T.R.RAJAKUMARI ,A LEGEND OF TAMIL CINEMA
கனவுக்கன்னி பிம்பம் தொலைக்காத ராஜகுமாரி
மயக்கும் கவர்ச்சிக் கண்களால் கிறக்கமுறும் வகையில் ஒரு கீழ்ப் பார்வையை எதிராளியின் மீது ஓட விட்டு, கவர்ச்சிகரமான ஒரு மென் சிரிப்பை அழகுப் பல்வரிசை வெளிப்படச் சிரித்து, நிலம் நோகாமல் அன்ன நடை நடந்து, இனிமையான குரலில் ‘நாதா’ என்றோ ‘சுவாமி’ அல்லது ‘பிரபோ’ என்றோ அவர் கதாநாயகனையோ அல்லது தான் விரும்பும் காதலனையோ அழைக்கையில் ஒட்டுமொத்தத் தமிழக ரசிகர்களும் ராஜகுமாரியின் அழகில் கட்டுண்டு கிடந்தார்கள்.
தமிழ் சினிமா எத்தனையோ கனவுக் கன்னிகளைப் பிரசவித்திருந்தாலும் முதல் கனவுக் கன்னியாகக் கண்டறியப்பட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தவர். 1930களின் இறுதியில் கதாநாயகி யாக அறிமுகமாகி இருந்தாலும், 50களிலும் கனவுக்கன்னியாகவும் ரசிகர்களின் மனம் ஏற்றுக் கொண்ட ‘டார்லிங்’ ஆகவும் வலம் வந்தவர். 50களில் ஏறக்குறைய பிரதான நாயகி வாய்ப்புகள் குறைந்து, வில்லி, குணச்சித்திர வேடங்களை அவர் ஏற்றிருந்தபோதிலும் ரசிகர்களின் மனங்களில் தன் இடத்தை அழுத்தமாகப் பதிய வைத்தவர் ராஜகுமாரி.
அக்காலத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.வரலட்சுமி என்று பல முன்னணி கதாநாயகிகளை அறிமுகம் செய்திருந்த இயக்குநர் கே.சுப்பிரமணியம் தன்னுடைய ‘கச்ச தேவயானி’ படத்தில் கதாநாயகியாக நடிக்கஎஸ்.பி.எல். தனலட்சுமியை ஒப்பந்தம் செய்வதற்காக தன் நண்பர் பாலுவுடன் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தார். ஏற்கனவே ‘சௌபாக்கியவதி’, ‘காளமேகம்’ போன்ற படங்களில் நடித்துப் பிரபலமாகி இருந்தவர் நடிகை எஸ்.பி.எல். தனலட்சுமி (இவர் பின்னாளில் நடிகைகளான ஜோதிலட்சுமி, ஜெயமாலினி ஆகியோரின் தாயார்).
வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்ற தனலட்சுமி, அவர்களுக்குக் காபி கொண்டு வரும்படி ராஜாயி என்ற பெண்ணுக்குக் குரல் கொடுத்தார். குனிந்த தலை நிமிராமல் காபி, பலகாரம் எடுத்துக்கொண்டு வந்த ராஜாயி நல்ல கருப்பு நிறம் கொண்ட பதினாறு வயது இளம் பெண். அந்தப் பெண்ணைப் பார்த்த அக்கணமே கே.சுப்பிரமணியம் எஸ்.பி.எல். தனலட்சுமியையும் அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதையும் மறந்து போனார். ‘தன் படத்தின் கதாநாயகி இந்த ராஜாயிதான்’ என முடிவெடுத்து அங்கிருந்து வெளியேறினார். அந்த அளவுக்கு இயக்குநரின் மனதில் ராஜாயி ஆழமாகப் பதிந்து போனார்.
ஒப்பனை செய்யவும் மறுக்கப்பட்டவர் உச்ச நட்சத்திரமானார்
கே.சுப்பிரமணியம் தான் எடுத்திருக்கும் முடிவை நண்பர் பாலுவிடம் மறுநாள் வெளிப்படுத்தியபோது, அவருக்கு அதிர்ச்சி. ‘வேண்டாம், அந்தப் பெண் யாரென்றே தெரியாது. ஒருவேளை அது அவங்க வீட்டு வேலைக்காரியாகவோ சமையற்காரியாகவோ கூட இருக்கலாம்’ என்றாராம். ஆனால், இயக்குநரோ தன் பிடிவாதத்தை விடுவதாயில்லை. தனலட்சுமியிடமும் இது பற்றிப் பேசிய பின் ராஜாயியை அழைத்துக் கொண்டு வந்து கிண்டி வேல் பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் மேக்கப் போடச் செய்தார்.
கருப்பு நிறம் கொண்ட அந்தப் பெண்ணைப் பார்த்து அதிர்ந்துபோன மேக்கப் மேன் ஹரிபாபு அந்தப் பெண்ணுக்கு மேக்கப் போடவே மறுத்தார். ‘காக்காவையெல்லாம் பிடிச்சுட்டு வந்து கதாநாயகிங்கிறாரே, இவருக்குப் பைத்தியம்தான் பிடிச்சுடுச்சு’ என்பது அவர்களின் பேச்சாக இருந்தது. ஆனால், இந்தப் பெண்ணைத்தான் கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என்ற முடிவில் உறுதியாக இருந்தார் கே. சுப்பிரமணியம்.
இதையெல்லாம் பார்த்த அந்தப் பெண்ணுக்கோ பேரதிர்ச்சி. கருப்பு நிறம் அவ்வளவு இழிவானதா என்ற சிந்தனையும் அவருக்குள் எழுந்திருக்கலாம். இன்று வரையிலும் கருப்புத் தோலின் மீதான வெறுப்பு திரைத்துறை மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் ஒரு நோய் போல பீடித்திருக்கிறது என்றே சொல்லலாம். அதன் பின்னர் அந்தக் ‘கருத்த நிறமுள்ள’ பேரழகிதான் அடுத்த 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களின் மனதில் மர்லின் மன்றோவாக மாறாத இடம் பிடித்திருப்பவர். அவர் தமிழ் சினிமா உலகின் முதல் கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரி.
அவருக்குப் பின் கருப்பு நிறம் கொண்ட சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா, கே.ஆர்.விஜயா, சரிதா போன்ற பல கதாநாயகிகள் கொடி கட்டாமலே பறந்தார்கள் என்றாலும் பெருமைகள் அனைத்துக்கும் வித்திட்டவர் தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜாயி என்ற டி.ஆர். ராஜகுமாரி. முன்னோடி இயக்குநர் கே.சுப்பிரமணியம் தன் இயக்கத்தில் தமிழகத்தின் கனவுக் கன்னிகள் பலரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்படித்தான் ராஜகுமாரியையும் பெருமையுடன் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தப் படம் ‘கச்ச தேவயானி’. உண்மையில் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த முதல் படம் ‘கச்ச தேவயானி’ அல்லவாம். அதற்கு முன்பே ‘குமார குலோத்துங்கன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து 1939ல் அப்படம் வெளியாகி பெரிதாகப் பேசப்படாமலே போய்விட்டதாகவும் தகவல்கள் உண்டு. அந்தப் படம் பற்றிய செய்திகளும் அவ்வளவாகக் கிடைக்கவில்லை.
தஞ்சை இசைக் குடும்பத்தில் தோன்றிய நட்சத்திரம்
தஞ்சாவூரின் பிரபல பாடகி குசலாம்பாள். அவருக்கு ஐந்து மகள்கள். இரண்டாவது மகள் ரங்கநாயகி. அந்த ரங்கநாயகியின் மகள் ராஜகுமாரி. குசலாம்பாளின் ஐந்தாவது மகள் எஸ்.பி.எல்.தனலட்சுமி; அதாவது தனலட்சுமியின் அக்காள் மகள்தான் டி.ஆர். ராஜகுமாரி என்ற தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜாயி. தனது சித்தி எஸ்.பி.எல். தனலட்சுமி போன்றே சினிமாவில் நடித்துப் பணமும் புகழும் சேர்க்க வேண்டும் என ராஜாயி சென்னை வந்து சித்தி வீட்டில் தங்கியிருந்தார். முதலில் ஒரு பட வாய்ப்பு கிடைத்தபோதும்அது வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில்தான் அவர் கே. சுப்பிரமணியம் கண்களில் தென்பட்டு தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத கதாநாயகி ஆனார். அவர் கண்ணில் பட வேண்டும் என்பதற்காகவே ராஜாயி கையில் எஸ்.பி.எல். தனலட்சுமி, காபி பலகாரங்களைக் கொடுத்து அனுப்பியிருக்கலாம் என்று எண்ணுவதற்கும் இடமிருக்கிறது.
இன்றைக்கு அக்காள் கதாநாயகிகள் தங்கள் தங்கைகளை அறிமுகம் செய்வதன் பூர்வீக வடிவமாகவும் இது இருக்கலாம். ஏனென்றால் எஸ்.பி.எல். தனலட்சுமி வீட்டில் இன்னொரு நடிகையும் உண்டு. அவர் ராஜாயியின் மற்றொரு சித்தி - டி.எஸ். தமயந்தி. (இவரின் மகள் குசலகுமாரியும் ஒரு நடிகைதான்) ராஜகுமாரி தஞ்சையின் மரபான இசைக் குடும்பத்தில் பிறந்ததால் இசையில் முறையான பயிற்சி பெற்றவர்.
‘கோயில் சிற்பம்! தந்த பொம்மை! ஆடும் மயில்! பாடும் குயில்!’
சென்னை கெயிட்டி தியேட்டரில் 1941ல் ஜனவரி 9 அன்று வெளியான ‘கச்ச தேவயானி’ முதல் மூன்று நாட்களுக்குச் சரியாக ஓடவில்லை. நான்காவது நாளில் இருந்து படிப்படியாகக் கூட்டம் அலை மோதத் தொடங்கியதுடன் அல்லாமல் ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து ஹவுஸ் ஃபுல். இதுவும் தேவ அசுரர்களின் யுத்தம் பற்றிய கதைதான்.
பிரகஸ்பதியின் மகன் கச்சன், அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரிடம் இருந்து சாகாவரம் அளிக்கும் சஞ்சீவனி மாமருந்தின் ரகசியம் பற்றி அறிந்து கொள்வதற்காக, போலி வேடமிட்டு சுக்ராச்சாரியாரிடம் மாணவனாக வந்து சேர்கிறான். சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானியை கொஞ்சம் கொஞ்சமாக வசீகரித்து அவளை ஆட்கொண்டு சஞ்சீவனி மாமருந்தின் ரகசியத்தை அவளிடமிருந்து அறிந்து கொள்கிறான்.
ஆனால், உண்மையில் நிகழ்ந்தது என்னவென்றால் கச்சனால் தேவயானி வசீகரிப்பட்டதை விட, தேவயானியாகத் திரையில் தோன்றிய ராஜகுமாரியால் தமிழ் ரசிகர்கள்தான் நிரந்தரமாக வசீகரிக்கப்பட்டு மயங்கிக் கிடந்தனர். இடுப்பில் தண்ணீர் குடத்துடன் ஒயிலாக அவர் நடந்து வரும் காட்சி, அக்கால ரசிகர்களால் பெரிதும் புகழ்ந்து பேசப்பட்டதாம்.
இப்படத்திற்கு விமர்சனம் எழுதிய அன்றைய சினிமா பத்திரிகைகள் டி.ஆர்.ராஜகுமாரியை ‘கோயில் சிற்பம்! தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மை! ஆடும் மயில்! பாடும் குயில்!’ என்றெல்லாம் அடைமொழியிட்டு அழைக்கத் தொடங்கின. ஒரு நடிகையை பிடித்துப் போய் விட்டதென்றால் இவ்வாறெல்லாம் புகழ்வதும் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடுவதும், கோயில் கட்டுவதும் பின்னர் அந்த நடிகையை பிடிக்காமல் போனதென்றால் கூத்தாடிப் போட்டுடைப்பதும் வழக்கம்தான் என்பதைத் தமிழகம் நன்கறியும். வெற்றி பெற்ற கதாநாயகி என்பதால் தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மையாகக் கருதப்பட்டவர், தோல்வியடைந்திருந்தால் நிச்சயம் அதற்கு அவரது நிறமே காரணமாகச் சொல்லப்பட்டிருக்கும்.
பாகவதர், சின்னப்பா இருவருடனும் இணையாக நடித்தார்
பாகவதரின் நடிப்பில் ‘சிவகவி’ பிரமாண்ட வெற்றியைத் தேடித் தந்த படம். இதில் பாகவதர் சிவனடிமையாக நடித்தார். பொருளாசை பிடித்த மனைவியிடம் இருந்து விலகி, மதுரை வரும் அவரை மயக்கும் மதுரை அரசின் தலைமை நர்த்தகியும் புலவரும் உள்ளூர் தாசியுமான வஞ்சி பாத்திரம் ஏற்று நடித்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. ‘கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே..’ என பாகவதர் பாட அதற்கு ராஜகுமாரி பதம் பிடித்து ஆடினார். நாட்டியக்கலை கவலையைத் தீர்த்ததோ இல்லையோ, இவர் ஆட்டத்தைக் கண்டு பெருமூச்சு விட்ட ரசிகர்களின் கவலையை தன் நடிப்பின் வழியாகத் தீர்த்தார்.
இதேபோல ‘குபேர குசேலா’வில் பி. யூ.சின்னப்பாவுடன் நடித்தார். அதில் ‘நடையலங்காரம் கண்டேன்! அன்னப் பெடையும் பின்னடையும் பொற்கொடி இவள் மலரடி’ என சின்னப்பா பாட இவர் ஆட ரசிகர்கள் மெய் மறந்தனர். பி.யூ. சின்னப்பாவின் சூப்பர் ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று. ராஜகுமாரிக்கென்றே இப்பாடல்கள் எழுதப்பட்டனவோ என்று எண்ணத் தோன்றும் அளவு ராஜகுமாரியை புகழ்வதாகவே இப்பாடல்கள் அமைந்தன.
இதே போல, பி.யூ. சின்னப்பாவுடன் நடித்த ‘மனோன்மணி’யும் அதி அற்புதமான படம். யுத்த காலத் தயாரிப்புக்கே உரிய சிக்கனத்துடன் தயாரிக்கப்பட்டாலும் நேர்த்தியான படம். யுத்த நெருக்கடியால் அப்போது கச்சா பிலிம் ரோலுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மூன்று மணி நேர, மூன்றரை மணி நேரப் படங்களை எல்லாம் அப்போது தயாரிக்க முடியாத சூழல்.
சிக்கனமாக இரண்டு மணி நேரப் படங்கள் தயாரிக்கப்பட்டன. சுந்தரம் பிள்ளை இயற்றிய காவியமான ‘மனோன்மணீயம்’ மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பின் ‘மனோன்மணீயம்’ சுந்தரம் பிள்ளை என்றே அவர் அழைக்கப்பட்டார். கட்டுக்கோப்பான திரைக்கதை இப்படத்தின் வெற்றிக்குக் காரணம். காதலென்றாலும், வீரமென்றாலும் சின்னப்பாவும், டி.ஆர். ராஜகுமாரியும் தங்களின் அற்புதமான நடிப்பால் கவர்ந்தனர்.
மன்மத லீலையை வெல்ல முடியாத ‘ஹரிதாஸ்’
தொடர்ந்து அவருக்குப் பிரமாண்ட வெற்றியைத் தேடித் தந்த படம் ‘ஹரிதாஸ்’. 1944 தீபாவளி அன்று வெளியாகி மூன்று தீபாவளிகளைத் தாண்டி ஓடியது என்பது வரலாறு. இன்று வரை இந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை. ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ? ‘என் மேல் உனக்கேன் பாராமுகம்?’ என டி.ஆர். ராஜகுமாரியைப் பார்த்து எம்.கே.டி. பாகவதர் பாடினார். அக்காலத்தில் இப்பாடல் ரெக்கார்டுகள் ஒலிக்காத வீடுகள் இல்லை.
தாசி ரம்பா, ஹரிதாஸை நோக்கி மட்டும் மன்மத பாணத்தை எய்யவில்லை. ரசிகர்களையும் நோக்கிதான் எய்தாள். ஹரிதாஸுக்கு ரம்பா அளிக்கும் பறக்கும் முத்தமும் அதே வகையைச் சார்ந்ததுதான். அக்காட்சியைப் பார்த்த அந்தக் கால ரசிகர்கள் ஒருகணம் மூச்சடைத்துப் போயிருப்பார்கள் என்றே தோன்றுகிறது. ரம்பாவின் சூழ்ச்சியால் பெற்றோரையும், மனைவியையும் விரட்டி, சொத்துகளை இழந்து திருந்த பல்வேறு சோதனைகளைச் சந்திக்கும் ஹரிதாஸ், பின் தன் பாவங்களைக் களைந்து கிருஷ்ண பக்தனாகிறான்.
தாய் தந்தைக்கும் மனைவிக்கும் செய்யாமல் விட்ட கடமைகளைச் செய்து வாழ்வைத் தொடருவதாகப் படம் முடியும். தாசி ரம்பா மனம் திருந்தி துறவியைப் போல வாழ்வதுடன், தன்னைப் போலவே மனம் திருந்தி பக்தி மார்க்கத்தில் செல்லும் அவன் செல்லும் பாதையை நோக்கி வணங்கித் தன் பாதையில் பயணத்தைத் தொடருகிறாள். இப்படி இரு வேறு விதமாகவும் நடித்து ரசிகர்களின் மனங்களை ஒருசேர அள்ளிக் கொண்டார் ராஜகுமாரி.
கன்னியாகுமரி பவனம் கண்ட கன்னிகை
41ல் நடித்த படம் மூலம் பிரபலமாகி, நான்கைந்து படங்கள் நடித்ததுமே சென்னை தியாகராய நகரில் பிரமாண்டமாக டி.ஆர்.ராஜகுமாரி 1942ல் கட்டத் தொடங்கிய வீடு 1943ல் முடிவடைந்தது. ‘கச்ச தேவயானி’, ‘சதி சுகன்யா’, ‘மனோன்மணி’, ‘குபேர குசேலா’, ‘சிவகவி’ என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக நிலைபெற்று விட்டதால், தான் எழுப்பிய மாளிகைக்குத் தெரிந்தோ தெரியாமலோ ‘கன்னியாகுமரி பவனம்’ என்ற பெயரைத் தேர்வு செய்தார். அந்த இல்லத்தில் கன்னியா குமரியாகவே இறுதி வரை வாழ்ந்தார். அது மட்டுமல்லாமல், சென்னைப் பட்டண எல்லைக்குள் முதன்முதலாகச் சொந்தமாக பங்களா கட்டியவர் என்ற பெருமையையும் நடிக, நடிகையர் மத்தியில் பெற்றார்.
ஸ்வதந்திரா தியேட்டர் பெயர் மாறியது
பங்களா கட்டியதுடன் மட்டுமல்லாமல் தியாகராய நகர் பாண்டி பஜாரில் ஒரு திரையரங்கையும் கட்டினார். அந்தக் கட்டடம் கட்டும்போது அதற்கு வைப்பதாக அவர் தேர்வு செய்து வைத்திருந்த பெயர் ‘ஸ்வதந்திரா’. ஏனோ அந்தப் பெயர் பின்னர் கைவிடப்பட்டு, ‘ராஜகுமாரி’ என்ற அவரது திரைப்பெயரே தியேட்டருக்கும் சூட்டப்பட்டது.
மதராஸப் பட்டினத்தில் முதன்முதலாகத் திரையரங்கு கட்டிய திரை நட்சத்திரம் என்ற பெருமையும் அவருக்கே உரியது. அந்தத் திரையரங்கு இடிக்கப்பட்டு வணிக வளாகமாக மாற்றப்பட்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்றாலும், இப்போதும் அந்த இடத்தைக் கடக்கும் தோறும் ராஜகுமாரியின் நினைவு எழுவதை மறுப்பதற்கில்லை.
சந்திரலேகா - மிகப் பிரமாண்டம்
இன்றைக்கு ‘பாகுபலி’ படம் மற்றும் அதன் பிரமாண்டம் குறித்தும் திரைப்பட ஆர்வலர்களிடையில் எழும் கடுமையான விமர்சனம் அன்றைய பிரமாண்ட தயாரிப்பான ‘சந்திரலேகா’ படத்தின் மீதும் எழுப்பப்பட்டது, சற்றே மென்மையான தொனியில். தமிழில் மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கும் இத்தகைய பிரமாண்டம் மிகப் புதிது.
‘சந்திரலேகா’ கண்கள் விரியப் பார்க்க வைக்கும் பரபரப்பான திரைக்கதை, அப்போதைய நவீன தொழில் நுட்பங்களை மிகவும் சரியாகப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட காட்சிகள். இவற்றோடு டி.ஆர்.ராஜகுமாரியின் நடிப்பும் கவர்ச்சியும் சேர்த்துத் தயாரிக்கப்பட்டு மசாலா படத்துக்கு முதல் இலக்கணமாக அமைந்தது. முன்னணி கதாநாயகன் கதாநாயகி - வில்லன் - திடீர் திருப்பங்கள் நகைச்சுவை - நெருக்கமான காதல் காட்சிகள் பிரமாண்டம் - விளம்பரம் எல்லாமும் தேவைக்கு அதிகமாகவே இடம் பெற்ற படம்.
படம் முழுவதும் ஒருவர் ஆதிக்கம் செய்தார் என்றால் அவர் டி.ஆர். ராஜகுமாரிதான். 3 மணி நேரமும் 20 நிமிடங்களுக்கு ஓடும் இந்த நீண்ட படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஒவ்வொரு ஃபிரேமிலும் டி.ஆர். ராஜகுமாரி இருந்தார். அதனால் படத்தின் வரலாறு காணாத வெற்றியில் தயாரிப்பாளர் எஸ்.எஸ். வாசனுக்கு அடுத்து பெரும் பங்கு நாயகி ராஜகுமாரிக்கும் உண்டு.
எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு
எஸ்.எஸ். வாசனின் முந்தைய தயாரிப்புகளான ‘தாசி அபரஞ்சி’, ‘சக்ரதாரி’, ‘சம்சாரம்’ படங்களின் நாயகியான புஷ்பவல்லி ஏற்றிருக்க வேண்டிய பாத்திரம் சந்திரலேகா. சர்க்கஸ் காட்சிகளில் கதாநாயகி அணிய வேண்டிய உடைகள் மிக ஆபாசமாக இருப்பதாக புஷ்பவல்லியின் கணவர் ரங்காச்சாரி ஆட்சேபம் தெரிவித்ததால் கதாநாயகி வாய்ப்பு ராஜகுமாரியைத் தேடி வந்தது.
இப்படத்தின் சர்க்கஸ் காட்சிகளில் ராஜகுமாரி பார் விளையாட்டில் ஈடுபடும் காட்சிகள் சிறப்பாக அமைந்ததுடன் அவருக்குப் பேரையும் புகழையும் பெற்றுத் தந்தன. படத்தின் ஆரம்பத்தில் எளிய ஒரு கிராமத்துச் சிற்பியின் மகளாகத் தோன்றும் சந்திரலேகா, வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத பல அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்குப் பின் சமயோசிதமாக சிந்தித்து உடனுக்குடன் அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதுடன், கதாநாயகனையும் காப்பாற்றக் கூடியவளாக மாறுகிறாள்.
குகைக்குள் வில்லனால் அடைக்கப்பட்ட கதாநாயகனும், காதலனுமான எம். கே.ராதாவை காப்பாற்றுவதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், பிரயத்தனங்கள், சர்க்கஸ் கம்பெனிக்காரர்கள், யானைகள் உதவியுடன் காதலனை மீட்டுக் காப்பாற்றும் சமயோசிதம், வில்லனிடமிருந்து தந்திரமாகத் தப்பி சர்க்கஸ் கம்பெனி, ஜிப்ஸி நடனப் பெண்களின் குழுவில் ஒளிந்து கொண்டு அவர்களுடன் இணைந்து கொண்டு ஆடுவது என்று படம் நெடுக ஓடிக் கொண்டே இருப்பார்.
படத்தின் இறுதிக் காட்சியான மிக பிரமாண்ட முரசு நடனக் காட்சியில், முரசுகளின் மீது அவர் ஆடும் நடனம் என்று அனைத்துமே குறிப்பிடத்தக்கவைதான். இந்தியில் தயாரிக்கப்பட்ட ‘சந்திரலேகா’ விலும் கதாநாயகி ராஜகுமாரிதான். தமிழைப் போலவே இந்தியிலும் சந்திரலேகா பிரமாதமாக ஓடி வெற்றியை ஈட்டியது. தான் சந்திக்கும் பல நட்புகளின் உதவியுடன் நாட்டின் எதிர்காலத்தையே மாற்றிக் காட்டுகிறாள். பெண்ணை அவ்வளவு அறிவாளியாக இருக்கத் திரைப்படங்கள் அனுமதிப்பதே அரிதினும் அரிதுதான். கனவுக்கன்னி அடுத்த இதழிலும் தோன்றுவார்.
(ரசிப்போம்!)
No comments:
Post a Comment