WINE SHOP,BARS - PRIMARY INCOME
OF THE TAMILNADU STATE
'மது நாட்டை சீரழித்து விட்டது; 'டாஸ்மாக்' கடைகளை இழுத்து மூடுங்கள், மதுவிலக்கை அமல்படுத்துங்கள்' -
இந்த குரல், தமிழகத்தின் எல்லா மூலை முடுக்கிலிருந்தும் ஒலிக்கத் துவங்கி விட்டது.
உண்மை தான்; இன்று, பள்ளி மாணவர் முதல், பழுத்த கிழம் வரை, அனைத்து பருவத்தினரையும் ஆட்கொண்டு விட்டது மது. குடிப்போரின் எண்ணிக்கை எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு குடிப்போரின் வயது வரம்பு குறைந்து கொண்டே போகிறது.
சமீபத்தில், சிறுவனை, உறவினர் ஒருவரே மது அருந்தச் செய்து, ரசித்து மகிழ்ந்தது; பள்ளி மாணவி, போதை தலைக்கேறிய நிலையில், நடு ரோட்டில் ஆரவாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது போன்ற நெஞ்சைப் பதற வைத்த சம்பவங்கள், சமூக சீர்கேட்டின் உச்சகட்டம்.மாணவியை கண்காணிக்கத் தவறி விட்டதாக பள்ளி நிர்வாகத்தின் மீதும், மகளை கண்டித்து வளர்க்கத் தவறி விட்டதாக பெற்றோர் மீதும், குற்றச்சாட்டுகளை வாரி இறைப்பதால் மட்டும் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. ஒட்டுமொத்த சமுதாயமும் பொறுப்பேற்று, வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம் இது.
தமிழகத்தில், பூரண மதுவிலக்குக் கோரி, கட்சி தலைவர்கள் ஒரு சேரக் குரல் கொடுத்து வருகின்றனர். சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நல்ல ஒரு முயற்சியின் துவக்கமாகக் கருதி, இதை வரவேற்கலாம். ஆனால், இந்தக் கட்சித் தலைவர்கள், முதலில் தங்கள் கட்சித் தொண்டர்களை மதுப் பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபடுமாறு வலியுறுத்த வேண்டும். அதற்கு, இந்த தலைவர்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? ஒருவேளை, இந்தக் கட்சிகள் அடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றால், மதுவுக்கு எதிரான இவர்களது குரல், சட்டசபையில் ஓங்கி ஒலிக்குமா அல்லது பதவிக்காக கொள்கைகள் சமரசம் செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தின் பிரதான கட்சிகளான, அ.தி.மு.க., அல்லது தி.மு.க.,வே மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமரும் பட்சத்தில், பூரண மதுவிலக்கு என்பது அரிதிலும் அரிதான விஷயமாகிவிடும். காரணம், தமிழகத்தில், இந்த இரு கட்சிகளில், மது விற்பனைக்கு வித்திட்டு வேரூன்றச் செய்தது ஒரு கட்சி என்றால், அதற்கு நிரூற்றி, உரமிட்டு விருட்சமாக்கி, ஆல் போல் தழைக்கச் செய்தது, மற்றொரு கட்சி.ராஜாஜியால் முதன் முதலில் அமல்படுத்தப்பட்டு, தமிழகத்தில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் நடைமுறையில் இருந்த மதுவிலக்கு, தி.மு.க., ஆட்சியில், 1971ல் முடிவுக்கு வந்தது.
மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு, நஷ்டஈடாக நிதி உதவி வழங்கும் திட்டத்தை, அன்றைய மத்திய அரசு கொண்டு வந்தது; தமிழக அரசு ஏற்கனவே நடைமுறையில் இருந்த மதுவிலக்கை காரணம் காட்டி, மத்திய அரசிடம் நிதி உதவி கோரியது. ஆனால், புதிதாக மதுவிலக்கை கொண்டு வரும் மாநிலங்களுக்கு மட்டுமே இந்த விதிமுறை செல்லும் என்று கூறி இந்திரா அரசு, தமிழக அரசுக்கு நிதி உதவியை மறுத்து விட்டது.
நிதி நெருக்கடியை சமாளிக்க, மிகுந்த வருத்தத்துடன், மதுவிலக்கை ரத்து செய்வதாக கருணாநிதி அறிவித்திருந்தார். அன்று, மது விற்பனையால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 27 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இன்றைய ஒரு நாளைய டாஸ்மாக் வருமானம், அன்றைய ஓராண்டு வருமானத்தை விட மும்மடங்காகப் பெருகியும், நிதி நெருக்கடி தீர்ந்தபாடில்லை. ஆகையால் தான், தமிழகத்தில் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள், மது விலக்கைப் பற்றி சிந்திக்கவே இல்லை.
இந்தியாவில், சாராயத்தின் மீதான கலால்வரி, 2009 -10ம் ஆண்டு, 48,370 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2012 - 13ம் ஆண்டில், 82,740 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. விற்பனை வரியையும் சேர்த்து, மொத்த வரி வருவாய் மட்டும், ஒரு லட்சத்து, 44 ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வரிகளையும் சேர்த்து, இந்திய, 'குடி' மக்கள் ஆண்டு தோறும் குடிக்காக செலவிடும் மொத்த தொகை, ஒரு லட்சத்து, 93 ஆயிரம் கோடி ரூபாய். இது, தமிழகத்தின் ஓராண்டு பட்ஜெட்டை விட அதிகம்.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு, தமிழகத்தில் உள்ள, 11 மதுபான ஆலைகளில் இருந்து, மது கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பகுதியை மறைமுகமாக நிர்ணயிப்பது, இந்த சாராய ஆலைகளின் அதிபர்கள் தான் என்பது ஜீரணிக்க முடியாத உண்மை.இவற்றில், ஓரிரு நிறுவனங்கள் தவிர, மற்றவை அனைத்திலும், தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தான், பங்குதாரர்களாக இருக்கின்றனர்.
வரிகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தவிர்த்து, அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முக்கிய துறைகளான போக்குவரத்து மற்றும் மின் துறை, அதலபாதாளத்தில் இருப்பதை நாடே அறியும். இன்று, மாநிலத்தின் மொத்த வருவாயில், கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக் விற்பனை மூலமே கிடைக்கிறது.
இலவசங்கள், மானியங்களுக்காக, தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 45 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்ய, டாஸ்மாக் அத்தியாவசியமாகிறது. மானியங்களை குறைத்து, இலவசங்களை முற்றிலுமாக நிறுத்தினால், மதுக்கடைகளுக்கு உடனே மூடு விழா நடத்தி விடலாம். ஆனால், காசு வாங்கியே ஓட்டளித்துப் பழகிய நம் மக்கள், இலவசங்களை நிறுத்தினால் கொதிப்படைந்து விட மாட்டார்களா?
இலவசங்களை நிறுத்தி, நம் மக்களை பரிதவிக்க வைக்கும் மாபெரும் துரோகத்தை நிச்சயமாக நம் அரசியல்வாதிகள் செய்யத் துணிய மாட்டார்கள். இலவசங்கள் என்பது, தமிழகத்தில் தவிர்க்க முடியாததாகி விட்டது.இந்த சூழ்நிலையில், பொன் முட்டையிடும் வாத்தான டாஸ்மாக்கை கொன்று, குழியில் புதைக்க எந்த அரசுக்குத் தான் மனசு வரும்?
'குடி உயரக் கோன் உயரும்' - இது, அவ்வையார் அருளிச் சென்ற பொன்மொழி. குடிமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால், அரசனின் நிலையும் உயரும் என்பது இதன் பொருள்.
'பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து' - இது, வள்ளுவனின் வாக்கு.
நோயின்மை, செல்வம், விளைபொருள் மிகுதி, மக்களின் மன மகிழ்ச்சி, பாதுகாவல் என்ற ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு என்பது இதன் பொருள்.போதைக்கு அடிமையாகி, ஆரோக்கியத்தை தொலைத்து நிற்கும் மக்களிடம், செல்வமும், மன மகிழ்ச்சியும் எப்படி நிலைக்கும்?நல்வாழ்வுக்கும், நல்லாட்சிக்கும் இலக்கணம் வகுத்துத் தந்த வள்ளுவனையும், அவ்வையாரையும் பள்ளிப் படிப்போடு மறந்து விட்டோமே; எப்படி குடி உயரும் கோன் உயரும்?
No comments:
Post a Comment