Sunday, 9 August 2020

COINAGE AND BOOK PUBLISHED BY KALAIGNAR



COINAGE AND BOOK PUBLISHED
 BY KALAIGNAR




தட்டிக் கொடுத்தார் கலைஞர்.
 மட்டிலா மகிழ்ச்சியில் நான்.
___________

 'தினமலர்' ஆசிரியராக இருந்த முனைவர் கிருஷ்ணமூர்த்தி, பத்திரிகையாளராக மட்டுமல்ல, பல்துறைத் திறனறிந்த முத்திரைச் சித்தராகவும் விளங்கினார்.
 தமிழ்நாடு "நாணயவியல் ஆய்வுக் கழகம்" என்ற அமைப்பை  அவர் தலைவராக இருந்து,  நான் பொருளாளராக இருந்துத் தமிழகத்தில் நாணயவியல் விழிப்புணர்வை முதன்முதலாகத் தோற்றுவித்தோம்.  சென்னை, கரூர், மதுரை போன்ற பல்வேறு நகரங்களில் மக்களிடையே பண்டைய நாணயங்களின் வரலாற்றுச் சிறப்புகளைப் பரப்பி வந்தோம்.
 வடநாட்டு அறிஞர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வந்துப் பண்டையக் காசுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை விளங்க வைத்தோம்.
 "தமிழகத்தின் பண்டையக் காலத்தில் நாணயப் பழக்கங்கள் இல்லை" என் கருதி வந்த வடநாட்டு ஆய்வாளர்களுக்கு இந்த மாநாடுகள் மூலம்  சரியான பதிலடி கொடுத்தோம்.  இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த சுகமதியாளர்கள், இவ்அமைப்பைத் தென்னிந்திய அளவில் விரிவுபடுத்தச் சொன்னார்கள்.
 ஆசிரியர் ஒப்பினார். நானோ  போர்க்கொடித் தூக்கினேன். சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் 

 தமிழ்நாடு நாணயவியல் ஆய்வுக் கழக மாநாடு நடந்தஷ
 பொழுது நிகழ்ந்தது. "தமிழக அமைப்பு அப்படியே இருக்கும். தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகம் என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கலாம்" என்று கருத்தறிவித்தேன்.
சர்வதேசத் தொல்லியல் மேதை கே வி ராமன் ஏற்றுக் கொண்டார்.
 அதன்படி தோன்றிய புதிய அமைப்பின் தொடக்க விழா, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அதன் முனைவர் திலகவதியின் ஏற்பாட்டில் நடந்தது.
 ஆண்டுதோறும் ஒரு தென்னக மாநிலம் எனச் சுற்றிச்சுற்றி வந்த இந்த அமைப்பின் மாநாடு,  25-வது வெள்ளி விழா ஆண்டில் திரும்பத் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இந்த வெள்ளிவிழா மாநாடு நடந்தது.

 இந்த மாநாட்டின் பின்னணியில் இருந்தவர் நவீன சடையப்ப வள்ளல் முனைவர் கிருஷ்ணமூர்த்தி தான். நானும் இந்த அமைப்பில் தொடர்ந்து 17 ஆண்டுகாலம் பொருளாளராகப் பதவி வகித்துச் செயலாற்றினேன்.
 இந்த மாநாடுகளில் ஆராய்ச்சி அறிக்கைகளைச் சமர்ப்பணம் செய்வதற்காக ஆசிரியர் தீவிர ஆய்வுப்பணிகள் மேற்கொண்டார். நானும் அனில்த்தனமாக உதவினேன். அதன்மூலமாக அவர் கண்டுபிடித்த நாணயங்களின்  வரலாற்றுச் சிறப்பு அம்சங்களின் முக்கியத்துவத்தைத் தேர்ந்தறிந்தார்.
 இவற்றில் சங்க காலத்தைச் சேர்ந்தத் தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களைத் தொகுத்து ஆய்ந்து, ஆய்வறிக்கைகளை மாநாடுகளில் சமர்ப்பணம் செய்து, ஒப்புதல் பெற்றார். இவற்றைத் தொகுத்து அவர் எழுதிய நூல் தான்  "சங்ககாலத் தமிழ் நாணயங்கள்".
 இந்த நூலை வெளியிடுவதற்கான விழா நடத்துவது குறித்து ஆசிரியர்  என்னிடம் விவாதித்தார். 
" அக்கால கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் தான் இந்த நூலை வெளியிடுவதற்குத் தகுதியான மனிதர்" என்று ஆசிரியரிடம் பரிந்துரை செய்தேன்.


"அவரைத்தான் நாம் கடுமையாக விமர்சித்துச் செய்தி வெளியிட்டு வருகிறோமே!. அவர் எப்படி விழாவுக்கு வருவார்?" என்று  என்னிடம் ஆசிரியர் எதிர்வாதம் செய்தார்.
 "அனுமதியைத் தாருங்கள், அழைத்து வருவது என் பொறுப்பு." என்றேன்.
 ஒரு வழியாக ஒப்புக்கொண்டார்.
 "அழைப்பதற்காக அவரைச் சந்திக்க வரவேண்டும்" என்று ஆசிரியரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
 அவரும் ஏற்றுக்கொண்டார்.
 அனுமதி பெற்ற கையோடு கோபால புரத்திற்குப் பறந்துச் சென்றேன்.  கலைஞரின் ஆத்மார்த்தமான உதவியாளரான சண்முகநாதனிடம்   கலந்துரையாடல் நடத்தினேன்.
 அவர் புரிந்து கொண்டார். 
நான்  திரும்பிவிட்டேன்.
 மாலை மங்கிய நேரத்தில் சண்முகநாதன் அடியேனைத் தொலைபேசி வாயிலாக அழைத்தார்.

 "நாளை காலை உங்கள் ஆசிரியரோடு வந்து விடுங்கள். உங்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்திருக்கிறார்."என்று காதில் தேன் பாய்ச்சினார்.
 ஆசிரியரிடம் சொன்னேன். அதிசயித்துப் போனார்.
 விழாத் தேதியைத் திட்டமிட்டுக் கொண்டுக்   கலைஞரைச் சந்திக்கப் போனோம்‌.
 கோபாலபுரம் வீட்டின் மாடிக்கு ஆசிரியரை அழைத்துக்கொண்டுச்  சென்றேன். 
கலைஞரை நெருங்கியதும்,  " ஐயா... இதோ எங்கள் ஆசிரியர் இரா கிருஷ்ணமூர்த்தி"  என அறிமுகம் செய்து வைத்தேன்.
 அவரோ, " என் நண்பரை  என்னிடமே அறிமுகம் செய்து வைக்கிறாயா?"  என்றார்.
அந்த ஒரே வாசகத்தின் மூலம் தன்னை எங்கள் ஆசிரியரின் நேசகனான அடையாளம் காட்டினார்.
 பின்னர் மூவரும் இணக்கமாகப் பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். கடுகடுப்பு எட்டும் வகையில் காரமானச் செய்திகளை 'தினமலர்' வெளியிட்ட வந்தது  பற்றிக் கலைஞர் ஒரு வார்த்தைக் கூட குறிப்பிட்டுப் பேசவே இல்லை.
  ஆசிரியர்  தந்த  தேதியைக்  கலைஞர் ஒப்புக்கொண்டு, "விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்." என்றார்.
 வியப்பால் விரிந்த விழிகளோடு இருந்த ஆசிரியரை அழைத்துக்கொண்டு நான் அலுவலகம் வந்து விட்டேன்.
 சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் விழா அரங்கு நிரம்பி வழிந்தது.
 வழக்கம்போல முதலிலிருந்து முடிவுவரை விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பணி அடியேனுக்குக் கிடைத்தது.
 ஒவ்வொருவரைப் பெயர்ப் சொல்லி அழைக்கும் போதும் ஒரே வாசகத்தில் பஞ்ச் வசனம் வைத்து நான் பேசியபோது அரங்கின் ஆரவாரம் ஆனந்தக் கூத்தாடியது.
 இதைக் கவனித்தக் கலைஞர் அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
நானும் அதை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தேன்.
 திடீரென்று கலைஞர் தன் இருக்கையை விட்டு எழுந்து, நான் நின்றிருந்த மைக் உடன் கூடிய போடியம் எனும் குறுமேசை அருகே வந்தார்.
 என்னைத் தட்டிக் கொடுத்தார்.
 "நல்லா பேசுறயா நீ!"  என்று என் தோள்களைத் தட்டிக் கொடுத்து,  என் சிற்றுடலைச் சிலிர்க்க வைத்தார்.
 அப்போது எடுக்கப்பட்டப் படத்தைத் தான் இங்கே இணைத்து கொடுத்து இருக்கிறேன்.
 ஆர் நூருல்லா ஊடகன் 9-8-2020
9655578786

No comments:

Post a Comment