Sunday, 3 May 2020






பனசை மணியன்



பனசை மணியன் ஒரு திரைப்படம் இயக்கியவர். ’நான் நன்றி சொல்வேன்’ என்ற படம். 1979ல் வெளிவந்த, ஸ்ரீப்ரியா, சிவசந்திரன் நடித்த படம்.டப்பாவுக்குள் போய்விட்டது என்று சொல்லத்தேவையில்லை.

பனசை மணியன் காதல் படுத்தும் பாடு(1966) படத்தில் துவங்கி கலைஞானத்துடன் இணைந்து படங்களுக்கு வசனம் எழுதியுள்ளவர்.
கலை ஞானம் தயாரிப்பாளராக பரிணமித்த போதும் அவருடன் வசனம் எழுதி இயங்கியவர் பனசை மணியன்.

கலை ஞானம் வசதி படைத்தவரானார். ஆனால் பனசை மணியனைப் பற்றி அப்படி சொல்வதற்கில்லை. ரஜினிக்கு முதன் முதலாக பைரவி படத்தில் வாய்ப்பு தந்தவர் தயாரிப்பாளர் கலைஞானம். இது நம்ம ஆளு படத்தில் ஃப்ராடு கிருஷ்ணய்யராக நடித்தவர்.
பாக்யராஜுடன் பல படங்களுக்கு  கதை இலாகாவில் டிஸ்கசனின் கலைஞானம்,பனசை மணியன் இருவருமே பங்கேற்றவர்கள். 
அதிர்ஷ்டக்காரர் கலைஞானம் ’இது நம்ம ஆளு’ படத்தில் அட்டகாசமான ரோல் செய்தவர். பனசை மணியனுக்கும் இப்படி ஒரு படத்தில் ஒரு நல்ல ரோல் செய்து விட வேண்டுமென்று ஆசை தான். ஆனால் வாய்க்கவே இல்லை.

பனசை மணியன் ஒரு Compulsive talker. பத்து பேராக இருந்தாலும், ஒரே ஒருவர் இருந்தாலும் அடைமழை போல் பேசிக்கொண்டே இருப்பார். பேச்சில் உற்சாகம் கரை புரண்டோடும்.
ஒரு காலத்தில் தன்னிடம் வேலை கேட்டு வந்த பாக்யராஜ் இன்று எட்டு கண்ணும் விட்டு எரிய திரையுலகை கலக்கும்போது அவரிடம் அடக்கமாக குழையும் கலைஞானம் பற்றி ’சினிமா ஷாட்’ பாணியில் பனசை மணியன் சொல்வார். ”வருடம் 1975. கலைஞானம் வீடு. கலைஞானத்துக்கு பாக்யராஜ் காய்கறி வாங்கிக்கொண்டு வருகிறார். அப்படியே கட் பண்றோம். வருடம் 1985. பாக்யராஜ் வீடு. பாக்யராஜுக்கு கலைஞானம் காய்கறி வாங்கிக்கொண்டு வருகிறார். “

எப்போதும் ஏதாவது ஒரு சின்ன ஹைக்கு பாணி கவிதை சொல்வார்.
”பெண்ணே ! எப்போதும் நெருப்பாயிரு.
கரியாகி விட்டால்
கண்டவெனல்லாம் எடுத்து கிறுக்கி விடுவான். ”
சொல்லி விட்டு அவரே தன் மேதைமையை ரசித்து சிரிப்பார்.
20 வருடங்களுக்கு முன்  வீட்டில் உள்ள டி.விகளுக்கு மாடியில் ஆன்ட்டெனா இருக்கும். இதைப் பற்றி பனசை மணியன் கவிதை.

”வானத்தில் வேர் விட்டு
கூடத்தில் பூக்கும் பூ!”


டி.ஆர்.ராமண்ணா, கே.எஸ்.ஜி, சாண்டோ சின்னப்பா தேவர், என்று பெரிய ஜாம்பவான்களிடமெல்லாம் வேலை பார்த்தவர் என்பதால் பல சுவாரசியமான விஷயங்கள் இவரிடமிருந்து கிடைக்கும்.

ஒரு பெரிய டைரக்டரிடம் வேலை பார்த்த போது தற்செயலாக ஒரு அறைக் கதவை திறந்து விட்டார். அந்த டைரக்டரோ அந்த நேரத்தில் அவர் அறிமுகப்படுத்தி பின்னர் வெகு பிரபலமான ஒரு நடிகையுடன் நிர்வாணமாக படுக்கையில் இருந்திருக்கிறார்.
’இப்படின்னு தெரியாம கதவ தெறந்துட்டமே. தெரிஞ்சா உண்டு இல்லைன்னு பண்ணிடுவானே’ன்னு பனசை மணியன் அவசரமாக எஸ்கேப் ஆனாராம். அதே பழம்பெரும் டைரக்டர் குமுதத்தில் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் தன்னுடைய ’ஒழுக்கம்’ தான் காரணம் என்று கூறியிருந்தார்.
பனசை மணியனிடம் இதை கவனப்படுத்திய போது பனசை மணியனின்  பதில் “அப்படின்னா அந்த நடிகையோட அன்னக்கி முண்டக்கட்டையா அம்மணமா படுத்துக்கிடந்தது யாரு?!”


டி.ஆர்.ராமண்ணா எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் பதறவே மாட்டார். ’காத்தவராயன்’ படத்திற்காக போடப்பட்ட பிரமாண்டமான செட் மழையில் சின்னாபின்னமான போது ”அண்ணா! செட் மொத்தமா வீணாப்போச்சுண்ணா!” என்று பதறிச் சொன்ன போது கொஞ்சங்கூட பதறாமல் நிதானமாக ராமண்ணா “ சரி.விடுறா போவுது. ”
இப்படி ஏதாவது எப்போதும் பல விஷயங்கள் பேசிக்கொண்டே தான் பனசை மணியன் இருப்பார்.

பனசை மணியன் கதை டிஸ்கசனில் சொன்ன ஒரு சீன் டைரக்டருக்கு ரொம்ப பிடித்து விட்டது. இந்த சீனை படத்தில் சேர்த்துக்கொள்ளலாம். பனசை மணியனே அந்த குறிப்பிட்ட காட்சியில் வருகிற இன்ஸ்பெக்டர் ரோல் செய்யட்டும் என முடிவு செய்தார் டைரக்டர்.
ஏற்கனவே ’அம்மா வந்தாச்சு’ படத்தில் பாக்யராஜின் எரிந்து விழுகிற முதலாளியாக பனசை மணியன் நடித்தவர் தான்.
உற்சாகமாக அவர் நடிப்பதற்காக அதிகாலையில் ஷூட்டிங்காக சென்னையிலிருந்து லொக்கேசன் வந்து சேர்ந்தார்.
வந்தவுடனே காலை சாப்பாடு சாப்பிடும்போதே கலகல என்று பேச ஆரம்பித்தார்.”சென்னையில் நேத்து பக்கத்து வீட்டுக்காரர் இறந்து விட்டார்.சாவுக்கு நான் போனா அவர் சம்சாரம் சொல்லுது “ஏங்க.. இங்க பாருங்க. பக்கத்து வீட்டுல இருந்து மணியன் வந்துருக்காரு”ன்னு.எனக்குன்னா சிரிப்பு.. அவருக்கு உயிரோட இருக்கும்போதே சுத்தமா காது கேட்காது. டமார செவுடு. செத்ததுக்கப்புறம் அவருக்கு கேட்குமா?”
மீண்டும் அந்த பக்கத்து வீட்டம்மா கணவன் பிணத்திடம் எப்படி சொன்னார் என்று இரண்டு முறை பேசிக்காட்டினார்.

அன்று நெரிஞ்சிப்பேட்டை அருகில் சில காட்சிகள் ஷூட் செய்து கொண்டிருந்த போது உச்சி வெய்யிலில் பக்கத்தில் பம்பு செட்டில் குளித்து உற்சாகமாக படக்குழுவினரைப் பார்த்து கை காட்டினார். பிசியாய் இருந்த என்னிடம் வந்து சில கதைகள் பேசினார்.
இரவில் 9 மணிக்கு மேல் பனசை மணியன் நடிக்கும் காட்சிக்காக காவேரி க்ராஸில் ஷுட்டிங். 12 போலீஸ். அவருடன் பேசி நடிக்கவேண்டிய போலீஸ் ஆக நான் நடிக்கவேண்டியிருந்தது. என்னைப்பார்த்து ராஜநாயஹம் என்றே பெயர் சொல்லி அழைத்து ஆர்டர் போடவேண்டும்.
ரிகர்சல் போது ”ராஜநாயஹம் ராஜநாயஹம்” என்று பலமுறை வசனத்துடன் சத்தமாக சொல்லிப்பார்த்துக்கொண்டார். ஷாட் இடைவெளியிலும் ராஜநாயஹம் என்று மீண்டும் மீண்டும் சொல்லி ’’ராஜநாயஹம் அழகான பெயர்” என்று குஷியாக சொல்லிக்கொண்டார்.
நான் அவரிடம் ஒரு குறிப்பிட்ட ஷாட்டில் “ நானும் இப்ப உங்க கூட வரனுமா” என்ற போது நாடகபாணியில் மேலே விரலைக்காட்டி “என்ன கேட்காதீங்க..டைரக்டர கேளுங்க” என்றார்.
ஸ்டார்ட் கேமரா..ஆக்‌ஷன்,,
”அய்யய்யோ மணி..சரியில்லீங்களே..நீங்க நடிக்கறது திருப்தி்யாயில்லியே…” டைரெக்டர் நொந்துபோய்விட்டார்.மணியன் சொதப்பி விட்டார்.
நள்ளிரவில் ஷூட்டிங் பேக் அப்.

ஷூட்டிங் முடிந்தவுடன் படக்குழுவினர் பெரும்பாலானோர் குடித்து விட்டு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு சீட்டு விளையாட ஆரம்பித்து விடுவார்கள். சீட்டு விளையாட்டு விடிய விடிய நடக்கும்.
 நான் மட்டும் இரவு உணவு முடித்து விட்டு சீக்கிரம் படுத்து தூங்கி விடுவேன்.
அன்று பின் இரவில் இரண்டு மணிக்கு மேல் சாப்பிட்டு விட்டு படுக்கப்போகும்போது என் அறைக்கு பிராந்தி சாப்பிட்டுக்கொண்டே டம்ளருடன் வந்து பனசை மணியன் தொன தொன என்று பேச ஆரம்பித்தார். “போய் படுங்க சார்” என்று அவரை அனுப்பி விட்டேன்.
அதிகாலை ஆறு மணிக்கு முன் குளித்து விட்டு ட்ரஸ் செய்யும்போது மீண்டும் பனசை மணியன் வந்தார். ”ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் “ என்றார்.
 “இருக்கட்டும் சார்.ஷூட்டிங் கிளம்புற நேரம். அப்புறம் ரிலாக்ஸ்டாக பார்க்கலாமே”
“ ராஜநாயஹம்! நீங்க இலக்கியவாதி என்பதால் தான் உங்களிடம் காட்ட வந்தேன்.”

ஷூட்டிங் ஸ்பாட்டில் காலை உணவின் போது என்னிடம் சாண்டோ சின்னப்பா தேவர் ரத்னகிரி கோவிலில் ஒரு மகானைப் பார்த்த கதையை சுவாரசியமாக சொன்னார். 
அந்தப் படத்தில் ஐஸ்வர்யாவின் அப்பாவாக நடிக்க வந்திருந்த சேலம்  டாக்டர் சங்கரனிடம் பேச ஆரம்பித்தார். ’உடம்பு சரியில்லை’ என்று பனசை மணியன் சொல்ல டாக்டர் அவருடைய பல்ஸ் பிடித்துப்பார்த்தவர் பதறி விட்டார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கச்சொன்னார். 

ஈரோட்டில் அவரை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்த போதும் “ஒன்னும் இல்லை. சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகி வந்து நானே அந்த இன்ஸ்பெக்டர் ரோல் செய்கிறேன்.டைரக்டர் கிட்ட சொல்லுங்க. நானே நடிக்கிறேன்.” அவர் இயல்புப்படி இதை ஒரு இருபது தடவை திரும்ப திரும்ப புரொடக்சன் மேனேஜரிடம் சொல்லியிருக்கிறார்.

மறுநாள் ஷூட்டிங் போது மதிய உணவு முடிந்த போது தகவல் வந்தது.

பனசை மணியன் இறந்து விட்டார்!
எனக்கு உடனே ஷுட்டிங்கில் ‘நானும் இப்ப உங்க கூட வரணுமா?’ என்று கேட்ட என்னிடம் பனசை மணியன் விரலை மேலே உயர்த்தி “ என்ன கேட்காதீங்க..டைரக்டர கேளுங்க..” என்று சொன்னது தான் உடனே ஞாபகம் வந்தது. மேல ஒரு டைரக்டர் இருக்கான். கடவுள். அவன் கிட்ட ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. அவன் கூப்பிடும்போது தான் வரமுடியும் !

மீண்டும் சென்னை திரும்பிய போது பனசை மணியன் நடிக்க இருந்த பாத்திரத்தில் ராஜநாயஹம் நடிக்கட்டும் என்று டைரக்டர் திடீரென்று முடிவு செய்தார். நான் செய்த போலீஸ் ரோல் இப்போது மணவை பொன் மாணிக்கத்திற்கு.

நான் அந்த இன்ஸ்பெக்டர் ரோல் செய்யும்போது பல தடவை ஷூட்டிங் தடைப் பட்டது. பனசை மணியன் ஆவி தான் ஷூட்டிங் நடக்கவிடாமல் தடுக்கிறது என்று பேசும்படியானது. 
ஒரு வழியாக காட்சி ஷூட் பண்ணி முடித்தபின் எடிட்டிங் டேபிளில் ராஜநாயஹம் சீன் போட்டுப்பார்க்கும்போது மூவியாலா ரிப்பேராகி விட்டது. பனசை மணியன் ஆவி! அவருடைய கடைசி ஆசை இந்த இன்ஸ்பெக்டர் ரோல். ஆவி தான் தடுக்கிறது. 
அப்புறம் சரி செய்து எடிட் செய்த பின் டப்பிங் ஏ.பி.என் தியேட்டரில் ராஜநாயஹம் சீன் லூப்ஸ் போடப்பட்ட போது ப்ரொஜக்டர் அவுட் ஆஃப் ஆர்டர். இப்போது எல்லோருக்கும் புல்லரித்து விட்டது.அப்புறம் ப்ரொஜக்டர் சரி பார்க்கப்பட்டு டப்பிங் நடந்தது.

நடிகர் சிவராமன் உரக்கச் சொன்னார்: ’பனசை மணியன் கடைசியா அன்னிக்கு ஷூட்டிங்ல அதிகமா சொன்ன வார்த்த “ராஜநாயஹம் ராஜநாயஹம்” தான். அவரு இப்ப மேல இருந்தாலும் ராஜநாயஹத்த நினைச்சிக்கிட்டே தான் இருப்பார்!’ இப்படி சொன்ன சிவராமன் அடுத்த மாதமே இறந்து போய் விட்டார் என்பதும் இன்னொரு Irony!

preview பார்த்து பலரும் பாராட்டிய அந்த காட்சி ஃபுட்டேஜ் காரணமாக படத்திலிருந்தே நீக்கப்பட்டு விட்டது. தீபாவளி ரிலீஸ் ஆன அந்தப்படத்தில் ராஜநாயஹம் சீன் நீக்கப்பட்டிருந்தது.

”ஸாரிங்க ராஜநாயஹம். ஃபுட்டேஜ் ப்ராப்ளத்தில அந்த சீன எடுக்க வேண்டியதாப் போச்சி. ” என்று டைரக்டர் சொன்ன போது சுற்றியிருந்தவர்கள் டைரக்டரிடம் “சார்! பனசை மணியன் ஆவி பண்ண வேலை தான் இது!” என்று சொன்னார்கள்.

........................

January 16, 2009 

சாது
பனசை மணியன் தான் இறப்பதற்கு முந்தைய நாள் இந்த சம்பவத்தை என்னிடம் கூறினார் .
அப்போது சாண்டோ சின்னப்பா தேவரின் 'தேவர் பிலிம்ஸ் ' சில் பனசை மணியன் வேலை பார்த்திருக்கிறார் . ஒரு ஷூட்டிங் வெளியே அவுட் டோர் போயிருந்திருக்கிறார்கள் . அங்கே பக்கத்து மலையில் ஒரு முருகன் கோவில் . படப்பிடிப்பு குழுவினருடன் தேவர் அங்கே போயிருக்கிறார் . மலைஏறும் போது அங்கே ஒரு மௌன சாமியார் குடில் . பனசை மணியன் உள்பட பலரும் அந்த சாதுவை தரிசித்து அங்கேயே அமர்ந்து விட்டார்கள் . தேவர் அந்த மஹானை பார்த்தவாறே மேலே போயிருக்கிறார் ." எனக்கு முருகன் தான் . வேறு யாரையும் நான் தொழமாட்டேன் " என்று அர்த்தம் .
மேலே தரிசனம் செய்துவிட்டு தேவர் சாவகாசமாய் இறங்கியவர் தன் குழுவினர் இருந்த மௌன சுவாமி குடிலில் வந்து உட்கார்ந்திருக்கிறார் . புன்னகையோடு சாமி இவரை பார்த்திருக்கிறது . சாண்டோ சின்னப்பா தேவரும் புன்னகையோடு அவர் கண்ணை உற்று பார்த்திருக்கிறார் . கண்ணையே உற்று ,உற்று .. திடீரென்று தேவர் நா தழுதழுக்க " நான் ஒரு மடையன் !" என்று கண்ணில் நீர் பெருக விம்மினாராம் . 

மௌன சாமி அருகில் இருந்த சிலேட்டில் ஏதோ எழுதி தேவரிடம் காட்டினாராம் .
"உன்னிலும் நான் ஒரு அடிமடையன் !"
சாண்டோ சின்னப்பா தேவர் உடனே எழுந்து சாஷ்டாங்கமாக மஹானின் காலில் விழுந்து விட்டார் !
..
A Greatman is always willing to be little.

- Emerson

No comments:

Post a Comment