Tuesday 11 August 2020

KANDY PATHTHIRUPPU ARCHIECT HISTORY




KANDY  PATHTHIRUPPU  ARCHIECT HISTORY



1815 ஆம் ஆண்டு வரையிலும் அந்நியரின் ஆக்கிரமிப்புக்குட்படாது தனது இறைமையைப் பேணிப் பாதுகாத்து வந்த மத்திய மலைநாட்டு கண்டி இராச்சியத்தின் வரலாற்று சின்னமாகத் திகழும் கண்டி (போகம்பரை) வாவியை நிர்மாணித்தவர் தேவேந்திரன் என்ற சிற்பி. 'கிரி முவுத' (பாற்கடல்) எனப்படும் இவ்வாவிக்குள் தேவேந்திரன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ஒரு கதை உள்ளது.

இலங்கைத் தீவின் தென்முனைப் பட்டினம் தேவேந்திரமுனை (தெவிநுவர) என அழைக்கப்படுகின்றது. இலங்கையின் வடக்கே திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் என்ற திருத்தலங்களும், மேற்கே முன்னேஸ்வரமும், கிழக்கே கோணேஸ்வரமும், சிவாலயங்களாக எழுந்து நிற்கின்றன. இதேபோல தேவேந்திர முனையில் புராதன சிவாலயம் ஒன்று அமைந்திருந்தது. ஐரோப்பியர்களின் வருகையின் பின்னர் அழிக்கப்பட்ட இவ்வாலயத்தின் இடிபாடுகளையும் சேதமுற்ற சிவலிங்கத்தையும் இன்றும் காணலாம். இப்பிரதேசத்தில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழ் பெண்ணின் மகனே கண்டி இராச்சியத்தின் ஆஸ்தான சிற்பியாக விளங்கிய தேவேந்திரன்.

கொத்மலைப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபலமான சிற்பியொருவனை மேற்படி தமிழ்ப்பெண் மணமுடித்து அவர்களின் மகனாகிய தேவேந்திரனுடன் கொத்மலை பிரதேசத்தில் குடியேறினாள். ஐவகையான சிற்பக் கலைகளைக் கற்று தேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'மூலாச்சாரி', பெருந்தச்சன், என்னும் பட்டம் பெற்று தேவேந்திர பெருந்தச்சன் என பிரபலமானான். கொத்மலை – மடக்கும்புறவில் காணப்படும் அம்பலம் இவனது முதலாவது நிர்மாணமாகும்.

கண்டி மன்னர்களாகிய இராஜாதி ராஜசிங்கன், ஸ்ரீ விக்கிரம சிங்கன் (1782 – 1815) ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் அரச சேவையில் ஈடுபட்ட தேவேந்திரனின் தலைசிறந்த நிர்மாணப் பணிகளாக கண்டியில் அமைந்துள்ள 'மகுல் மடுவ' எனப்படும் மண்டபமும், தலதா மாளிகையருகில் உருவாக்கப்பட்ட 'பத்திருப்பு' மண்டபமும் 'உல்பென் கெய' (நீர் சேகரிப்பு அறை), மாளிகையைச் சூழவுள்ள அகழி, அதனைச் சுற்றி அமைந்துள்ள அழகிய மதில் (வலாக்குலு பெம்ம) தற்போது கண்டி வாவியென அழைக்கப்படும் பாற்கடல் (கிரிமுவுத) அதன் நடுவே அமைந்துள்ள கோடை மாளிகை (கிரீஸ்ம மாளிகாவ) என்பன குறிப்பிடத்தக்கன.

தேவேந்திரனுக்கு இரண்டு புதல்விகள் இருந்தனர். சிற்பி தினசரி உடுநுவரையிலிருந்து கண்டி அரண்மனைக்கு வருவது வழக்கம். மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் தலதா மாளிகையில் தேவேந்திரனைக் கொண்டு புனரமைப்புகள் பலவற்றை மேற்கொண்டான். மன்னன் மக்களைச் சந்திப்பதற்காகவும், கண்டி நகரை கண்டு ரசிப்பதற்காகவும், யானைப்போர், காளைச் சண்டை, மல்யுத்தம் முதலியவற்றை பார்த்து ரசிப்பதற்காகவும், அரச சபையின் முக்கிய ஆலோசனைகளை நடாத்துவதற்காகவும் 'பார்த்து இருப்பு' மண்டபம் அமைக்கும் பணியும் தேவேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவே 'பத்திருப்பு' என மருவலாயிற்று. அச்சந்தர்ப்பத்தில் தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக பதவி வகித்த தெகிகம நிலமே வாழைத் தண்டுகளைப் பயன்படுத்தி உருவாக்கிய பத்திருப்பு மண்டபத்தின் எண்கோண மாதிரி வடிவமைப்பினைக் கொண்டு பாத்திருப்பு மண்டபம் உருவாகிக் கொண்டிருந்தது.

போகம்பரை    வாவி
சிற்பியின் இக்கட்டட நிர்மாணப் பகுதிகளுக்கு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கும் பொறுப்பு தியவதன நிலமேயாக பதவி வகித்த தெகிகம நிலமே மற்றும் உனம்புவ நிலமே ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டிருந்தது. அழகிய வேலைப்பாடுகளுடன் கண்களைக் கவரும் வண்ணம் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்த அவ்வெண்கோண மண்டப நிர்மாணப் பணிகள் நிறைவுற்றால் சிற்பி தேவேந்திரனுக்கும் தியவதன நிலமேவுக்கும் பெரும் புகழும், அன்பளிப்புகள், சன்மானங்கள் என பல்வேறு சலுகைகள் கிட்டுமென அரச பணியாளர்கள் பலர் கருதினர். அதனால் இக்கட்டட வேலைகள் கிரமமாக நிறைவுறா வண்ணம் சூழ்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன.

இப்பத்திருப்பு மண்டபத்திற்கு தேவையான உறுதியான மரங்களான நாகை, மயிலை முதலிய மரங்கள் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த நாலந்தா வனப்பிரதேசத்திலிருந்து தறிக்கப்பட்டன. காடுகளில் தறிக்கப்பட்ட மரங்கள் அளவு பிரமாணங்களுக்கமைய அறுக்கப்பட்டு யானைகளைக் கொண்டு கண்டிக்கு இழுத்துவரப்பட்டன. இவ்வாறு தறிக்கப்பட்ட மரங்கள் அறுக்கப்பட்ட போது தவறான அளவு பிரமாணங்கள் சூழ்ச்சிக்காரர்களால் மர அறுவையாளர்களிடம் வழங்கப்பட்டு நீள அகல வேறுபாடுகளுடனான சிலாகைகள் வேலைத்தளத்தை வந்தடைந்தன. இச்சதி வேலைகள் பற்றி தேவேந்திரன் ஏதுமறியாதவனானான். இருப்பினும் தனது உதவியாளர்களுடன் பத்திருப்பு மண்டப வேலைகளை மும்முரமாக மேற்கொள்ளலானான்.

தவறான அளவு பிரமாணங்கள் காரணமாக எண்கோண மண்டபத்தின் தோற்றத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டன. சதிகாரர்கள் இதுபற்றி அரசனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். மன்னரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் அளவுப் பிரமாணங்களை சிற்பி குறைத்து மரச்சிலாகைகளை அறுப்பதற்கு பணிப்புரை வழங்கியதாக மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது.

தமக்கு கிடைத்த தகவல்களைக் கொண்டு அரசன் எண்கோண மண்டப வேலைகளை கண்காணிப்பதற்கு வருகை தந்தான். மண்டபத்தின் மாதிரி வடிவமைப்பைவிட வேறுபாடு கொண்ட கட்டட நிர்மாணத்தைக் கண்டும் அரசன் எதுவுமே கூறாமல் மௌனம் காக்கலானான்.

பத்திருப்பு மண்டப வேலைகள் நிறைவுற்றன. திறப்பு விழாவுக்கான நேரமும் நாளும் குறிப்பிடப்பட்டன. பத்திருப்பு மண்டபத்தை நிர்மாணித்த சிற்பி தேவேந்திரனுக்கும், உதவியாளர்களுக்கும் அரச சன்மானங்களும், கிராமங்களும் நன்கொடையாக வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக நிறைவேறின. அதேவேளை திட்டமிட்ட மர அளவு பிரமாணங்களைக் குறைவாக குறிப்பிட்டு மண்டபத்தை நிர்மாணித்தமை காரணமாக அரசர் ஆத்திரமடைந்திருப்பதாகவும் அதற்கான தண்டனையாக சிற்பியின் கட்டை விரலை துண்டிக்கும்படி உத்தரவிடப்போவதாகவும் சிற்பிக்கு தகவல் கிடைத்தது.

இத்துணை காலமாக அரச வெகுமதிகளையும் மரியாதைகளையும் மட்டுமே பெற்றிருந்த தமது பரம்பரை இத்தகைய அரச தண்டனை பெறும் நிலையை அடைந்தமை குறித்து சிற்பி பெருங்கவலை கொண்டான். இதன்மூலம் தமது சந்ததிக்கும் சிற்பக்கலைக்கும் நேரவிருக்கும் அவமானம் பற்றி சஞ்சலமடைந்தான்.

விடிந்தால் திறப்பு விழா, இரவு முழுவதும் நித்திரையின்றி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் தேவேந்திரன். படுக்கையை விட்டெழுந்த சிற்பி பாற்கடலை (வாவி)யும், பத்திருப்பு மண்டபத்தையும் வெறித்துப் பார்த்தவாறு கண்டி வாவியைச் சுற்றி நடந்தான்.

தண்டனைக்காக விரல் துண்டிக்கப்படுவதனால் நேரப்போகும் இழுக்கையெண்ணி வெதும்பிய தேவேந்திரன் இறுக்கமான ஒரு முடிவுக்கு வரலானான்.

சற்றும் எதிர்பாராவண்ணம் சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தாமல் தன்னால் நிர்மாணிக்கப்பட்டு விடிந்தால் திறப்பு விழா காணும் எண்கோண பத்திருப்பு மண்டபத்தை ஒரு கணம் உற்று நோக்கி கண்ணீர் வடித்த சிற்பி தேவேந்திரன் தன்னால் உருவாக்கப்பட்டு பாற்கடல் என பெயர் பெற்ற கண்டி வாவிக்குள் பாய்ந்து தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டான்.

பொழுது புலர்ந்தது. வாவியில் உயிரற்ற தேவேந்திரனின் பூதவுடல் மிதந்து கொண்டிருந்தது. தகவலறிந்த அரசனும் அமைச்சர் பிரதானிகளும் சொல்லொணாத் துயரம் கொண்டனர். பூரண அரச மரியாதைகளுடன் சிற்பி தேவேந்திரனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

சி.கே.முருகேசு

நன்றி

No comments:

Post a Comment