிங் – கிங்காங்கை’ வைத்து மல்யுத்தக் காட்சிகள் நடத்திப் புகழ் பெற்ற சின்ன அண்ணாமலை என்ற காங்கிரசுக்காரர், 60 – களில் நடிப்புடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த சிம்மக் குரலோனை வைத்து அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் உருவாக்கினார். புதுப்படங்களுக்கு பூசை, தோரணம், அபிஷேகம், ஊர்வலம், ஒவ்வொரு படத்தின் பெயரிலும் ரசிகர்மன்றம் என்று ரசிகர்களை பொய்யான உணர்ச்சியில் மூழ்கடித்து, சினிமாவை முக்கியமான சமூக நிகழ்வாக மாற்றி சீரழித்ததில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சம பங்காற்றினர். இந்த ரசிகர் மன்ற நோய் பரவுவதற்கு, திரையுலகின் புகழையும், செல்வாக்கையும், கவர்ச்சியையும், அரசியலுக்கு கேடாகப் பயன்படுத்திய தி.மு.க.வும் காரணமாக இருந்தது.
பால்கனி, பெஞ்சு டிக்கட் என்ற இரு பிரிவையும் கவர்ந்த சிவாஜிக்கு சாதிகளைக் கடந்த ரசிகர்களே அதிகம். இருப்பினும் தேவர் சாதி மக்கள் இருக்கும் ஊர்களில் சிவாஜி மன்றாடியார் – தேவர்மகன் சிவாஜி ரசிகர் மன்றங்களாக இருந்ததை அவர் ஆதரித்தார். 70 – களின் சில படங்களில் ‘நான் தேவன்டா’ என்று அடிக்கடி வலிந்து பேசி தன் பெருமிதத்தைக் காட்டிக் கொண்டார். இவ்வளவு இருந்தும் பின்னாளில் அவர் ஆரம்பித்த தனிக் கட்சிக்கு டெபாசிட் வாங்கிக் கொடுத்த சில தொகுதிகளில் தேவர்சாதி மக்கள் அதிகம் கிடையாது.
பார்ப்பனர்களிடம் பறி கொடுத்த பிரஸ்டீஜ் !
அதே சமயம் தன் புகழ் உச்சத்திலிருக்கும் போதும் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்தும் போயிருக்கிறார். 71 – ஆம் ஆண்டில் அவரது ‘களம் கண்ட கவிஞன்’ எனும் நாடகத்திற்கு சென்னையின் ‘அவாள்’ சபாக்கள் இடம் கொடுக்கவில்லை. பார்ப்பனக் குடும்பக் கதைகளை மட்டும் நாடகங்களாக நடத்தும் சபாக்களின் விதிப்படி தனது நாடகத்தை விடுத்து, ‘வியட்நாம் வீடு’ என்ற நாடகத்தை சிவாஜி அரங்கேற்றினார். இதில் ‘பிரஸ்டீஜ் பத்மநாப அய்யராக’ நடித்து அவாளின் உள்ளம் கொள்ளை கொண்ட நடிகர் திலகம் தன்னுடைய ‘பிரஸ்டீஜ்’ பறி போனது குறித்து கவலைப்படவில்லை.
இக்காலத்தில் வெளியான ‘ராஜபார்ட் ரங்கதுரையில்’ தூக்கு மேடையேறும் பகத்சிங் “காந்தி வாழ்க” என்று பேசத் தொடங்கி அலையோசை, நவசக்தி போன்ற காங்கிரஸ் பத்திரிகைகளுக்கு விளம்பரம் செய்து கயிற்றில் தொங்குவார். இப்படி பகத்சிங்கையும் தன் பங்குக்கு கேவலப்படுத்தினார்.
அரசியல் வேண்டாம், ஆளை விடுங்கப்பா !
இடையில் இந்திராவிடமிருந்து பிரிந்து ஸ்தாபனக் காங்கிரஸ் ஆரம்பித்த காமராஜருடன் சேர்ந்தார். காமராஜர் இறந்ததும் இந்திராவிடம் திரும்பினார். 80 – களில் இவருக்கும் மூப்பனாருக்கும் நடந்த காங்கிரஸ் குழுச் சண்டையில் தோற்றார். எம்.ஜி.ஆர். இறந்ததும் அடுத்த புரட்சித் திலகம் நாம்தான் என்று முடிவு செய்து தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதுக்கட்சி ஆரம்பித்தார். 88 தேர்தலில் “234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 3 -இல் மட்டும் டெபாசிட் பெற்றது ” எனுமளவுக்கு கேவலமாகத் தோற்றார்.
அப்போதும் சளைக்காமல் வி.பி.சிங்கின் ஜனதா தளத்தில் சேர்ந்து மாநிலத் தலைவரானார். அந்தக் கட்சியும் கட்டெறும்பாக கரைந்த நிலையில் ‘அடங்கொப்புரானே, அரசியலும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் ’ என்று அரசியல் துறவறம் மேற்கொண்டார். சிவாஜியின் அரசியல் சந்தர்ப்பவாதம் இத்தனை விகாரமாகத் தெரியக் காரணம், அதையே நேர்த்தியாக செய்யும் திறமை அவருக்கில்லை என்பதுதான்.
அண்ணாவும், தம்பி கணேசனும், நண்பர் கருணாநிதியும் !
அந்தத் திறமை அடுக்கு மொழியில் சவுடால் அரசியல் செய்து வந்த தி.மு.கவிடம் இருந்தது. திருப்பதிக்குப் போன சிவாஜியை உடன்பிறப்புகள்தான் எதிர்த்தனர். ‘அறிஞர்’ அண்ணாவோ ‘தம்பி கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க’ என்று தந்திரமாக சமரசம் செய்து கொண்டார். காரணம் அப்போது அண்ணா எழுதிய சில படங்களில் நடிப்பதற்கு சிவாஜி தேவைப்பட்டார். அதன் பின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று பகுத்தறிவுக்கு அவர் சமாதி எழுப்பிய பின் திரையுலகில் கொள்கையுமில்லை – வெங்காயமுமில்லை என்ற வணிகப் பண்பு நிலைபெற்றது.
அதனால்தான் பராசக்தி படத்தில் ஏழைகளின் துன்பத்தை எழுதி பேசிய கருணாநிதி – சிவாஜி ஜோடி, 1981 இல் ‘மாடிவீட்டு ஏழை’ படத்தில் இலட்சாதிபதியின் துன்பத்தை எடுத்துரைத்தது. அப்போது இருவரும் இலட்சாதிபதிகளாக இருந்தார்கள் என்ற விசயம் அவர்களது கொள்கையின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் இருவரும் கட்டிப்பிடித்து அழுதார்கள். எதை நினைத்து அழுதார்களோ தெரியவில்லை!
உயர்ந்த மனிதனின் இறுதிக் காட்சி !
இனியும் இந்தக் கட்டுரையை நீட்டினால் மிகையாகி விடும் என்பதால், புகழ் பெற்ற வளர்ப்பு மகன் திருமணக் காட்சியுடன் முடித்து விடுவோம். இத் திருமணத்தின் போது தமிழக மக்களால் வெறுக்கப்படும் முதல் நபராக ஜெயலலிதா இருந்தார். தமிழகத்தையே கொள்ளையடித்த ஜெயா-சசி கும்பல் தனது டாம்பீகத்தைக் காட்ட நினைத்த இத்திருமணத்தில் சிவாஜிக்கு தனது பேத்தியைக் கொடுப்பதில் முழு சம்மதமில்லை என்று கிசுகிசுக்கள் வெளியாயின. சிவாஜி அதை பகிரங்கமாக உறுதி செய்யவோ, மறுக்கவோ இல்லை. தனது நடிப்பு சாம்ராஜ்ஜியத்தில் அடங்கிக் கிடந்த நடிகையும், புதுப் பணக்காரியாக உருவெடுத்த நடிகையின் உயிர்த்தோழியும், பரம்பரைப் பணக்காரரான தன்னுடன் சரிக்கு சமமாக எப்படி சம்பந்தம் செய்யலாம் என்ற வேதனையாக இருக்கக் கூடும்.
இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் கூடிய அந்த மாபெரும் ‘வரலாற்றுப் புகழ் மிக்க’ நிகழ்ச்சியில், தூய வெள்ளை ஆடையுடன், அதிகம் பேசாமல், ஒரு வாய் கூட சாப்பிடாமல், சோகத்துடன் நின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இங்கும் ‘வாழ்ந்து கெட்ட உயர்குடி மனிதராகவே’ காட்சியளித்தார் – நடிக்கும் தேவை எற்படவில்லை.
________________________________________
புதிய கலாச்சாரம், செப்டம்பர் – 2001
(மீள் பதிவு)
_________________________________________
‘திருவருட்செல்வர்’ படத்தில் , நீங்கள் அப்பராக வேடம் தாங்கி, வந்த காட்சிகள் இன்றும் மனதை விட்டு அகலாமல் இருப்பவை. அந்த வேடம் போடுவதற்கு உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் (INSPIRATION ) காஞ்சி சங்கராச்சாரியாரான ‘பரமாச்சார்யாள்தான் என்று ஒரு முறை
குறிப்பிட்டிருந்தீர்கள். அது பற்றி ..?
சிவாஜி கணேசன்: நான் முன்பே சொல்லி இருக்கிறேன். ஒரு நடிகனுக்கு நிறைய கவனிக்கிற தன்மை (observation ) வேண்டும் என்று. நான் என்னை சுற்றியுள்ள சூழ்நிலை, மனிதர்கள் எல்லோரையும் நன்றாக கவனிப்பவன். நான் அப்பராக வேடம் போடும்போது, ஒரு வயதான சிவனடியாருக்குரிய தோற்றம் நடை உடை பாவனை போன்றவற்றை என் நடிப்பில் காட்ட வெண்டும் அல்லவா?
எனக்கு காஞ்சி பரமாச்சார்யாள் மீது மதிப்பும் பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம்.
ஒரு நாள் காஞ்சி முனிவர் பரமாச்சார்யாள் அவர்கள் என்னை கூப்பிட்டு அனுப்பியதாக சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது. அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். அந்த மடம் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்திற்கு பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
நான், எனது தாயார், எனது தந்தையார், எனது மனைவி, நான்கு பேரும் சென்றோம். சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள்.நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து இருந்தோம். காஞ்சி முனிவர் மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லைட்டெல்லாம் அணைந்து விட்டது.
அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு, மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார். மெல்லக் கீழே உட்கார்ந்து, கையை புருவதின்மேல் வைத்து எங்களைப் பார்த்தார்.
“நீதானே சிவாஜி கணேசன்?” என்றார்.
“ஆமாங்கையா! நான்தான்”, என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். என் மனைவியும் பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.
“உங்களை பார்த்ததில் மிகவும் சந்தோஷம் .
திருப்பதி, திருவானைக்கா , தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில், இங்கெல்லாம் போனபோது யானையை விட்டு மாலை போட்டார்கள்.
யானை யாருடையது? என்றேன்.
“சிவாஜி கணேசன் கொடுத்தது”, என்றார்கள்.
“நாட்டில் பல பேர் பணக்காரர்கள் பல பேர் இருக்கிரார்கள். அவர்கள் பப்ளிசிட்டிக்காக சில சமயம், கோவில்களுக்கு பணம்தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள். ஆனால் யானை கொடுப்பதற்கு பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது.
ஆகையால் உன்னை பெற்றவர்கள் பாக்கிய லிகள். அவர்களுக்காக நான் பகவானை பிரார்த்தனை செய்கிறேன்”, என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.
அப்போது என் மனம் எப்படி இருந்திருக்கும்? எத்தனை அநுக்கிரஹம் ! எண்ணிப் பாருங்கள்.
பொதுவாக எனக்கு வாழ்க்கையில் பயமே கிடையாது.காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற முனிவர்களுடைய ஆசீர்வாதம் இருக்கும்போது, நான் எதற்காக பயப்பட வேண்டும்? ஒரு வேளை இந்த சம்பவம் என் மனதில் ஆழமாக பதிந்து இருக்கலாம். பரமாச்சார்யாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். எனவே அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம்.
இது போல என் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு மகான்களையும், ஆன்மீக புருஷர்களையும் சந்தித்து அருளாசி பெற்று இருக்கிறேன்.
Taken from:
No comments:
Post a Comment