Sunday 9 August 2020

MUTHAL MARIYAATHAI





MUTHAL MARIYAATHAI MOVIE


காவிய தலைவனுக்கு ஒரு

"முதல் மரியாதை !

ஊர்ப் பெரியவர், மலைச்சாமி. அவரது மனைவி பொன்னாத்தாள். எப்பொழுது பார்த்தாலும், வாய் நிறைய வசவுகளுடன், கணவனையும் மற்ற ஊர்க்கார மக்களையும் திட்டிக்கொண்டே இருப்பவள். இவர்களுக்கு ஒரு மகள். மலைச்சாமியின் தங்கைக்கு ஒரு மகன் உண்டு. மலைச்சாமியின் வீட்டிலேயே வளர்ந்து வருபவன்.

வீட்டுக்குள் வாய் திறக்காமல் அமைதி காத்தாலும், வீட்டுக்கு வெளியே, ஊரையே வளைக்கும் வாய்த்துடுக்குடன் வலம் வருபவர் மலைச்சாமி. கேலியும் கிண்டலும் அவரது பேச்சில் தெறித்து விளையாடும். ஊர் மக்களுக்கும் இவரது எள்ளல் பேச்சு பிடிக்கும். இப்படி இருக்கையில், ஒரு நாள், பக்கத்து ஊரில் இருந்து, மலைச்சாமியின் ஊரான பாறைப்பட்டிக்கு, பஞ்சம் பிழைக்க வருகிறது இளம்பெண் குயிலின் குடும்பம். ஊருக்கு வெளியே இருக்கும் ஆற்றில் பரிசல் வலித்துப் பிழைத்துக்கொள்வதாகக் குயிலின் தந்தை ஊர்ப்பெரியவர்களில் ஒருவரான மலைச்சாமியிடம் அனுமதி கேட்டு, மலைச்சாமியின் அனுமதியோடு குடியேறுகிறார். முதல் அறிமுகத்திலேயே மலைச்சாமியின் கிண்டல் பேச்சுக்கு அதே பாணியில் பதில் சொல்லும் குயிலின் மீது மலைச்சாமிக்கு ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. இதே நேரத்தில், செருப்பு தைக்கும் வெள்ளைச்சாமியின் மகளுடன், மலைச்சாமியின் தங்கை மகனுக்குக் காதல். இவர்களது காதல், ரகசியமாகத் தொடர்கிறது. மலைச்சாமியின் மாப்பிள்ளை, ஒரு வெறும்பயலாக இருப்பதால், அவரது பெண், மலைச்சாமியின் வீட்டிலேயே பல நாட்கள் வாழும் நிலை.

இப்படி இருக்கையில், மலைச்சாமியும் குயிலும் சந்தித்துக்கொள்ளும் பல சூழ்நிலைகள் அமைகின்றன. இருவருக்குமே ஒருவரையொருவர் பிடித்துப்போகிறது.

குயிலு, மலைச்சாமியின் தங்கை மகனின் காதலை உணர்ந்து, மலைச்சாமியிடம் எடுத்துப் பேசி, அவரைச் சம்மதிக்க வைக்கிறாள். அவர்களது திருமணமும் நடக்கிறது. அதன்பின், ஒரு நாள், விளையாட்டாய் ஆற்றங்கரையில் ஓடும்போது, அந்தப் பெண்ணின் நகைக்கு ஆசைப்பட்டு, அவளை ஒருவன் கொலை செய்துவிட, அவனது கால் கட்டை விரலைத் தனது வாயால் கவ்விப் பிடித்துவிடுகிறாள் அப்பெண். அவளது தந்தையான வெள்ளைச்சாமி, அந்த விரலை எடுத்துப் பத்திரப்படுத்தி வைக்கிறார். இதனை, மலைச்சாமியிடமும் சொல்லிவிடுகிறார். அதே நேரத்தில், தனது வீட்டுக்கு வந்திருக்கும் மாப்பிள்ளையின் காலில், கட்டை விரல் இல்லாமல் இருப்பதைப் பார்த்துவிடும் மலைச்சாமி, உண்மையைப் புரிந்துகொண்டு, போலீஸை வரவழைத்துவிட, மாப்பிள்ளையின் கைதால் புலம்பும் பொன்னாத்தாள், மலைச்சாமியைத் திட்டத் துவங்கிவிடுகிறாள்.

மனம் முழுக்க வருத்தத்துடன் நடமாடும் மலைச்சாமிக்கு , குயிலின் வார்த்தைகளும், அவளது அண்மையும் ஆறுதலாக இருக்கின்றன. குயிலுக்கும் மலைச்சாமியுடன் இருப்பது பிடிக்கிறது. ஆனால், ஊரில் வம்பு பேசித் திரியும் ஒருவனால், குயிலும் மலைச்சாமியும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் பரபரப்புக்குள்ளாக்கப்படுகிறது. இதனால் பஞ்சாயத்து கூட, அனைவருக்கும் முன்னால், குயிலைத் தான் தொடுப்பாக வைத்திருப்பது உண்மைதான் என்று கர்ஜிக்கிறார் மலைச்சாமி. இதனால் அவரது குடும்பம் பிரியும் நிலை உருவாகிறது. தன்னைப்பற்றி அவதூறு கூறும் மனைவியை எட்டி உதைத்து, அவள் இருபது வருடங்களுக்கு முன்னால் ஊர்த்திருவிழாவில் எவனோ ஒருவனிடம் படுத்து, வயிற்றில் குழந்தை வாங்கிய அவமானத்தை மறைப்பதற்காக அவளது தந்தையான மலைச்சாமியின் மாமன் கெஞ்சியதால் மட்டுமே அவளது கழுத்தில் தாலி கட்டியதைப் போட்டு உடைக்கும் மலைச்சாமி, இனி இதைப்பற்றிப் பேசினால், அவர் ஒரு மிருகமாக மாறிவிடவேண்டியிருக்கும் என்று சீறுகிறார்.

ஊர்ப் பேச்சை உடைக்க, குயிலுடனே சேர்ந்து வாழ அவளது வீட்டுக்கு வரும் மலைச்சாமிக்கு அதிர்ச்சி. ஒரு பிணத்துடன், போலீஸ் தன்னைக் கைது செய்த நிலையில் குயிலு நிற்கிறாள். அப்பிணத்தைப் பற்றி வாயே திறப்பதில்லை குயிலு. மலைச்சாமியிடம் மட்டும் உண்மையைச் சொல்கிறாள். பொன்னாத்தாளைக் கர்ப்பமாக்கியது, குயிலு கொலை செய்த அந்தக் கயவன் தான். பொன்னாத்தாளைப் பார்த்து, அவளது குழந்தைக்கும் நிலபுலனுக்கும் சொந்தம் கொண்டாட அவன் வருகையில், இந்த உண்மையை அவன் வாயாலேயே கேட்ட குயிலு, மலைச்சாமியின் கௌரவத்தைக் காப்பாற்றச் செய்த கொலையே இது.

ஊர் திரும்பும் மலைச்சாமி, மரணப்படுக்கையில் வீழ்கிறார். இது தெரிந்து, குயிலு, பரோலில் அவரைப் பார்க்க வர, அவளைப் பார்த்துச் சந்தோஷப்படும் மலைச்சாமியின் உயிர், அவள் கையைப் பிடித்த நிலையில், பிரிகிறது. பல வருடங்கள் கழித்து, தண்டனைக்காலம் முடிந்து வரும் குயிலின் உயிரும், ரயிலிலேயே பிரிய, அத்துடன் படமும் முடிகிறது.

தனது மகளின் முன்னர், தனது குடும்ப ரகசியத்தைப் போட்டு உடைக்கும் சிவாஜி, உடனேயே மகளிடம் பாசம் பொங்கப் பேசும் காட்சியைச் சொல்லலாம். அதே போல், கடைசியில் மரணப் படுக்கையில் கிடக்கும் சிவாஜி, குயிலு வந்ததும், அவளது முகத்தைப் பார்க்கும் அந்தப் பார்வை, மிக உருக்கமான ஒரு காட்சி. அதில், கச்சிதமாக, இதுவரை அவரது மனதில் இருந்த அன்பையும் காதலையும் குயிலுக்கு உணர்த்தும் ஒரு பார்வையையும், முகபாவத்தையும் வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி. அவரது நடிப்புத் திறமைக்கு இது ஒரு சான்று. கேலியும் கிண்டலும் தெறிக்கும் கிராமத்துப் பெருசு மலைச்சாமியையே இப்படத்தில் நான் பார்த்தேன். சிவாஜி கணேசனைப் பார்க்கவில்லை.

இன்னொரு முக்கியமான அம்சம், இசை. கிராமத்து மண்ணின் வாசனை பொங்கி வழியும் பாடல்கள். அந்தப் பாடல்களையே, எளிய கிராம இசைக்கருவிகள் மூலம் மாற்றி வழங்கியிருக்கும் ஒரு பின்னணி இசை. பின்னணி இசையில் இளையராஜாவின் வீச்சு என்னவென்று நம்மெல்லோருக்கும் தெரியும். அதற்கு ஒரு அட்டகாசமான உதாரணம்: ஆற்றில் மிதக்கும் தனது மனைவியின் பிணத்தைப் பார்த்தவுடன், புல்லாங்குழலைத் தூக்கி எறியும் அந்தக் காட்சி. புல்லாங்குழலின் மெல்லிய வாசிப்பிலேயே, அந்தக் காட்சிக்குரிய முக்கியத்துவத்தை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் இளையராஜா. அந்த இசையை மட்டும் கேட்டாலே போதும்; அந்தக் காட்சியில் நிலவும் பரபரப்பை நம்மால் எளிதில் உணர முடியும். அதேபோல, பாடல்கள். ‘ராசாவே ஒன்ன நம்பி’, ‘பூங்காத்து திரும்புமா’, ‘’வெட்டிவேரு வாசம்’, ’அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ ஆகிய பாடல்களின் இனிமை, ‘ஏறாத மலமேல’, ‘ஏ குருவி’, ‘ஏ கிளியிருக்கு’ ஆகிய குறும்பாடல்கள் தரும் குறும்பு ஆகிய உணர்வுகளை மறக்கவியலாது.

கிராமத்துக் காமத்தை நமக்குக் காட்டும் காட்சிகளும் படத்தில் உண்டு. அதேபோல், மலைச்சாமி – குயிலு இருவரின் காதலை நமக்குப் பல விதங்களிலும் காண்பிக்கும் காட்சிகள், அழகாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

இப்படத்தில் இன்னொரு நல்ல விஷயத்தைக் கண்டேன். இறுதியில், சத்யராஜைப் பரிசலில் வலிக்கும் ராதா, சத்யராஜ் யார் என்று அவரது வாயிலிருந்தே தெரிந்துகொண்டபின், அவரது மனதில் ஓடும் எண்ணங்களின் தொடர்ச்சியாகவே, கடைசி வார்த்தையான ‘நினைச்சிக்கிட்டிருக்கேன்’ என்பதை மட்டும் ராதா வாய் உச்சரிக்க, இதற்கு முந்தைய வசனமெல்லாம் அவரது மனதிற்குள்ளேயே ஒலிக்குமாறு அமைக்கப்பட்ட காட்சி. இது ஒரு நல்ல திரைக்கதை உத்தி. 1985ல் தமிழுக்குப் புதிது.

இப்படத்தில் இருக்கும் அத்தனை கதாபாத்திரங்களுமே நடிப்பில் பின்னியிருப்பது, இன்னொரு நல்ல விஷயம். ராதா, வடிவுக்கரசி, ஜனகராஜ் ஆகியவர்களின் நல்ல நடிப்பு, படத்தைத் தாங்குகிறது.

நன்றி ! தொகுப்பு ராஜேஷ் .

Karundhel .com இணைய பகுதியிலிருந்து ....

No comments:

Post a Comment