Friday, 7 August 2020

CHANDRA BABU ,COMEDIAN HISTORY


CHANDRA BABU ,COMEDIAN HISTORY



#சந்திரபாபு....

#மரணத்தை_மரணிக்க_செய்த_மகா_கலைஞன்.

சபாஷ் மீனாவில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் தான் பின்னாளில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கௌண்டமணி ஏற்று நடித்து மீண்டும் மாபெரும் வெற்றி பெற்றது.

அடிமைப்பெண் படத்தில் அபாரமான நகைச்சுவையை சோவுடன் சேர்ந்து பண்ணியிருப்பார்.

அன்னையில் எலியோடான அவரின் ஸ்லாப்ஸ்டிக் காமெடி மறக்கவே முடியாது.

கவலை இல்லாத மனிதன் படத்தில் எம்.ஆர். ராதாவின் தம்பியாக நாயகனாக நடித்திருப்பார். நாகேஷோடு சேர்ந்து ஒரு படத்தில் அவர் மஜ்னுவாக, நாகேஷ் லைலாவாக பெண் வேடமேற்று ஒரு பாடல் காட்சியில் நடித்திருப்பார்கள்.
#அபாரமான_அனுபவம்_அது.

ஜெயகாந்தனுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தவர். ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் குறுநாவலை தான் நாயகனாக நடித்து இயக்க விரும்பினார். அது மட்டும் நடந்திருந்தால், உலக தரத்திலான ஒரு படத்தை நிச்சயம் சந்திரபாபு அன்றே கொடுத்திருப்பார். எழுத்தாளர் ஜெயகாந்தன் மீதுள்ள அதீக உரிமையில் அவரிடம் கேட்காமலேயே அந்த கதையில் தான் நடித்து இயக்க போவதாய் அறிவிப்பு தந்துவிட்டு, விசயத்தை ஜெயகாந்தனிடம் வந்து சொல்ல, அவர் எதனாலோ அதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் போக, அந்த அற்புதமான படைப்புருவாக்கம் அப்படியே நின்று போனது.

ஒரு படத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருப்பார். வாயில் எடுக்க வருவதுபோல நடித்து நடித்தே அந்த அன்ரிசர்வ்ட் இருக்கையில் அமர்ந்திருந்த அனைவரையும் எழுப்பி விட்டு விடுவார். பிறகு அவர் நிம்மதியாக கால்நீட்டி படுத்து உறங்க ஆரம்பித்துவிடுவார்.
#தமிழின்_ஸ்லாப்ஸ்டிக்_காமெடிக்கு_பிதாமகர்.

எம்.ஜி.ஆரை 'மிஸ்டர் எம்.ஜி.ஆர்.' என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலைப்படவும் இல்லை!

ஏழு நாள் கால்ஷீட்டுக்கு......
#ஒரு_லட்சம்_ரூபாய்_பணம்_வாங்கிய_முதல்_காமெடி_நடிகர்!

'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே', 'நானொரு முட்டாளுங்க', 'பிறக்கும்போதும் அழுகின்றான்', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'ஒண்ணுமே புரியல உலகத்துல', 'பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை', 'என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா' போன்ற பாடல்கள் 50 ஆண்டுகளாக இன்னமும்......
#தமிழகத்தின்_இரவு_நேரச்_சங்கீதம்!

சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப் படுத்தியவர். 'சகோதரி' படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!

நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். 'சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது முதல் பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல; அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதவைத் தாழிட்டுக்கொள்பவனும் அல்ல' என்று சொன்னார்!

மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். 'மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம் லிங்கன். ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத்தந்த என்னுடைய மாமனார், ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத்தந்தவர் ஜெமினிகணேசன்'' என்றவர்!

இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின்போது அங்கே போய் நடிகர்கள் கலைநிகழ்ச்சி நிகழ்த்தி வீரர்களை உற்சாகப் படுத்தினார்கள். அதன் நீட்சியாக அவர்கள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை சந்திக்க அழைக்கப்பட்டார்கள்.

ஜனாதிபதி மாளிகையில் ராதாகிருஷ்ணன் முன்னால் 'பிறக்கும் போதும் அழுகின்றான்' பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட... உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு. 'கண்ணா நீ ரசிகன்டா' என்று அவரது தாடையைத் தடவ... ஜனாதிபதியும் மகிழ... உற்சாகமானபொழுது அது!

நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஓவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிப் பழகியவரும்கூட. 'ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்' என்று சிரிப்பார்!

'நீ ஒரு கலைஞன், கற்பனைவளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்' என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவரோடு திருமணம் நடந்தும் மனைவியாக வாழாமல் சில நாட்கள் மட்டும் தோழியாக இருந்து பின் தன் காதலனைஐ தேடி லண்டன் சென்றுவிட்ட ஷீலா!

இந்த சம்பவமே பாக்யராஜ் சாரின் அந்த ஏழு நாட்கள் படத்திற்கான ஒரு தூண்டுதல் என்றும் அந்நாட்களில் சொல்லப்பட்டது.

நடிகர் ரகுவரனுக்கு மிகவும் பிடித்த நடிகர் சந்திரபாபு. கிட்டத்தட்ட சந்திரபாவுவின் குணாதிசயம் கொண்டவர் அவர். மனது சரியில்லாத போது, என் ஆசான் சந்திரபாபு சமாதியில் போய் படுத்துக்கொள்வேன் என்று அவரது பேட்டியில் உருக்கமாக சொல்லியிருக்கிறார்.

சென்னையில் முதன்முதலில் காரிலேயே தன்னுடைய பங்களாவில் முதல் மாடிக்கு பயணிக்கிறாற்போல் டிசைன் செய்து கட்டிய பெருமை இவருக்கு உண்டு. கட்டிய வீட்டில் ஒரு நாள் கூட குடியேற முடியாமல் போன துரதிஷ்டததை என்னவென்று சொல்வது.

எம்.ஜி.ஆரை நாயகனாகவும், சாவித்திரியை நாயகியாகவும் வைத்து அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட படம் மாடி வீட்டு ஏழை. படம் துவங்கிய பிறகு என்ன காரணத்தினாலோ அதிலுள்ள தயாரிப்பாளர்கள் விலகிக்கொள்ள, சந்திரபாபுவே தயாரிப்பாளராக ஆக்கப்பட்டார். எம்ஜிஆரும் ஒரு கட்டத்திற்கு பிறகு போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

காரணம் அவரின் சகோதரர் சக்கரபாணி, சந்திரபாபு யதார்த்தமாய் ஒரு பேட்டியில் எம்ஜிஆரின் நடிப்பை பற்றி கேட்டதற்கு, அவருக்கு நடிக்கவே தெரியாதே.. அவர் ஒரு கரிஸ்மேட்டிக் பெர்ஷன்.. அவரின் சாகசங்களை மக்கள் ரசிக்கிறார்கள் என்றிருக்கிறார். அவரின் நடிப்பை அல்ல என்று சொன்னதை ஒரு குறையாக எம்ஜிஆரிடம் சொல்லிவிட, அங்கே ஆரம்பித்தது சந்திரபாபு எனும் மாபெரும் கலைஞனின் துன்பயியல் அத்தியாயம்.

சந்திரபாபு ஏசுவை நம்பியவர். பொய் எந்த சந்தர்ப்பத்திலும் பேசி அறியாதவர். குழந்தைமை மாறாதவர். மனதில் தோன்றியதை அப்படியே பட்..பட் டென பேசிவிடக்கூடியவர். அப்படிப்பட்ட வெளிப்படையானவரை இந்த சமுதாயம் வாழ விட்டுவிடுமா..

வாழ்க்கை அப்படித்தான்.. எத்தனையோ ஜாம்பவான்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டு, எதுவுமே நடக்காதது போல் மௌனித்தபடி பயணித்துக் கொண்டிருக்கிறது.










நடிகர் சந்திரபாபுவின் பிறந்தநாள்

சபாஷ் மீனா, நாடோடி மன்னன், அடிமைப்பெண், அன்னை அவரது மறக்க முடியாத படங்கள்..
.
இந்த சந்திரபாபு பிறந்தநாள். இயக்குநர் மிஷ்கின் சந்திரபாபு மீது கொண்ட பேரன்பால், அவரது கல்லறையில் இன்று செடிகள் நட்டு மரியாதை செலுத்தினார். செடிகளை பராமரிக்க இரண்டு நபர்களிடம் சொல்லிவிட்டு, அதற்கு போதுமான உதவிகளையும் செய்துக் கொடுத்திருக்கிறார்.

சென்னையில் பல வருடங்கள் வாழ்ந்தாலும், இதுவரை சந்திரபாபுவின் கல்லறை இருக்கும் இடம் தெரியாமல்தான் இருந்தேன். இன்று அவரது கல்லறையை முதன்முறையாக பார்த்தேன்.

துயரங்கள் நிறைந்த தமிழ் சமூகத்தின் புன்னகை விரும்பியாக இருந்து தன்னுடைய வாழ்வின் அத்தனை பக்கங்களையும் இருன்மையால் நிரப்பிக் கொண்ட ஒரு கலைஞனின் கல்லறை அத்தனை அமைதியாய் இருக்கிறது.

அவரது கல்லறை இருக்கிற இடம்.
Quibble island cemetery, greenways road, Chennai.

Kulashekar T
.

No comments:

Post a Comment