Sunday 9 August 2020

DEIVAMAGAN MOVIE





DEIVAMAGAN MOVIE


.அந்த நாள் ஞாபகம் - பார்ட் 12

நிறைகுடம் பற்றி எழுதும்போது ஒரு விஷயம் குறிப்பிட மறந்து விட்டேன். தங்க சுரங்கத்திலிருந்து ஆரம்பித்து அஞ்சல் பெட்டி வரை நான்கு படங்களுக்கு நான்கு புதிய இசையமைப்பாளர்கள் இசை அமைத்ததை பேசினோம். தொடர்ந்து ஐந்தாவது படமான நிறைகுடத்திற்கும் அதுவரை நடிகர் திலகத்தின் படங்களுக்கு இசையமைக்காத ஒருவர் இசை அமைத்தார். ஆம், மெல்லிசை மாமணி என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு வி.குமார் அவர்கள். பாலச்சந்தரின் நீர்க்குமிழி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கேபி மற்றும் முக்தா பிலிம்ஸ் படங்களுக்கு இசையமைத்த குமார் நிறைகுடம் படத்தில் மூன்று அருமையான பாடல்களை கொடுத்தார். அடுத்து இது போல நடிகர் திலகம் படங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் ஒரு வேளை இன்னும் பெரிய அளவிற்கு வந்திருக்கலாம். அவரை பற்றிய குறிப்புகளை சென்ற வார கட்டுரையின் இறுதியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தது கடைசி நேரத்தில் நழுவி விட்டது.

சரி, அடுத்த படத்திற்கு வருவோம். தமிழ் சினிமாவின் அந்தஸ்தை வானளாவ உயர்த்திய படம். நம்மால் என்றுமே மறக்க முடியாத படம். ஆம், சங்கர், கண்ணன், விஜய் இந்த மூவரை மறக்கத்தான் முடியுமா? நடிகர் திலகத்தின் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்த பெரியண்ணன் சாந்தி பிலிம்ஸ் சார்பில் பந்தபாசம்,அன்பு கரங்கள் ஆகியவற்றுக்கு பிறகுதயாரித்த மூன்றாவது படம், தெய்வ மகன். நிறைகுடம் வெளியாகி சரியாக நான்கு வாரங்கள் ஆன நிலையில் 1969 செப்டம்பர் 5 அன்று ரிலீஸ் என்று அறிவிக்கப்படுகிறது. இன்றைக்கு இப்படி இடைவெளியே இல்லாமல் வெளியிட்டிருக்கிறார்களே என்று ஆதங்கப்படும் அளவிற்கு அன்று அப்படிப்பட்ட எண்ணங்கள் இருந்தனவா என்பது சந்தேகமே. இருந்திருக்கலாம், எனக்கு அதை பற்றி தெரியாமலும் இருந்திருக்கலாம். 

செப்டம்பர் 5 வெள்ளிக்கிழமை படம் மதுரை நியூசினிமாவில் ரிலீஸ். வழக்கம் போல் சனிக்கிழமை மாலை தாத்தா வீட்டிற்கு போய்விட்டு இந்த முறை ஞாயிற்றுக்கிழமை மார்னிங் ஷோ போவதற்கு வீட்டில் அனுமதி வாங்கினோம் ஐந்து படங்களுக்கு பிறகு மீண்டும் கஸினுடன் சேர்ந்து போகிறேன். காலையில் 8.45 மணிக்கே கிளம்பி போய்விட்டோம். தியேட்டர் வாசலில் அந்த நேரத்திலேயே சரியான கூட்டம். நான் ஏற்கனவே சொன்னது போல் நியூசினிமா அகலம் குறைந்த ஒரு சின்ன தெருவில் அகலவாக்கில் அமைந்த அரங்கம். பெரிய மெயின் கேட் அது படம் முடிந்து ஆட்கள் வெளியே வருவதற்க்கு மட்டுமே திறக்கப்படும். தியேட்டரின் வலது ஓரத்தில் ஒரு கேட் அது பெண்கள் வழி. அவர்களுக்கான டிக்கெட்டுகள் உள்ளே இருக்கும் கவுன்ட்டரில் கொடுக்கப்படும். அதை ஒட்டி தியேட்டரின் அலுவலக அறை. மெயின் கேட்டின் இரண்டு பக்கங்களிலும் ஆண்களுக்கான கவுன்டர்கள். இடது புறம் இரண்டு, வலது புறம் ஒன்று. அன்றைய நாளில் டிக்கெட் கட்டணங்கள் பெண்களுக்கு மட்டும் 0.40 பைசா, அதற்கு பின்னால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் 0.70 பைசா (நடுவில் தட்டி வைத்து மறைத்திருப்பார்கள்),அதற்கும் பின்னாடி ஆண்களுக்கு 0.80 பைசா இவை கீழே. பால்கனி என்று சொல்லப்படும் மாடியில் Rs 1.15, 1.70 & 2.50 ஆகியவை. மெயின் கேட்டிற்கு இடது புறம் இருக்கும் இரண்டு கவுன்ட்டரில் 0.70 & 0.80 பைசா டிக்கெட்டுகள் கொடுப்பார்கள். வலது புறம் பால்கனி டிக்கெட்டுகள் மூன்றிற்கும் ஒரே வரிசைதான். 

நாங்கள் போகும்போதே கூட்டம் அதிகம் என்பதால் ஹை கிளாஸ் டிக்கெட்டுகள் (பால்கனி) வரிசையில் நின்றுகொண்டோம். அந்த கவுன்ட்டருக்கும் பெண்கள் கேட்டிற்கும் நடுவில் ஒரு வெற்றிலை பாக்கு கடை உண்டு. எத்தனை களேபரத்திலும் அங்கே வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். அது மட்டுமல்ல பெண்கள் கேட் இருக்கும் இடத்தை தாண்டியவுடன் ஒரு ஆரம்ப நிலை பள்ளிக்கூடம் (எலிமெண்டரி ஸ்கூல்) வேறு இருக்கும். பெரிய படங்கள் ரிலீசாகும்போது பாவம் அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளே போக வேண்டியிருக்கும். சமயத்தில் போலீஸ் கூட்டத்தை விரட்டும்போது இன்னும் பிரச்சனைகள்.

நமது விஷயத்திற்கு வருவோம். நாங்கள் இருவரும் அந்த வெற்றிலை பாக்கு கடைக்கும் பெண்கள் கேட்டிற்கும் நடுவில்தான் நிற்கிறோம். ஆனால் இந்த வரிசையில் நிற்பதில் ஒரு ஆபத்து உண்டு. என்னவென்றால் அது தெரு என்பதால் இருபுறமும் கம்பிகள் போட்ட வரிசை இருக்காது. டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கும்வரை பிரச்சனையில்லை. ஆனால் கொடுக்க ஆரம்பித்தவுடன் வெற்றிலை பாக்கு கடைக்கு வந்து ஏதோ வாங்குவது போல வரிசையில் ஊடே நுழைவது, பெண்கள் கேட்டின் பக்கமும் இதே போல் நின்றுகொண்டு அங்கே விரட்டும்போது சிதறும் கூட்டம் இந்த வரிசையில் நிற்பவர்கள் மேல் வந்து வீழ அந்த குழப்பத்தை பயன்படுத்தி வரிசையில் ஊடே நுழைந்து இது போல பல அநியாயங்கள் நடக்கும். 

அன்றும் அது போலத்தான் நடந்தது. கவுன்ட்டர் திறந்து சிறிது நேரம் ஒழுங்காக சென்ற வரிசை இது போன்ற ஊடுருவலால் சிதற நாங்கள் பின்னாடி தள்ளப்பட்டோம். அதன் பிறகு போலீஸ் வந்து ஒழுங்குபடுத்த வரிசை நகர்கிறது.கடை தாண்டி கேட்டில் நுழைய இரண்டு படி ஏற வேண்டும். அப்போது 1.15 டிக்கெட் full என்று போர்டு மாட்டுகிறார்கள். ஒரே வரிசை என்பதால் சார், 1.15 இல்லை.1.70, 2.50 டிக்கெட் மட்டும்தான் இருக்கு. அது வாங்குறவங்க மட்டும் வாங்க. என்று ஒருவர் கேட்டிற்கு அந்தப்பக்கம் நின்று கத்துகிறார். கஸின் என்னிடம் மூன்று ரூபாதான்டா இருக்கு என சொல்ல, நான் என்கிட்டே 50 பைசா இருக்கு. 1.70 வாங்கிடலாம் என்று சொல்கிறேன். எங்களுக்கு முன்னால் ஒரு பத்து பேர் இருக்கிறார்கள். எங்களுக்கு முன்னாடி மூன்று பேர் இருக்கும்போது 1.70 டிக்கெட்டும் full என்று சொல்லி போர்டு மாட்டுகிறார்கள். மூன்று பேரில் இரண்டு பேர் திரும்பி விட அடுத்து எங்கள் முறை வந்து விட்டது. வேறு என்ன செய்வது என்று தெரியாமல் கஸின் ரெண்டு 1.70 என்று கேட்க, இப்போதானே சொன்னோம் full ஆயிடுச்சுன்னு. 2.50 டிக்கெட்தான் இருக்கு என்று சொல்லி வேணுமா? இல்லையென்றால் வரிசையை விட்டு வெளியே போ என்கிறார்கள். சாதாரணமாக வெளியே அனுப்பி விடுவார்கள். அப்படி போனால் திரும்ப உள்ளே நுழைய முடியாது. என்ன நடந்தது என்றால் கஸின் கவுன்டரில் இருந்த ஆளுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே நான் டிக்கெட் வாங்கி கொண்டு வெளியே போகும் அந்த இடத்திற்கு போய்விட்டேன். என் கஸின் அங்கே இருந்தவர்களிடம் அந்த பக்க லேடீஸ் கேட் வழியாக வெளியே போய்க்கொள்கிறோம் என்று சொல்ல நாங்கள் வலது புறம் இருக்கும் collapsible கேட் பக்கம் அனுப்பி விடுகிறார்கள். அதன் அருகே போகும்போது பால்கனி செல்லும் மாடிப்படியில் எங்கள் உறவினர் ஒருவர் ஏறிப்போவதை நான் கஸினிடம் சுட்டிக் காட்ட கஸின் அவர் பெயரை சொல்லி சத்தமாக கூப்பிட்டும் அவருக்கு அங்கே இருந்த சத்தத்தில் கேட்கவில்லை. எங்களாலும் டிக்கெட் இல்லாத காரணத்தினால் மாடிப்படி பக்கம் போக முடியவில்லை. அவரை கூப்பிட முயற்சி செய்தது எதற்கென்றால் அவரிடம் பணம் கேட்டு வாங்கி 2.50 டிக்கெட் வாங்கத்தான், எங்களை வெளியே போங்க என்று சொல்லி அந்த பக்கம் அனுப்பி விட்டார்கள். ரொம்ப கஷ்டமாக போய்விட்டது. இவ்வளவு தூரம் வந்து டிக்கெட் கிடைக்கவில்லையே என்று வருத்தம். என் கண்ணில் கண்ணீர் லேசாக எட்டி பார்க்கிறது.

அப்போது ஆபிஸ் அறையில் மானேஜர் அமர்ந்திருப்பதை பார்த்தோம். தாத்தாவிற்கு தெரிந்தவர். எங்க ஊர் ராஜாவிற்கு டிக்கெட் கொடுத்தவர். என் கஸின் வா அவரை போய் பார்க்கலாம் என்று சொல்ல நீ மட்டும் போ என நான் சொல்ல நீயும் வந்தாதான் சரியா இருக்கும். சின்ன பையன்னு உன்னை பார்த்தவுடனே டிக்கெட் கொடுப்பார் என்று சொல்ல நாங்கள் இருவரும் ஆபிஸ் வாசலுக்கு போக உள்ளே விட மாட்டேன் என்கிறார்கள்..சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த அவர் எங்களை உள்ளே கூப்பிட என் கஸின் தாத்தாவின் பெயரை சொல்லி என்னையும் காண்பித்து சென்டிமென்ட் அஸ்திரத்தை பிரயோகிக்க அவர் உடனே அங்கே இருந்தவரிடம் ஹை கிளாஸ் டிக்கெட் இருக்கா பாரு என்று சொல்ல இல்லை சார், 2.50 டிக்கெட் மட்டும்தான் இருந்துச்சு பார்க்கிறேன் என்று போனவர் திரும்ப வந்து மானேஜரிடம் சார் அதுவும் full. 0.80 பைசா டிக்கெட்தான் இருக்கு என்று சொல்ல. மானேஜர் டிக்கெட் இல்லையாமே 0.80 பைசா போவீங்களா இல்லை மாட்னிக்கு வேணா டிக்கெட் தர சொல்லட்டுமா என்று கேட்க நாங்கள் பரவாயில்லை சார். 0.80 பைசா டிக்கெட்டில் போறோம்.என்று சொன்னோம் அவர் பாவம் தாத்தாவின் பழக்கத்தை வைத்துக்கொண்டு இவர்களை எப்படி கீழே அனுப்பவது என்று யோசிக்கிறார். அவருக்கு தெரியுமா அன்னிக்கு நாங்க இருந்த மூடிற்கு  வழியே இல்லைனா ஸ்கீரினுக்கு முதல் வரிசைதான் இருக்குன்னு சொல்லியிருந்தாகூட ஓகே என்றிருப்போம். அந்த ஆளை அழைத்து இரண்டு டிக்கெட் வாங்கி உள்ளே கூட்டிப்போய் பின்னாடி உட்கார வை என்று சொல்கிறார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு தியேட்டர் ஆள் வாங்கி கொடுத்த டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பின்வரிசையில் போய் அமர்ந்தபோது என்னவோ பெரிய சாதனையை செய்தது போல ஒரு பெருமிதம்.       

படம் ஆரம்பிக்கிறது. பெரிய கட்டிடத்தை காட்டி ஆபிஸ் உள்ளே பெரிய சேரின் பின்பக்கம் காட்டும்போதே தியேட்டர் அலற ஆரம்பித்து விட்டது. பெரிய கோட்டின் காலரை இழுத்துவிட்டு முகத்தை மறைத்தபடியே லிப்ட் இறங்கி காரில் ஏறி வீட்டிற்கு சென்று படி ஏறும்போது வேலைக்காரன்  அம்மாவுக்கு பிரசவ வலி எடுத்துடுச்சு நர்சிங் ஹோம்  கூட்டிட்டு போயிருங்காங்க என்றவுடன் வேலையாளுக்கு பண நோட்டுகளை அபிஷேகம் செய்து சட்டென்று திரும்பி மீண்டும் ஏதோ நினைவு வந்தது போல் மாடிப்படி ஏறி டிரஸ் மாற்றி பீரோ திறந்து பணத்தையும் தங்க காசுகளையும் எடுத்து  ஆஸ்பத்திரி அடைந்து மேஜரிடம் பார்வதி எப்படியிருக்கா, பிறக்கப் போறது இது போல தங்க விக்கிரகமாக இருக்கணும் என்று உணர்ச்சி ததும்ப பேச அந்நேரம் மேஜருக்கு நர்ஸின் அழைப்பு வர வரிசையாக மாட்டியிருக்கும் குழந்தைகள் போட்டோக்களை பார்க்க ஆரம்பிக்க டைட்டில். அது முடிந்து மேஜர் வந்து ஆண் குழந்தை என்று சொல்ல ஆசையாக உள்ளே ஓடி சற்று நேரத்தில் தளர்ந்த நடையும் கையில் இருக்கும் தங்க நாணயங்களை ஒவ்வொன்றாக கீழே போட்டுக் கொண்டு வந்து மேஜரிடம் குழந்தையை கொன்னுடு என்ற சொல்ல சங்கர் என்று மேஜர் குரலை உயர்த்த ராஜு என்று முகம் திருப்பி இடதுபுற கன்னத்தை காட்டி பாரு நல்லா பாரு என்று நடிகர் திலகம் முகம் தெரிந்தவுடன் உள்ளே இடி இடிக்கிறது. தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதங்கள். என்னால் முடியாது என்று மேஜர் சொல்ல ராஜு என்று கத்தியவாறே இடது காலை தரையில் மூன்று முறை தட்டி இடது கையை மூன்று முறை மேலும் கீழும் ஆட்ட கைதட்டல்கள் காதை கிழிக்க பேப்பர்மாரி திரையை மறைக்க தியேட்டரே வெடித்து சிதறுகிறது. காட்சி முடியும் நேரம் அமைதியாக வெளியேறும் நடிகர் திலகம் வாசலில் போய் லேசாக திரும்பி பார்ப்பார். இங்கே மீண்டும் இடி. 

அடுத்து குழந்தை பாபாவின் ஆஸ்ரமத்திற்கு போவது, கண்ணன் என்ற பெயரில் சிறுவனாக வளர்வது, அவன் முரட்டுத்தனத்தை குறைக்க சிதார் வாசிக்க பாபா சொல்ல, அவரே கேட்டதும் கொடுப்பவனே என்று இரண்டு வரி பாட காலங்கள் பறந்தோடி இளைஞன் கண்ணனாக மீண்டும் திரையில் நடிகர் திலகம் தோன்ற மீண்டும் சத்தம் உச்சம் பெறுகிறது. அந்த சிதார் இசையை அப்படியே அடுத்த காட்சிக்கு கடத்தி கண்மூடி அதை ரசித்திருக்கும் பண்டரிபாய் அறிமுகம். ட்ரான்ஸிஸ்டர் ஸ்விட்ச்சை ஒரு கை ஆப் செய்ய முதல் காட்சியில் பார்த்த சங்கர் இப்போது சற்றே வயதாகி இன்னும் மெருகேறி அழகான ஹேர் ஸ்டைலோடு அறிமுகம். இங்கே மீண்டும் அரங்கம் அதிர்கிறது. எனக்கு அப்போது ரசிகர்களை கைதட்ட வைப்பதற்காகவே காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றனவோ என்று தோன்றியது. ரவிசங்கர் சிதார் இசையை கேட்டுகிட்டே இந்த பார்வதி சங்கர்  வருது கூட தெரியலே இல்லே என்று ஆரம்பிக்கும் காட்சி, படியேறி பேசிக் கொண்டே போகும்போதே விஜயன்கிட்டேயிருந்து லெட்டர் வந்ததா என்று பண்டரிபாய் கேட்கும்போதே இங்கே கைதட்ட ஆரம்பித்து விட்டார்கள். படம் ஆரம்பித்தபோதிலிருந்தே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதாவது நிறைய ரீப்பீட் ஆடியன்ஸ் வந்திருக்கிறார்கள் என்று. அது உண்மைதான் என்று அப்போது நிரூபணம் ஆனது. 

நான் இல்லாம என் பையன் என்ன கஷ்டப்படறனோ என்றவுடன் காட்சி மாற ஒரு கையில் தூண்டில் முகத்தை மறைக்கும் ரவுண்டு ஹாட்-ஐ ஒரு கையால் உயர்த்தி பூரண சந்திரனாக அழகின் மன்மதனாக நடிகர் திலகம் காட்சி தர மீண்டும் இங்கே இடி முழக்கம். பின் ஜெயலலிதா அறிமுகம், நாகேஷ் மாறுவேடத்தில் வந்து நடிகர் திலகத்திடம் பேசுவது அந்த இடங்களிலெல்லாம் நடிகர் திலகத்தின் வசனம் பேசும் முறை, நுனி நாக்கு ஆங்கிலம் கொஞ்சம் தமிழ் என்று கலந்து வருவதை தியேட்டர் ஆரவாரத்துடன் வரவேற்கிறது. அடுத்து காதல் மலர் கூட்டம் பாடல். அவர் ஆரம்பத்தில் நடந்து வரும் நடைக்கே அதிர்கிறது. ஆர்வ மிகுதியால் நடுவிலே இருக்கும் தட்டியை சிலர் பலமாக தட்ட ஒரே சவுண்ட். பாட்டு முடியும்வரை ஓயவில்லை பின் நடிகர் திலகம் நாகேஷ் சொல்படி நடிக்க ஜெயலலிதா அவரிடம் அனுதாபப்பட்டு பேசும்போது நம்பியாரும் விஜயஸ்ரீயும் வந்து சொதப்ப அதற்கு அடுத்த காட்சியில் நம்பியார் பணம் கேட்டு விட்டு உங்கப்பாகிட்டே உனக்குன்னு கேளு என்றவுடன் இல்லை உனக்குன்னு கேட்கிறேன் என்பாரே அதற்கு சரியான ரெஸ்பான்ஸ். 

அடுத்து அங்கே கண்ணன் கேட்டதும் கொடுப்பவனே பாட ஆரம்பிக்க கைதட்டல். பாடல் சூடு பிடித்து இறுதி சரணத்தில் ஹை பிச்சில் கண்ணன் திருவடி எண்ணி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா என்று முடிக்கும்போது செம கைதட்டல். நாகையா கண்ணனிடம் டாக்டர் அட்ரஸ் மற்றும் உனக்கு  பெற்றோர்கள் என்று சொல்லி இறந்தவுடன் அந்த காட்சி முடியும். உடனே விஜய் அப்பாவிடம் பணம் கேட்கும் காட்சி. அதுக்கு முன்னாடி பண்டரிபாயை தாஜா பண்ணுவார். அதிலே இரண்டு வசனத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ். இட்லிங்கிற பேர்ல இவ்வளவு பெரிசா ஒன்னு துண்ணுவியே என்று கலாய்க்கும்போதும் அப்பாகிட்டே சொல்லி எனக்கு பணம் வாங்கி கொடுத்துட்டேனா உன்னை ஒரு பஸ்ட் கிளாஸ் தமிழ் பிக்சர்க்கு கூட்டிட்டு போறேன் என்பார். 

அதன் தொடர்ச்சியாக அப்பாவும் மகனும் சந்திக்கும் காட்சி. நேரே நில்லு, வளையாதே என்று அப்பா சொல்ல சொல்ல விஜய உடம்பை கோணல்மாணலாக நிற்பது தியேட்டரில் பிரமாதமாக ரசிக்கிறார்கள். விஜய் ஜஸ்ட் எ லாக் அண்ட் பிப்டி தெளசண்ட் என்றவுடன் அதையே அப்பா திரும்ப சொல்லி எதுக்கு என்று கேட்பது உங்கப்பா ஏழை எங்கப்பா பணக்கார் என்பது, கொடுத்துதான் பாருங்களேன் என்று பண்டரிபாய் சொல்ல கொடுத்தா அப்புறம் எங்கே பார்க்கிறது நீ சொல்லிட்டேலே என்றவாறு செக் எழுதி கொடுக்க விஜய் வாங்கிக்கொண்டு அப்பாவிற்கும் அம்மாவிற்கும் முத்தம் கொடுத்து விட்டு போக அவனை பார்த்தா எனக்கு பொறாமையாக இருக்கிறது என்று நடிகர் திலகம் சொல்லும் காட்சியெல்லாம் ஓஹோ! 

உடனே கண்ணன் கடைவீதியில் சண்டை போடுவது, டாக்டர் கிளினிக்கிற்கு வருவது. ஒன்று கவனித்து பார்த்தால் சீரியஸ் ஜாலி சீரியஸ் என்ற வரிசையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.டாக்டர் கிளினிக்கில் கண்ணனுக்கும் மேஜருக்கும் நடக்கும் வாக்குவாதங்கள் அனல் பறக்க இங்கே கைதட்டல்களும் அப்படியே. அந்த காட்சியில் இரண்டு இடங்களில் செம கைதட்டல். என்னை ஏன் வெறுத்தாங்க என்று திரும்ப திரும்ப கேட்கும் கண்ணனை கண்ணாடி முன் கொண்டு நிறுத்தி இதற்குத்தான் என்றவுடன் நடிகர் திலகம் ஒரு சிரிப்பு சிரிப்பார். அதற்கு செம அலப்பறை என்றால் அப்பா மாதிரியே மகனும் டாக்டர் என்று சொல்லியவாறே காலை மூன்று முறை தரையிலே அடித்து கையை மேலும் கீழும்  ஆட்டும் போது பயங்கர அலப்பறை. 

அடுத்து அன்புள்ள நண்பரே பாடல். நடிகர் திலகம் ஸ்டைலில் தூள் கிளப்புவார். ரசிகர்களுக்கு கேட்க வேண்டுமா? அடுத்த காட்சி மேஜர் வீடு. சிதார் வாசிப்பது யார் என்று ஜெயலலிதா கேட்க  மேஜர் சமாளிப்பார். மேஜர் மேலே போய் பார்க்கும்போது நடிகர் திலகம் இருக்க மாட்டார். இரவில் வீட்டிற்கு போய் அம்மாவை தம்பியை பார்ப்பது, தம்பி thief thief என்று கத்துவதெல்லாம் செம. அப்பா நடிகர் திலகம் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வர, மூன்று பேரையும் ஒருசேர பார்த்த சந்தோஷத்தில் கண்ணன் ஓட முயற்சிக்க, அப்பாவின் துப்பாக்கியிலிருந்து வரும் குண்டு கண்ணன் கையில் பாய சிரித்துக்கொண்டே மேலிருந்து குதித்து கதவை திறந்து வெளியில் ஓட இடைவேளை. ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள். எங்களுக்கு பயங்கர சந்தோசம். காரணம் இவ்வளவு கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கினது வேஸ்ட் ஆகலே. நல்ல படத்திற்குத்தான் கிடைத்திருக்கிறது என்று சந்தோசம்

இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்தவுடன் தெய்வமே பாடல். இடைவேளையில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த மக்களுக்கு மறுபடியும் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று கை வலிக்க கை தட்டுகிறார்கள். அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன் என்ற வரிகள், மாடிப்படியில் ஏறி ஏறி இறங்குவது,பாட்டின் இறுதி சரணத்தில் தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் எனும் வரிகளின்போது இரண்டு கைகளையும் மேலே தூக்கி உள்ளங்கைகளை ஆசி கூறுவது போல காட்டும் அந்த போஸ். செம அலப்பறை.

அடுத்த முக்கியமான காட்சி கோவிலில் கண்ணன் அம்மாவை பார்ப்பது. வசனமே இல்லாமல் சீர்காழியின் மனம் உருக்கும் அசரீரி குரலில், நடிகர் திலகம் தனது தாயை பாசம் பொங்கும் பார்வையில் எனக்கு அம்மா என்று கூப்பிட ஆசையாய் இருக்கிறது. என்னை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று கண்ணில் நீர் கட்டி நிற்க பார்ப்பதும் பண்டரிபாய் அந்த பார்வையை தாங்க முடியாமல் தவிப்பதும், தியேட்டரில் அனுதாபமும் கைதட்டலும் ஒரு போல நிறைந்து நின்ற காட்சி. பண்டரிபாய் வீட்டிற்குள் தள்ளாடி நுழைகிறார். அவரை பார்த்துவிட்டு அப்போது அந்த பெரிய மாடிப்படிகளில் ஒரே சீராக நடிகர் திலகம் ஓட்டமும் நடையுமாக இறங்கி ஓடி வரும் அந்த இடம் கைதட்டல் அள்ளியது. பண்டரிபாய் கோவிலில் நடந்ததை சொல்ல சொல்ல அவர் முகம் காட்டும் உணர்வுகள். 

சங்கர் என்ற அப்பா பாத்திரம் தன் பழைய நண்பன் டாக்டர் ராஜூவை தேடி வரும் காட்சி. மாடிப்படிகளில் இறங்கி வரும் மேஜரை கண்களின் மூலமாகவே காட்டும் நடிகர் திலகத்திற்கு அப்பவே கைதட்டல். பேச்சு ஆரம்பித்து மகனை பற்றி கேட்க முதலில் மறுக்கும் மேஜர். என் பையன் பிச்சைக்காரனாய் அலையறான் என்று குற்றம் சாட்டும் நடிகர் திலகம். என் வீட்டிற்கே திருட வந்தான். நானே துப்பாக்கியால சுட்டேன் என்பார். மகன்னு தெரிஞ்சுமா சுட்டிங்க? என்று மேஜர் கேட்க நடிகர் திலகம் இல்லை என்பதை ஒரு நொடி முகமசைப்பிலே சொல்வார். உண்மையை சொன்னால் முதல் தடவை பார்க்கும்போது அது நான் சரியாக கவனிக்கவில்லை. சரியான கைதட்டல் விழுந்ததும்தான் எதுக்கு எதுக்கு என்று கஸினை நச்சரிக்க அப்புறம் சொல்றேன் என்கிறார். ஆருர்தாஸ் சரியான வசனங்கள் எழுதியிருப்பார். 25 வருஷத்திற்கு முன்னாடி என்னை வேண்டாம்னு சொன்ன அப்பா அம்மா எப்படி இருப்பாங்கன்னு பார்க்கிறதுக்கு திருடனா வராமா திருடன் மாதிரி வந்திருந்தா? அதாவது நான் சொல்லற மாதிரி அவன் சாகாம நீங்க சொல்ற மாதிரி உயிரோடு இருந்தா? என்று மேஜர் சொல்ல நடிகர் திலகம் அவரை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே ராஜு நீ டாக்டர்க்கு படிக்காம வக்கீலுக்கு படிச்சிருந்தா நிறைய சம்பாதிச்சிருக்கலாம் என்பார். கைதட்டல் அள்ளிய வசனம் அது. இருவருக்கும் இடையே இருந்த அந்த ice breaking என்று சொல்வார்களே அது நடந்து இருவரும் சிரிக்கும் காட்சி. அந்த பிளாங் செக் எழுதி கொடுத்துவிட்டு கிளம்பும் நடிகர் திலகம் சிதார் இசையை கேட்டவுடன் ராஜு ராஜு என்று வார்த்தை வராமல் கண்கள் வீடு முழுவதும் அலைபாய பார்ப்பார். என்ன சங்கர் உன் மகனை பார்க்கணுமா என்று கேட்டவுடன் ஆங் என்று சொல்லிவிட்டு பிறகு தனக்கு கேட்க அருகதை இல்லை என்பது போல கைகளை வைத்து சைகை செய்து அவர் வீட்டை விட்டு வெளியேறுவார். தியேட்டர் முழுக்க கைதட்டியது.      

மேஜர் அந்த பிளாங் செக் எடுத்துக் கொண்டு கண்ணனை பார்க்கும் காட்சியும் செம ரெஸ்பான்ஸ். உன்னை உங்கப்பா தெரிஞ்சுக்கிட்டார் என்றதும் கோவிலில் அம்மாவை பார்த்தேன். அவங்க போய் சொன்னதும் எதையும் கணக்கு போட்டு பார்க்கும் எங்க அப்பாவோட மூளை என்னை தெரிஞ்சுக்கிட்டிருக்கும் என்ற வசனத்திற்கும், என் தலையெழுத்தை கோணலா எழுதின எங்கப்பாவோட கையெழுத்து எவ்வளவு அழகா இருக்கு பாருங்க என்ற வசனத்திற்கும் அப்லாஸ். மேஜர் ஒதெல்லோ டெஸ்டிமோனா கதையை சொல்ல அவர் போனதும் கண்ணாடி முன் நின்று ஒதெல்லோ டெஸ்டிமோனா என்று தனக்கு தானே சொல்லி கொள்ளும் நடிப்பிற்கும்  வரவேற்பு.

படத்தின் உயிர்நாடியான காட்சி. மூன்று பாத்திரங்களும் திரையில் தோன்றும் கிட்டத்தட்ட 7 நிமிடம் 30 நொடிகள் வரும் அந்த காட்சியை பற்றியோ அல்லது ரசிகர்கள் அதை வரவேற்ற விதத்தை பற்றி எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை. கதவு கைப்பிடி திறக்கும்போதே இங்கே ஆரம்பித்து விட்டது அலப்பறை. தேவையில்லைனு நினைச்ச தந்தையும் அவரை தேடி அலைஞ்ச மகனும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கிற அற்புதமான காட்சி  என்ற கண்ணன் பேசும் ஆரம்ப வசனத்திலிருந்து பயப்படாதீங்க அவன் நிழலா இருந்து நான் பாதுகாப்பேன்.அவனுக்கு ஒரு ஆபத்துன்னா என் உயிரை கொடுத்தாவது அவனை காப்பாத்துவேன் என்று அந்த இடது கையை மேலே உயர்த்தி வரேன் என்று கண்ணன் சொல்லிவிட்டு போகும்வரை தியேட்டர் தியேட்டராக இல்லை. மக்கள் மக்களாக இல்லை. திரையிலும் திரைக்கு வெளியேயும் உணர்ச்சி பிழம்பாய் காட்சிகள். அந்த மூன்று பேரில் எந்த சிவாஜி ஜொலித்தார் என்பது அந்த இறைவனுக்கே தெரியாது என்றே சொல்ல வேண்டும். இந்த காட்சியின்போது அன்று நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தால் அதற்கே ஒரு தனி பதிவு போட வேண்டும் என்பதனால் விளக்கமாக எழுதவில்லை.

இடையில் கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ பாடல், நடிகர் திலகம் ஜெயலலிதா காதல் கனிவது, வீட்டிற்கு கூட்டி வந்து அப்பாவை ஜப்பான் பொம்மை என்பது இதெல்லாம் இன்னொரு பக்கம் பிரமாதமாக ரசிக்கப்படுகிறது. விஜய்யோட கல்யாணத்தன்னிக்கு உனக்கு ஒரு பரிசு கொடுக்க போறேன் என்று நடிகர் திலகம் பண்டரிபாயிடம் சொல்லும்போதே அதில் ஏதோ இருக்கிறது என்று தோன்றியது. ஒவ்வொரு முறையும் நடிகர் திலகத்தின் விஜய் பாத்திரம் பேசும் அந்த மழலை தமிழுக்கு செம வரவேற்பு (உங்க அப்பா நல்ல புல்புல்தாரா வாசிப்பார்னு சொன்னியே). காதலிக்க கற்று கொள்ளுங்கள் பாடலில் அவர் செய்யும் சேட்டைகளுக்கு விசில் பறக்கிறது.

இதன் பிறகுதான் விஜய் பாத்திரம் நம்பியாரின் ரகசியத்தை தெரிந்து கொள்வது, அவர் கட்டி போடப்படுவது (த்ர்ஸ்டியா இருக்குடா, ஐஸ் வாட்டர் ஐஸ் வாட்டர்) பின் நம்பியார் பணம் கேட்பது, கண்ணன் அப்பாவை கட்டிப்போட்டு விட்டு தான் கார் எடுத்து போவது, கிளைமாக்ஸ் சண்டை, கண்ணன் உயிரை தியாகம் செய்வது என்று போனது. கண்ணன் பாத்திரத்திற்கு இப்படித்தான் ஒரு முடிவை வைப்பார்கள் என்று கிட்டத்தட்ட யூகித்திருந்தபோதும் அந்த காட்சி வரும்போது மனசு கனத்து போனது நிஜம். அதுவும் அந்த சின்ன வயசில் கண்ணனையும் இவர்களோடு சேர்த்து வைத்திருக்கலாமே என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். அப்படியே வெளியே வருகிறோம். வெகு நாட்களுக்கு பின் முழு திருப்தியாக ஒரு நடிகர் திலகம் படம் பார்த்துவிட்டு வந்தோம் என்றே சொல்ல வேண்டும்.

படம் பெரிய வெற்றி பெற்று 100 நாட்கள் ஓடியது. ஆனாலும் தெய்வ மகன் போன்ற படத்திற்கு அது போதாது . வெள்ளி விழா கொண்டாடியிருக்க வேண்டும் எனபது என் எண்ணம். என்ன செய்வது. அடுத்த மாதம் மீண்டும் ஒரு படம். அதற்கு அடுத்த மாதம் ஒரு பிரம்மாண்டம் என வரிசை கட்டியதில் 100 நாட்களோடு திருப்தி படவேண்டியதாயிற்று. 

அடுத்த மாதம் அடுத்த படம். அதன் விவரங்கள், நிகழ்வுகள் அடுத்த வாரம் 

(தொடரும்) 
அன்புடன் 

பின்குறிப்பு: நியூசினிமாவின் உள்புறம் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களை இணைத்துள்ளேன். இரண்டுமே நடிகர் திலகம் மதுரையில் நியூசினிமாவிற்கு வந்தபோது எடுக்கப்பட்ட படங்கள். முதல் படம் கட்டபொம்மன் வெள்ளி விழா. பின்னால் தெரியும் மாடிப்படிகள்தான் பால்கனிக்கு இட்டு செல்லும். புகைப்படத்தின் வலது ஓரம் நான் பதிவில் குறிப்பிட்ட பால்கனி கவுன்டர் இருக்கும் இடம். இரண்டாவது படம் உத்தமன் ஓடும்போது எடுத்தது. புகைப்படத்தின் வலதுபுறம்தான் நான் குறிப்பிட்ட பெண்கள் கவுண்டர் மற்றும் மானேஜர் அறை,. நடிகர் திலகத்தின் பின்னால் தெரியும் கேட்  பெண்கள் அரங்கில் நுழையும் வழி. 1969ல் 0.40 மற்றும் 0.70 பைசாவாக இருந்த டிக்கெட் கட்டணம் 1976ல் 0.55 மற்றும் 0.85 பைசாவாக அதிகரித்தது.
.

No comments:

Post a Comment